மனம் ஒத்த வாழ்க்கைத் துணைவர்களாக-தன்மானக் கொள்கையாளர்களாக - தறு கண் மிக்க வீரரும் வீராங் கனையுமாக வாழ்ந்தவர்கள் களமருதூர் சானகி - மாசிலா மணி இணையர்!

கணவர் ஆசிரியர் மாசிலா மணி - 1981இல் மறைந்தார். அவரை சென்னை அரசினர் தலைமை மருத்துவமனையில், 1981 நடுவில் நோயாளராக நான் பார்த்தேன். என்ன நோய்க்கு ஆளானார் என்பதே கண்டுபிடிக்க முடியாமல் - அதற்கான மருத்துவம் பெற முடியாமல் அவர் நலிந்து கிடந்தார். அன்னாரின் அன்புத் துணைவியார் சானகி மட்டும் துணைக்கு இருந்தார்.

சானகி, பத்மா, எழில்நிலவன் ஆகியோரின் தந்தை யார் தொப்பையைப் படையாட்சி 1981இல் தான் களமருதூரில் மறைவுற்றார். அதற்கு முன்னர், ஆண் டுக்கு நான்கைந்து தடவைகள், திருச்சி நகருக்கு வருவார் ஆசிரியர் மாசிலாமணி. தம் மைத்துனி பத்மா அங்கே கல்லூரிக் கல்வி பெற்றார். அவரைப் பார்த்துவிட்டு நேரே என் வீட்டுக்கு வந்து தங்குவார்; மறுநாள் ஊருக்குத் திரும்புவார்.

அப்படிப் பழகிய அந்த இளைஞர் அன்பின் உறை விடம்; அடக்கத்தின் இலக்கணம்; தன்மானக் கொள் கையின் கொள்கலம்.

அவருடைய அழைப்பை ஏற்று, அவர்தம் மாமனார் மறைந்த தொப்பையர் திருவுருவப் படத்தை அவர்தம் ஊரில் திறந்து வைக்க நான் வந்தேன். அக் கள மருதூரில் பிறந்து, திருச்சியில் வாழ்ந்த வடிவேலு என்கிற தோழரும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அவர் பெரியார் பெருந்தொண்டர்; பட்டியல் வகுப்பினர்.

ஊரார் - உற்றார் - பட்டியல் வகுப்பினர் எல்லோ ரும் பங்கேற்ற அப்படத்திறப்பு நிகழ்ச்சி தான், சானகி அம்மையாரின் குடும்பத்தாருடன் என்னைப் பிணைத் தது.

பின்னும் சில மாதங்களில், ஆசிரியர் சி. மாசிலா மணியும் மறைந்தார். நடுத்தர வயதினர்; நண்டுகளும் சிட்டுகளுமான குழந்தைகளை விட்டுவிட்டு அவர் மறைந்தார்.

அந்தத் தலைவரை இழந்த சானகி அம்மையார், தன்முனைப்புடன் தம் மக்களைப் பேணி நல்ல கல்வி அளித்தார்; தன் தம்பி, தங்கை குடும்பங்களுக்குத் துணை நின்றார்.

தன்மானக் கொள்கைக் கலனாக விளங்கிய அவர் - திராவிடர் கழகம், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடை மைக்கட்சி, பகுத்தறிவாளர் கழகம் முதலான அமைப் புகள் நடத்தும் பொதுக் கூட்டங்கள், மாநாடுகள், கிளர்ச்சிகள் எல்லாவற்றிலும் - அண்மை மாவட்டங் களில் நடப்பவற்றில் கடந்த 30 ஆண்டுகளாகத் தவ றாமல் பங்கேற்றார்.

மகள் அறிவுக்கண்ணுவை ஆசிரியராக ஆக்கினார்; மகன் அன்புமணியை உயர்தகுதி பெற்ற மருத்துவ ராக ஆக்கி உயர்த்தினார். மருத்துவர் அன்பு மணியின் - மருத்துவர் செல்வியின் திருமணத்தை மாபெரும் பகுத்தறிவாளர் - பொதுவுடைமையாளர் மாநாடு போல் பல்லாயிரவரைத் திரட்டி என் தலைமையில் ந்டத்தி னார். அது முதல் மா.பெ.பொ.க.வின் புரவலர் குடும்ப மாகவே இக்குடும்பம் விளங்குகிறது.

அண்மையில் அவரைப் பற்றியிருந்த உணவுக் குழல் புற்றுநோய் அம்மா சானகி அவர்களைக் கொள்ளை கொண்டுவிட்டது.

அவர் புகுந்த களமருதூர் வீடு, உளுந்தூர்பேட்டை மாசிலாமணி மருத்துவமனை, ஆதனூர் திருமண மண்டபம் இவற்றின் தொடக்க நிகழ்ச்சிகளிலெல்லாம் பங்கேற்ற நான், கடைசியாக, அன்னாரை 19.04.2011 அதிகாலை உளுந்தூர்பேட்டையில் அவருடைய மருத்துவமனையில் பார்த்தேன்; மனம் நைந்தேன்; விடை பெற்றேன்.

இன்று சானகி மாசிலாமணி அம்மையார் நம் எல்லோரிடமிருந்தும் மீளா விடை பெற்றுவிட்டார். அவர்தம் பெருமையைப் பேணிக் காப்பர். ஊராரும், உற்றாரும், பெரியார் கொள்கையினர் எல்லோரும் அவர்தம் குன்றாக் கொள்கை நலத்தை என்றென்றும் எண்ணுவர்; போற்றுவர்; புகழ்வர்!

சானகி அவர்களை இழந்து துயருறும் அவர்தம் மக்கள், உறவினர்கள், மார்க்சிய - பெரியாரிய - தமிழியக்கத் தோழர்கள் ஆகிய அனைவர்க்கும் மா.பெ.பொ.க. சார்பில் மனங்கசிந்த இரங்கலை உரித்தாக்குகிறேன்.

வாழ்க சானகி மாசிலாமணி புகழ்!

    - வே.ஆனைமுத்து

Pin It