முகலாய மன்னர்கள் துரோகிகள் என்றும், தாஜ் மகால் துரோகிகளால் கட்டப்பட்டது என்றும், இந்தியக் கலாச்சாரத்திற்கே அவமானம் என்றும் பா.ச.க.வினர் பேசத் தொடங்கியுள்ளனர்.

“இந்தியக் கலாச்சாரத்திற்கு உட்பட்டது இராமாயணமும், கீதையும் தான்; தாஜ்மகால் அல்ல” என்று உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் வெளிப்படை யாகக் கூறியுள்ளார்.

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் உத்தரப்பிரதேச மாநிலத்தின் சுற்றுலா கையேட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி சுற்றுலாப் பயணிகளை மட்டுமல்ல, அழகை ஆராதிக்கும் அனை வரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடுமையான எதிர்ப்பின் காரணமாக வேறு வழியில்லாமல் ஆக்ரா மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாவற்றையும் மத நோக்கத்தோடு பார்ப்பதன் வெளிப்பாடு இது. கலைகளும், இலக்கியங்களும் சாதி, சமய, இன, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவை. ஆட்சியாளர்கள் இதனை எப்போது புரிந்துகொள்ளப் போகிறார்கள்?

காவி கட்டிய ஒரு சாமியார் முதலமைச்சராக நியமனம் செய்யப்படும்போதே, இதெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்ததுதான். ‘பசுவதை’ என்ற பெயரால் இசுலாமியர்களும், தலித்துகளும் அடித்துக் கொல்லப் பட்டனர். அதன்பின் பசுப்பிரியர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று உபதேசம் செய்யப் பட்டது.

அதனால் பயன் என்ன? செத்தவர்கள் உயிரோடு வந்துவிடுவார்களா? செத்தவர்கள் செத்தவர்கள் தானே! நிவாரணங்கள் உயிருக்கு நிகராமோ?

தாஜ்மகால் என்பது உலகமே ஏற்றுக்கொண்ட ஓர் அதிசயம். 1983ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் அங்கீ கரிக்கப்பட்ட ஓர் அற்புதம். ஆண்டுதோறும் 60 ஆயிரம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்ற அழகின் இருப்பிடம். யாரையோ நினைத்துக் கொண்டு இதனை அவமதிப்பது என்ன நியாயம்?

தாஜ்மகால் இந்தியக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்க வில்லை என்றும், அது துரோகிகளால் கட்டப்பட்டது என்றும், அதை இடிக்க வேண்டும் என்றும் பா.ச.க. வின் சட்டமன்ற உறுப்பினர் சங்கீத் கோம் அடாவடி யாகப் பேசியுள்ளார்.

‘தாஜ்மகால் இந்தியர்களின் இரத்தத்தாலும், வியர் வையாலும் கட்டப்பட்டது என்பதால் அதை இடிக்க வேண்டியது இல்லை’ என்று மாநில முதல்வர் ஆதித்ய நாத் பதில் கூறி சமாளித்துள்ளார்.

‘ஆக்ராவில் உள்ள தாஜ்மகால் முன்னர் சிவன் கோயிலாக இருந்தது’ என்று பா.ச.க.வின் மூத்தத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வினய் கத்தியார் பேசியுள்ளார்.

“ஆக்ராவில் இருப்பது தேஜோ மகால். அதாவது சிவன் கோயில். இந்து மன்னர்களால் கட்டப்பட்டதுதான் தாஜ்மகால். கோயிலின் கட்டமைப்பைப் பார்த்தாலே அது சிவன் கோயிலாக இருந்தது தெரியவரும். சிவன் கோயிலில்தான் மேலிருந்து கீழே நீர் சொட்டும் வகையில் கட்டப்பட்டிருக்கும். தாஜ்மகாலில் இந்த அமைப்பும் இருக்கிறது” என்று தம் ஆய்வின் முடிவை வெளியிட்டுள்ளார்.

“எனினும் தாஜ்மகாலை இடிக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் விரும்பும் தாஜ்மகாலை நாம் பாதுகாக்க வேண்டும்” என்றும் இறுதியில் கூறியுள்ளார்.

ஏற்கெனவே அயோத்தியில் பாபர் மசூதி விவகாரத் தில் இந்த உத்தியைத்தான் கையாண்டார்கள். இப்போது இருக்கும் பாபர் மசூதி முன்னர் இருந்த இராமர் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதுதான் என்று கூறப்பட்டு 1992இல் தகர்க்கப்பட்டது. அந்த வழக்கில் இந்த வினய் கத்தியாரும் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இந்தக் கலைக் கருவூலத்திற்கு எதிரான கருத்துகள் பலமுறை வந்து அடங்கியதுதான். 2015 ஆம் ஆண்டு ஆக்ரா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறி ஞர்கள் தாக்கல் செய்த மனுவில் இவ்வாறு கூறப் பட்டது :

“ஆக்ராவில் தேஜோ மகாலய” என்ற சிவன் கோயில் இருந்தது. இந்தக் கோயிலைத்தான் மொகலாய மன்னர் ஷாஜஹான் கல்லறையாக மாற்றித் தாஜ்மகால் கட்டினார். அங்கு சிவன் கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள், அடையாளங்கள் இப்போதும் உள்ளன.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், இதுதொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய அரசு, மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம், தொல்பொருள் ஆய்வுத் துறை ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதைத் தொடர்ந்து, ‘தாஜ்மகால் பகுதியில் கோயில் இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை’ என்று 2015 மே மாதம் மத்திய கலாச்சார அமைச்சகம் நாடாளு மன்ற மக்களவையில் தெரிவித்துவிட்டது.

இதெல்லாம் தெரிந்தோ தெரியாமலோ இதே பிரச் சனையை மறுபடியும், மறுபடியும் கிளப்பிக் கலவரத் தைத் தூண்டிவிடுகின்றனர்.

‘தாஜ்மகால் தொடர்பாகத் தனக்குக் கூடுதல் ஆவணங்கள் கிடைத்திருப்பதாக பா.ச.க. தலைவர் சுப்பிரமணிய சுவாமியும் கூறியுள்ளார்.’

ஜெய்ப்பூர் ராஜாக்களை மிரட்டியே தாஜ்மகால் இருக்கும் நிலத்தை ஷாஜஹான் பறித்துள்ளார். இதற்கு ஈடாக 40 கிராமங்கள் ஜெய்ப்பூர் மன்னர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இது தாஜ்மகால் நிலத் துக்கு இணையான மதிப்பு அல்ல.

மேலும் “தாஜ்மகால் நிலத்தில் ஒரு கோயில் இருந் திருக்கிறது. இந்தக் கோயிலை இடித்துவிட்டுத் தான் தாஜ்மகால் கட்டினார்களா எனத் தெரியவில்லை. இதுதொடர்பான ஆவணங்களை விரைவில் வெளியிடப் போகிறேன்” என்று சுப்பிரமணிய சாமி தெரிவித் துள்ளார்.

கி.பி.1526 மொகலாயப் பேரரசு தோன்றிய காலம். பாபர் (1463-1530) முதல் அவுரங்கசீப் (1659-1680) முடிய முகலாயர் ஆட்சிக் காலம் சுமார் 200 ஆண்டு கள் மட்டுமே!

ஷாஜஹான் (1592-1658) காலத்தில் தாஜ்மகால் மட்டுமின்றி, கோஹினூர் வைரம், மயிலாசனம் ஆகிய வையும் அவரது கலை உணர்வை வெளிப்படுத்தின. கட்டடக் கலையில் ஆர்வம் கொண்டமையால், அவர் ‘முகலாய அகஸ்டஸ்’ எனவும் புகழப் பெற்றார்.

1630இல் அவரது மனைவி மும்தாஜ் இறந்துவிடு கிறார். 1631இல் கட்டடம் கட்டத் தொடங்குகிறது. இதனைக் கட்டுவதற்காக பாரசீகம், அரேபியா, துருக்கி முதலிய நாடுகளில் இருந்து கட்டக் கலைஞர்களை வரவழைத்தார். இந்தியாவின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டனர்.

உஸ்தாத் இஷா (Ustad Isa) என்னும் சிற்பியின் தலைமையில் கட்டடம் தொடங்கியது. வெனிஸ் நாட்டு வரைபடக்காரர் கொடுத்த மாதிரி வரைபடத்தின் அடிப் படையில் தாஜ்மகால் கட்டப்பட்டது என்று 1641இல் ஆக்ராவுக்கு வந்த ஸ்பெயின் நாட்டுப் பாதிரி மான்ரிக் (Marique) கூறுகிறார்.

இம்மாளிகையைக் கட்டி முடிக்க 22 ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்றும், ரூ.3 கோடி செலவழிந்திருக்கும் என்றும் பன்னாட்டு அறிஞர்கள் மதிப்பிட்டுள்ளனர். இதனைப் பராமரிக்க மன்னர் ஷாஜஹான் 30 கிராமங் களை மானியமாக ஒதுக்கினார் என்று வரலாறு கூறுகிறது.

1666இல் தாஜ்மகாலை நேரில் கண்டு வியந்த தேவநாட் ((Thevenot) என்ற பிரெஞ்சுக்காரர், “இந்தப் புகழ்வாய்ந்த நினைவுச் சின்னம் இந்தியர் சிற்பக் கலை தெரியாதவர் அல்லர் என்பதை எடுத்துக்காட்ட போதுமான சான்றாகும். இதனுடைய புதுப்பாணி ஐரோப்பியருக்கு விந்தைப் பொருளாகக் காணப்படினும் இது ரசிப்பதற்கு ரம்மியமானது; மிகவும் அழகானது” எனத் தெரிவித்துள்ளார்.

அன்று மட்டுமல்ல, இன்றும்கூட இதைப் பார்ப்பவர்கள் இப்படித்தான் கூறுகின்றனர். இந்த அழகு மாளிகையை அந்நியப்படுத்துவதால் யாருக்கு இழப்பு என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஏரியின் மேல் கோபப்பட்டுக் குளிக்காமல் போவதால் யாருக்கு நன்மை அல்லது தீமை?

எளிதில் தீப்பற்றக் கூடிய மதப்பிரச்சனையைத் தூண்டிவிட்டு, அரசியல் செய்வது நீண்டகாலம் நிலைக் காது. தேர்தலில் வெற்றி பெற மதநேயத்தைவிட, மனிதநேயமே சிறந்தது என்பதை மக்கள் தலை வர்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

முகலாயர்கள் அந்நியர் என்றால் ஆங்கிலேயர் களும் அந்நியர்களே! அவர்கள் விட்டுச் சென்ற அடை யாளங்களை அழித்துவிட முடியமா?

“ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட தில்லி நாடாளு மன்றக் கட்டடம், குடியரசுத் தலைவர் மாளிகை ஆகிய வையும் அடிமைச் சின்னங்கள்தாம். அவற்றையும் இடித்துவிடலாமா?” என்று சமாஜ்வாதி மூத்தத் தலைவர் ஆசம்கான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்வாறு விவாதங்கள் தொடரலாம். கேள்விகளுக்கு கேள்விகளே பதிலாக அமையாது. மக்களாட்சி என்பது மக்களுக்கானது; மதங்களுக்கான ஆட்சியல்ல. எல்லா மதங்களும் அன்பையே போதித்தாலும், வம்பையே வளர்த்துக் கொண்டிருக்கின்றன என்பதே வெளிப்படை.

தாஜ்மகால் பற்றிய விவாதங்கள் முடிவடைவதற்குள் கர்நாடகத்தில் திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவை முன்வைத்து புதிய விவாதங்கள் தொடங்கியுள்ளன. ‘இந்துக்களுக்கு எதிரானவர் என்பதால் திப்புசுல் தானுக்கு அரசு சார்பில் விழா கொண்டாடக் கூடாது’ என்று பா.ச.க.வினரும், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட  இந்து அமைப்பினரும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

மைசூரை ஆண்ட திப்புசுல்தானின் பிறந்த தினம் கர்நாடகத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. 3ஆவது ஆண்டாக நவம்பர் 10 அன்று இந்த விழாவைக் கொண்டாட காங்கிரசு தலைமையிலான மாநில அரசு முடிவெடுத் துள்ளது.

“ஆங்கிலேயர்களுக்கு எதிராக 4 போர்களில் ஈடுபட்டவர் திப்புசுல்தான். ஆங்கிலேயருக்கு எதிரான போரில்தான் அவர் உயிர்விட்டார். அவரது ஜெயந்தி விழாவை அரசியலாக்க வேண்டாம். கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்த போது திப்புசுல்தான் பெயரைப் பயன்படுத்திக் கொண்ட பா.ச.க. இப்போது எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?” என்று கர்நாடக முதல்வர் சித்தரா மையா கேள்வி எழுப்பியுள்ளார்.

“மதம் என்னும் பேய் பிடியாதிருக்க வேண்டும்” என்றார், வள்ளலார். இப்போது இந்தியாவில் இந்தப் பேய் தலைவிரித்தாடுகிறது. அந்தப் பேயை விரட்ட வேண்டியவர்களே அதைத் தூண்டி விடுகின்றனர். இதனால் அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர்.

“நான் சர்வாதிகாரியாக இருந்தால் மதமும், அரசாங்கமும் தனித்தனியாக இருக்கும். என் மதத்தில் உறுதியுடன் நிற்பேன். அதற்காக நான் உயிரையும் கொடுப்பேன். ஆனால் மதம் என் சொந்த விஷயம். அரசாங்கத்திற்கும், அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை...” என்றார், காந்தியார்.

இதனை இந்துத்துவ அரசியல்வாதிகள் எண்ணிப் பார்க்க வேண்டும். பலரைச் சிலகாலம் ஏமாற்றலாம்; சிலரைப் பலகாலம் ஏமாற்றலாம். எல்லாரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது. இந்தப் பாடத்தை இவர்கள் எப்போது கற்றுக்கொள்ளப் போகிறார்கள்?

Pin It