பெரியார் ஈ.வெ.ரா. வின் மூதாதயர் தம்ம நாயக்கர், அவர் தம் தம்பி இராமு இருவரும் தமிழகத்துக்குக் குடி யேறிய முதலாவது தலைமுறைக்காரர்கள். தம்ம நாயக்கர்-கெம்பு அம்மாள் மகன் வெங்கட்ட நாய்க்கர். இவர் இரண்டாம் தலைமுறை. வெங்கட்ட நாயக்கர்-சின்னத்தாயம்மாள் மக்கள் ஈ.வெ. கிருஷ்ணசாமி, ஈ.வெ. இராமசாமி, இரா. கண்ணம்மாள், பொன்னுத் தாய் நால்வரும் மூன்றாம் தலைமுறை ஈ.வெ. கிருஷ் ணசாமியின் மக்களான செலமேலம்மாள் - தீனதயாளு எனப்பட்ட மிராண்டா, சம்பத், செல்வராஜ், செல்லா என்கிற நாகலட்சுமி, கஜராஜ் இவர்கள் நான்காம் தலை முறையினர்.

இவர்களுள் 1924இல் பிறந்த மிராண்டா கஜேந்திரன், 91ஆம் அகவையில் நலமாக உள்ளார்;  செல்லாவும் நலமாக உள்ளார். ஆனால், 1928இல்  பிறந்த-பெரியார் குடும்பத்தின் நான்காம்  தலைமுறையின் மூத்த தலைவர் ஈ.வெ.கி. செல்வராஜ் அவர்கள், 15-5-2014 இரவு 9.10 மணிக்கு ஈரோட்டில் மருத்துவமனையில் தம் 86ஆம் அகவையில் மறைந்துவிட்டார்.

இவர் 10 அகவை சிறுவனாக இருந்த போதுதான், 1938இல் கட்டாய  இந்தி எதிர்ப்புப் போராட்டம் பெரி யார் தலைமையில், சென்னையில், 20 மாதம் நடந்தது.

இவர் ஈரோட்டுப் பள்ளிச்சிறுவர்களை  இணைத்துக் கொண்டு, அப்போது ஈரோட்டுக்குத் தொடர் வண்டியில் வருகை தந்த முதலமைச்சர் இராசகோபாலாச்சாரி யாரை எதிர்த்து, “இராசாசியே திரும்பிப்போ!” என்று முழக்கமிட்டார். அதையும் மீறி இராசாசி ஈரோட்டுக்கு வந்துவிட்டார்.

சிறுவன் செல்வராஜ் பள்ளிநேரம் முடிந்து வீட்டுக்கு வந்தார். வாயிற் கதவு தாளிடப்பட்டிருந்தது; புத்தக மூட்டையால் அடித்துக் குரல் கொடுத்தார்; ஈ.வெ.ரா. வந்து கதவைத் திறந்தார். அங்கு இராசகோபாலாச் சாரியார் அமர்ந்திருப்பதைக் கண்டு செல்வராஜ் மருண்டார்.

தம் குடும்பச் செல்வாக்கை வைத்து, அப்போது வாலிபராக இருந்த லூர்துசாமியையும், மகிழுந்து ஓட்டுநரையும் அழைத்துக் கொண்டு, ஈரோட்டைச் சுற்றிலுமுள்ள சிற்றூர்களுக்குச் சென்று, சென்னையில் நடக்கும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குத் தொண்டர் களைத் திரட்டி வந்தார்.

அவ்வப்போது, “Send two bundles” என்று - மறை முகமாக, சங்கேத மொழியில் ஈ.வெ.ரா. தந்தி கொடுக்கிற போதெல்லாம், இரண்டு இரண்டு தொண்டர் களைத் தொடர் வண்டியில் சென்னைக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்.

வெங்கட்ட நாயக்கர் சொத்து வாங்கிய பத்திரங் களின் படிகள், அவர் எழுதிய உயிலின் படிகள், ஈ.வெ.ரா. 60 வயதில், 67 வயதில் செத்துப் போவார் என்று எழுதப் பட்ட சோதிடத்தின் அச்சிட்ட படி எல்லாவற்றிலும் எனக்குப் படி வேண்டும் என்று கேட்டேன். ஈ.வெ.ரா. வின் சோதிடப் படி தொலைந்துவிட்டது என்று கூறினார். தன்னுடைய சோதிடம் ஒரு பெரிய 2 குயர் சுவடியில் விவரமாக எழுதப்பட்டிருப்பதைக் காட்டினார். அது குறித்துப் பின்னர் எழுதுவேன்.

1932 பிப்ரவரி முதல் மே வரை சோவியத்து நாட்டில் °டாலினின் அரசாங்க விருந்தாளியாக ஈ.வெ.ரா., மயிலாடுதுறை எஸ். இராமநாதன், ஈ.ரோடு இராமு ஆகியோர் தங்கியிருந்த போது,  ஈ.வெ.ரா. அன்றாடம் எழுதிய நாட்குறிப்பின் ஒரு சுவடியை அச்சமயத்தில் தான் எனக்கு செல்வராஜ் தந்தார். “கொடுக்க வேண்டி யவரிடம் கொடுக்கிறேன் - செய்ய வேண்டியதை செய் யுங்கள்” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார். அவர் தான் செல்வராஜ்!

தன் திருமணப் பருவத்தில் ஒரு இளம் திரைப்பட நடிகையை மணக்க விரும்பினார். அதைத் தடுத்து, ஆனைமலையில் தக்க பெண்ணைத் தேர்வு செய்து, ஈ.வெ.ரா. செல்வராஜின் மணத்தை முடித்தார்.

ஈ.வெ.ரா.வின் குடும்பத்துச் சொத்துக்களைக் காப் பாற்றுவதில் இவர் மட்டுமே வல்லவராக இருந்தார். ஈ.வெ.ரா.வைப் போலவே சிக்கனமாக இருந்தார்.

ஈ.வெ.கி., ஈ.வெ.ரா., கண்ணம்மாள் ஆகியோரை  அடுத்து இவர் ஈரோடு நகராட்சி உறுப்பினராகவும், நகராட்சித் துணைத் தலைவராகவும் 1973-1975இல் இருந்தார்.

“பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்” நூலின் மூன்று தொகுதிகளையும், அதன் தனி முன்னுரை நூலையும் 1975இல் இவருக்கு நான் அளித்தேன். அப்போது, ஈரோடு நகராட்சியின் 1917-1919 நடவடிக் கைக் குறிப்புகள் (Minutes Books) எல்லாவற்றையும் நேரில் நகராட்சிக்கு வந்து பெற்றுத் தந்து, நான் அங்கேயே அமர்ந்து படித்திடவும், குறிப்புகள் எடுக்க வும் எல்லாம் செய்தார்.

பின்னர், ஈ.வெ.ராவின் சோவியத் பயணம் பற்றிய அவரின் நாட்குறிப்பை அச்சிட்டேன். “அந்த நூலைப் பொதுவுடைமை மேதை கே.டி.கே. தங்கமணி வெளியிடு கிறார். அதன் முதல் படியைப் பெற்றுக்கொள்ள நீங்கள் வாருங்கள்” என்று அழைத்தேன்.

“எங்கள் சிற்றப்பாவோடு நான் இயக்கப் பணியை நிறுத்திக் கொண்டேன்” என்று கூறினார். “உங்கள் மகன் செங்குட்டுவனை அனுப்புங்கள்” என்றேன்.

இவருடைய மகன் செங்குட்டுவனும், மைத்துனர் தாதம்பட்டி எம். இராசுவும் வந்திருந்து, விழாவில் அந்நூலின் முதல் படிகளைப் பெற்றனர்.

கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக நோய் வாய்ப்பட்டிருந்த ஈ.வெ.கி. செல்வராஜ் அவர்களை நானும், மா.பெ.பொ.க. துணைப் பொதுச் செயலாளர் இரா. பச்சமலையும் 20-11-2013இல் வீட்டில் பார்க்கச் சென்றோம். அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.

எஸ்.குணாளனும், செ.செங்குட்டுவனும் அவரைத் தட்டி எழுப்பினர். கண்விழித்த செல்வராஜ், முகமும் அகமும்  மலர என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டார்; நீண்ட நேரம் அளவளாவினார்.

பெரியாரின் நான்காவது தலைமுறையின் அக்குடும் பத் தலைவர் ஈ.வெ.கி. செல்வராஜ் அவர்கள் இன்று நம்மிடையே இல்லை.

வாழ்க ஈ.வெ.கி. செல்வராஜ் புகழ்!

Pin It