நார்வே கிட்டத்தட்ட 50 இலட்சம் மக்கள் வாழும் சிறிய நாடு. இந்தியாவிலோ 121 கோடி மக்கள் வாழ்கின்றனர். இவ்விரு நாடுகளுக்கிடையே இரண்டு வங்காள - இந்தியக் குழந்தைகள் வளர்ப்புப் பற்றிய சிக்கல் தீராமல் நீடித்து வருகிறது.

மேற்குவங்க மாநிலத்தின் அனுரூப் பட்டாச்சாரியா, சகாரிகா இணையர் நார்வே நாட்டில் வாழ்கின்றனர். இவர்களுக்கு நான்கு அகவையில் அபிக்யான் என்ற மகனும் ஒரு அகவையில் அய்ஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர்.

இவர்கள் தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பாகவும், பொறுப்புடன் வளர்க்கவில்லை என்று கூறி 2011 மே மாதம் நார்வே குழந்தைப் பாதுகாப்புப் பணி நடுவம் (Child Welfare Service - CWS) பெற்றோர்களிட மிருந்து இரண்டு குழந்தைகளையும் எடுத்துச் சென்று குழந்தைகள் நலக் காப்பகத்தில் சேர்ந்துவிட்டது. 2011ஆம் ஆண்டில் மட்டும் 1200 குழந்தைகள் இதுபோல் காப்பகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

அனுரூப்பும் சகாரிகாவும், “குழந்தைகளுக்கு நாங்கள் கையால் உணவு ஊட்டுகிறோம். எங்கள் மகனுக்குத் தனி அறை இல்லை. எங்கள் கட்டிலில் எம்மகன் எங்களுடன் தூங்குகிறான். குழந்தைகளின் அகவைக்கு ஏற்றவகையிலான விளையாட்டுப் பொருள் கள் இல்லை என்கிற காரணங்களைக் காட்டிக் குழந் தைகளை எம்மிடமிருந்து எடுத்துச் சென்றுவிட்டனர். இந்தியக் கலாச்சாரப்படி தாங்கள் வளர்த்தோம். இது தவறு என்று அரசு கூறுவது எப்படி நியாயம்?” என்று வினவினர்.

இந்தியக் கலாச்சாரத்தை நார்வே அரசு இழிவு படுத்துவதா? என்ற கண்டனக் குரல்கள் இந்தியாவில் எழுந்தன. நடுவண் அரசின் பார்வைக்கு இச்சிக்கல் கொண்டு செல்லப்பட்டது. அக்குழந்தைகள் அனா தைகள் அல்லர்; நாடற்றவர்க்ளும் அல்லர்; எனவே அக்குழந்தைகளை உடனே நார்வே அரசு இந்தி யாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று நடுவண் அரசு கூறியது.

இதற்கிடையில் நார்வே நாட்டின் கீழமை நீதிம ன்றம், குழந்தைகள் இருவரும் 18 அகவையை எய்தும் வரை நார்வே நாட்டின் காப்பகத்திலேயே இருக்க வேண்டும் என்று கூறியது. இது ஓர் ஆர்வக் கோளாறான - தவறான முடிவு மட்டுமன்று; நார்வே நாட்டின் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்திற்கே முரணானது. குழந்தை தன் தாய்மொழி பேசுகின்ற - தான் பிறந்த இனத்தின் கலாச்சாரப் பின்னணி கொண்ட சூழலில் தான் முடிந்த வரையில் வளர வேண்டும் என்று நார்வே குழந்தைகள் நலச் சட்டம் கூறுகிறது.

குழந்தைகளைப் பெற்றோரிடமிருந்து பிரித்து, காப்பகத்தில் வைத்திருப்பதைக் கண்டித்து, இக்குழந் தைகளின் இருதரப்பு தாத்தாக்களும் பாட்டிகளும் புதுதில்லியில் நார்வே தூதுவர் அலுவலகம் முன் 27.2.2012 அன்று தர்ணா செய்தனர். இதில் பா.ச.க. தலைவர் சுஷ்மா சுவராஜ், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் பிருந்தா காரத் முதலானோர் கலந்து கொண்டனர். பிருந்தா காரத் அதே நாளில் அயலுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுடன் குழந்தைகளின் தாத்தா பாட்டிகள் சந்திக்க ஏற்பாடு செய்தார். இதற்கு முன்பே, இந்திய அரசு இச்சிக்கலைத் தீர்ப்பதற்காக மதுசூதன் கணபதி என்பவரை சிறப்புத் தூதராக நார்வே நாட்டுக்கு அனுப்பியது.

அனுரூப்பன் தம்பி அருணபாஸ் கொல்கத்தாவில் பல் மருத்துவராக உள்ளார். திருமணமாகாதவர். அண்ணனின் குழந்தைகளுக்கு ஏற்பட்ட சிக்கலைத் தீர்ப்பதில் உதவியாக இருப்பதற்காக அருணபாஸ் நார்வே சென்றார். அங்குக் குழந்தைப் பாதுகாப்புப் பணி நடுவத்தின் அதிகாரிகளுடன் பேசினார். நார்வே நாட்டு அதிகாரிகளும் இந்திய அதிகாரிகளும் கூடிப் பேசினர். இவற்றின் விளைவாக இரு குழந்தைகளை யும் சித்தப்பா அருணபாசின் பொறுப்பில் கொல்கத் தாவில் வளர்வதற்காகக் குழந்தைகளை இந்தியா வுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்த நீதிமன்ற இறுதி விசாரணை 23.3.2012 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

2012 சனவரி 20 அன்று நார்வே அரசு, இக் குழந்தைகள் இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு இவர் கள் நல்ல முறையில் வளர்க்கப்படுவார்கள் என்பதை உறுதி செய்யும் வகையில் உள்ள இந்தியச் சட்டங்கள், இவற்றைச் செயல்படுத்துவதற்காக உள்ள நிறுவன அமைப்பு முறைகள் முதலான விவரங்கள் கொண்ட அறிக்கையை மார்ச்சு 23க்கு ஒரு கிழமைக்கு முன்பாக அளிக்க வேண்டும் என்று கோரியது. ஆனால் அவ்வாறான அறிக்கையை இந்தியா அளிக்கவில்லை.

இதற்கிடையில், அனுரூப் - சகாரிகா இணையர் தங்கள் குழந்தைகளைப் பொறுப்புடன் வளர்க்கவில்லை என்பதை, நார்வே குழந்தைப் பாதுகாப்புப் பணி நடுவத்தின் ஆட்கள் ஆறுமாதங்கள், அவர்களின் வீட்டைக் கண்காணித்து அளித்த அறிக்கையின் பேரில்தான் குழந்தைகளைப் பெற்றோரிடமிருந்து பிரித்துக் காப்பகத்தில் சேர்த்துள்ளனர் என்ற செய்தி வெளியாயிற்று. சிறுவன் அபிக்யான் விளையாட்டுப் பள்ளியில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வதை யும், தனது கைகளை சினத்துடன் தரையில் அடிப்பதையும் கண்ட ஆசிரியர்கள், குழந்தையின் மாறுபாடான மனஇயல்பு குறித்து, குழந்தைகள் பாதுகாப்புப் பணி நடுவத்திற்குத் தெரிவித்தனர். அதன்பின் அந்நடுவத்தின் அதிகாரிகள் அவனின் பெற்றோரிடம் விசாரித்தனர். மாறுபாடான மன இயல்புடன் அபிக்யான் இருப்பதை அவர்களும் ஒத்துக் கொண்டுள்ளனர். குழந்தைகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் பல அவர்கள் வீட்டில் இல்லை என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அனுரூப் குடும்பத்தை விசாரித்த ஆங்கிலப் பெண் அலுவலர் மிடில்டோன் என்பவர், அதிகார ஆணவத்தோடு செயல்பட்டுள்ளார். சகாரிகா என்கிற இந்தியத் தாயின் மனநிலையைப் புரிந்துகொண்டு, அவருக்கு அன்பும், ஆதரவும் அளிப்பதற்கு மாறாக, குற்றவாளி போல் கருதி, தன்னுடைய அறிக்கையை எழுதி இருக்கிறார் என்ற நார்வே நாட்டின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களே கூறுகின்றனர்.

19.3.2012 காலை அனுரூப்புடன் சகாரியா கடுமையாகச் சண்டை போட்டுள்ளார். அனுரூப்பைக் கையால் அடித்துள்ளார். நகங்களால் அவர் முகத் திலும் கைகளிலும் கால்களிலும் கடுமையாகக் கீறி உள்ளார். பெருங் கூச்சலுடன் சண்டையிட்டதால், அக்கம்பக்கத்து வீட்டினர் எட்டிப்பார்த்தனர். அப்போது சகாரிகா தன் கணவர் தன்னை அடிப்பதாகக் கூச் சலிட்டுள்ளார். நார்வேயில் உள்ள தம்பி அருணபாஸ், அனுரூப் குடும்பத்தின் மனநல மருத்துவர் மூலம் சகாரியாவை அமைதிப்படுத்த ஏற்பாடு செய்தார். அம்மருத்துவரிடமும் மனநோயாளி போல் தொலை பேசியில் கூச்சலிட்டுள்ளார்.

எனவே அனுரூப் மார்ச்சு 19 அன்றே குழந்தைகள் பாதுகாப்புப் பணி நடுவத்தின் தலைவரைச் சந்தித்து, “என் மகனின் மனக்குழப்பத்தையும் என் குடும்பச் சிக்கலையும் உங்களிடமிருந்து மறைத்துவிட்டேன். குழந்தைகள் வீட்டிற்குத் திரும்பிவர வேண்டும் என் பதற்காக உண்மைகளைக் கூறாமல் மறைத்தேன். என் மனைவி நீண்ட நாட்களாக மனநிலை சரி இல்லாமல் இருந்து வருகிறார். ஊடகங்களில் வெளியான செய்திகள் அவரை மேலும் பாதித்துள்ளன. ஒரு சிறுமி யைப் போல் மனம் போனபடி நடந்து கொள்கிறார்” என்று கூறினார். குழந்தைகள் இந்தியாவுக்குத் திரும்புவதை இது மேலும் சிக்கலாக்கியுள்ளது.

முற்றிலும் வேறுபட்ட இன, மத, மொழி, கலாச்சாரப் பின்னணியில் வளர்த்த பெற்றோர்களும் அவர்களின் குழந்தைகளும் நார்வே நாட்டின் சட்டத் திட்டங்களின் சூழ்நிலையுடன் ஒன்று கலந்து விட முடியாது என்கிற உண்மையை நார்வே அதிகாரிகள் உணர்ந்து அனுரூப் - சகாரிகா இணையரின் குழந்தைகள் வளர்ப்புச் சிக்கலில் இவ்வளவு கடுமையாக நடவடிகை எடுத்திருப்பதைத் தவிர்த்திருக்க வேண்டும். கடுங்குளிர், வேலை வேலை யென்று பெரும் பகுதிநேரம் வீட்டில் இல்லாத கணவன், இரண்டு குழந்தைகளை வளர்க்க வேண்டிய, முற்றிலுமான அந்நியப்பட்டச் சூழல் ஆகியவற்றால் இளம் தாய் சகாரிகா மனஉளைச்சலுக்கு உள்ளாவது இயல்பே. வெளிநாடுகளில் வாழும் மனைவியருள் பல பேர்க்கு இச்சிக்கல் இருக்கிறது. உலகமயத்தால் விளையும் கேடுகளுள் இதுவும் ஒன்று. இந்தியாவில் மட்டும் என்ன வாழ்கிறது? பெரும்பாலான குடும்பங்களில் பெண்கள் நல்ல அடிமையாக இருப்பதற்கும் கடுமையாக உழைப் பதற்கும் அணியமாக இருந்தால் மட்டுமே நல்ல மனைவி, நல்ல மருமகள் என்று பெயரெடுக்க முடியும்.

நார்வே போன்று அய்ரோப்பாவில் உள்ள பெரும் பாலான நாடுகளிலும் கனடா போன்ற நாடுகளிலும் பிறந்தது முதல் குழந்தைகள் நல்ல தூய்மையான சூழலில் குழந்தைகளுக்கே உரிய சுதந்தரத்துடனும் உரிமையுடனும் ஊக்கமான மன எழுச்சியுடனும் வாழ் வதற்கு அரசுகள் உரிய திட்டங்களைச் செயல்படுத்து கின்றன. ஒரே தரமான கல்வியையும், மருத்துவ ஏந்துகளையும் இலவசமாக அரசுகள் அளிக்கின்றன. இந்தியாவில் இத்தகைய நிலை இல்லை. அதனால் நார்வே நாட்டின் நடவடிக்கை நமக்கு எரிச்சலூட்டு வதாக இருக்கிறது.

இந்தியாவில் பிறப்பின் அடிப்படையிலான சாதி யமைப் பின் காரணமாக, ஒரு மனிதன் இன்னொரு மனிதனைத் தனக்குச் சமமானவனாகக் கருதுகின்ற, நடத்துகின்ற நிலை இன்னும் உண்டாகவில்லை. அதனால்தான் சாதி அமைப்பு நீடிக்கின்ற வரையில் இந்தியாவில் உண்மையான சனநாயகம் மலராது என்று மேதை அம்பேத்கர் அடித்துச் சொன்னார். சாதி அமைப்பின் காரணமாக ஆண்களிடம் குடிகொண் டுள்ள ஆதிக்க மனப்போக்கு, தங்கள் குடும்பத்தில் பெண்களையும் குழந்தைகளையும் தமக்குக் கட்டுப்பட்டு அடங்கி நடக்குமாறு கட்டாயப்படுத்துகிறது. இதனால் குழந்தைகளின் கற்பனைச் சிறகுகள் முறிக்கப்படுகின்றன. குழந்தைகளின் தன்னெழுச்சியான சிந்தனைகளை பொசுக்கப்படுகின்றன.

இந்தியாவில் குழந்தைகள் - சிறுவர்கள் நலத்திற் காக - மேம்பாட்டிற்காக அரசுகள் செயல்படுத்திவரும் திட்டங்களால் சிறிதளவே பயன் கிடைத்துள்ளது. பெரும்பான்மையான குழந்தைகளுக்கும் மக்களுக் கும் அடிப்படையான வசதிகள், சுதந்தரம் பெற்று அறுபது ஆண்டுகளுக்குப் பின்னும் கிடைக்காமல் இருக்கின்றன. 2011ஆம் ஆண்டில் அய்க்கிய நாடுகள் மன்றம் வெளியிட்டுள்ள மனிதவள மேம்பாட்டு அறிக்கையில் 184 நாடுகளில் இந்தியா 137ஆவது இடத்தில் பின்தங்கியுள்ளது. நார்வே நாடு உலகில் முதல் இடத்தில் இருக்கிறது. உலகப் பட்டினிக் குறியீட்டில் (Global Hunger Index) 81 நாடுகளில் இந்தியா 67ஆவது இடத்தில் - உலகிலேயே அதிகமான பட்டினிப் பட்டாளத்துடன் இருக்கிறது.

இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் 47 விழுக் காடு குழந்தைகள் எடை குறைவாகப் பிறக்கின்றன. 5 அகவைக்கு உட்பட்ட குழந்தைகளில் 42 விழுக்காடு குழந்தைகள் ஊட்டச்சத்துக்குறைவால் வளர்ச்சி குன்றி இருக்கின்றன. இது தேசிய அவமானம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறுகிறார்.

2011ஆம் ஆண்டு மக்ள் தொகைக் கணக்கு எடுக்கப்பட்டது. வீடுகளின் வகைப்பாடு, அவற்றில் வார்வோரின் வாழ்க்கைத் தரம் ஆகியவை பற்றிய புள்ளி விவரங்களை மக்கள் கணக்கெடுப்பு ஆணையம் 2012 மார்ச்சு மாதம் வெளியிட்டது. இந்திய அளவில், வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாததால் 49.8 விழுக் காட்டு பேர் திறந்தவெளியைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் 63.2 விழுக்காடு வீடுகள் செல்பேசி வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் 45.7 விழுக்காட்டு பேர் திறந்தவெளியில்தான் மலம் கழிக்கின்றனர். இதனால் பலவகையான சுகாதாரக் கேடுகளும் தொற்றுநோய்களும் ஏற்படுகின்றன.

இந்தியாவில் மொத்தம் 24.66 கோடி வீடுகள் உள்ளன. இவற்றுள் 32 விழுக்காடு வீடுகளுக்கு மட்டுமே பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி இருக்கிறது. 33 விழுக்காடு வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை. மேலும் மொத்த வீடுகளில் 37 விழுக்காடு வீடுகள், சமைக்கவும், புழுங்கவும், தூங்கவும் என எல்லா வற்றுக்கும் ஒரே அறை அல்லது கூடம் மட்டுமே கொண்டவையாகும். ஆனால் 47 விழுக்காடு வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டி உள்ளது. 3இல் 3 பங்கு வீடுகளில் சமைப்பதற்கு விறகு, சருகு, வறட்டி, அடுப்புக் கரி போன்றவையே பயன்படுத்துகின்றனர்.

நார்வே நாட்டில் இரண்டு இந்தியக் குழந்தைகளின் நலவாழ்வு குறித்து நார்வே நாட்டின் குழந்தைகள் நலவாழ்வு நடுவம் அதிகார மனப்பான்மையுடன் எடுத்த நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டிக்கின்ற நாம், மனிதவள மேம்பாட்டில் நார்வே முதல் இடத் திலும் இந்தியா 137ஆவது இடத்திலும் இருப்பதை மாபெரும் அவமானம் என்று உணர்வதில்லை ஏன்? தாராளமயம், தனியார்மயம் என்ற பெயரால் மக்கள் நலத்திட்டங்களுக்கு நடுவண் அரசும், மாநில அரசு களும் அளித்துவரும் நிதியை வேகமாகக் குறைத்து வருகின்றன என்கிற உண்மையை நாம் உணர்ந்து இந்நிலையைத் தடுத்திட வேண்டும்.

நார்வே நாடு, இந்தியக் குழந்தைகள் சிக்கலை இன்னும் மென்மையான, அன்பான, ஆதரவான போக்கில் கையாண்டிருக்க வேண்டும் என்று கண்டிக்கின்ற நாம், மனிதவள மேம்பாட்டில் முதல் இடத்தில் உள்ள நார்வே போன்ற அய்ரோப்பிய நாடுகளில் இருப்பது போன்ற நிலையை இந்தியாவிலும் விரைவில் உரு வாக்க வேண்டும் என்ற படிப்பினையைப் பெற வேண்டும். இந்நிலையை உருவாக்க வேண்டியது அரசுகளின் தலையாயக் கடமை என்பதை உணர்ந்து, மக்கள் அணிதிரண்டு, இந்நிலையை எய்தும் வரை யில் போராட வேண்டும்.

பின்குறிப்பு : நார்வே நாட்டின் குழந்தைகள் நலத் துறைத் தலைவர் கன்னெர் டாரிசென், “இந்தியக் குழந்தைகளின் பெற்றோரும் உறவினரும் கடந்த சில நாள்களில் தங்களின் நிலையைப் பலமுறை மாற்றிக் கொண்டுள்ளனர். அவர்களுக்குக் குழந்தைகளின் மேல் அக்கறை இல்லை. அதனால் அவர்களுடன் குழந்தைகளை இந்தியாவுக்கு இப்போது அனுப்ப முடியாது” என்று 22.3.2012 அன்று கூறினார். அதனால் 23.3.2012 அன்று நீதிமன்றத்தில் நடைபெற இருந்த விசாரணை கைவிடப்பட்டது.

நார்வே அரசு, சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து கொண்டிருக்காமல், குழந்தைகளை உடனடியாக சித்தப்பா அருணபாசுடன் கொல்கத்தாவுக்கு அனுப்ப வேண்டும்.

Pin It