கீற்றில் தேட...

19ஆம் நூற்றாண்டில் இருபெரும் சமூகப் புரட்சியாளர்கள் பிறந்து இந்திய சமூகத்தில் புரை யோடியிருந்த சாதியத்திற்கு எதிராகக் களமாடினர். இந்த இருவரும் இன்றும் அவர்களின் சிந்தனை வடிவில் தொடர் போரினை நிகழ்த்தி வருகின்றனர்.

periyar ambedkhar 350தந்தை பெரியார் செப்டம்பர் 17, 1879இல் பிறந்து 95 ஆண்டுகள் வாழ்ந்து டிசம்பர் 24, 1973இல் மறைந்தார். அண்ணல் அம்பேத்கர் ஏப்ரல் 14, 1891இல் பிறந்து 65 ஆண்டுகள் வாழ்ந்து 6 டிசம்பர் 1956இல் மறைந்தார். இந்தியத் தலைவர்களை அண்ணல் அம்பேத்கருடன் ஒப்பிட்டால்  முறைசார்ந்த கல்வியைப்  பல போராட்டங்களுக்கு  இடையே  பெற்று அமெரிக்கா-இங்கிலாந்து  பல்கலைக்கழகங்களில்  பலர் வியக்கும் வண்ணம்  முனைவர் பட்டங்களைப் பெற்றவர். ஆய் வின் உச்சத்திற்கே சென்று சிறந்த படைப்புகளை உலகிற்கு வழங்கியவர். கொடுமைக்குள்ளான தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து வாழ்க்கை முழுவதும் உயர் சமுதாயத்தினரோடு போராடிப் பெரும் சாதனைகளைப் படைத்தவர்.

தந்தை பெரியார் பள்ளிப்படிப்பையே தொடராதவர். இருப்பினும் பட்டறிவால்-பகுத்தறிவால் உயர்ந்தவர். 70 ஆண்டுகள் ஆதிக்க சமூகத்தினருக்கு எதிராக இயக்கம் கண்டு தொடர் போராட்டத்தை நடத்தியவர். 1920ஆம் ஆண்டுகளில் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு சென்னை மாகாணத்தின் காங்கிரசு இயக்கத்தின் செயலாளராக, தலைவராக உயர்சாதி சமூகத்தினர் புடைசூழ வலம் வந்தவர்.

காங்கிரசு இயக்கத்தில் உயர்சாதியினரால் கடைப்பிடிக்கப்பட்ட வருணா சிரமக் கொள்கைக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியவர். தந்தை பெரியார் கண்ட இயக்கத்தின் தாக்கமும், அண்ணல் அம்பேத்கரின் கருத்தியலும் இன்றளவும் அனைத்துத் துறைகளிலும் காலத்தின் தேவைக் கருதி விவாதிக்கப்படுகின்றன. சான்றாக அண்ணல் அம்பேத்கரின் நூலான சாதியை அழித் தொழித்தல் (Annihilation of Caste) ஆங்கிலத்தில் 1944இல் வெளியிடப்பட்டவுடன், 1500 படிகள் இரண்டு மாதங்களுக்குள் விற்றுவிட்டன. தந்தை பெரியார் 1925இல் தொடங்கிய குடிஅரசு வார இதழ் தமிழகத்தில் அதிகம் விற்ற ஏடுகளில் ஒன்றாகும்.

ஆனந்த விகடன் இதழின் தொடக்க இதழ் விளம்பரம் குடிஅரசு வார இதழில் வெளியானது. 1.7.1974இல்  பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் திருச்சி வே.ஆனைமுத்து அவர்களால் வெளியிடப்பட்ட சில ஆண்டுகளிலேயே அனைத்துப் படிகளும் விற்றுவிட்டன. 20 தொகுதிகள் அடங்கிய நூலின் இரண்டாம் பதிப்பு 2010இல் வெளி வந்து சில நாள்களிலேயே விற்றுவிட்டன. அண்ணல் அம்பேத்கரின் அனைத்து தொகுப்புகளும் மராட்டிய மாநில அரசால் 1979 முதல் 1989க்குள் ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டுச் சில மாதங்களிலேயே விற்று தீர்ந்துவிட்டன.

இந்துமத சனாதனிகள் பலர் இந்நூலின் பல படிகளை  வாங்கி எரித்துவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்விரு தலைவர்களும் இந்துமத சனாதனவாதிகளுக்கு தொடர் தொல்லை தருபவர்களாகவே இருக்கின்றனர். எவ்வளவு இடர் தந்தாலும் இந்த இரு சிந்தனையாளர்கள் மீண்டும் மீண்டும் எழுகின்றனர். சாதியத்தைத் தகர்க்கின்றனர். எடுத்துக்காட்டாக நடுவண் அரசின் உயர்கல்வி நிறுவனமான இந்தியத் தொழில் நுட்பக் கழகத்தில்  (IIT, சென்னை) இந்தப் புரட்சியாளர்கள் பெயரில் அமைக்கப்பட்ட வாசகர் வட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டது. தடையும் தகர்க்கப்பட்டது.

இந்நிகழ்வுகளிலிருந்தே ஆதிக்க சமூகத்தினரும் பிற்போக்குவாதிகளும் இந்த இருவர் இணைவதை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. பெரியாரும் அம்பேத்கரும் சாதி ஒழிப்புக் களத்தில் இன்றும், என்றும் தேவைப்படுவார்கள் என்பதற்கு இவைகள் சான்று பகர்கின்றன.

சாதி மதம் கடவுள் இவை இந்தியச் சமூகத்தில் ஒன்றோ டொன்று வலிமையான முறையில் பிணைக்கப்பட்டுள்ளன. மற்ற நாடுகளில் மதம் தனித்தே நிற்கிறது. மேலும் இங்கு சமூக அடித்தளம்  பொருளாதார வளர்ச்சியில் பெரும்பான்மையோர் பங்கு பெறுவதையே தடை செய்கிறது. இதைச் சுட்டுவதற்காக அம்பேத்கர் தனது நூலில் சமதர்மக் கொள்கைத் திட்டங்கள் வழியாக ஒரு சமத்துவ சமுதாயத்தைக் கட்டியமைக்க முடியும் என்று   மேற்கத்திய நாடுகளின் பாணியில் சமதர்மவாதிகள் தங்களின்  கொள்கைகள எடுத்துரைக்கின்றனர் பின்பற்றுகின்றனர்.

சாதிய அடிப்படையில்தான் சமூகத் தகுதி மேலாதிக்கம் உருவாகிறது.  இந்திய சொத்துரிமையே சாதிய அடிப்படையில்தான் உரு வாகியது. சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்ப சில தொழில்களும் பாகுபாடு செய்யப்பட்டன. இத்தகைய சூழலில் மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்படுகிற வேலை பகுப்பு முறை (Division of Labour) நம் நாட்டிற்கு எவ்வாறு பொருந்தும்?

இங்குள்ள சமூகத்தில் ஏணிப்படிக்கட்டு அடுக்கு முறை சாதிய அமைப்பு கோலோச்சுகிறது. இதன் வழியே சமூகத்தின் பெரும்பான்மையோர் மீது ஒடுக்குமுறை நிரந்தரப்படுத்தப் படுகிறது. “இந்து என்கிற பெயரே ஒரு வெளிநாட்டான் இட்ட பெயர். முகமதியர்களால், தங்களை வேறுபடுத்திக் காட்டிக் கொள்வதற்காக அளிக்கப்பட்ட பெயர்.

இந்தியத் துணைக் கண்டத்தில் இசுலாமியர் படையெடுப்புக்கு முன், இந்து என்ற சொல் எந்த சமஸ்கிருத நூலிலும் இடம் பெறவில்லை (The name Hindu is itself a foreign name. It was given by the Mohammedans to the natives for the purpose of distinguishing themselves. It does not occur in any Sanskrit work prior to the Mohammedan invasion, p.50, Dr.Babasaheb Ambedkar, Writings and Speeches, Vol.I,1979)” என்கிறார் அம்பேத்கர்.

எனவே இந்து சமூகம் என்ற ஓர் அமைப்பே கிடையாது. சாதி என்பது ஒரு கூட்டமைப்பே கிடையாது. ஒரு சாதி மற்ற சாதியுடன் இணைந்தது என்பதற்கான உணர்வே இல்லை. ஆனால் இந்து முஸ்லிம் கலவரத்தின் போதுதான் இந்த சாதிகள் ஒன்றோடொன்று இணைகின்றன என்று அடுக்கடுக்கான தரவுகளின் அடிப்படையில் சாதிய அமைப்பின் எதிர்மறை விளைவுகளை அம்பேத்கர் விளக்கிக் காட்டினார். “சதுர் வர்ணம்” புதியதன்று. வேதத்தைப் போன்று பழமையானது. இந்திய வரலாற்றில் ஒரே ஒரு காலகட்டத்தில்தான் புகழ், உயர்வு, சுதந்தரம் மூன்றும் இருந்தது. அதுதான் மௌரியர்கள் காலமாகும். மற்ற எல்லாக் காலகட்டங்களிலும் தோல்வியும் இருளும்தான் இருந்தன. மௌரியர்களின் காலத்தில்தான் சதுர்வர்ணம் முழுமையாக அழித்தொழிக்கப்பட்டது. பெரும் பான்மையான சூத்திரர்கள் அவர்களாகவே முன்வந்து அரசாள்பவர்களாக மாறினர் என்று அம்பேத்கர் வாதிடுகிறார்.

பார்ப்பனர்களை மதச்சார்பற்ற பார்ப்பனர்கள், மத குருமார்கள் என்றும் பிரிப்பது ஒரு பயனற்ற வேலை என்றும்  அவர்கள் ஓர் உடலில் இருக்கும் இரண்டு கைகள். ஒன்று மற்றொன்றின் வாழ்விற்காகப் போராடும் என்றும் அம்பேத்கர் மதிப்பீடு செய்தார். இது எவ்வாறு தற்காலத்திற்குப் பொருந்தி வருகிறது என்ற ஐயம் கூட சிலருக்கு எழலாம். முற்போக்குக் கட்சியுடன் தொடர்பு உள்ளவர் என்று கூறிக்கொள்ளும் இந்து என்.ராம், கொலைக் குற்றத்திற்காக காஞ்சி சங்கராச்சாரியைக் கைது செய்தவுடன் காரில் பின் தொடரவில்லையா?

ஒரு பெண்ணுடன் ஓடிப்போன ஜெயேந்திரர், திரும்பி வரும்போது, தமிழக எல்லையில், அன்றைய குடிஅரசுத் தலவர் ஆர்.வெங்கட்ராமன் வரவேற்க வில்லையா?

இந்தியச் சமூகத்தில் பெரும் பிளவை ஏற்படுத்தி, பொருளாதாரத்தின் முக்கியமான காரணியான உழைப்பைப் பெரும்பான்மையான சூத்திரர்களுக்கு வழங்கிவிட்டது. கடும் உழைப்பை நல்கிய பெரும்பான்மையான மக்கள் ஒடுக்கப் பட்டார்கள்; ஒதுக்கப் பட்டார்கள்; தாழ்த்தப்பட்டார்கள். அம்பேத்கர் இதன் காரணமாகத்தான் கொதித்தெழுந்து கீழ்க்கண்ட வினாக்களை வைத்தார்: உலகில் எந்தவொரு சமூகத்தி லாவது அணுகமுடியாத, தொடமுடியாத நிழல்பட முடியாத, பார்க்கக்கூடாத மக்களைத் தன்னகத்தே உள்ளடக்கி உள்ளதா? உலகின் எந்தச் சமூகத்திலாவது குற்றப்பரம்பரை என்று மக்கள் சமூகத்தில் உள்ளதா? எந்தச் சமூகத்திலாவது எப்படி ஆடை அணிவது என்று கூடத் தெரியாமல் காட்டில் வாழும் பழங்கால மக்களை இன்றளவிலும் காணமுடியுமா?

நிலம், மூலதனம் அமைப்பு போன்ற மற்ற பொருளாதாரக் காரணிகளை உயர் வகுப்பினரின் பிடியில் தள்ளிவிட்டது. எனவேதான் அம்பேத்கர் குறிப்பிடுவது போன்று கிழக்கிந்தியக் குழும ஆட்சி தொடங்கிய காலத்தில் இவர்களின் செல்வாக்கு ஆங்கிலேயர்களைக் கூட இவர்களின் வசதிக்கேற்ப சட்டங்களை இயற்றுவதற்கு சட்டமியற்றச் செய்தது. இவர்களுடைய செல்வாக்குக் கிழக்கிந்தியக் கம்பெனியின் பிரிட்டி` ஆட்சியினர் கூட ஏற்றுக் கொள்கிற அளவிற்கு இருந்ததையும் அம்பேத்கர் கூறியுள்ளார்.

பழங்கால இந்துச் சட்டத்தின்படி பிராமணர்கள் மத குருமார்களுடைய நிலையைப் பெற்றுவிட்டதனால் அவர்கள் கொலைக் குற்றம் செய்தாலும் தூக்குத் தண்டனைக்கு உட்படுத்தப்படமாட்டார்கள். இப்பழங்கால உரிமையைக் கிழக்கிந்திய கம்பெனி 1817 வரை அவர்களுக்கு நீட்டித்தது. இந்திய சமுதாயத்தில் புராணி கர்களின் கொடுங்கோல் ஆட்சி எப்படி நிலை பெற்றது. 

மதத்தால் இலாபம் பெற்று, சமுதாயத்தைத் திட்டமிட்டு விழுங்கியவர்கள்தான் பிராமணர்கள். பிராமணர்களால் டன் கணக்கில் தயாரிக்கப்பட்ட புராணங்களும் சாத்திரங்களும் செல்வப் புதையலாகக் கருதப்பட்டு சூழ்ச்சிமிக்க தந்திரங்களாக பிராமணர்களால், மூட நம்பிக்கையுடைய இந்துக்களை வெகுஜன ஏழைகளைச் படிப்பறிவற்றவர்களை முட்டாளாக்கி வஞ்சித்துச் சுருட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டனர் (Dr.Ambedkar Writings and Speeches, vol.1, page 218-220).

அம்பேத்கரின் மேற்கூறிய கருத்தும் கணிப்பும் இன்றளவும் அரசியலிலும் பொருளாதாரத்திலும் ஆட்சியிலும் தொடர்ந்து நிலை பெற்றிருப்பதை விடுதலை பெற்ற இந்தியாவில் பல நிகழ்வுகள் உறுதிப் படுத்தியுள்ளன.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு ஒரு முற்போக்குச் சிந்தனையாளர். தன்னை ஒரு பகுத்தறிவாளராக அடையாளம் காட்டிக்கொண்டு செயல்பட்டார். அப்படிப்பட்ட பிரதமர் நேருவே பனாரஸ் பிராமணர்களின் பிடியில் சிக்கிக்கொண்டார் என்பதைக் கீழ்க்கண்ட வினாக்கள் மூலம் அம்பேத்கர் எடுத்து ரைக்கிறார்.

பிரதமர் நேரு, 1947 ஆகஸ்ட் 15ஆம் நாளில் ஒரு பிராமணன் விடுதலைப் பெற்ற சுதந்திர இந்தியாவின் முதல் பிராமணப் பிரதமராகும் நிகழ்வைக் கொண்டாடும் வகையில் பனராஸ் பிராமணர்களால் நடத்தப்பட்ட  யாகத்தில் அமர வில்லையா? இந்த பிராமணர்கள் கொடுத்த ராஜ தண்டத்தை அணியவில்லையா? கங்கையிலிருந்து பிராமணர்கள் கொண்டு வந்த நீரைக் குடிக்கவில்லையா?

இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர். இராஜேந்திர பிரசாத் பிராமணர்களிடம் அடிபணிந்தது குறித்து அம்பேத்கர் வினவுகிறார்  இந்திய குடியரசுத் தலைவர் அண்மையில் பனாரசுக்குச் சென்று பிராமணர்களை வழிபட்டு அவர்களின் பாதங்களை நீரால் கழுவி அதைக் குடிக்கவில்லையா?

இது போன்ற நிகழ்வுகள் இன்றும் தொடர்கின்றன. மக்கள் தொகையில் 3 விழுக்காடு அளவில் உள்ள பிராமணர்கள் உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் நடுவண் அரசின் பெரும் பொறுப்புகளில் 50 விழுக்காட்டிற்கு மேல் இன்றும்  இடம் பெற்றுள்ளனர் என்பதை அண்மைப் புள்ளிவிவரங்கள் சுட்டுகின்றன. எனவே சாதியம் பல நிலைகளில், பல வடிவங்களில் ஒரு கொடிய அடக்குமுறை கருவியாக இன்றும் நிலை பெற்றுள்ளது. மேலும் கல்வி அறிவு பெற்ற தெளிவு பெற்ற பின்தங்கியோர் தாழ்த்தப்பட்டோர் வேலை வாய்ப்புகளில் - உயர் பதவிகளில் உரிய விழுக்காட்டு அளவிற்கு இடம் பெறாத அளவிற்கு அவ்வப்போது சட்டங்களை இயற்றித் தீர்ப்புகளை வழங்கி உள்ளடக்கிய வளர்ச்சி (Inclusive growth) என்ற அரசால் அறிவிக்கப்படும் கொள்கையைச் சிதைக்க முற்படு கின்றனர்.

தனியார் துறையில், குறிப்பாக மென்பொருள் தொழிலில் இந்திய அளவிற்கு உயர் சாதியினரின் ஆதிக்கமே இன்றும் நிலைபெற்றுள்ளது. பெரியார் அண்ணா, காமராசர் போன்ற பெருந்தலைவர்கள் இடஒதுக்கீடு கொள்கையில் சரியான விழிப்புணர்ச் சியுடன் தமிழ்நாட்டில் செயல்பட்டதாலும், விதிவிலக் காகத் தமிழ்நாட்டில் காங்கிரசுக் கட்சி இந்துமத சனாதனிகளின் ஆதிக்கத்தில் செல்லாத காரணத்தினாலும் பா.ஜ.க. தமிழ்நாட்டில் வேரூன்ற முடியாமல் திண்டாடுகிறது.

சென்னை வளர்ச்சி ஆய்வு மையம் (Madras Institute of Development Studeis), சென்னை தொழில்நுட்பக் கழகம் (Indian Institute of Technology, Chennai) ஆகிய கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் விஜய பாஸ்கர், சுரேஷ்பாபு ஆகிய ஆய் வாளர்கள் சென்னையில் தகவல் தொழில் நுட்பத் துறையில் தனியார் துறையிலும் அரசு தனியார் பங்களிப்போடு செயல்படும் துறைகளிலும் வேலை வாய்ப்புகளைப் பெற்றவர்கள் பற்றிய ஒரு கள ஆய்வினை மேற்கொண்டனர்.

அந்த ஆய்வின்படி ஊர்ப்புறங்கள், சிறு நகரங்களில்  படித்த தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சென்னையின் தகவல் தொழில்நுட்பத் துறையில் இடம் பெற்று வருகின்றனர் என்ற புள்ளி விவரங்களை அளித்துள்ளனர் (EPW, ‘The Politics of Urban Mega-projects of India : Income employment Linkages in Chennai’s IT Corridor, April23> 2016.vol.No.17, PP.85-92). இவர்களது சராசரி மாத வருமானம் அரசு மற்றும் பொதுத்துறை, தனியார் துறைகளைவிட அதிகமாகவும் உள்ளது என்றும் விளக்கி யுள்ளனர். இத்தகைய “உள்ளடக்கிய வளர்ச்சி” மற்ற மாநிலங் களில் இல்லை என்பதையும் சுட்டியுள்ளனர். இத்தகைய சமூக நீதியைத் தமிழ்நாடு அடைந்து வந்துள்ளதற்குத் தந்தை பெரியார் நிகழ்த்திய பெரும் போராட்டங்களும் காரணங்களாக அமைகின்றன.

தந்தை பெரியார் சாதியத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது 1948ஆம் ஆண்டு செருப்பைத்தைக்கும் தொழில் ஒரு கூட்டத்திற்கே  அதுவும் இந்துமத தர்மப் படி 5ஆவது சாதிக்கே ஒதுக்கப்பட்டுவிட்டதால் தான், அது நம் நாட்டில் இழிதொழிலாகக் கருதப்பட்டு வருகிறதே ஒழிய அத்தொழில் இழிதொழில் என்பதற்காக அல்ல. அது போல்தான் வீதிகூட்டும் தொழிலும் கழிவறை சுத்தம் செய்யும் தொழிலும். மணியடிக்கும் தொழிலுக்குப் பெருமை இருந்து வருவதற்கும் இதுதான் காரணம்.

அத்தொழில் உயர்சாதிப் பார்ப்பானுக்கென்றே ஒதுக்கப்பட்டு  விட்டதால்தான், உயர்வாகக் கருதப்பட்டு வருகிறதே ஒழிய அத்தொழில் உயர் வானது என்பதற்காக அல்ல. ஆகவே தொழில் காரணமாக இவர்கள் இழி மக்களாக இருக்கிறார்கள் என்று யாரும் கூறிவிட முடியாது. இந்தத் தொழிலாளிகளுக்கு உணர்ச்சி வரவேண்டும்.

நாங்கள் மட்டும் ஏன் உடலுழைப்பு செய்தே வாழ வேண்டும்? அப்படியிருந்தும் நாங்களேன் இழிசாதி மக்களாக வாழ வேண்டும்? என்று தொழிலாளர்கள் கிளர்ச்சி செய்ய வேண்டும். இன்றைய தொழிலாளர்கள் கூலி உயர் விற்காகக் கிளர்ச்சி செய்கிறார்களே ஒழிய, தமது இழிவு நீங்கக் கிளர்ச்சிச் செய்யக் காணோம். கூலி உயர்வால் பொருள் விலை ஏறுகிறது.

விலை ஏற்றத்தைத் தொழிலாளிகள் தாம் சாமான் வாங்கும்போது கொடுக்க வேண்டியிருக்கிறது என்ற பொருளாதாரத்தை இவர்கள் உணரவில்லை; இவர்கள் தலைவர்களும் இவர்களுக்கு இதை உணர்த்துவ தில்லை. இந்த தனித்த உயர்ந்த நெறி சார்ந்த பெரியார் சிந்தனையை  ஏன் தொழிலாளர் சங்கங்கள் பின்பற்றவில்லை என்பது ஆய்விற்குரியதாகும்.

- (தொடரும்)