ingulab 330‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்கிற இந்தி மொழிப் புரட்சி முழக்கத்தின் முற்பகுதிதான் “இன்குலாப்” என்பது.

கவிதையில்-உரைநடையில்-பேச்சில் உணர்ச்சி மழையைக் கொட்டியவர், புரட்சிக் கவிஞர் இன்குலாப்.

சாகுல் அமீது என்பது அவர்தம் பெற்றோர் இட்ட பெயர். ‘இன்குலாப்’ என்பது தாம் விருப்புடன் இட்டுக் கொண்ட பெயர்.

உண்மையான ‘இன்குலாப்’ என்பதன் - “புரட்சி” என்பதன் கொள்கலனாக விளங்கியவர், “இன்குலாப்”. ‘புரட்சி’ என்ற கொள்கை உணர்ச்சித் தேக்கம் ஆன சொல், தமிழகத்தில், படாத பாடுபடுகிறது. இத்தகைய சூழலில் உண்மையான புரட்சியாளராக வாழ்ந்தவர் நம் இன்குலாப்.

1982க்குப் பிறகு 2005 வரையில் மெரினா கடற்கரையில் நான் நடைப்பயிற்சி செல்லும் ஒவ்வொரு நாளிலும், அவருடைய துணைவியார் கமருன்னிஷா அம்மையாருடன் இன்குலாப் புன்முறுவல் பூத்த முகத்துடன் அங்கே நடைப் பயிற்சிக்கு வருவார்.

சென்னை புதுக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரி யராக விளங்கியவர் அப்பெருமகனார்.

அன்னார் படைத்துள்ள “அகிம்சையின் முறையீடுகளை எந்த ஆதிக்கக்காரனும் செவிமடுப்பதில்லை”, “இன்குலாப் நாடகங்கள்”, “காந்தள் நாள்கள்”, “மானுடக்குரல்”, “குரல்கள்” என்னும் நூல்கள் என்றும் புரட்சித் தீயைக் கக்கும் கனல் கருவிகளாக விளங்கும்.

அவருடைய நீரிழிவு நோய்க் கொடுமையால் ஒருகால் துண்டிக்கப்பட்ட உடன்காலில் ஊரப்பாக்கம், அய்யஞ்சேரியில் குடியேறியிருப்பதாக அறிந்து - மா.பெ.பொ.க.வைச் சேர்ந்த நானும், தாம்பரம் மா. சுப்பிரமணியம், ஆனை. பன்னீர்செல்வம், தாம்பரம் கிருஷ்ணமூர்த்தி ஆகிய தோழர்களும் நேரில் சென்று தேறுதல் கூறி வந்தோம்.

அதன்பிறகும் இன்குலாப் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

அவருடைய மானுட சமத்துவம் பேசும், கனல் கக்கும் உரிமைப் போர் முழக்கப் பாடல் வரிகள் என்றென்றும் புரட்சியாளர்களின் நெஞ்சங்களில் தேங்கி நிற்கும்; கனல் கக்கச் செய்யும் திறனுடையவை. அப் பாடலின் முதல் வரிகள் :

மனுசங்கடா நாங்க மனுசங்கடா

உன்னைப்போல அவனைப்போல எட்டுச்hனு ஒசரமுள்ள

மனுசங்கடா நாங்க மனுசங்கடா

இன்குலாப் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்.

அப்பெருமகனார், தம் 73ஆம் அகவையில், தம் இறுதி மூச்சை, 1.12.2016 வியாழன் அன்று இழந்தார் என அறிந்த தமிழ் உணர்வாளர் ஒவ்வொருவரின் நெஞ்சமும் விம்மி அழுதது.

அன்னாரின் உடல் அவர்தம் குடும்பத்தாரால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்காக அளிக்கப்பட்டது.

நான் 27.11.2016 முதல் 26.12.2016 முடிய கட்சிப் பணியாகத் தொடர் பயணத்திலிருந்தேன். எனினும் மா.பெ.பொ.க. சார்பில் தோழர்கள் தாம்பரம் மா. சுப்பிர மணியம், ஆனை. பன்னீர்செல்வம், கிருஷ்ணமூர்த்தி மற்றும் சில தோழர்கள் முதலாவதாகச் சென்று, இன்குலாப் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மதிப்புறு இன்குலாப் அவர்களை இழந்து ஆறாத் துயருக்கு ஆளாகியிருக்கும் அவர்தம் அன்புத் துணைவியார் கமருன்னிஷா அம்மையார், மகன்கள் செல்வம், இன்குலாப், மகள் அமினா பர்வீன் ஆகியோருக்கும் அவர்தம் உற்றாருக்கும்; ஏக்கத்துடன் விம்மும் எண்ணற்ற தமிழர்களுக்கும் மா.பெ.பொ.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்கி, இன்குலாப் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்.

Pin It