மறைந்த போராளி சசி பெருமாள் இல்லத்தில், ஒளி அஞ்சலியில் மா.பெ.பொ.க. தோழர்கள் பங்கேற்றனர்
தேசிய காங்கிரசில் 1954இல் இணைந்த இடங்கண சாலை மேட்டுக்காட்டுப் பெருமாள் அவர்கள், செ. கந்தசாமி-பழநியம்மாள் இணையரின் இரண்டாவது மகன் ஆவார். அவருடைய தமையனார் வெங்கடாசலம்; தம்பி செல்வம்; தங்கை கோவிந்தம்மாள். அக்குடும்பத்தினர் அனை வரும் தேசிய காங்கிரசு ஆதரவாளர்கள். இரண்டாவது மனைவி மகிளம்.
தம் பகுதியில் காங்கிரசு சார்பில் சிவாஜி மன்றத் தலைவராக விளங்கினார், பெருமாள். அவர் சசிகுமார், சசி கலா என்கிற நடிகர்களை அழைத்துத் தம் ஊரில் நாடகம் நடத்தினார். அந்நடிக இணையர் தம் வீட்டில் எரிக்காற்று உருளை வெடித்து அதனால் இறந்து விட்டனர். அவர்களின் நினைவைப் போற்றும் வகை யில் ‘சசி’ என்ற சொல்லைத் தம் பெயருடன் சேர்த்துக் கொண்டதால் - ‘சசி பெருமாள்’ என அழைக்கப்பட்டார்.
சேலம் மருத்துவர் பாலகிருஷ்ணன், “மதுவை ஒழிப்போம்; மக்களைக் காப்போம்” என்ற கொள்கையின் முன்னோடி ஆவார். அவரைப் பார்த்து மது ஒழிப்பில் அதி தீவிர உணர்வு பெற்றார், சசி பெருமாள். 2009இல் மது ஒழிப்புக் கோரி 19 நாள் உண்ணா நிலையிலிருந்தார். 2013 முதல் தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டார்; 32 நாள் உண்ணாநிலை மேற்கொண்டார். 2014இல் புதுதில்லியில் 42 நாள் போராடினார்.
2014 அக்டோபர், நவம்பர், திசம்பரில் - கன்னியா குமரியிலிருந்து சென்னை வரை 102 நாள்கள் மது ஒழிப்புப் பரப்புரைப் பயணத்தில் ஒருவராகப் பங்கேற்றார். மறைந்த அப்துல் கலாம் அவர்களின் உடலுக்கு 30.7.2015 அஞ்சலி செலுத்திய அவர், அங்கிருந்து நேரே உண்ணாமலைக் கடைக்கு வந்து, அவ்வூர் மக்கள் நடத்திய மதுக்கடை அகற்றும் போராட்டத்தில் பங்குகொண்டார்.
செல்லிடப்பேசி கோபுரத்தின் உச்சிக்கு ஏறிய அவரை 5 மணி நேரம் கடும் வெயிலில் அங்கேயே நிற்கவிட்டது - வேண்டும் என்றே சேலம் காவல் துறை அதிகாரிகள் செய்த திமிரான பழிதீர்க்கும் நடவடிக்கை.
அப்படிப் புறக்கணிக்கப்பட்ட அவர் பிணமாகவே கீழே இறக்கப்பட்டார்.சசி பெருமாள் மறைந்த செய்தி மூங்கில் காட்டுத் தீபோல் தமிழகம் எங்கும் பரவியது. தமிழ்த்தாய் மார்களும் ஆடவர்களும் மாணவர்களும் மாணவிகளும் தன்னெழுச்சி கொண்டு ‘டா°மா°க்’ கடைகளை எங்குப் பார்த்தாலும் தாக்கத் தொடங்கினர்.
சசி பெருமாள் குடும்பத்தினர் அவருடைய உடலை வாங்க மறுத்துத் தங்கள் வீட்டில் உண்ணாநோன்பை மேற்கொண்டனர். தமிழகத் தமிழர்கள் அவர்களின் துயரத் தைப் பங்குபோட்டுக் கொள்ள, அவ்வூரில் குவிந்தனர்.
மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் வே. ஆனைமுத்து, விழுப்புரம் மாவட்டச் செயலாளர் ஆ.கு. ஆறுமுகம், திருச்சி மாவட்டச் செயலாளர் இரா. கலியபெருமாள், சேலம் மல்லூர் மா.பெ.பொ.க. ஆதரவாளர் பிரபு மற்றும் ஆறு தோழர்கள் இணைந்த குழுவினர், 3-8-2015 திங்கள் மாலை 5.30 மணிக்கு மேட்டுக் காட்டை அடைந்தனர். சசி பெருமாள் குடும்ப உறுப்பினர்களுடன் - பெண்களும் ஆண்களும், மாணவ-மாணவிகளும், பல கட்சியினருமாக பெருமாள் வீட்டின் முன்னர் உள்ள திடலில், 600 பேர்கையில் காகிதக் கிண்ணத்தில் மெழுகுவர்த்தியை ஏற்றி ஒளி அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தனர். அவ் அஞ்சலியில் மா.பெ.பொ.க. வினர் பங்கேற்றனர்.
அத்திடலை ஒட்டி அரசுப் பள்ளி, அப்பள்ளிக்கு இடம் அளித்தோர் பெருமாள் குடும்பத்தினர். பள்ளியை ஒட்டிய பொதுச் சாலையில் வரிசையாக நின்று ஒளி அஞ்சலி செலுத்திட காவல் துறை அனுமதிக்காததைக் கண்டனம் செய்து பலரும் உரையாற்றினர். வே. ஆனைமுத்துவும் உரையாற்றினார். இரவு 7.30 மணிக்கு சசி பெருமாள் குடும்பத்தினரை நடையில் அமர வைத்து விவரம் கேட்டோம்.
அக்குடும்பத்துக்குச் சொந்தமாக 1.5 ஏக்கர், இறை வைப் பாசன நிலம் இருக்கிறது. ஆனால் கிணற்றில் தண்ணீர் இல்லை. குடும்பத்தாரின் துணைத் தொழில் விசைத்தறி நெசவு. அதிலும் வருவாய் இல்லை. சசி பெருமாள் சித்த மருந்து, ஓமியோபதி மருந்து அளிக்கும் வைத்தியராகவும் செயல்பட்டு வருவாய் தேடினார்.
சசி பெருமாள் முதலாவது மனைவியின் முதல் மகன் விவேக், இரண்டாவது மகன் நவநீதன் இருவரும் 8ஆம் வகுப்புக் கல்வி மட்டுமே பெற்றவர்கள். இரண்டா வது மனைவிக்கு ஒரு பெண் குழந்தை, கவி அரசி - 5ஆம் வகுப்பில் படிக்கிறார். அக்குடும்பத்தார் அனைவரும் தமிழ்நாட்டு 7.5 கோடி மக்களின் நலன் கருதி, மதுக் குடியை ஒழிப்பதில், சசி பெருமாள் குறிக்கோளை நிறை வேற்றுவதில் உண்மையில் தீவிரமாக உள்ளனர். அக்குடும்பத்தினரைத் தமிழக அரசினர் புறக்கணித் தால் அது பெரிய கொடுமை.
சசி பெருமாள் மேற்கொண்ட போராட்ட முறையைக் குறை கூறுவது தவறு. அந்த நிலைமைக்கு அவரையும் மற்றவர்களையும் ஆளாக்கியது இன்றைய அரசும், காவல் துறையுமே!
வெல்க சசி பெருமாள் கோரிக்கை!