கடல் புடைசூழ்ந்த இவ்வுலகின்கண்ணே பயிலுறும் மொழிகள் அனைத்தையும் ஆராய்ந்து வகுத்து அடைவுபடுத்து நின்ற மொழிநூற் புலவர்கள் பலரும் அவையிற்றை ஆரிய மொழிகள் துரானிய மொழிகளென இருபகுப்பினுள் அடக்குவாராயினர். ஆரிய மொழிகளுள் அடங்குவன பலவற்றுள்ளும் சம்ஸ்கிருதம் தலை சிறந்ததொன்றாம். அவ்வாறே, துரானிய மொழிகளுள் அடங்குவன பலவற்றுள்ளும் தமிழ்மொழி தலைசிறந்ததொன்றாம். எனவே சம்ஸ்கிருதமும் தமிழும் வேறு வேறு மொழிகளென்பது வெள்ளிடைமலையென விளங்கும். ஆகவும் சிலர் தமிழ் முன்னதன் வழிமொழி யேயன்றித் தனிமொழியன்றென வாய்கூசாது கூறுவாராயினர். சமஸ்கிருதமுந் தமிழும் ஒரே நாட்டின்கண் முறையே வடக்கினுந் தெற்கினுமாக வழங்கிய காரணம் பற்றி இவ்விரண்டுந் தம்மிற் சில் லாற்றாற் கலப்பனவாயின. அங்ஙனங் கலப்புழி, ஒன்று பேச்சு வழக்கற்று ஏட்டு வழக்காய் மட்டில் நிற்ப, மற்றொன்று இருவகை வழக்கினும் நின்றமையான் முன்னதன் சொற்பொருள்கள் பல பின்னதன்கட் போந்து வழக்கேற்ப வாயின. இது மொழிநூன் முறையே. இதனை யெய்யாதார் கூற்று ஒதுக்கற்பாலதென விடுக்க.
இனி மொழிநூற் புலவர்கள் வகுத்தவகை ஒருபுறமிருப்பச், சிலர் தமிழ் மொழியின் ஏற்ற முணராது மயங்கிப் பிறிதுபட வகுத்தனர். வடமொழியை உயர்தனிச் செம்மொழி யினுந் தென் மொழியை உண்ணாட்டுமொழியினும்2 அடக்கி வகைப்படுத்தனர். அங்கனம் வகைப்படுப்புழி ஒன்று உயர்வும் மற்றொன்று தாழ்வுமாம் என்ற வுட்கருத்துடன் படுப்பாராயினர். அவ்வுட்கருத்துச் சின்னாட்களில் வலியுறுவதாயிற்று. தனிமொழி யன்றை அதன் வழிமொழிகளோடு வகைப்படுத்தலாமோ? அது முன்னதனை இழிவு படுத்த தாகாதோ? தமிழினை உண்ணாட்டு மொழிகளுட் படுத்ததே யன்றித் தெலுங்கு கன்னடம் மலையாளமாதிய அதன் வழிமொழிகளோடு ஒரு நிகரெனக் கூறலாமோ? ஆரிய மொழி களுட்டலைநின்ற வடமொழியை அதன் பாகதங்களோடு ஒருங்கு வைத்து எண்ணத்துணியாமை போலத், துரானிய மொழிகளுட்டலை நின்ற தென்மொழியை அதன் வழிமொழிகளோடு ஒருங்குவைத் தெண்ணத் துணியா திருத்தலே அமைவுடைத்து.
இவ்வாறாகவும் நமது சென்னைச் சர்வகலா சாலையார் மேற் கூறியாங்குத் தமிழை யிழிவு படுத்து வகுத்த போதே, தமிழராயினார் முற்புகுந்து அவ்வாறு வகைப்படுத்தல் சாலாதென மறுத்திருத்தல் வேண்டும். அப்போழ்தெல்லாம் வாய்வாளாமை மேற்கொண்டிருந்து விட்டனர் நந்தமிழ் மொழியாளர். ஆதலின் இப்போழ்தத்துச் ‘சர்வகலாசாலை விசாரணையிற் தமிழ்மொழிக்கல்வியை யோக்கியதைப் பட்டப்பரீக்ஷகளினின்றும் ஒதுக்கி விட்டனர். வடமொழிமட்டில் உயர்தனிச் செம்மொழி யாதலின் வைத்துக் கொள்ளப்பட்டது.
ஈதென்னை வம்பு! அவ்வுயர்தனிச் செம்மொழி யென்பதனிலக்கணந் தானென்னை? அதனைச் சிறிது ஆராய்வோம். தான் வழங்கும் நாட்டின் கண்μள்ள பலமொழிகட்குந் தலைமையும் அவையிற்றினும் மிக்க மேதகவுடைமையு முள்ள மொழியே உயர்மொழி யென்பது. இவ்விலக்கணத்தா னாராய்ந்தவழி, நந்தமிழ்மொழி தென்னாட்டில் வழங்குந் தெலுங்கு கன்னட மலையாள துளுவங்களுக் கெல்லாந் தலைமையும் அவையிற்றினும் மிக்க மேதகவுமுடைமையாற்றானும் உயர்மொழியே யென்க. தான் வழங்கு நாட்டிற்பயிலும் ஏனைய மொழி களினுதவியின்றித் தனித்தியங்கவல்ல ஆற்றல்சான்றதே தனிமொழி யென்னப்படும். தான் பிறமொழிகட்குச் செய்யு முதவி மிக்கும், அவை தனக்குச் செய்யு முதவி குறைந்து மிருத்தலே வழக்காறு. தமிழ்மொழியினுதவி களையப்படின், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலியன இயங்குதலொல்லா;
மற்று அவையிற்றினுதவி களையப்படினுந் தமிழ்மொழி சிறிது மிடர்ப்படுதலின்றித் தனித்து இனி மையினியங்கவற்று. இஃது இந்திய மொழி நூற் புலவர்கள் பலர்க்கும் ஒப்பமுடிந்தது. ஆதலின் நம் தமிழ்மொழி தனிமொழியே யென்க. இனிச் செம்மொழியாவது யாது? ‘திருந்திய பண்புஞ் சீர்த்தநா கரிகமும், பொருந்திய தூய்மொழி புகல் செம்மொழியாம்’ என் பதிலக்கணம். இம்மொழி நூலிலக்கணம் நம்முடைய தமிழ்மொழியின் கண்μம் அமைந்திருத்தல் தேற்றம். என்னை? இடர்ப்பட்ட சொன்முடிபுகளும் பொருண்முடிபுகளுமின்றிச் சொற்றான் கருதிய பொருளைக் கேட்டான்தெள்ளிதினுணரவற்றாய்ப் பழையன கழிந்து புதியன புகுந்து திருத்தமெய்தி நிற்றலே திருந்திய பண்பெனப்படுவது. இது தமிழ்மொழியின்கண் முற்று மமைந்திருத்தல் காண்க. நாட்டின் நாகரிக முதிர்ச்சிக் கேற்பச் சொற்களும் ஏற்பட்டுப் பாடைக்கும் நாகரிக நலம் விளைத்தல்வேண்டும். அவ்வாறு சொற்களேற் படுமிடத்துப் பிறபாடைச் சொற்களன்றித் தன் சொற்களே மேற் கோடல் வேண்டும். இவையும் நம் உயர்தனித் தமிழ்மொழிக்குப் பொருந்துவனவாம். ஆகவே தமிழ் தூய்மொழியுமாம். எனவே தமிழ் செம்மொழி யென்பது ஒருதலை. இதுபற்றியன்றே தொன்றுதொட்டு நந்தமிழ்மொழி ‘செந்தமிழ்’ என நல்லிசைப் புலவரான் நவின்றோதப் பெறுவதாயிற்று.
ஆகவே தென்னாட்டின்கட் சிறந்தொளிராநின்ற நம் அமிழ்தினுமினிய தமிழ்மொழி எவ்வாற்றானாராய்ந்த வழியும் உயர்தனிச் செம்மொழி யேயாமென்பது திண்ணம். இத்துணையுயர்வுஞ் சிறப்பும் வாய்ந்த நம் அருமைத் தமிழ்மொழியை உண்ணாட்டுப் புன்மொழிகளோ டொருங்கெண்μதல் தவிர்ந்து, வடநாட்டுயர்தனிச் செம்மொழி சமஸ்கிருதமெனக் கொண்டாற்போலத், தென்னாட்டுயர் தனிச்செம்மொழி தமிழெனக்கொண்டு விதிகள் வகுத்தலே ஏற்புடைத்தாம். இதனை நமது கனம்பொருந்திய இராசப்பிரதிநிதியவர்களும், சர்வகலாசாலையின் அவயவிகளும் உள்ளவாறே கவனித்து நடப்பார்களாக. இவர்கள் தமக்கு என்றுங் குன்றாப் பழியை விளைக்கத்தக்க செயலிற் புகாது புகழ்பயக்கற்பால நல்லாற்றிற் சென்று நம் தமிழ் மொழியும் உயர் தனிச் செம்மொழி யென்றே கொண்டொ ழுகுவார்களாக. ஆலவாயிற் பெருமானடிகளாகிய இறையனார் திருவருள் பெற்ற நம் தமிழ்மகள் என்றுந் தலைகவிழாதொளிர்க.
செந்தமிழ், நவம்பர் இதழில் பிரசுரமான கட்டுரை
1902 / பக்: 18-21
அடிக்குறிப்புகள்: 1. Classical Language.
2. Vernacular Languages
3. Universities Commission