குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 23-2-15 அன்று நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரை யாற்றிய போது, நடுவண் அரசு அயல்நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மட்டு மின்றி, இந்தியாவுக்குள் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தையும் மீட்கத் தீவிரமாக நடவடிக்கை எடுக்கும் என்று கூறியிருக்கிறார்.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் துக்கான தேர்தல் பரப்புரையின் போது, பிரதமர் வேட்பாளராகப் பா.ச.க.வால் அறிவிக்கப்பட்டிருந்த நரேந்திர மோடி, அயல்நாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள ஒரு இலட்சம் கோடி டாலர் (60 இலட்சம் கோடி உருவா) பணத்தை 100 நாள்களில் மீட்டு, ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் 10 இலட் சம் உருபா சேர்க்கப்படும் என்று எல்லா மேடை களிலும் முழங்கினார்.

கருப்புப் பண மீட்பு குறித்து மூத்த வழக்குரைஞர் இராம்ஜெத்மலானி 2009இல் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த பொதுநல வழக்கின் பேரில், 2011ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், கருப்புப் பண மீட்புக் குறித்து ஆராய ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை நடுவண் அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. அப்போதிருந்த மன்மோகன் அரசு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பதைத் தவிர்த்து வந்தது. இந்தப் பின்னணியில்தான் நரேந்திரமோடி கருப்புப் பணத்தை நூறு நாள்களில் மீட்பேன் என்ற முழக்கத்தைத் தேர்தல் பரப்புரை ஆயுதமாகப் பயன் படுத்தினார். 2014 மே 26 அன்று நரேந்திர மோடி தலைமை அமைச்சராகப் பதவி ஏற்றார். அடுத்த நாளே (27.5.14) கருப்புப் பணத்தை மீட்பதற்காக 13 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தார். 100 நாள்களில் மீட்பேன் என்றார் மோடி! இப்போது 300 நாள்களுக்கு மேலாகிவிட்டன. மோடி வீறாப்புடன் பேசிய 60 இலட்சம் கோடி உருபா கருப்புப் பணம் மீட்கப்பட்டு இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டு விட்டதா?

மோடி அரசு இதுவரை அயல்நாட்டு வங்கிகளில் பணத்தைப் பதுக்கி வைத்துள்ள ஒரு இந்தியரின் கணக்கு விவரத்தைக் கூடப் பெறமுடியவில்லை. இவர்களின் பட்டியலை வெளியிடுவதற்கே காலம் கடத்திக் கொண்டிருந்ததை உச்சநீதிமன்றம் கடுமை யாகச் சாடிய பின்புதான் ஒருவழியாக மோடி அரசு, இலண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட எச்.எஸ்.பி.சி. (HSBC) வங்கியின் சுவிட்சர்லாந்தில் உள்ள கிளை வங்கியில் கணக்கு வைத்துள்ள 628 பேரின் பட்டி யலை உச்சநீதிமன்றத்திடம் அளித்தது. அப்பட்டியல் 2011ஆம் ஆண்டே மன்மோகன் அரசால் பிரான்சு நாட்டிடமிருந்து பெறப்பட்டதாகும். ஜெனிவாவில் எச்.எஸ்.பி.சி. வங்கியில் மென்பொருள் வல்லுநராகப் பணியாற்றிய முன்னாள் ஊழியரான ஹெர்வ் பால்சி யானி என்பவரால் இரகசியமாக எடுக்கப்பட்டு, பிரான்சு நாட்டு அரசிடம் அளிக்கப்பட்ட கோப்புகளில் 628 இந்தியர்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. 628 இந்தியர்களின் பட்டியல் விவரம் சுவிசு வங்கியிட மிருந்தோ, சுவிசு அரசிடமிருந்தோ இந்திய அரசால் பெறப்படவில்லை. எனவே இதற்காக முன்னைய மன்மோகன் அரசோ, இப்போதுள்ள மோடி அரசோ இதைத் தங்கள் சாதனை என்று மார்தட்டிக் கொள்ள முடியாது.

உச்சநீதிமன்றம் 628 பேர் கொண்ட பட்டியலை மோடி அரசு அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் அளித்து, அதுகுறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு கேட்டது. அதன்படி சிறப்புப் புலனாய்வுக் குழு உச்சநீதிமன்றத்திடம் அறிக்கை அளித்தது. சுவிசு வங்கியில் (HSBC)) உள்ள 628 கணக்குகளில் 289 கணக்குகுளில் பணமே இல்லை (அதாவது அப்பணம் வேறு இடங்களுக்குப் பறந்துவிட்டது). மேலும் 628 பேரில் 201 பேர் இந்தியாவில் வசிக்காதவர்கள் அல்லது எங்கிருக்கிறார்கள் என்று கண்டறியப்பட முடியாதவர்கள். மீதி 427 பேரின் கணக்குகளில் ரூ.4,449 கோடி உள்ளது. இவர்களில் 79 இந்தியர் கள் மீது வருமான வரித்துறை நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. தேர்தல் பரப்புரையின் போது நரேந்திர மோடி அயல்நாடுகளில் இருப்பதாக முழங்கிய 60 இலட்சம் கோடி உருபா எங்கே? என்று நாட்டு மக்கள் கேள்விக் கணைகளால் மோடியைத் துளைக்க வேண்டுமல்லவா! குடிகாரன் பேச்சு பொழுது விடிந் தால் போச்சு என்பது போல, அரசியல் தலைவர்களின் தேர்தல் கால வாக்குறுதிகள் தேர்தல் மேடையுடன் போச்சு என்கிற அவல நிலைதானே நீடிக்கிறது.

எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல 2015 பிப்பிரவரி முதல் கிழமையில் பன்னாட்டுச் செய்தியா ளர்கள் குழு என்கிற அமைப்பு சுவிட்சர்லாந்தில் உள்ள எச்.எஸ்.பி.சி. (HSBC)) வங்கியிலிருந்து இரகசியமாக வெளிக்கொண்டு வரப்பட்ட 60,000 கோப்புகளில் உள்ள ஒரு இலட்சம் பேர்களின் கணக்கு விவரங் களை வெளியிட்டது. இப்பட்டியலில் 1,195 இந்தியர் களுக்குச் சொந்தமான கணக்குகளில் ரூ.25,420 கோடி இருப்பதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இச்செய்தி வெளியானதும் 9-2-15 அன்று நிதி அமைச்சர் அருண்ஜெட்லி மிகவும் கெட்டிக்காரத்தன மாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு, “வெளிநாட்டு வங்கிகளில் பணம் போட்டிருப்பது யார் என்பதைவிட, அந்தப் பணம் எப்படி அவர்களுக்குக் கிடைத்தது, அதற்கு வரி செலுத்தியிருக்கிறார்களா, இந்தியாவில் சம்பாதித்ததா, வெளிநாட்டில் சம்பாதித்ததா என்றெல் லாம் விசாரிப்பது முக்கியம்” என்று சொல்லியிருக் கிறார். 100 நாள்களில் கருப்புப் பணத்தை மீட்போம் என்று மோடியுடன் சேர்ந்து பின்பாட்டுப் பாடிய-சிறந்த வழக்குரைஞர் என்று சொல்லப்படுகின்ற அருண் ஜெட்லிக்கு இதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் பற்றித் தெரியாதா?

நேர்மையான வழியில் சம்பாதித்து, அதற்குரிய வரியை முறையாக அரசுக்குச் செலுத்திவிட்டு, மீதிப் பணத்தை இந்திய வங்கிகள் எதிலும் போடுவதற்கு இடமில்லாததால், வெளிநாட்டு வங்கிகளில் வைக்கு மளவுக்கு இந்திய முதலாளிகளும் பெரும் பணக்காரர் களும் பைத்தியம் பிடித்தவர்களா? அருண்ஜெட்லி போன்ற அரசின் ஆளும்வர்க்கத்தினர் மக்களை ஏமாளி களாக, பைத்தியக்காரர்களாக ஆக்கிட முயல்கின்றனர். வெளிநாடுகளில் வங்கிகளில் இந்தியர்கள் வைத்துள்ள பணம், கள்ளத்தனமாகவும், வரிஏய்ப்புகள் செய்தும் சேர்த்த பணம் என்பது ‘கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு’ என்பது போன்ற உண்மையாகும்.

பன்னாட்டுப் புலனாய்வுச் செய்தியாளர்கள் குழு பிப்பிரவரியில் ஜெனிவாவில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கிக் கிளையில் கணக்கு வைத்துள்ள ஒரு இலட்சம் பேரின் பட்டியலை வெளியிட்டபின், இலண்டன் நாளேடுகளில் “எச்.எஸ்.பி.சி.யின் சுவிசு வங்கிக் கிளையில் கடந்த காலங்களில் நிகழ்ந்த தவறுகளுக்கு வருந்துவதாக” முழுப் பக்க விளம்பரம் கொடுத்தது எச்.எஸ்.பி.சி.யின் தலைமை வங்கி.

சுவிட்சர்லாந்தில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கிக் கிளையில் பல நாடுகளின் தொழிலதிபர்கள், அரசியல் வாதிகள், திரைப்பட நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் முதலானவர்கள் கருப்புப் பணத்தைப் போட்டு வைத் துள்ளனர் என்பது அனைவரும் அறிந்த செய்தியாகும். இப்போது உலக அளவில் படிக்கப்படும் ‘கார்டியன்’ நாளேடு ஒரு புதிய செய்தியை வெளியிட்டுள்ளது. இலண்டனைத் தலைமையகமாகக் கொண்ட எச்.எஸ்.பி.சி. வங்கியின் தலைவர் கலிவர் சுவிட்சர் லாந்தில் உள்ள வங்கிக் கிளையில் 76 இலட்சம் டாலரை 2007ஆம் ஆண்டு போட்டிருக்கிறார். இந்தத் தொகையானது “வொர்செஸ்டர் ஈக்விடிஸ் இன்கார்ப்ப ரேஷன்” என்ற பெயரில் போடப்பட்டுள்ளது. இந்நிறுவ னம் பனாமாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும் என்று கார்டியன் நாளேடு அம்பலப்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் குடிமகனான கலிவர், வரி மற்றும் சட்ட பிரச்சினைகளுக்காக ஆங்காங்கில் தங்கியிருக்கிறார் என்பது கூடுதலான ஒரு செய்தியாகும் (தி இந்து-தமிழ், 24-2-15).

கருப்புப் பணத்தைப் பற்றித் தெளிவாகப் புரிந்து கொள்வதற்குக் கலிவரின் வங்கிக் கணக்கு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல் விளங்குகிறது. பிப்பிரவரியில் வெளியான 1,195 பேர் பட்டியலில் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, வைர வணிகர் களான ரசல் மேத்தா, அனுப் மேத்தா, மகாராட்டிர முன்னாள் முதல்வர் நாராயண் ரானே, அவருடைய மனைவி நீலம் நாராயண்ரானே ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. முகேஷ் அம்பானியும், அனில் அம்பானியும், நாராயண் ரானேவும் தங் களுக்கு வெளிநாட்டில் வங்கியில் கருப்புப் பணம் கணக்கில் இல்லை என்று மறுத்துள்ளனர். ஏனெனில் கருப்புப் பணம் கண்ணுக்குத் தெரியாத வைரசு போன்றது. வைரசு நோய் எப்போது, யாரை, உடலின் எந்தப் பகுதியில் தாக்கும் என்பதை எந்தவொரு மருத்துவ வல்லுநராலும் எப்படி அறுதியிட்டுக் கூற முடியாதோ, அதுபோல் கருப்புப் பணமும் யார் பெயரில், எந்த வங்கியில், எவ்வளவு தொகை இருக் கிறது என்பதை எளிதில் கண்டறிய முடியாது. அந்தத் துணி வில்தான் அம்பானி சகோதரர்கள் சுவிசு வங்கியில் கருப்புப் பணம் இல்லை என்று அடித்துச் சொல்கிறார் கள்.

மோடி அரசு வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்ப தற்காக எடுக்கவுள்ள தீவிர நடவடிக்கைகளை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி 28-2-15 அன்று தன் பட்ஜெட் உரையில் அறிவிப்பார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. 1971ஆம் ஆண்டில் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் (GDP) 7 விழுக் காடு அளவில் இருந்த கருப்புப் பணத்தின் அளவு இப்போது 75 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. குறிப் பாகக் கடந்த முப்பது ஆண்டுகளில் தாராளமயம், தனியார் மயம், உலக மயம் என்ற பெயரில் பெரு முதலாளிய நிறுவனங்கள் தங்குதடையின்றி முறை கேடான வழிகளில் கொள்ளையடிக்க அரசுகளே வழி வகை செய்ததுதான் கருப்புப் பணம் இந்த அளவுக்குப் பெருகியதற்குக் காரணமாகும். அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், இடைத்தரகர்கள் ஆகியோர் பெரு முதலாளிய நிறுவனங்களுடன் சேர்ந்து கொள்ளை யில் பங்குபெற்றனர்.

எனவே இந்தியாவில் தற்போது, மேல்தட்டில் 10 விழுக்காடாக உள்ளவர்களிடம் நாட்டின் செல்வத்தில் 74 விழுக்காடு இருக்கிறது. இன்னும் குறிப்பாகச் சொல்வதானால் 5 விழுக்காட்டுப் பேரிடம் 65 விழுக் காட்டுச் செல்வமும், 1 விழுக்காட்டினரிடம் 49 விழுக் காட்டுச் செல்வமும் இருக்கிறது.

பெருமுதலாளிகளாக, பெரிய வணிகர்களாக, சமூ கத்தின் மேல்தட்டில் உள்ள இந்தப் பத்து விழுக் காட்டினர்தான் இந்தியாவின் அரசியலை, பொருளாதா ரத்தைத் தீர்மானிக்கும் வல்லமை படைத்தவர்களாக, இருக்கிறார்கள். இவர்களின் ஏவலர்களாக அரசியல் வாதிகளும், உயர் அதிகார வர்க்கத்தினரும் இருக் கின்றனர்.

எனவே பத்து விழுக்காட்டினராக உள்ள இந்த மேல்தட்டினரிடம் குவிந்து கிடக்கும் கருப்புப் பணத் தை மீட்போம் என்று மோடி அரசு சொல்வது கொக்குத் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பது போன்ற தேயாகும். கடந்த 28.2.2015 அன்று நாடாளுமன்றத் தில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்த 2015-16 நிதியாண்டுக்கான வரவு-செலவு அறிக்கை இவ்வுண்மையை உலகறிய வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. இது தொடர்பாக அவர் கூறியிருப்ப தாவது.

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத் தை மீட்கப் புதிய சட்டம் விரைவில் நிறைவேற்றப் படும். இச்சட்டம் நடப்புக் கூட்டத் தொடரிலேயே மிகக்கடுமையான விதிகளுடன் தாக்கல் செய்யப்படும். வெளிநாட்டுச் சொத்துகள் மற்றும் வருமானத்தை மறைத்தால் அதிக அளவாகப் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள பணத்தின் மதிப்பில் 300 மடங்கு அபராதமாக விதிக்கப்படும்.

இப்படியெல்லாம் வீரமுழக்கமிடுவது யாரை ஏமாற்ற? மக்களை இவர்கள் எத்தனை காலத்துக்கு முட்டாள்கள் ஆக்கப்போகிறார்கள்?

பா.ச.க.வை, மோடி அரசை, இந்துத்துவத்தை அண்மைக்காலமாக வரிந்து கட்டிக்கொண்டு ஆதரித்து வரும் தினமணி நாளேடு நடுவண் அரசின் கோப்புகள் களவாடப்பட்டது குறித்து 24-2-15 அன்று எழுதிய ஆசிரியவுரையில், “கடந்த இருபது ஆண்டுகளாக, பல கூட்டாண்மை (கார்ப்பரேட்) நிறுவனங்கள் அரசு எத்தகைய கொள்கை முடிவை எடுக்கிறது, எந்த விதமான புதிய அணுகுமுறையைக் கையாள இருக் கின்றது போன்ற தகவல்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடிந்ததால், தங்களுக்கு எதிரான முடிவு களுக்கு முட்டுக்கட்டை போடவும், முடிவுகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றி அமைக்கவும் முடிந் திருக்கிறது. இதில் பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்பு டையதாக இருப்பதால், அவர்களால் டாலர்களை அள்ளி வீசவும், அரசு ஊழியர்களுக்கு வெளிநாட்டுச் சுற்றுப்பயணம், அவர்களது குழந்தைகளுக்கு அமெரிக் கப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி வசதி என்று ஆசைகாட்டி மயக்க முடிந்திருக்கிறது” என்று கருத்து ரைத்துள்ளது.

எனவே, கருப்புப் பணத்தை மீட்பது ஒருபுறம் இருக்கட்டும். மோடி அரசு முதலில் நிலக்கரி மற்றும் பெட்ரோலிய அமைச்சரகத்தின் காப்பறையிலிருந்து இரகசிய கோப்புகள் திருடு போவதைத் தடுக்கட்டும்!

Pin It