அய்க்கிய நாடுகள் மன்றத்தின் பொது அவைக் கூட்டத்தில் 29.11.2012 அன்று அய்.நா. மன்றத்தின் உறுப்பு நாடு அல்லாத பார்வையாளர் நாடாக (Non member observer state) பாலஸ்தீனம் இருக்கும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தின் மூலம் வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பும் இறையாண்மையும் கொண்ட ஒரு நாடு என்ற தகு நிலையைப் பாலஸ்தீனம் உலக அரங்கில் பெறுகிறது. போப் ஆட்சியின் கீழ் உள்ள வாட்டிகன் நகரமும் இது போன்றதொரு நாடாக அய்.நா. மன்றத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்குமுன், பாலஸ்தீனம் வெறும் பார்வையாளர் என்ற நிலையில் மட்டுமே இருந்தது.

பாலஸ்தீனம் தனியான ஒரு நாடு என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதால், அது, இனி, அய்.நா. மன்றத்தின் விவாதங்களில் பங்கேற்கலாம். அய்.நா. மன்றத்தின் துணை அமைப்புகளில் இடம்பெறுவதற் கான உரிமை உண்டு. ரோம் நகரில் உள்ள பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் இசுரேல், பாலஸ்தீனியர் மீது நடத்திய மனித உரிமை மீறல் தாக்குதல்கள் குறித்து வழக்குத் தொடுக்கலாம். பாலஸ்தீனிய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் இது என்று கருதப்படுகிறது.

இத்தீர்மானத்துக்கு ஆதரவாக 138 நாடுகள் வாக்களித்தன. அவற்றுள் பிரான்சு, இத்தாலி, இரஷ்யா, சீனா, இந்தியா, பிரேசில், சப்பான் ஆகியவை முதன் மையானவை. பெரும்பாலான ஆசிய - ஆப்பிரிக்க நாடுகள் இத்தீர்மானத்தை ஆதரித்தன. இத்தீர்மானத் துக்கு எதிராக 9 நாடுகள் வாக்களித்தன. அவற்றுள் வடஅமெரிக்கா, கனடா, இசுரேல் ஆகியவை குறிப் பிடத்தக்கன. 41 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. பிரிட்டன், செருமனி இதில் முதன் மையானவை.

இத்தீர்மானம், சிறகுகளை முறித்தபின் பறவையை உயிர் வாழ அனுமதிப்பது போன்றதாகும். இதே நாளில் - அதாவது 1947 நவம்பர் 29 அன்று பாலஸ்தீனப் பகுதியை இசுரேல், பாலஸ்தீனம் என இரண்டு நாடுகளாகப் பிரிக்க வேண்டும் என்ற தீர்மானம் பிரிட்டன், அமெரிக்காவின் கூட்டு முயற்சி யால் அய்.நா.வில் நிறைவேற்றப்பட்டது. இதை, பாலஸ்தீனியர்கள் ஏற்க மறுத்தனர். 1948 மே மாதம் இசுரேல் நாடு உருவாக்கப்பட்டது. அப்போது 20 விழுக்காடு நிலப்பரப்பு மட்டுமே இசுரேலிடம் இருந்தது. 80 விழுக்காடு பரப்பு பாலஸ்தீனியர்களிடம் இருந்தது. ஆனால் இப்போது 80 விழுக்காடு இசுரேலிடமும், 20 விழுக்காடு பாலஸ்தீனியரிடமும் இருக்கிறது. இந்நிலை யைப் பாலஸ்தீனியர்களின் வெற்றி என்று கொண்டாட முடியுமா?

உலகின் பழைமை வாய்ந்த மதங்களில் ஒன் றான ஜுராஸ்டிர மதத்தைப் பின்பற்றுபவர்கள் யூதர்கள். கி.பி.2ஆம் நூற்றாண்டு வரை, யூதர்கள் பாலஸ்தீனப் பகுதியில் வாழ்ந்தனர். ஏசு கிறிஸ்து பிறப்பால் யூதர். ஜெருசலேம் நகரம் பாலஸ்தீனத்தில் தான் இருக்கிறது. கிறித்துவ மதம் பரவத் தொடங்கியதால், யூதர்கள் பாலஸ்தீனப் பகுதியிலிருந்து வெளியேறி உலகின் பல நாடுகளில் குடியேறினர். கிட்டத்தட்ட கடந்த 1800 ஆண்டுகளாக யூதர்கள் பாலஸ்தீனப் பகுதியில் வாழவில்லை.

கி.பி.7ஆம் நூற்றாண்டில் முகமது நபி இஸ்லாம் மதத்தை நிறுவினார். பாலஸ்தீனம் உள்ளிட்ட அரேபியா முழுவதும் இஸ்லாம் மதம் பரவியது. யூதர்கள் உலகிலேயே செருமனியில் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்தனர். காரல் மார்க்சு, அய்ன்ஸ்டீன் முதலான பேரறிஞர்களும் விஞ்ஞானிகளும் யூத இனத்தில் தோன்றியவர்களாவர். இந்தியாவில் பார்ப்பனர் சிறுபான்மையினராக உள்ள போதிலும் எவ்வாறு அறிவு மரபுக்குச் சொந்தம் கொண்டாடுகிறார்களோ - ஆதிக்கம் செலுத்துகிறார்களோ, அதேபோல் யூதர்கள் தாங்கள் வாழ்ந்த நாடுகளில் செல்வாக்கும் செல்வமும் பெற்றிருந்தனர். அதனால் பல நாடுகளிலும் யூதர்கள் ஒட்டுண்ணி இனம் என்று வெறுக்கப்பட்டனர்.

இரண்டாம் உலகப் போரின் போது, செருமனி யின் சர்வாதிகாரி இட்லர், தூய ஆரிய இனவாதத்தின் பெயரால், 60 இலட்சம் யூதர்களைக் கொன்று குவித்தான். இதேபோன்று பிற நாடுகளிலும் யூதர்கள் பலவகையான ஒடுக்குமுறைகளுக்கும் இன்னல்களுக் கும் இலக்காயினர். எனவே உலக அளவில் யூதர்கள் ஒன்றுபட்டு, தமக்கென ஒரு தனித் தேசத்தை உருவாக்குவதன் மூலமே யூத இனத்தைப் பாதுகாக்க முடியும் என்று முடிவு செய்தனர். இதற்காக, பிரிட்டன், அமெரிக்காவின் உதவியை நாடினர்.

முதல் உலகப் போரின் முடிவில், ஒத்தாமன் பேரரசு வீழ்ந்தது. பாலஸ்தீனம் பிரித்தானிய ஆட்சியின் கீழ் வந்தது. அதனால் யூதர்களுக்கு அவர்களுடைய தொல்தாயகப் பகுதியான பாலஸ்தீனத்தின் நிலப் பரப்பில் ஒரு பகுதியை ஒதுக்கித்தர பிரிட்டன் முடிவு செய்தது. இதற்கான தீர்மானம் 1947 நவம்பர் 29ஆம் நாள் அய்.நா. மன்றத்தில் பிரிட்டன் - அமெரிக்காவின் முயற்சியால், நிறைவேற்றப்பட்டது. ஆனால் இத்தீர் மானத்தின் மூலம் இசுரேல் என்கிற நாடு பாலஸ் தீனியர் மீது கொடிய தாக்குதல்களை நடத்தியதன் வழியாக நிறுவப்பட்டது.

1948இல் இசுரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ் தீனத்தில் வாழ்ந்த மக்களில் 50 விழுக்காட்டினர் அவர்களின் வாழிடங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். அய்.நா. மன்றத்தில், பாலஸ்தீனியர்கள் தங்கள் வாழ்ந்த இடங்களுக்குத் திரும்புவதற்கு இசுரேல் அனுமதிக்க வேண்டும் என்று தீர்மானம் இயற்றப் பட்டது. ஆனால் இன்றுவரை இது நிறைவேறவில்லை என்பதுடன், இசுரேல் தொடர்ந்து பாலஸ்தீனியரின் பகுதிகளைக் கைப்பற்றியது.

1967இல் இசுரேல், மேற்குக்கரை, காசா, கோலன் குன்றுகள், கிழக்கு ஜெருசலேம் ஆகிய பகுதிகளைக் கைப்பற்றியது. இச்சண்டையின்போது இப்பகுதிகளில் வாழ்ந்திருந்த 2,50,000 பாலஸ்தீனியர்கள் வெளி யேறினர். இசுரேல் கைப்பற்றிய இப்பகுதிகளில் இப்போதும் 30 இலட்சம் பாலஸ்தீனியர்கள் வாழ் கின்றனர். இசுரேலின் இப்போர் நடவடிக்கையை அமெரிக்கா முழுமையாக ஆதரித்தது. அய்.நா. அவையில், இசுரேலின் கொடிய செயல்பாடுகள் தொடர்பாகக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படும் போதெல்லாம், அமெரிக்கா தனக்குள்ள ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதைத் தடுத்து வந்தது.

1967 முதல் அமெரிக்கா தன் ஏகாதிபத்திய நலன்களுக்காக இசுரேலுக்கு ஆயுத உதவி, பண உதவி செய்து வருகிறது. இசுரேலைத் தன்னுடைய நெருக்க மான கூட்டாளி நாடாக ஆக்கிக்கொண்டது. இசுரேல் நாட்டைச் சுற்றிலும் எண்ணெய் வளம் கொழிக்கும் இசுலாமிய நாடுகள் அமைந்துள்ளன. எனவே இந்நாடுகளின் எண்ணெய் வளங்களைக் கொள்ளை யடிக்கவும், இந்நாடுகளை மிரட்டிப் பணிய வைக்கவும் இசுரேல் நாட்டை அமெரிக்கா வலிமையான ஆயுத மாகப் பயன்படுத்துகிறது. மேலும் அரபு நாடுகளும், அராபியர் அல்லாத பிற இசுலாமிய நாடுகளும் ஒன்றுபடுவதைத் தடுப்பதற்காக, சவூதி அரேபியா, துருக்கி, எகிப்து முதலான நாடுகளைத் தன் கைப் பிடியில் வைத்துக் கொண்டிருக்கிறது.

1980க்குப்பின் யாசர் அராபத் தலைமையில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் வீறுகொண்டெழுந்தது. இசுரேலின் தாக்குதல்களை ஆயுதமேந்தி எதிர்த்துப் போரிட்டது. பாலஸ்தீனியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்தும், பாலஸ்தீன தேசிய விடுதலை யின் தேவை குறித்தும் உலக நாடுகளின் தலைவர் களுக்கு அராபத் உணர்த்தி, ஆதரவு திரட்டினார். அய்.நா. அவையில் உரையாற்றினார். 1988இல் சுதந்தர பாஸ்தீன நாடு நிறுவப்பட்டதாக அறிவித்தார். ஆயினும் 1993இல் ஓஸ்லோ ஒப்பந்தத்தில் கை யொப்பம் இட்டார். இதன்படி 1967 முதல் கைப்பற்றிய பகுதிகளிலிருந்து இசுரேல் வெளியேற வேண்டும். ஆனால் ஒரு இசுரேலியக் குடும்பம் கூட இன்றுவரை வெளியேறவில்லை. மாறாகத் தமிழீழப் பகுதிகளில் சிங்களர் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டதுபோல், பாலஸ்தீனப் பகுதிகளில் இசுரேல் குடியேற்றங்களை அமைத்து வருகிறது. பாலஸ்தீனியர்கள் சுதந்தரமாக வெளியே வரமுடியாதவாறு மின்கம்பிவேலிகளை அமைத்தது. நெடுஞ்சுவர்களை எழுப்பியது. அத்துடன் நிற்காமல் பாலஸ்தீனியர் மீது வான்வழியாகவும் கடல் வழியாகவும் குண்டுகளை வீசித் தாக்கி வருகிறது. 2012 நவம்பர் மாதம் ஒரு கிழமை தொடர்ந்து இதுபோல் தாக்குதல் நடத்தியது. காசா பகுதியில் உள்ள ஹமாஸ் படைகள் இசுரேலைத் திருப்பித் தாக்குகின்றன.

இந்தப் பின்னணியில்தான் இப்போது பாலஸ் தீனத்திற்கு அய்.நா.வில் உறுப்பு நாடு அல்லாத பார்வையாளர் நாடு என்ற தகுநிலை தரப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தின் அதிகாரப்பூர்வத் தலைவராக முகமத் அப்பாஸ் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். பாலஸ்தீனியர் உலக அரங்கில் தம் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான உரிமையை இப்போது பெற்றுள்ளார் என்பது ஒரு முன்னேற்றம்தான்.

ஆயினும் பாலஸ்தீனப் பகுதிகளில் இசுரேல், குடியமர்த்தச் செயலை உடனடியாக நிறுத்துவதுடன், அங்கு வாழும் இசுரேலியர்களை வெளியேறச் செய்யாத வரையில், இசுரேலின் ஆதிக்கமும் பாலஸ்தீனியர் மீதான தாக்குதலும் நிற்காது. தேசிய இன விடுதலையை நேசிக்கும் மக்கள் அனைவரும் பாலஸ்தீனியர்களுக்குத் தொடர்ந்து குரல்கொடுப் போம். மேலும் ‘உலகின் போலீசாக’த் தன்னைக் கருதிக் கொண்டுச் செயல்படும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முதுகெலும்பை முறிக்காத வரையில் உலகில் அமைதி ஏற்படாது.

Pin It