02.12.1984 அன்று இரவு போபால் நகரில் மிதைல் ஐஸோ சயனேட் என்ற கொடிய நச்சு வாயு யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தொழிற்சாலையில் இருந்து பெருமளவில் கசிந்து 5,295 மனித உயிர்களும், கணக்கில் சொல்லப்படாத அளவிற்கு வளர்ப்புப் பிராணிகளும் மாண்டன. இதை விடக் கொடுமையாக 5,68,292 மனிதர்கள் குணப்படுத்த முடியாத பலவித நோய்களுக்கு உள்ளாயினர். அதுமட்டுமல்ல; இந்த இயலாமைகள் அடுத்த தலை முறைகளுக்கும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இப்புள்ளி விவரங்கள் எல்லாம் அரசு அளித்தவை. உண்மைநிலை இதைவிடப் பயங்கரமாக இருக்கும்.

இவ்வளவு பெரிய கொடிய நிகழ்வு நடந்ததற்காக யூனியன் கார்பைட் நிறுவனத்தின் நிர்வாகிகள் மீது வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கின் மீது 1996 ஆம் ஆண்டில் அதாவது 12 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வந்தது. அத்தீர்ப்பில் யூனியன் கார்பைட் நிர்வாகத் தினர் மக்களைக் கொலை செய்யும் நோக்கத்துடன் நச்சு வாயுவைக் கசியவிடவில்லை என்றும், செய்யும் பணியில் கவனக்குறைவு காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளது என்றும் கூறி அதிகபட்சத் தண்டனை யாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங் கப்பட்டது.

இதை எதிர்த்து உடனேயே இக்கொடிய நிகழ்வினால் பாதிக்கப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்தனர். இம்மேல் முறையீடுகள் எல்லாம் உச்சநீதிமன்றம் வரையிலும் பயனற்றுப் போயின. “குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருவது முக்கியமா? பாதிக் கப்பட்டவர்களுக்கு இழப்பீடு பெற்றுத்தருவது முக்கியமா?” என்று கட்டப்பஞ்சாயத்துப் பேசி, அரசியல் தரகர்கள் பிரச்சினையை ஆறப் போட்டுக் காலங்கடத்தி வந்தனர். குற்றவாளிகளுக்குத் தண்டனையும் கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் கிடைக்காமல் ஒரு தலைமுறைக் காலம் ஓடிவிட்டது. பொதுவாக இந்திய மக்கள் இக்கால அளவில் பிரச்சினையை மறந்துவிடு வார்கள். ஆனால் போபால் நச்சுவாயுக் கசிவு ஏற்படுத்தி யுள்ள பாதிப்பானது அடுத்த தலைமுறையினரையும் பொறுக்க முடியாத அளவிற்கு வலிக்க வைத்துக் கொண்டிருப்பதால் மறக்கடிக்க முடியவில்லை. ஆகவே மக்கள் போராட்டங்கள் தொய்வின்றித் தொடர்ந்தன. இப்போராட்டங்களை எதிர்கொள்ள முடியாத மய்ய அரசு 1996ஆம் ஆண்டின் தீர்ப்பை எதிர்த்து 2010 ஆம் ஆண்டில் மேல் முறையீடு செய்தது.

இம் மேல்முறையீட்டை ஆராய்ந்த உச்சநீதி மன்றம் 11.5.2011 அன்று, தீர்ப்பு வெளிவந்து 14 ஆண்டுகள் கழித்துச் செய்யப்பட்ட மேல்முறையீடு தவறான அடிப்படை கொண்டது என்று கூறி நிராகரித்துவிட்டது. மேலும் 14 ஆண்டுகளுக்கு முன் தீர்ப்பு வழங்கப்ட்ட போது வழக்கில் சமர்ப் பிக்கப்பட்ட ஆவணங்களின்படிதான் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது என்றும், நீதிமன்றம் அச்சுறுத்தப்பட வில்லை என்றும் தனது தீர்ப்பில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு வெளிவந்ததும், போபால் நச்சு வாயுவினால் பாதிக்கப்பட்டோர் சங்கத் தைச் சேர்ந்த அப்துல் ஜப்பார், மேல் முறையீடு கால தாமதமாகச் செய்யப்பட்டதனால் தான் நிராகரிக்கப் பட்டது என்றால், 1996ஆம் ஆண்டில் தீர்ப்பு வெளி வந்த உடனேயே தங்கள் சங்கம் சமர்ப்பித்த மறு ஆய்வு மனு நிராகரிக்கப்பட்டது ஏன் என்று கேட்டுள்ளார். இதுபோன்ற நியாயமான வினாக்களையெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பதற்கோ, பதில் அளிப்பதற்கோ, யாருக்கும் நேரமும் இல்லை; மனமும் இல்லை. மக்களைப் பற்றிய அக்கறை சிறிதும் அற்ற உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்புக்கு எதிராக, இச்சங்கத்தினர் இக்கொடிய நிகழ்வு நேர்ந்த அதே இரவு நேரத்தில் தீர்ப்பு வெளிவந்த 11.5.2011 அன்று தீப்பந்த ஊர்வலத்தை நடத்தித் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். இவ்வாறு வன்முறை இல்லாமல் எதிர்ப்பைத் தெரிவிப்பது மக்களது உரிமை என்றும், அதைக் கண்டு கொள்ளாமல் இருப்பது அரசின் உரிமை என்றும், இதுதான் ஜனநாயகத்தின் சிறப்பு என்றும் முதலாளித்துவ அறிஞர்கள் மக்களின் அனைத்துத் தரப்பினரும் சுதந்தரத்தை அனுபவிப்பதை விளக்கமாகக் கூறி மனம் பூரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

சரி! இக்கொடிய நிகழ்வு விபத்தா அல்லது சதிச் செயலா என்பதைப் பற்றி நாடு தழுவிய விவாதத்தை மேற்கொண்டிருக்கிறார்களா? 1989ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர், இந்நிகழ்வைப் பற்றி ஆராய்ந்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். நச்சுவாயுக் கசிதல் என்பது 2.12.1984ஆம் ஆண்டிற்கு முன் பல தடவைகள் சிறிய சிறிய அளவுகளில் நிகழ்ந்துள்ளன. தொழிற்சங் கங்கள் நச்சுவாயுக் கசிதல் பற்றி நிர்வாகத்தின் கவனத் திற்குக் கொண்டு வந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படி வற்புறுத்தி உள்ளன. ஆனால் நிர்வாகம் வேண்டுமென்றே பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக் காமல் இருந்திருக்கின்றது. இறுதியில் இந்த மிகக் கொடிய நிகழ்வு ஏற்பட்டது. இவ்விவரங்களை எல்லாம் வெளிக்கொணர்ந்து, போபால் நச்சுவாயுக் கசிவு விபத்தல்ல; ஒரு சதிச் செயலே என்று அவர் விளக்கி இருந்தார்.

அது சரி! அப்படிப்பட்ட சதியை அவர்கள் ஏன் மேற்கொள்ள வேண்டும்? அதனால் யாருக்கு என்ன ஆதாயம்?

அமெரிக்க இராணுவ அறிவியலாளர்கள் மிதை ஐஸோ சயனேட் காற்றில் பரவினால் எப்பேர்பட்ட விளைவுகள் ஏற்படும்; குறிப்பாக அது ஈரலை எப்படிப் பாதிக்கும் என்று ஆராய விரும்பினார்கள். அதைப் பற்றிய விவரங்கள் எதிர்காலத்தில் தங்களது போர்த் திட்டங்களுக்கு உதவும் என்றும் நினைத்தார்கள். இச்சோதனையை எங்கே எப்படிச் செய்வது என்ற திட்டத்தின் செயல் வடிவம் தான் இக்கொடிய நிகழ்வு. இக்கொடிய நிகழ்வு நடத்த உடனேயே அமெரிக்க இராணுவ அறிவியலாளர்கள் போபாலுக்கு வந்து தங்களுக்கு வேண்டிய விவரங்களைச் சேகரித்துக் கொண்டார்கள். முக்கியமாக ஈரல் எப்படிப் பாதிக்கப் பட்டு இருக்கிறது என்ற விவரங்களை அதிக ஆர்வத் துடன் சேகரித்துக் கொண்டு போனார்கள்.

ஆனால் இந்த விவரங்கள் எல்லாம் காலப்போக் கில் மறக்கடிக்கப்பட்டுவிட்டன. இப்பொழுது உச்சநீதி மன்றத்தின் கண்களுக்குத் தெரியும் மிகவும் பயங்கர மான குற்றம்-தீர்ப்பு வந்து 14 ஆண்டுகள் வரையில் ஏன் மேல்முறையீடு செய்யவில்லை என்பது தான். உடனேயே மறு ஆய்வு மனு போட்டோமே என்று பாதிக்கப்பட்டோர் ஓங்கிக் குரல் கொடுப்பது உச்சநீதி மன்றம் உட்பட யார் காதிலும் விழவில்லை; தீப்பந்த ஊர்வலம் நடத்தியதும் யார் கண்ணிலும் படவில்லை.

ஏன் இப்படி நடக்கிறது? முதலாளித்துவப் பொருளாதார உற்பத்தி முறையில், முதலீட்டிற்கு இலாபம் வருவதை உறுதி செய்வதைத் தவிர வேறு எதுவும் அரசின் (அரசு என்றால் அரசாங்கம், நீதிமன்றம், சட்டமன்றங்கள், நீதிமன்றங்கள் உள்ளிட்ட அமைப்பு) கடமையாகக் கருதப்படுவது இல்லை. முதலீட்டிற்கு இலாபம் வரும் வழியில் ஏதேனும் இடையூறு ஏற் படுத்தினால் உடனே அரசாங்கம் சுறுசுறுப்பு அடைந்து விடும். தனது வலிமையை எல்லாம் ஒன்றுதிரட்டி மக்களைக் கொடூரமாக அடக்கும். மக்களின் போராட்டம் அரசின் அடக்குமுறைச் சக்தியை விட அதிகமாக இருந்தால் கொஞ்சமும் கூச்சமின்றி, பணிந்து மக்களின் கோரிக்கைகளை ஏற்று அப்போதைக்குச் சமாதானப்படுத்தி ஒன்றுபட்ட மக்களைக் கலைந்து போக வைக்கும். பின் மீண்டும் தனது கொடிய முகத்தைக் காட்டும். அதாவது முதலாளிகளின் மூலதனத்திற்கு இலாபம் உறுதிப்பட வேண்டும் என்பதற்காக எப்படிப்பட்ட இழிவான சாகசச் செயல்களைச் செய்யவும் முதலாளித்துவ தயங்காது.

போபால் நச்சு வாயுக் கசிவு நிகழ்விற்குப் பின் நடந்துள்ள நிகழ்ச்சிகள் அனைத்தையும் உற்று நோக்கிப் பாருங்கள் (இந்நிகழ்வு மட்டுமல்ல; வேறு எந்த நிகழ்வையும் உற்றுநோக்கிப் பாருங்கள்). அரசின் இந்தக் கொடிய முகம் தெளிவாகத் தெரியும். உச்சநீதிமன்றத்தின் 11.5.2011 ஆம் நாளைய தீர்ப்பும் இதைத்தான் தெரிவிக்கிறது.

மக்கள் தனித்தனி நிகழ்வுகளுக்கு நியாயம் கேட்டுத் தனித்தனியாகப் போராடிக் கொண்டு இருந்தால், முதலாளித்துவ அரசும் எளிதாக மக்களை வெற்றி கொள்ளும்.

இதுபோன்ற நிகழ்வுகள் நேரக் கூடாது என்று, மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவப் பொருளா தார முறைக்கு எதிராகவும், மக்களின் தேவைகளைக் கணக்கில் கொண்டு செயல்படும் சோசலிச உற்பத்தி முறை வரவேண்டும் போராடினால் தான் கொடிய வேதனைகளில் இருந்து விடுதலை பெற முடியும். இந்நோக்கத்தில் நாம் அனைவரும் ஒன்றுபடுவதற்கு உச்சநீதிமன்றத்தின் 11.5.2011 ஆம் நாளைய தீர்ப்பு போதுமா? அல்லது இதைவிடக் கொடுமையான தீர்ப்புகள் வரவேண்டுமா?

Pin It