சில பெயர்கள் சமூகத்தின் முகத்தில் வடுக்களாக நிலைத்து விடுகின்றன. வாச்சாத்தி என்ற பெயரை உச்சரித்ததுமே நடுங்கும் கைகளைக் கொண்டு, ஆறாத தன் காயத்தைத் தடவிப் பார்க்கிறது இச்சமூகம். காட்டில் செம்மையான வாழ்வை மேற்கொண்டிருந்த பழங்குடியினர், ஒன்றுமில்லாதவர்களாக ஆக்கப்பட்ட துயர வரலாற்றின் சிறு பகுதி இது. அதிகார வர்க்கத்தினர் "என்ன வேண்டுமானாலும் செய்யலாம்' என்ற வக்கிர மனப்போக்கு, தன் ஆதிக்கத்தை ஆணவத்தோடு நிலை நிறுத்திய களம் வாச்சாத்தி. பழங்குடியினரை அதிகார வர்க்கம் வேட்டையாடிய இடத்தை களமெனச் சொல்வதுதான் தகும். எதிரி நாட்டை முற்றுகையிடுவதைப் போல சூழ்ந்து கொண்டு, ஊரையே சூறையாடி, ஆண்களைக் கொடூரமாகத் தாக்கி, பெண்களை வன்புணர்ந்து, குழந்தைகளைக்கூட உயிருக்காக ஓட வைத்தது – யாரோ சர்வாதிகார நாட்டின் தலைவனில்லை...
ஜனநாயகத்தையும் – சமத்துவத்தையும் உறுதிமொழியாக ஏற்றுள்ள அரசு அதிகாரிகளும், சீருடைக் காவலர்களும்தான்! ஒரு போருக்கானத் திட்டமிடலோடு நடைபெற்ற இந்த அரச பயங்கரவாதம் – இந்தியாவின் போலி ஜனநாயகத்திற்கும், இந்நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரின் கையறு நிலைக்கும் மற்றுமொரு எடுத்துக்காட்டு. 269 குற்றவாளிகள், 159 சாட்சிகள், முறையீடு, மேல் முறையீடு, மாவட்ட, உயர் மற்றும் உச்ச நீதி மன்றங்களில் மாறி மாறி முறையீடு, மேல் முறையீடு, உண்மையறியும் குழுக்களின் அறிக்கைகள், சி.பி.சி.அய்.டி. விசாரணை என 19 ஆண்டுகளாக நடைபெற்று வரும் வாச்சாத்தி வழக்கும், நீதிக்கான வாச்சாத்தி மக்களின் நெடிய போராட்டமும், அரச பயங்கரவாத வரலாற்றில் மிக முக்கியமானதாக அமைந்துவிட்டது.
தருமபுரி மாவட்டம் பேதாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வாச்சாத்தியில்தான் அந்த அட்டூழியம் அரங்கேறியது. 1992 சூன் 20. வனப்புமிக்க சந்தன மரங்கள் நிறைந்த சித்தேரி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் வாச்சாத்தியில், 90 சதவிகிதம் பழங்குடியினரே வசிக்கின்றனர். 1992 இல் 290 குடும்பங்களும் 655 பேரும் இருந்தனர். இவர்கள் ஒவ்வொருவரின் நினைவுகளிலிருந்தும் நீங்க முடியாத துயரமாக, கொடுங்கனவாக அமைந்துவிட்டது அந்த வேட்டை. காட்டு விலங்குகளை வேட்டையாடுவதில்கூட நெறிமுறைகளைப் பின்பற்றிய இப்பழங்குடியினர், சக மனிதர்களாலேயே வேட்டையாடப்படுவோம் என சற்றும் எண்ணியிருக்க மாட்டார்கள். வாச்சாத்தி மக்களில் பெரும்பாலானோர் சொந்தமாக நிலம் வைத்திருக்கின்றனர். விவசாயமும் மலைக்காட்டில் விறகு சேகரிப்பதும், கூலி வேலைக்குச் செல்வதுமே இவர்களின் வருமானத்திற்கான வழி. பகலெல்லாம் உழைத்து விட்டு, இருள் கவ்வும் போதே கூட்டுக்குள் அடைந்து விடுவது வாச்சாத்தியில் வழக்கம்.
மின்சாரம், போக்குவரத்து என எந்த வசதியும் இன்றி மக்கள் வசித்து வந்ததே இதற்கு காரணம்! வாச்சாத்தி அமைந்திருப்பது சமவெளிதானெனினும், அங்கிருந்து அரூர், தருமபுரி போன்ற ஊர்களுக்கான முக்கிய சாலையை அடைவதே பெரும் சவாலான விஷயமாக இருந்தது அப்போது. காடுகளுக்குள் இருப்பதைப் போன்ற நினைவுடனே, நாகரிகமென நாம் கருதிக் கொண்டிருக்கும் எந்த பாதிப்புமின்றி வாழ்ந்து வந்தனர். மலையடிவாரத்தில் விவசாயமும், அடர்ந்த காடுகளுக்குச் சென்று விறகு சேகரிப்பதும் மட்டுமே இன்றும் தொழிலாக இருக்கிறது என்றாலும், வாச்சாத்தி மக்கள் மட்டுமல்லர் – காடுகளிலிருந்து துண்டிக்கப்பட்ட ஒவ்வொரு பழங்குடி மனிதரும் – நினைவிலும் கனவிலும் காடுள்ளவர்களாகவே வாழ்ந்து மடிகிறார்கள்.
150 ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட வனப் பாதுகாப்புச் சட்டத்தால் நிகழ்ந்த பெருந்துயரம், பழங்குடியினரை காடுகளிலிருந்து துண்டித்தது. வனத்துறையின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் தான் காடுகள் வியாபார மய்யமாக ஆக்கப்பட்டன. தங்கச் சுரங்கத்தை சுரண்டுவதைப் போல, காடுகளை சுரண்டிக் கொண்டே இருக்கின்றனர் வனத்துறை அதிகாரிகள். ஆங்கிலேயர்கள் வெளியேறியபோது 40 சதவிகிதமாக இருந்த காடுகள், வனத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் வந்ததும் 17 சதவிகிதமாகக் குறைந்துவிட்டன. இதில் அடர்ந்த வனங்கள் வெறும்12 சதவிகிதம்தான் என்கிறது அரசின் அறிக்கை. இந்த கொடுமை நிகழ்ந்தது வனத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக் கொள்ளும் வனத்துறையினராலா அல்லது பழங்குடியினராலா? வளராது என தெரிந்த எதையும் பழங்குடியினர் வெட்டுவதில்லை. காடுகளில் புதையலைப் போல இருக்கும் அரிய மரங்கள், எத்தனை நூற்றாண்டுப் பழமையானவை என்ற உணர்வு இல்லாமலே அவற்றை வெட்டி சாய்க்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள 36 வகையான பழங்குடிகளில் பெரும்பாலானவர்கள் சந்தித்து வரும் துயரமான சவாலை, வாச்சாத்தி மக்களும் சந்திக்க நேர்ந்தது. வாச்சாத்தி அமைந்துள்ள சித்தேரி மலைப் பகுதியில் சந்தன மரங்கள் அடர்ந்திருந்தன. காடுகளைத் தாண்டியதோர் வாழ்வை அறிந்திராத வாச்சாத்தி மக்களுக்கு, சித்தேரி மலை சந்தன மரங்களுக்கு உலகளவில் தேவை இருக்கிறதென்றோ, அவை கொள்ளை விலை மதிப்புடையவை என்றோ தெரிந்திருக்க நியாயமில்லை! ஆனால், வனத்துறை அதிகாரிகளுக்கு அது தெரிந்திருந்தது. பழக்கப்பட்ட வனவிலங்குகள் மனிதர்களின் அதிகாரத்திற்கு அடங்குவதைப் போல, பழங்குடியினரை கட்டற்ற தங்களின் அதிகாரத்தால் அடிமைகளாக்கியது வனத்துறை.
காடுகளுக்குள் சுள்ளிகள் பொறுக்கக்கூட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பணவெறி பிடித்த வனத்துறை அதிகாரிகளின் ஆணைப்படி, சந்தன மரங்களை வேரோடு பிடுங்கும் கொடுமையைச் செய்ய, சித்தேரி மலைப் பகுதியின் சுற்றுவட்டார பழங்குடியினர் கட்டாயப்படுத்தப்பட்டனர். வனத்துறை அதிகாரிகளின் மிரட்டலுக்கு அடிபணிந்தும், கிடைக்கும் சொற்ப கூலிக்காகவும் சந்தன மரங்களை வெட்டித் தருவது சிலரின் வழக்கமாக இருந்ததே தவிர, பழங்குடியினர் எவரும் தங்களின் வங்கி சேமிப்பை அதிகரிக்கவோ, வளமான வாழ்வுக்காகவோ மரங்களை வெட்டவில்லை. சந்தன மரங்களை வெட்டித்தர மறுத்தவர்களை அதிகாரிகள் தண்டித்தனர். அடிப்பதும் அடங்கிப் போவதுமான ஆதிக்க ஆட்டத்தின் உச்சகட்டமே வாச்சாத்தி வன்கொடுமை.
1992 சூன் 19. வழக்கம் போலவே சந்தன மரங்களை வெட்டித் தர வாச்சாத்தியைச் சேர்ந்த சிலரை வற்புறுத்தியிருக்கின்றனர் அதிகாரிகள். இதற்கு அவர்கள் மறுத்த நிலையில், மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் சண்டை மூண்டு, மக்கள் அதிகாரிகளை தாக்கியிருக்கின்றனர். அடிமைகளின் கையால் அடிவாங்கிய ஆண்டானைப் போல சுரணை கிளர்ந்து, வாச்சாத்தியில் மறுநாளே போர் தொடுக்க கிளம்பி வந்தது அதிகாரிகள் கும்பல். உழைத்துக் களைத்து இளைப்பாறும் மாலைப் பொழுதின் மென்மையைச் சிதைத்து வரிசையாக வந்து நின்றன காவல் வாகனங்கள். கலவர பூமிக்கு விரைந்தவர்களைப் போல, நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர். சுமார் முன்னூறு பேர் வனத்துறை மட்டுமின்றி காவல் துறை, வருவாய்த்துறை அதிகாரிகளும் இருந்தனர். அதிகாரிகள் மீது கை வைத்தவர்களுக்கு தாங்கள் யாரென நிரூபிக்க ஒவ்வொருவரும் துடித்தனர். வேட்டை நடத்துவதற்கான அரசு ஆணையை, போர்வாளைப் போல பிடித்திருந்தனர்.
ஊரில் உள்ள அத்தனை பேரும் தரதரவென இழுத்து வரப்பட்டு, ஊரின் மய்யத்தில் அமைந்திருக்கும் ஆலமரத்தடியில் அமர வைக்கப்பட்டனர். பெண்கள், குழந்தைகள், வயதானோர் எனப் பாகுபாடின்றி அடித்து துவைத்து உட்கார வைக்கப்பட்டனர். வெறியாட்டம் தொடங்குவதற்கு முன்பே, ஆலமரத்தடியில் நின்றிருந்த பெண்களில் 18 பேரை மட்டும் தேர்ந்தெடுத்து, வாகனத்தில் ஏற்றி ஏரிக்கரையை நோக்கிக் கொண்டு சென்றனர் அதிகாரிகள். பதுக்கி வைத்திருக்கும் சந்தனக் கட்டைகளை எடுப்பதற்கு அழைத்துச் செல்வதாக ஒரு நாடகம் அரங்கேறியது.
பெண் காவலர்கள் இருந்தும் அவர்கள் இப்பெண்களோடு செல்லவில்லை. ஏரிக்கரைக்கு சென்றதும், ஒவ்வொரு பெண்ணை யும் தனித்தனியாக இழுத்துச் சென்று மூவர் நால்வராகக் கூட்டு வல்லுறவு கொண்டனர். இதில் 13 வயதேயான சிறுமியும் இருந்தார். பருவமெய்தாத நிலையில் ரத்தம் கொட்ட அவர் அனுபவித்த கொடுமை, வக்கிரத்தின் உச்சம். 18 பெண்களையும் வன்கொடுமை செய்து அதே வாகனத்தில் ஏற்றி, அரூர் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். ஆலமரத்தடியில் குவிந்திருந்த உறவுகளைப் பார்த்து பெண்களும், உடைகள் கிழிக்கப்பட்டு கசங்கி நின்ற பெண்களைப் பார்த்து உறவுகளும் கதறி அழுதனர்.
இரவு முழுவதும் வீடுகள் சூறையாடப்பட்டன. பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. கிணற்று நீர், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணையால் பாழ்படுத்தப்பட்டது. வாழ்நாள் சேமிப்பாக இருந்த நகைகளும் பணமும் திருடப்பட்டன. கையில் சிக்கிய அத்தனை பேரையும் அடித்து நொறுக்கினர். ஊருக்குள் இருந்தவர்கள் சிறைப்படுத்தப்பட்ட நிலையில், வெளியில் சென்றவர்கள் தகவலறிந்து மலைகளுக்குள்ளும் வேறு ஊர்களுக்கும் ஓடி ஒளிந்தனர். இதற்கிடையில், அழைத்துச் செல்லப்பட்ட பெண்களை விடிய விடிய அடித்துத் துவைத்தனர் அதிகாரிகள். தலைவரான ஊர் கவுண்டரை அழைத்து வந்து, அவரது ஆடைகளை பெண்களையும் பெண்களின் ஆடைகளை அந்தப் பெரியவரையும் அவிழ்க்கச் சொல்லி அடித்தனர். ஊர் கவுண்டரை துடைப்பத்தால் அடிக்கும்படி வற்புறுத்தப்பட்டனர் பெண்கள்.
மறுநாளும் அரூர் வனத்துறை அலுவலகத்திலேயே அடைத்து வைக்கப்பட்டனர். வாச்சாத்தியில் இருந்து கொண்டு வரப்பட்ட உணவுப் பொருட்களையும், ஆடு கோழிகளையும் சமைத்து சாப்பிட்டனர் அதிகாரிகள். வாச்சாத்தி மக்கள் சந்தன மரக் கடத்தலில் ஈடுபடுவதைத் தடுக்கவே, இப்படியொரு நடவடிக்கையை எடுக்க நேர்ந்தது என நியாயம் கற்பிக்க, ஏற்கனவே அடுக்கி வைக்கப்பட்ட சந்தனக் கட்டைகளின் முன்பு 18 பெண்களையும் நிறுத்தி வைத்து புகைப்படமெடுத்தனர். மாலை 5 மணியளவில் மாஜிஸ்திரேட் முன்நிறுத்தி வைக்கப்பட்ட பின்னர், சேலம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர் பெண்கள்.
சூலை 20 தொடங்கி மூன்று நாட்கள் வாச்சாத்தியை மொத்தமாக சிதைத்து வெளியேறியது, அரச பயங்கரவாத கும்பல். இப்படியொரு கொடுமை நடந்ததற்கான சுவடு கூட வெளியுலகத்திற்கு தெரியவில்லை. வாச்சாத்தி மக்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை சொல்லி அழக்கூட ஆளின்றி புழுங்கிக் கொண்டிருந்த நிலையில்தான், மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சித்தேரி மலை மாநாடு கூடியது. சூலை 7 அன்று கூடிய மாநாட்டில் பங்கேற்ற மலைவாழ் மக்கள் சிலர், அரைகுறையாக கேள்விப்பட்ட விஷயங்களை எடுத்துரைக்க, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் போராட்டத்தில் இறங்கியது.
ஊரே அழிக்கப்பட்டு, வாச்சாத்தி ஒரு மயான பூமியாகவே மாறிப் போயிருந்த நிலையில், போரட்டத்தை எங்கு, எப்படி தொடங்குவதெனத் தெரியாமல் திணறியது தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம். மலைகளுக்கும் பிற ஊர்களுக்கும் ஓடிப் போயிருந்தவர்களை ஒவ்வொருவராகக் கண்டுபிடிப்பதற்குள் நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தன. ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மனு அனுப்பப்பட்டது. பத்திரிகை அலுவலகங்களுக்கும் மனுவின் பிரதி அனுப்பி வைக்கப்பட்டது. இது உண்மையாக இருக்கும் என நம்ப, எந்த செய்தி நிறுவனமும் தயாராக இல்லை. அதே மனுவை சில நாட்கள் கழித்து மார்க்சிஸ்ட் கட்சியின் அப்போதைய தலைவரான ஏ. நல்லசிவன் மூலம் முதலமைச்சருக்கு அனுப்ப, அதன் பின்னரே ஊடகங்கள் வாச்சாத்தி என்ற பெயரை உச்சரிக்கத் தொடங்கின.
இப்படியொரு கொடுமை நடந்ததை யாராலும் ஏற்க முடியவில்லை. அரசும் அதிகாரிகளும் உறுதியாக மறுத்துவந்த நிலையில், ஆதாரங்களைத் திரட்டுவதே பெரும் சவாலாக அமைந்தது. வன்கொடுமை செய்யப்பட்ட பதினெட்டு பெண்கள் உட்பட 90 பேர் – 28 குழந்தைகள் – 15 ஆண்கள் என சிறையில் அடைக்கப்பட்ட 133 பேரையும் பிணையில் வெளியில் கொண்டு வருவது எளிதானதாக இல்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.பி.அய். விசாரணை கோரி பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட, நீதிபதி பத்மினி ஜேசுதுரை வழக்கைத் தள்ளுபடி செய்ய சொன்னக் காரணம், வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டியது.
நீதிபதிகளின் சமூகப் பார்வையையும் நீதித்துறையின் நம்பகத் தன்மையையும் புரிய வைக்கப் போதுமானதாக அமைந்தன அந்த வார்த்தைகள் : “பொறுப்புள்ள அதிகாரிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள் என்பது நம்பத்தகுந்ததாக இல்லை.'' அரசு அதிகாரிகள் குற்றங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக இருப்பார்கள் என்று ஒரு நீதிபதியே நம்புவது, நீதித்துறையின் தரத்தின் மீது பல கேள்விகளை எழுப்புகிறது. வகிக்கும் பதவியை வைத்து குணத்தை எடை போடும் தத்துவம் மநுதர்மத்திலிருந்து உருவப்பட்டது. பார்ப்பனர்கள் குற்றங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற வாதத்தையே கொஞ்சம் மாற்றிக் கூறி, வாச்சாத்தி மக்களை இழிவுபடுத்தினார் நீதிபதி பத்மினி ஜேசுதுரை.
உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு, வழக்கை விரைவாக முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு பதினெட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றும் நீதிமன்றத்தில் நடையாய் நடந்து கொண்டிருக்கின்றனர் வாச்சாத்தி மக்கள். 1992 ஆம் ஆண்டு முழுக்கவே மார்க்சிஸ்ட் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தியது. இப்பிரச்சினை நாடாளுமன்றத்திலும் எழுப்பப்பட்ட நிலையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக பரிசோதனை செய்திருந்தாலும்கூட, வன்புணர்வுகளை உறுதி செய்வது தோல்வியடைந்துவிடுகிற நிலையில், ஏறக்குறைய இரண்டு மாதங்கள் கழித்து எஸ்.சி.,எஸ்.டி. ஆணையம் நடத்திய விசாரணையில், பாலியல் வன்கொடுமையை உறுதி செய்ய முடியவில்லை.
ஆனால், குற்றங்களை உறுதிப்படுத்திய விசாரணை அறிக்கையோடு, மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் பேரில் அடிப்படை வசதிகள், குடும்ப அட்டை, நிலப்பட்டா, பள்ளிச்சான்றிதழ் என அனைத்தையும் அரசு வழங்கியது. குற்றம் நடைபெறவே இல்லை என உறுதியாக நின்ற அரசிடமிருந்து வாச்சாத்தி மக்கள் பெற்ற முதல் வெற்றி இது!
எஸ்.சி.,எஸ்.டி. ஆணையத்தின் விசாரணை அறிக்கையின் விளைவாக, உயர் நீதிமன்றம் புலனாய்வுத் துறை விசாரணைக்கு 1995 இல் உத்தரவிட்டது. குற்றவாளிகள் மீது மாவட்ட கோவை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. ஆனால், அதன் பிறகும் விசாரணை தொடங்கப்படவில்லை. தனி நீதிமன்றம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை அரசு கண்டுகொள்ளவில்லை. 2002 இல் வாச்சாத்தி வழக்கு, கிருஷ்ணகிரி அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் மாறிக்கொண்டே இருந்தனர். ஆனால், வழக்கு மட்டும் முடிவுக்கு வரவில்லை.
குற்றமிழைத்த அதிகாரிகள் வெவ்வேறு ஊர்களுக்கு மாற்றலாகிச் சென்றனர். சட்டத்தின் அத்தனை ஓட்டைகள் வழியாகவும் குற்றவாளிகள் தப்பிக்க வைக்கப்பட்டனர். சி.பி.அய். விசாரணையின் போது குற்றவாளிகளை அடையாளங்காட்ட அணிவகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வனத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் வன்முறையில் ஈடுபட்டனர். உயர் நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவின் பேரில், சேலம் அமர்வு நீதிமன்றத்தில் அணிவகுப்பு நடந்ததில் 11 பேரை அடையாளம் காட்டினர் பாதிக்கப்பட்ட பெண்கள். ஆனாலும் விசாரணை முடிவுக்கு வரவில்லை.
பதினெட்டு ஆண்டுகளாக நீதிமன்றத்திற்கும், போராட்டங்களுக்குமாக அலைவது எத்தனை அயர்ச்சியூட்டுவதாக இருக்கும்! முற்றிலும் சிதைக்கப்பட்ட வாழ்விலிருந்து ஒரு நூலிழையைப் பிடித்துக் கொண்டு போராடுவதற்கான உறுதியைத் திரட்டுவது எல்லோராலும் முடியாதது. உழைத்தால் கூலி, அன்றாடம் கூலி கிடைத்தால் மட்டுமே உணவு என்ற வாழ்நிலையில் வாச்சாத்தி மக்கள் உள்ளனர். குறிப்பாக, வன்கொடுமைக்கு ஆளான 18 பெண்களும் இன்றும் விசாரணைக்கு தவறாமல் வந்து – தாங்கள் சிதைக்கப்பட்ட கதையை ஒவ்வொரு நீதிபதி முன்பும் சொல்லிக் கொண்டேதான் இருக்கின்றனர். எந்தவொரு கொடுமையையும் மறந்துவிடவும் கடந்து விடவும் முயல்வதுதான் மனித இயல்பு! நீதிக்கான நீண்ட நெடியத் தேடலிலும் போராட்டத்திலும் வாழ்வின் கொடுந் தருணத்தை மறக்க வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது வாச்சாத்தி மக்களுக்கு.
வாச்சாத்தி மக்களை அண்மையில் சந்தித்த போது கூட, அவர்களின் ஒவ்வொரு வார்த்தையிலும் பதற்றத்தை உணர முடிந்தது. வல்லுறவுக்கு ஆளாகும் பெண்களுக்கு வாழ்நாள் முழுவதும் இந்த ஆணாதிக்க சமூகம் கொடுக்கும் தண்டனை எத்தனை வக்கிரமானது என்பதற்கு, துயர சாட்சி வாச்சாத்தியில் பாதிக்கப்பட்ட 18 பெண்களின் வாழ்க்கை. வல்லுறவுக் கொடுமையைச் சொல்லிச் சொல்லியே கொடுமைப்படுத்திய கணவரை விட்டு பிரிந்து வாழ்கின்றனர் சிலர். வல்லுறவு எனும் கொடுமையை "கெட்டுப் போவது' எனும் பாலியல் விதியாகக் கருதும் சமூகத்தில், பாதிக்கப்பட்ட அடையாளத்தை வலியோடு உரைப்பது கூட அசிங்கமாகிவிடுகிறது.
கணவர்களிடமிருந்து நன்மதிப்பை பெற முடியாத பெண்கள், பிள்ளைகளிடமும் மரியாதை போய்விடுமோ என்ற பதற்றத்திலேயே வாழ்கின்றனர். குடும்பத்தாலும் சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்டு பிடிப்பற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எல்லோருமே இழந்ததைப் பெறுவதுதான் நீதியெனில், அது எப்போதுமே இவர்களுக்கு கிடைக்கப் போவதில்லை. ஏனெனில், இப்பெண்கள் இழந்தது நல்வாழ்விற்கான தங்கள் கனவை.
"தாமதமாக வழங்கப்படும் நீதி அநீதி' என்பது நீதியின் தத்துவம். அரசு அதிகாரி களால் நிகழ்த்தப்பட்ட வெறியாட்டத்தை வேடிக்கை பார்த்தது மட்டுமின்றி, குற்றத்தை மறுத்து வழக்கை இழுத்தடித்துக் கொண்டிருப்பது வரை, அரசும் நீதித்துறையும் வாச்சாத்தி மக்களுக்கு இழைத்துக் கொண்டிருப்பது மிகப் பெரிய அநீதியே. 269 குற்றவாளிகளில் 19 பேர் இறந்தே விட்டனர். மாறிக் கொண்டே இருக்கும் நீதிபதிகளாலும், வந்து கொண்டே இருக்கும் வாய்தாக்களாலும் பாதிக்கப்பட்டவர்கள் மென்மேலும் கொடுமையை அனுபவிக்கிறார்கள் என்பதே உண்மை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலே 50 சதவிகித இழப்பீடு வழங்க வேண்டும் என்பது சட்டம்.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆறு வகையான குற்றங்களுக்காக இடைக்கால நிதியாக மட்டும் இரண்டரை கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டும். அதை தமிழக அரசு கண்டுகொள்ளவே இல்லை. உயர் நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவுகளுக்குப் பின்னர், இன்று வரை ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் மட்டுமே இம்மக்களை வந்தடைந்திருக்கிறது. தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு கிடைக்க வேண்டிய நிதியும் தாமதமாகக் கூட அவர்களை சேர்வதில்லை என்பதற்கு, வாச்சாத்தி வன்கொடுமை நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டு. வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்கள் இருந்து என்ன பயன்? சாதிய கட்டமைப்பு இருக்கிற வரை, அவை ஒருபோதும் பலனளிக்கப் போவதில்லை.
வாச்சாத்தி வழக்கு இத்தனை ஆண்டுகளாக ஏன் முடிவுக்கு வரவில்லை என உச்ச நீதிமன்றமும், உயர்நீதி மன்றமும் கேள்வி எழுப்புகின்றன. அதிமுக ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட மிக மோசமான வன்கொடுமையான வாச்சாத்தி வரலாற்றில் இடம் பிடித்தது எனினும், ஆட்சி மாறியும் நியாயம் நிலைக்கவில்லை. வாச்சாத்திக் கொடுமைக்கு வழங்கப்படும் நீதி – இந்தியா முழுவதும் வனத்துறையினரால் துன்புறுத்தப்பட்டு, வனங்களில் இருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வரும் பழங்குடியினருக்கு புது நம்பிக்கையைக் கொடுக்கும். அதனாலேயே இந்த வழக்கு இவ்வளவு தாமதமாகிறது.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 3 தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்; ஒவ்வொரு வாரமும் 13 தலித்துகள் கொல்லப்படுகின்றனர்; ஒவ்வொரு நாளும் தலித்துகளுக்கெதிராக 27 வன்கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றன. சாதிய வக்கிர எண்ணங்கள் நவீனமடைந்து வலுப்பெற்று வரும் சூழலில், இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள், ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கத்தான் வாய்ப்புகள் அதிகம். காவல் நிலையத்திற்கு வரும் தலித் வழக்குகள், பெரும்பாலும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுவதில்லை என்பதே உண்மை.
தலித் மற்றும் பழங்குடியினர் மீதான வன்முறைகள் பெரும்பாலும் பெருங்கும்பலாலேயே நிகழ்த்தப்படுகின்றன. தனி நபர் பிரச்சனைகளாக இருந்தாலும் தலித் ஒருவரை தாக்க வேண்டுமெனில், ஆதிக்கசாதிக்காரனுக்காக ஊரே திரண்டு வந்து தாக்குதல் நடத்துவதுதான் வழக்கமாக இருக்கிறது. கீழ் வெண்மணி, சங்கனாங்குளம், திண்ணியம், கயர்லாஞ்சி வன்கொடுமைகளிலும்; தாமிரபரணி, குண்டுப்பட்டி, வாச்சாத்தி போன்ற அரச பயங்கரவாதங்களிலும் வன்முறையாளர்கள், கும்பல் வியூகத்தையே கையாண்டிருக்கின்றனர். நூற்றுக்கணக்கானோர் இணைந்து ஒரு வன்முறையில் ஈடுபடும்போது – முக்கிய குற்றவாளிகளைக் கண்டறிவதும், ஆதாரங்களையும் சாட்சிகளையும் திரட்டுவதும் சிரமமாகிறது. அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி இழுத்தடிக்கப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட அத்தனை வன்கொடுமை வழக்குகளிலும் ஒடுக்கப்பட்டோருக்கான நீதியின் நோக்கம் சிதைக்கப்பட்டு, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகள் தேங்கிப் போய் கிடக்க, அதை விரைவாக முடித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்கும் முயற்சியை இங்கு யாருமே முன்னெடுத்திருப்பதாகத் தெரியவில்லை. மார்க்சிஸ்ட் கட்சியின் தனித்த முயற்சியாலேயே வாச்சாத்தி வழக்கு இந்த அளவிற்கேனும் வந்திருக்கிறது.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது. முதுமை காரணமாக குற்றவாளிகளில் சிலர் இறந்து விட்டனர். அப்படியெனில், இந்த வழக்கின் முதிர்ச்சி நீதித்துறைக்கு உறைக்கவில்லையா? நள்ளிரவிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட நீதிமன்றம் செயல்படுகிற இக்காலத்தில், இத்தனை ஆண்டுகளில் இன்னும் குற்றவாளிகளை தண்டிக்க முடியாமல் இருப்பது, நீதித்துறையின் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
முற்றிலும் ஒடுக்கப்பட்டோருக்கு எதிரான ஒரு சமூகத்தில், நீதித்துறையிடம் மட்டும் நீதியை நாம் பெற்றுவிட முடியுமா என்ன? முடியுமெனில், இந்நேரம் நிலுவையில் உள்ள வன்கொடுமை வழக்குகளில் பாதிக்குப் பாதியேனும் குறைந்திருக்க வேண்டுமே! ஆதிக்க சாதியினர் கூட்டு சேர்ந்து தலித் குடும்பத்தை வன்கொலை செய்த கயர்லாஞ்சி வழக்கில் கூட, சாதி வக்கிரத்தை மறைத்து "முன்விரோதமே காரணம்' என தீர்ப்பளித்திருக்கிறது நீதிமன்றம். மக்களின் பயங்கரவாதத்திலேயே நீதியில் பிறழ்வு உண்டாகும்போது, அரச பயங்கரவாதத்தில் கேட்கவும் வேண்டுமா?
தலித் மற்றும் பழங்குடி இயக்கங்களும், கட்சிகளும் பெரும்பாலும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதால் – இப்போதெல்லாம் வன்கொடுமைகளின் நீதிக்கான குரலை நாம் கேட்க முடிவதில்லை. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பெரும்பாலும் தவறாகவே பயன்படுத்தப்படுவதாக 22.9.2010 அன்று நடைபெற்ற கருத்தரங்கில் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். தலித் மக்களுக்கும், பழங்குடியினருக்கும் இச்சாதிய சமூகத்தில் மரியாதையோடு வாழ்ந்துவிட சிறிதளவேனும் வாய்ப்புகள் இருக்கின்றதென்றால், அது இட ஒதுக்கீட்டாலும் இதுபோன்ற சிறப்புச் சட்டங்களாலும்தான். தலித்துகளுக்கான சட்டரீதியான, சமூக ரீதியான உரிமைகளை கேள்வி கேட்கும் ராமதாஸ், பிற்படுத்தப்பட்டோருக்கான உரிமைகளை எந்த அடிப்படையில் கோருகிறார்?
ஒடுக்கப்பட்டோருக்கான சட்டரீதியான உரிமைகளையும் நலன்களையும் இழிவுபடுத்தவும், கேள்வி கேட்கவும் ஆதிக்க சாதியினர் இந்த நாடு முழுக்க நிரம்பியிருக்கிறார்கள். ஒடுக்கப்பட்டோருக்கான சமூக ரீதியான, சட்டரீதியான உரிமைகளை சலுகைகள் என்று சுருக்கி, அவற்றை அழித்தொழிக்க சாதியவாதிகள் கடுமையாக முயன்று வருகிற காலம் இது. இடஒதுக்கீட்டிற்கு எதிராக எழுப்பப்படுகிற கேள்விகளே இதற்கு சான்று.
வரதட்சணைத் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறி, அச்சட்டத்தை நீக்க ஆண் சமூகம் தற்போது கோரிக்கை வைத்து வருகிறது. ஒரு சிலர் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக, பலருக்கும் கிடைக்கும் நீதியை நாம் பறிக்க முடியமா? ஆணாதிக்கமும் சாதியாதிக்கமும் ஒழிகிற வரை, இதுபோன்ற சட்டங்கள் இன்னும் வலுமிக்கதாகவே செயல்பட்டாக வேண்டும்.
ஒரு குற்றத்துக்கு வழங்கப்படும் நீதிதான் அதே போன்ற மற்றொரு குற்றம் நடக்காமல் இருப்பதற்கான பாடம்! தலித்துகள் மீதான வன்கொடுமைகளில் மட்டும் இந்த பாடங்கள் பிறழ்ந்து விடுகின்றன. அதனாலேயே வாச்சாத்தி மாதிரியான துயரங்களுக்கு முடிவே உண்டாவதில்லை. இங்கு எல்லோரின் துயரமும் அவரவரோடே விடப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவு, ஓர் இயக்கமாகக் கிளர்ந்தெழும் போதுதான் – நீதியை நியாயமாகவும் விரைவாகவும் நாம் பெற முடியும். ஒருங்கிணைந்த இயக்கமும் கிளர்ச்சியும்தான் ஆதிக்கத்தின் உறுதியை அசைத்துப் பார்க்க வல்லது. தனி மனிதர்களாகப் பிளவுபட்ட இந்த சுயநலச் சமூகத்தில், அப்படியொரு இயக்கமும் கிளர்ச்சியும் இனி எப்போதேனும் சாத்தியமா என்பதே மிகப்பெரிய கேள்வி!