பெரியார் ஒரு சமூகப் புரட்சியாளர். பல ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகத் தமிழ்ச் சமூகத்தில் ஊடுருவியிருந்த, ஆழங்காண முடியாத சாதியத்தை, மூடப்பழக்கங்களை எதிர்த்துக் களம் அமைத்து வெற்றி யையும் பெற்றவர். இந்த வெற்றி முழு வெற்றியா? என்று சிலர் வினவக்கூடும். உலகில் எந்தச் சமூகப் புரட்சியாளரும் தனது வாழ்நாளில் முழு வெற்றியைப் பெறவில்லை. ஆனால், சாதியத்தின் ஆணிவேரை, சல்லி வேரை அசைத்த, வெட்டிய முதல் வெற்றி பெரியாரின் வெற்றி.

எனவே, பேரறிஞர் அண்ணா 1968இல் தந்தை பெரியாருக்கு எழுதிய மடலில் எந்தச் சமூகச் சீர்த்திருத்த வாதியும், தன் வாழ்நாளில், தங்களைப் போல் வெற்றி பெற்றதில்லை என்று கூறிப் பெருமிதம் கொண்டார். பெரியாரின் சாதனைகளை உள் உணர்ந்து, பெரியாரின் பெருமையை, சிறப்பை உலகறியச் செய்தார் அறிஞர் அண்ணா.

இங்கிலாந்து நாட்டுப் புகழ்மிக்க அரசியல் அறிஞர் பேராசிரியர் ஹரால்டு லாஸ்கி (Harold Laski), “சமூகச் சிந்தனையின் வரலாற்றில் காரல்மார்க்சை விஞ்சிய தனிச்சிறப்பை யாரும் பெற்றிருக்கவில்லை. நெடிய வரலாற்று ஆய்வுநோக்கோடு, அவரின் பங்களிப்பைப் பார்க்காமல் உண்மையில் மார்க்சைப் பாராட்ட இயலாது.  மார்க்சின் ஆளுமை எளிதில் பகுத்துப் பார்த்துவிடக் கூடிய ஒன்றல்ல. அடித்தளத்தில் அவருக்கு முதன்மையாக இருந்த உணர்வும், அதற்காக அவர் அளித்த பங்கும் நீதிக்கான உணர்வாகும்” என்று குறிப்பிட்டார்.

உலகச் சிந்தனையாளர்கள் சிலர்தான் ஒடுக்கப் பட்ட, ஒதுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான களம் அமைத்து இறுதிவரை போராடினார்கள். இவ்வரிசையில் பெரியாரின் பங்கு இணையற்றது என்பதைப் பல ஆய்வாளர்கள் இன்று உணர்ந்து தமது படைப்புகளில் பெரியாரின் அளப்பரியத் தொண்டினை இணைத்து ஆய்வுத்தளங்களில் உயர்த்தி வருகின்றனர்.

இராமசந்திர குகா படைத்துள்ள “புதுமை இந்தியாவின் சிற்பிகள்” (Makers of Modern India 2010) என்ற நூலில் பெரியாரின் தொண்டு பாராட்டப் பெற் றுள்ளது. உலக அளவில் புகழ் பெற்ற பென்குயின் பதிப்பகம் பெரியாரின் படைப்புகளை ஆங்கில மொழியில் வெளியிட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே அறிஞர் அண்ணாவின் வாழ்வினையும், தொண்டினையும் நூலாகப் பதிப்பித்துள்ளது. இவ்வாறாக, திராவிடர் இயக்க முதன்மையான தலைவர்களின் சிந்தனைகள் உலக அளவில் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, போற்றப்பட்டு வருகின்றன. பெரியாரின் பெரும் தொண்டினைப் பாவில் போற்றிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் “மண்டைச்சுரப்பு” என்று பெரி யாரின் அறிவாண்மையை அழகுறக் குறிப்பிட்டுள்ளார்.

பெரியார் எனும் அறிவுக் களஞ்சியத்தில் ஒளிரும் துகள்களில் ஒன்றினை எடுத்துக்காட்டுவது சாலப் பொருத்தமாகும். “அறிவுத் தொண்டு செய்வது என்பது மற்ற காரியம் போல அல்ல. பகுத்தறிவுத் தொண்டு செய்கிறவனுக்கு எந்தவிதமான பற்றும் இருக்கக் கூடாது. அறிவுப்பற்று என்பதுதான் இருக்க வேண்டும். அறிவுப் பற்று என்றால் நீதியானவருக்கு, நீதிப்பற்றைத் தவிர மற்றையப் பற்று இருந்தால் அவரைச் சறுக்கி விட்டுவிடும். அதுபோலத்தான் பகுத்தறிவாதிக்குக் கடவுள் பற்றோ, சாதிப் பற்றோ இருக்கக் கூடாது... எப்படி சாதி என்பது செயற்கையோ அதுபோலப் பொருளா தாரத்தில் பெரியவனாக இருக்கின்றதும் செயற்கையே ஆகும். எவனும் பிறக்கும் போதே பூணூலுடன் பிறக்க வில்லை. அதுபோலப் பிறக்கும் போதே பணத்தைக் கொண்டுவரவில்லை” (6.7.1965இல் செயங்கொண் டத்தில் நடைபெற்ற விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய உரை - விடுதலை 6.8.1965).

இத்தகையச் சிந்தனையை, உண்மை அறிவை வெளிப்படுத்திய பெரியாரைச் சில மண்டைச்சுருங்கிகள் அவ்வப்போது வம்புக்கு இழுக்கிறார்கள். அவற்றில் ஒன்றுதான் பள்ளி வளாகத்தில் பெரியார் சிலையை வைக்கக் கூடாது என்று அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது ஆகும். அண்மையில் நீதிநாயகம் சந்துரு அளித்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. பெரியார் குறிப் பிட்டது போல (1965), “நீதிபதியானவருக்கு நீதிப்பற் றைத் தவிர வேறு பற்று இருக்கக் கூடாது” என்பதற்கு இலக்கணமாக நீதித்துறையில் தனித்தன்மையோடு எடுத்துக்காட்டான தீர்ப்புகளை வழங்கி வருபவர் நீதிநாயகம் சந்துரு. எனவே பெரியார் பற்றிப் பெரியார் சிலை வழக்கில் நீதிநாயகம் சந்துரு வழங்கிய தீர்ப் பினை மொழிபெயர்த்து, சிந்தனையாளன் வழங்கு கிறது.

தீர்ப்பு விவரம் :

1.            கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. சுந்தரேசன், பள்ளிக்கு அருகில் உள்ள பெரியார் சிலையை அகற்ற வேண்டும் எனத் தொடுத்த வழக்கின் மீது, நீதிநாயகம் சந்துரு, 8.6.2012 அன்று அளித்த தீர்ப்பு 11.12.2009இல் தந்தை பெரியார் சிலை அமைப்புக் குழுவினரால் அளிக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க பள்ளிக் கல்வி இயக்குநரகத்தால் அனுமதி அளிக்கப்பட்டது. பள்ளியின் தென்கிழக்குத் திசையில் 10 அடி நீள அகலத்தில் இச்சிலையை நிறுவு வதற்குத் தந்தை பெரியார் சிலை அமைப்புக் குழுத் தலைவருக்கு அனுமதியும் பராமரிப்புப் பணியும் மேற்கொள்வதற்கு நீதிமன்றத் தீர்ப்பின் வழியாக ஆணையும் பிறப் பிக்கப்பட்டது.

2.            அரசு (பெரியார் சிலையை வைப்பதற்கு) ஆணை யிடுவதற்கு முன்பு பள்ளிக் கல்வி இயக்குநரிடம் கருத்துக் கேட்டது. இதற்கு அரசிற்குப் பதில் அளித்த பள்ளிக் கல்வி இயக்குநர், இச்சிறிய பகுதி மாணவர் களின் விளையாட்டு நடவடிக்கைகளுக்குப் பயன் படுத்த முடியாத நிலையில் உள்ளது. சிலையை நிறுவுவதால் பள்ளிப் பணிக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது. சிலை நிறுவப்படும் போது தேவையான அளவிற்குச் சுற்றுச்சுவர் கட்டப்படும். சிலை அமைப்புக் குழுவினரின் செலவிலேயே வெண்கலச் சிலை உருவாக்கப்படும். எதிர்காலத்தில் சிலை பராமரிப்புப் பணியை இக்குழு மேற்கொள்ளும். எதிர்காலத்தில் சிலைக்கு மாலையிடும் பணிக்காகத் தேசிய நெடுஞ் சாலையில் சிலைக்குச் செல்லும் வகையில் இரும்புக் கதவுடன் கூடிய வழி அமைக்கப்படும் என்று தெரி விக்கப்பட்டது. இக்கருத்து பெற்றோர்-ஆசிரியர் கழகத்தில் விவாதிக்கப்பட்டது. 10 அடி நீள அகலத் தில் சிலை அமைப்பதற்குப் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் செயற்குழு தனது 4.9.2008 அன்றைய தீர்மானத்தில் எந்தவிதத் தடையும் இல்லை என்பதை உறுதி செய்தது. மேற்குறிப்பிட்ட விவரங் களின் அடிப்படையில் பள்ளிக்கல்வி இயக்குநர் பள்ளிக் கட்டடத்திற்குத் தென்கிழக்குப் பகுதியில் சிலை அமைப்பதற்கு அரசு தக்க அனுமதி அளிக்கலாம் என அரசிற்குப் பரிந்துரை செய்தார். இப்பரிந்துரையை ஏற்று அரசு ஆணை (பொது) எண்.331 பள்ளிக் கல்வி நாள் 11.12.2009இல் அரசு அனுமதி அளித்தது. இவ்வாணை 2ஙூ ஆண்டு கள் கழித்து இம்மனுவில் எதிர்க்கப்பட்டுள்ளது.

3. இவ்அரசாணை வெளியிடப்பட்டு இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மனுதாரர் இந்த ஆணையை எப்படி எதிர்க்க முன்வந்தார் என்பது தெளிவற்ற நிலையில் உள்ளது. மனுதாரரால் மனுவுடன் இணைக்கப்பட்ட எல்லாவித ஆவணங்களும் இந்த வழக்கிற்கு உரித்தானதாகவோ, உகந்ததாக வோ இல்லை.

4.            இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது மரியாதைக்குரிய அரசின் தலைமை வழக் கறிஞர் திரு. ஏ. நவநீதிகிருஷ்ணன் அரசு சார்பில் இந்த வழக்கிற்காக வாதிட முன்வந்துள்ளார். மனு தாரருக்காக வாதிட்ட வழக்கறிஞர் எம். ராமதாசு மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் ஏ. நவநீத கிருஷ்ணன் ஆகியோரின் வாதங்கள் கேட்டறியப் பட்டன.

5.            மனுதாரர் காவேரிப்பட்டணத்தில் பால் பண்ணை நடத்தி வருகிறார். சமூகப் பணி மற்றும் சமூகத் தொண்டு செய்துவருகிறார். 18.6.2010இல் பெற் றோர்-ஆசிரியர் சங்கத்தின் தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2011ஆம் ஆண்டு பள்ளிச் சுற்றுச்சுவரின் தென்கிழக்கு மூலை சிலை அமைப்பதற்காக உடைக்கப்பட்டது என்பது மனு தாரரின் வழக்கு. இந்த நிகழ்வு நடந்தவுடன், அப் பகுதியைச் சேர்ந்த ஒரு பிரிவினர் பள்ளி வளாகத்தில் இருந்து சிலையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பரப்புரையைத் தொடங் கினர். பல அரசியல் கட்சிகளும் சிலை அமைப் பதற்கு எதிர்ப்பினைத் தெரிவித்தன. நாத்திகத்தை ஏற்றுக்கொண்ட ஒரு மக்கள் பிரிவினரின் பிரதிநிதி யாகத் தந்தை பெரியார் உள்ளார். சிலை பள்ளி வளாகத்திற்குள் அமைக்கப்பட்டால் அது மாணவர் கள் மனதில் நாத்திகக் கொள்கை வளர்வதற்கு வாய்ப்பினை அளித்துவிடும். தற்போது சிலை அமைக்கப்படவுள்ள இடத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் சேலம் முதன்மைச் சாலையிலுள்ள பையூர் கிராமத்தில் ஏற்கெனவே பெரியார் சிலை உள்ளது. எனவே, சிலை வைக்கும் இம்முயற்சி சட்டத்திற்குப் புறம்பானது.

6.            மேலும், அரசு 2.3.2010 அன்று வெளியிட்ட அறிவிக்கை வழியாகச் சுற்றுச்சுவரை மீண்டும் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுத்து, அதை தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டது. காவேரிப் பட்டணத்தைச் சேர்ந்த பா.ச.க. உறுப்பினர் ஒருவரால் புகார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அரசால் இந்தக் கடிதம் வெளியிடப்பட்டது. மேற் கூறிய கருத்து மாறுபாட்டால் பள்ளித் தலைமை ஆசிரியர் சிலை அமைப்புக் குழுத் தலைவருக்குப் பெரியார் சிலை அமைக்கும் பணியைச் சிறிது காலத்திற்குத் தள்ளி வைக்கும்படி கேட்டுக் கொண் டார். அப்பகுதியின் பா.ச.கட்சியும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நிறுவனர் எக்டேரின் சிலையை நிறுவ வேண்டுமென்று, 5.6.2012இல் மடல் அனுப்பியது. இதற்கிடையில் பள்ளித் தலைமை ஆசிரியர் 22.7.2011 அன்று காவேரிப்பட்டணம் சட்டம் ஒழுங்கு காவல் துறை ஆய்வாளருக்குத் தெரிவித்த தகவலில், சிலை அமைப்புக் குழுவினர் சிலையை அமைப்பதற்கான அடித்தளக் கட்டுமானப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் தங்களின் பணியினை நிறுத்த முடியாது என்று அறிவித்துவிட்டு அதனைத் தடுக்க முற்படும் எவ்வித நடவடிக்கையும் அறிவிப்பின்றி மேற் கொள்ளக் கூடாது என்று உள்ளூர் முன்சீப் நீதிமன்றத்திடம் எச்சரிக்கை (ஊயஎநயவ) வழக்கும் பதிவு செய்துள்ளனர். இக்காலக்கட்டத்தில் மனுதாரர் 24.4.2012 அன்று மாநில அரசிற்கு ஒரு அறிவிக் கையை அனுப்பியதுடன் நீதிமன்றத்தில் இந்த வழக்கையும் தொடுத்துள்ளார்.

7.            இச்சூழலில் இந்த முறையீட்டு மனு எவ்வாறு ஏற்கத்தகுந்தது என்று தெளிவாக்கப்படவில்லை. இந்த மனுவை நீதிமன்றத்தில் பதிவு செய்வதற்குத் தனக்குரிய சட்டப்படியான தகுதி உரிமையைக் குறிப்பிடவில்லை. பள்ளிக்கூடத்தின் செயல்பாடு களுக்கு எவ்விதத்திலும் இடையூறு விளைவிக்காத 10 அடி நீள அகலத்திற்குள் தந்தை பெரியாரின் சிலையைப் பள்ளியின் தென்கிழக்குப் பகுதியில் நிறுவுவதின் உண்மையான நோக்கத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளார். பெரியாரின் கொள்கை களை மனுதாரர் உருவகப்படுத்தியதிலிருந்து பெரியார் தமிழ்ச் சமுதாயத்தின் மாற்றத்திற்குப் பல்வகையில் ஆற்றிய பணிகள் பற்றிய தனது அறியாமையைத் தன்னையறியாமல் வெளிப் படுத்தியுள்ளார். அவர் நாத்திகக் கொள்கைகளைப் பரப்பியவர் என்ற முத்திரையை மட்டும் குத்திவிட முடியாது. சாதிய ஒடுக்குமுறை, சமூக சமத்துவம், பெண் விடுதலை ஆகிய தளங்களில் பெரியாரின் கருத்துகள் அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த தலைவர்களின் கருத்துகளைவிட விஞ்சியிருக் கின்றன. அயோத்திதாசரும், பெரியாரும் மற்றும் புலேயும் அம்பேத்கரும் போன்று தனிச்சிறப்பிற் குரிய தொலைநோக்குப் பார்வையும், நிறைந்த இரக்க உணர்ச்சியும், சிறந்த தனித்த சிந்தனைத் திறனும் இயற்கையிலேயே பெற்றிருந்தவர்கள் ஆவர். தங்கள் சமூகத்தில் நிலவிய அநீதி, அறி யாமை, துன்பம் ஆகியவற்றை ஆழ்ந்து உணர்ந்து அவற்றைத் தங்களுடைய நேர்மைமிக்க திறனாய்வு மதிநுட்பத்தால் உணர்ந்து உலகளாவிய புரிதலை யும், ஆய்வினையும், செயல்பாடுகளையும் உருவா வதற்கு வழிவகுத்தவர்கள். சாதிய அமைப்பில் ஒடுக்குமுறை, அநீதி, கேடு புதைந்திருப்பதைத் தங்களுடைய அரிய படைப்பாற்றல் மிக்க செயல் பாடுகளால் அடையாளங்கண்டு அவற்றை எதிர்த்து அறைகூவல் விடுத்தனர். இந்து சமூக அமைப் பின் ஆணிவேரையே இவ்வகையில் அவர்கள் அசைத்தனர். அதன் தலையின் மீது நிற்பதற்குப் பெரியாரின் சிறப்பு மிக்க உரைகள் பயன்பட்டன.

8.            தலைமை (முன்னாள்) நீதிநாயகர் திரு. ஏ.பி. ஷா அவர்கள் தலைமையில் அமைந்த அமர்வு. பெரியார் திரைப்படம் தொடர்பான வழக்கில், பெரியார் ஆற்றிய பணியைப் பாராட்டியுள்ளது (வழக்கு டி. எண்ணன் எதிர் லிபர்ட்டி கிரியேட்டர், இயக்குநர் ஞானசேகரன் (2MLJ1015), அத்தீர்ப் பின் 7ஆம் பத்தியில் “பெரியார் ஈ.வெ. ராமசாமி சமூக நீதியின் ஏந்தலாக, பகுத்தறிவை, சுயமரி யாதையை, சமூகப் புரட்சியைப் பரப்பியவராக தனது வாழ்நாள் முழுவதும் தீண்டாமை ஒழிப்பு, சாதி முறை அழிப்பு, பெண்களின் உரிமைகளை உயர்த்திப் பிடித்தல் ஆகியவற்றிற்காகப் பணி யாற்றினார். பயனற்ற கேடு விளைவிக்கும் கண் மூடித்தனமான நம்பிக்கைகளை, மூடநம்பிக்கை களைக் கைவிட்டுவிட்டு மக்கள் அறிவியல் உணர் வைக் கொள்ள வேண்டுமென ஒரு பகுத்தறிவு வாதியாகத் தூண்டினார். 1926இல் சுயமரியாதை இயக்கத்தை நிறுவினார். அறியாமையில் மூழ்கடித்து மக்களைக் கடவுள் பயத்தில் ஆழ்த்தும் பிராமண மேலாதிக்கத்தையும், புரோகித வகுப்பி னரை உயர்வாக நிலைநிறுத்தும் ஒரு வகை யான கேடுவிளைவிக்கிற முறையை மதம்தான் தொடர்ந்து நிலைநிறுத்துகிறது என்று பெரியார் நம்பினார். எனவே கடவுள், மதத்தன்மைக்கு எதிராக போராளியானார். வ. கீதா - எஸ்.வி. ராஜதுரை எழுதிய “பிராமணரல்லாதவர்களின் புத்தாயிரத்தாண்டுப் பயணம்” நூலில், சுயமரியா தைக்காரர்களின் மதத்தைப் பற்றிய விமர்சனம் பக்கம் 307 என்ற தலைப்பின்கீழ் பெரியாரின் தத்துவக் கோட்பாடு பின்வருமாறு விளக்கப்பட் டுள்ளது.

“இந்துத்துவத்தைப் பற்றிக் கடந்த காலத்தில் பெரியார் செய்த விமர்சனத்தைத் தற்காலத்தில் ஒருவர் தனது வாழ்நாளில் செய்வாரெனில், அச்செயல் காலமெல்லாம் விமர்சிக்கப்படும்; எதிர்க்கப்படும். அச்செயலானது அவருடன் இருக்கும் இரு பார்ப்பனப் பிச்சைக்காரர்களுடன் அவருக்கு இருந்த உறவாகவும், நம்பிக்கையை நகைப்புக்குரியதாக்கிய நாடகமாகவும் காணக்கூடியதாக இருக்கும். அதிகாரமும் ஆதிக்கமும் உடைய சமூகப் பழக்கவழக்கங்களின் கட்டமைப்பிற் குள்ளே அடுத்தடுத்து அழிவையும், அவமதிப்பையும் ஏற்படுத்தி, பகுத்தறிவாளர் நிலையான மகிழ்ச்சிய டைவர். மதம் பற்றிய பெரியாரின் நகைப்பான விமரி சனம் நிலைத்து நின்றது. மதத்தையும், கடவுள்களின் போலி மதிப்பையும் அழித்த அவருடைய செயல், ஈர்ப்பை அளித்தது. பெரியாரின் வெளிப்படையான உருவ வழிபாட்டு எதிர்ப்பாலும், வழிகாட்டுதலாலும் பல சுயமரியாதைக்காரர்கள் நாத்திகத்தையும், கடவுள் வெறுப்புக் கோட்பாட்டையும், செயல்முறையையும் முன்னெடுத்துச் சென்றனர். இச்செயல் கடும் கோபத் தையும், வெறுப்பையும் எதிரொலித்தது. இவர்கள் கடவுள், மதம், மூடநம்பிக்கைகளின் போலி மதிப்பை அழிக்கவும், கேலிக்குள்ளாக்கவும் வலியுறுத்தப் பகுத் தறிவு நெறியின் உச்சத்தில் நின்றனர்.

மதம் பற்றிய சுயமரியாதைக்காரர்களின், பெரி யாரின் கருத்துகள் ஐந்து முதன்மையான பண்பு களைக் கொண்டதாகும். பிராமணப் புரோகிதரையும், அவரின் சிறப்புரிமை, ஆட்சி, அதிகாரம் பற்றிய திற னாய்வு - சுருக்கமாக - பிராமணர்களையும், பிராமணி யத்தையும் பற்றிய திறனாய்வு ஆகும். மதநூல்கள் எனக் கருதப்படும் வேதங்கள், இதிகாசங்கள், புரா ணங்களின் திறனாய்வு என்பது பொய்ப் புரட்டுகளை அதிரடியாக, பகுத்தறிவு நெறி சார்ந்து நிலைகுலையச் செய்த திறனாய்வானது. மூன்றாவதாக, மதத்தைப் பற்றிய திறனாய்வு என்பது உலகின் பார்வையில் - புனிதம், சமய நம்பிக்கைகளை அவமதித்தல், சமய சார்பற்ற நிலை ஆகியவற்றின் மீதான நம்பிக்கை யாளர்களின் எண்ண ஓட்டங்களைத் தீர்மானிக்கும் சமூகப் பண்பாகக் கருதப்படுகிறது. நான்காவதாக, நம்பிக்கைகளை நிலை நிறுத்தி, இயக்குகிற மதக் கோட்பாடுகளை, கொள்கைகளைத் திறனாய்ந்து விளக்கமளித்தல். கடைசியாக, மதம் சார்ந்த செயல்க ளான பண்டிகைகள், சடங்குகள், நிகழ்வுகள் பற்றிய திறனாய்வு ஆகும்”.

9.            உயர்நீதிமன்ற ஓர் அமர்வின் ஆய்வுக்கு (அமிர்த லிங்கம் எதிர் உள்துறை செயலர், தமிழ்நாடு அரசு மற்றும் பிறர் 2010, 2ஆடுது1022) பொது இடத்தில் ஒரு சிலை நிறுவுவது பற்றிய ஒரு வழக்கு வந்தது. அவ்வழக்கில் அம்பேத்கரின் சிலையை உரிய முன் அனுமதி இன்றி பொது இடத்தில் நிறுவப் பட்டிருந்தாலும், அம்பேத்கரின் ஆளுமையைக் கருத்தில் கொண்டு சிலையை வேறு இடத்திற்கு மாற்றத் தேவையில்லை என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது. நீதிமன்றம் அம்பேத் கரின் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவு வதற்கு ஆணை பிறப்பித்தது. நீதிமன்ற அமர்வு இவ்வழக்கில் தீர்ப்பளிக்கும் போது இதற்குரிய அரசாணைகளைப் பற்றி, பத்தி 35, 36இல் தனது இரண்டு வழிகாட்டுதல் நெறிகளைப் பதிவு செய்துள்ளது. அவை கீழேயுள்ளவாறு.

“35-முதல் நெறி - சிலைகள், நினைவகங்கள், நினைவு வளைவுகள், நினைவுத் தூண்கள் அமைப்ப தற்கு முன்பு அரசினுடைய அனுமதியைப் பெற வேண்டும். இவ்வகையில் ஒருவர், சமூகம் அல்லது அமைப்புகள் சிலை அமைப்பதற்கு விரும்பினால் மனுவை அரசிடம் அளிக்க வேண்டும். எந்நிலையிலும் அரசினுடைய முன் அனுமதியின்றி சிலை நிறுவ முன் முயற்சி செய்யவோ, முற்படவோ கூடாது.

36-இரண்டாம் நெறி இதுபோன்ற சிலைகள், நினைவகங்கள், நினைவு வளைவுகள், நினைவுத் தூண்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தால் அவை பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வகை நினைவுச் சின் னங்களை நிறுவியவர்கள்தான் அவற்றைப் பாதுகாத்து, பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பை ஏற்க வேண்டும். 20.11.1998 நாளிட்ட அரசாணை 23.8.1990 நாளைய அரசாணை 193ஐ குறிப்பிட் டுள்ளது. அது வெண்கலச் சிலை அமைப்பதன் அவசி யத்தை விளக்கியுள்ளது. எனவே, சிலை வைப்பதற்கு அனுமதி அளிக்கும் போது அரசு மேற்கூறிய விதியை வலியுறுத்த வேண்டும் என்பது எங்கள் கருத்து.

இந்த வழக்கில் சிலை சிதைக்கப்பட்டதற்கு அதன் மீது ஒரு கம்பம் விழுந்ததே காரணம் என்று குறிப் பிடப்பட்டுள்ளது. வெண்கலச் சிலை இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிர்க்கும்.”

10.          மேற்கூறிய வரையறைகள் எதிர்க்கப்பட்ட அரசா ணையில் முழு அளவில் கடைபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் மறுப்புக்கு இடமின்றி இந்நிலம் அரசிற்குச் சொந்தமானது. முன் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. சிலை அமைப்புக் குழுவினர் வெண்கலச் சிலையை நிறுவுவதற்கான நிபந்த னையையும் ஒப்புக்கொண்டுள் ளனர்.

11.          எனவே, மனுதாரர் வெளிப்படுத்தியுள்ள அச்சம் முற்றிலும் அடிப்படையற்றது. பள்ளி வளாகத்தில் பெரியார் சிலை வைப்பதனால் தானாகவே பள்ளிக் குழந்தைகள் நாத்திக நோக்குடையவர்களாக மாற மாட்டார்கள். மாறாகப் பெரியாருடைய வாழ்வையும் வாழ்நாள் குறிக்கோளையும் பள்ளிக் குழந்தைகள் அறிந்து கொள்வது அவசியம். அவருடைய தத்துவத்தைப் புரிந்து கொள்வத னால் மாணவர்கள் அரசமைப்புச் சட்ட 51(V)(எச்) பிரிவில் குறிப்பிடப்பட்ட அறிவியல் உணர்வையும், மனிதத் தன்மையையும், ஆய்வு மனப்பான்மை யையும், சீர்திருத்த உணர்வையும், அறிந்து கொள்வதற்கு உதவும்.

12.          மேற்கூறிய கருத்து விவாத அடிப்படையில் பார்த் தால் மனுதாரர் ஒரு அரசியல் கட்சியினுடைய தூண்டுதலால் இவ்வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது. அக்கட்சி நேரடியாக வழக்குப் பதிவு செய்யாமல், அதேநேரத்தில் சட்டப்படி ஏற்புடையது மட்டுமல்லாதது அன்றி, நீதிமன்றத்தாலும் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களை முன்வைக்குமாறு மனுதாரர் போன்ற நிறுவனங் களைக் கட்டாயப்படுத்தியுள்ளது. மேலும், மேற் கூறிய அரசாணையை வெளியிட்டதன் வாயிலாக மாநில அரசு எவ்வித ஒழுங்குமுறையற்றதையோ, சட்டத்திற்குப் புறம்பானதையோ செய்திடவில்லை. மாறாக, சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக வாழ்நாள் எல்லாம் போராடியவருக்கு அரசு பெரும் சேவை செய்துள்ளது.

13.          மேற்கூறிய விளக்கங்களின்படி இவ்வழக்கு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

Pin It