“தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களைக் கட்டிப் பிணைத் துள்ள இந்து மதமானது அவர்களுக்குக் கவுரவத்துக்குரிய இடம் தருவதற்குப் பதிலாக, அவர்களைத் தொழுநோயாளி யாக, சாதாரணமாய்க் கலந்து உறவாடத் தகாதவர்களாக முத்திரையிடுகிறது. பொருளாதார வகையில் சொன்னால், இவ்வகுப்பானது தனக்கென்று சுயேச்சையான வாழ்க்கை வழி ஏதுமில்லாமல் அன்றாடச் சோற்றுக்கு உயர் வகுப்பு இந்துக்களையே முழுக்க முழுக்கச் சார்ந்திருக்கிறது. இந்துக்களின் சமூகக் காழ்ப்புகளின் காரணத்தாலேயே எல்லா வழிகளும் அடைபட்டுவிட்டன என்பதல்ல. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வாழ்க்கையின் ஏணிப் படியில் ஏறுவதற்கு வாய்ப்பே இல்லாமல் செய்யும் பொருட்டு சாத்தியமான ஒவ்வொரு கதவையும் மூடித் தாழிட இந்து சமுதாயம் முழுவதிலும்திட்டவட்டமான முயற்சி நடைபெறுகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் சாதி இந்துக்கள், தங்களிடையே எவ்வளவுதான் பிளவுபட்டிருந்தாலும், சாதாரண இந்தியக் குடிமக்களின் தரப்பிலான சிறுபகுதியாய் அமைந்துள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் தரப்பிலான எந்தவொரு முயற்சியையும் ஈவிரக்கமின்றி அடக்கி ஒடுக்குவதற்கு எப்போதும் நிரந்தர சதியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறுவது மிகையாகாது.”

(தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களுக்குப் பிரித்தானிய அரசு, தனிவாக்காளர் தொகுதி ஏற்பாட்டை வழங்கியதை எதிர்த்துக் காந்தியார் உண்ணாவிரதம் மேற்கொண்டது குறித்து பி.ஆர். அம்பேத்கர் 1932 செப்டம்பர் 19 அன்று விடுத்த அறிக்கை. நூல் : காங்கிரசும் காந்தியும் தீண்டப்படாத மக்களுக்குச் செய்ததென்ன? பக்கம் 376)

மேதை அம்பேத்கர் இந்த அறிக்கையை வெளியிட்டு 80 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து சாதி இந்துக்கள் கொண்டுள்ள வேறுபாடு காட்டும் - இழிவாகக் கருதும் மனப்போக்கில் இன்று எந்த அளவுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது?

அம்பேத்கரின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல், தாழ்த்தப்பட்டவர்களைத் தொழுநோயாளிகள் போல் இன்று கருதுவதில்லை என்றே வைத்துக் கொண்டாலும், “சாதாரண மாய்க் கலந்து உறவாடத் தகாதவர்களாகவே” சாதி இந்துக்கள் கருதுவது என்பது அப்படியே நீடிக்கிறது. சிற்றூர் களில் பள்ளியில் தப்பித்தவறி தாழ்த்தப்பட்ட மாணவன் ஒருவனும் பிற சாதி மாணவன் ஒருவனும் நண்பர்களாக இருந்தாலும், தாழ்த்தப்பட்ட சாதி மாணவன், சாதி இந்து வீட்டு மாணவன் வீட்டிற்குச் சென்று இயல்பாகப் பழக முடியாது; உண்ண முடியாது. அதைப்போலவே சாதி இந்து மாணவன், தாழ்த்தப்பட்ட சாதி மாணவன் வீட்டிற்குச் சென்றுப் புழங்குவதில்லை. சிற்றூர்களில் கூலி உழைப்புக் காகச் சாதி இந்துக்களைச் சார்ந்திருக்கும் நிலையில் ஓரளவு மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், சாதி இந்துக்களைச் சார்ந் திருக்கும் நிலையே பெருமளவில் நீடிக்கிறது. தாழ்த்தப் பட்டவர்களுக்கும் சாதி இந்துக்களுக்கும் இடையில் பிரச்சனை ஏற்படும் போதெல்லாம், சாதி இந்துக்கள், தங்களிடையே உள்ள சாதி வேறுபாடுகளை மறந்து, ஒன்றுதிரண்டு, “தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தக்கப் பாடம் புகட்ட வேண்டும்” என்ற ஒரே நோக்கத்துடன், தாழ்த்தப்பட்டவர்களின் குடியிருப்புகளைத் தாக்குகின்றனர். இந்தியா முழுவதும் இதே தன்மையில் தாழ்த்தப்பட்டவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

கடந்த நவம்பர் மாதம் தருமபுரி மாவட்டத்தில் நாயக்கன் கொட்டாய் ஊரில் வன்னிய வகுப்பு பெண் - தலித் ஆணைத் திருமணம் செய்து கொண்டதன் விளைவாக, சாதி இந்துக்கள் ஒன்றுதிரண்டு, தாழ்த்தப்பட்டவர்கள் வாழும் குடியிருப்பு களைத் தாக்கினர். ஆந்திராவின் வடபகுதி கடற்கரை மாவட்டமான ஸ்ரீகாகுளத்தில், இலட்சுமிப் பேட்டை என்ற ஊரில், நிலத்தில் பயிரிடுவது தொடர்பான தகராறு காரண மாகக் கடந்த சூன் 12 அன்று ‘துர்ப்பு காப்பு’ எனும் சாதி இந்துக்கள், மாலா எனப்படும் தாழ்த்தப்பட்டவர்கள் மீது கொடுந்தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் தாழ்த்தப்பட்ட வர்களில் 5 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட இருபது பேர் படுகாயமடைந்தனர்.

2001ஆம் ஆண்டு இலட்சுமிப்பேட்டை பகுதியில் மதுவலசா அணை கட்டப்பட்டது. இந்த அணையின் நீர்த்தேக்கத்தால் நீரில் மூழ்கக் கூடிய விவசாயிகளின் நிலங்களுக்கு 2001ஆம் ஆண்டு ஆந்திர அரசு இழப்பீட்டு தொகை வழங்கியது. இந்நிலம் முழுவதும் காப்புகளுக்கே சொந்தமானவையாக இருந்தன. பயிரிடப்பட்டுவந்த நிலங்கள் நீரில் மூழ்கியதால் சில காப்புக் குடும்பங்களும் மாலா குடும்பங்களும் பிழைப்பு தேடி வெளியூர்களுக்குச் சென்றுவிட்டன. காப்புச் சாதியினிரும் மாலா சாதியினரும் கிட்டத்தட்ட ஒரே நிலையான வாழ்நிலை யில்தான் இருந்தனர். தற்போது இலட்சுமிப்பேட்டையில் 120 காப்பு குடும்பங்களும், 80 மாலா குடும்பங்களும் பிற ஊழியம் செய்யும் சாதிகளின் சில குடும்பங்களும் இருக்கின்றன.

அணையின் நீரால் மூழ்கும் எனக் கணக்கிடப்பட்ட நிலப்பரப்பில், 250 ஏக்கர், நீரில் மூழ்காமல் இருந்தது. இந்த 250 ஏக்கர் நிலத்திற்கும் அரசு இழப்பீடு கொடுத்துவிட்டது. ஆயினும் இந்த நிலங்கள் முன்பு யார்யாருக்குச் சொந்தமாக இருந்ததோ, அதேபோல் இப்போதும் அவர்களுக்கே இந்நிலத்தின் மீதான மீள்உரிமை உண்டு என்பது நடப்பில் உள்ள வழக்கமாக இருந்து வருகிறது. 250 ஏக்கரில், 190 ஏக்கரில் இலட்சுமிப்பேட்டையில் இருந்த காப்புகள் பயிரிட்டு வந்தனர். மீதி 60 ஏக்கர் நிலம் வெளியூர்களுக்குச் சென்று விட்ட காப்புகளுக்கு, முன்பு சொந்தமாக இருந்தது. தாழ்த்தப் பட்ட மாலாக்கள் வெளியூர்களில் உள்ள இக்காப்புகளிடம் ஒப்புதல் பெற்று 60 ஏக்கர் நிலத்தைக் கடந்த பத்து ஆண்டுகளாகப் பயிரிட்டு வந்தனர்.

தாழ்த்தப்பட்ட குடும்பத்தினரில் ஒரு பகுதியினர் நகரங் களில் வேலைக்குச் சென்றனர். இவர்களின் பிள்ளைகள் கல்வி பெற்றனர். சிலர் அரசு மற்றும் தனியார் வேலைகளில் சேர்ந்தனர். தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்தைக் கண்டு காப்புகள் பொறாமை கொண்டனர்.

காப்புகள் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஆந்திராவில் ரெட்டி, கம்மா ஆகிய இரண்டு மேல்சாதிகள்தான் பல நூற்றாண்டுகளாக பெருநிலவுடைமையாளர்களாக இருந்து வருகின்றனர். காங்கிரசு - தெலுங்கு தேசம் ஆகிய இரண்டு கட்சிகளும், ஆந்திர அரசியலும், பெருந் தொழில்களும், வணிகமும் இவ்விரு சாதியினரின் கட்டுப்பாட்டில் இருக்கின் றன. தாழ்த்தப்பட்டவர்கள் அவர்களுக்குரிய இடஒதுக்கீட்டில் அரசு வேலைகள் பெறுவதைப், பிற்படுத்தப்பட்ட வகுப்பி னரான காப்புகள், தங்களுக்குரிய இடங்களைத் தாழ்த்தப் பட்டவர்கள் பறித்துக் கொள்வதாகத் தவறாகக் கருதினர். மொத்தத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றம், அவர்களிடம் - குறிப்பாக இளைஞர்களிடம் வளர்ந்துவரும் சுயமரியாதை உணர்ச்சி முதலானவை காப்புகளுக்கு எரிச்சலூட்டின.

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

வடுக்காண வற்றாகும் கீழ் (குறள் - 1079)

ஏழையாக இருந்த தம் சொந்த உறவினர் - சாதிக்காரர் குடும்பத்தின் முன்னேற்றத்தைக் கண்டு மனம் குமுறும் இயல்புடைய இச்சமூகத்தில், தாழ்த்தப்பட்டவர்களின் முன் னேற்றத்தைக் கண்டு மகிழும் மனநிலையை எதிர்பார்க்க முடியுமா? அம்பேத்கர் தெளிவாகக் கூறியிருக்கிறார் - “குறைந்த கூலிக்கு,கூனிக்குறுகி வேலை செய்யும் பெரும் பட்டாளமாக உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் இந்நிலையிலிருந்து முன்னேறிவிட்டால், இந்த வேலைகளைச் செய்ய, சாதி இந்துக்களுக்கு வேறு யாரும் கிடைக்கமாட்டார்கள் என்பதற் காகத்தான் - தாழ்த்தப்பட்டவர்களை அதே இழிந்த நிலையில் அடக்கி, ஒடுக்கி வைத்திட சாதி இந்துக்கள் முயற்சிக்கிறார்கள்.”

எனவே இலட்சுமிப்பேட்டையில், மாலாக்கள் பயிரிட்டு வந்த 60 ஏக்கர் நிலம் தங்கள் சாதிக்காரர்களுக்கு உரியது; ஆகவே மாலாக்கள் அந்நிலங்களிலிருந்து வெளியேற வேண்டும் என்று காப்புகள் கட்டளையிட்டனர். ஆனால் மாலாக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை விட்டு வெளியேற மறுத்தனர். மோதல் முற்றியது. கோட்ட வருவாய் அதிகாரி முன் பேச்சுவார்த்தை நடந்தது. மாலாக்களே 60 ஏக்கர் நிலத்தில் தொடர்ந்து பயிரிட, காப்புகள் ஒத்துக்கொண்டனர். ஆயினும் அவ்வூரில் மோதல் நிகழ்வதைத் தடுக்க காவல்துறையினர் நிறுத்தப்பட்டனர். அப்பகுதியின் காவல் நிலையத்தின் துணை ஆய்வாளரும், காவலர்களில் பலரும் மாலா வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்க தாகும்.

இலட்சுமிப்பேட்டை ஊராட்சியின் தலைவர் பதவி கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டது. அதுவரையில் காப்புகள்தான் ஊராட்சித் தலைவராக இருந்து வந்தனர். எனவே காப்புகள் தமக்கு அடங்கி நடக்கக் கூடியவர் என்று கருதிய சித்திரி சிம்மலம்மா என்பவரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கச் செய்தனர். ஊராட்சி மன்றக் கூட்டத்தின் போது தலைவர் சிம்மலம்மா நின்று கொண்டேயிருக்கும்படியான நிலையை ஏற்படுத்தினர். அதன்பின் சிம்மலம்மா, காப்புகளின் கட்டளைகளைப் பொருட்படுத்தாமல் தனக்குள்ள அதிகார வாய்ப்புகளை உணர்ந்து செயல்படத் தொடங்கினார். இதனால் தங்கள் சாதி ஆதிக்கம் சரிந்துவிட்டதே என்று காப்புகள் மனக்கொதிப் புற்றனர். மாலாக்களைத் தாக்குவதற்கான, தக்க சமயத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தனர்.

நரசன்னப்பேட்டை இடைத்தேர்தல் பணிக்காக, இலட்சுமிப்பேட்டையில் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினர் சூன் 11 அன்று அனுப்பப்பட்டனர். சூன் 12 காலை இலட்சுமிப் பேட்டையில் இருந்த காப்புகளும், சுற்றுப்புற ஊர்களிலிருந்த காப்புகளும் டிராக்டர், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றில் கும்பலாகச் சென்று, மாலாக்களைத் தாக்கினர். இதில் பெண்களும் சிறுவர்களும் இருந்தனர். காப்பு ஆண்கள் அடித்து வீழ்த்திய தாழ்த்தப்பட்டவர்களைக் காப்பு சாதிப் பெண்கள் கோடாரியாலும் பிற ஆயுதங்களாலும் தாக்கினர். பலரின் கால்களைத் துண்டித்தனர். மண்டைகளை உடைத்தனர். நான்கு மணிநேரம் இக்கொடிய தாக்குதல் தாழ்த்தப்பட்டவர்கள் மீது நடத்தப்பட்டது.

ஸ்ரீகாகுளம் மாவட்டக் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர், காவல்துறைத் துணை கண்காணிப்பாளர், மண்டல வருவாய் அலுவலர் ஆகியோர் தாழ்த்தப்பட்ட வகுப்பினராக இருந்த நிலையிலும், இத்தாக்குதல் நடந் துள்ளது. அப்பகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஒரு தாழ்த்தப் பட்டவர். அத்துடன் அவர் அமைச்சராகவும் இருந்தார். இந்நிகழ்ச்சி நடந்த பிறகு இலட்சுமிப்பேட்டையில் பாதிக்கப் பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை அவர் வந்து பார்க்கவில்லை. 60 ஏக்கரில் பயிரிடும் உரிமையைத் தாழ்த்தப்பட்டவர் களிடமிருந்து, காப்புகள் பறிக்க முயன்றபோது, அவர், காப்பு களுடன் சமரசமாகப் போய்விடுங்கள் என்று ஆலோசனைக் கூறினார். கடந்த செப்டம்பர் 26 அன்று ஆந்திர அரசு ஸ்ரீகாகுளத்தில் இத்தாக்குதல் குறித்து விசாரிக்க, விரைவு நீதிமன்றத்தை அமைத்தது.

தருமபுரி தாக்குதல் குறித்து தினமணி நாளேட்டின் ஆசிரியர் கே. வைத்தியநாதன் (அய்யர்) சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியது 1.12.12 தினிமணி ஏட்டில் வெளிவந்துள்ளது. அதில், “தீண்டாமை ஒழிப்புக்கு அண்ணல் காந்தியடிகள் கண்ட தீர்வுகள் இரண்டு. முதலாவது உயர்ந்த சாதியினரைக் கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களைச் சமுதாய நீரோட்டத்தில் இணைக்கச் செய்வது, இரண்டாவது, கிராமப்புற முன்னேற்றம். கிராமங்கள் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடையும்போது, தீண்டாமை என்பது பரிதி முன்னால் பனி உருகுவது போல மறைந்துவிடும் என்று காந்தியடிகளுக்குத் தெரியும்” என்று பேசியிருக்கிறார்.

ஆனால் காந்தியாரோ, “இந்துச் சமுதாயம் சாதி அமைப்பை அடித்தளமாகக் கொண்டிருப்பதால்தான் அதனால் தாக்குப் பிடித்து நிற்க முடிந்துள்ளது என்று நான் நம்புகிறேன். சாதி அமைப்பானது வெவ்வேறு சாதிகளிடையே சேர்ந்து உண்ணுவதையோ, கலந்து மணம் புரிவதையோ அனு மதிப்பதில்லை என்பதால் அந்த அமைப்பை மோசமானது என்று கூறிவிட முடியாது. சாதி அமைப்பு சமுதாயத்தின் இயற்கை ஒழுங்காகும். சாதி என்பது கட்டுப்பாட்டுக்கு மறுபெயராகும்” என்று பலவாறாக விளக்கங்கள் அளித்துத் தம் வாழ்நாள் முழுவதும் வருணாசிரமக் கோட்பாட்டை ஆதரித்து வந்தார். மனிதநேயம் அடிப்படையில் மட்டுமே தீண்டாமையைக் கைவிடுங்கள் என்று சாதி இந்துக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். காந்தியாரின் சாதி அமைப்புக்கு ஆதரவான வாதங்களை அம்பேத்கர், “இது ஒரு குகை மனிதனின் வாதம் என்று மட்டும் சொன்னால் போதாது. இது உண்மையிலேயே ஒரு பைத்தியக்காரனின் வாத மாகும்” என்று சாடினார். ஆனால் வைத்தியநாத (அய்யர்) சாதி ஒழிப்புக்குக் காந்தியை வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். இதுதான் பார்ப்பனர்களின் சூழ்ச்சி.

வருணாசிரமம் எனும் சாதியமைப்பால் விளைந்ததுதான் தீண்டாமை. சாதியமைப்பைக் கட்டிக்காத்துக் கொண்டிருக் கின்ற வேதங்கள், ஸ்மிருதிகள், சுருதிகள், இதிகாசங்கள், புராணங்கள் முதலானவற்றையும் இவற்றுக்கெல்லாம் தலைமை தாங்கிக் கொண்டிருக்கின்ற பார்ப்பனர்களையும் பார்ப்பனியத்தையும் ஒழிக்காமல் சாதி அமைப்பைத் தகர்க்க முடியாது. இந்த வழியை நமக்குப் புத்தர், புலே, பெரியார், மேதை அம்பேத்கர் ஆகியோர் தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள்.

சாதி என்பதை மட்டுமே அடித்தளமாகக் கொண்டு பிற்படுத்தப்பட்ட சாதிகளிலும், பட்டியல் குலச் சாதிகளிலும் சில தலைவர்கள் தங்கள் சுயநலத்திற்காக இருதரப்பாரிடையே மோதலை மேலும் கூர்சீவிட முயல்கின்றனர். சாதி இந்துக் களில் உள்ள முற்போக்காளர்களும், தலித்துகளில் உள்ள முற்போக்காளர்களும் இணைந்து இத்தகைய மோதல்கள் மீண்டும் நடக்காத வகையில் தடுக்க வேண்டும். புலே - பெரியார் - அம்பேத்கர் காட்டிய நெறியில் சாதி - தீண்டாமை ஒழிப்புக்கான பரப்புரைகளையும், செயல்பாடுகளையும், போராட்டங்களையும் முன்னெடுப்போம்.

(செய்திக்கான ஆதாரம் : Economic and Political Weekly, 2012 December 1)

Pin It