கோவையில் 2010 சூன் 23 முதல் 27 முடிய நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பல தன்மைகளால் ஒரு புதிய வரலாற்றைப் படைத்திருக்கிறது.

ஏற்கெனவே நடைபெற்ற ஒன்பது உலகத் தமிழ் மாநாடுகளைத் தமிழக அரசே நடத்தியது. அம் மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுள் எதுவும் முழுமையாக இன்றுவரை நிறைவேற்றப் படவில்லை. அம்மாநாடுகளைக் காட்டிலும் பன்மடங்கு பெரிதான அளவில் எல்லாத் தன்மைகளிலும் கோவை மாநாடு விளங்கியது. கோவை மாநாட்டுக்குச் சென்று வந்தோர் கோவை நகரின் எப்பகுதியிலும் ஆளுங் கட்சிக் கொடி மருந்துக்குக்கூட இல்லை என்று உறுதிபடக் கூறினர். ஒவ்வொரு நாளும் தமிழ்ப் பெருமக்கள் பொங்குமாங்கடலெனத் திரண்டு மாநாட்டு நிகழ்ச்சிகளைப் பார்க்கவந்தனர் என்பதையும்; உணவு, குடிநீர் தட்டுப்பாடு அறவே இல்லை என்றும்; கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த வரலாற்றுத் தடயங்களும், தொல்லியல் அகழ்வுத் தடயங்களும் மக்களுக்குத் தமிழரின் பழம்பெருமையை உணர்த்துவனவாக இருந்தன என்றும்; திரளாக வந்திருந்த மக்கள் அனைவரும் மாநாட்டு நிகழ்ச்சிகளைக் காண்பதற்கு வசதியாக நூற்றுக்கணக்கான இடங்களில் தொலைக்காட்சிப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன என்றும் கூறினர். 21 ஆய்வரங்கங்களில் 913 ஆய்வுக் கட்டுரைகளைப் படித்து விவாதித்தனர் என்பது மிகச் சிறப்புடையதாகும். எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழ் மொழியை முன்வைத்து இவ்வளவு பெரிய கூட்டத்தை எந்தக் கட்சியும் எந்த ஆட்சியும் இதுவரை நடத்திய தில்லை என்றும், இனிமேல் வேறு எந்தக் கட்சியும் வேறு எந்த ஆட்சியும் இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை நடத்த இயலுமா என்பது ஒரு வினாக்குறியே என்றும் பலரும் கூறினர்.

தமிழ்நாட்டு நாளேடுகளும் பருவ ஏடுகளும் போட்டி போட்டுக்கொண்டு மாநாட்டு நடப்புச் செய்திகள் பற்றியும், மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றியும் விரிவான செய்திகளை வெளியிட்டுத் தத்தம் கருத்துகளையும் தெரிவித்தன.

முதலில், தமிழ்வழியில் பயின்றவர்கள் பல்லாயிரம் பேரும், தமிழ் நலன் விரும்புவோரும் பல ஆண்டுகளாக முன் வைத்து வரும் கோரிக்கையை ஏற்கும் வண்ணம், “தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை தருவதற்கான சட்டம் நிறைவேற்றப்படும்” என, கோவை செம்மொழி மாநாட்டில், 27-6-2010 அன்று மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அறிவித்துள்ளது பெரும் பாராட்டுக்கு உரியதாகும்.

நடுவண் அரசில் தமிழ் ஆட்சி மொழி

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலும், மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்களின் சிறப்பு அறிவிப்புகளிலும் உள்ள செய்திகள்பற்றி நாம் நடுநிலையிலிருந்து சிந்திக்க வேண்டும்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று, நடுவண் அரசு அரசமைப்புச் சட்டத்தில் கண்ட எல்லா மொழிகளையும் நடுவண் அரசின் ஆட்சி மொழிகளாக ஆக்குவதுபற்றி ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட “சித்தகாந்து மகாபத்ரா குழு” அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டுமென்று கோருகிறது.

இன்னொரு தீர்மானம், மாநிலங்களில் உள்ள நடுவண் அரசு அலுவலகங்கள் எல்லாவற்றிலும் மாநில ஆட்சி மொழிகளே அந்தந்த மாநில ஆட்சிமொழியாக ஆக்கப்படுவது இந்திய அரசால் ஏற்பளிக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட வேண்டும் என்று கோருகிறது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள நடுவண் அரசு அலுவலகங்கள் அனைத்திலும் தமிழ் மொழியை அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள நடுவண் அரசு அலுவலகங்களில் அனைத்து அலுவல்களும் தமிழிலேயே நடைபெற வேண்டும் என்றும் அத்தீர்மானம் கூறுகிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த வரையில் “மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி” என்பதே தனது முடிவான கொள்கை என்பதைத் தொடர்ந்து அறிவித்து வருகிறது. இக்கோட்பாட்டை விளக்கி “மாநில சுயாட்சி” என்ற நூலில் மறைந்த முரசொலி மாறன் மிகத் தெளிவுபட விளக்கியுள்ளார். தி.மு.க. மாநாடுகளிலும் இக் கோரிக்கையைப்பற்றித் தெளிவான விளக்கங்களை முதல்வர் கலைஞர் அவர்கள் அவ்வப்போது வெளியிடுகிறார்.

1. மேலே கண்ட தீர்மானங்கள் செயல்முறைக்கு வருவதற்குத் தமிழ்நாட்டு எல்லைக்குள் மட்டும் -திராவிட இயக்கத்தினர் மட்டும் முழக்கமிட்டுக் கொண்டிருப்பதால் என்ன பயன் விளைந்தது? - எப்போது உரிய பயன் விளையும் என்பதுபற்றி நாம் சிந்திக்க வேண்டாமா? திராவிட முன்னேற்றக் கழகத்தினரால் அதற்காக ஒரு சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் முன் மொழியப்படும் என முதலமைச்சர் அறிவித்தது பாராட்டுக்குரியது.

2. அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொண்டுள்ள இந்திய மொழிகள் 22-யும் நடுவண் அரசின் ஆட்சி மொழிகளாக ஆக்கப்பட வேண்டுமென்றால் தமிழ்நாடு தவிர்த்த மற்ற மொழி மாநிலங்களின் ஆதரவைத் திரட்டிட நாம் இதுகாறும் என்ன செய்தோம்? என்பதற்கு ஏற்ற விடையை நாம் எவரும் தரமுடியாது. ஏனெனில், திராவிட முன்னேற்றக் கழகமோ, மாநிலங்களுக்குத் தன்னுரிமை கோரும் மற்ற அமைப்புகளுள் எதுவுமோ இதுவரையில் இத்திசையை நோக்கிப் பயணிக்க வில்லை. முதல் தேவையான இதைச் செய்யாமல் நாடாளுமன்றத்தின் சட்டத் திருத்தத்தின் மூலம் வந்து சேர வேண்டிய ஓர் உரிமையைத் தமிழர் மட்டும் தனியே போராடி எப்படி அடையமுடியும் என்பது நம் முன் நிற்கும் வினாவாகும். நம் தாய்மொழி காலத்தால் மூத்தது. இலக்கிய, இலக்கண வளம் கொண்டது; பல கிளை மொழிகளின் தாயாக விளங்குவது என்பதால் முதன்முதலில் தமிழை நடுவணரசில் ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்று எண்ணுவதும் கோருவதும் எப்படி நடைமுறைக்கு ஒத்ததாகும்? இந்திமொழி பேசாத மற்ற மொழி பேசும் மாநிலக்காரர்களிடம் தமிழர்மேல் வெறுப்பைத் தூண்டுவதற்குத்தானே இது பயன்படும்! தென்னாட்டுத் திராவிட மொழிக்குடும்பத்தைச் சார்ந்த மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள் மற்றும் பஞ்சாபியர், வங்காளிகள், அசாமிகள் ஆகியோரின் ஆதரவையாவது நாம் திரட்ட வேண்டாமா? இதற்கு வழிகாணுமாறு கலைஞர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

3. 22 இந்திய மொழிகளையும் நடுவண் அரசின் ஆட்சிமொழிகளாக ஆக்க வேண்டுமென்றால் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பகுதி 17 இல் உள்பகுதி 1, உள்பகுதி 2. இவற்றில் உள்ள விதிகள் 343, 344, 345, 346,347 ஆகியவற்றை அடியோடு நீக்கவும், அவற்றுக்கு மாற்றாக 22 மொழிகளையும் இந்திய ஆட்சிமொழியாக ஆக்குவதற்கான விதி களையும் அரசமைப்பில் புதிதாகச் சேர்ப்பதற்கும் நாம் எல்லாம் செய்ய வேண்டும். இது நிறைவேறாத வரையில் தமிழரின் கோரிக்கை ஒரு கனவாகவே நீடிக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள தனியுரிமை கோரும் இயக்கங்களைச் சார்ந்தவர்களும் திராவிட இயக்கத்தவர்களும் முதலில் இக்கோரிக்கைகளை வலியுறுத்திப் பத்து இந்திய மொழிகளிலாவது இதுபற்றி விரிவான அறிக்கைகளை அச்சிட்டு அந்தந்த மாநில மக்களிடையேயும், நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களிடையேயும் ஊடகச் சொந்தக்காரர் களிடமும் தொடர்புகொண்டு அவர்களின் ஆதரவைத் திரட்ட வேண்டும்.இத்துடன்கூட, பல மாநிலங்களில் நேரில் மக்களுடன் உரையாடுவதற்கும், மேடைகளில் உரையாற்றுவதற்கும் போதிய திறமையை இந்தி, வங்காளம், அசாமி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் முதலான மொழிகளில் பேசவும் எழுதவும் வல்ல இருபது, முப்பது பரப்புரைக்காரர்களையாவது நாம் உருவாக்க வேண்டும். இந்திய அளவில் சட்டப்படியான

ஒரு மாற்றத்தைக்கொண்டுவர விரும்புகிற எல்லோரும் இதுபற்றித் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். குறிப்பாகத் திராவிட இயக்கத்தினர் இதை ஆய்வு செய்து உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவையெல்லாம் நிறைவேற்றப்பட்டால்தான் 22 இந்திய மொழிகளும் நடுவண் அரசின் ஆட்சி மொழியாக ஆக்கப்படுவது என்றாவது நிறைவேறும். அப்போதுதான் நம் தாய்த் தமிழும் நடுவண் அரசில் ஆட்சி மொழியாக ஆவது முடியும். இது நம்மைவிட முதல்வர் கலைஞர் அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.

மேலே கண்ட நம் கோரிக்கைகள் நிறைவேற வேண்டுமானால் அதன் முதல்கட்டப் பணியாகத் தமிழ்நாட்டில் தமிழக அரசின்கீழ் இயங்கும் எல்லாத் துறை அலுவலகங்களிலும் எல்லாவகைப் பணிகளுக் கும் தமிழ் மட்டுமே ஆட்சி மொழியாக - அன்றாட அலுவல் மொழியாக உடனடியாக நடைமுறைப் படுத்தப்படவேண்டும். இப்போது அப்படிப்பட்ட நிலை இங்கு இல்லை.

நீதி மன்றத்தில் ஆட்சிமொழியாகத் தமிழ்

தமிழ்நாட்டில் முதன்முதலாக 1956இல் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இப்போது 54 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இந்த நெடிய காலத்தில் 43 ஆண்டுகள் திராவிடக் கட்சிகளின் ஆட்சியே நடைபெற்றது; இன்றும் நடைபெறுகின்றது. அப்படித் தமிழ் மட்டுமே தமிழ்நாட்டில் ஆட்சி மொழியாக ஆக்கப்படுவதற்கு அரசமைப்புச் சட்டத்தில் எந்த முட்டுக்கட்டையும் இல்லை. தமிழ்நாட்டு உயர்நீதிமன்றத்தில் தீர்ப்புகள் எழுதப்படுவது மட்டும் ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதப்பட வேண்டும் என்று உள்ளது. அரசமைப்பு விதிகள் 343, 344, 345, 346, 347 இவற்றைச் சட்டத்திலிருந்து நீக்கினாலொழிய தமிழ்மொழி உயர்நீதி மன்றத்தில் தீர்ப்பு எழுதுவதற்கான மொழியாக அமையாது.

 உயர்நீதி மன்றத்தில் தமிழ் ஆட்சி மொழியாக ஆக்கப்பட வேண்டும் என்கிற தீர்மானத்தைத் திராவிட முன்னேற்றக் கழக அரசு சட்டமாக்கிச் சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. சட்டப்படி தமிழ்நாட்டு ஆளுநர் அதனை இந்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளார். ஆயினும் என்ன காரணத்தினால் இன்று வரை அச்சட்டத்திற்கு இந்தியக் குடிஅரசுத் தலைவரின் ஏற்பு கிடைக்கவில்லை என்பது மிகப்பெரிய வினாவாகும். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைத் தொடங்கிவைத்த குடியரசு தலைவர் அவர்கள் இதுபற்றி மூச்சே விடவில்லை. மாநாட்டிற்கு வருவதற்குப் பல நாள்கள் முன்னதாகவே தன் வருகைக்கு ஒப்புதல் அளித்துவிட்ட அவர், இடைக்காலத்தில் இச்சட்டத்துக்கான ஏற்பை ஏன் அளிக்கவில்லை என்பது தமிழர் ஒவ்வொருவர் நெஞ்சத்தையும் உறுத்துவதாகும். எனவே, நாம் இந்திய அரசின் இந்தப் பொறுப்பற்ற போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். குடியரசு தலைவரின் ஏற்பை உடனடியாகப் பெறுவதற்கு முதல்வர் கலைஞர் அவர்கள் ஆவன செய்ய வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறோம்.

நம்மை அடக்கி ஆண்ட இங்கிலாந்துக்காரரின் தாய்மொழியான ஆங்கிலம் 1860 முதல் நம் உயர்நீதி மன்றத்தின் ஆட்சிமொழியாக விளங்கி வருகிறது.

ஆங்கிலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு பத்தாம் நூற்றாண்டுக்குள் செம்மையான வடிவத்தைப் பெற்ற ஒரு மொழியாகும். ஆங்கிலேயரின் தாய்மொழியான ஆங்கிலம் இங்கிலாந்தின் நீதிமன்ற மொழியாக 1730க்குப் பிறகுதான் ஆக்கப்பட்டது. அதுவரையில் இங்கிலாந்தில் நீதிமன்ற மொழியாக பிரெஞ்சு இருந்தது.

சென்னை மாகாணத்தில் மாவட்ட முனிசீப்பாக விளங்கிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் “இந்துச் சட்டத்தின் மூலங்கள்” அல்லது “பண்டிதர்களின் கருத்துரைகள்”என்கிற பெயரில் ஆங்கிலத்தில் இருந்த தீர்ப்புகளின் இரண்டு தொகுதிகளை 1860 களிலேயே தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். தமிழ்நாட்டில் தமிழ்தான் நீதிமன்ற மொழியாக விளங்க வேண்டுமென அவர் அப்போதே வலியுறுத்தினார். அப்பெருமகனார் கண்ட கனவை விரைவில் நிறைவேற்றித் தரும் சாதனையைக் கலைஞர் அவர்கள் நிறைவேற்ற வேண்டுமென நாம் வற்புறுத்திக் கூறுகிறோம்.

நீதிமன்ற மொழியாகத் தமிழை ஆக்க வேண்டு மென்று திராவிட முன்னேற்றக் கழகம் சட்டம் நிறை வேற்றிய பிறகு இக்கோட்பாட்டில் அக்கறையுள்ள எல்லாக் கட்சியினரும் வழக்குரைஞர்களும் இச் சட்டத்தை அமல்படுத்தும்படிக் கோரி மதுரையிலும், சென்னையிலும் பிற தலைநகரங்களிலும் வலிமையான போராட்டங்களை நடத்தினர். இச்சூழலில் தமிழில் முறையீடு செய்தல், வாதாடுதல் முதலிய பணிகளைச் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேற்கொள்ள எந்தத் தடையுமில்லை என்று வாய்மொழியாக உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி 21.6.2010 அன்று அறிவித்தார். இந்த அறிவிப்பை ஓர் ஆணையாக வெளியிட வேண்டுமென்று வழக்குரைஞர்கள் வைத்த கோரிக்கையைத் தலைமை நீதிபதி புறக்கணித்து விட்டார். எனவே, இது நீதிபதிகளின் விருப்பப்படியான இடைக்கால ஏற்பாடேயாகும். இது இப்படியே நீடிக்கச் சட்டப்படியான ஆணை தேவை.

தமிழைப் பயிற்றுமொழி ஆக்குவது பற்றிய முடிவு என்ன?

நம் தாய்மொழி தமிழ். ஒவ்வொரு தமிழ்க் குழந்தையும் தாயின் வயிற்றிலிருக்கும்போதே தமிழ்ச் சொற்களைக் கேட்டுக் கொள்கிறது. எல்லா நாட்டுக் குழந்தைகளும் அப்படியே. எனவேதான், விடுதலை பெற்ற பெரும்பாலான நாடுகளில் ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் தாய்மொழியிலேயே எல்லா நிலைக் கல்விகளும் கற்பிக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டுக் கல்வியின் ஈனநிலை

ஐரோப்பாக்கண்டத்தில் முப்பது கோடி மக்களே உள்ளனர். அவர்கள் 26 நாடுகளாகப் பிரிந்துள்ளனர். ஒவ்வொரு நாட்டினரும் ஆங்கில வரிவடிவத்திலுள்ள A,B,C,D எழுத்துகளையே பயன்படுத்துகின்றனர். ஆனால், ஒவ்வொரு மொழியும் வெவ்வேறு ஆனதாக உள்ளது. வரிவடிவம் ஆங்கிலத்தில் இருந்தாலும் ஒலிப்பு முறையை மாற்றித் தனித்தனிமொழியாகக் கொண்ட அவர்கள் தம்தம் தாய் மொழியிலேயே எல்லா நிலைக் கல்வியையும் பெறுகிறார்கள். அதனால் தான் ஐரோப்பிய மொழிகளில் பொது அறிவியல், இயற்பியல், வேதியியல், கணக்கியல், நிலவியல், மருத்துவம், வேளாண்மை, நிலைத்திணை இயல் முதலான எல்லாத் எல்லாத் துறைகளிலும் எண்ணற்ற வல்லுநர்களை அவர்களால் பெற்றிருக்க முடிகிறது. அப்படிப்பட்ட நிலைமை தமிழ்நாட்டில் வந்து தீரவேண்டும். அந்நிலை வருவதற்குத் தமிழ்நாடு தனிநாடாக இருக்க வேண்டிய நிலை இல்லை.

மழலையர் பள்ளி தொடங்கிப் பல்கலைக்கழகப் படிப்பு வரையில் தமிழ்மொழியிலேயே கற்பிக்கப்பட்ட எல்லாம் செய்ய வேண்டும். அதற்கு வழி அமைக்கும் தன்மையில் 1976 வரை இருந்ததைப் போன்று பொதுக் கல்வி, தொழிற்கல்வி முதலான கல்வி அளிக்கும் உரிமை மீண்டும் மாநிலங்களுக்கே வந்து சேரத் திராவிட முன்னேற்றக் கழக அரசும், கட்சியும் மற்ற தமிழ்நாட்டுக் கட்சிகளும் எல்லாம் செய்ய வேண்டும். இந்த அதிகாரம் இல்லாமலே, இப்போதுள்ள அதிகாரத்தைக் கொண்டு மழலையர் பள்ளி, தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி எல்லாவற்றிலும் தமிழ் பயிற்று மொழி ஆக்கப்படவேண்டும்.

பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகப் படிப்பு வரையில் எல்லாப் பாடங்களையும் அவரவர் தாய்மொழியில் கற்றால்தான் ஒவ்வொரு பாடத்தையும் ஒரு குழந்தை முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியும்; நினைவில் வைத்துக் கொள்ள முடியும்; திருப்பிச் சொல்ல முடியும்; பார்த்தும், பார்க்காமலும் அப்பாடத்தை எழுதிக் காட்ட முடியும். அத்துடன் பத்தாம் வகுப்பு வரை படித்த பிறகு - பட்டம் பெற்ற பிறகு - பாடம் சொல்லிக் கொடுப்பதற்கான ஆசிரியர் பயிற்சியைப் பெற்றபிறகு - தான் படித்த பாடங்களை மாணவர்களுக்கு நன்றாகச் சொல்லிக் கொடுக்க முடியும். தாம் பெற்ற கல்வியைக் கொண்டு பிற மொழிகளில் உள்ள சிறந்த இலக்கியங்களையும், வரலாறு, பொருளாதாரம், அறிவியல், தத்துவம், கதை, புதினம் முதலிய சிறந்த நூல்களையும் நல்ல தமிழில் மொழி பெயர்த்துத் தமிழர்களுக்குத் தரமுடியும். கலை, இலக்கியம், தொழிற் படிப்புகளான சட்டம், வேளாண்மை, பொறியியல், மருத்துவம், நுண்கலை, தொழில்நுட்பக் கல்வி முதலானவற்றைத் தாய்மொழியில் கற்றால்தான் அந்தந்தப் பாடங்களைத் தெளிவாக, நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்.

ஒரு துறையில் உயர் பட்டம் பெற்றவர்கள், ஆய்வு செய்ய விரும்புகிறவர்கள் தாய்மொழி இலக்கியத்திலும், இலக்கணத்திலும் வல்லவர்களாக இருந்தால்தான், அத்துடன் ஆங்கிலம், பிரெஞ்சு, சப்பான், செர்மன், இரஷ்யன் முதலான பல கலைகளும் வளர்க்கப்பட்டுள்ள அயல் மொழிகளிலும் ஏதாவது ஒன்றில் நல்ல புலமை பெற்றிருந்தால்தான் - இரு மொழிகளிலும் புலமை உள்ள அவர்கள் தாய் மொழியில் உள்ள நூல்களைத் தான் புலமை பெற்றுள்ள பிற மொழியில் தேவைப்பட்ட செய்திகளை மொழி மாற்றம் செய்து தர முடியும். அதேபோல் தாம் கற்ற பிற மொழிகளில் உள்ள நல்ல செய்திகளைத் தமிழில் தரமுடியும்.

எடுத்துக்காட்டாக நிலைத்திணை இயல், மானுடவியல், பண்பாடு பற்றிய நூல்களை மொழியெர்க்க விரும்பும் ஆங்கில வழியில் பட்டம் பெற்ற அறிஞர்களுக்குக் குறைந்தது இரண்டாண்டுக் காலத்திற்கு நன்னூல், தொல்காப்பியம், சங்க இலக்கியம் முதல் கம்பராமாயணம் வரை உள்ள இலக்கியங்கள் இவற்றைக் கற்கச் செய்ய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

தமிழ் அறிஞர்களுக்கு நிலைத்திணையியல், வேதியியல், இயற்பியல் முதலான அறிவியல் பாடங்களை இரண்டாண்டுகளுக்குக் குறையாமல் கற்பிக்கவேண்டும். ஒவ்வொரு துறை மொழிபெயர்ப்புக் குழுவுக்கும் இதேபோன்ற நடப்பைப் பின்பற்ற வேண்டும்.

செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனமும், தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களும், தமிழ்நாட்டு அரசினரும் மொழி பெயர்ப்புப் பணியில் இந்த நடைமுறையை உடனடியாக மேற்கொள்ள முன் வரவேண்டும்.

தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வியின் இழிநிலை

தமிழ்நாட்டில் காமராசர் காலத்தில் மூன்று கல் தொலைவுக்கு ஒரு தொடக்கப்பள்ளி; ஓராசிரியர் தொடக்கப் பள்ளி என்பவை தொடங்கப்படுவதற்கு முதன்மை தரப்பட்டது.

இந்தியாவில் நாற்பது விழுக்காட்டு மக்களுக்குத் தொடக்கக் கல்வி என்பதே தரப்படவில்லை. தமிழ்நாட்டில் இருபது விழுக்காட்டு மக்களுக்குத் தொடக்கக் கல்வி என்பதே தரப்படவில்லை.

தமிழ்நாட்டில் அரசுத்துறை, அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள் 35,000க்கும் மேல் உள்ளன. இவை அன்னியில் தனியார் தொடக்கப்பள்ளிகளும் உள்ளன. அரசுத் தொடக்கப்பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகளில் ஒரு வகுப்புக்கு ஓர் அரசியல் இல்லை. ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகளில் முறை போட்டுக் கொண்டு ஆசிரியர்களில் ஒவ்வொருவர் சில நாள்கள் பணிக்கு வராமலே இருக்கும் பழக்கம் அதிகரித்துவிட்டது. ஊர்ப்பொதுமக்கள் கட்சி அடிப்படையிலும், உள் சாதி அடிப்படையிலும் பிரிந்து இருக்கிறார்கள். எனவே, அவர்கள் பள்ளிகள் சரிவர நடக்கின்றனவா என்பதில் ஈடுபாடு காட்டுவதில்லை. இப்போதுள்ள நடைமுறைப்படி பெரும்பாலான தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் அவரவர் பிறந்த ஊரிலேயே பணியாற்றுகின்றனர். அவரவர் சொந்தச் சாதிச் செல்வாக்கு, கட்சிச் செல்வாக்கு, பொருள் வசதி இவற்றை முன் வைத்து தங்கள் பணியில் அவர்கள் செய்யும் கழிப்பிணித் தனத்திற்கு ஆதரவு தேடிக் கொள்கிறார்கள். நல்ல ஊதியம் பெற்றுக்கொண்டு காலை 10.00 மணிமுதல் 5.00 மணி வரை மட்டுமே பணியாற்றுகிற ஆசிரியர்களுள் பலர் சொந்த வேளாண்மைப் பணி, சொந்தத்தில் வணிகம், வட்டிக்குக் கடன் தருதல் முதலான பிற பணிகளில் ஆர்வம் செலுத்துகிறார்கள். 1972க்குப் பிறகு ஆசிரியர்களில் சிலர் மது அருந்திவிட்டுப் பள்ளிக்கு வரும் தீய பழக்கத்தை மேற்கொண்டுள்ளனர். ஆடவர், மகளிர் என்ற வேறுபாடில்லாமல் பள்ளிகளில் பள்ளி நேரத்தில் பருவ ஏடுகள், புதினங்கள், கதைகள் இவற்றைப் படிப்பதில் ஆசிரியர்கள் நாட்டம் செலுத்துகின்றனர்.

ஒவ்வொரு பள்ளியும் கண்காணிப்பாளர் பார்வைக்கு மாதந்தோறும் உட்படுத்தப்படுவது என்பது பெயரளவுக்கே உள்ளது. இப்போது உள்ள உதவிக் கல்வி அதிகாரிகள் போன்றவர்கள் பள்ளியைப் பார்வையிட வராமல் இருப்பதற்காகப் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் மாதாமாதம் ஒரு சிறு தொகையைப் பெற்றுக்கொண்டு, அப்படிப் பார்வையிடச் செல்லும்போது நல்ல உணவு பெற்றுக் கொண்டு, கழிப்பிணிகளாக மாறிவிட்டனர். சொந்தக் கட்டடங்கள் இல்லாத பள்ளிகள், வகுப்புக்கு ஒரு ஆசிரியர் அமர்த்தப்படாத பள்ளிகள், பகல் உணவுக்காக மட்டும் வரும் பிள்ளைகளின் எண்ணிக்கையைக் கூடுதலாகக் காட்டும் சத்துணவுப் பொறுப்பாளர்கள் இவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும், கல்வித்துறை கீழ்நிலைக் கண்காணிப்பாளர்களுக்கும் இடையே உள்ள பணம் பீராயும் தீய பழக்கங்கள் எல்லாம் சேர்ந்து தமிழ்நாட்டுத் தொடக்கப்பள்ளிகளைக் குட்டிச்சுவராக்கி விட்டன.

போதாக் குறைக்கு ஒவ்வொரு ஊரிலும் பன்னிரண்டாம் வகுப்பு, பட்ட வகுப்பு, பட்டமேல் வகுப்பு படித்துவிட்டு வேலை இல்லாமல் 5 ஆண்டுகள், 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் அவரவர் ஊரிலேயே இருக்கிற இளைஞர்களும் பெண்களும் தனியாகவோ கூட்டுச் சேர்ந்தோ ஆங்கில வழி மழலையர் பள்ளி, ஆங்கிலவழித் தொடக்கப்பள்ளி தொடங்குகின்றனர். இப்படிப்பட்ட பள்ளிகள் ஏறக்குறைய 12,000 உள்ளன. ஆயிரக்கணக்கான பதின்நிலைப் (மெட்ரிக்குலேசன்) பள்ளிகளையும் ஆங்காங்கே தொடங்கி வணிக அடிப்படையில் நல்ல வருவாயும் தேடிக் கொள்கிறார்கள். அரசுத் தொடக்கப் பள்ளிகளில் படிக்கிற குழந்தைகளைப் பெற்றோர்களும் - ஆசிரியர்களாக உள்ள பெற்றோர்களும், தலைமை ஆசிரியராக உள்ள பெற்றோர்களும் ஆங்கில வழியில் தன் பிள்ளை படித்தால்தான் தனியார் மயம், தாராள மயம், உலக மயம் என்னும் சுரண்டல் பொருளாதாரத் தொழில் நிறுவனங்களில், வணிக நிறுவனங்களில் கொழுத்த சம்பளத்திற்கு வேலை கிடைக்கும் என்று தவறாகக் கருதி, ஆங்கில வழிக்கல்வியில் இடம்கேட்டு ஆலாய்ப் பறக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில்தான், மாநில அரசு கல்வித் திட்டத்தின்படி நடக்கக்கூடிய மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆயிரக்கணக்கில் தொடங்கப் பெற இசைவு அளிக்கப்பட்டது. 1977க்குப் பிறகு திராவிடக் கட்சிகளை உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் செல்வாக்குள்ள தலைவர்கள், மத நிறுவனத்தார், பெரு நிலவுடைமைக்காரர்கள், பொதுத் தொண்டு நிறுவனத்தார் என்போர் தொழிற் கல்வி அளிக்கும் கல்லூரிகளை ஆங்காங்கே தொடங்கிக் கல்வி வணிகக் கொள்ளையர்களாக உருவாக எல்லாக் கட்சி ஆட்சிகளும் இடம் கொடுத்துவிட்டன.

மாநில அரசு அதிகாரத்துக்குட்பட்டதாக இருந்த பொதுக் கல்வித்துறை, தொழிற்கல்வித்துறை முதலானவை பொது அதிகாரப் பட்டியலுக்கு இந்திய அரசினால் மாற்றப்பட்டன. உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளித் துறைகள் தவிர்த்த மற்ற தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி எல்லாம் முற்றிலுமாக நடுவண் அரசின் பல்வேறுபட்ட தனி அதிகாரம் படைத்த வல்லுநர் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன.

இப்படிப்பட்ட செய்திகளெல்லாம் தமிழக அரசினர்க்கும், தமிழக முதல்வர் அவர்களுக்கும், தமிழகக் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் நன்றாகத் தெரியும். மேலும், எல்லாக் கட்சிகளின் தலைவர்களுக்கும், கல்வியாளர்களுக்கும் இவையெல்லாம் தெரியும். இருப்பினும் இவற்றையெல்லாம் மீறி மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள் பின்கண்ட ஏற்பாடுகளை உடனடியாகச் செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

ஒரு தமிழ்நாட்டுக் குழந்தைக்கு எல்லாப் படிப்பும் தமிழ் வழியில்தான் தரப்படவேண்டும் என்று சட்டம் தீட்டி நடைமுறைப் படுத்தத் தமிழ்நாட்டு அரசினர்க்கு முழு அதிகாரம் உண்டு. இதுவும் தமிழக அரசினர்க்கும், முதல்வருக்கும் நன்கு தெரியும். இந்த நிலையில்தான் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளி உரிமையாளர்கள் தொடுத்த வழக்கில், “ஒரு குழந்தைக்கு எந்த மொழி வழியில் கல்வி கற்பிக்கப்படவேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை பெற்றோருக்கு மட்டுமே உண்டு” என்று சென்னை உயர்நீதிமன்றத்தார் தீர்ப்பளிக்கக்கூடிய நிலையை அ.தி.மு.க. அரசும், தனியார் பள்ளி நிருவாகிகளும் உருவாக்கினர். அப்படிப் பெறப்பட்ட தவறான தீர்ப்பை அ.இ.தி.மு.க. பொதுக்குழு வரவேற்றுத் தீர்மானம் செய்ய முதலமைச்சர் செயலலிதா ஏற்பாடு செய்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தி.மு.க.வும், கல்வியாளர்களும் பொதுமக்களும், பேராசிரியர்களும், இளைஞர்களும் அப்போதே வலிமையாகப் போராடியிருக்க வேண்டும்.

இப்போது தி.மு.க. அரசினர் செய்துள்ள தமிழ் மொழியில் பயிற்று மொழிச் சட்டம் எட்டாம் வகுப்பு வரை நிறைவேறப் பல ஆண்டுகள் ஆகும். இது போதாது. தனியார் மழலையர் பள்ளிகள் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையில் 2011க்குள் எல்லாப் பாடங்களையும் கட்டாயம் தமிழில்தான் கற்பிக்க வேண்டும் என்று சட்டம் செய்ய வேண்டும். தனியார் தொடக்கப்பள்ளிகள் எல்லாம் யாரால் நடத்தப்பட்டாலும் ஒன்று முதல் ஐந்து வரையில் இரண்டு கட்டங்களில் 2012க்குள் தமிழ்வழியில்தான் எல்லாப் பாடங்களையும் கற்பிக்க வேண்டுமென்று ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும்.

எட்டாம் வகுப்பு வரையில் குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பாத பெற்றோர்களுக்குக் குறைந்த காலச் சிறைதண்டனை வழங்கத் தேவையான சட்டத்தைத் தமிழக அரசு இயற்ற வேண்டும்.

குறிப்பிட்ட குறுகிய காலத்திற்குள் 100 குழந்தைகள் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு ஒரு வகுப்புக்கு ஓர் ஆசிரியர் அமர்த்தம் செய்வதைப் போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும்.

இப்போது ஆங்கிலவழி மழலையர் பள்ளிகளும், தொடக்கப் பள்ளிகளும் சிற்றூர், பேரூர் தோறும் தொடங்கப்பட்டு விட்டதால் அரசுத் தொடக்கப்பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. அதைக் காரணம் காட்டிக் கட்டுப்படியாகாத செலவினம் உள்ள பள்ளி என்று கூறிக் கடந்த சில ஆண்டுகளில் சில பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன.

அதே நேரத்தில் தாய்த்தமிழ்க் கல்வியை ஊக்குவிப்பதற்காகவும், தமிழ்ப்பண்பாட்டை வளர்ப்பதற்காகவும் குறைந்த கட்டணம் பெற்றுக் கொண்டு தரமான கல்வியைத் தமிழ் வழியில் தருகிற தனியார் தாய்த்தமிழ்ப் பள்ளிகளுக்கு அரசினர் ஏற்பு வழங்கவும், முழுநிதி உதவி அளிக்கவும் முன்வரவேண்டும். இப்படிப்பட்ட தாய்த்தமிழ் பள்ளிகள் 50க்கும் மேல் தமிழ்நாட்டில் நடைபெறுகின்றன. இவற்றை நடத்துகிறவர்கள் தொண்டுள்ளத்தோடு தங்களை அழித்துககொண்டே 1993 முதல் 17 ஆண்டுகளாக இப்பள்ளிகளை நடத்துகிறார்கள். கல்வி வணிகக் கொள்ளை நடைபெறும் தமிழ்நாட்டில் எவ்வளவு காலத்திற்குத் தாய்த்தமிழ் பள்ளிகள் நடைபெறும் என்பது ஒரு வினாக்குறி.

வெள்ளையர் காலத்திலும், காங்கிரஸ்காரர் காலத்திலும் ஒரு பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் கல்வித் தேர்ச்சியைக் கண்காணிக்க முதுநிலை ஆய்வாளர், இளநிலை ஆய்வாளர் இவர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். ஒரு வட்டத்தில் மாதந்தோறும் உள்ள 100 ஊர்களில் இருந்த பள்ளிகளைத் தவறாமல் பார்வையிட்டனர். சத்துணவுக் கணக்குப் பார்த்தல் அத்துடன் பள்ளிகளை ஆயவு செய்தல் என்ற பணிகளுடன் தொடர்பில்லாத தன்மையில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கு இரண்டு கல்விக் கண்காணிப்பாளர்களை உடனடியாக அரசு அமர்த்த வேண்டும்.

கல்வித்துறையில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் பணிகளில் ஏற்பட்டுள்ள காலிப்பணி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

தமிழ்நாட்டுப் பாடத்திட்டப்படி நடைபெறுகின்ற மெட்ரிகுலேசன் பள்ளிகள் எல்லாம் தமிழ் வழியில் நடத்தப்பட ஏற்ற சட்டங்களைத் தமிழ்நாட்டு அரசினர் இயற்ற வேண்டும். எந்த அழுத்தத்திற்கும், நெருக்கடிக்கும் இடம் கொடுத்து ஆங்கில வழியில் மெட்ரிகுலேசன் பள்ளி நடத்துவதற்கு ஏற்பு அளிப்பதைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். மேலே கண்ட எல்லாவற்றையும் செய்வதற்குத் தமிழ்நாட்டு அரசுக்குப் பெரிய அளவு அழுத்தத்தையும், நெருக்கடியையும் உண்டாக்க வேண்டும். அதே நேரத்தில் இவ்வகையில் அரசினர் எடுக்கும் எல்லா இணக்கமான நடவடிக்கைகளுக்கும் தமிழ்ப் பெருமக்களும், கல்வியாளர்

களும், தமிழ்வழிக் கல்விக் கொள்கையாளர்களும், மாணவர்களும் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் நல்க வேண்டும். இன்றைய அரசின் மேல் பழியைப் போட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்வதால் தமிழ்வழிக் கல்வி என்றாவது வருவதற்கு வாய்ப்பிருக்கிறதா என்று தமிழ்ப்பெருமக்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

முதல்வர் கலைஞர் அவர்களுக்கு வேண்டுகோள்

1. கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தியதின் வாயிலாக ஒரு புதிய எழுச்சியைத் தமிழ்ப் பெருமக்களிடம் இந்த அரசு உருவாக்கியிருப்பது உண்மை. அதே நேரத்தில் பல எதிர்பார்ப்புகளையும் இந்த மாநாடு விதைத்திருக்கிறது. அந்த எதிர்பார்ப்புகளுள் முதன்மையானது எல்லாத் துறைகளிலும், எல்லா நிலைகளிலும் தமிழ் வழியில் கல்வி கற்பிக்கக் கலைஞர் ஆவன செய்ய வேண்டும் என்பதே ஆகும். கலைஞர் ஆட்சிக் காலத்தில் இது நடைபெறவில்லையென்றால் அதற்கான வாய்ப்பு அருகிக் கொண்டே போகும் என்பதைக் கவலையோடு தெரிவித்துக கொள்கிறோம்.

2. கோவை உலகத் தமிழ்ச செம்மொழி மாநாட்டில் பூம்புகார் கடலாய்வு, குமரிக்கண்டக் கடலாய்வு இரண்டையும் உடனடியாக மேற்கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டிருப்பதை மனமார வரவேற்கிறோம்.

அத்துடன் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்ச நல்லூரில் உள்ள 114 ஏக்கர் பெரும் முறம்பையும் அதை ஒட்டிய 57 கி.மீ. தொலைவில் உள்ள அகழ்வு ஆய்வு செய்யப்படவேண்டிய இடங்களையும் உடனடியாகத் தொடர்ந்து அகழ்வு ஆய்வு செய்யவும், அங்கு அகழ்ந்து எடுக்கப்படும் எல்லாத் தடயங்களையும் அங்கேயே ஒரு பெரிய கட்டடத்தில் கண்காட்சியாக வைத்துத் தமிழரும், அயல்நாட்டினரும் காணவும் வழி செய்திடத் தமிழ்நாட்டுத் தொல்லியல் துறையினரும், நடுவண் அரசுத் தொல்லியல் துறையினரும் பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்து அகழ்வு ஆய்வு செய்ய வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறோம்.

இதுவரையில் ஆதிச்ச நல்லூரில் கிடைத்த தடயங்களைக் கொண்டு ஆதிச்ச நல்லூர் நாகரிகம் காலத்தால் சிந்துவெளி நாகரிகத்தைவிட முந்தியது என்பது நிலைநாட்டப்பட்டுள்ளது என்பதைப் பணிவுடனும் மகிழ்ச்சியுடனும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வைக்குக் கொண்டு வருகிறோம். இவ்விடத்தை உடனே அகழ்வாய்வு செய்வதில் மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களும், மாண்புமிகு பொதுக் கல்வி அமைச்சர் அவர்களும் ஆர்வம் கொண்டுள்ளனர் என்பதை அன்புடன் தெரிவித்துக கொள்கிறோம்.

ஆதிச்ச நல்லூர் அகழ்வாய்வு பற்றி 2009இல் ஒரு கருத்தரங்கையும், கண்காட்சியையும், 2010இல் ஒரு கருத்தரங்கையும் கண்காட்சியையும் செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனமும், என் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கும் பெரியார் ஈ.வெ. இராமசாமி-நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து நடத்தியுள்ளன என்பதை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.

3. தமிழின் இயல்பான செழுமை, பழமை, முன்மை, இலக்கிய இலக்கண வளம் இவற்றைக் கருதியே தமிழ்மொழியைப் பேணி வளர்க்க விரும்புகின்றோம். யாருக்காக? இன்று தொடக்கப்பள்ளியில் பயிலும், நம் பேரர்கள் கொள்ளுப்பேரர்கள் முதலானோரும் இன்னும் நூறு ஆண்டுகளில் பிறக்க உள்ள பிறங்கடையினரும் தமிழில்பேச வேண்டும் - தமிழில் எழுதவேண்டும் - தமிழ் வழியில் சிந்திக்க வேண்டும். அதற்கான தகுதியைக் காலந்தோறும் பெறவேண்டும் என்பதைக் கருதித்தான், இன்று ஏற்பட்டுள்ள அவல நிலையிலிருந்து தமிழை மீட்டு எடுத்து எல்லாத் துறைக் கல்வியையும் எல்லா நிலைக் கல்வியையும் தமிழில் மட்டுமே கற்பிக்கவேண்டும் என எண்ணுகிறோம். 2010இல் தொடங்கி இந்த எல்லையை அடைவதற்குக் கலைஞர் அவர்களும் தமிழறிஞர்களும் தமிழ் மக்களும் முயலவேண்டும். இதைத் தொடங்கி வைக்க இன்று நாம் தவறினால் இன்று பத்து விழுக்காட்டு ஆங்கிலச் சொற்களையும் இருபது விழுக்காட்டுப் பிற மொழிச் சொற்களையும் கலந்து பேசிவரும் தமிழர்கள், கி.பி. 2100இல் பேச்சு வழக்கில் பத்து விழுக்காட்டுத் தமிழ்ச் சொற்களையே பேசுவர். பழைய இலத்தீனத்திற்கும் கிரேக்கத்துக்கும் வடமொழிக்கும் ஏற்பட்டுவிட்டதுபோல், பேச்சுவழக்கு ஒழிந்த மொழிகள் பட்டியலில் தமிழ் முதலாவது இடத்தில் இருக்கும். இது உறுதி. இதை நாம் உயிரைக் கொடுத்தேனும் தடுத்தே தீர வேண்டும். 

- வாலாசா வல்லவன், 97910 79631

Pin It