பகவான் என்றும் கடவுளின் அவதாரம் என்றும் அறியாமை நிறைந்த மக்கள் சிலரால் அழைக்கப்பட்டு வந்த புட்டபர்த்தி சாய்பாபா கடந்த 24.4.2011 அன்று உயிர் துறந்தார். வடநாட்டு கோயாங்கோ பணத்தில் பார்ப்பன வைத்தியநாதனைக் கொண்டு நடத்தப்படும் தினமணி நாளிதழ் ‘முக்தி அடைந்தார் ஸ்ரீசத்ய சாய்பாபா’ என்று கொட்டை எழுத்தில் தலைப்புச் செய்தி வெளியிட்டது.

முறைப்படி அவர் இறப்புச் செய்தி அறிவிக்கப்பட்டது ஏப்பிரல் 24 என்றாலும், அதற்கு முன்பே அவரின் இயற்கையான மூச்சுக் காற்று நின்றுவிட்டது. மருத்து வக் கருவிகளின் உதவியால்தான் அவரது இதயத்தை இயங்க வைத்துக் கொண்டிருந்தனர். பல நாட்களுக்கு முன்பே உயிர் வாழ்வுக்கு அடிப்படையான அவரு டைய முதன்மையான உறுப்புகள் செயலிழந்துவிட்டன. மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் மரணம் என்பது இயற்கையானதே. அந்த வகையில்தான் சாய்பாபா என்கிற மனிதர் மரணமும் நிகழ்ந்துள்ளது.

86 அகவையில் சாவைத் தழுவியுள்ள சாய்பாபா ஆந்திர மாநிலத்தின் புட்டபர்த்தியில் பிறந்தவர். பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் சத்திய நாராயண ராசு என்பதாம். இறைவனின் அவதாரம் என்று தன்னைச் சொல்லிக் கொண்டால் எளிதில் புகழடைந்துவிடலாம் என்கிற இலக்கணப்படி இவரது பெயர் இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவத் தொடங்கியது. 1960ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சாய்பாபா பெயரிலான தொண்டு நிறுவனம் இந்தியா வில் 23 மாநிலங்களிலும், உலகின் 125 நாடுகளிலும் கிளை விரித்துள்ளது.

சாய்பாபா அறக்கட்டளைக்குச் சொந்தமாகப் பல்வேறு இடங்களில் பள்ளிகள், தொழிற்பயிற்சி மையங்கள், கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனை கள், தியான மண்டபங்கள் மற்றும் பல்கலைக்கழகம் என 40,000 கோடியில் சொத்துகள் உள்ளன. ஆனால் அரசுக்கு இந்த அமைப்புகள் சார்பில் எவ்வகை யான கணக்குகளும் காட்டப்படுவதில்லை. சாய்பாபா அறக்கட்டளையின் செயற்பாடுகள் மீது யாருமே வினா எழுப்ப முடியாது. ஏனெனில், இந்தியாவை ஆளும் குடியரசுத் தலைவர்கள், தலைமை அமைச்சர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், உயர் அதிகாரப் பொறுப்பில் உள்ளவர்கள், திரைத்துறையினர், விளையாட்டு வீரர் கள் இந்தியாவையே விலைக்கு வாங்கக் கூடிய வகை யில் ஏராளமான கருப்புப் பணத்தைக் குவித்து வைத் துள்ள பெரும் பண முதலைகள் என எல்லோருமே சாய்பாபாவின் கால்களில் தவங்கிடந்தவர்கள் என்பது புதிதாய்ச் சொல்ல வேண்டிய அரிய செயல் அல்ல!

புட்டபர்த்தி சாய்பாபா தனக்குச் ‘சீனியரான’ ஷீரடி சாய்பாபாவின் அவதாரம் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டார். ஆனால் அந்த ஷீரடி சாய்பாபா வின் சீடர்கள் இவரை அப்படி ஏற்கத் தயாராய் இல்லை. அவர்தான், ‘ஒரிஜினல்’, இவர் போலி என்பது அவர்கள் கருத்து. இப்போதும் ஷீரடி சாய்பாபாவுக்குத் தனியாகக் கோயில் கட்டி அவரைத் தனிக் கடவுளாகத்தான் வழி பட்டு வருகிறார்கள்.

தான் 96 அகவை வரை வாழப் போவதாகச் சொல்லிவந்த புட்டபர்த்தி சாய்பாபா 86 அகவையி லேயே இறந்து போனது அவரின் தொண்டர்களே எதிர்பாராத அவலமாகும். உலகம் முழுவதும் ஏராள மான அடியாட்களைப் பெற்ற இந்தச் சாய்பாபா நம் ஊர்களில் தெரு வித்தை காட்டும் மோடி மஸ்தான் வேலையைத்தான் செய்து கொண்டிருந்தார். கையசைப் பில் விபூதி, லட்டு, லிங்கம் போன்றவற்றை மட்டுமல்ல தங்க மோதிரம், தங்கச் சங்கிலி, கைக்கடிகாரம் போன்றவற்றையும் நொடியில் வரவழைத்து நூதன ஏமாற்றுத்தனங்களைச் செய்தார். பொன் மோதிரம் வரவழைத்த சாய்பாபாவால் பூசனிக்காயை வரவழைக்க முடியவில்லை. அப்படி வரவழைக்க முடியாது என்பது முட்டாளுக்குக்கூட தெரியும் என்றாலும் பெரியார் சொன் னது போல் பக்தி வந்தால் புத்தி போய்விடுகிறதே!

ஒருமுறை முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் பங்கேற்ற நிகழ்ச்சியில் தன் கையசைப்பில் வழக்கம் போல் சாய்பாபா தங்கச் சங்கிலி வரவழைத்தார். ஆனால் இம்முறை அவர் தன் உதவியாளரின் தாம்பூலத் தட்டி லிருந்து அந்தச் சங்கிலியை எடுத்ததைத் தொலைக் காட்சிப் படப்பிடிப்புக் கருவிகள் பதிவு செய்துவிட்டன. அப்போதே இந்தக் கடவுள் அவதாரத்தின் கதை நாறிப் போனது.

இன்னொரு முறை சாய்பாபா தன் கையசைப்பில் ஒரு கைக்கடிகாரத்தைத் தருவித்தார். ஆனால் அக் கடிகாரம் பாபாவின் சொந்தத் தயாரிப்போ அல்லது அவர் நடத்தும் தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றின் கண்டுபிடிப்போ அல்லது உலகறிந்த சப்பான் நிறுவ னத்தின் ‘சிட்டிசன்’ கைக்கடிகாரமாகும். பகுத்தறிவு மேதையான கோவூர் அந்தச் சிட்டிசன் நிறுவனத் துக்கே கடிதம் எழுதிக் கேட்டு ‘இதுபோன்ற ஒரு கைக் கடிகாரத்தை உங்கள் நிறுவனத்தின் பெயரில் வே றொருவர் வடிவமைக்க முடியுமா?’ என வினா எழுப்பி னார். அவருக்கு விடைதந்த அந்நிறுவனம் ‘அதற்கு வாய்ப்பே இல்லை; சாய்பாபா தருவித்துக் கொடுத்த கைக்கடிகாரத்தை ஆய்வு செய்து பாருங்கள். அதில் கட்டாயம் எங்கள் நிறுவனத்தின் உற்பத்தி இலக்க எண் இருக்கும்’ என்று மண்டையில் அடித்தது போல் சொல்லிவிட்டார்கள்.

ஆந்திராவைச் சேர்ந்த புரட்சிப் பாடகர் கத்தார் ஒவ்வொரு மேடையில் சாய்பாபாவின் போலித்தனத்தைத் தோலுரித்து ஒரு பாடல் பாடுவது வழக்கம். அந்தப் பாடலில் பின்வரும் செய்தி கதைபோல அமைந்திருக்கும்:

ஒருமுறை சாய்பாபா தன் அடியவர்களோடு மகிழுந்தில் போய்க் கொண்டிருந்தார். அப்போது நடுவழியில் வண்டி நின்றுவிட்டது. ஓட்டுநர் இறங்கிப் போய் வண்டியின் முன் பகுதியின் மூடியைத் திறந்து பார்த்தார். அடடா! வண்டியை ஓட்டப் பயன்படும் எரிபொருளான பெட்ரோல் தீர்ந்து போயுள்ளதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். காரணம் அது காட்டு வழி. பல கல் நடந்து போய்தான் பெட்ரோல் வாங்கிவர முடியும். என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆனால் சாய்பாபா துளியும் கவலைப்படவில்லை. வண்டியை விட்டு இறங்கினார். பெட்ரோல் நிரப்பப்படும் குடுவைப் பெட்டியில் தண்ணீரை நிரப்புமாறு ஓட்டுநரிடம் கூறினார். ஓட்டுநரும் அவ்வாறே செய்தார். உடனே சாய்பாபா அந்தக் குடுவைப் பெட்டியில் தன் ஆள்காட்டி விரலை விட்டு ஓர் ஆட்டு ஆட்டினார். என்ன வியப்பு! நிரப்பப்பட்ட அத்தனை தண்ணீரும் பெட்ரோலாக மாறி விட்டது. சாய்பாபாவின் பேரால் சொல்லப்படும் இந்தப் பித்தலாட்டக் கதையைக் கூறிவிட்டு பின்னாலேயே கத்தார் கிண்டலாகப் பாடுவார் : ‘தண்ணீரையே பெட்ரோலாக மாற்றக் கூடிய ஒப்பற்ற ஆற்றல் சாய்பாபாவிடம் இருக்கிறதே. பெட்ரோலுக்கும் டீசலுக்கும் இந்தியா நாயாய் அலைகிறதே! நாம் ஒன்று செய்யலாமே விரல் தொட்டே தண்ணீரைப் பெட்ரோல் ஆக்கும் வித்தை கற்ற சாய்பாபாவை அப்படியே தூக்கி ஆழ்கடலில் போட்டுவிட்டால் ஆழ்கடல் அத்தனையும் பெட்ரோல் ஆகிவிடுமே! இந்தியாவின் பஞ்சம் ஒரு நொடியில் தீர்ந்துவிடுமே! என்று கத்தார் கிண்டலாகப் பாடுவார்.

சாய்பாபாவின் மறைவையொட்டி தினமணி எழுதியுள்ள தலையங்கத்தில் சாய்பாபாவின் அற்புதச் செயல்கள் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறது : “இதெல்லாம் சாத்தியமா என்ற கேள்விக்கு இன்றைய அறிவியலும், பாரா சைக்காலஜி ஆய்வுகளும் தெரி விக்கும் முடிவுகள் பதிலாக அமைந்திருக்கின்றன. ஒரு மனிதன் தன் மன ஒருமைப்பாட்டின் உச்சநிலை அடையும் போது, அதாவது எண்ணங்கள் இல்லாத, மனது அற்றுப்போன பரிசுத்த நிலையில் இருக்கும் போது - மூளையில் உள்ள பிட்யூட்ரி சுரப்பியில் ஒருவித திரவம் சுரக்கிறது. அது அதீத ஆற்றலுக்குக் காரண மாக இருக்கிறது. சக்தியை அலையலையாக வெளி யிடுகிறது. இந்தச் சக்தி, அடுத்தவரின் செல்களில் மாறுதல் நிகழ்த்தும் அளவுக்கு இருக்கிறது. ஆகவே அந்த மகான் தொட்டதால் ஒரு பக்தர் குணமானார் என்பது வெறும் கதைகள் அல்ல என்று இன்றைய பாரா சைக் காலஜி ஆய்வுகள் சொல்கின்றன” (தினமணி தலை யங்கம் 25.4.11).

அந்த மகான் தொட்டதால் ஒரு பக்தர் குணமானார் என்று கதைவிடும் தினமணி வைத்தியநாத அய்யர் இதற்கு அறிவியலையும் துணைக்கு அழைக்கிறார். ஒரு பக்தரைத் தொட்டுக் குணமாக்கிய சாய்பாபா தன்னைத்தானே தொட்டுக் கொண்டு தன்னுடைய செல்களில் அந்த மாறுதலை நிகழ்த்திக் கொண்டு சாகாமல் இருந்திருக்கலாமே! மேலும் டாக்டர் கோவூர் போன்ற பகுத்தறிவாளர்கள் சாய்பாபா தன் சித்து விளையாட்டுக்களை தங்கள் முன் மெய்ப்பித்துக் காட்ட வேண்டும் என்று சவால் விட்டார்கள். ஆனால் ஆண்டவன் அவதாரம் என்று சொல்லிக் கொள்ளும் ‘புட்டபர்த்தி’, எங்கே தனது புளுகுகள் அம்பலமாகிவிடுமோ என்று அஞ்சி, பக்திப் புதருக்குள் போய் ஓடி ஒளிந்தார்.

எல்லா காவிச் சாமியார்களையும் போலவே சாய் பாபாவும் கொலை, பெண்களிடம் தகாத ஒழுக்கம் போன்ற குற்றச் செயல்களில் சிக்கினார். 1993இல் அவருடைய குடிலுக்கு உள்ளேயே ஆறு ஆண் பக்தர்கள் கொலை செய்யப்பட்டார்கள். ஆனால் அக் கொலை தொடர்பான உண்மைகள் இன்றுவரை வெளி வரவில்லை. அத்தனையும் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டன.

2000ஆம் ஆண்டு சாய்பாபா மீதும், அவருடன் இருந்த பக்தர்கள் மீதும் கற்பழிப்பு, பெண் குழந்தை களைப் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியது உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் ‘யூனெச்கோ’ அமைப்பின் காதுகள் வரை எட்டின. சாய்பாபாவுக் கிருந்த ஈடிணையற்ற செல்வாக்குக் காரணமாக எல்லாமே மூடிமறைக்கப்பட்டன. ‘ஆசிரமத்தில் நடை பெற்ற ஒரு கொலை மற்றும் சில சம்பவங்களை வைத்து, பாபாவைக் குற்றம் சுமத்தியவர்கள் கூட பின்னாளில் அவரது மானுட சேவையின் முன்பாக மண்டியிட்டுத் தலைகவிழ்ந்தார்கள்’ என்று தினமணி தனது தலை யங்கத்தில் குறிப்பிடுகிறது.

காஞ்சி சங்கராச்சாரி, திருவண்ணாமலை நித்தியா னந்தா உள்ளிட்ட கொலைகாரர்கள், பெண் ஒழுக்கக் கேடர்களுக்கும் இந்த மானுட சேவைகள் ஒரு பாது காப்புக் கவசமாகப் பயன்படுத்தப்படுகின்றன. சாய்பாபா அரசுக்குக் கணக்குக் காட்டாமல் சேர்த்த தன்னுடைய கோடிக்கணக்கான கருப்புப் பணத்தின் ஒரு பகுதியைக் கல்வி, மருத்துவம், நீர்ப்பாசனம், மக்களின் குடிநீர்த் தேவைகளுக்குச் செலவிட்டமைக்காகப் போற்றப்படு கிறார். தெலுங்கு கங்சை திட்டத்திற்காக 200 கோடி ரூபாயை ஒதுக்கியதாகச் சொல்லி கலைஞர் கருணாநிதியின் குடும்பமே சாய்பாபா காலில் போய் விழுகிறது. தன்னைப் பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொள்ளும் முன்னாள் முதல்வர் சாய்பாபா இறப்புக்காக உருகி உருகி அழுகிறார்.

கல்வி, மருத்துவம், குடிநீர் போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளை கூட நிறைவேற்ற வக்கின்ற இவர்கள் ஏன் ஆட்சிக்கட்டிலில் இருக்க வேண்டும்? இதற்காக மக்களைப் போலிச் சாமியார்களிடம் கையேந்த வைத்த கயமைத்தனத்தை மன்னிக்க முடியுமா? மக்களைப் பிச்சைக்காரர்களாகவே வைத்திருக்கும் அரசுகளை, ஆள்காட்டி வேலை செய்யும் அரசியல் கட்சிகளை, அனைத்திற்கும் துணைபோகும் அதிகார வர்க்கத்தை அடித்து வீழ்த்தாத வரை சாய்பாபா போன்ற ‘அவதாரப் புருஷர்கள்’ தோன்றிக் கொண்டு தான் இருப்பார்கள்!

சாய்பாபாவின் பக்தர்களாகப் படிக்காத பாமரர் கள் மட்டுமல்ல, மெத்தப்படித்த வெளிநாட்டு மேதைகளும், அறிவியல் அறிஞர்களும் விளங்கி இருக்கிறார்கள். என்ன செய்வது? இங்கிருந்து விண்ணிற்கு ஏவப்படும் செயற்கைக் கோள்கள் கூட நல்ல நாள் பார்த்து தேங்காய் உடைத்துச் சூடும் கொளுத்திய பிறகுதானே அனுப்பப்படு கின்றன. சாய்பாபா, இரமண ரிஷி, நித்தியானந்தா, அமர்தானந்தமயி போன்றோர்க்கெல்லாம் இங்குள்ளது போன்றே ஏராளமான வெளிநாட்டு பக்தர்கள். முட்டாள்தனம் என்பது இந்தியாவுக்கு மட்டும் மொத்தக் குத்தகையா என்ன? செத்துப்போன சாய்பாபாவுக்கு இந்தியாவின் தலைசிறந்த மட்டைப் பந்து வீரர்களான சுனில் கவாஸ்கரும் சச்சின் டெண்டுல்கரும் மிக அணுக்கமான சீடர்கள் ஆவர். கவாஸ்கர் தன் 60ஆவது பிறந்த நாளைத் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து சாய்பாபா ஆசிரமத்தில்தான் கொண்டாடி மகிழ்ந்தார். அதுபோலவே சச்சின் டெண்டுல்கரின் பிறந்த நாளான ஏப்பிரல் 24 அன்றுதான் சாய்பாபாவும் சமாதி ஆனார்.

1977ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியுடன் ஒரு தொடரில் விளையாடிக் கொண்டிருந்த போது கவாஸ் கருக்குத் தசையில் காயம் ஏற்பட்டுவிட்டது. அவர் மனைவி சாய்பாபா அருளாசி பெற்ற விபூதிப் பொட்டலத்தைக் கவாஸ்கருக்கு அனுப்பி வைத்தார். என்ன வியப்பு! காயம் பட்ட இடத்தில் அந்த விபூதியைப் பூசிக்கொண்டு அவர் விளையாடினார். காயம் குணமானது மட்டுமல்ல, அவர் அந்த ஆட்டத்தில் சதம் போட்டு எல்லோரையும் அசத்தினார். காக்காய் உட்காரப் பனம்பழம் விழுந்தே விட்டது! (டெக்கான் கிரானிகல் 25.4.2011).

Pin It