அண்ணல் அம்பேத்கரின் பேரன் திரு. பிரகாஷ் அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு அரசிய லில் அதாவது நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் உள் ளிட்டத் தேர்தல்களில் அளிக்கப்படும் இடஒதுக்கீட்டை நீக்கிவிட வேண்டும் என்று 8.10.2014 அன்று நாக்பூரில் கூறி உள்ளனர். ஏனெனில் பெரிய அரசியல் கட்சிகளின் சார்பில் நிற்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் பொதுத் தொகுதிகளிலும் வெற்றி பெறுகிறார்கள் என்றும், மக்கள் சாதியைப் பாராமல் வாக்களிக்கவும் தொடங்கி உள்ளதால், அரசியலில் இடஒதுக்கீட்டை நீக்கும் தருணம் உருவாகி உள்ளதாகவும் அவர் கூறி உள்ளார்.

ஆனால் சமூகத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் இன்றும் தாழ்வாகவே மதிக்கப்படுவதால், கல்வியி லும், வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு தொடர வேண்டும் என்று அவர் கூறி உள்ளார். மேலும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களில் உள்ள அறிஞர்கள், அரசு மற்றும் சமூகப் பணிகளில் சேர்ந்து, தங்கள் நிலைகளை உறுதிப்படுத்திக் கொண்டு உள்ளனர் என்றும், ஆனால் அண்ணல் அம்பேத்கருடன் சேர்ந்து, பணியாற்றியவர்களைப் போன்று, துணிச்சலுடன் செயல்படவில்லை என்றும் அவர் கூறினார். இவர்கள் துணிச்சலை வளர்த்துக் கொண்டால், பெரிய அரசியல் கட்சிகளின் உதவி இல்லாமலேயே கூட, பொதுத் தொகுதிகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் வெற்றி பெறும் வலிமையை வளர்த்துக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களில் கணிசமானோர் முன்னேறி உள்ளனர் என்றும், இப்பொழுது வகுப்பு வழியான கொடுமைகள் என்பவை தனிப்பட்ட மனி தர்கள் மீதான கொடுமைகளாக மாற்றம் கண்டுள்ளன (A thin transformation from community atrocities to individual atrocities has occurred) என்றும், இது மிகப்பெரிய மாற்றம் என்றும், காலப்போக்கில் இவை யும் முடிவுக்கு வந்துவிடும் என்றும் அவர் கூறி உள்ளார்.

ஆனால் அவர் கூறியவற்றில் உண்மை இல்லை என்பதை விளக்கும் நிகழ்வுகள் நடந்தபடியே தான் உள்ளன. தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் தனிப்பட்ட முறையில்தான் தாக்கப்படுகின்றனர் என்று அவர் நாக்பூரில் கூறிய அந்த நாளிலேயே அகமதாபாத்தில் உயர்சாதிக் கும்பலைச் சேர்ந்த 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சிலர் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 18 வயது இளைஞரைத் தாக்கிக் காயப்படுத்தி இருக்கின்றனர். அந்த இளைஞர் செய்த “குற்றம்” என்ன தெரியுமா? தன்னுடைய இரு சக்கர வாகனத் தில் மெஹால் வகேலோ (Mehul Vaghela) என்ற தன் முழுப்பெயரைப் பொறித்து வைத்து இருந்தாராம். அந்த இளைஞர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் வகேலா என்ற தன் இடுபெயரை (Christened name) மட்டும்தான் எழுதி இருக்க வேண்டு மாம். மெஹால் என்ற குடும்பப் பெயரை (Sur name) எழுதிக் கொள்ளும் உரிமை தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு இல்லையாம். இந்த “நீதி”யை நிலைநிறுத்தும் அதிகாரம் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், அவர்கள் உயர்சாதிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதற்காகவே பெற்று இருக்கிறார்கள்.

நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கையில் வகுப்பு வழியான தங்குதல்கள் இல்லை என்றோ, பெரிய அரசியல் கட்சிகள் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களைப் பொதுத் தொகுதிகளில் வேட்பாளராக நிறுத்தும் என்றோ எப்படி கற்பனை செய்ய முடிகிறது? இப்படி ஏதாவது நடந்தால் அது விதிவிலக்கு தானே தவிர வழக்கமான நடைமுறை அல்லவே?

பொதுத் தொகுதிகளை விட்டுவிடுங்கள். தாழ்த்தப் பட்ட வகுப்பினருக்கு என்றே ஒதுக்கப்பட்ட பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஊராட்சிகளிலே கூட சாதிய ஆதிக்கத்திற்கு அஞ்சி, மிகப்பெரிய அரசியல் கட்சிகளே தங்கள் வேட்பாளர்களை நிறுத்த மறுக்கும் அளவிற்கு நிலைமை உள்ளது. இப்படிப்பட்ட கேவல மான சூழ்நிலையில், இருக்கின்ற இடஒதுக்கீட்டை நீக்கிவிட்டால், இதுவரைக்கும் போராடிப் பெற்று இருக்கும் சிறு சிறு உரிமைகளும் பறிபோகும் வாய்ப்பு உருவாகுமே தவிர, தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் குறையவும், மறையவும் வாய்ப்பே இல்லை. அதுவும் பெரிய அரசியல் கட்சிகளின் ஆதரவு இல்லாமலேயே, தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் அரசியல் களத்தில் வெற்றிபெற முடியும் என்பது கற்பனைக்கும் மீறிய ஆசையாகும்.

தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களில் உள்ள அறிஞர்கள் அரசு மற்றும் சமூகப் பணிகளில் நுழைந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டு உள்ளனர் என்பது உண்மைதான். ஆனால் அவர்களின் எண்ணிக்கை அவர்களுடைய மக்கள் தொகையின் விகிதத் தைவிட மிகக் குறைவு என்ற கசப்பான உண்மையை மறைக்க/மறுக்க முடியாது.

இந்திய சமூகத்தின் வருண/சாதிய நோய்க்குச் சரியான மருந்து, விகிதாச்சாரப் பங்கீடு மட்டுமே. அரசியலில் மட்டும் அல்ல; கல்வி, உயர்கல்வி, அனைத்து நிலைகளிலும் உள்ள அரசு மற்றும் தனியார் வேலைகள், பெட்ரோல், எரிவாயு போன்று அரசு வழங்கும் முகவர் தொழில்கள், அரசு உரிமம் பெற்று நடத்தும் தொழில்கள் என அனைத்து சமூக, பொரு ளாதார நடவடிக்கைகளிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பி னர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மதசிறுபான்மையினர், முற்பட்ட வகுப்பினர் ஆகிய அனைத்து மக்களுக்கும், அவரவர் மக்கள் தொகை யின் விகிதத்தில் பங்கிட்டு அளிக்க வேண்டும். அப்படிச் செய்வது, அனைத்து வகுப்பு மக்களிலும் உள்ள திறமை மிகுந்த மக்கள் உயர்நிலைகளிலும், அனைத்து வகுப்பினரிலும் உள்ள திறமைக் குறைவானவர்கள் கீழ்நிலைப் பணிகளிலும் அமர்ந்து அவரவர் திறமைக்கு ஏற்ற வேலைகளைச் செய்து, நாட்டு முன்னேற்றத் திற்குப் பாடுபடுவதற்கும், நாட்டின் அமைதியைக் காப்பதற்குமான சரியான வழியாகும்.

நாட்டில் வருண/சாதிய ஆதிக்கம் மேலும் மேலும் வலுப்பெற்றுக் கொண்டு இருக்கும் இவ்வேளையில் திரு. பிரகாஷ் அம்பேத்கர் அரசியலில் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களுக்கான இடஒதுக்கீடு நீக்கப்பட வேண்டும் என்ற கூறி இருப்பது மிகவும் கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது.

-          இராமியா

Pin It