தென்கொரிய நாட்டின் பன்னாட்டு நிறுவனமான போஸ்கோ (POSCO)வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது என்றும் போஸ்கோ ஒரிசா மாநிலத்தில் தொடங்கியுள்ள இரும்பு உருக்காலை, அனல்மின் நிலையம், துறைமுகம் அமைத்தல் ஆகிய பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள லாம் என்றும் 31.01.2011 அன்று நடுவண் அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் துறை அமைச்சர் செயராம் ரமேஷ் அறிவித்துள்ளார்.

2005ஆம் ஆண்டு போஸ்கோ நிறுவனம் ரூ.54,000 கோடி முதலீட்டில் ஒரிசா மாநிலத்தில் இரும்பு உருக்காலை, அனல் மின்நிலையம், அதற்கென தனியாக ஒரு துணைத் துறைமுகம் ஆகியவற்றை அமைப்பதற்கான ஒப்பந்தம் ஒரிசா அரசுடன் செய்து கொண்டது. இத்துறைமுகம் ஒரிசா வின் தலைநகர் புவனேசுவரிலிருந்து 100 கி.மீ. தொலைவில் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் பாராதீப் துறைமுகத்தையொட்டி அமைக்கப்படுகிறது.

இந்தியாவில் மிகப்பெருந்தொகை கொண்ட அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டம் இதுதான் என்று நடுவண் அரசு பெருமிதம் கொண்டது. மிகவும் பின்தங்கியுள்ள ஒரிசா மாநிலத்தை முன்னேற்றுவதற்கு இது வழிகோலும் என முதலமைச்சர் நவீன் பட்நாயக் புகழ்ந்தார். 2011ஆம் ஆண்டில் ஆண்டொன்றுக்கு ஒரு கோடி டன்னுக்கும் அதிகமான அளவில் இரும்பு உற்பத்தி இந்த ஆலையில் செய்யப்படும் என்று கூறினார்.

பழங்குடியினர், காட்டு வளத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் வளமான காட்டுப் பகுதிகள், வேளாண்மை, மேய்சல், மீன்பிடித்தல் தொழில் செய்து மக்கள் வாழும் பகுதிகள் அடங்கிய பல ஆயிரம் எக்டர் நிலத்தை ஒரிசா அரசு போஸ்கோ நிறுவனத்துக்கு அளித்திட நடவடிக்கை எடுத்தது. இப்பகுதிகளில் வாழும் 20,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு முறையான மறுவாழ்வு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்பட வில்லை. 2006ஆம்ஆண்டு நடுவண் அரசு, பழங்குடியி னர்க்குக் காடுகள் மீதான உரிமை குறித்த சட்டத்தை இயற்றியது. ஆனால் இச்சட்டடத்திற்கு நேர் எதிராக, ஒரிசா அரசு, காவல் துறையை ஏவிப் பழங்குடி மக்களை விரட்டிட முயன்றது. மேலும் சுற்றுச்சூழல் - காடுகள் துறை விதித்துள்ள விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டு போஸ்கோ நிறுவனத்துக்கு நிலம் வழங்கப்பட்டது.

எனவே போஸ்கோ எதிர்ப்புப் போராட்டக் குழு என ஒன்று அமைக்கப்பட்டது. காட்டுப் பகுதியிலும், தாம் வாழும் பகுதிக்குள்ளும், ஒரிசா அரசின் வருவாய்த் துறையினரோ, காவல் துறையினரோ, போஸ்கோ நிறுவன ஆட்களோ நுழைய முடியாதவாறு தடைகளை எழுப்பி, மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்களும் இப்போராட் டத்துக்கு ஆதரவளித்தன. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். போஸ்கோ நிறுவனம், இரும்பு உருக் காலை - தனியார் துறைமுகம் அமைப்பதில் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளனவா என்று ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.

இதையொட்டி என்.சி. சக்சேனா குழு அமைக்கப்பட்டது. இக்குழு அளித்த அறிக்கை போஸ்கோ நிறுவனத்துக்கு ஆதர வாக இல்லாததால் மீனா குப்தா என்பவர் தலைமையில் மற்றொரு குழு அமைக்கப்பட்டது. இக்குழு 2009 திசம்பரில் அறிக்கை அளித்தது. சட்டவிதிகள் பல மீறப்பட்டுள்ளதாக இக்குழுவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியது.

காடுகளின் நிலத்தை வேறுதிட்டங்களுக்கு ஒதுக்கும்போது, அப்பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் பங்கேற்கும் தன்மையிலான ஊர் அவைகளைக் கூட்டி, அத்திட்டம் குறித்து அவர்களிடம் தெரிவித்து, அவர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று 2006ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பழங் குடியினர் உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, இதுபோன்று, ஊர் அவை ஒப்புதல் பெறப்படவில்லை என்று கூறி நடுவண் அரசின் காடுகள் - சுற்றுச்சூழல் அமைச்சகம் போஸ்கோ திட்டத்தின் செயற்பாடுகளை நிறுத்தி வைக்குமாறு ஒரிசா அரசுக்கு ஆணையிட்டது.

2004ஆம் ஆண்டு மன்மோகன்சிங் தலைமை அமைச் சரானது முதல், காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் முழுப் பொறுப்பும் கொண்ட துணை அமைச்சராகச் செயராம் ரமேஷ் இருந்து வருகிறார். தாராளமயம், தனியார்மயம் அடிப் படையில் முதலாளியப் பெருங்குழுமங்கள் அமைக்கின்ற திட்டங்களுக்குத் தடையில்லாச் சான்று தரும் பொறுப்பில் இருப்பவர் இவர். இயற்கையின் சுற்றுச்சூழலும், மக்களின் வாழ்வுரிமையும் பாதிக்கப்படுவது பற்றி மிகவும் கவலையடை பவர்போல அவ்வப்போது முழங்குவார். ஒரே வரியில் இவரைப் பற்றிச் சொல்ல வேண்டுமாயின், பாலுக்குக் காவலன் போல் நடித்துக் கொண்டே பூனைக்குத் துணைபோகும் கலையில் வல்லவர். நாட்டின் விரைவான பொருளாதார வளர்ச்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய இரண்டுக்கும் இடையிலான பாதையில் நடக்க வேண்டிய பொறுப்புத் தனக்கு இருப்பதாக - தன்னுடைய முதலாளிய ஆதரவு போக்கிற்கு விளக்கமளிக் கிறார்.

ஒரிசாவின் முதல்வர் நவீன்பட்நாயக் போஸ்கோ, வேதாந்தா போன்ற பன்னாட்டு பெருமுதலாளியக் குழுமங்களின் உற்ற தோழர். பா.ச.க.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் இருந்தார். இப்போது பிஜு ஜனதாதளம் - அவரது தந்தையின் பெயரி லான கட்சி - தனித்துப் போட்டியிட்டு வென்று முதல்வராக உள்ளார். இந்தியாவின் வளங்களைப் பெருமுதலாளியக் குழுமங்கள் கொள்ளையடிப்பதற்கு வழியமைத்துத் தருவதில், காங்கிரசு, பா.ச.க. பிஜு ஜனதாதளம், மதச்சார்பற்ற ஜனதா தளம் (பீகார்) பகுஜன் சமாஜ் கட்சி, தி.மு.க., அ.தி.மு.க., சமாஜ்வாதி கட்சி (முலாயம்சிங்), இராஷ்டிரிய ஜனதா தளம் (லாலுபிரசாத்) தெலுங்குதேசம் என இந்திய அளவிலான - மாநில அளவிலான எல்லா அரசியல் கட்சிகளும் ஒரே மாதிரியாகவே செயல்படுகின்றன.

பிரதமர் மன்மோகன் சிங் தென்கொரிய நாட்டின் தலை நகர் சியோலுக்கு சென்றபோதும் ஜி-20 நாடுகள் மாநாட்டில் கலந்துகொள்ள ஹனாய் சென்றபோதும், தென்கொரியாவின் குடியரசுத் தலைவர் லீ மையங்-பேக், இந்தியாவில் போஸ்கோ நிறுவனம் செயல்படுவதற்குள்ள தடைகளை நீக்குமாறு மன்மோகன்சிங்கிடம் கோரினார். மன்மோகன்சிங் உயிர் மூச்சுக் கொள்கையும் இதுதானே!

2010 அக்டோபர் மாதம் ஒரிசா அரசு, போஸ்கோ இரும்பு உருக்கு ஆலை, துறைமுகம் அமைப்பதற்கு, கிராம அவைகளின் சார்பில் ஒப்புதல் அளிப்பதாக நடுவண் அரசுக்கு உறுதிமொழி மடல் அனுப்பியது. இதை ஏற்றுக்கொண்டு, நடுவண் அரசின் காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் உருக்காலைக்கு 28 நிபந்தனைகளையும், துறைமுகத்திற்கு 32 நிபந்தனைகளையும் விதித்து, போஸ்கோ மீது விதித் திருந்த தடையை நீக்கியது. மேலும் 2007 சூலை 17 அன்று விதித்த நிபந்தனைகளையும் போஸ்கோ நிறுவனம் நிறை வேற்ற வேண்டுமென்று அமைச்சர் செயராம் ரமேஷ் கூறியிருக்கிறார்.

போஸ்கோ நிறுவனத்தின் மீது இவ்வளவு நிபந்தனை களை விதித்துக் கிடுக்குப்பிடி போட்டிருப்பது போல் தோன்றும். ஆனால் இவையனைத்தும் கண்துடைப்பு நாடகமே. சிறுவர்களின் ‘திருடன் - போலீசு’ விளையாட்டுப் போன்றது இது. மக்களை ஏமாற்றுவதற்காகவே இந்த நாடக விளையாட்டு!

இந்தியாவில் பிறந்து இலண்டனை நிலையான வாழ்விட மாகக் கொண்டுள்ள உலகப் பெரும் பணக்காரர்களில் ஒரு வரான சுனில்மிட்டலின் வேதாந்தா குழுமம் ஒரிசாவில், லான்ஞ்சர் அலுமினிய சுத்திகரிப்பு ஆலையை அடைத்து, நியாமகிரி மலையையும், அதைச் சுற்றியுள்ள காடுகளையும் விழுங்கிக் கொண்டிருக்கிறது. நியாமகிரிமலையைத் தங்கள் தெய்வமாக வழிபடும் டோங்கரா கோந்த் பழங்குடி இனமக்கள் வேதாந்தா அலுமினிய ஆலையை எதிர்த்துப் போராடி வரு கின்றனர். கோந்த் பழங்குடியினரின் மொத்த எண்ணிக் கையே 8000 தான்.

வேதாந்தா நிறுவனம் உற்பத்தி செய்ய அனுமதிக்கப் பட்ட அளவைப்போல் ஆறு மடங்கு சட்ட அனுமதி பெறாமல் அலுமினியம் உற்பத்தி செய்கிறது. வேதாந்தாவின் வரி ஏய்ப்புக்கும் பெருங்கொள்கைக்கும் இதுவழிவகுத்துள்ளது. ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பைவிட அதிக நிலங்களை ஆக்கிரமித் துள்ளது. மனித உரிமை, நிலம், நீர், காற்று மாசடைதல் குறித்த எல்லா விதிகளையும் புறக்கணித்து வருகிறது. எனவே வேதாந்தா நிறுவனத்துக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். மக்கள் போராட்டத்தைத் தணிக்க, அரசு தடைவிதித்து நாடகம் நடத்தியது. இப்போது போஸ்கோவைப் போலவே வேதாந்தாவும் செயல்படுவதற்கு அரசு அனுமதி அளித்துவிட்டது.

1991இல் இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை யை நடைமுறைப்படுத்துவதற்கு முன்வரை, கனிமச்சுரங் கங்கள் பொதுத்துறை நிறுவனங்களாகவே இருந்தன. கனிமவளம் கொழிக்கும் - ஆனால் மிகவும் பின்தங்கிய பீகார், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மாஃபியா கும்பல்கள் திருட்டுத்தனமாகச் சிறிய அளவில் கனிமங்களை வெட்டியெடுத்து வந்தன. அல்லது பொதுத்துறை நிறுவனங் களில் கொள்ளையடித்தன.

தாராளமய, தனியார்மயக் கொள்கைகளின் செயல்பாட் டின் ஒரு பகுதியாக, நடுவண் அரசு, 1993இல் தேசியக் கனிமக் கொள்கையை (National Mineral Policy) வகுத்தது. இதன்படி, தனியார் நிறுவனங்கள், கனிம வளங்கள் உள்ள பகுதிகளைக் கண்டறியவும் தோண்டி எடுக்கவும் அனுமதிக் கப்பட்டது. இரும்புத்தாது, மங்கனீசம் தாது, குரோமியத்தாது, கந்தகம், தங்கம், வைரம், தாமிரம், ஈயம், துத்தநாகம், மாலிப் டினம், டங்ஸ்டன், நிக்கல், பிளாட்டினம் ஆகிய முதன்மை யான 13 கனிமங்களின் சுரங்கத் தொழிலில் தனியார் முதலீடு செய்ய அரசு அனுமதித்தது. இம்முதலீட்டு வரம்பு முதலில் 49 விழுக்காடாக இருந்தது. வழக்கம்போல் பிறகு 100 விழுக்காடாக உயர்த்தப்பட்டது.

2010இல் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கனிமங்களின் மொத்த மதிப்பில் 70 விழுக்காடு பொதுத்துறை நிறுவனங் களின் பங்காகும். ஆனால் கனிம வளங்கள் மீதான ஆதிக் கமும், அவை தொடர்பான தொழில்களும் பெருமுதலாளி களிடம் சென்று கொண்டிருக்கின்றன. கையூட்டுப் பெற்றுக் கொண்டு, அரசியல்வாதிகளும் உயர் அதிகாரிகளும் காவல் துறையின் துணையுடன், சுரங்கத் தொழில் தனியார்மய மாவதை வேகப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

ஒரிசா மாநிலத்தில் மொத்தம் 341 சுரங்கங்களில் கனி மங்கள் வெட்டியெடுக்கப்படுகின்றன. 2010 மே மாதக் கணக் கின்படி. அரசின் தடையில்லாச் சான்றை முறைப்படி பெறாம லோ சுரங்கம் தோண்டுதல் பற்றிய திட்டத்தை அரசிடம் அளிக்கா மலோ 241 சுரங்கங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவையே அரசியல்வாதிகளின் பணச்சுரங்கமாக உள்ளன.

ஜார்கண்டில் முதலமைச்சராக இருந்த மதுகோடா, அரசின் அனுமதியின்றிக் காடுகளில் கனிம வளங்களை வெட்டி யெடுக்கத் துணைபோனதால் அரசுக்கு ரூ.4300 கோடி இழப்பு ஏற்பட்டது என்பது கண்டறியப்பட்டது. நடுவண் அரசின் புலனாய்வுத் துறை மதுகோடா வீட்டில் ஆய்வு செய்த போது ரூ.2000 கோடிக்குப் பணமாகவும் தங்க நகைகளாகவும் கைப்பற்றப்பட்டது. இவ்வளவு பெருந்தொகையை வீட்டில் வைத்திருக்கும் அளவுக்கு மதுகோடா போன்ற அரசியல் வாதிகளுக்கு எங்கிருந்து துணிவு வந்தது?

இந்தியாவில் கனிமங்கள் வெட்டி எடுக்கப்படும் எல்லா மாநிலங்களிலும் இத்தகைய விதிமீறல்களும், சுரண்டல்களும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் அரசுகளிடம் முறைப் படி ஒப்புதல் பெற்று 8700 சுரங்கங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் அரசிடம் அனுமதி பெறாமல் - சட்டத்திற்கு எதிரான வகையில் கள்ளத்தனமாக 15,000 சுரங் கங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன (ஃபிரண்ட் லைன், 2010 சூலை 16). அதாவது ஒரு குறிப்பிட்ட பகுதியில் கனி மங்கள் வெட்டியெடுக்க அரசிடம் ஒப்புதல் பெற்றுக்கொண்டு, அதன்பின் அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், அமைச் சர்களின் கள்ளக் கூட்டுடன் சுற்றிலும் உள்ள பெரும் பகுதியைக் கைப்பற்றிக் கொண்டு, கனிமங்களைக் கொள்ளையடிப்பது நடந்து வருகிறது. கடந்த இருபது ஆண்டுகளில் இது ஆண்டிற்கு ஆண்டு அதிகமாகி வருகிறது.

இவ்வாறு வளர்ந்தவர்கள்தாம் பெல்லாரி ரெட்டி சகோ தரர்கள். கருநாடகத்தில் ஆந்திர மாநிலத்தின் எல்லையை யொட்டியுள்ள பெல்லாரி மாவட்டத்தில், ‘காலி’ ரெட்டி சகோத ரர்கள் என்று அழைக்கப்படும், கருணா கரரெட்டி, ஜனார்த்தன ரெட்டி மற்றும் சோமசேகரரெட்டி ஆகிய மூவரும் பெல்லாரி யில் ‘தாதா அரசு’ நடத்துகின்றனர். கருநாடக அரசியலையே தீர்மானிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருக்கின்றனர். இதேபோன்ற ஆந்திர அரசியலிலும் பெரும் ஆதிக்கம் செலுத்து கின்றனர்.

இவர்கள் மூவரும் கருநாடக எடியூரப்பா ஆட்சியில் அமைச் சர்களாக இருக்கின்றனர். இவர்களைத்தன் ஆதிக்கத்தின்கீழ் கட்டுப்படுத்தி வைத்திட எடியூரப்பா முயன்றார். ஆனால் ரெட்டி சகோதரர்கள் எடியூரப்பாவை முதலமைச்சர் நாற்காலியி லிருந்து தூக்கியெறியுமளவுக்குச் சென்றனர். பா.ச.க.வின் தலைமையகம் தலையிட்டு எடியூரப்பாவைக் காப்பாற்றியது. ரெட்டி சகோதரர்கள் அமைச்சர்களாக நீடிப்பதை முதல்வர் எடியூரப்பாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பா.ச.க. தலைவர் நிதின்கட்கர், “அடே! மடையா எடியூரப்பா, ரெட்டி சகோதரர்கள் கோடிக்கணக்கில் வாரி இறைத்த பணத்தால்தான், கருநாட கத்தில் முதல் தடவையாக பா.ச.க. ஆட்சியில் அமர முடிந்தது. இவர்களைச் சீண்டும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலை யைப் பார்” என்று கூறினார். இது செய்தி ஏடுகளில் வெளிவந்தது.

சத்தீஷ்கர் மாநிலத்தில் பா.ச.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதலமைச்சர் இராமன் சிங், யானைகள் வாழ்வதற்கென வரையறுக்கப்பட்ட காட்டுப் பகுதிகளைச் சுரங்கம் வெட்ட ஒதுக்கியிருக்கிறார்.

அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான நடுவம் எனும் மக்கள் நல அமைப்பு 2008ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கை யில், கடந்த 45 ஆண்டுகளில் சுரங்கங்களைத் தோண்டிய தன் காரணமாக 2.5 கோடி மக்கள் அவர்களின் வாழ்விடங் களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இவர்களில் 25 விழுக்காட்டி னருக்குக்கூட முறையான மறுவாழ்வு அரசால் அளிக்கப்பட வில்லை. கனிமங்களை வெட்டி எடுத்தல், அவற்றை ஆலை களில் சுத்திகரித்தல் முதலானவற்றால் ஓராண்டில் 200 கோடி டன் கழிவு ஏற்படுகிறது. இவை முறையாக அகற்றப் படாமல் அப்படியே கிடப்பதால் நிலம், நீர், காற்று ஆகியவை மாசடைகின்றன. அதனால் அப்பகுதி மக்கள் பல நோய் களுக்கு ஆளாகித் துன்புறுகின்றனர். போபாலில் பன்னாட்டு நிறுவனமான யூனியன்கார்பைடு பூச்சிமருந்து ஆலையின் கழிவுகளால் 25 ஆண்டுகளாகப் பல நோய்த் துன்பங்களுக்குள்ளாகி வருகின்றனர்.

இந்தியாவில் மொத்தம் 86 வகையான கனிமங்கள் வெட்டியெடுக்கப்படுகின்றன. ஓராண்டில் வெட்டியெடுக்கப்படும் கனிமங்களின் மொத்த மதிப்பில் 60 விழுக்காடு ஆந்திரம், ஒரிசா, சத்தீஷ்கர், ஜார்கண்ட் ஆகிய நான்கு மாநிலங்களில் எடுக்கப்படும் கனிமங்களிலிருந்து கிடைக்கிறது. எனவேதான், இம்மாநிலங்களின் அரசுகளின் துணையுடன் பெருமுதலாளியக் குழுமங்கள் கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதை எதிர்த்து மாவோயிஸ்டுகள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.

கனிம வளங்கள் மட்டுமின்றி, நாட்டின் நிலம், மலைகள், காடுகள், ஆறுகள், கடற்கரைப் பகுதிகள், எண்ணெய் வளங்கள் முதலான இயற்கை வளங்கள் தாராளமயம், தனியார்மயம் என்ற போர்வையில் பெருமுதலாளியக் குழுமங்கள் கொள்ளையடிப்பதை மக்கள் போராட்டங்கள் மூலமே முறியடிக்க முடியும்.

Pin It