பிராமணரல்லாதார் மாபெரும் மக்கள் முன்னேற் றத்தைக் கருதி, ஆதியில் டாக்டர் நாயரும், சர். தியாக ராயரும் ஜஸ்டிஸ் இயக்கத்தை உற்பவித்தார்க ளென்பது உலகமறிந்த விஷயம். அவ்வியக்கத்தின் முக்கிய நோக்கம், சமுதாயத்தில் சமத்துவமும், சரிசம மான உரிமையும் எல்லா வகுப்பினருக்கும் இருக்க வேண்டிய நீதி வழங்க வேண்டுமென்பதும், தாழ்ந்த வர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்ற இலக்கியத்தையே எடுத்தெறிய வேண்டுமென்பதுமே. இவைதான் அவ் வியக்கத்தின் அடிப்படையான தத்துவங்களாகும். நாயரும், தியாகராயரும் அவ்வடிப்படையான கொள் கைகளுக்குச் சிறிதும் மாறுபாடின்றி வேலை செய்தும் வந்தார்கள். கஷ்டப்படும் மக்களும் ஒருவாறு கண் விழிப்படைந்தார்கள். மகாத்மா காந்தி நிர்மாணத் திட்டங்களும், ஜஸ்டிஸ் கொள்கைக்குப் பெரும்பாலும் ஒத்தேயிருந்தன. ஆனது பற்றி பிராமணரல்லாத பெருமக்கள் பெரும்பாலோர் ஜஸ்டிஸ் இயக்கத்தைத் தழுவினார்கள். நாயரும், தியாகராயரும் காலஞ்சென்ற உடனே அவ்வழி வந்த தலைவர்கள்பால் அரசியல் பளு அழுத்தியவுடன் சிறிது மாறுதலுண்டாகியது. எந்த மேலான நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டதோ, அதனைப்பற்றி முக்கிய கவனம் செலுத்தாமல், தவறிப்போய்விட்டது; இதனாலே தேச மக்கள் பேராதரவும் போய்விட்டதென்ற உண்மையை மறைக்க முடியாது.

ஒரு இயக்கம் வலுப்பட வேண்டுமானால் அதற்கு வேண்டிய சக்தியை சாதாரண ஜனங்களிடமிருந்தே பெறல் வேண்டும்; பெற்ற பின்பும் அத்தொடர்பு விட்டுப் போகாமல் தொட்டுக் கொண்டே நிற்கவும் வேண்டும்; இத்தொடர்பில்லா எவ்வியக்கமும் ஆட்டங்கொடுத் துத்தான் போகுமென்பதும் உண்மையே. இத்தத் துவத்தை ஜஸ்டிஸ் கட்சி சிறிது காலம் மறந்து மீண்டும் உணர்ந்திருப்பதாக அவர்கள் வார்த்தைகளிலிருந்து வெளிவந்துவிட்டது.

சென்னை சௌந்திரிய மஹாலில் கூடிய பிராம ணரல்லாதார் மாபெருங் கழகத்தில் நிகழ்த்தப்பெற்ற முக்கியத் தலைவர்கள் சொற்பொழிவுகளில் ஜஸ்டிஸ் கட்சியின் பூர்வ ஞானம் வெளியாயிருக்கிறது பற்றி மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

பார்ப்பனரல்லாத பெருங்கிழவர் ஸ்ரீமான் பச்சை யப்ப முதலியார் கல்லூரியில் ஆதித்திராவிட மக்களை விலக்கி வைத்திருக்கும் கொடுமையின் கூற்றை எதிர்த்துக் கோர்ட்டின் மூலம் தீர்ப்பு வாங்குவதற்கு பனகல் அரசர் பணஉதவி செய்ய முன் வந்துள்ளா ரென்ற சமாச்சாரங் கேட்டு யார் தான் சந்தோஷ மடையாதிருக்க முடியும்?

சர். ஏ.பி. பாத்ரோ, நாம் இயக்கத்தின் அடிப்படை யான நோக்கத்தைக் கருதாமல் ராஜீயத்துறையில் அதிகக் கவனம் செலுத்தி விட்டோமென்றும், அது வருந்தத்தக்கதென்றும், சமுதாய முன்னேற்றமே ராஜீய முன்னேற்றத்திற்கு வழியாகுமென்றும், தாழ்த்தப் பட்டவரென்றும், தீண்டத்தகாதவரென்றும் கூறப்படும் கொடிய வழக்கங்களை உடைத்தெறிய வேண்டு மென்றும், பொது ஸ்தாபனங்களில் அவ்வகுப்பினரைச் சேர்த்துக்கொள்ள மறுப்பது மிகவும் வருந்தத்தக்க தென்றும், தென்னிந்தியாவின் சமுதாய இயல்பு மற்றப் பாகங்களைவிட மிகுதியும் மாறுபட்டிருக்கிறதென்றும், மக்களுக்குள் உயர்வு, தாழ்வும் ஏகபோக உரிமைக் குணமும், உடைத்தெறியப்பட்டு சமத்துவமும், சகோத ரத்துவமும் தழைத்தோங்கச் செய்யப்பட்டாலன்றி வகுப்பு சம்பந்தமான நீதி வழங்கப்பட முடியாது என்றும், 1929இல் வரும் ராயல் கமிஷன் முன்பு கிராமவாசி களின் நிலைமையிலும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வாழ்க்கையிலும் அனுதாபங் காட்டி உதவி செய்யக் கூடுமென்பதை விளக்க வேண்டுமென்றும், இன்னும் பல தெளிவான விஷயங்களையும் வெளியிட்டிருக் கிறார். இதுவே நாயர், தியாகராயர் கொள்கை; இதுவே மகாத்மா காந்தி கொள்கையும், தேசபந்து தாஸ் கொள்கையுமென்று கூடச் சொல்லலாம். ஆகையால் ஜஸ்டிஸ் கட்சியின் பூர்வஞானம் பிரசவ ஞான மாய் மாறிப்போகாமல் அவர்கள் வேலையைத் துரிதமாய்ச் செய்வார்களென்று நம்புகிறோம்.

தீண்டாமை என்ற கொடுமை அறவே ஒழிய வேண்டும்; சில ஆலயங்களில் சில வகுப்பினர் செல்லக் கூடாதென்ற வழக்கம் தொலைய வேண்டும். இவ்விரண்டுந்தான் தென்னிந்தியாவில் முக்கியமான குறைகள். இவை தீர்ந்தால் மற்றவைகளை மாசறக் களைந்து விடலாம். இவை சட்ட மூலமாகவோ, சமு தாயக் கூட்டுறவாலோ, எது சாத்தியமோ அதன் வழி நிவர்த்தி செய்ய ஜஸ்டிஸ் தலைவர்கள் வேலை செய்யத் தயங்குவார்களானால், அவர்கள் அடைந்த தோல்வியை மீண்டும் உயிர்ப்பிக்கவே வாய்ஞானம் படித்தார்களென்ற அபவாதத்திற்கிடமுண்டாகும். “நியாய மான கட்சி”யென்பதை நிலைநாட்ட வேண்டுமானால், தலைவர்களாவது திரிகரண சுத்தியுடையவர்களா யிருக்க வேண்டுமன்றோ? செய்தலரிதென்றால், எளிதில் ஏன் சொல்ல வேண்டுமென்ற கேள்விக்கிடமுண் டாகும். தலைவர்கள் முயற்சிக்கேற்ப ஜஸ்டிஸ், திராவி டன், குடிஅரசு முதலிய பத்திரிகைகளும் ஒத்துழைக்க வேண்டும்; சமயோசிதமான ஆலோசனையுங்கூற வேண்டும்; தென்னாட்டில் தீண்டாமை, ஆலயப் பிரவேசம் முதலிய சீர்திருத்தங்களைப் பற்றி நாம் பன்முறை எழுதி திராவிடன், குடிஅரசு முதலிய பத்திரி கைகளின் அபிப்பிராயங்களை வெளியிடக் கேட்டும், இன்னும் அவைகள் மௌனஞ்சாதிக்கின்றன. ஸர். பாத்ரோ, கனம் பனகல் அரசர் முதலிய தலைவர்கள் கருத்தும் திருத்தமாய் வெளியிடப்பட்டுவிட்டதால், இனியேனும் தத்தம் கருத்துகளைப் பொருத்தமாய்த் தெரிவிக்குமாவென்று பார்ப்போம்.

(“நாடார்குலமித்திரன்”, தலையங்கம்-18-4-1927)

மறு நிமிஷத்தில் சுயராஜ்யம்

நம் பாரத நாட்டு மக்களுக்கு சுயராஜ்யம் என்னும் திருமந்திரத்தை முதலாவது உபதேசம் பண்ணியவர் நம் பாரத திலகம் தாதாபாய் நௌரோஜியவர்களே. பாலகங்காதர திலகர் காலத்தில் படித்தவருள்ளத்தில் மட்டும் அத்திருமந்திரம் தடிப்பேறிக் கொண்டிருந்தது. என்றாலும் அவ்விரு கிழவர்களும் சுயராஜ்யத்திற்கு எல்லை குறிப்பிடவே இல்லை. மகாத்மா காந்திய வர்கள் சுயராஜ்யம் எனும் திருமந்திரத்தைக் கிராமாந் திரங்களுக்கே அதிகமாக உபதேசித்தார். அவருடைய சர்வ சீடர்களுடைய கவனமும் கிராமங்களின் மேலேயே நின்றன.

இவ்வாறின்னும் நான் சொன்னபடி கேட்டு நடப்பீர்களாகில் ஒரு வருஷத்தில் சுயராஜ்யம் என்றார் மகாத்மா காந்தி. ஒரு வருஷத்தில் சுயராஜ்யம் வந்தால் மறு நிமிஷத்தில் பிராமண ஆட்சி செத்துவிடுமென்று பயந்த ஓர் கூட்டத்தார், மகாத்மா காந்தி இயக்கத்தை சாகவைக்கச் சாதகமாயிருந்தார்கள்; இருக்கிறார்கள். இதனாலே மிக நெருங்கிவந்த சுயராஜ்யம் வெகு தூரத்திற்குப்போய் மறைந்துவிட்டது.

இப்போது தேச மகாசபைத் தலைவர் மகானு பாவர் ஸ்ரீமான் ஸ்ரீநிவாசய்யங்கார் சுயராஜ்யத் திருமந் திரத்தை வெகுசுலபமாய்ச் சொல்லிவிட்டார். சென்னை யிலிருந்து அஸ்ஸாமிற்குச் சென்றார்; அஸ்ஸாமி லிருந்து சென்னைக்கு வந்தார்; சென்னையிலிருந்து டில்லிக்குப் போனார். டில்லியிலிருந்து சென்னைக்கு வந்தார். திலகர் கட்டத்தில் கூட்டம் கூட்டினார். இனிச் செய்ய வேண்டியதென்னவென்றாலோசித்தார். காங்கிரஸ் நன்கு நடைபெற்று முடிந்தால் நமக்கு மறு நிமிஷத்தில் சுயராஜ்யம் வருமென்றுரைத்தார். கைதட்டிக் கரகோஷமாய் விட்டது. வந்துவிட்டது சுயராஜ்யம்.

கவர்ன்மெண்ட் சம்பந்தப்பட்ட எல்லாப் பட்டம் பதவிகளை விட்டொழித்தலும், கதர் கட்டலும், நூல் நூற்பதும், மது விலக்குவதும், தீண்டாமை தீர்ப்பதுமே காங்கிரஸ் வேலை என்றும்; இவையெல்லாம் சரிவர நடந்தால் ஒரு வருஷத்தில் சுயராஜ்யம் என்று சொன்னார் மகாத்மா காந்தி. இவைகளில் எதற்காவது லாயக்குள்ளவராக இப்போதேனும் இருக்கிறாரா ஸ்ரீமான் ஸ்ரீநிவாசய்யங்கார்? மறு நிமிஷத்தில் சுயராஜ்யம் வருமென்பதற்கு என்ன ஆதாரமிருக் கிறது? சட்டசபைகளால் ஒரு பிரயோசனமுமில் லையென்று முதலில் தெளிவாய்ச் சொல்லிவிட்டு, சட்ட சபையைவிட்டு விலகாமலிருந்து கொண்டே நான் சாகு முன்னர் தேசத்திற்கேதேனும் கூடுமான கிஞ் சித்துச் சேவை செய்ய நீங்கள் மறுபடி உதவிபுரிய வேண்டுமென்று மறுபடியும் உங்களை நான் கொஞ் சிக் கேட்டுக் கொள்கிறேன். இதன் அர்த்தமென்ன? தேசத்திற்குச் சாதகமான தீண்டாமை விலக்கு, மது விலக்கு, கதர் முதலிய திட்டங்களை நிறைவேற்ற முன்வரமாட்டேன்; தாஸ் திட்டமான கிராம நிர்மான வேலைக்கும் போகமாட்டேன்; சட்டசபை மட்டமா னாலும் திட்டமாய் விடமாட்டேன்; நீங்களெல்லோரும் என் வாயையே பார்த்துக் கொண்டே எனக்குதவி செய்துகொண்டேயிருக்க வேண்டுமென்பதா? பிரிட்டீஷ் ஆட்சியும் பிராமண ஆட்சியும் நிரந்தரமாய் என்றும் நின்று நிலவ வேண்டுமென்று கேட்டுக் கொள்வதா? வாசகர்களே கவனித்துக் கொள்ளட்டும்.

நாமிதுகாறும் சட்டசபையிலிருந்த அனுபோகத் தினால் காங்கிரசைப் பார்க்கிலும் சட்டசபை பெரிதல்ல வென்று சொல்லியவர், சென்னைச் சட்டசபையில் இரட்டையாட்சிக்கு பாதபூசை செய்து கொண்டிருக்கும் தமது சகாக்களைப் பற்றி ஒரு வார்த்தையாவது சொல்லவில்லை. தன்னையும் கதரையும் தீண்டாமையையும் பற்றிப் பேசவேயில்லை. “சட்டசபை மட்டந்தான் ஆயினும் அதில் நான் ஒட்டிக்கொண்டே யிருக்கிறேன். நீங்கள் எனக்குதவியாகவே இருங்க ளென்று” பொருள்படப் பேசிவிட்டார். சுயராஜ்யக் கட்சி யின் வேஷம் வர வர வெளிவருவதைக் கண்டேனும் தேச மக்கள் தெளிவடைவார்களாக!

(- “நாடார் குல மித்திரன்”, 18-4-1927)

Pin It