தமிழகத் தேர்தல் ஆணையத்துக்கு கழக சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு:

ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்யும்சிங்கள அரசுக்கு ஆயுதங்களை வழங்கி, தமிழர்களுக்கு துரோகமிழைக்கும் காங்கிரசுக்கு எதிராக, பிரச்சாரம் செய்ய எங்கள் அமைப்பான பெரியார் திராவிடர் கழகம் முடிவு செய்து, கடந்த 26.2.2009 அன்று திண்டுக்கல்லில் பிரச்சாரத்தைத் தொடங்கியது. கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி காங்கிரசை எதிர்த்து, மக்களிடம் பேசியதற்காக தமிழக அரசு திண்டுக்கல் காவல்துறை - இந்திய தண்டனைச் சட்டம் 153(ஏ), 505(i)(பி) மற்றும் 13 (1) (பி) சட்டவிரோத தடுப்புச் சட்டம் 1967 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கொளத்தூர் மணியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதன் மூலும் - காங்கிரஸ் எதிர்ப்பு பிரச்சாரம் தடுக்கப்பட்டுள்ளது.

வழக்கை முறையாக சந்திக்க தயாராகவே உள்ளோம். ஆனால், தேர்தல் வாக்கெடுப்பு முடியும் வரை பிரச்சாரத்திற்கு வராமல் தடுக்கும் நோக்கத்தோடு விசாரணையின்றியே ஓராண்டு காலம் சிறையில் அடைக்கும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை கொளத்தூர் மணி மீது பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அறிகிறோம். இது தேர்தலில் பிரச்சாரம் செய்யக்கூடிய எங்களது ஜனநாயக உரிமையைப் பறிக்கும் நடவடிக்கையாகும். காங்கிரசுக்கு எதிரான பிரச்சாரத்தை முடக்கிட - தேசிய பாதுகாப்புச் சட்டத்தை முறைகேடாக தமிழக அரசு பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த முன்வருமாறு தேர்தல் ஆணையத்தை பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். எங்கள் அமைப்பு தேர்தலில் போட்டியிடாத அமைப்பு என்றாலும், தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயக உரிமையை தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி பழி வாங்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம். - இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், வழக்கறிஞர் இளங்கோ, சென்னை மாவட்ட தலைவர் தபசி. குமரன் ஆகியோர் தேர்தல் ஆணைய அதிகாரியிடம் மார்ச் 5 ஆம் தேதி நேரில் மனுவை அளித்தனர்.
Pin It