என்னைப் பொறுத்தவரை இந்நாட்டுத் தொழிலாளர்கள் இரண்டு பகைவர்களோடு போராட வேண்டியுள்ளது. ஒன்று பார்ப்பனியம்; இரண்டு முதலாளியம். பார்ப்பனியம் எனும் எதிரியை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்லும் போது என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. பார்ப்பனர்கள் ஒரு வகுப்பினர் என்ற அடிப்படையில், அதிகாரங்கள், உரிமைகள், நலன்கள் பெறுவதை மட்டும் நான் பார்ப்பனியம் என்று குறிப்பிடவில்லை. அந்த அர்த்தத்தில் நான் பார்ப்பனியம் என்னும் சொல்லைப் பயன்படுத்தவில்லை. சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளின் எதிர்மறைதான் பார்ப்பனியம் என்று சொல்லுகின்றேன்.

இந்த எதிர்மறை உணர்வு எல்லா வகுப்பினரிடை யேயும் உள்ளது. பார்ப்பனர்களோடு மட்டும் அது நின்று விடவில்லை. பார்ப்பனர்கள் தாம் அதைத் தோற்றுவித்தவர்கள் என்ற போதிலும், அது எல்லா வகுப்பினரிடையிலும் ஊடுருவி உள்ளது என்பது உண்மை. இந்தப் பார்ப்பனியம் எங்கும் பரவி, எல்லா வகுப்பினரின் சிந்தனை, செயல்களில் ஆதிக்கம் செலுத்துவது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பார்ப்பனியம் சில வகுப்புகளுக்கு உரிமை மிகுந்த உயர்வுகளை வழங்குகிறது. மற்ற வகுப்புகளுக்குச் சம வாய்ப்புகளை மறுக்கிறது.

இந்தப் பார்ப்பனியம் சேர்ந்துண்ணல், கலப்பு மணம் ஆகிய சமூக உரிமைகளோடு நின்றுவிடுவதில்லை. அப்படி நின்றிருந்தால் யாரும் அதைப் பற்றிக் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால் அவ்வாறு அது நிற்கவில்லை. சிவில் உரிமைகளையும் அது பதம் பார்க்கிறது. பொதுப் பள்ளிகள், பொதுக் கிணறுகள், பொதுக் கழிப்பிடங்கள், பொது மருந்த கங்கள் ஆகியவை சிவில் உரிமைகள் தொடர்பானவை. பொது மக்களுக்காகப் பொது மக்கள் நிதியின் மூலம் நிர்வகிக்கப்படும் எல்லாமே ஒவ்வொரு குடிமகனுக்கும் உரியவை. ஆனால் இந்தக் குடிமை உரிமைகள் இலட்சக் கணக்கான மக்களுக்கு மறுக்கப்படுகின்றன. இது பார்ப் பனியத்தின் விளைவு அல்ல என்று யாராவது சொல்ல முடியுமா? பார்ப்பனியத்தால் ஆயிரக்கணக்கான ஆண்டு களாக அவிழ்த்துவிடப்பட்ட இந்த அடக்குமுறை இன்னும் உயிரோட்டமுள்ள மின் ஆற்றலாக ஓடிக்கொண்டிருக்க வில்லையா?

பொருளாதார வாய்ப்புகளைக் கூடப் பாதிக்கும் அளவுக்கு அத்தனை சர்வவல்லமை வாய்ந்ததாகப் பார்ப்பனியம் விளங்குகிறது. ஓர் ஒடுக்கப்பட்ட தொழிலாளிக்குள்ள வாய்ப்பு வசதிகளைப் பிற தொழிலாளியின் வாய்ப்பு வசதிகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள். பணிப்பாதுகாப்பு, பணி முன்னேற்றம் ஆகியவற்றில் ஒடுக்கப்பட்ட தொழிலாளிக்குள்ள வாய்ப்புகள் என்ன? தீண்டத்தகாதவன் என்பதால் அவனுக்கு எத்தனையோ வேலை வாய்ப்புகள் மூடப்பட்டுவிடுகின்றன. மிகச் சிறந்த எடுத்துக்காட்டு பருத்தித் தொழில்.

பம்பாய் மாகாணத்தில், பம்பாயிலும் சரி - அகமதா பாத்திலும் சரி, பருத்தி ஆலைகளில் நெசவுத் துறையில் ஒடுக்கப்பட்ட வகுப்பினரை அனுமதிப்பதில்லை. ஒடுக்கப்பட்ட வகுப்பினர் நூற்புத் துறையில் மட்டுமே பணிபுரிய முடியும். நூற்புத் துறையில் - பஞ்சாலைகளில் ஊதியம் மிக மிகக் குறைவு. நெசவுத் துறையில் தீண்டப்படாதவர்களுக்கு வாய்ப்பு ஏன் மறுக்கப்படுகிறதென்றால், அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்பதுதான். ஒரு சாதி இந்து முசுலீம்களோடு பணிபுரிவதில் எந்தச் சுணக்கமும் காட்டுவதில்லை. ஆனால் தீண்டத் தகாதோர் என்றால் எதிர்ப்பு காட்டுகிறான்.

இரயில்வே துறையை எடுத்துக் கொள்ளுங்கள். இரயில் வேயில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை என்ன? ஒடுக்கப் பட்டவன் ஒரு கேங்க் மேனாகத்தான் பணிபுரிய வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. பதவிக்காலம் முழுவதும் எவ்வித உயர்வும் இல்லாமல் கேங்க் மேனாகவே பணிபுரியும் நிலை உள்ளது. அவனுக்குப் பதவி உயர்வு எதுவும் தரப்படுவ தில்லை. போர்ட்டராகக்கூட அவன் வர முடியாது. போர்ட்ட ராக வர வேண்டுமானால் ஸ்டேஷன் மாஸ்டரின் வீட்டு வேலைகளையும் அவன் செய்தாக வேண்டும். ஸ்டேஷன் மாஸ்டர் ஒரு சாதி இந்துவாக இருப்பார். ஆகவே ஒடுக்கப்பட்ட தொழிலாளி போர்ட்டராக அவர் வீட்டுக்குள் நுழைவதை விரும்பமாட்டார். எனவே ஒடுக்கப்பட்ட வகுப்பினர் போர்ட்ட ராக நியமிக்கப்படுவதில்லை.

எனக்கும் உங்களுக்கும் தீயநோக்கத்தைக் கற்பிப்ப வர்களுக்கு இரண்டு கேள்விகள். இந்தக் கேள்விகள் நேரடியான கேள்விகள். மேலே சொன்னவையெல்லாம் உண்மையான குறைபாடுகள் தானே? உண்மையான குறைபாடுகள் என்றால் அவற்றை நீக்க முனைவதும் அதற்காகத் திரள்வதும் சரிதானே? இந்தக் கேள்விகளுக்கு நேர்மையான எந்த மனிதனும் எதிர்மறையாகப் பதில் சொல்ல முடியாது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒரு தொழி லாளர் அமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த மான இந்தியத் தொழிலாளி வர்க்கத்திற்கு நாம் பெரிய உந்துசக்தியாக இருக்க முடியும். எனவே நமது முயற்சிகள் நியாயமானவை. நம்மீது குற்றம் சாட்டும் தொழிலாளர் தலைவர்கள் ஏதோ ஒருவித பிரமையில் இருக்கிறார்கள். அவர்கள் காரல்மார்க்சைப் படித்தவர்கள். உடைமை வர்க்கம், தொழிலாளர் வர்க்கம் என இரண்டு வர்க்கம் மட்டுமே உண்டு என்பவர்கள். “இந்தியாவிலும் இரண்டு வர்க்கம் தான் - ஆகவே நமது கடமை முதலாளித்துவத்தை ஒழிப்பது” என்று கருதுபவர்கள். இந்த விசயத்தில் அவர்கள் இரண்டு தவறுகள் செய்கிறார்கள்.

மார்க்சு சொன்னதை ஒரு கருத்து நிலையாகக் கொள்ளாமல், மெய்ம்மை என நினைப்பது அவர்கள் செய்யும் முதல் தவறு. இரு வர்க்கம் என்பதை அடிப்படையாகக் கொண்டு பிரச்சாரம் நடத்தினால் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. உடைமை வர்க்கம், இல்லாத வர்க்கம் என்னும் பிரிவினை உணர்வு இந்தியாவில் சாதிப் பிரி வினைகள் காரணமாக உண்டாகவில்லை. எல்லாத் தொழி லாளர்களும் ஒன்று - ஒரே வர்க்கம் என்பது இலட்சியம். அது அடையப்பட வேண்டிய இலட்சியமேயாகும். ஆனால் அதுவே இருக்கிற யதார்த்தம் என்று முடிவு செய்து கொள்வது தவறு. பிறகு எப்படித் தொழிலாளர்களை அணித் திரட்ட முடியும்?

ஒரு பிரிவுத் தொழிலாளர்கள், இன்னொரு பிரிவுத் தொழிலாளர்களை நசுக்குவதைத் தடுப்பதன் மூலம் அவர் களிடையே ஒற்றுமையை உருவாக்க முடியும். ஒடுக்கப்பட்ட பிரிவுகள் அமைப்பு ரீதியாகத் திரள்வதைத் தடுப்பதன் மூலம் அது முடியாது. இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் பிரிவினரைத் தடுப்பதன் மூலம் அது முடியாது. ஒற்றுமையைக் கொண்டுவர ஒரே வழி ஒரு தொழிலாளி இன்னொரு தொழிலாளிக்கு இனம், மதம் ஆகிய பின்னணியில் பகைமைக் கொள்வதற்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து களைவதன் மூலம், அத்தகைய ஒற்றுமையை அவர்களிடையே கொண்டுவர முடியும். தொழிலாளர்களிடையே ஒற்றுமையைக் கொண்டுவரச் சிறந்த வழி என்னவென்றால், ஒரு தொழிலாளி மற்ற தொழிலாளர்களுக்குத் தரவிரும்பாத உரிமைகளை அவன் மட்டும் பெறவேண்டும் என்பது தவறான சிந்தனை என்று அவனுக்கு எடுத்துச் சொல்வதுதான். தமக்கிடையே உள்ள சமூக வேறுபாடுகளுக்கு அழுத்தம் தரும் போக்கு தொழிலாளர் மத்தியில் ஒற்றுமையைச் சிதைத்துவிடும் என்பதைத் தொழிலாளர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

சுருங்கச் சொன்னால் சமத்துவமின்மை என்னும் குணாம்சத்தை அதாவது பார்ப்பனியத்தைத் தொழிலாளர் மத்தியிலிருந்து அடியோடு களைந்தெறிய வேண்டும். இத்தகைய முயற்சியில் இறங்கிய தொழிலாளர் தலைவர் யார்?

முதலாளித்துவத்துக்கு எதிராக ஆவேசமாகப் பேசும் தொழிலாளர் தலைவர்களை நான் கேட்டிருக்கிறேன். ஆனால் பார்ப்பனியத்திற்கு எதிராக எவரும் பேசியதாகத் தெரியவில்லை. இந்த விசயத்தில் அவர்கள் சாதிக்கும் மவுனம் வெளிப்படையாகத் தெரிகிறது. ஒரு வேளை தொழிலாளர் ஒற்றுமைக்கும் பார்ப்பனியத்துக்கும் தொடர்பே இல்லையென்று அவர்கள் நினைக்கிறார்களா? அல்லது தொழிலாளர் சக்தி இப்படிச் சிதறிக் கிடப்பதற்கே பார்ப்பனியம் பெருங்காரணியாக இருக்கிறது என்பது அவர்களுக்கு இன்னும் தெரியவில்லையா? ஒரு வேளை இந்த அப்பட்டமான சந்தர்ப்பவாதத்தால் தொழிலாளர் உணர்வுகளைப் புண் படுத்திவிடக்கூடாது - அப்போதுதான் தலைமையில் நீடிக்க முடியும் என்று நம்புகிறார்களா?

தொழிலாளர் வர்க்கம் இப்படிச் சிதறுண்டு கிடப்பதற்கு அடிப்படைக் காரணம் பார்ப்பனியமே என்பதை ஏற்றுக் கொண்டால், அந்தப் பார்ப்பனியப் போக்கு தொழிலாளர் களிடையே நிலவுவதையும் விளக்கியே ஆக வேண்டும். இந்தத் தொற்றுநோயை அலட்சியம் செய்வதாலோ, அதைப்பற்றி மவுனம் சாதிப்பதாலோ தொழிலாளர்களைப் பீடித்துள்ள பீடை அகலாது. இந்தப் பார்ப்பனியப் போக்கைத் தேடிக் கண்டறிந்து, தோண்டித் துருவி ஆராய்ந்து அடி யோடு கல்வி எறிய வேண்டும். அப்போதுதான் தொழிலாளர் ஒற்றுமை சாத்தியப்படும்.

(பம்பாய் மன்மத்தில், 1938 பிப்பிரவரி 12, 13 ஆகிய நாள்களில் நடைபெற்ற ஒடுக்கப்பட்ட இரயில்வே தொழிலாளர் மாநாட்டில், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆற்றிய சொற் பொழிவு. அம்பேத்கர் நூல் (தமிழ்) தொகுப்பு : தொகுதி 37).

Pin It