arunjetli--nirmala-sitaram“நடுவண் அரசின் 2014-15ஆம் ஆண்டுக்கான பா.ச.க. அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை, நிதிய மைச்சர் அருண் ஜெயிட்லி நாடாளுமன்றத்தில் சூலை 10 அன்று அளித்தார். நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்றால் விலைவாசி குறையும்; இந்தியாவின் பண மதிப்பு அமெரிக்காவின் டாலருக்கு எதிராக உயரும்; தமிழக மீனவர் பிரச்சினை தீரும்; இராசபக்சே அரசுடன் பேசியோ, பணிய வைத்தோ ஈழத் தமிழர்களின் இன்னல்களைப் போக்கிவிடுவார் என்று பா.ச.க. தலைவர்களும், அதன் தமிழகக் கை யாள்களும் மேடைதோறும் முழங்கினர்.

ஊடகங்களில் காங்கிரசு அரசினைக் கடுமையாகச் சாடினர். ஆனால் வெறும் மதவாத வெற்று அரசியலைத்தான் பா.ச.க. அரசு கடந்த 60 நாட்களாகச் செய்து வருகிறது என்பதற்கு மற்றொரு அடையாளம்தான் நிதிநிலை அறிக்கையாகும்.

இங்கிலாந்து ஏகாதிபத்தியப் பேரரசு இந்தியாவில் விட்டுச் சென்ற எச்சங்களில் நிதிநிலை அறிக்கையும் ஒன்று. ஆனால் இங்கிலாந்து அரசில் இன்றளவுக்கும் நிதிநிலை அறிக்கையை ஒட்டிச் சில நெறிமுறைகள் சரியான முறையில் கடைப்பிடிக்கப்படுகின்றன. குறிப்பாக, நிதிநிலை அறிக்கை அளிக்கப்படும் மாதத்திலோ அல்லது அதற்குச் சில மாதங்களுக்கு முன்போ அரசுத் துறை சார்பில் நிதியியல் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படுவதில்லை. ஆனால், இந்தியாவிலோ, இந்த நாடாளுமன்ற நடைமுறை தொடர்ந்து சிதைக் கப்பட்டு வருகிறது.

திட்டமிட்டே, நிதிநிலை அறிக்கை அளிக்கப்படு வதற்கு முன்பு புதிய வரிவிதிப்புகள், கட்டண உயர்வு களை அறிவித்துவிட்டு, நிதிநிலை அறிக்கையை வெறும் அரசியல் சார்ந்த சாதனைப் பட்டியலாக மாற்றும் போக்கு நடுவண் அரசால் பல ஆண்டுகளாகப் பின் பற்றப்பட்டு வருகிறது. இதையொட்டித்தான் 14 விழுக் காடு அளவில் பயணிகள் கட்டணத்தையும், 6.5 விழுக் காடு சரக்குக் கட்டணத்தையும் தொடர்வண்டி நிதிநிலை அறிக்கைக்கு முன்பாகவே உயர்த்தி மக்களை வேதனைப்படுத்தி இருக்கிறது பா.ச.க. அரசு.

மேலும், காங்கிரசு அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த் திய போதெல்லாம் கடும் கண்டனங்களை நாடாளு மன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் வெளிப்படுத்திய பா.ச.க., இன்று அதே வழியைப் பின்பற்றிப் பல முடிவுகளை மேற்கொள்வதிலும் காங்கிரசின் நகலாகச் செயல்படத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக, காங்கிரசு அரசின் நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரமும், தற்போதைய நிதியமைச்சர் அருண் ஜெயிட்லியும் சிறந்த வழக்கறிஞர்கள். பதவி யில் இல்லாத நேரங்களில் உள்நாட்டு, பன்னாட்டுத் தொழில், வணிகக் குழுமங்களின் சார்பாக நடுவண் அரசு, மாநில அரசுகளுக்கு எதிராக வழக்காடுவதில் இருவரும் வல்லவர்கள். விதிமீறல்கள், மரபுகளை மிதித்தல் போன்றவை இரண்டு தேசியக் கட்சிகளுக் கும் கைவந்த கலை. மக்களால் நிராகரிக்கப்பட்ட பின்பும் எதைப்பற்றியும் கவலைகொள்ளாமல் நடுவண் அரசின் நிதியமைச்சர்களாக வலம் வருவதில் இருவரும் ஒரே பொருளாதாரக் கழிவுக் குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு பன்னாட்டு நிறுவன மான கொக்கோ கோலா, பெப்சி கோலா நிறுவனங் களுக்காக வாதாடியவர் அருண் ஜெயிட்லி. விதேசிக்கு மட்டுமல்ல பிர்லா போன்ற சுதேசிக்கும் வாதாடிய வழக்கறிஞர். 2002ஆம் ஆண்டில் இமாச்சலப் பிரதேச இமயமலைச் சாரலில் மனாலி-ரோட்டாங் சாலையில் உள்ள மென்பாறைகளில் மேற்கூறிய குழுமங்கள் சுற்றுச்சூழலைப் பெருமளவில் பாதிக்கும் வகையில் வண்ணப்பூச்சால் விளம்பரங்களைச் செய்தன.

இதைச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உச்சநீதிமன்றத் திற்கு எடுத்துச் சென்றனர். ஆனால் இன்றைய நிதி யமைச்சர் ஜெயிட்லி அமெரிக்க கொக்கோ கோலா நிறுவனத்தின் சார்பாகச் சுற்றுச்சூழலுக்கு எதிராக வாதிட்டார். ஆனால், உச்சநீதிமன்றமோ 8 தொழில் குழுமங்கள் இந்த விளம்பர வண்ணப்பூச்சுகளால் மலைப் பாறைகளைச் சிதைத்துள்ளன என்று கூறிக் கடும் கண்டனத்தையும், பல இலட்ச ரூபாய் தண்டத்தையும் விதித்தது. இப்படிப்பட்ட பெருமைகள், நமது சிதம்பரத் துக்குப் போன்றே ஜெயிட்லிக்கும் உண்டு. ஆனால் சிதம்பரம் செய்யாததை மெத்தப்படித்த ஜெயிட்லி செய்து காட்டி, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமைகளில் இருந்து நழுவியுள்ளார்.

இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ பிரிவில் ஒவ்வொரு குடிமகனும் கடைப்பிடிக்க வேண்டிய பத்து அடிப்படைக் கடமைகள் ((Fundamental Duties) சுட்டப் பட்டுள்ளன. அதில் எட்டாவது கடமையில் - 51ஏ(எச்) ‘அறிவியல் உணர்வையும், மனிதநேயத்தையும், சீர் திருத்தத்தையும் ஆய்வு மனப்பான்மையையும் போற்றி வளர்க்க வேண்டும்’To develop the scientific temper, humanism and the spirit of inquiry and reforms 51A(h)), என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, இதுவரை நடுவண் அரசின் எந்த நிதிய மைச்சரும் பின்பற்றாத மத மூடநம்பிக்கைகள் சார்ந்த ஒரு அணுகுமுறையை ஜெயிட்லி கடைப்பிடித்துள்ளார்.

நிதிநிலை அறிக்கையை அளிப்பதற்கு நாடாளுமன்றத்தில் வந்தபோது அவர், அவரது துணைவியார், மகள் ஆகியோருடன் மஞ்சள் நிற ஆடையில் வந்து மதமூட நம்பிக்கைக்கு வித்திட்டுள்ளார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமைகளைக் காற்றில் பறக்கவிட்டுள்ளார்.

உலகப் பொருளாதாரம் மந்தமாக உள்ளது. வட அமெரிக்கா, அய்ரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவுகளால் இந்தியாவின் தொழில் வணிக வளர்ச்சிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. அதன் காரணமாகத்தான் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி குறைந்து வருகிறது என்று கடந்த பத்தாண்டுகளாக மன்மோகன் சிங், சிதம்பரம், அலுவாலியா கூட்டம் கூவியதையே, இன்றைக்கு பா.ச.க.வினர் தங்களது நிதிநிலை அறிக்கைக்கு ஆதரவாகக் கொண்டும் கூக் குரலிடுகின்றனர்.

2014ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘புத்தாயிரமாண்டின் வளர்ச்சி இலக்குகள்’ ((Millennium Development Goals)அறிக்கையின்படி, உலகில் வாழும் ஏழை மக்களில் மூன்றில் ஒருவர் இந்தியர் என்று கூறப்பட்டுள்ளது. பொதுவாக, வேலைவாய்ப்பு அளித்தும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதும்தான் (Price stability and full emloyment) நிதிநிலை அறிக்கையின் முதன் மைக் குறிக்கோளாகப் பொருளாதார நூல்களில் சுட்டப் படுகிறது. இந்தக் கருத்தியல்தான் பல நாடுகளிலும் பின்பற்றப்படுகின்றது.

ஆனால் இந்த இரண்டு குறிக் கோள்களும் இந்த நிதிநிலை அறிக்கையில் சிதைக்கப் பட்டுள்ளன என்றே கூறலாம். சான்றாக, முந்தைய ஐக்கிய முற்போக்கு அணி அரசு கொண்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத் திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி அளவு, தற்போதைய நிதி நிலை அறிக்கையில் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு புறம் மக்கள் தொகை பெருகி வருகிறது. மறுபுறம் ஓராண்டில் 100 நாள்களாவது ஊர்ப்புற ஏழை மக்களுக்கு வேலை கொடுக்கும் திட்டத்திற்கான நிதியும் சுருங்கி வருகிறது. இதுதான் வேலையைப் பெருக்கும் முயற் சியா? இதுதான் குஜராத் மாநில வளர்ச்சி அணுகு முறையா?

மேலும், வருகின்ற மூன்றாண்டுகளில் பொருளாதார வளர்ச்சியை 8 விழுக்காடு அளவிற்கு உயர்த்துவோம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 10வது ஐந்தாண்டுத் திட்டம் (2002-2007), 11வது ஐந்தாண்டுத் திட்டக் (2007-12) காலங்களில் முதன்மைத் துறையான வேளாண் துறையில் 3 விழுக்காட்டு வளர்ச்சி யைக்கூட அடையவில்லை என்பதையே புள்ளி விவரங் கள் எடுத்துரைக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளாகத் தொழில் துறையில் ஏற்பட்ட ஏற்றமும் இறக்கமும்தான் பல இடையூறுகளை மக்களுக்கு அளித்துள்ளன. தற்போது தொழில் வளர்ச்சி ஒரு விழுக்காட்டு அளவை யாவது எட்டுமா என்ற ஐயமே எல்லோரையும் அச் சுறுத்துகிறது.

இந்நிலையை மாற்றி, உள்நாட்டுப் பெரும் தொழில்களையும், நடுத்தர, சிறு, குறு தொழில்களை யும் வளர்ப்பதற்கான நீண்டகாலப் பொருளாதாரப் திட்டங்களும், அதற்கான அணுகுமுறையும், நிதி ஒதுக்கீடும் இந்த அறிக்கையில் காண முடியவில்லை. நடு, சிறு, குறு தொழில்கள் ஊக்குவிக்கப்படும்; அதற் கான நிதியாதாரங்கள் சீரமைக்கப்படும் என்ற அறி விப்புகள் வெறும் காகிதத் திட்டங்களாகவே இன்றும் தொடர்கின்றன.

பல்வேறு நிதியுதவிகளும், கட்டணச் சலுகைகளும், நில ஒதுக்கீடுகளும் செய்த பிறகும் சேவைத் துறை யில் தற்போது தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. தொழில், சேவைத் துறைகளுக்கு வழங்கிய சலுகைகள்; முதன் மைத் துறையான வேளாண்மைக்கு வழங்கப்படவே இல்லை என்பதுதான் கடந்த கால, நிகழ்கால நடை முறையாக இருந்து வருகின்றது.

பொருளாதாரத்தின் மூன்று துறைகளிலும் சறுக்கல்கள், தடங்கல்கள் ஏற்பட்டு 5 விழுக்காடு ஆண்டு வளர்ச்சியைக்கூட எட்ட முடியாத நிலையில், வரும் ஆண்டுகளில் மாபெரும் பொருளாதார மாற்றத்தை உருவாக்குவோம் என்று அறிவித்துப் பல திட்டங்களை நிறைவேற்றுவோம் என்று கூறுவது உண்மையில் ஏமாற்றும் வித்தைதானே! நிதியாக்கப் பற்றாக்குறை எவ்வாறு ஏற்படுகிறது? ஆண்டு தோறும் அளிக்கப்படும் நிதிநிலை அறிக்கையில் வரி வருவாய் மற்றும் அரசுக்கான வருமானம் குறைந்து, பொதுச் செலவு அதிகரித்தால் நிதிநிலை அறிக்கையில் பற்றாக்குறை ஏற்படும்.

மேலும், வெளிநாடுகளில் வாங்கிய கடன், உள்நாட்டில் எழுப்பிய கடன்கள், அவற்றுக்காக ஏற்படும் வட்டிச் சுமைகள் இவற்றையும் சேர்த்து நிதிநிலை அறிக்கையில் ஏற்படும் பற்றாக்குறையை இணைத் ததால் நிதியாக்கப் பற்றாக்குறை ((Fiscal Deficit)) ஏற் படுகிறது. ஆனால், பொருளாதாரம் 7 விழுக்காடு அல்லது 8 விழுக்காடு வளர்கிறது என்று சொல்லிக்கொண்டே, 2004ஆம் ஆண்டிலிருந்து நிதியாக்கப் பற்றாக்குறை யை நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளின்படிக் குறைக்க முடியாமல் நடுவண் அரசு படுகின்ற பாடு அங்குள்ள நிதித்துறையில் பணியாற்றுகிற உயர் அலுவலர்களுக் குத்தான் வெளிச்சம்.

child-labour 350குறிப்பாக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏற்பட்டவுடன் 2004ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் அளித்த ப. சிதம்பரம் நிதியாக்கப் பற்றாக்குறையைக் குறைக்க முடியாது என்பதை மறைமுகமாகச் சுட்டினார். நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் 3 விழுக்காட்டுக்கு மேல் நடுவண் அரசும், மாநில ஒட்டுமொத்த உற்பத்தியில் மாநில அரசுகள் 3 விழுக்காட்டுக்கு மேல் நிதியாக்கப் பற்றாக் குறையை மேற்கொள்ளக்கூடாது என்று நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் நிதிநிலை அறிக்கை மேலாண்மை - நிதியாக்கப் பொறுப்புச் சட்டம் (Budget Management and Fiscal Responsibility Act)) என்ற சட்டம் இயற்றப்பட்டது. 2004ஆம் ஆண்டு தனது முதல் நிதிநிலை அறிக்கையில் ப.சிதம்பரம் நாடாளுமன்றத் தில் இச்சட்டத்திலிருந்து விதிவிலக்குக் கோரிப் பெற்றார்.

ஆனால், இந்த நிதியாக்கப் பற்றாக்குறையை 3 விழுக் காட்டுக்குள்தான் வைத்திருக்க வேண்டும் என்ற நெருக்கடியையும், அழுத்தத்தையும் மாநில அரசுகள் மீது நடுவண் அரசு திணித்து வெற்றியும் பெற்றுவிட்டது. அது எப்படி என்றால், நடுவண் அரசால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமிக்கப்படும் நிதிக்குழு, நடுவண் அரசின் நிதியாதாரத்தில் இருந்து மாநிலங் களுக்குப் பிரித்துக் கொடுக்கும் வரி வருவாய், மானியம் ஆகியவற்றை 3 விழுக்காட்டுக்கு மேல் நிதியாக்கப் பற்றாக்குறை வைத்திருந்தால் தர மறுக்கிறது.

எனவே, தமிழ்நாடு போன்ற நிதி மேலாண்மையை நல்ல முறையில் கடைப்பிடிக்கும் மாநிலங்கள் 3 விழுக் காட்டுக்குள் நிதியாக்கப் பற்றாக்குறையைக் கட்டுப் பாட்டுக்குள் வைத்துக் கொண்டாலும், 12வது, 13வது நிதிக்குழுக்களின் பரிந்துரைகளின் மீது இம்மாநிலங் கள் பெற்ற தொகை மிகக் குறைவானதாகும் என்ப தையும் இங்குச் சுட்ட வேண்டியுள்ளது.

இப்படித் தனக்கு ஒரு நீதி, மாநிலங்களுக்கு ஒரு நீதி என்று நீதியில் சமன் அற்ற நிலையை உருவாக்கி வரும் நடுவண் அரசு, தொடர்ந்து நிதியாக்கப் பற்றாக்குறையை உண்மையில் குறைக்க வேண்டுமானால், உள் நாட்டுப் பொருளாதார வளர்ச்சிக் காரணிகளை உரிய முறையில் கண்டறிந்து வேளாண் தொழில், உள் நாட்டுத் தொழில்களை மேம்படுத்தி நாட்டுக்குத் தேவையான துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுப் பொருளாதார வளர்ச்சிப் பாதையைச் செப்ப னிட்டிருக்க முடியும்.

இதற்கு மாறாகத் தாராளமயமாக் கல் கொள்கையின் அடிப்படையில் இலாபம் ஈட்டித் தரும் பொதுத்துறையை வளர்த்தெடுக்காமல், ஊக்கு விக்காமல், தனியார் துறைக்குப் பொதுத் துறையின் பங்குகளைத் தாரைவார்த்து, வருவாயைப் பெருக்கிக் கொண்டதாக அரசு காட்டிக் கொண்டது. நிதியியல் மரபுப்படி, இது சரியான அணுகு முறையன்று.

மேலும் நேர்முக, மறைமுக வரிகளைக் குறைத்து, தனியார் துறைக்குச் சலுகைகளை அள்ளி வழங்கி அந்நிய முதலீடுகளை ஈர்க்கிறோம் என்ற போர்வையில் கடந்த 10 ஆண்டுகளில் நடுவண் அரசு பல இலட்சங்கோடி ரூபா நிதியாதாரங்களை இழந்துள்ளது என்பதுதான் உண்மை.

குறிப்பாக, மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி, பொதுச் சுகாதாரச் செலவினைப் பெருக்குவதற்குப் பதிலாக, அதே செலவினை ஏறக்குறையப் பின்பற்றுவது சம நீதியை, சமூக நீதியைக் (Equity and Justice) குலைக் கும் போக்காகும். மேலும், வெளிநாடுகளுக்குச் செலுத் தும் வட்டித் தொகையின் சுமையாலும் நிதியாக்கப் பற்றாக்குறை அதிகரிக்கிறது. இந்தநிலையை மாற்றிட எவ்விதத் திட்டமும் இந்த நிதிநிலை அறிக்கையில் சுட்டப்படவில்லை.

உலகிலேயே அதிகமாக இராணுவத் தளவாடங் களை 2013இல் இறக்குமதி செய்த நாடு இந்தியா என்று, உலக அளவிலான பல புள்ளிவிவரங்கள் சுட்டு கின்றன. இந்தத் துறையில்தான் ராஜிவ் காலத்தில் போபர்சு பீரங்கி ஊழல், நீர் மூழ்கிக் கப்பல் ஊழல் தொடங்கி, வாஜ்பாய் காலத்தில் இராணுவ வீரர்களுக் கான சவப்பெட்டியில் நிலைப்பெற்று, இன்றைக்கு இராணுவ ஹெலிகாப்டர் வரை ஊழல் பறந்து உச்சத் திற்குச் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், மோடி அரசோ காங்கிரசு அரசு பின்பற்றிய அதே கொள்கை யைப் பின்பற்றி இராணுவச் செலவினை 2 இலட்சம் கோடிக்கு மேல் உயர்த்தியுள்ளது.

வேளாண் துறைக் குக் குறிப்பாக, பிரதம மந்திரி நீர்ப்பாசனத் திட்டத்திற் காக ஆயிரம் கோடியும், சியாம் பிரசாத் முகர்ஜி நகர், ஊரகத் திட்டத்திற்காகவும், தீனதயாள் உபாத்யாயா ஊரக எரிசக்தி வழங்கும் திட்டத்திற்கு 500 கோடியும், ஊரகத் தொழில் முனைவோருக்கு 100 கோடி ரூபாயும், ஆற்றுப்படுகை நீர் மேலாண்மைத் திட்டத்துக்கு 2142 கோடியும் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பெயர்தான் பெரியது-குடிப்பதற்கு நீரில்லை’ என்ற தெலுங்குப் பழமொழிக்கு ஏற்ப, ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் முன்னோடிகளின் பெயர்களைத் திட்டங்களுக்கு அளித்துவிட்டு, அதற்கான நிதியாதாரம் குறைந்த அளவே ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள், முதியோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளும் ஏற்கெனவே இயங்கி வருகின்ற திட்டங்களுக்கு அளிக் கப்படும் நிதியில் சிறிதளவே உயர்த்தப்பட்டுள்ளன.

அரசு ஊழியர்களுக்கும், நடுத்தர வர்க்கத்திற்கும், மூத்த குடிமக்களுக்கும் வருமான வரியில் சில சலு கைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விலக்கினை அரசுத் துறையில் வருங்கால வைப்பு நிதியில் முதலீடு, சேமிப்புப் பத்திரங்கள் வாங்குவது, வீட்டுக்கடன் வட்டிச் சலுகை உயர்வு, காப்பீட்டுப் பத்திரங்கள் வாங்குவது ஆகியவற்றின் வழியாகப் பெறுகிறார்கள். இதை நிதித் துறையில் வரி தவிர்ப்பு முறை (Tax Avoidance) என்று சுட்டப்படுகிறது.

ஆனால், பெரும் வணிகர்கள், முதலாளிகள், கள்ளப்பணம் வைத்திருப்போர், அந்நிய வங்கிகளில் திருட்டுத்தனமாகப் பணம் வைத்திருப் போர் ஆகியோர் முழுமையான முறையில் வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு (Tax Evasion) செய்வோர் தான் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். வரி ஏய்ப்புச் செய்துவிட்டு, வரி செலுத்தாமல் வருமான வரி மேல் முறையீட்டு மன்றங்களுக்கும், நீதிமன்றங் களுக்கும் செல்பவர்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய பல ஆயிரம் கோடியைத் தங்கள் கைகளில் முடக்கி வைத்துள்ளனர்.

இந்த நிதிநிலை அறிக்கையும் நடுவண் அரசில் அதிகாரக் குவிப்பையும், முதலாளிகளுக்குச் சலுகை களையும், ஏழைகளுக்குச் சில ரொட்டித் துண்டுகளை யும் அளிக்கும் போக்கையே எதிரொலிக்கின்றது என்பதே உண்மை!

Pin It