நீ
இருளைக் குடித்து
ஒளிர்ந்த நிலவு
பசியைத் தின்று
பாலூட்டிய தாய்!
மகாத்து மாக்களுக்கு
மாறாத தலைவலி
இந்துத்வ வாதிகட்கு
எப்போதும் இடுப்புவலி
எங்களுக்கோ
எதிரிகளை வேட்டையாடும்
சிறுத்தைப் புலி
வீதியில் தடை; சுடுகாட்டுப்
பாதையில் தடை
பறை அடித்தோம் - பாடைப்
பிணம் எரித்தோம்
“ஆதிமுதல் அரசன் நீ,
அடிமையல்ல!”
என எம்மைத்
தடுத்தவன் நீ!
எம் நெஞ்சை வென்றே
எடுத்தவன் நீ!
சாதிக் கொழுப்பெடுத்த
சனாதனியர்க்குச்
சவத்துணிகள் நெய்து
கொடுத்தவன் நீ!
நீ
அறிவுச் சொத்துரிமைக்கு
விலங்குமாட்டிய
அதிகாரத் தரகர்க்குச்
சம்மட்டி அடி!
எமக்கோ
அன்பின் தாய்மடி!
எங்கள் தலைமுறைக்குத்
தொப்புள் கொடி!
அந்தோ!
புதையல் கிடைத்தும்
பிச்சை எடுக்கிறோம்!
கருவூலம் கிட்டியும்
கையேந்துகிறோமே!

- தமிழேந்தி

Pin It