1977-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தோழர் பாப்பாவை நான் முதன்முதலாக சந்தித்தேன். (அதற்கு முன்பு நான் சந்தித்த கட்சித் தலைவர் மைதிலி சிவராமன் மட்டுமே) நான் அப்பொழுதுதான் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்திருந்தேன். மாதர் அரங்கில் செயல்படவேண்டுமென கட்சியில் கூறி இருந்தார்கள். திருச்சி உறையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தோழர் பாப்பாவைச் சந்தித்தேன். பார்ப்பதற்கு ஒரு தலைமை யாசிரியை போலத் தோற்றமளித்தார். திருச்சியிலிருந்ததால் தோழர் பாப்பாவுடன் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் இணைந்து பணியாற்றும் அரிய வாய்ப்பு கிடைத்தது. கட்சி, மாதர் இயக்கம் மனிதர்கள் பற்றியெல்லாம் நிறைய அவரிடமிருந்து கற்றுக்கொள்ள முடிந்தது.

தோழர் பாப்பாவிடம் தலைமைப்பண்புகள் நிறைய இருந்தன என்றால் மிகையாகாது. அபாரமான ஞாபகசக்தி உடையவர். ஒவ்வொரு தோழரின் குடும்ப உறுப்பினரின் பெயரையும் மறக்காமல் நினைவில் வைத்து விசாரித்து நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்பவர். ஊழியர்களைக் குறிப்பாக அதிகம் கல்வி பெறாத / பெற இயலாத பெண்களை அரசியல் ரீதியாக வளர்த்தெடுத்ததில் முக்கியமான பங்கு ஆற்றியவர். ஊழியர்களின் பேச்சுத் திறன், எழுத்துத்திறன் போன்ற பிரத்தியேக திறன்களைக் கண்டறிந்து ஊக்குவிப்பார். கூட்டங்களில் எப்படிப் பேச வேண்டும், குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும் என்பது உட்பட சொல்லிக்கொடுப்பார். ஊழியர்கள் செயல்பாடு பற்றி தொடர்ந்து மதிப்பீடு செய்து அடுத்தக் கட்டத்திற்கு அவர்களைத் தயார்படுத்துவார்.

பேச்சாளராய்...

தோழர் பாப்பா சிறந்த பேச்சாளர். சூழலுக்கேற்ப பேசும் திறன் பெற்றிருந்தாலும் முறையாகக் குறிப் பெடுத்துக்கொள்ளுவார். நிறைய பழமொழிகளைப் பயன்படுத்துவார். அதனால் எளிமையாகவும் நகைச்சுவை உணர்வு கூடியதாகவும் அவருடைய உரைகள் அமைந்தன. அரசின் கொள்கைகளை விமர்சனம் செய்கையில் ‘நச்’ என வார்த்தைகள் தெறித்துவிழும். கூட்டங்களில் பெண்ஊழியர்கள் பேசிய பின்னர் அவர்கள் பேச்சு எப்படி இருந்தது; மேலும் எவ்வாறு செழுமை படுத்தலாம் போன்ற ஆலோசனைகளை வழங்குவார். நன்றாகப் பேசியிருந்தால் அனைவரின் முன்பும் மனம் திறந்து பாராட்டுகின்ற நல்ல பண்பு அவரிடம் இருந்தது.

படிப்பாளியாய்... எழுத்தாளராய்...

பொருளாதார சூழல் காரணமாக தோழர்பாப்பா எட்டாம் வகுப்புடன் தனது பள்ளிப்படிப்பை நிறுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் வாசிப்பை அவர் நிறுத்தவில்லை. சுயகல்வி மூலம் தன்னை மேம்படுத்திக் கொண்டார். அதனால்தான் மாதர்சங்க வகுப்புகள், பயிற்சி முகாம்கள் நடைபெறுகையில் இச்சமுதாயத்தில் பெண்கள் முறையாகக் கல்வி பெற ஏராளமான தடைகள் இருந்த போதும் அவற்றை உடைத்து பெண்கள் வாசிப்பைத் தொடர வேண்டுமென வலியுறுத்துவார் தனது வாழ்க்கையை முன் உதாரணமாக குறிப்பிட்டு பெண் தோழர்கள் அன்றாடம் பத்திரிகைகளை படித்து முக்கிய செய்திகளை குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவார். பெண்கள் அரசியல் ரீதியாக வளர்வதற்கு வாசிப்பு மிகவும் அவசியம் என்பதை எடுத்துரைக்க அவர் தவறியதில்லை. இளம்பெண்ணாக அவர் பொன்மலையில் பணியாற்றிய காலத்தில் சர்வதேச, தேசிய நிலைகள் பற்றி பெரிய தலைவர்கள் / தொழிற்சங்கவாதிகள் அரசியல் வகுப்புகள் எடுக்கும் போது அதைக் குறிப்பெடுத்துக்கொண்டு மற்றவர்களுக்கு வகுப்பெடுப்பார். 77

தோழர் பாப்பா நல்ல எழுத்தாளரும் கூட. இளம் வயதிலேயே சிறப்பான அரசியல் கட்டுரைகள் நிறைய எழுதியுள்ளார். முத்து முத்தான அவரது கையெழுத்தைப் பார்த்து போலிஸே அசந்து போயிருக்கிறது. பொன்மலையில் இரயில்வே யூனியனின் பத்திரிகையான ‘தொழிலரசு’ ஏட்டின் துணையாசிரியராகப் பணியாற்றியவர். தன் எழுத்துக்கள் மூலம் இரயில்வே நிர்வாகத்தின் ஊழல்களையும் பெண்கள் மீதான வன்முறைகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். அ.இ. ஜனநாயக மாதர் சங்கத்தின் குரலாக விளங்கும் ‘மகளிர் சிந்தனை’ மாத இதழின் ஆசிரியராக நீண்ட காலம் சிறப்பான பணிவகித்துள்ளார். அதன் மூலம் தன்னை நல்ல பத்திரிகையாளராகவும் நிலை நிறுத்திக் கொண்டார். அயராமல் எழுதும் அவரது திறன் அனைத்து மட்டங்களிலும் பணிபுரியும் பெண்களுடன் உயிரோட்டமான தொடர்பு கொள்ள வாய்ப்பளித்தது. கடந்த ஆண்டு உடல்நலம் குன்றிய போதும் அவர் கடிதத்தொடர்பை நிறுத்தவில்லை என்பது குறிப் பிடத்தக்கது. அவர் ‘கார்டுகளை’ வைத்துக்கொண்டு எழுதுவதைப் பார்க்கையில் ‘என்பணி எழுதிக்கிடப்பதே’ என்றும் கூட யோசிக்க வைக்கும்.

போராளிப் பெண்ணாய்...

பெண்கள் பிரச்சனை என்று வரும்போது, எந்த சமரசத்திற்கும் இடமின்றி தோழர் பாப்பா செயல்பட்டார். பெண்களை இழிவாக யார் பேசினாலும் பொறுத்துக் கொள்ளமாட்டார். 1950களில் பிரபல திரைப்பட பாடலாசிரியராக விளங்கிய பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பெண்களைத் தாழ்வாகச் சித்தரிக்கும் பாடலை எழுதியதற்காக தோழர் பாப்பா அவரைக் கடுமையாக விமர்சித்தார். அப்படிப்பட்ட பாட்டை எழுதியதற்காக பட்டுக்கோட்டை மன்னிப்பும் கேட்டார் என்பது அதற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும்.

பெண்கள் சிறந்த போராளிகளாக வளரவேண்டும் என வலியுறுத்துவார். பெண் ஊழியர்களை அரசியல் ரீதியாக வளர்ப்பதில் பாப்பாவுக்கு முக்கியப் பங்கு இருந்தது. நான் கட்சியின் திருச்சி மாவட்டக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது தோழர் பாப்பா கூறியவை: “டி.சி. மீட்டிங்கில் மாதர் அரங்க அஜெண்டா வரும்போது மட்டும் பேசலாம் என்று இருக்கக்கூடாது. அரசியல் ரிப்போர்ட்டிங் மற்றுள்ள அஜெண்டாவிலும் உனது கருத்துக்களை சொல்ல வேண்டும்.” எல்லா பிரச்சனைகளையும் அரசியல் ரீதியாகப் பார்ப்பதற்கும் தலையிடுவதற்கும் கற்றுக் கொடுத்தார். பெண்கள் அரசியல் ரீதியாக வளர பயிற்சி முக்கியம் என்பதை உணர்ந்து மாநிலம் முழுவதும் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்வார். செல்போன் இல்லாத 1980களில் மாநில முழுவதும் நாங்கள் வகுப்பெடுக்கச் செல்கையில் போக்குவரத்து, தங்கும் வசதி, பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிசெய்துகொள்ள தானே கட்சி கமிட்டிகளுடன் பேசி ஏற்பாடுகளைச் செய்வார். இன்று அனைத்து மாவட்டங்களிலும் கட்சி மாவட்ட குழுக்கள், செயற்குழுக்களில் பெண்தோழர்கள் உறுப்பினர்களாக இருப்பதற்கு அவரது அயராத உழைப்பும் பங்களிப்பும் முக்கிய காரணமாகும்.

தோழர் பாப்பாவுடன் நெருங்கிப் பழகிய அனைவருக்கும் அவர் காலம், நேரம் விஷயத்தில் கறாராக இருப்பார் என்பது தெரியும். நேரம் இல்லை என அவர் புலம்பியது இல்லை. முடியாது என்ற வார்த்தையை அவர் விரும்பியதில்லை. குடும்ப வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை என இரண்டையும் பிரித்துப் பார்க்காத அவருக்கு குடும்பத்தினருடன் செலவழிக்க நேரம் கிடைத்ததுபோலவே தோழர்களுடனும் நேரம் செலவிட முடிந்தது. பல வேலைகளை இணைத்துச் செய்யும் திறன் அவரிடம் நிறையவே இருந்தது. இயக்க வேலையில் கறாராக இருப்பதுடன் மற்றவர்களிடமும் அதை எதிர்பார்ப்பார். கமிட்டி கூட்டங்களில் தனது கருத்தை அழுத்தமாக வைக்கும் அதே நேரத்தில் மாற்றுக் கருத்து களையும் பொறுமையாக கேட்பார். ஏற்புடையதாயின் உடனே ஏற்றுக்கொள்வார். கோபமின்றி விமர்சனங்களை எதிர்கொள்வார். அதனால்தான் தோழர்களை அரவணைத்துக் கொண்டு அவரால் சுலபமாக செயல்பட முடிந்தது.

தான் ஏற்றுக்கொண்ட லட்சியத்தில் உறுதியாக நின்று செயல்பட்டு ஏராளமான பெண்தோழர்களை வளர்த்தெடுத்து தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டிய முக்கிய தலைவர் தோழர் பாப்பா. அவருடைய மறைவு இடதுசாரி இயக்கங்களுக்கு ஈடு செய்ய இயலாத இழப்பாகும்.

Pin It