உயிரித் தொழில்நுட்பம் நல்லதற்குப் பயன்படுகிற தோ இல்லையோ, தீமைக்கு அதிகம் பயன்படுவதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவின் உயிரித் தொழில் நுட்ப ஆய்வுக் கூடங்கள் எத்தனையோ நெறிபிறழ் ஆய்வுகளை மேற் கொண்டதாகவும் மேற்கொள்வதாகவும், நெறிபிறழ் செயல்களில் ஈடுபடுவதாகவும் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த அறிவாளர்களும் குரல் எழுப்பியிருக்கிறார்கள்.

ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்குமுன், அமெரிக்கா கோதுமையை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்தபோது, கோதுமையில் பார்த்தீனியத்தின் விதைகள் கலந் திருந்தன. இது தற்செயல் நிகழ்ச்சி அல்ல என்று பல மொழி இதழ்களில் செய்திகள் வெளிவந்தன. அப்படி வந்த பார்த்தீனிய விதைகள், இந்தியாவின் மாநிலங் களெங்கும் விழுந்து, முளைத்துப் பரவி, இன்று நோய் பரப்பும் நச்சுப் பயிராகச் செழித்து வளர்ந்திருக்கிறது. அழிக்கப்பட முடியாத ஆற்றலாகவும் அது படர்ந்து விட்டுள்ளது.

இன்று காடுமேடெல்லாம் டில்லி முள்செடி என்ற பெயரில் ஒரு நச்சுமுள் புதர் பரவியுள்ளது. இந்த முள் உடம்பில் பட்டுவிட்டால், ஒரு தேள் கடித்ததுபோல் வலியும், நஞ்சு ஏறியதுபோல் வீக்கமும் ஏற்படும். இந்த முள்புதர் பிற செடி கொடிகளின் வளர்ச்சியைத் தடுப்பதுடன், இதன் வேர்கள் நிலத்தில் ஆழ ஓடி, நிலத்தடி நீரை விரைந்து உறிஞ்சி ஆவியாக்கும். இதுவும் ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகளுக்குள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியானதுதானாம்.

இந்த இருவகைப் பயிர்களும் அமெரிக்க மண்ணின் இயற்கைப் பயிர்கள் அல்லவாம். மூன்றாம் உலக நாடுகளுக்குப் பரப்புவதற்காக அமெரிக்க ஆய்வுக் கூடங்களில் இவை உருவாக்கப்பட்டவையாம்.

அறிவியல் ஆய்வாளர்களில் நாசிச மனப்பான்மை மேலோங்கியவர்கள், வெள்ளை இனமே உலகில் நிலைபேறு பெற வேண்டும் எனக் கருதுகிறார்கள். ஆசியர்களையும், ஆப்பிரிக்கர்களையும், அமெரிக்க ஆசுதிரேலியப் பழங்குடிகளையும் மருத்துவ ஆய்வு களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என இவர்கள் எண்ணுகிறார்கள்.

எனவே, அமெரிக்காவிலும் அய்ரோப்பாவிலும் தடை செய்யப்பட்ட மருந்துகளையெல்லாம் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு இவர்கள் தாராளமாக ஏற்றுமதி செய்கிறார் கள். மேலும், அங்கே தடைசெய்யப்பட்ட பூச்சிமருந்து களையெல்லாம் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்று மதி செய்து, மண்ணையும் பயிர்களையும், உணவையும் நஞ்சாக்கி, இங்குள்ள மக்களை நோயாளிகளாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

எயிட்சு என்கின்ற ஏம இழப்பு நோய் (ஏ.இ.நோய்) இயற்கையாகத் தோன்றியது அல்ல என்று நடுநிலை யாளர்கள் நம்புகிறார்கள். இந்நோயை உருவாக்கும் நுண்ணுயிரிகள் அமெரிக்க ஆய்வுக் கூடங்களில் உரு வாக்கப்பட்டு, ஆப்பிரிக்க நாடுகளில் பரப்பப்பட்டவை யாம். ஆனால் இது உருவாக்கிய நாட்டையே உலுக்கு கிறது என்பது தனிக்கதை.

இனி வருங்காலத்தில் நடைபெறப்போகும் போர்கள் உயிரிப் போர்களாகத்தான் நிகழப் போகின்றன. கண் ணுக்கெட்டாத உயரத்தில் எதிரி நாட்டு நிலப்பரப்பின் மீது பறந்து செல்லும் ஒரு விண்கலம் கோடிக்கணக் கான நோய் உயிரிகளை வான்வெளியில் விதைத்துச் செல்லும். அந்த நுண் நோய் உயிரிகள் மக்களுக்கும் விலங்கினங்களுக்கும் புதிய புதிய நோய்களை உரு வாக்குவதுடன், உணவுப் பயிர்களையும் தாக்கி அழிக்கும்.

எதிரி நாட்டின் குறிப்பிட்ட தலைவர்களை எப்படி நோய் உயிரியால் தாக்குவது என்பதையும் அமெரிக் காவின் நாசிச ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார் களாம். இது கட்டுக்கதை போல் தோன்றலாம். ஆனால் இது கட்டுக்கதை இல்லை என்பதை வெனிசுலாவின் அதிபர் சாவேசின் அறிக்கை ஒன்று தெளிவாக்குகிறது.

“1946-48ஆம் ஆண்டுகளில், கவுதமாலா சிறை யில் சிறையாளிகளை வைத்து, பாலியல் தொடர்பான நோய்களைப் பரப்புவது பற்றி ஆய்வு செய்த நாடு தான் அமெரிக்கா” என்கிறார் சாவேசு.

மேலும் அவர் கூறியிருக்கும் குற்றச்சாட்டுகள் எளிய தரத்தவை அல்ல.

வெனிசுலாவின் அதிபராகிய இவர் (சாவேசு) தீவிரமான அமெரிக்க எதிர்ப்பாளர். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். பராகுவே அதிபர் பெர்ணாண்டோ லூகோ புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். பிரேசில் அதிபர் டில்மா ரௌசெஃப், துணை அதிபர் லூயிசு ஆகியோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். அர்ச்செண்டீனா அதிபர் கிறிசடினா பெர்ணாண்டசு தைராய்டு புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.

தான் எதிரியாகக் கருதும் நாடுகளின் தலைவர் களுக்குக் கமுக்கமாகப் புற்றுநோயைப் பரப்பி வருகிறது அமெரிக்கா என்கிறார் சாவேசு.

“புதிய தொழில்நுட்பத்தின் மூலம் அமெரிக்கா இவ்வாறு நோய் பரப்பும் செயலில் ஈடுபட்டிருக்குமானால் அது கொடிய செயலாகவே இருக்கும். இலத்தீன் அமெரிக்க நாடுகளின் இடதுசாரித் தலைவர்கள் தொடர்ந்து இதுபோல் புற்றுநோய்க்கு ஆளாவதைத் தற்செயல் என ஒதுக்கிவிட முடியாது. ஈக்வெடார், பொலிவிய நாடுகளின் அதிபர்களும் இனி மிகவும் கவனமாக இருக்க வேண்டுகிறேன். எனக்குப் புற்று நோய் ஏற்பட்டதும் கியூபா சென்று அறுவை மருத்து வம் செய்து கொண்டேன். இப்போது நலமாகிவிட் டேன்” என்று வெனிசுலா அதிபர் சாவேசு தெரிவித் திருக்கிறார்.

அமெரிக்க நாசிசத்தின் உண்மை முகம் உலகின் முன் அம்பலமானாலும் அது வெட்கப்படுவதாகத் தோன்றவில்லை. தொடர்ந்து மனிதகுல நலத்திற்கு எதிராக அது எதையேனும் சிந்தித்துக் கொண்டே இருக்கிறது. உலகில் எங்காவது ஒரு மூலையில் அதன் அழிம்பு அரங்கேறிக் கொண்டுதானிருக்கிறது.

நடுஊரில் பழுத்திருக்கும் நச்சுமரம் அமெரிக்கா! அதன் நாட்டாண்மையால் விளையாது ஏழை நாடுகளுக்கு நலம்.

Pin It