செயங்கொண்ட சோழபுரத்தில் 2014 சனவரி 4, 5 நாள்களில் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியும் அனைத்திந்திய ஒடுக்கப்பட்டோர் பேரவையும் நடத்திய மாநாடுகளின் தீர்மானங்கள்

04.01.2014 முற்பகல்

வேண்டுகோள் தீர்மானம்

தீர்மானம் 1

தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டூ

தமிழ்ப்பெருமக்கள், தைத்திங்கள் முதல் நாளே தமிழர்க்கான ஆண்டுத் தொடக்க நாள் என்பதில் உறுதியாக இருந்து அந்நாளைக் கொண்டாட வேண்டுமென்றும்; உழவர் திருநாளாகவும், தமிழ்ப் பண்பாட்டுத் திருவிழாவாகவும் காலங்காலமாக நடைபெறுகிற பொங்கல் விழாவை மட்டுமே சாதி, மத வேறுபாடு இல்லாமல் நாம் சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென்றும்; திராவிட இனத்தை இழிவுபடுத்துகிற ஆடிப்பெருக்கு விழா, தீபாவளிப் பண்டிகை, ஏகாதசிப் பண்டிகை முதலானவற்றைக் கொண்டாடுவதைக் கைவிட வேண்டுமென்றும் “சிந்தனையாளன் பொங்கல் மலர் வெளியீட்டு விழா”வின் வாயிலாக எல்லாத் தமிழ் மக்களையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

இரங்கல் தீர்மானங்கள்

தீர்மானம் 2

மண்டேலா மறைவு

தம் ஒப்பரிய அர்ப்பணிப்பு வாழ்வில் தொடர் போராட்டங்களை நடத்தியும், அதற்காக 27 ஆண்டுகள் நெடுஞ்சிறைத் தண்டனைக்கு உள்ளாகியும், வீரத்துடன் வெள்ளையர்களை எதிர்கொண்டும் இனவெறியை ஒடுக்கி ஆப்பிரிக்கக் கருப்பின மக்கள் விடுதலையைப் பெற்றுத்தந்த நெல்சன் மண்டேலா, 5.12.2013 அன்று மறைந்துவிட்டார். அவரது இழப்பு உலகில் ஒடுக்கப்பட்ட வெகுமக்கள் அனைவருக்கும் பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு வீர வணக்கத்தை இம்மாநாடு நெகிழ்ந்த மனதுடன் பதிவு செய்கிறது.

தீர்மானம் 3

இயற்கை வேளாண் அறிவியலறிஞர் கோ.நம்மாழ்வார் மறைவு

முறையான வேளாண் கல்விபெற்று, வேளாண் அதிகாரியாகப் பணியாற்றி அவர் பெற்ற பட்டறிவை முன்வைத்து, இயற்கை உரங்களை மட்டுமே பயன் படுத்தித் தமிழக வேளாண் மக்கள் நற்பயன் பெற வேண்டும் எனக் கடந்த 44 ஆண்டுகளாக ஊர்தோறும் சென்று ஓய்வின்றிப் பணியாற்றிய கோ.நம்மாழ்வார் அவர்கள், தம் 75ஆம் அகவையில், 30.12.2013 அன்று மறைவுற்றார். அன்னாருக்கு இம்மாநாடு மனங்கசிந்த இரங்கலை உரித்தாக்குகிறது.

04.01.2014 பிற்பகல்

தமிழகத் தன்னுரிமை மற்றும் இந்தியக் கூட்டாட்சிக் கோரிக்கை மாநாட்டுத் தீர்மானங்கள்

தீர்மானம் 1

தன்னுரிமைத் தமிழகமும் இந்தியக் கூட்டாட்சியும்

இரண்டாம் உலகப் போரை முடித்து வைப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா, சோவியத் ரசியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூடி முடிவெடுத்து, 1945இல் செர்மனியைத் தோற்கடித்தனர். அப்போது, பிரிட்டிஷ் அரசு, போர் முடிந்தவுடன் தன் கீழ் உள்ள, குடியேற்ற நாடுகளுக்கு விடுதலை வழங்குவதற்கு ஒரு முடிவை பிரிட்டன் பேரில் சுமத்தியதனாலும், பிரிட்டிஷ் கடற்படையில் இருந்த வெள்ளையர்களை எதிர்த்து இந்தியக் கடற்படை வீரர்கள் புரட்சி செய்ததனாலும் ஏற்பட்ட நெருக்கடியினால்தான் இந்தியாவுக்கு விடுதலை கொடுக்க பிரிட்டன் முன்வந்தது.

அப்படி முன்வந்தபோது பாதுகாப்புத்துறை, பண அச்சடிப்புத்துறை, அயலுறவுத்துறை ஆகிய மூன்று துறைகளை மட்டும் இந்திய அரசு தன்வசம் வைத்துக் கொள்ள வேண்டுமென்றும், மற்றெல்லா அதிகாரங் களும் மாகாணங்களுக்கே அளிக்கப்பட வேண்டு மென்றும், பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. ஆனால் இந்திய விடுதலைப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த காந்தியாரும் காங்கிரசாரும், உயர் அதிகாரங்கள் முழுவதும் இந்திய மத்திய அரசுக்கே இருக்க வேண்டும் என்றும், மாகாண அரசுகளுக்குக் கல்வி, மருத்துவம் முதலான சேவைத்துறைகள் பற்றிய அதிகாரம் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர்.

அத்துடன் நில்லாமல், இந்திய மத்தியச் சட்டசபைத் தேர்தலுக்கு வாக்குப்போடும் உரிமையை 4 விழுக்காடு மக்கள் மட்டுமே பெற்றிருந்த நிலையில் - மாகாணச் சட்டமன்றங்களுக்கு வாக்குப் போடுவதற்கு 14 விழுக்காடு மக்கள் மட்டுமே உரிமை பெற்றிருந்த நிலையில், 1946இல் நடைபெற்ற தேர்தலில் மத்தியச் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையும், மாகாணச் சட்டசபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் களின் பிரதிநிதிகளையும் கொண்டே அரசியல் நிர்ணயச் சட்ட அவையை அமைத்து, பண்டித நேருவின் தலைமையில் அமைந்த இடைக்கால அரசு, 9.12.1946 இலேயே அரசியல் அமைப்பு அவையின் கூட்டத்தை நடத்தத் தொடங்கிவிட்டது.

1922இல் காந்தியார் அளித்த வாக்குறுதிக்கும், 1935இல் இந்தியத் தேசியக் காங்கிரசு செய்த அதிகாரப்பூர்வமான முடிவுக்கும் இச்செயல் எதிரானது என்பதை, பெரியார் சுட்டிக்காட்டி எதிர்ப்புத் தெரிவித்தார். இந்தச் சூழலில்தான், தந்தை பெரியார் 1945 செப்டம்பரில் “தனிச்சுதந்தர திராவிட நாடு” கோரிக் கையை முன் வைத்தார். பின்னர் 1956இல் மொழிவாரி மாநிலங்கள் பிரிவினை செய்யப்பட்டதையொட்டி, “தனிச் சுதந்தரத் தமிழ்நாடு” கோரிக்கையை முன்வைத்தார்; அதற்காகப் போராடினார்.

அவருடைய மறைவுக்குப் பிறகு 1976இல் அரச மைப்புச் சட்ட 42ஆம் திருத்தம் என்பதை அறிமுகப் படுத்தி, மாநிலங்களின் முழு அதிகாரத்தின் கீழ் இருந்த கல்வித்துறையைப் பொது அதிகாரப் பட்டியலுக்கு இந்திய அரசு மாற்றியது; தொடர்ந்து வனத்துறை, வேளாண் துறை ஆகியவற்றின் மீதான மாநிலங்களின் அதிகாரங் களைக் குறைத்தது.

இந்த நிலையில், மார்க்சியப் பெரியாரியப் பொது வுடைமைக் கட்சி பாதுகாப்புத்துறை, பண அச்சடிப்புத் துறை, செய்தித் தொடர்புத்துறை ஆகிய மூன்றைத் தவிர்த்த எல்லாத் துறைகளின் அதிகாரங்களும் மாநிலங்களுக்கே இருக்கும் வகையில், உண்மையான இந்தியக் கூட்டாட்சிக்கான புதிய அரசமைப்பை உரு வாக்குவதற்கெனத் தமிழ்நாட்டு மக்களும் மற்ற மொழிவாரி மாநில மக்களும் உரிமை உணர்வுடன் முன்வர வேண்டும் என்று இம்மாநாடு அனைவரையும் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 2

மாநிலத்திலுள்ள மய்ய அரசின் அலுவலகங்களில் மாநில மொழியே அலுவல் மொழி

இந்தியாவில் 300 மொழிகளுக்கு மேல் பேச்சு வழக்கில் உள்ளன. மொழிவாரி அடிப்படையில் 28மாநிலங்களும் மற்றும் ஏழு ஒன்றியப் பிரதேசங் களும் உள்ளன. எல்லா மொழிவாரி மாநிலங்களிலும் அந்தந்த மாநிலக் கல்வித்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை முதலானவற்றில் அந்தந்த மாநிலத்தவரின் தாய் மொழியே கல்வி மொழியாகவும் ஆட்சி மொழியா கவும் இருக்க உரிமை இருக்கிறது. ஆனால் இந்திய அரசின் கீழ் உள்ள எல்லாத் துறைகளிலும் மற்றும் ஒவ்வொரு மாநிலத்திலும் இயங்குகிற மத்திய அரசுத் துறை அலுவலகங்களிலும், இடைக்கால ஏற்பாடாக ஆங்கிலமே ஆட்சிமொழியாக - அலுவல் மொழியாக 2014லிலும் நீடிக்கிறது. இந்த ஏற்பாட்டை மாற்றுவதற்கு இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பினால், அக்கணமே மேலே கண்ட எல்லாத் துறைகளிலும் இப்போது அலுவல் மொழியாக உள்ள ஆங்கிலம் அகற்றப்பட்டு, இந்தி மொழியே ஆட்சி மொழியாகவும்-அலுவல் மொழியாக வும் அரசமைப்புச்சட்ட 17ஆவது பகுதியில் கண்டபடி உறுதியாக இடம் பெற்றுவிடும். இந்தப் பேராபத்து தமிழ்மக்கள், கன்னட நாட்டு மக்கள், தெலுங்குநாட்டு மக்கள், மலையாள நாட்டு மக்கள், மராட்டிய மக்கள், பஞ்சாபிய மக்கள், வங்காள மக்கள், வடகிழக்கு மாநிலங்களின் மக்கள் ஆகிய எல்லோரையும் இந்தியை ஏற்றுக் கொண்டாக வேண்டிய வலுக்கட்டாயத்துக்கு உட்படுத்துவதாகும்.

எனவே இந்த மொழி உரிமைப் பாதிப்பை எதிர்த்து எல்லா மக்களிடமும் விழிப்புணர்வை உண்டாக்கவும், அவரவர் மாநிலத்தில் இப்போது அமைந்துள்ள மய்ய அரசு அலுவலகங்கள் எல்லா வற்றிலும் அவரவர் நாட்டு ஆட்சி மொழியே அலுவல் மொழியாக வரவேண்டும் என்று கோரிப் போராடவும் ஆன ஏற்பாடுகளை, அனைத் திந்திய அளவில் பரப்புரைப் பயணம் மேற்கொண்டு, 2014 முதல் அப்பணியை மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி மேற்கொள்வது என்று இம் மாநாடு தீர்மானிக்கிறது. இதன் இன்றியமையாமை யினை உணர்ந்து தமிழ் நாட்டுப் பெருமக்களும் மற்றெல்லா மொழிப் பெருமக்களும் இம்முயற்சிக்குப் பேராதரவு நல்க வேண்டும் என்று இம்மாநாடு பணி வன்புடன் கேட்டுக் கொள்கிறது. திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் தமிழ்த்தேசிய இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் இதில் ஆர்வம் கொண்டு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 3

சிமெண்ட் ஆலைகள் வெளியேற்றும் புகையில் நச்சுகளை நீக்கக்கோரி போராட்டம்

பழைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் டால்மியா புரத்தில் மட்டுமே ஒரு சிமெண்ட் ஆலை இருந்தது. கடந்த 30 ஆண்டுகளுக்குள் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் தொடங்கி ஈச்சங்காடு வரையில் ஏறக்குறைய ஒன்பது சிறிய, பெரிய சிமெண்ட் ஆலைகள் தனியாரால் நிறுவப்பட்டுவிட்டன. அரசு ஆலை ஒன்றும் உள்ளது. இவற்றிலிருந்து புகைக்கூண்டு மூலமாக வெளியேறும் புகை நச்சுத் தன்மை வாய்ந்தது. அதில் வெளிவரும் நுண் நச்சுத் துகள்கள் அரியலூர் மாவட்டம் முழுவதிலு முள்ள எல்லா நீர்நிலைகளிலும், மரம் செடிகொடிகளிலும் படிகின்றன. அதனால் நீர் நச்சுத்தன்மை அடைந்து கால்நடை களுக்குப் பெரும் கேட்டை விளைவிக்கின்றது. செடிகொடி மரங்கள் பச்சியத் தன்மையை இழந்து வளர்ச்சி குன்றிப் போகின்றன. ஆறுகளிலும் குளங் களிலும் ஓடைகளிலும் உள்ள நீர் உப்புத்தன்மையாக மாறிவிடுகின்றது. அந்த நச்சுக் காற்றை உள்ளிழுக்கும் மக்கள் ஈளைநோய், காசநோய், இழுப்பு நோய், புற்றுநோய் முதலான வற்றுக்கு ஆளாகின்றனர். சிமெண்ட் ஆலைகளி லிருந்து வெளியேறும் புகையின் நச்சுத்தன்மையை நீக்குவதற்கு அந்தந்த ஆலையின் உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத் தக்கது. இதுபற்றி உண்மையான அக்கறை கொண்டு தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்காதது கண்டிக் கத்தக்கது. இதை ஆலை உரிமையாளர்களுக்கும், தமிழக அரசுக்கும் உணர்த்தும் தன்மையில், அரியலூர், திருச்சி மாவட்டங்களின் மக்களைத் திரட்டி 10.2.2014இல் காலை 11 மணிக்கு அரியலூர் மாவட்ட ஆட்சியரின் அலு வலகத்தின் முன் மாபெரும் கண்டன மற்றும் வேண்டு கோள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என இம்மாநாடு தீர் மானிக்கிறது.

தீர்மானம் 4

கரும்பு ஒரு டன் ரூ.3500/- நெல் ஒரு குவிண்டால் ரூ.3000/- விலை கோரிப் போராட்டம்

இந்தியா முழுவதிலும் நெல், கோதுமை, கரும்பு பயிரிடப்படுகின்றன. வேளாண்மை செய்பவர்களின் விளைச்சலில் உபரி கோதுமையையும், நெல்லையும் விற்பதற்கான விற்பனை விலையை இந்திய அரசு நிர்ணயம் செய்கிறது. அதே போலக் கரும்பின் விலை யையும் இந்திய அரசு தீர்மானிக்கிறது. இந்த நடப்பு அந்தந்த மாநிலத்தில் உள்ள வேளாண் மக்களின் நிலைமையைப் புறக்கணித்து, அனைவரையும் ஒன்றுபோல் பாவித்து, விலை குறிப்பதில் முடிகிறது. இப்போது இந்திய அரசு குறிக்கும் விலையும், அத்துடன் மாநில அரசு சேர்த்துத்தரும் ஆதரவு விலையும் வேளாண்மை செய்பவர்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய தாக இல்லை. எனவே இந்த மூன்று விளை பொருள் களுக்கும் விற்பனை விலையைக் குறிக்கும் உரிமை அந்தந்த மாநிலத்துக்கே இருக்க வேண்டும். இந்த நிலைமை வருகிற வரையில், இப்போது உடனடியாக கரும்புக்கு ஒரு டன்னுக்குக் குறைந்தது ரூ.3500 விலையும், நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.3000 விலையும் குறிக்கும்படி இந்திய அரசையும் மாநில அரசுகளையும் குறிப்பாகத் தமிழக அரசையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. இந்த விலை உயர்வுகளை வற்புறுத்துகிற கோரிக்கையை முன் வைத்து, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயச் சங்கங்களும், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியும் இணைந்து, வரும் 2014 சனவரி 29 புதனன்று பெரம்பலூர் மாவட்டம் எரையூரில் உள்ள சவகர்லால் நேரு சர்க்கரை ஆலை முன் போராட்டம் நடத்துவது என இம்மாநாடு தீர்மானிக்கிறது.

தீர்மானம் 5

சிங்கள இராசபக்சே அரசை கூண்டிலேற்றி விசாரணை செய்

தமிழ் ஈழ விடுதலையில் உண்மையான அக்கறை யுள்ள திராவிடரியக்க - தமிழ்த்தேசிய அமைப்புகளும், 1987 முதல் 2009 வரையில் தமிழகத்தைத் தொடர்ந்து ஆட்சிசெய்த திராவிட முன்னேற்றக்கழக, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிகளும், ஈழத்தமிழர் பேரில் ஜெயவர்த்தனா ஆட்சிக்காலக் கொடுமைகள் நடந்தபோதும்; 2004-2005 சந்திரிகா குமாரதுங்கா ஆட்சி நடந்தபோதும்; அதன் பின்னர் 2006 முதல் இன்றுவரை மகிந்தா இராசபக்சே ஆட்சி நடக்கிறபோதும் விடுதலைப்புலி வீரர்களும் தமிழீழ மக்களும் கொல்லப் படுவதை நிறுத்த வேண்டும்; சிங்களப் போர்வீரர் களாலும் இந்திய அமைதிப் படையினராலும் தமிழ்ப் பெண்கள் மானபங்கப்படுத்தப்படுவதையும் கற்பழிக்கப் படுவதை யும் நிறுத்த வேண்டும் என்று இந்திய அரசிடமே கோரிக்கை வைத்து வந்தார்கள்.

1987, 1988, 1989 ஆண்டுகளில் பிரதமர் இராஜீவ்காந்தி தமிழீழ விடுதலைப் புலிகளையும் எண்ணற்ற தமிழ்ஈழ மக்களையும் கொன்றொழித்ததன் வழியாக, இந்திய அரசு தமிழீழ விடுதலைக்கு எதிரானது என்பதைச் செயலில் காட்டினார். 2006 ஆகஸ்டில் மகிந்த இராசபக்சே அரசு போர் தொடுத்த நாள்தொட்டு, சோனியாகாந்தி தலைமையிலான அய்க்கிய முற் போக்குக் கூட்டணி அரசு, ஈழ விடுதலைப்போரை நசுக்குவதற்காகவும், பிரபாகரனைக் கொல்லுவதற் காகவும் என்றே இலங்கை அரசுக்குப் போர்க் கருவிளையும் விமானங்களையும் இலங்கைப் போர் வீரர்களுக்குப் பயிற்சியையும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அன்றைய அமைச்சர்கள் எஸ்.எம்.கிருஷ்ணா, பிராணாப் முகர்ஜி ஆகியோரும், பிரதமரின் தலைமை ஆலோசகர் எம்.கே.நாராயணனும் ஊரும் உலகமும் அறிய இலங்கைக்கு அனுப்பிக் கொடுத்தார்கள். போர் உச்சநிலையில் இருந்தபோது இந்திய இராணுவத் தளபதிகளே இலங்கைப் போர்க்களத்தில் செயல் பட்டார்கள். இத்தனைக் கொடுமைகள் நடந்தபோதும் தி.மு.க முதலமைச்சராக விளங்கிய மு.கருணாநிதியும், அ.தி.மு.க. முதலமைச்சராக ஏற்கெனவே விளங்கிய செல்வி ஜெயலலிதாவும் ஈழம் பற்றிய எந்தச் சிக்கலைப் பற்றியும் தமிழகத்தைச் சேர்ந்த 57 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மற்றும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் தில்லிக்கு அழைத்துப் போய் நேரில் நியாயம் கேட்கவில்லை.

தமிழக மீனவர்கள் 400 பேர் இன்றுவரை கொல் லப்பட்ட நிலையிலும் இவ்வாறு செயல்படவில்லை. எதற்கெடுத்தாலும் தந்தி மேல் தந்தியும், விரைவு மடல்களும் அனுப்பி வேண்டுகோள் விடுவதிலேயே தமிழ்நாட்டுத் திராவிடக் கட்சி அரசுகள் காலம் கழித்து வருகின்றன. இராசபக்சே அரசு ஈழத்தமிழர்களைக் கொல்லுவதற்கும் அழிப்பதற்கும் வெளிப்படையாகத் துணைபோன அரசுதான் இந்திய அரசு. எனவே தமிழர்களைக் காப்பாற்றுவதற்கு இந்திய அரசான கூட்டுக் கொலைகாரனிடம் அடைக்கலம் புகுகிற புரிதலில்லாத செயலைத்தான் 1987 முதல் தமிழக அரசுகளும், ஈழ விடுதலையில் அக்கறை கொண்டவர்களும் செய்து வந்தனர். தமிழக மக்களும் தமிழகத்தை ஆண்டவர் களும் இதைக் கொஞ்சமும் புரிந்து கொள்ளாமல் கட்சிவாரியாகப் பிரிந்து நின்று, எதிரும் புதிருமாகச் செயல்பட்டார்கள். இது தமிழர்களின் அரசியல் புரியாத்தனத்தையும், தலைவர்களை மூடத்தனமாகப் பின்பற்றுகிற செம்மறி ஆட்டு மந்தைத்தனத்தையும் காட்டுவதாகும்.

எனவே தமிழீழத் தமிழ் இனத்தைக் கொன்ற குற்றத்துக்காக (Genocide) உலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னர் இராசபக்சே கும்பலைக் கூண்டிலேற்றி விசாரணை செய்வதற்கான ஏற்பாட்டைச் செய்ய முடியுமானால், உலகத் தமிழர்களும் தமிழகத் தமிழர் களும் எல்லா வகையான முயற்சிகளையும் அத்திசை நோக்கிச் செய்ய வேண்டும் என்றும், அப்போதுதான் இராசபக்சே கும்பலுக்கு நியாய உணர்வு பிறக்கா விட்டாலும் அச்ச உணர்வு பிறக்கும் - தொடர்ந்து தமிழீத் தமிழர் பேரில் வன்செயல்கள் செய்வதை நிறுத்துவார்கள் என்றும் தமிழகத் தன்னுரிமை - இந்தியக் கூட்டாட்சிக் கோரிக்கை மாநாடு கருதுகிறது. எல்லா வகைகளிலும் இதற்கு உரிய பங்களிப்பைச் செய்யவும் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி உறுதி கூறுகிறது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

தீர்மானம் 6

65 வயது நிரம்பிய எல்லாத் தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம்

மத்திய அரசு, மாநில அரசு ஊழியர்களாக உள்ள வர்கள் 30 அல்லது 35 ஆண்டுகள் மட்டுமே பணி புரிகிறார்கள். அவர்களின் மொத்த எண்ணிக்கை ஏறக்குறைய 3 கோடியேயாகும், அவர்கள் ஓய்வு பெற்றவுடன் எஞ்சிய வாழ்நாள் முழுவதற்கும் ஓய்வு பெறும் போது பெற்ற கடைசிமாத ஊதியத்தின் பாதியை ஓய்வூதியமாகப் பெறுகிறார்கள். 2003 முதல் புதிய ஓய்வு ஊதிய திட்டத்தின்படி இது கைவிடப்பட்டது. சந்தையில் பண்டங்களின் விலைவாசி ஏறும்போதெல்லாம், இரண்டாம் உலகப் போரின்போது நடைபெற்ற முறையைப் பின்பற்றி விலைவாசி உயர்வுப் புள்ளிக்கு ஏற்ப, அரசுப் பணியில் உள்ளவர்களுக்கும், ஓய்வூதியர் களுக்கும் அகவிலைப்படி கொடுக்கிறார்கள்.

இந்தியாவில் நிலமற்ற வேளாண் கூலிகளும், மிகச்சிறு நில உடைமைக்காரர்களும், மீன்பிடிப்போரும், வண்ணார், மருத்துவர், குலாலர், விசுவகருமர் முதலான கைவினைஞர்களும் எல்லா மதங்களிலும் எல்லாச் சாதிகளிலும் சேர்ந்து 80 கோடிக்கு மேல் இருக்கிறார்கள். இவர்களுள் 65 வயது நிரம்பிய எல்லோருக்கும் மாநில அரசுகளும் மத்திய அரசும் இணைந்து மாதந்தோறும் மிகக்குறைந்தது தலைக்கு மூன்றாயிரம் ரூபாய் ஓய்வூதியமாகக் கொடுக்க வேண்டும் என்றும், வாக்குக் கோரும் அரசியல் கட்சிகளும் மற்றெல்லா அமைப்புகளும் இக்கோரிக் கைக்கு வலுச்சேர்க்க வேண்டும் என்றும் தமிழகத் தன்னுரிமை மற்றும் இந்தியக் கூட்டாட்சிக் கோரிக்கை மாநாடு மத்திய-மாநில அரசுகளை வேண்டிக் கொள்கிறது.

தீர்மானம் 7

சாராயக்கடை ஒழிப்பு : தமிழக அரசுக்கும் இந்திய அரசுக்கும் வேண்டுகோள்

திராவிட முன்னேற்றக் கழகம் 1971ஆம் ஆண்டின் சட்டமன்றத்துக்கான பொதுத் தேர்தலில் பெருவாரியான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியில் அமர்ந்தது. அந்த வலிமையைக் கொண்டு தி.மு.க. அரசு தமிழ்நாடு முழுவதும் சாராயக் கடைகளைத் திறந்தது. சாராயக் கடைகள் 1982 வரையில் தனியாருக்கு ஏலம் விடப் பட்டன.

1983இல் அ.தி.மு.க. அரசு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மூலம் (TASMAC) மது வகைகளின் மொத்த விற்பனையை மேற்கொண்டது; பின்னர் 2003 முதல் சில்லறை விற்பனையையும் மேற்கொண்டது.

2006இல் பொறுப்பேற்ற தி.மு.க. அரசும் டாஸ்மாக் மூலம் மதுவிற்பனைத் திட்டத்தைத் தொடர்ந்து செயல் படுத்தியது.

மது விற்பனையின் மூலம் 2012-13ஆம் ஆண்டில் தமிழக அரசுக்குக் கிடைத்த வருவாய் 21,680.67 கோடியாகும். தமிழ்நாடு முழுவதும் உள்ள உழைப் பாளிச் சாதி மக்கள் தங்களுடைய சம்பாத்தியத்தில் பாதிக்குமேல் சாராயம் குடிப்பதற்குச் செலவழிப்பதனால் அரசுக்குக் கிடைக்கும் வருமானம் இதுவாகும்.

சாராயம் குடிப்பதால் குடிப்பவர் குடும்பத்தில் சண்டை, ஒழுக்கக்கேடு, கடன் சுமை, உடல்நலக் கேடு, பிள்ளை களின் கல்வி பாழாவது, நகைகளையும் சொத்துக் களையும் விற்பது, சமுதாயத்தில் திருட்டு, மோசடி, கொலை, கொள்ளை, சாலை விபத்து எனப் பலவாறான கேடுகள் நேரிடுகின்றன. அரசு இந்த 22 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்துக்காக 7.5 கோடி தமிழ்மக்களின் நல்வாழ்வைப் பாழடிப்பது கடும் கண்டனத்துக்குரியது. சமுதாயத்துக்குக் கேடு நல்கும் இப்படிப்பட்ட வரு மானத்தைக் கைவிட்டு, அதை ஈடுசெய்ய வரி ஏய்ப்பு களைத் தடுத்தும் வரி நிலுவைகளை வசூலித்தும் அரசு செயல்பட்டால் பெண்கள் சமுதாயத்தினரிடமிருந்து அரசுக்கு மிகப்பெரிய பாராட்டும் வரவேற்பும் கிடைக்கும்.

எஞ்சியிருக்கிற 2ஙூ ஆண்டுக் காலத்திற்குள் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை மூடி மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

இந்திய அரசு போதைப் பொருள்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தின் 47ஆவது பிரிவு சொல்கிறது. இதற்கு முரணாக இந்திய அரசு இந்தியா முழுவதும் போதைப் பொருள் விற்பனையை அனுமதிப்பது கண்டனத்துக்குரியதாகும். இந்தியா முழுவதும் மது உள்ளிட்ட அனைத்து போதைப் பொருள்களின் உற்பத்தியையும் விற்பனையையும் இந்திய அரசு தடை செய்ய வேண்டும் என்றும், மது விலக்கினால் மாநிலஅரசுகளுக்கு ஏற்படும் வருமான இழப்பினை ஈடுசெய்ய இந்திய அரசு, இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 8

பேரறிவாளன் உள்ளிட்ட 6 பேர்களை விடுதலை செய்க!

இராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறப்புத்தடா நீதிமன்றம் 26 பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. பலரும் பொய்யான குற்றச்சாட்டின்பேரில் அவ்வழக்கில் சேர்க்கப்பட்டதால், உச்சநீதி மன்றத்தில் 20பேர் விடுதலை செய்யப்பட்டனர். மீதமிருந்த 6பேர்களில் 4 பேருக்குத் தூக்குத் தண்டனையும், 2பேருக்கு வாழ்நாள் தண்டனையும் உச்சநீதி மன்றத்தால் உறுதி செய்யப் பட்டது. பின்னர் நளினி முருகன் ஒரு பெண்மணி என்பதால் அவருடைய தூக்குத்தண்டனை வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இப்படிச் சிறை யிலுள்ள 6 பேரும் 24 ஆண்டுகளாகச் சிறையிலுள்ளனர்.

ஒரு குற்றவாளியைச் சிறையில் அடைப்பது, குற்ற வாளி வாழ்நாள் முழுதும் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என்கிற ஒன்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டதாக இல்லை. அத்துடன் ஒரு குற்றவாளி மனந்திருந்தி நல்ல குடிமகனாகச் சிறை அதிகாரிகளால் உருவாக்கப்பட வேண்டும் என்பதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டதாகும்.

தூக்குத் தண்டனைக் கைதிகளாக உள்ள பேரறி வாளன், முருகன், சாந்தன் ஆகியோர் சிறையில் நல்லொழுக்கம் உள்ளவர்களாகவும், மற்ற கைதிகளுக் குப் பாடம் சொல்லித் தருகிறவர்களாகவும், மேலும் மேலும் பல்வகைக் கல்வியைக் கற்று அரசுத் தேர்வில் தேறியவர்களாகவும் மனம் மாறியிருக்கிறார்கள்.

சிறைக்கைதிகளை விடுதலை செய்வதற்கு என்று உள்ள பொதுமக்களின் பிரதிநிதிகளையும் அதிகாரி களையும் கொண்ட ஒரு பரிந்துரைக்குழு (போர்டு) செயல்பட்டு வருகிறது. இதுவரையில் இக்கைதிகளைப் பற்றி மட்டும் அப்படிப்பட்ட குழுவினர் விசாரணை செய்து அறிக்கை தர மாநில அரசு ஏற்பாடு செய்யவில்லை. இது இவர்களை அரசியல் காரணங்களுக்காகப் பழிவாங்கும் தீயநோக்கம் கொண்டது ஆகும். எனவே அரசினர் இப்போக்கைக் கைவிட்டு, நன்னடத்தைக் குழுவை விசாரணை செய்யச்சொல்லி ஏற்பாடு செய்து, சான்று பெற்று, உடனடியாகப் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி ஆகியோரையும் மற்றும் இருவரையும் தமிழக ஆளுநர் அவர்களும், தமிழக அரசினரும் விடுதலை செய்ய ஆவன செய்ய வேண்டும் என இம்மாநாடு வற்புறுத்திக் கோருகிறது.

தீர்மானம் 9

பருக்கல் தென் தமிழன் என்கிற கதிரவனை அரசு விடுதலை செய்யக் கோரிக்கை

தமிழரசனின் தமிழர் விடுதலைப் படையைச் சார்ந்த உடையார்பாளையம் வட்டம் பருக்கல் என்ற ஊரைச் சார்ந்த தென் தமிழன் என்ற சரவணன், மருதையாற்றுப் பாலத்தில் குண்டு வைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, 1988இல் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டார். 1989இல் அது வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. 1988 முதல் 2013 வரை கடந்த 25 ஆண்டுகளாகத் திருச்சி சிறையில் வைக்கப்பட்டுள்ள அவர், மனநலமும், உடல்நலமும் கெட்டு, நல்ல உணர்வில்லாத நிலையில் திருச்சி அரசுப் பொது மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டுள்ளார். இதுபற்றி வழக்கறிஞர் புகழேந்தி உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கின் பேரில், நீதிபதி கே.சந்துரு அளித்த தீர்ப்பில், தென்தமிழனை இரண்டு மாதங்களில் விடுதலை செய்ய வேண்டும் என்று, 2009 நவம்பரில் தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. தமிழக அரசினர் அந்த மேல்முறையீட்டு மனுவைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், பின்னர் தமிழக அரசினர், பருக்கல் தென் தமிழன் என்கிற சரவணன் என்கிற தட்சணாமூர்த்தியைக் கருணை அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்தி வேண்டிக் கொள்கிறது.

05.01.2014 முற்பகல்

தமிழ்வழிக் கல்வி மாநாடு : தீர்மானங்கள்

தீர்மானம் 1

உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 6 விழுக்காடு கல்விக்கும், அதில் 3/4 பங்கு பள்ளிக் கல்விக்கும் செலவிட வேண்டும்

அண்மைக் காலமாக இந்திய அரசும் பல்வேறு மாநில அரசுகளும் தனியார் பல்கலைக் கழகங்களின் நிறு வனத்தாரும், இந்தியாவில் உயர்கல்விக்கும் ஆராய்ச்சிப் படிப்புக்கும் முன்னுரிமை தரவேண்டும் என்றும்; அதனால் வளர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் பெற்றுள்ள பெரிய திறமைசாலிகள் போல இந்திய இளைஞர்கள் உருவாக முடியுமென்றும் வலியுறுத்திக் கூறிவருகின்ற னர். இது வெகுமக்களுக்கு அடிப்படைக் கல்வி வாய்ப்பு கிடைக்காமற் போவதற்கான மறைமுக ஏற்பாடேயாகும்.

இந்தியர்களுக்கு விடுதலை வந்திருப்பது உண்மை என்றால், 5 அகவைக்கு மேற்பட்ட எல்லாக் குழந்தை களுக்கும், மேற்கொண்டு 18 அகவை வரையுள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையில் தொடக்கக்கல்வியும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியும் மேல்நிலைப் பள்ளிக்கல்வியும் கட்டாயமாகவும் இலவச மாகவும் ஏற்கெனவேயே வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 3ஆவது ஐந்தாண்டுத் திட்டத்துக்குப் பிறகு இந்தியா இத்திசையில் செயல்படவில்லை. இன்றைய இந்திய அரசு 127 கோடி மக்கள் உள்ள இந்தியாவில் எல்லோருக்கும் கல்வி தருவதற்கு உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் 2.8 விழுக்காடு நிதி மட்டுமே ஒதுக்கியுள்ளது. இதில் பெரும் பகுதியை உயர்கல்விக்கே செலவிடுகிறார்கள். இந்த ஏற்பாடு மேல்சாதி, மேல்தட்டு மக்களுக்கே பயன்படக் கூடியதாகும். மேலும் கீழ்ச்சாதி மற்றும் கீழ்த்தட்டு மக்களை மனமறிந்து வஞ்சிப்பதாகும். இந்திய அரசின் இந்தத் தீய எண்ணத்தையும் போக்கையும் இந்திய மாணவர்கள், இளைஞர்கள் பொதுமக்கள் ஆகியோர் புரிந்து கொண்டு போராட முன்வர வேண்டும் என்றும், உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் குறைந்த அளவு 6 விழுக்காடு தொகையை கல்விக்கென ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், அதில் 3/4 பங்குத்தொகை 1 முதல் 12 வகுப்பு வரை தரமான கல்வி தரச் செலவிடப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு இந்திய அரசினரையும் தமிழக அரசின ரையும் வலியுறுத்தி வேண்டிக் கொள்கிறது.

தீர்மானம் 2

மருத்துவப் பட்டக்கல்வி பெற அனைத்திந்தியப் பொதுத் தேர்வுக்கு எதிர்ப்பு

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் 380 உள்ளன. இவற்றில் எம்.பி.பி.எஸ். பட்ட வகுப்பில் சேர்ந்து படிப்பதற்கான இடங்கள் மொத்தம் 49 ஆயிரம் மட்டுமே உள்ளன. இது மிகவும் குறைவான எண்ணிக்கையாகும். இப்படிப் போதுமான இடங்கள் இல்லாத இச்சூழலில், அந்தந்த மாநிலத்தில் முன்னேறிய வகுப்பு மாணவர்களே அதிகமான இடங்களைக் கைப்பற்றிக் கொள்கின்றனர். இந்தச் சூழலில் அனைத் திந்திய மருத்துவக் கவுன்சில் வரும் 2015இல் நடத்த வுள்ள நுழைவுத் தேர்வை எழுதித் தேர்வு பெற்றால்தான் எம்.பி.பி.எஸ்.படிப்பில் சேர முடியும் என்கிற இக்கட்டான சூழலை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. இது, முதல் தலைமுறையில் கல்லூரிக் கல்வி பெற்றுள்ள பட்டியல் பழங்குடியினர், பட்டியல் வகுப்பினர், மிகப்பிற்படுத்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் அப்படிப்பில் இடம் பெற்றுவிடக் கூடாது என்கிற தீய உள்நோக்கம் கொண்டதாகும். எனவே இத்திட்டத்தை முறியடிக்கக்கூடிய தன்மையில் பெரிய அளவில் மாணவர்களும் பெரிய வர்களும் கட்சி வேறுபாடு கருதாமல் ஒன்றிணைந்து, போராடி இத்திட்டத்தைத் தடுக்க வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

தீர்மானம் 3

பள்ளிக்கல்வி முழுவதும் தமிழ்மொழியில் மட்டுமே தரப்பட வேண்டும்

பழைய சென்னை மாகாணத்திலும், தமிழ்நாட்டிலும் வெள்ளையர் ஆட்சிக் காலத்திலும், காங்கிரசு ஆட்சிக் காலத்திலும், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் 2011 ஆம் ஆண்டு வரையில் இல்லாத ஒரு கேடான பயிற்றுமொழிக் கொள்கையை இன்றைய அ.தி.மு.க. அரசு மிகத்துணிச்சலாக அறிவித்துள்ளது. அதாவது அரசின் தொடக்கப் பள்ளிகளிலோ அரசின் நிதி உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளிலோ முதலாம் வகுப்பு தொடங்கி அனைத்துப் பாடங்களையும் ஆங்கில மொழியில் பயிற்றுவிக்கும் திட்டத்தை எப்போதும் தமிழக அரசு அறிவிக்கவில்லை. இந்த நிலையில், திராவிட இயக்கத்தின் தமிழ்க்காப்பு நடவடிக்கைகளால் தமிழ் மக்களிடையே பணைத்துத் தழைத்து வளர்ந்த தமிழ் உணர்வைக் கொல்லும் தன்மையில், இன்றைய தமிழக அரசு, அரசின் தொடக்கப் பள்ளிகளில் முதலாம் வகுப்பிலேயே ஆங்கிலம் மூலம் எல்லாப் பாடங்களையும் கற்றுக் கொடுக்க ஆணையிட்டிருக்கிறது.

இது தமிழ்மொழி வளர்ச்சிக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் தமிழர்களுக்கும் காலத்திற்கெல்லாம் மிகப்பெரும் கேட்டை விளைவிக்கும். இத்திட்டத்தின் கொடூரத் தன்மையை உணர்ந்து எல்லாத் தரப்புத் தமிழ்மக்களும் கட்சி வேறுபாடு கருதாமல் ஒன்றிணைந்து, அதனை அரசு திரும்பப் பெற்றிட வேண்டுமென்றும், தமிழ்நாட்டு அரசு தமிழ்நாட்டில் அனைத்துக் கல்வித் திட்டங்களின் கீழ்வரும் பள்ளிக்கல்வி முழுதும் தமிழ்மொழியில் மட்டுமே தரப்படும் வகையிலும், 5ஆம் வகுப்பு முதல் எல்லாக் கட்டப் படிப்பிலும் ஆங்கிலம் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படும் வகையிலும் தக்க சட்டம் இயற்ற வேண்டும் என்றும், தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இதற்காகத் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஊக்கம் அளித்து இக்கோரிக் கையை வென்றெடுக்கத் தமிழ்மக்கள் அனைவரும் முன்வர வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. தமிழக அரசின் இந்தத் தமிழ்மொழி அழிப்புச்செயலை எதிர்த்துப் போராட வேண்டுமென்று தமிழ்ப் பெருமக்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

05.01.2014 பிற்பகல்

விகிதாசார வகுப்புவாரி இடப்பங்கீடு மாநாட்டுத் தீர்மானங்கள்

தீர்மானம் 1

மய்ய அரசில் பிற்படுத்தப்பட்டோருக்கு 57 விழுக்காடு இடப்பங்கீடு வேண்டும்

இந்தியாவில் உள்ள எல்லாச் சிறுபான்மை மதங்களையும் சார்ந்த இசுலாமியர், சீக்கியர், பார்சி, கிறித்துவர் ஆகியோருக்கு இந்திய மத்திய அரசு வேலைகளில், முதன்முதலாக 1934இல் விகிதாசார இடப்பங்கீடு தரப்பட்டது.

அதை அடுத்து ஈ.வெ.ராவும், அன்றைய முதலாவது அமைச்சர் பொப்பிலி அரசரும் முயற்சி எடுத்து, சென்னை மாகாண எல்லைக்குள் அன்று இயங்கிய எல்லா மத்திய அரசுத்துறை அலுவலகங்களிலும் வேலையில், முதன் முதலாக, 1935இல், ஆதித்திராவிடருக்கும், பார்ப்பன ருக்கும் பார்ப்பனர் அல்லாத எல்லா இந்துக்களுக்கும் முறையே 16 விழுக்காடுகளும் 44 விழுக்காடும் இடப் பங்கீடு பெற்றுத்தந்தனர்.

டாக்டர் அம்பேத்கர் 11.8.1943இல், முதன்முதலாக, அனைத்திந்தியாவிலும் உள்ள எல்லா மத்திய அரசுத்துறை அலுவலகங்களில் மட்டும் 8.3 விழுக்காடு இடப்பங்கீடு ஆதித்திராவிடருக்குப் பெற்றுத் தந்தார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள விதி 16 (4) இன்படி, இந்தியா முழுவதிலுமுள்ள எல்லா மதங்களையும் சார்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், பட்டியல் வகுப்பினருக்கும், பட்டியல் பழங்குடியினருக்கும் மத்திய-மாநில அரசு வேலைகளில் போதிய இடப்பங்கீடு தரப்பட வேண்டும் என்று உள்ளது.

அதேபோல் விதி 15 (4)இன்படி, மேலே சொல்லப்பட்ட மூன்று வகுப்பினருக்கும் மத்திய-மாநில அரசுக்கல்வி யில் இடப்பங்கீடு தரப்பட வேண்டும் என்று கண்டுள்ளது.

இந்தியா முழுவதிலும் உள்ள பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசுக் கல்வியிலும், மத்திய அரசு வேலையிலும் இடஒதுக்கீடு தரவேண்டும் என்று, 1934 முதல் ஈ.வெ.ராவும், 1950 முதல் டாக்டர் அம்பேத்கரும், 1956 முதல் டாக்டர் லோகியாவும் கோரினர். இந்த மாபெரும் தலைவர்கள் மறைந்த பிறகு, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சிதான், முதன்முதலாக, 8.5.1978இல் இந்தியக் குடிஅரசுத் தலைவரிடம் அதிகாரப்பூர்வமாக இக்கோரிக்கையை முன்வைத்தது. அந்தக் கோரிக்கையை முன்வைத்து பீகார் மாநிலத்தில் பரப்புரையையும் மாபெரும் போராட்டத்தையும் வே.ஆனைமுத்து, ராம் அவதேஷ் சிங் எம்.பி இருவரும் 1978 செப்டம்பர் - அக்டோபரில் நடத்திய பிறகுதான், பிற்படுத்தப்பட்டோருக்கான இரண்டாவது பிற்படுத்தப் பட்டோர் குழு, 1.1.1979இல் பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் தலைமையில் பிரதமர் மொரார்ஜி தேசாயினால் அமைக்கப்பட்டது.

மண்டல் குழு பரிந்துரையை நாடாளுமன்றத்தில் வெளியிட வேண்டி 1981, 1982 முழுவதும் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியினர் தில்லியில் தங்கி முயன்ற பிறகுதான், 1982 மே மாதம் அப்ப ரிந்துரை நாடாளுமன்றத்தில் கியானி ஜெயில் சிங் அவர்களால் வெளியிடப் பெற்றது.

ஆயினும் இந்திராகாந்தி அரசோ, இராஜீவ்காந்தி அரசோ மண்டல் பரிந்துரையை அமுல்படுத்தவில்லை.

1986-1992 வரை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்த ஒடுக்கப்பட்டோர் பேரவையின் தலைவர் ராம்அவதேஷ் சிங் 1990 முழுவதும் நாள் தோறும் மேலவையில் வினா எழுப்பியதன் விளை வாகவே, பிரதமர் வி.பி.சிங் 6.8.1990இல் பிற்படுத்தப் பட்டோருக்கு, மத்திய-மாநில அரசு வேலைகளிலும் பொதுத்துறை வேலைகளிலும் மட்டும் 27 விழுக்காடு அளவுக்கு மட்டுமே ஒதுக்கீட்டை அமல்படுத்தினார்.

எனவே எல்லா மதங்களையும் சார்ந்த மொத்த மக்களில் 57 விழுக்காடு பேராக உள்ள பிற்படுத் தப்பட்டவர்களுக்கு மத்திய அரசுக் கல்வியிலும், வேலையிலும் 57 விழுக்காடு இடப்பங்கீடு தர வழிகாண வேண்டும் என்று கோரி நாம் தொடர்ந்து போராட வேண்டும் என இம்மாநாடு தீர்மானிக்கிறது.

தீர்மானம் 2

முற்பட்டோர் உள்ளிட்ட எல்லா வகுப்பினருக்கும் இடப்பங்கீடு

இந்தியா முழுவதிலுமுள்ள எல்லா மதங்களையும் சார்ந்த பிற்படுத்தப்பட்டோருக்கு 57 விழுக்காடும், எல்லா மதங்களையும் சார்ந்த முற்பட்ட வகுப்பினருக்கு 17.5 விழுக்காடும், இந்தியா முழுவதிலுமுள்ள பட்டியல் வகுப்பினருக்கு 17 விழுக்காடும், பட்டியல் பழங்குடி யினருக்கு 8.5 விழுக்காடும் - ஆக 100 விழுக்காடு இடங்களும் மத்திய-மாநில அரசுக் கல்வியிலும், மத்திய-மாநில அரசு வேலையிலும் விகிதாசாரப் பங்கீடு செய்துதர ஏற்ற வகையில், இதற்குத் தொடர்புடைய அரசமைப்புச் சட்ட விதிகள் 15(4), 16(4), 29(2) ஆகியவற்றை இந்திய நாடாளுமன்றம் திருத்தம் செய்ய வேண்டுமெனக் கோரிப் போராட வேண்டுமென இம்மாநாடு தீர்மானிக்கிறது.

தீர்மானம் 3

பதவி உயர்விலும் இடஒதுக்கீடு

மத்திய - மாநில அரசு வேலைகளிலும் பொதுத்துறை களின் வேலைகளிலும் பதவி உயர்விலும் பிற்படுத்தப் பட்டோருக்கும் இடஒதுக்கீடு தரக்கூடிய வகையில், விதிகள் 16 (4-A), 16 (4-B) இவற்றை இந்திய அரசு திருத்தம் செய்ய வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

தீர்மானம் 4

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்பட்டோருக்கு 70 விழுக்காடு இடஒதுக்கீடு

அரசமைப்புச்சட்ட விதிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு விகிதாசாரப் பங்கீடு தரப்பட்டால்தான், தமிழகப் பிற்படுத்தப்பட்டோருக்கும் மிகப்பிற்படுத்தப்பட்டோருக்கும் இப்போது தரப்படுகிற 50 விழுக்காடு இடஒதுக்கீடு என்பது, அவர்களின் இன்றைய மக்கள் தொகை விகிதாசாரப்படி 70 விழுக்காடாக உயர்த்தித்தரப் பெற முடியும் என்பதைப் புரிந்து கொண்டு, அதை நோக்கிப் பிற்படுத்தப்பட்டோரும் மிகப்பிற்படுத்தப்பட்டோரும் ஒன்றுபட்டுப் போராட வேண்டும் என இம்மாநாடு அனைவரையும் வேண்டிக் கொள்கிறது.

தீர்மானம் 5

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்களில் உள்ஒதுக்கீடு

தமிழகத்தில் 1979 நவம்பர் வரையில் பிற்படுத்தப் பட்டோருக்கு 31 விழுக்காடு மட்டுமே இடஒதுக்கீடு தரப்பட்டது. அன்று பிற்படுத்தப்பட்டோர் 67.5 விழுக்காடு இருந்தனர். அதை முன்வைத்து, பிற்படுத்தப்பட்டோருக் கான இட ஒதுக்கீட்டை 31 விழுக்காடு என்பதிலிருந்து 60விழுக்காடு ஆக உயர்த்தித்தர வேண்டுமென்று, 19.8.1979இல் அ.தி.மு.க. முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியும், ஒடுக்கப்பட்டோர் பேரவையும் மட்டும் கோரிக்கையை முன்வைத்தன. அதன்படி 24.1.1980இல் எம்.ஜி.ஆர் அரசு 50 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்து ஆணை யிட்டது. மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் இந்த மாபெரும் சாதனையை மறைக்கவே எல்லோரும் முயல்கின்றனர்.

இந்த நிலையில், வன்னியர் சங்கத்தலைவர் டாக்டர் ச.இராமதாசின் கோரிக்கையை ஏற்று, 1989இல் தி.மு.க. அரசின் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி மிகப்பிற்படுத்தப் பட்டோருக்கு 20 விழுக்காடும், பிற்படுத்தப்பட்டோருக்கு 30 விழுக்காடும் பங்கீடு செய்து ஆணையிட்டார்.

இந்த இரண்டு பிரிவினராக உள்ள பட்டியலிலும், மிகப்பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள- மொத்த மக்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவாக உள்ள வண்ணார், மருத்துவர், குலாலர், ஒட்டர், வலையர், அம்பலக்காரர், குறும்பர், பர்வதராஜகுலம் போன்ற சமநிலையிலுள்ள வகுப்பினருக்கு உள்ஒதுக்கீடு செய்து தந்தாலொழிய, அவ்வகுப்பினர் எக்காலத்திலும் போதிய வாய்ப்புகளைப் பெற முடியாது என்றும்; பிற்படுத் தப்பட்டோர் என்கிற பட்டியலில் உள்ள கம்மாளர், முத்தரையர் போன்ற சமநிலையில் உள்ள மற்ற வகுப்பினருக்கும் உள்ஒதுக்கீடு தந்தாலொழிய எக்காலத்திலும் அவ்வகுப்புகள் போதிய வாய்ப்பைப் பெற முடியாது எனவும் இம்மாநாடு திடமாகக் கருதுகிறது.

எனவே தமிழக அரசினர் தக்கதோர் ஆய்வுக் குழுவை அமைத்து, இவை பற்றிய உண்மை நிலையை அறிந்து, இவ்வகுப்பினர்களுக்கு உள்ஒதுக்கீடு அளிக்க வேண்டுமென இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது.

தீர்மானம் 5

திருவாரூர் கே.தங்கராசு மறைவு - இரங்கல் தீர்மானம்

திருவாரூர் கே.தங்கராசு தம் 87 ஆம் அகவையில் மாரடைப்பால் மறைவுற்றார் என்ற அதிர்ச்சியான செய்தி 5.1.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை செயங்கொண்ட சோழபுரத்தில் சரியாக மாலை 5.30 மணிக்குக் கிடைத்தது.

தோழர் கே.தங்கராசு அவர்கள் தொடக்கத்தில் இந்திய தேசிய காங்கிரசில் பணி யாற்றினார். அவர் 1948 முதல் சுயமரியாதைக்காரராகவும் திராவிடர் கழகச் செயல் வீரராகவும் திகழ்ந்தார். 1952க்குப் பிறகு தந்தை பெரியார் ஓராண்டில் பேசிய கூட்டங்களின் எண்ணிக்கைக்குச் சமமாகப் பொதுக் கூட்டங்களில் பேசிய பெரும் சாத னையைச் செய்தவர் திருவாரூர் கே.தங்கராசு அவர் களே ஆவார். அவர் பன்முகத் திறமை படைத்த சிறந்த அறிஞர். அன்னாரின் இழப்பு உண்மையிலேயே ஈடுசெய்ய இயலாததாகும். அப்பெருமகனாரின் இழப்புக் கருதி செயங்கொண்ட சோழபுரத்தில் மா.பெ.பொ.க. மற்றும் ஒடுக்கப்பட்டோர் பேரவை நடத்தும் வகுப்புவாரி இடப்பங்கீட்டு மாநாட்டின் சார்பிலும் மா.பெ.பொ.க. மற்றும் பேரவை சார்பிலும் சிந்தனையாளன் ஆசிரியர் குழு சார்பிலும் மனம் கசிந்த இரங்கலை இம்மாநாடு பதிவு செய்கிறது. அன்னாரை இழந்து துயருறும் அவர்தம் துணைவியார், மகன், மகள்கள், மருமக்கள், பேரக் குழந்தைகள், இரூர் பெரியார் குடில் ஏ.எஸ். முத்துசாமி குடும்பத்தினர் ஆகியோர்க்கு இரங்கலையும் வருத்தத் தையும் தெரிவித்துக் கொள்கிறோம். இத்தீர்மானம் நிறை வேற்றத்துக்குப் பின் மாநாட்டினர் அனைவரும் இரண்டு நிமிடம் எழுந்து நின்று அமைதி காத்து துயரத்துடன் கலைந்து சென்றனர்.

Pin It