இதழ்த் தொகுப்பு (1 முதல் 6 தொகுதிகள்)

‘புதுவை முரசு’ 1930ஆம் ஆண்டுமுதல் புதுச்சேரியில் இருந்து வெளிவந்த கிழமை ஏடாகும். இவ்வேடு ஒவ்வொரு திங்கட்கிழமையும் 10.11.1930முதல் தொடர்ந்து கிழமைதோறும் வெளிவந்தது.அதன் வெளியீட்டாளர் புதுவை ம.நோயல்.இதழின் ஆசிரியராக முதலில் புதுவை தேங்காய்த் திட்டு க.இராமகிருட்டிணன் என்பவரும்,அவரை அடுத்துத் தோழர் குத்தூசி குருசாமியும் பணியாற்றி உள்ளனர்.பாரதிதாசனும்,புதுவைச் சிவப்பிரகாசமும் பிழைதிருத் தும் பணிகளை மேற்கொண்டதுடன் இதழுக்குக் கட்டுரைகள்,கவிதைகள் தொடர்ந்து எழுதிக் கொடுத்துள்ளனர்.

இவர்களைத்தவிர சாமி. சிதம்பரனார், ம. சிங்கார வேலர், குஞ்சிதம் அம்மையார், மாயவரம் நடராசன், நாகை காளியப்பன், பூவாளூர் பொன்னம்பலனார், ஊ.பு.அ. சௌந்தரபாண்டியன், எ°. இராமநாதன், பட்டுக்கோட்டை அழகிரிசாமி, கி.ஆ.பெ. விசுவநாதம், செல்வி நீலாவதி உள்ளிட்டோரின் சொற்பொழிவுகளும் படைப்புகளும் இவ்இதழில் இடம்பெற்றுள்ளன. பகுத் தறிவுக் கருத்துக்களையும், சுயமரியாதை உணர்ச்சியையும் சுடச்சுடத் தாங்கிவந்த ஒவ்வோர் இதழும் அறியாமை இருள் கிழிக்கும் அறிவாயுதமாய்த் திகழ்ந் துள்ளது.இந்த ஏட்டில் இந்துமதத்தைத் தாக்கி எழுதிய அதே அளவில் கிருத்துவ மதத்தையும் தாக்கி எழுதியுள்ளனர்.

தமிழகத்தில் வீறுகொண்டெழுந்த தன்மான இயக் கத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளும் காலச்சுவடுகளாய் இவ்வேட்டில் பதிந்துள்ளமை இவ்வேட்டிற்கு வாய்த்த தனிச்சிறப்பாகும். தொகுதி 2, பக்கம் 258இல் பதிவாகி யுள்ள ஒரு செய்தி :

செட்டிமார் நாட்டு முதலாவது சுயமரியாதை மாநாடு நிறைவேறிய தீர்மானங்கள்

மேற்படி மாநாட்டில் நிறைவேறிய தீர்மானங்களின் விவரம் வருமாறு :

கோவிற் செலவு

இனிமேல் புதிதாகக் கோயில்களும், சத்திரங்களும், வேதப்பாடசாலைகளும், மடங்களும் அமைக்க வேண்டிய தில்லையென்று இம்மகாநாடு தீர்மானிக்கிறது.இதுவரை உள்ள வேதப்பாடசாலைகளைப் பள்ளிக் கூடங்களாகவும்,சத்திரங்களை மாணவர் விடுதிகளா கவும், பசுமடங்களைக் குழந்தைகளுக்குப் பாலுதவும் °தாபனங்களாகவும்,எல்லா சாதியார்க்கும் பயன் படும்படி மாற்றிவிட வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.இதுபோன்ற-நினைக்க நினைக்க மலைப்பை உண்டாக்கும் பல தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நறுக்குத் தெறித்தாற்போன்ற,இவ்வேட்டின் சிந்தனைச் சிதறல்கள் படிப்போரின் நாடி நரம்புகளை முறுக்கேற்றும்.

கதம்பம்

‘ஒன்றை ஆக்குதல் அரிது; அழித்தல் எளிது’ என்பது முதுமொழி. இது எல்லா விஷயத்திலும் சரியில்லை.கடவுள் பெயரால் வெகுஎளிதாகப் புளுகி வைத்துள்ளார்கள்.அவைகளை அழிப்பது மிக அரிதாக முடிகிறது (தொகுதி 2 - பக்கம் 114).

***

இவ்வேட்டில் தொடர்ந்து இடம்பெற்ற வினாவிடைப் பகுதி பழமை விரும்பிகளைக் கன்னத்தில் அறை வதுபோல் பதம்பார்க்கும் தன்மையதாகும்.

மொத்தத்தில் வரலாற்றின் அரிய ஆவணமாய் வாய்த்துள்ள இந்தத் தொகுதிகளை வழங்கியுள்ள வாலாசாவல்லவன் பெரும் பாராட்டுக்குரியவர். தமிழர் ஒவ்வொருவருடைய இல்லத்திலும் இருக்க வேண்டிய நூல் தொகுதிகள் இவை. 6 தொகுதிகளின் பக்கங்கள் 2496, விலை ரூ.1200/-

நூல் தொகுதிகள் பெற : தமிழ்க் குடிஅரசு பதிப்பகம்
4/11, சி.என்.கே.சந்து, சேப்பாக்கம்,சென்னை - 5.
கைப்பேசி எண்கள் : 7299214554, 9444321902

- தமிழேந்தி

Pin It