சென்னை, கிண்டியில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் கட்டடவியல் முதலாண்டு படிக்கும் 19 அகவை மாணவி தைரியலட்சுமி 18.4.2012 அன்று விடுதியில் தன் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 92 விழுக்காடு மதிப்பெண் பெற்ற இம்மாணவி, விழுப்புரம் மாவட்டம், கே.வி. பாளையம் சக்திவேல் என்ற விவசாயியின் மூத்த மகள். வங்கியில் கல்விக் கடன் பெற்று தன் மகளைப் படிக்க வைத்தார். புகழ்பெற்ற கிண்டி பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது; தைரியலட்சுமியும் அவருடைய குடும்பத்தினரும் எதிர்காலம் பற்றிய இனிய கனவுகளில் மிதந்திருப் பார்கள். ஆனால் எல்லாம் கண்ணீர் கதையாகி விட்டது.

தைரியலட்சுமி 12ஆம் வகுப்பு வரையில் தமிழ் வழியில் படித்ததும் சிற்றூரில் ஏழை விவசாயியின் மகளாகப் பிறந்ததும்தான் அவர் செய்த குற்றம்! சிற்றூரிலிருந்து, தரத்தில் முதல் நிலையில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் முற்றிலும் ஆங்கில வழியில் படிக்க வேண்டிய சூழலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதிய மடலில், “என்னால் எதையும் சரியாகச் செய்ய முடியல. நல்லா படிக்க முடியல. ரொம்ப கஷ்டமா இருக்கு. எப்படியும் 2ஆவது செமஸ்டரில் பெயில் ஆயிடுவேன். நான் படிக்கலனா எங்க வீட்டுக்கு நான் வேஸ்ட். அதான் நான் போறேன். டீச்சர்ஸ் நல்லாதான் நடத்து றாங்க. என்னால்தான் படிக்க முடியல. அதனால் நான் போறேன். இதற்கு நான் மட்டுமே காரணம். தப்பா எடுத்துக்காதீங்க” என்று உள்ளம் நொறுங்கி எழுதி யிருக்கிறார்.

அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த மணிவண்ணன் என்ற மாணவரும் மூன்று கிழமைகளுக்கு முன்பு இதே காரணத்தால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். கல்லூரிகளும், கல்வித் துறையும், அரசும், சமூகமும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டாமா?

தமிழ் வழியில் கல்வி கற்று, திடீரென ஆங்கில வழியில் கற்க முடியாமல் தவிக்கின்ற பல்லாயிரக் கணக்கான மாணவர்களுக்கு வழிகாட்டவும் ஊக்கு விக்கவும் வேண்டாமா? அப்படிப்பட்ட முறையான ஏற்பாடு எதுவும் இல்லை. ஆனால் ஆங்கில மொழி மட்டுமே உள்ள அமெரிக்காவில் மாணவர்களின் மன அழுத்தங்களைப் போக்குவதற்காகப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மனநல ஆலோசகர்கள், மனநல மருத்துவர்கள இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் தொழிற்படிப்பில் சேரு வதற்கான நுழைவுத் தேர்வு நீக்கப்பட்டபின், தமிழ்வழியில் பயிலும் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தொழிற் படிப்பில் சேரு கின்றனர். தற்போது, ஆண்டுதோறும் கிண்டி பொறியியல் கல்லூரி யில் கிட்டத்தட்ட 50 விழுக்காடு இடங்களில் தமிழ்வழியில் படித்தோர் சேருகின்றனர். தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் 68 விழுக்காட்டினர் தமிழ் வழியில் 12ஆம் வகுப்பு வரையில் படித்தவர்களாக உள்ளனர். சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் தமிழ் நாட்டில் 500க்கும் மேற்பட்டவை இருக்கின்றன. கல்வி வணிகக் கொள்ளைக்காகவே இவை நடத்தப் படுகின்றன. இவற்றில் தமிழ்வழியில் பயின்ற மாண வர்கள் பெருமளவில் சேருகின்றனர். தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் பள்ளி மட்டத்தில் 30 விழுக்காடு மாணவர்கள மட்டுமே ஆங்கில வழியில் படிக்கின்ற னர். மற்ற 70 விழுக்காடு மாணவர்கள் தாய்மொழி வழியில் படிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் ஊர்ப்புறத்தில் உள்ள உழைப்புச் சாதிகளில் நடுத்தர - ஏழை வீட்டுக் குடும்பங்களின் பிள்ளைகளேயாவர்.

தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகளிலும், மற்ற பெரும் பாலான நாடுகளிலும் உயர்கல்வி உட்பட எல்லா நிலைக் கல்வியும் தாய்மொழியிலேயே அளிக்கப்படு கிறது. சில நாடுகளில் ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாக மட்டுமே உள்ளது. ஆனால் இந்தியாவிலோ இது தலைகீழாக இருக்கிறது. பள்ளிக் கல்வி n வகமாக ஆங்கில வழியில் மாற்றப்பட்டு வருகிறது. உயர்கல்வி முழுவதும் ஆங்கில வழியிலேயே என்ற இழிநிலை உள்ளது. ஆங்கில வழியில் படிக்கின்ற எல்லோர்க்கும் மாதம் ரூ.50,000, ஒரு இலட்சம் சம்பளம் பெறக் கூடிய வேலை கிடைக்கும் என்கிற மாயை முதலாளிய ஊடகங்களால் ஊட்டி வளர்க்கப்படுகிறது. தனியார் கல்வி நிறுவனங்கள் இதை நன்றாக அறுவடை செய்து கொழுக்கின்றன.

தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் 18.4.2012 அன்று கல்வி அமைச்சர் என்.ஆர். சிவபதி, “எதிர்கால வாழ்வுக்கு ஆங்கில வழிக்கல்வி இன்றியமையாததாக இருப்பதால், கிராமப்புறப் பகுதிகளில் படிக்கும் மாணவர் களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்தும் வகை யில், வரும் கல்வி ஆண்டு முதல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மற்றும் 6ஆம் வகுப்புகள் ஒவ்வொன் றிலும் ஒரு ஆங்கில வழிப்பிரிவு தொடங்கப்படும். படிப்படியாக 12ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிப் பிரிவுகள் நடத்தப்படும். முதல் கட்டமாக வரும் கல்வி ஆண்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 அரசுப் பள்ளிகள் வீதம் 320 பள்ளிகளில் தலா 2 ஆங்கிலப் பிரிவுகள் தொடங்கப்படும். இதன்மூலம் 22.400 மாணவர்கள் பயன்பெறுவார்கள்” என்று அறிவித்தார் (தினத்தந்தி 19.4.2012). படிப்படியாக ஆங்கில வழிக்கல்வியை அரசே நிறைவேற்றுமானால், தமிழ் ஒரு மொழிப்பாடமாக கூட இல்லாமல் போய்விடும் நிலைதானே ஏற்படும்! இது கண்டனத்துக்கு உரியது.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியா முழுவதிலும், தாய்மொழி வாயிலாக 12ஆம் வகுப்பு பயின்ற பல்லாயிக்கணக்கான மாணவர்கள் உயர்கல்வியில் ஆங்கிலவழிக் கல்விக்கு ஈடுகொடுக்க இயலாமல் அல்லல்படுகின்றனர். இவர்களுள் சிற்றூர்களில் பிறந்து வளர்ந்த தாழ்த்தப்பட்ட - பழங்குடி வகுப்பு மாணவர்கள் இன்றும் கொடிய துன்பங்களுக்கும், புறக்கணிப்புக்கும் ஆளாகின்றனர்.

தில்லியில் உள்ள இந்திய மருத்துவ அறிவியல் கல்லூரியில் (IIMS)) 2012 மார்ச்சு 4ஆம் நாள் அனில் மீனா என்ற முதலாண்டு மாணவர் ஆங்கில வழிக் கல்வியைத் தாக்குப்பிடிக்க முடியாமல் விடுதியிலேயே தற்கொலை செய்து கொண்டார். கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியத் தொழில் நுட்பக் கல்வி நிறுவனம் (IIT) போன்ற நடுவண் அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் 19 தலித் - பழங்குடி வகுப்பு மாண வர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவ் வகுப்பு மாணவர்களை மேல்சாதி மாணவர்கள், “தகுதி இல்லாமல் இடஒதுக்கீடு மூலமாக இலவயமாக வந்தவர்கள்” என்று வெளிப்படையாகவும் இழிவா கவும் நடத்துகின்றனர். ஆசிரியர்களிலும் பெரும்பா லோர் இதே மனப்பான்மையுடன் இம்மாணவர்களிடம் நடந்து கொள்கின்றனர்.

நடுவண் அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பு மாணவர்கள் பாகுபாடாக மற்றவர்களால் நடத்தப்படுவது குறித்து ஆராய பல்கலைக்கழக நிதி நங்கைக் குழு 2007ஆம் ஆண்டு ஒரு குழுவை அமைத்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக அக்குழுவின் பரிந்துரைகள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இப்போதுதான் இப்பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய சுகதேவ் தோரட் என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, கிராமப்புறங்களிலிருந்து தாழ்த்தப்பட்ட - பழங்குடி மற்றும் பிற உழைப்புச் சாதி மாணவர்கள் உயர் கல்வியில் துன்பமின்றி ஆங்கில வழியில் பயில்வதற்கும், முற்றிலும் மாறுபட்ட சூழலில் தங்கி இருப்பதற்கும் தடையாக உள்ள இடர்ப்பாடுகளைக் களைந்திட ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனத்திலும் முறையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இம்மாண வர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகாத வகையில் ஊக்குவிக்கப்பட வேண்டும். வகுப்பறைகளில் மட்டு மின்றி, தனியாகவும் இவர்களுக்கு விளங்குமாறும் ஊக்கம் பெறும் வகையிலும் பாடங்களும் ஆங்கில மொழி பயிற்சியும் தரப்பட வேண்டும். ஏனெனில் இவர்கள் 80 விழுக்காடு, 90 விழுக்காடு என சிறந்த மதிப்பெண் பெற்றுத்தான் உயர்கல்வி நிறுவனங்களில் சேருகின்றனர்.

இந்திய நடுவண் அரசில் அதிகாரங்கள் குவிக்கப் பட்டிருப்பதே வெகுமக்களின் இப்படிப்பட்ட துன்பங் களுக்கு முதன்மையான காரணமாகும். கல்வி பொது அதிகாரப் பட்டியலில் 1976ஆம் ஆண்டு இந்திராகாந்தி யால் சேர்க்கப்பட்டது. உடனடியாக கல்வி மீண்டும் மாநில அதிகாரப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். பல்வேறு தேசிய மொழிகளும், அவற்றின் அடிப்படை யிலான இனங்களும் பன்னெடுங்காலமாக உள்ள இந்தியாவில், ஆங்கிலத்திற்கும் இந்திக்கும் மட்டுமே இடம் உண்டு என்கிற நிலை வேகமாக உருவாக்கப் பட்டு வருகிறது. உழைக்கும் மக்கள் எல்லாத் துறைகளிலும் சமவாய்ப்பு பெறுவதற்கான ஒரே வழி தேசிய இனங்களின் தன்னுரிமையை முழுமையாக மீட்பதேயாகும்.

Pin It