எளிதான ஆய்வுப்பொருள் என்ற தவறான கண்ணோட்டத்தில் நவீன இலக்கிய வகைமை களான நாவல், சிறுகதை, கவிதை, இதழியல் ஆகியனவும் நாட்டார் வழக்காறுகளும் இன்று தமிழியல் ஆய்வில் செல்வாக்கு பெற்று விட்டன.

இப்போக்கிலிருந்து விலகி நின்று, செவ்விலக்கியங்களை மையமாகக் கொண்டு, அவ்வப்போது தரமான ஆய்வுகளும் வெளிவருகின்றன. இவ் வரிசையில் பாண்டுரங்கனின் இந்நூல் இடம் பெறுகிறது.

paandurangan_450பல்வேறு ஆய்விதழ்களில் வெளியான எட்டுக் கட்டுரைகளின் தொகுப்பாக, இந்நூல் அமைந்துள்ளது. அவற்றுள் முதல் இரண்டு கட்டுரைகளைத் தவிர, ஏனைய கட்டுரைகள் எட்டுத்தொகை நூல்களை மையமாகக் கொண்ட ஆய்வாக அமைந்துள்ளன.

எட்டுத்தொகை என்ற பெயருக்கு ஏற்ப எட்டு நூல்களின் தொகுப்பாக, சங்க இலக்கியம் அமைந் துள்ளமை அனைவரும் அறிந்த செய்திதான். எட்டுத் தொகை நூல்களைக் கற்போரும், ஆய்வு செய்வோரும் அறிந்துகொள்ள வேண்டிய ஓர் அடிப்படையான செய்தியை இந்நூலாசிரியர் ஆங்காங்கே நினை வூட்டிச் செல்கிறார் (பக்: 36,49,70). அவற்றுள் பின்வரும் பகுதியை மேற்கோளாகக் காட்டுவது பயனுடையதாக இருக்கும்.

இன்று நமக்குக் கிடைத்துள்ள சங்கப் பாடல்கள் அனைத்தும் ஒரு காலத்தில் பாடப்பட்டவை அல்ல; அப்பாடல்கள் ஓர் ஊரினர் அல்லது ஒரு நாட்டினரால் பாடப் பட்டவை அல்ல. தமிழ்நாட்டின் பல இடங் களில் வாழ்ந்த புலவர்கள், பல்வேறு தொழில் களில் ஈடுபட்டிருந்த புலவர்கள் சங்கப் பாடல் களைப் பாடியுள்ளனர். இவர்களுள் சிலர் அரசர்களாக ஆட்சி செலுத்தியுள்ளனர். இப் பாடல்கள் எல்லாம் பாடப்பட்ட காலத்தி லேயே தொகுக்கப்படவில்லை; பாடப்பட்ட காலத்திற்கும் அவை தொகைநூல்களாகத் தொகுக்கப்பட்ட காலத்திற்கும் இடையில் பெரிய கால இடைவெளி இருந்திருத்தல் வேண்டும் (பக்:36).

தமிழில் தொகை நூல்கள் குறித்த நான்கு கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் இடம்பெற்றுள்ள செய்திகளை, ‘பாடப் பட்ட காலம்’, ‘தொகுக்கப்பட்ட காலம்’, ‘தொகுப்பு நெறி’ என்ற தலைப்புகளில் அறிமுகம் செய்து கொள்ளலாம்.

பாடப்பட்ட காலம்

கி.மு.மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முடிய உள்ள காலமே சங்ககாலம். சங்ககாலத்திற்கு முற்பட்டவரே தொல்காப்பியர். கி.மு.ஆறாம் நூற்றாண்டிலிருந்தே தமிழிலக்கியம் வளரத் தொடங்கியுள்ளது. பழங்குடிச் சமூக அமைப்பி லிருந்து விலகி வந்து அரசுகள் உருவாகிக் கொண் டிருந்த மாறுதல் நிகழும் காலமாக (Transitional Period) சங்ககாலம் இருந்தது.

சங்க இலக்கியப் பாடல்கள் சிலவற்றின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, சில பாடல்கள் அரசுகள் உருவாகாத காலத்தில் பாடப்பட்டவை என்பது புலனாகிறது. பெருங் கற்படைப் பண்பாடு (Megalithic Culture), முதுமக்கள் தாழி, ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்வு, பிராமிக் கல்வெட்டுகள் ஆகிய தொல்லியல் சான்றுகள்

சங்க இலக்கியப் பாடல்கள் சிலவற்றுடன் ஒத்துப் போகின்றன. பதுக்கை, முதுமக்கள் தாழி குறித்த சங்கப் பாடல்கள் அரசுகள் உருவாகாத காலத்தில் பாடப்பட்டவை.

களவு வாழ்க்கை, தழை ஆடையைக் கையுறை யாகத் தலைவியிடம் தலைவன் கொடுத்தல், வெறி யாடல் என்பன சங்க இலக்கியச் செய்திகளை மானுட வியல் அணுகுமுறையில் ஆராய்ந்தால் இனக்குழு வாழ்க்கையின் எச்சங்களையே இப்பாடல்கள் பதிவு செய்துள்ளதை உணர முடியும்.

இனக்குழுக்களை வென்று குறுநில மன்னர்கள் ஆளத் தொடங்கினர். இவர்களையடுத்து, சேர, சோழ, பாண்டிய மரபினர் உருவாகினர். கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னரே மூவேந்தர்களின் ஆட்சி தமிழ்நாட்டில் நிலைபெற்று விட்டதை அசோகனின் பாறைக் கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. இச் செய்திகளின் அடிப்படையில் பார்க்கும்போது, இனக் குழு வாழ்வின் எச்சங்களும், அரசு உருவாக்கமும் கொண்ட ஒரு சமூக அமைப்பில்தான் எட்டுத்தொகை நூல்கள் உருவாயின என்று கூற முடியும். சந்தை வேண்டி இனக்குழுக்கள் தமக்குள் போரிட்டதாக விவாதத்துக்குரிய ஒரு கருத்தையும் ஆசிரியர் எழுதி யுள்ளார் (பக். 182).

தொகுக்கப்பட்ட காலம் 

மூன்று தமிழ்ச்சங்கங்கள் இருந்தமை குறித்த செய்தி கி.பி.ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்ட ‘இறையனார் களவியல் உரை’யில் இடம்பெற்றுள்ளது. எட்டுத்தொகை நூல்களைக் கடைச் சங்க நூல்கள் என்று இந்நூல் குறிப்பிடுகிறது. ஆனால் பத்துப்பாட்டை சங்க நூல்களில் ஒன்றாகக் குறிப்பிடவில்லை. சங்க நூல் என்று எட்டுத்தொகை நூல்களைக் குறிப்பிடும் போக்கு ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் உருவாகிவிட்டதை இதனால் அறிய முடிகிறது.

எட்டுத்தொகை நூல்களைப் பட்டியலிடும் இறையனார் களவியல் உரை இந்நூல்கள் தொகுக்கப் பட்ட காலத்தைக் குறிப்பிடவில்லை. கே.என். சிவராசப் பிள்ளையின் கருத்துப்படி ஐந்து தொகை நூல்களுக்கும் கடவுள் வாழ்த்துப் பாடிய பாரதம் பாடிய பெருந்தேவனாரே தொகுப்புப் பணியைச் செய்திருக்க வேண்டும்.

‘முதல் பாண்டியப் பேரரசை நிறுவிய கடுங் கோன் மரபினர் உருவாக்கிய மதுரைத் தமிழ்ச் சங்கமே தொகுப்புப் பணியில் ஈடுபட்டது’ (பக்: 117). இவர்களைத் தொடர்ந்து சேர மரபினர் இப் பணியில் ஈடுபட்டு, ‘பதிற்றுப் பத்து’, ‘ஐங்குறு நூறு’ என்ற இரு நூல்களைத் தொகுத்தனர்.

இறையனார் களவியல் உரை எட்டுத்தொகை நூல்களின் பெயர்கள் அனைத்தையும் குறிப்பிடு வதன் அடிப்படையில் பார்த்தால், கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிக்கு முன்பே தொகுக்கும் பணி முற்றுப் பெற்றிருக்க வேண்டும்.

தொகுப்பு நெறி

தனித்தனியாகச் சிதறிக் கிடந்த பாடல்களைத் தொகுக்கும்போது அகம், புறம் என்று திணையடிப் படையில் மட்டுமின்றி, எண்ணிக்கை அடிப்படை யிலும் தொகுத்துள்ளனர். இது குறித்து இறை யனார் களவியல் உரை,

அவர்களால் (449 புலவர்கள்) பாடப்பட்டன நெடுந்தொகை நானூறும், குறுந்தொகை நானூறும், நற்றிணை நானூறும், புறநானூறும், ஐங்குறுநூறும், பதிற்றுப்பத்தும், நூற்றைம்பது கலியும், எழுபது பரிபாடலும், என்று இத் தொடக்கத்தன.

என்று குறிப்பிடுகிறது (பக்.50). நானூறு என்ற எண்ணிக்கையில் நெடுந்தொகை (அகநானூறு), குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு ஆகிய நான்கு நூல்களும், ஐந்நூறு எண்ணிக்கையில் ஐங்குறுநூறும், நூறு எண்ணிக்கையில் பதிற்றுப்பத்தும், நூற்றைம்பது எண்ணிக்கையில் கலித்தொகையும், எழுபது எண்ணிக் கையில் பரிபாடலும் தொகுக்கப்பட்டுள்ளன.

குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு ஆகியன அடியளவில் தொகுக்கப்பட்டுள்ளன. குறுந்தொகை நான்கு முதல் எட்டு அடிகளையும், நற்றிணை ஒன்பது முதல் பன்னிரண்டு அடிகளையும், அகநானூறு பதின்மூன்று முதல் முப்பத்தொன்று அடிகளையும் கொண்டுள்ளன. இம்மூன்று நூல்களும் உள்ளடக் கத்தில் தம்முள் வேறுபாடு கொண்டவையல்ல.

இவை ஒருவரால் அல்லது ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்ட ஒரு குழுவால் எழுதப்பட்டிருக்க வேண்டும் (பக். 50). இத்தொகுப்புகள் தொகுக்கப் பட்ட பின்னரே திணை, துறையைப் பற்றிய பதிவுகள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் (பக்:50, 52). அக நானூற்றுத் தொகுப்பில் திணைப் பகுப்பு தெளிவாக உள்ளது. இது குறித்து,

ஒற்றைப் படை எண்களாக வரும் பாடல்கள் பாலை; 2,8..... என முடியும் பாடல்கள் குறிஞ்சி; 4, 14..... என முடியும் பாடல்கள் முல்லை; 6, 16..... என முடியும் பாடல்கள் மருதம்; 10,20..... எனப் பூச்சியங்களில் முடியும் பாடல்கள் நெய்தல். இப்பகுப்புப் பற்றி மூலச்சுவடிகளில் மூன்று வெண்பாக்கள் உள்ளன. மேலும், இந்நூல் களிற்றியானை நிரை, மணிமிடை பவளம், நித்திலக்கோவை என மூன்று பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. மூலச்சுவடிகளில் உள்ள இப்பகுப்புகளை உரையாசிரியர் நச்சினார்க்கினியர் தம் தொல்காப்பிய உரையில் ஆளுகின்றார். எனவே இம்முத்திறப் பகுப்பு நச்சினார்க் கினியருக்கும் முற்பட்டது என்பதில் ஐய மில்லை (பக்: 53).

என்று குறிப்பிட்டு விட்டு ‘மூலம்’ (பனுவல்), ‘திணைப் பகுப்பு’, ‘நூல் உட்பிரிவு’ என மூன்று படிநிலை வளர்ச்சிகளை அகநானூற்றுத் தொகுப்புக் காட்டு கிறது.

இதன் அடுத்த கட்டமாகத் திட்டமிட்ட வகையில் திணை வகுக்கப்பட்டு, தொகுக்கப்பட்ட நூல்களாக ஐங்குறுநூறும், கலித்தொகையும் அமைகின்றன.

ஐந்திணைகள் ஒவ்வொன்றுக்கும் குறைந்த அடி வரையறையுடன் கூடிய, நூறு, நூறு பாடல்கள் தனித்தனியாகத் தொகுக்கப்பட்ட நூலாக ஐங்குறுநூறு அமைந்துள்ளது. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை எனத் திணை வரிசை மாறியமைந்துள்ளது.

ஐங்குறுநூற்றைப் போன்றே திணையடிப் படையில் திட்டமிட்டுத் தொகுக்கப்பட்ட நூலாகக் கலித்தொகை அமைகிறது. ஆனால், ஐங்குறுநூறில் ஒவ்வொரு திணைக்கும் நூறு பாக்கள் இடம் பெற்றுள்ளது போன்று ஒரே சீரான எண்ணிக்கை அளவில் பாடல்கள் தொகுக்கப்படவில்லை. இது வரை நாம் பார்த்த தொகைநூல்கள் அகவற்பாவால் ஆனவை. ஆனால் கலித்தொகை கலிப்பாவால் ஆனது. வைதீகச் சமயத்தின் தாக்கம் தமிழகத்தில் செல்வாக்கு பெற்றுவிட்டதைக் கலித்தொகைப் பாடல்கள் சில உணர்த்துகின்றன.

பதிற்றுப்பத்து, திட்டமிட்ட தொகுப்பாக அமைகிறது. சேர மன்னர்களைப் பற்றிய நூறு பாடல்களின் தொகுப்பாக இது தொகுக்கப்பட்டு உள்ளது. இந்நூல் குறித்து,

ஒன்றோடொன்று தொடர்பில்லாத- பொருள் இயைபில்லாத - தனிநிலைச் செய்யுட்களைத் தொகுத்த நிலையிலிருந்து வளர்ச்சி பெற்று, ஒரே மரபைச் சேர்ந்த பத்து அரசர்களைப் பற்றிய பாடல்களின் தொகுப்பான பதிற்றுப் பத்து பழைய உரையுடன் கிடைத்துள்ளது. இன்றுள்ள நிலையில் அது முழுமையாகக் கிடைக் காமல், குறைநூலாக உள்ளது. அதன் முதல் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்க வில்லை என்பர் இந்நூலை முதன்முதலில் பதிப்பித்த உ.வே. சாமிநாதையர் (பதிற்றுப் பத்து, 1957: ஏஐ). ஆனால், ஜான் மார் இந் நூலின் பத்துகளின் இறுதியில் இடம் பெற்றுள்ள பதிகங்களை ஆராய்ந்து, இவ்வாறு காணாமல் போன பத்துகள் முதல் பத்தும் இப்போது ஏழாம் பத்து எனக் குறிக்கப்பெறும் பத்திற்கு முந்திய பத்தும் ஆகும் என்பர். அதாவது, இன்று 9-ஆம் பத்தாகக் கொள்வதை நூலின் இறுதியான 10-ஆம் பத்தாகக் கொள்ள வேண்டும் என்பது அவர் கொள்கை. அவருடைய கொள்கையின்படி இன்றுள்ள பதிற்றுப் பத்து, 2,3,4,5,6,8,9,10, பத்துகளைக் கொண்டதாகும். அதாவது, முதல் பத்தும், ஏழாம் பத்தும் கிடைக்கவில்லை (The Eight Anthologies, 1985:273-274). காணாமல்போன முதல் பத்து உதியன் சேரலாதனுக்குரியது. பத்தாம் பத்து சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்குரியது என்பர் ச. வையாபுரி பிள்ளை (இலக்கியச் சிந்தனைகள், தொகுதி, ஐ -1989:190). ஆனால், ஜான்மார் அவர்களின் கருத்தின்படி, காணாமல்போன ஏழாம் பத்து அந்துவன் சேரல் பற்றியதாகும். பத்தாம் பத்து இளஞ் சேரல் இரும்பொறை பற்றியதாகும்.

என்கிறார் ஆசிரியர் (பக்: 58-59). புறத்திணையில் அமைந்த தனிநிலைப் பாடல்களின் தொகுப்பான புறநானூறு அடி வரையறையோ, திணை வரை யறையோ இன்றித் தொகுக்கப்பட்டுள்ளது. ஜான் மார் என்பவரது கருத்துப்படி, கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில்தான் புறநானூற்றின் தொகுப்புப் பணி நிறைவு பெற்றிருக்க வேண்டும். (ஆனால் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த இறையனார் களவியல் உரையில் ‘புறநானூறு’ குறிப்பிடப்பட்டுள்ளது.)

ஓரளவுக்குத் திட்டவட்டமான தொகுப்புமுறை பின்பற்றப்பட்டுள்ளதாகக் கருதும் ஜான்மார் சேர, சோழ, பாண்டியர் என்று மூவேந்தர் வைப்புமுறை மாறி சேர, பாண்டிய, சோழர் என்று பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார்.

எட்டுத்தொகை நூல்களில் இசைத் தமிழ் நூலாகப் பரிபாடல் அமைந்துள்ளது. எழுபது பரிபாடல் என்று இறையனார் களவியல் உரை குறிப்பிட, இருபத்துநான்கு முழுப்பாடல்களும், ஒன்பது பாடல் உறுப்புகளுமே இன்று கிட்டி யுள்ளன. சேர மரபினர் அல்லது பல்லவ மன்னரின் ஆதரவோடு இத்தொகுப்பு தொகுக்கப்பட்டிருக்கலாம்.

சங்க இலக்கியப் புலவர்கள், அரசர்கள், வள்ளல்கள் பட்டியல்களில் சோழ நாட்டினர் மிகுதியாக இருந்தும், சோழர்கள் தொகுப்புப் பணியை மேற்கொள்ளாமை நம்மைச் சிந்திக்க வைக்கின்றது. அதற்குரிய காரணங்கள் இனிமேல் ஆராயப்படுதல் வேண்டும்.

என்று எதிர்கால ஆய்விற்கான ஒரு கருத்தை முன் வைக்கிறார் (பக்:66).

* * *

திணைக்கோட்பாடு என்ற தலைப்பில் திணைப் பகுப்பு தொடர்பான சில அடிப்படைச் செய்தி களைக் கூறும் ஆசிரியர் திணைமயக்கம் குறித்து,

“பாடல்கள் திணைமயக்கமாக அமையும் போது, உரையாசிரியர்கள் பெரும்பாலும் அப்பாடல்களுக்கு முதற்பொருள் அடிப் படைகளில்தான் திணை வகுத்துச் சென்றுள்ளனர்.” (பக்:80)

என்று கூறுகிறார். இதனையடுத்து முடிவுரையாக,

குறிஞ்சித்திணை எனப் பதிப்பிக்கப்பட்ட பாடல்களில் திணை மயக்கம் மிகுதியாக உள்ளது. 39 குறிஞ்சித்திணைப் பாக்களில் (குறுந்தொகை 17, நற்றிணை 17, அகநானூறு 5) நெய்தல் பின்புலத்தில் குறிஞ்சியின் உரிப் பொருள் மயங்கியுள்ளது; முல்லையும் குறிஞ்சியும் மயங்கிக் காணப்படுகின்றன. இவை அனைத்தும் திணைக்கோட்பாடு எவ்வளவு சிக்கலானது என்பதனை எமக்குத் தெளிவுபடுத்துகின்றன. குறிஞ்சித் திணைப் பாக்கள் முழுவதையும் ஒன்றாகத் தொகுத்து நுண்ணாய்வு செய்யும்போது, மேலும் பல விளக்கங்கள் கிடைக்கலாம்.

என்று குறிப்பிடுகிறார் (பக்: 81,82). இவ்வியலின் தொடர்ச்சி போன்று ‘நெய்தல் திணை’ என்ற கட்டுரை அமைந்துள்ளது.

தொல்காப்பிய அகத்திணை இயலின் எட்டாவது நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையின் அடிப்படையில், “தலைவியின் பிரிவுத்துன்பம் கட்டுக்குள் அடங்காமல் வெளிப்படுவது நெய்தல் திணையின் உரிப்பொருள் என்பது தெளிவு” (பக்:87) என்று கூறிவிட்டு, முல்லைத் திணையில் இடம்பெறும் பிரிவுக்கும் நெய்தல் திணை இடம் பெறும் பிரிவுக்கும் இடையிலான வேறுபாட்டை,

ஆற்றியிருக்கும் நிலைமாறித் தலைவியின் ஆற்றாமை வரம்புகளைக் கடந்து வெளிப் படுமாயின், அது நெய்தல்திணை ஆகி விடுகின்றது. கண்ணீரைத் தாங்கி நிறுத்துதல் முல்லைத்திணை என்றால், கண்ணீர் விடுதல் நெய்தல் திணை ஆகும். தலைவியின் இரு வேறு நிலைகளை அவ்வத்திணைகளின் பின்புலம் விளக்கி விடுகின்றது. முல்லைத் திணையின் பின்புலம் தலைவிக்கு நம்பிக் கையைத் தோற்றுவிக்கின்றது. ஆனால், நெய்தல்திணையின் பின்புலம் தலைவிக்கு நம்பிக்கையின்மையைத் தோற்றுவிக்கின்றது.

என்கிறார் (பக்:88). குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு என்ற மூன்று நூல்களிலும் 213 பாடல்கள் நெய்தல் திணைக்கு உரியனவாகப் பதிப்பிக்கப் பட்டுள்ளன என்றும், இது விழுக்காற்று அடிப் படையில் 17.75 ஆகுமென்றும் கூறிவிட்டு, சங்க இலக்கியங்களில் இடம்பெறும் பிரிவு குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

  • முல்லைத்திணையும் ஒரு வகையில் பிரிவு தான்; ஆனால், அத்திணையில், நம்பிக்கை இழையோடுகின்றது.
  • தலைவன், தலைவி ஆகிய இருவர் கூற்று களும் முல்லைத் திணையில் இடம்பெறு கின்றன.
  • பாலைத்திணையிலும் தலைவன், தலைவி ஆகிய இருவர் கூற்றுகளும் இடம்பெறு கின்றன.
  • தலைவனைப் பிரிவதால் தலைவிக்கு ஏற்படும் மனத் துயரம், பிரிந்து செல்லும் தலைவனின் மனநிலை போன்றவை பாலைத் திணைப் பாடல்களில் இடம் பெறுகின்றன. நெய்தல் திணை ஒன்றில்தான் தலைவியின் துயரம் மட்டுமே புனைந்துரைக்கப்படு கின்றது. (பக்: 89,90)

அடுத்து, திணைப்பகுப்பில், உரிப்பொருளை விட கருப்பொருளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறார். இறுதியாகப் பின்வரும் மூன்று கருத்துகளை முடிவுரையாக முன்வைக்கிறார்.

  • பெரும்பான்மையான பாடல்கள் நெய்தல் நில வருணனை காரணமாகவே நெய்தல் திணையில் வைக்கப்பட்டுள்ளன (பக்: 101).
  • நெய்தல் திணையில் நெய்தல் நிலத்திற்குரிய இரங்கல் உரிப்பொருளைக் கொண்டுள்ள பாடல்கள் மிகச் சிலவாகவே உள்ளன. இரங்கு வதாகப் பாடும்போதும், தலைவியின் இரங்கலே சிறப்பிக்கப்படுகின்றது (மேலது).
  • நெய்தல் நிலம் கடலோடு தொடர்புடைய தாயினும், மீன் வேட்டம் பற்றிப் பேசப்படு கிறதே ஒழிய, அயல்நாட்டுக் கடல் பயணம் பற்றி நெய்தல் திணைப்பாக்களில் பேசப்பட வில்லை என்பது எண்ணத்தக்கது (மேலது).

பல்வேறு ஆய்விதழ்களில் எழுதப்பட்ட கட்டுரை களின் தொகுப்பு என்பதால் கூறியது கூறல் ஆங் காங்கே இடம்பெறுகிறது. கட்டுரைகளின் தொகுப் பாக ஒரு நூல் அமையும்போது, இது தவிர்க்க முடி யாத ஒன்றுதான். கட்டுரைகளின் அடிக்குறிப்புகள் ஆசிரியரின் கடும் உழைப்பையும், அறிவுத் தேட்டத் தையும் வெளிப்படுத்தி நிற்கின்றன. விவாதத்துக் குரிய கருத்துகள் இந்நூலில் இடம்பெற்று மேலும் ஆய்வுக்கான களங்களை உருவாக்கியுள்ளன. இந் நூலின் முன்னுரையில் (பக்: ஓஓ) இடம்பெற்றுள்ள,

1920-40 களுக்குப் பின்னர் அதாவது ரா. இராகவைய்யங்கார், மு.இராகவைய்யங் கார் போன்றவர்களின் காலத்தின் பின்னர் சங்க இலக்கியங்கள் பற்றிய இத்தகைய ஆய்வுகள் மிகக் குறைவாகவே இருந்தன. இதற்குப் பிரதான காரணம் திராவிடக் கருத்துநிலை வளர்ச்சியின் பின்னர் சங்க காலம் ஆரியக் கலப்பற்ற தமிழ்ப் பண் பாட்டின் பொற்காலமாகக் கருதப்பட்ட மையாகும்.

ஆனால், சங்க காலம் பற்றிய காய்தல், உவத்தலற்ற, ஆழமான, அகலமான, புலமைக் கட்டுப்பாடுடைய ஆராய்ச்சிகள் இப் பொழுது மீள வரத்தொடங்கிவிட்டன என்பதனை எடுத்துணர்த்தும் ஒரு சிறு குறியீடாகவே இத்தொகுதியினைப் பார்க் கின்றேன். நண்பர் பாண்டுரங்கன் கூறுவன எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியா தெனினும் அவற்றை அவர் எடுத்துக்கூறும் புலமை நேர்மை, ஆய்வுக் கடப்பாட்டுணர்வு, ஆழமான தேடல் ஆகியவற்றுக்காக அவரை வாழ்த்துதல் நமது கடன்.

நண்பர் பாண்டுரங்கன், என் போன்றவர்கள் இளைப்பாறும் நிலைக்கு வந்துவிட்டோம். இவற்றுக்கான விடைகளை நமது மாண வர்கள் தரவேண்டும்; தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

என்ற கா. சிவத்தம்பியின் கூற்று இந்நூலின் சிறப்பையும், எதிர்கால ஆய்வின் தேவையையும் சுட்டிக் காட்டுகிறது.

தொகை இயல் (அ.பாண்டுரங்கன்) (வெளியீடு : தமிழரங்கம், புதுச்சேரி)

Pin It

உலகெங்கும் அறிவியல் முன்னேற்றம் வியக்கத் தக்க வளர்ச்சிகளை மிக விரைவில் தோற்றுவித்த காலம் பொதுவுடைமை மேதைகள் கார்ல் மார்க்சும், பிரடெரிக் ஏங்கல்சும் வாழ்ந்த காலம். அவர்கள் இருவரும் உலகில் எந்த நாட்டில் சிறு முரண் அசைவு ஏற்பட்டாலும் அதனைக் கூர்ந்தாய்ந்து, அது மானுட விடுதலைப் போராட்டமா என்று தெளிவுபடுத்துவதில், அப்போராட்டத்தை ஆதரித்துக் கருத்துரைப்பதில் மிகவும் முனைப்பாக இயங்கினர்.

இவ்வாறு உலகத்தையே அலசியாய்ந்த ஆனானப் பட்ட மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருக்கும் சவாலாக விளங்கிய ஒரு நாடு இந்தியாதான். அவ்வாறு இந்த மேதைகளுக்கே சவாலாக நின்ற ஒரு ‘கூறு’ கெட்ட கூறு சாதிதான்!

எந்த நாட்டிலும், அரசியல், பண்பாடு போன்ற தடங்களில் சீர்திருத்தங்களை ஏற்படுத்தி மறு மலர்ச்சியை, பொதுவுடைமையை நடைமுறையில் காண முயன்றாலும் முடியும்; இந்தியாவில் மட்டும் இயலாது என்ற சூழல்தான் - பத்தொன்பதாம் நூற்றாண்டில்! பின்னர் இருபதாம் நூற்றாண்டின் முன்பாதியில், பண்டித அயோத்திதாசர், டாக்டர் அம்பேத்கர், பெரியார் ஈ.வெ.ராமசாமி, பொது வுடைமையாளர்கள் ம.சிங்காரவேலர், ப.ஜீவானந்தம் ஆகியோர் ஆற்றிய சாதி ஒழிப்புப் பணிகள் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கன.

சாதி ஒழிப்புப் பணியில் இந்தியாவில் குறிப்பிடத் தக்க அளவுக்குச் சிறப்பிடம் பெற்ற தமிழ்நாட்டில் இந்த 21-ஆம் நூற்றாண்டில் சாதி மோதல் என்பது வியப்புக்கும் வேதனைக்கும் உரியது.

தருமபுரி மாவட்டம், செல்லன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகள் திவ்யா (வயது - 20), அருகிலுள்ள நத்தம் காலனியைச் சேர்ந்த இளங்கோ என்பவரின் மகன் இளவரசன் (வயது - 23) ஆகிய இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இத்திருமணத்தை விரும்பாத பெண்ணின் தந்தை நாகராஜ் நவம்பர், 7ஆம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டதையொட்டி, அப்பகுதியில் வன்முறை வெடித்தது. அதே நாளில் மாலை நான்கு மணி அளவில் தருமபுரி அருகிலுள்ள வெள்ளாளப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட நத்தம் காலனி, அண்ணாநகர் புதுக்காலனி, கொண்டப்பட்டி ஆகிய மூன்று கிராமங்களில் தலித் மக்கள் வாழும் 270 வீடுகள் மேல்சாதியினரால் தீவைத்துக் கொளுத்தப் பட்டன; வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் சூறையாடப்பட்டன. அவை ஏழு கோடி மதிப்பு பெறும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏற்படவில்லை.

இந்த இழிசெயல் எவ்வளவு நச்சார்ந்தது என்பதை உணர்ந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அந்த நிகழ்வைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரதங்களையும், போராட்டங்களையும் நடத்தி வருகிற வேளையில், ஓர் அரசியலாளர் தலித் இளைஞர்கள் திட்டமிட்டு மற்ற சாதிப் பெண்களைக் காதலித்து ஏமாற்றிப் பொருளாதார ஆதாயம் தேடு வதாகவும், அதற்காக சில தலித் அமைப்புகள் இயக்கமே நடத்துவதாகவும் கருத்து கற்பித்து வருகிறார்.

இவ்வாறு, காதலிப்பதை - அதாவது, பிற சாதிப் பெண்ணைக் காதலிப்பதையெல்லாம் குற்றம் சாட்டு வதே தவறு; இது சமூக நீதிக்கு எதிரான செயல்!

இன்று விஞ்ஞானம் ஏராளமாக முன்னேறி, ‘உலகில் உயர்ந்த பண்பாடு எங்கள் பண்பாடு’ என்று பெருமையடித்துக் கொள்ளும் இந்தியாவில், நம் தமிழகத்தில் இப்படிப்பட்ட தீய நிகழ்வுகள் நிகழ்வது வெட்கக் கேடானது.

இந்த தர்மபுரி மாவட்ட நிகழ்வு என்பது திடீரென்று உணர்ச்சிவசப்பட்டு நிகழ்ந்ததாகப் புலப் படவில்லை. இதுபோன்ற சாதி வேறுபாடுகளை மனத்தில் கொள்ளாது இயல்பாகக் காதல்வயப் பட்டு திருமணம் செய்து கொள்ளும் நேர்வு எப் போது நடந்திருந்தாலும் உடனிகழ்வாக இந்த வன் முறையும் நடந்திருக்கும் என்றே தோன்றுகிறது.

“சோஷலிஸ்டுகள் அல்லது சோஷலிஸம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளில் சாதி மிக முக்கியமானது. இதனை எதிர்கொள்ளாமல் புரட்சியை வென்று அடைய முடியாது. புரட்சிக்கு முன் சாதிப் பிரச்சினையைக் கவனத்தில் கொள்ளத் தவறினால் புரட்சிக்குப் பின் சாதியைக் கவனத்தில் கொண்டு, அதில் நம் சிந்தையை மூழ்கச் செய்ய வேண்டியிருக்கும்” என்கிறார் டாக்டர் அம்பேத்கர்.

சாதி, மத, பண்பாட்டுத் தளங்களில் சீர்திருத்தம் கொள்ளாது, நம் மண்ணில் சமத்துவம் காண இயலாது. இதனை எல்லாச் சாதிகளிலும் உள்ள உழைப்பாளி வர்க்கம் உணர வேண்டும். இத்தகைய பிற்போக்குத்தனமான வன்முறைகள் தொடர்ந்து நிகழ்வது ஒடுக்கப்படுவோர் மட்டுமின்றி ஒடுக்கு வோர், அதற்கு உடந்தையாக இருப்போர், அதைக் கண்டும் காணாது வாளாவிருப்போர் - இவர்களின் அடுத்த தலைமுறையினர்களுக்கும் துன்பத்தை விளைவிக்கும் என்பதை எல்லாத் தரப்பினர்களும் கவனத்திற்கொண்டு உரிய தடுப்பு நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும்.

Pin It

இரண்டாம் வீராநாயக்கர் நாட்குறிப்பை முன்வைத்து...

புதுச்சேரி ஒன்றியம் என்பது புதுச்சேரி, காரைக் கால், மாகி, ஏனாம் என்னும் பகுதிகளை உள்ளடக்கிய தாகும். இப்பகுதிகள் நிலவியல் ரீதியாகத் தனித் தனியாகக் காணப்பட்டாலும், பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவிற்கு வந்தபோது இப்பகுதிகளை உள்ளடக்கியே அவர்களின் ஆட்சி அமைந்திருந்தது.

இவற்றில் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைத் தமிழகத்தின் கிழக்குப் பகுதியிலும், மாகி கேரளா விலும், ஏனாம் ஆந்திராவிலும் அமைந்துள்ளது. மொழி யால், கலாசாரத்தால், பண்பாட்டால் மற்றும் அனைத்துச் சமூகப் பழக்கவழக்கங்களாலும் தமிழகத்தின் ஒரு அங்கமாகக் காணப்படுவது புதுச்சேரி மற்றும் காரைக்கால் மட்டுமே. தமிழ்ச் சமூக வரலாற்றில் ஒரு காலகட்டத்தில் தோன்றிய சாதிய முறை இன்றும் தமிழ்மக்களிடையே பெரும் பாகுபாட்டை வளர்த்துவருகிறது. பதினெட்டாம் நூற்றாண்டிலும் இப்பாகுபாடு புதுச்சேரி, காரைக் கால் வாழ்மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற் படுத்தியது. இச்சாதிய முறையைப் பதினெட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த பல நாட்குறிப்புகள் தெளிவு படுத்துகின்றன. இவற்றுள் இக்கட்டுரைக்கு ஒரு நாட்குறிப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. அது இரண்டாம் வீராநாயக்கர் நாட்குறிப்பாகும்.

இரண்டாம் வீராநாயக்கர் நாட்குறிப்பு

பதினெட்டாம் நூற்றாண்டு புதுச்சேரி வரலாற்றை அறிய உதவும் முக்கிய முதல்நிலை ஆதாரமாகக் காணப்படும் ஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு 1736 முதல் 1761ஆம் ஆண்டு வரையிலான வரலாற்றை மட்டும் தருகிறது. இரண்டாம் வீராநாயக்கர் நாட் குறிப்பு 1778 முதல் 1792 வரையிலான புதுச்சேரி வரலாற்றை அளித்துப் பதினெட்டாம் நூற்றாண்டைப் பூர்த்தி செய்கிறது. சமூக, பொருளாதார, அரசியல், பண்பாடு மற்றும் வாணிபம் போன்ற அனைத்து நிகழ்வுகளும் இந்நாட்குறிப்பில் பதிவு செய்யப் பட்டுள்ளன.

நாட்குறிப்பு எழுதிய வீராநாயக்கரின் இயற் பெயர் வீராசாமி நாயக்கர் எனச் சில இடங்களில் குறிப்புகள் உள்ளன. இவரின் கொள்ளுத் தாத்தா வான பெருமாள் நாயக்கர் 1700ஆம் ஆண்டு முதல் 1741 வரை புதுச்சேரியில் “இரண்டாம் நயினாராக” பதவி வகித்தார். அதாவது புதுச்சேரி வாழ் தமிழ் மக்களுக்கு நீதி வழங்கும் மன்றத்துக்கு பிரெஞ்சு அரசு அமைத்த காவல்துறைத் தலைவருக்கு அடுத்த படியான அதிகாரியாகப் பணிபுரிந்தார். இவருக்குப் பின் இவரின் மகனான வீராநாயக்கர் அப்பதவியில் அமர்த்தப்பட்டார். இவரும் தன் தந்தையைப் போலவே தம் பணியைச் சீரிய முறையில் சிறப்பாகச் செய்தார். ஆனந்தரங்கம்பிள்ளை தமது நாட் குறிப்பில் இவரைப்பற்றிக் குறிப்பிடுகிறார். பின் 1748-இல் புதுச்சேரி ஆங்கிலேயர் வசம் வந்த போது இவரின் பணி நிறுத்தப்பட்டது.

1754ஆம் ஆண்டு மறுபடியும் புதுச்சேரி பிரெஞ்சுக் காரர்கள் வசம் வந்ததும் வீராநாயக்கரின் மகனான ராசகோபால நாயக்கர் பதவி ஏற்றார். அரசின் நம்பிக்கைக்குரிய பணியாளராக ராசகோபால நாயக்கர் விளங்கினார். இவர் சுமார் 38 ஆண்டுக்காலம் இரண்டாம் நயினார் பதவி வகித்தார். இவருடைய புதல்வர்களில் ஒருவரான வீராநாயக்கரே இந்நாட் குறிப்பு எழுதியவர். தாத்தாவின் பெயரைக் கொண் டிருப்பதனால் இவர் இரண்டாம் வீராநாயக்கர் என அழைக்கப்படுகிறார்.

புதுச்சேரி மறுபடியும் ஆங்கிலேயர் வசம் வந்ததால் தமது மூதாதையர்களின் பதவியில் இரண்டாம் வீராநாயக்கர் அமர முடியவில்லை. ஆங்கிலேயரிடம் இருந்து புதுச்சேரி 1816ஆம் ஆண்டு பிரெஞ்சுக்காரரிடம் வந்தபின் இரண்டாம் வீரா நாயக்கர் தம் முன்னோர்கள் வகித்த பதவியைத் தமக்கு அளிக்குமாறு வேண்டி விண்ணப்பம் செய்தார். ஆனால் வேலை கிடைத்ததா என்பது சரிவரத் தெரியவில்லை. இவர் மறைந்த ஆண்டும் தெரியவில்லை.

புதுச்சேரியில் 1844-1854-ஆம் ஆண்டுகளில் அரசுப் பணியாற்றியவர் எதுவட் அரியேல். இவர் தமிழ்ப்பண்பாட்டிலும், தமிழ்மொழியிலும் அதிகப் பற்று கொண்டவர். இவர் தமிழை நன்கு கற்றதோடு நூல்கள், சுவடிகள், குறிப்புகள் போன்றவற்றைத் தேடிச் சேகரித்தார். இவரின் திடீர் மறைவுக்குப் பின் இவரின் சேகரிப்புகள் பிரான்சின் தலைமை நூலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுப் பாதுகாக்கப் பட்டு வருகின்றன.

புதுச்சேரியில் பிறந்து பிரான்சில் தம் உயர் கல்வியைப் பயின்ற கோபாலகிருஷ்ணன் என்பவர் ஒரு சிறந்த வரலாற்று ஆராய்ச்சியாளர். பாரிசில் உள்ள தேசிய நூல்நிலையத்தில் பற்பல ஆண்டுகள் தமிழ் வரலாற்றை ஆய்வு செய்தபோது, அங்கு இந் நாட்குறிப்பைக் கண்டுபிடித்தார். இவர் இந்நாட் குறிப்பைச் சரிவரத் தொகுத்து பிப்ரவரி 1992-இல் வெளியிட்டார். இந்நாட்குறிப்பு ஒரு வரலாற்றுக் கருவூலமாக விளங்குகிறது.

புதுச்சேரி வாழ்சாதிகள்

1778ஆம் ஆண்டு துவங்கி 1792ஆம் ஆண்டு வரையிலான வீராநாயக்கரின் நாட்குறிப்பு புதுச் சேரி வாழ் சாதிகளை அறியப் பெரிதும் உதவுகிறது. மேலும் சாதிகளுக்கிடையே உள்ள தொடர்பு, முரண்பாடுகள் போன்ற செய்திகளும் இடம்பெறு கின்றன. சாதிகளுக்குள் ஏற்பட்ட உட்பூசல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெள்ளாளர், கோமுட்டி, கைகோளர், செட்டி, கருமர், அகம்படையர், முதலி, நாயக்கர், சாடர், பிள்ளை, கவரை, சக்கிலி, இடையர், மேளக்காரர், காசுக்காரர், பவளக்காரர் எனப் பல சாதிகளைப்பற்றிய பதிவுகள் இந்நாட்குறிப்பில் உள்ளன.

இச்சாதிகள் வலங்கை சாதி, இடங்கை சாதி எனவும் பிரிக்கப்பட்டிருந்தன. பொதுவாக வலங்கை சாதியினர் இடங்கை சாதியினரைத் தமக்குக் கீழ்ப் பட்டவர்களாகவே கருதினர். சில நேரங்களில் வலங்கை சாதியினர் பெறும் உரிமைகளை இடங் கையினர் கோரும்போது முரண்பாடுகளும் சச்சரவுகளும் ஏற்படுகின்றன.

நாட்குறிப்பின்படி மேளக்காரர், செட்டி, கம்மாளர், கருமர், சக்கிலி போன்றவர்கள் இடங்கை சாதியினர் என்றும் பிள்ளை, கவரை, கோமுட்டி, கைகோளர், முதலி, அகம்படையர் போன்றவர்கள் வலங்கை சாதியினர் என்றும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் வீராநாயக்கர் மார்ச் மாதம் 2-ஆம் தேதி 1785ஆம் ஆண்டு நாட்குறிப்பில் வலங்கை, இடங்கை சச்சரவைத் தீர்க்கும்படியான பொறுப்பு ஆனந்தரங்கம் பிள்ளையின் தம்பிமகனான ரங்கப்ப திருவேங்கடம் பிள்ளையிடம் கொடுக்கப்பட்டதாகப் பதிவுசெய்கிறார்.

சாதிகளின் நடமாட்ட உரிமையும், மறுப்பும்

பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சியில் புதுச்சேரி அழகும், பொலிவும் பெற்றது எனலாம். பிரெஞ்சு நாட்டில் உள்ளது போன்ற நேரான, சரியாகப் பராமரிக்கப்பட்ட சாலைகள் இருந்தன. ஆயினும், சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு வரும் சாலை, சாவடித்தெரு, இன்னும் சில தெருக்கள் மட்டுமே பொதுவழிகளாகக் கருதப்பட்டன. மற்ற அனைத்துத் தெருக்களும் சாதியின் பெயரைக்கொண்டு வழங்கப் பட்டன. உதாரணமாக, வெள்ளாளத்தெரு, பிராமணத் தெரு, பள்ளத்தெரு, செட்டித்தெரு, யாதவர் தெரு, கோமுட்டித்தெரு, முதலித்தெரு, கைகோளர் தெரு போன்றவற்றைக் கூறலாம். பெரும்பாலும் மக்கள் அவரவர் சாதியின் தெருக்களிலேயே குடியிருந்தனர்.

ஒரு சாதியினரின் தெருவுக்குள் மற்ற சாதியினர் செல்லும்போது சச்சரவுகள் ஏற்பட்டுள்ளன. குடை யுடன் செல்லும்போதும், திருமண ஊர்வலங்கள் செல்லும்போதும் மற்ற சாதியினரை மதிக்காததாகக் கருதப்பட்டது.

1785ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி நாட் குறிப்பின்படி வரதராச பெருமாள் கோயில் தேர் இடங்கை சாதியினர் தெருவுக்குள் செல்லக் கூடாது என வலங்கை சாதியினர் பெரும் எதிர்ப்பைத் தெரி வித்துள்ளனர். இதனால் இடங்கை, வலங்கை சாதி களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இப்பிரச்சினை கவர்னர் செனரல் கோசிஜினிடம் கொண்டு செல்லப் பட்டது. இப்பிரச்சினை பெரிதானதால் கவர்னர் ஊர்வலத்தை நிறுத்தும்படி உத்தரவிட்டார்.

1789ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி நாட் குறிப்பில் வலங்கை சாதியினரான யாதவருடைய தெருவில் இடங்கை சாதியினரான திருவம்பல செட்டி மகன் பல்லக்கில் சென்றார். இதற்கு வலங்கை சாதியினர் பெரும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

வலங்கை சாதியினர் இடங்கை சாதியினரின் தெருவுக்குள் செல்லும்போது அதிகமான சச்சரவு ஏற்படவில்லை. இவ்வாறு குடிகள் சாதியின் பெயரால் நடமாட்ட உரிமையை இழந்திருந்தனர்.

பல்லக்கு உபயோகம்

பதினெட்டாம் நூற்றாண்டில் வாகனப் போக்கு வரத்து மிகவும் குறைவாகக் காணப்பட்டது. பெரும் பாலான பொதுமக்கள் நடந்தே தங்கள் பயணத்தை மேற்கொண்டனர். சிலர் பல்லக்கு, குதிரை, மாட்டு வண்டி போன்றவற்றையும் பயன்படுத்தினர்.

இந்நாட்குறிப்புகள் சில, பல்லக்கு உபயோ கத்தைப் பதிவுசெய்கின்றன. 1785ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி இடங்கை சாதியைச் சேர்ந்த தேவரா செட்டி என்பவர் திருமண ஊர்வலத்தில் பல்லக்கு உபயோகித்தார். இதனை வலங்கை சாதியினர் கடுமையாக எதிர்த்தனர். கவர்னர் கோட்டேனஸ் இப்பிரச்சினையை விசாரிக்கையில், பல்லக்கு உபயோகிப்பது தங்களது உரிமை என்றும் இதனை இடங்கையர் உபயோகிக்கக்கூடாது என்றும் பிரச்சினை செய்தனர். இறுதிவரை சுமூக தீர்வு ஏற்படாத காரணத்தால், கவர்னர் அனைத்துப் பல்லக்கு ஊர்வலத்தையும் நிறுத்த உத்தரவிட்டார்.

பின்பு 1791ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி வலங்கை சாதியினரான முத்துவிஜய திருவேங்கிடம் பிள்ளையின் மகன் திருமண ஊர்வலம் பதிவு செய்யப் பட்டுள்ளது. திருமணம் வெகு விமரிசையாக பச்சைப் பல்லக்கில் யானையின் மேல் அமர்ந்து சகல தெருக் களிலும் ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டது. ஒரு சச்சரவும் இன்றி ஊர்வலம் நடந்ததாக நாட்குறிப்பு கூறுகிறது. இது வலங்கையாருக்குக் கொடுக்கப் பட்ட உரிமை இடங்கையாருக்கு மறுக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது.

வெள்ளைக் குடை சச்சரவு

நாட்குறிப்பு வெள்ளைக்கொடி, குடை, உப யோகத்தில் வலங்கை, இடங்கையாருக்கிடையே சச்சரவு ஏற்பட்டதைப் பதிவு செய்துள்ளது. 1788 ஜனவரி 14 ஆம் தேதி நாட்குறிப்பில் இடங்கை சாதி யினரான பொன்னப்ப செட்டியின் மகன் ஒரு பட்டுக்குடையும், அழகிய மணவாள செட்டி மகன் ஒரு குடையும் பிடித்துக்கொண்டு வலங்கை சாதி யினர் தெருவில் சென்றனர். இதைப் பார்த்த மகா நாட்டார்கள் மிகவும் கோபம் கொண்டனர். மறு நாள் 30 வலங்கையார் கவர்னர் செனரல் கனுவே யிடம் முறையிட்டனர். இதன்படி கனுவே இரு வரையும் சிறையிலடைத்தார்.

மற்றொரு சமயம் வலங்கையினரான சுப்புராய பிள்ளை என்பவர் குடைபிடித்துக்கொண்டு செட்டித் தெருவுக்குள் சென்றார். அப்போது செட்டிகள் செனரலிடம் முறையிட, அவர் விசாரித்தார். சுப்புராய பிள்ளை செனரலிடம் தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டவுடன் மன்னிக்கப்பட்டுக் கூட்டம் கலைக்கப்பட்டது. இவ்வாறு குடை உபயோகத்தில் சச்சரவு ஏற்பட்டுள்ளது.

நகரா

நகரா என்பது பெருமுரசு வகைகளுள் ஒன்று. இந்த வாத்தியம் தற்போதும் சில இந்துக் கோயில் களிலும் இஸ்லாமியப் பள்ளிகளிலும் காணப்படு கிறது. இதன் ஓசை இனியதாக இல்லாவிட்டாலும், ஒலி அதிக தூரம் வரை செல்கிறது. இதனால் நகரா செய்தி அறிவிக்கும் கருவியாகச் செயல்பட்டது.

1785ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி நாட் குறிப்பில் நகரா வாத்தியத்தைப் பற்றிய செய்தி உள்ளது. வலங்கை, இடங்கை சாதியினருக்குத் தனித்தனியே கோயில்கள் உள்ளன. இதில் இடங்கை சாதியினர் கோவிலில் நகரா முழங்கும் சப்தம் கேட்டதும் வலங்கை சாதியினர் திரண்டு வந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். ‘நகரா வாத்தியத்தை இயக்கும் உரிமை வலங்கை சாதி யினராகிய எங்களுக்கு மட்டும்!’ என சச்சரவு செய்தனர். செனரல் சுலியாக் இப்பிரச்சினையை விசாரிக்கையில் எந்தவொரு தீர்வும் ஏற்படாததால், நகரா வாசிக்க இருதரப்பினர்களின் கோவில் களிலும் தடைசெய்தார்.

சாதித்தலைவர்

நாட்குறிப்பின் வாயிலாக ஒவ்வொரு சாதிக்கும் சாதித்தலைவர் இருந்ததை அறியமுடிகிறது. இவர் களில் இடங்கை சாதித்தலைவர் நாட்டார் எனவும், வலங்கை சாதித்தலைவர் மகாநாட்டார் எனவும் அழைக்கப்பட்டனர். புதுச்சேரியில் பதினெட்டு மகாநாட்டாரும் பல நாட்டாரும் இருந்ததாகச் செய்திகள் உள்ளன. அந்தந்தச் சாதி மக்கள் இணைந்து தங்கள் தலைவர்களைத் தேர்வு செய்தனர். தலைமை துபாசி இவர்களைப் பதவியில் அமர்த்துவார்.

தங்களது சாதிக்குள் ஏற்படும் சச்சரவுகளை சாதித்தலைவர் தீர்த்துவைப்பார். வரிவசூல் செய்து கம்பெனியாருக்கு அளிப்பது போன்ற பணிகளையும் இவர்கள் செய்துவந்தனர்.

இவர்கள் தங்களது சாதி உரிமைகளை நிலை நாட்டுவதில் பெரும் கவனம் கொண்டிருந்தனர். வலங்கையராகிய மகாநாட்டார்கள் வெள்ளைக் கொடி, குடை உபயோகித்தல், நகரா வாசித்தல், ஊர்வலங்கள் செல்லுதல் போன்றவற்றில் தங்களது சாதியப் பெருமையை நிலைநாட்டுவதில் பெரும் பங்கு வகித்தனர்.

1785ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி நாட் குறிப்பில் கவர்னர் குத்தான்சோ மற்றும் மகா நாட்டார்களுக்கிடையிலான சந்திப்பு பதிவு செய்யப் பட்டுள்ளது. மகாநாட்டார்கள் பரிசுகொடுத்து கவர்னரை வாழ்த்தி மகிழ்வித்த செய்தியும் இடம்பெற்றுள்ளது.

1791 ஆகஸ்டு 23ஆம் தேதி கடைவீதிகளில் கடையடைப்பு நடந்தது. இதற்கான காரணத்தை உடனே அறிந்து பதிலளிக்குமாறு சாதித் தலைவர்கள் உத்தரவிடப்பட்டனர்.

1791 டிசம்பர் 1ஆம் தேதி நாட்குறிப்பில் மேயர் சவாரியேர் சாதித்தலைவர்களை முனிசிபலிலே கூடிவரச் செய்தனர். புதுச்சேரி மக்களின் பொது நலனுக்காக பிரெஞ்சு அரசு ரூ.16,000 செலவு செய்த தாகவும், அதனால் இதில் பாதிச் செலவுப் பணத்தைப் புதுச்சேரி மக்களிடம் வசூலித்துத் தரும்படியாகவும் உத்தரவிடப்பட்டனர். இவ்வாறு மக்களின் அனைத்து நடவடிக்கைகளிலும் சாதித்தலைவர்கள் பங்கு பெற்றனர்.

குழுநியமனம்

வீராநாயக்கர் நாட்குறிப்பில் 1787 ஆம் ஆண்டு டிசம்பர் 14 தேதியில் அரசால் நியமிக்கப்பட்ட குழுவைப்பற்றிய செய்தி உள்ளது. இதில் சிவில் நீதிமன்றத் தலைவர், தமிழ்ச் சாதிய முறை ஐரோப்பியர் களுக்கு விளங்காத காரணத்தால் எட்டு பேர் கொண்ட குழுவை நியமித்தார். இக்குழுவில் தமிழரும், தமிழ்க் கிறிஸ்தவர்களும் இருந்ததாகப் பதிவு உள்ளது. சாதிய முறை, சாதியக் கட்டமைப்பு, சாதிகளின் பாரம்பரிய உரிமைகள் ஆகியவற்றைப் பற்றிய அறிக்கையினைக் கொடுக்கும்படியாகச் செய்தி உள்ளது.

இவை பிரஞ்சுக்காரர்கள் சாதிய வேறுபாடு களைக் களைய முயலாமல் சாதிகளின் முன்பிருந்த வழக்கப்படி செயல்பட நிலைப்பட்டனர் என்பது தெளிவாகிறது.

தேவரடியார்கள்

தேவராயர் என்றால் இறைப்பணிக்காகத் தங்களை அர்ப்பணித்தவர் எனப்படும். கோவிலில் நடனமாடுவது, விளக்கு ஏற்றுவது, பாடல்கள் பாடுவது என இருந்தனர். பின் நாட்களில் இவர்களின் செல்வாக்கு குறைய வீட்டு விழாக்கள், பண்டிகை நாட்கள், பிரஞ்சுக்காரர்களை வரவேற்று ஆடுவது, பாடுவது, கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்துவது இவர்கள் வழக்கமானது.

நாட்குறிப்பில் இவர்களைப் பற்றிய பதிவுகள் அதிகம் உள்ளன. வலங்கை இடங்கை என்னும் சாதிப்பிரிவு தேவரடியார்கள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

1788 ஜூலை 16 ஆம் தேதி நாட்குறிப்பில் வலங்கையிடங்கை தாசிகளுக்கிடையேயான சச்சரவு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராசப்பஐயரின் மகள் திருமண வரவேற்பு மேளதாளங்கள், வண்ண விளக்குகள், தாசிகளின் நடன நிகழ்ச்சிகளுடன் வெகு சிறப்பாக நடந்தது. செனரல் கனுவேயும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது இடங்கை சாதிப் பிரிவைச் சேர்ந்த ஒரு தாசி மகுடி வாசித்துக் கொண்டு சற்று நேரம் ஒரு பாம்பை ஆட்டிக் கொண்டு மறுபடி தன் கழுத்தில் பாம்பைச் சுற்றிக்கொண்டு நாட்டியம் செய்தாள். இது அனை வரும் பாராட்டும்படியாக இருந்தது. இது வலங்கை தாசிகளிடையே கோபத்தை ஏற்படுத்தியது. அவர்கள் உடனே கிளம்பிச் சென்று விட்டனர். பின் நிகழ்ச்சி நடத்துவோர் அனைவரும் இடங்கை தாசிகளை அனுப்பிவிட்டு வலங்கை தாசிகளை அழைத்து நாட்டியம் ஆடச் சொன்னார்கள். இவ்வாறு இடங்கை, வலங்கை சாதிப் பிரிவு தேவரடியார் மத்தியிலும் இருந்தது தெளிவாகிறது.

இவ்வாறு, பதினெட்டாம் நூற்றாண்டின் ஒரு முக்கிய ஆதாரமான இரண்டாம் வீராநாயக்கர் நாட்குறிப்பு சாதியைக் குறித்த பல தகவல்களைத் தெரிவிக்கிறது. புதுச்சேரி வாழ்சாதிகள், வலங்கை, இடங்கை சாதிகள், சாதிகளுக்கிடையேயான சச்சரவுகள், சாதித்தலைவர்கள் மற்றும் அவர்களின் பணிகள், சாதியின் பெயரில் தெருக்கள், தாசி களிடையே சாதிய உணர்வு, சாதிகளுக்காக உரிமைகள் மற்றும் தடைகள் போன்றவற்றை அறிய முடிகிறது. இவ்வாறு இரண்டாம் வீராநாயக்கர் நாட்குறிப்பு ஒரு சிறந்த முதல்நிலை ஆதாரமாகச் செயல்படுகிறது.

Pin It

உலக அளவில் தனது முன்னோடியான ஆய்வு களுக்காக அறியப்பட்ட இந்தியப் பல்கலைக்கழகங் களில் ஒன்று தலைநகர் புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம். இங்கு உலக மொழிகளைப் பயிற்றுவிப்பதிலும் மொழிசார்ந்த வல்லுநர்களை உருவாக்குவதிலும் மொழிப்பள்ளி (School of Language, Litreature & Culture Studies) திறம்பட செயல்படுகிறது. இங்குப் பெரும்பாலான உலக மொழிகள் கற்பிக்கப் படுகின்றன. இப்பள்ளியின் ஒரு பிரிவாக உள்ள இந்திய மொழிகள் மையத்தில் உள்ள தமிழ்ப் பிரிவில் முனைவர், இளமுனைவர் பட்ட ஆய்வுப் பிரிவுகளில் தற்பொழுது 32 மாணவர்கள் உள்ளனர். இவ்வாய்வு மாணவர்கள் ஒப்பாய்வு, மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பு நூல்களின் திறனாய்வு நூலடைவு ஆகிய ஆய்வுப் பகுதிகளை மையமாகக் கொண்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குழந்தை இலக்கியம், பயண இலக்கியம், கல்வெட்டுக்கள் தொடர்பாகவும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ் மொழியின் செவ்வியல் தன்மையை உலக அளவில் ஓங்கியுரைக்கும் நோக்குடன் தமிழ் மொழியின் இலக்கண, இலக்கியங்களைப் பிற மொழி இலக்கண, இலக்கியங்களுடன் ஒப்பிட்டு ஆராய்தல் மிகவும் அவசியமான ஒன்றாகும். இவ்வகை ஆய்வுகள் உலகச் செம்மொழிகளின் வரிசையில் தமிழின் தொன்மையையும் இலக்கிய வளத்தையும் முறையான சான்றாதாரங்களுடன் எடுத்துரைக்க வழிவகை செய்யும். அந்த வகையில் தமிழ் மொழியில் முதலில் கிடைக்கும் இலக்கண நூலாகக் கருதப்படுகிற தொல்காப்பியத்துடன் கிரேக்கம், அறபு, பிராகிருதம், பாலி, சமஸ்கிருதம் மொழிகளில் உள்ள இலக்கண நூல்களை ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இலக்கண ஒப்பாய்வுகள்

உலக மொழிகளில் தொன்மை வாய்ந்த கிரேக்க மொழியின் முதல் இலக்கண நூலாகக் கருதப் படுவது டயோனிஸிஸ் திராக்ஸ் என்பவரின் ‘டெக்கணே கிராமட்டிக்கே’ என்பதாகும். அந் நூலில் உள்ள இலக்கணப் பகுதிகளைத் தொல் காப்பியத்துடன் ஒப்பிட்டு முனைவர் பட்ட ஆய் வாளர் ஒருவர் ஆய்வு செய்து வருகிறார். அதே போன்று செவ்வியல் மொழியான அறபு மொழியின் முதல் இலக்கண நூலான அல்கிதாபுடன் தொல்காப்பிய ஒலியனியல் பகுதியை ஒப்பிடும் ஓர் ஆய்வும் இங்கு நடைபெறுகிறது. பிராகிருத மொழியின் முதல் இலக்கண நூலான ‘பிராகிருதப் பிரகாசம்’, பாலி மொழியின் முதல் இலக்கண நூலான ‘கச்சாயணம்’, சமஸ்கிருத ‘ஐந்திற’ மரபில் அமைந்த இலக்கண நூலான ‘காதந்திரம்’ ஆகியவற்றுடன் தொல் காப்பியத்தை ஒப்பிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள். ஒரு மொழிக்குள் உள்ள இலக்கணங்களை ஒப்பிட்டு ஆராயும் முறைகளிலிருந்து வேறுபடும் இவ்வாறான ஆய்வுகள், தொல்காப்பியத்தின் இலக்கணச் சிறப்பு, உலக அளவில் பல்வேறு தொன்மை மொழிகளின் இலக்கணப் பிரதிகளுடன் அது பகிர்ந்துகொள்ளும் பொதுமைக் கூறுகள், பிற இலக்கணங்களுக்கும் தொல்காப்பியத்திற்குமுள்ள தனித்தன்மைகள் முதலானவற்றை எடுத்துரைப்பனவாக அமையும்.

மொழிபெயர்ப்பு சார்ந்த ஆய்வுகள்

வளர்ந்து வரும் அறிவுத்துறைகளில் மிக முக்கிய மான ஒன்றாக உள்ள மொழிபெயர்ப்புத் துறையிலும் ஆய்வு மாணவர்கள் பலர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். உலகத்தை இணைக்கும் இணைப்புக் கருவிகளுள் முக்கியமான ஒன்றாக இன்று விளங்கி வரும் மொழிபெயர்ப்பு இன்று அனைத்துத் துறை களிலும் தவிர்க்கமுடியாத முக்கிய ஒன்றாக உள்ளது. மொழிபெயர்ப்பின் தேவையும், அது குறித்த ஆய்வு களும் விவாதங்களும் இன்றளவில் ஒரு முக்கிய ஆய்வுப்பரப்பை அறிமுகப்படுத்துகின்றன. மேற் கத்திய நாடுகளில் உள்ள மொழிபெயர்ப்பியல் துறையில் நடைபெறும் ஆய்வுகள், இந்தியச் சூழலில் காலந்தோறும் நடைபெறும் மொழிபெயர்ப்புகளை வேறுவகையான கோணங்களில் அணுகவேண்டிய தேவையை அறிவுறுத்தும் வகைமாதிரிகளாக உள்ளன. மேலும், இந்தியா போன்ற பன்மொழிச்சூழல் உள்ள நாட்டில் மொழிபெயர்ப்பு இலக்கியத் தளத்தில் முக்கிய பங்காற்றுகிறது. இலக்கியத் துறையில் வளர்ந்து வரும் ஒப்பிலக்கிய ஆய்வுகளுக்கும் அடிப் படையாக இருந்து வரும் மொழிபெயர்ப்புத் துறையைக் கவனத்தில் கொண்டு அதனை மையப்படுத்தி ஆய்வுப் பணிகளை இங்குள்ள தமிழ்ப் பிரிவு மேற்கொண்டு வருகிறது. பிரெஞ்சு, ஜெர்மன், இந்தி, உருது, கொங் கணி, குடூக் ஆகிய மொழிகளுக்கும் தமிழுக்கும் ஊடாக நடைபெற்றுள்ள மொழிபெயர்ப்புகள் குறித்த ஆய்வுகளை மாணவர்கள் தற்போது மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பிரெஞ்சு மொழியிலிருந்து குறிப்பிடும்படி மொழிபெயர்ப்புப் படைப்புகள் தமிழ் மொழிக்கு வந்துள்ளன. அவ்வாறு தமிழுக்கு வந்துள்ள படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும், பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு ஓர் இலக்கியப் பிரதியை மொழிபெயர்க்கும்போது ஏற்படக்கூடிய மொழிபெயர்ப்புச் சிக்கல்கள் குறித்தும் ஆய்வாளர் ஒருவர் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்தியாவில் அதிகம் மக்கள் பேசப்பட்டு வருகிற மொழியான இந்தி மொழியின் முக்கிய இலக்கிய ஆளுமைகளான பிரேம்சந்த், பாரதேந்து ஹரிச்சந்திரர், மோகன் ராகேஷ் முதலானோரின் இலக்கியப் பிரதிகளை எடுத்துக் கொண்டு அதனைத் தமிழில் நேரடியாக மொழிபெயர்த்தும், மொழிபெயர்க் கையில் ஏற்படும் சிக்கல்களை ஆராய்ந்தும் ஆய்வுகள் நடைபெறுகின்றன.

இந்திய மொழிகளில் மிகுதியும் கவனம் பெறாமல் உள்ள இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்த கொங்கணி மொழியிலிருந்து நேரடியாகத் தமிழுக்குச் சிறுகதைகளை மொழிபெயர்த்தும், வடதிராவிட மொழிக்குடும்பத்தைச் சார்ந்த குடூக் மொழியிலிருந்து சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து, அதனை நேரடியாகத் தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்வதன்வழி மொழிபெயர்ப்புச் சிக்கல்களை அடையாளம் கண்டு, பதிவு செய்யும் நோக்கிலும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலக்கிய ஒப்பாய்வுகள்

எழுதும் முறையில் மற்ற இந்திய மொழிகளில் இருந்து வேறுபட்டு இருக்கும் உருது மொழியில் நவீன காலத்தின் ஆரம்பத்தில் எழுதிப் புகழ்பெற்ற புரட்சிகர இஸ்லாமியப் பெண் எழுத்தாளர் இஸ்மத் சுக்தாயுடன், தொடக்ககால இஸ்லாம் தமிழ்ப் பெண் எழுத்தாளரான சித்தி ஜுனைதா பேகத்துடன் ஒப்பிட்டு மேற்கொள்ளப்படும் ஆய்வு, தமிழ் ஒப் பிலக்கிய ஆய்வுச்சூழலில் குறிப்பிடத்தக்கதாகும். நவீனத்துவம் அறிமுகமாகும் குறிப்பிட்ட காலத்தில் இந்திய அளவில் பெண்ணியக் குரல்கள் எவ்வாறு ஒலித்தன என்பதை எடுத்துரைத்து இவை போன்ற ஆய்வுகள் துணைசெய்யும். அதேபோன்று உலகில் அதிக மக்களால் பேசப்பட்டு வரும் சீன மொழியின் இலக்கியச் சிற்பி லூசூனுடன், தமிழின் தேர்ந்த சிறுகதை மன்னன் புதுமைப்பித்தனை ஒப்பிட்டு ஒருவர் ஆய்வு செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

தலித் இலக்கிய ஒப்பாய்வுகள்

இன்று சமூக மாற்றத்தில் ஓர் அங்கமாக விளிம்பு நிலை மக்கள் குறித்துப் பேசும் தலித் இலக்கியங் களிலும் ஒப்பாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தி - தமிழ் தலித் கவிதைகளை ஒப்பிட்டும்,

கே.ஏ.குணசேகரன் தமிழில் எழுதியுள்ள தலித் தன் வரலாற்றுப் படைப்பான ‘வடு’ என்ற நூலையும், இந்தியில் ஓம் பிரகாஷ் வால்மீகி எழுதிய தலித் தன்வரலாற்றுப் பிரதியான ‘ஜூட்டான்’ என்ற நூலையும் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டு வரு கிறார்கள். இந்தி - தமிழ் தலித் பெண்ணியத்திலும் ஆய்வாளர் ஒருவர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

பிறமொழி இலக்கண ஒப்பாய்வு, மொழி பெயர்ப்புச் சிக்கல்கள், இலக்கிய ஒப்பாய்வுகள் அதன் ஒரு பகுதியாக மொழிபெயர்ப்பு என நடை பெறும் ஆய்வுகளை ஒருங்கே வைத்து நோக்கு மிடத்து, இந்தியச் சூழலில் ஒப்பிலக்கிய ஆய்விற் கான தேவையை உணர்ந்து மேற்கொள்ளப்படும் ஆய்வுகளாக இவற்றைக் கருதவேண்டும். ஒரே இடத்தில் பலமொழிகளைப் பயிலும், பேசும் சூழல், இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்ளத்தளம் அமைத்துத் தருகின்றன. மேலும் இச்சூழலைப் பயன்படுத்தி ஆய்வாளர்கள் மொழிபெயர்ப்பு, இலக்கிய ஒப்பாய்விற்காகத் தான் தேர்வு செய்து கொண்ட மொழியைத் தன் ஆய்வுக் காலத்தில் கற்று ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மொழிபெயர்ப்பு நூல்கள்

திறனாய்வு நூலடைவு

தகவல் பரிமாற்றத்திற்கும், இலக்கியச் சிந்தனைப் பரவலாக்கலுக்கும் அடிப்படையாக விளங்கும் மொழிபெயர்ப்பின் துணைகொண்டு உலக மொழி களுக்கிடையே பரிமாற்றங்கள் குறிப்பிடும்படி நடந்தேறி வருகின்றன. தமிழ் மொழியிலும் மொழி பெயர்ப்பு சார்ந்த இலக்கிய ஆக்கங்கள் பெருமளவு வந்துகொண்டிருக்கின்றன. ஆதலாலேயே பல மொழிகளின் இலக்கியங்களை இன்று நாம் தமிழ் மொழியிலேயே வாசிக்க முடிகிறது.

இந்நிலையில், தமிழ் மொழிக்கு மொழி பெயர்ப்பின் மூலம் வந்துள்ள நூல்களை நாம் படித்து இன்புற மொழிபெயர்ப்பு நூல்கள் வந்துள்ள தகவல் களைப்பற்றி அறிந்துகொள்வது அடிப்படையாகும். அதற்கான மொழிபெயர்ப்பு நூற்றொகை ஒன்று தமிழுக்கு அவசியமான ஒன்றாகும். சிவகாமி அவர்கள் 1983ஆம் ஆண்டு வரை தமிழுக்கு வந்துள்ள மொழி பெயர்ப்பு நூல்களைத் தொகுத்து நூலாக வெளி யிட்டார். ந.முருகேச பாண்டியன் உலக மொழி களிலிருந்து தமிழ் மொழிக்கு வந்துள்ள நூல்களைத் தொகுத்து (1990ஆம் ஆண்டு வரை) வெளியிட்டார். இவ்விரு நூல்களைத் தவிர்த்து இப்பணியில் எவரும் ஆர்வம் காட்டாத நிலையில் தேக்கமாகியிருக்கும் மொழிபெயர்ப்பு நூல்கள் தொகுப்பினைத் திறனாய்வு நூலடைவாகவே செய்யும் தொகுப்பு ஆய்வினை இங்குள்ள தமிழ்ப் பிரிவு ஆய்வு மாணவர்கள் மேற் கொண்டு வருகின்றனர். பிரெஞ்சு, சீனம், ஜப்பான், சமஸ்கிருதம், மராத்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலிருந்து மொழிபெயர்ப்பின் மூலம் தமிழ் மொழிக்கு வந்துள்ள நூல்களைத் திரட்டி, திறனாய்வு நூலடைவு ஆய்வுகளைச் செய்து வருகின்றனர்.

சிறப்பு ஆய்வுகள்

மேற்கத்திய நாடுகளில் முக்கியத்துவம் பெற்ற குழந்தை இலக்கியம், அது குறித்த ஆய்வுகள் தமிழ் ஆய்வுச் சூழலில் பெயரளவில் மட்டுமே உள்ளன. இங்குள்ள தமிழ்ப் பிரிவில் ‘குழந்தை இலக்கியத்தில் குழந்தைகளின் மொழித்திறன் வளர்ச்சி’ என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு வரும் ஆய்வாளர் விருதுநகர் மாவட்டப் பள்ளிக் குழந்தைகளிடம் கள ஆய்வு மேற்கொண்டு தகவல்களைத் திரட்டி அவர் களின் மொழித்திறன் வளர்ச்சியைக் கண்டறியும் நோக்கில் ஆய்வு செய்து வருகிறார். நாளைய சமூக மாற்றத்திற்கான ஆதாரம் குழந்தைகளின் கல்வி யிலேயே இருக்கிறது. அதில் குழந்தை இலக்கியத்தின் பங்கும் மகத்தானது. குழந்தை இலக்கியம் குழந்தை களின் மொழித்திறன் வளர்ச்சியில் எங்ஙனம் பங்கு பெறுகிறது என்பதை இவ்வாய்வு தெளிவுபடுத்தும்.

பயண இலக்கியம் குறித்த பங்களிப்பாக ஆய் வாளர் ஒருவர் ‘தமிழ்ப் பயண இலக்கியங்களின் வட இந்தியச் சித்திரிப்பு’ என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தொடக்க காலத்தில் இருந்து இன்று வரை வந்துள்ள தமிழ்ப் பயண நூல்களில் வட இந்தியச் சித்திரிப்பினை இவ்வாய்வு விளக்கும். வரலாறு, சமூகப் பண்பாடு, நுட்பமான அழகியல் செய்திகள் எனப் பல புதிய தகவல் களுக்கு இவ்வாய்வு அடிகோலும்.

வரலாற்றினை அறிய உதவும் கூறுகளில் கல்வெட்டுகள் முக்கிய இடம்பெறுகின்றன. கல்வெட்டு களில் இடம்பெற்றுள்ள செய்திகளின் மூலமே பழைய வரலாற்றினை நாம் மீட்டுருவாக்கம் செய்துகொள் கிறோம். முக்கியத்துவம் பெற்ற கல்வெட்டுக் குறிப்பு களில் இடம்பெற்றுள்ள சட்ட மொழியினை ஆய்வு செய்து வருகிறார் ஆய்வாளர் ஒருவர். சட்டம் பயின்ற இவர் கள ஆய்வின் வழி கல்வெட்டுகளில் சட்ட மொழியை ஆராய்கிறார்.

இவ்வாறு பல்வேறு துறைசார்ந்த ஆய்வுகள் இங்குள்ள இந்திய மொழிகள் மையத்தின் தமிழ்ப் பிரிவில் நடைபெறுகின்றன. தமிழ் ஆய்வுச் சூழலில் புதுவெளிச்சத்தைப் பாய்ச்சும் ஆய்வுகளாக இவ் ஒப்பிலக்கிய, மொழிபெயர்ப்பு மற்றும் பிறதுறை ஆய்வுகள் அமையும்.

Pin It

தாளாச் சுமையில் தடுமாறும் என்பேனா/முனை மழுங்கிக் கிடக்க/என்னைத் தூரநின்று வேடிக்கை பார்க்கின்றன/யார்யாரோ எழுதிச் செல்லும் கவிதைகள்

கவி ந. நாகராஜனின் இந்த வரிகளில் உண்மை யில்லை என்பதை அவரது கவிதைகளே நமக்கு உணர்த்திச் செல்கின்றன. அவர் எழுதிய கவிதைகள் அவரிடமே வேடிக்கைகாட்டுகின்றன, தூர நின்று கவனித்துக் கொண்டிருந்த வாசகன் மிகுந்த நெருக்கத் தோடு அக்கவிதைகளுக்குள் தன்னைக் கரைத்துக் கொள்ள முயல்கிறான்.

நீண்டதொரு மக்கள் சார்பு இலக்கியப் பாரம் பர்யத்திலிருந்தும் கலை இலக்கியப் பெருமன்றப் பண் பாட்டுக் களத்தை உருவாக்கிய பேராசான் பிறந்த பூதப்பாண்டிமண்ணிலிருந்து உருவாகி வந்துள்ள கவி.ந. நாகராஜன் சிறுபத்திரிகை எழுத்துக்கள் வழியாகத் தமிழ்வாசகர்களுக்கு அறிமுகமானவர். பரந்துபட்ட வாழ்வின் அனுபவப் பரப்பைப் பெற்றிருந்தாலும் அத்தி பூத்தாற்போல் அபூர்வ மாகவே கவிதைகள் எழுதுபவர். இதுவே அவரது பலமும் பலவீனமும் ஆகியுள்ளது. பிரபலப் படைப் பாளிகள் ஆண்டிற்கு இரண்டு மூன்றென கவிதை நூல்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துகிற வணிகமயச் சூழலில் படைப்பு அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்வதே ஒரு சிரமமான போராட்ட மாகும். படைப்பின் உருவாக்கம் தன்னெழுச்சியி லிருந்து உருவாக வேண்டும். மற்றவற்றால் அழுத்தப் பட்டு, திணிப்பின் அடிப்படையில், செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் படைப்புகள் தோல்வியடைந்து விடும்; அவை தயாரிப்புக் கவிதைகளாக மாறிப் போய்விடும் என்பதிலும் தீர்க்கமாக நம்பிக்கை கொண்டவர்.

எனவேதான் அவர் தனது கவிதையைப் புணர்ச்சி யோடும், கருத்தரிப்போடும், பிரசவத்தோடும் உருவகப்படுத்திக் காட்டுகிறார்.

வலுவில்லாதபோது புணர்ச்சியும்/கருத்தரிக்காத போது பிரசவமும்/எனக்கு நிர்ப்பந்திக்கப்படுகிறது./எனக்கான புணர்ச்சி/எனக்கான பிரசவிப்பு/என்னில்நிகழும்/அப்போது என் குழந்தையைக் கொஞ்சு./

பெண்மீதான பாலியல் நிர்ப்பந்தமாக மட்டும் இதனைக் கருதிவிடமுடியாது. கவிதை உருவாக்கத்திற்கான சூழலாகவும் கூட இது அமை கிறது. வாழ்வுச் சூழலின் பிரதியாக்கம் என்றும் கூறலாம். ஒவ்வொரு தருணமும் நிர்ப்பந்தங்களால் உருவாக்கப்படுகிறது. வலுவில்லாத போது புணர்ச்சியும் கருத்தரிக்காதபோது பிரசவமும் செய்ய அதிகார சாட்டைகளும் துப்பாக்கிமுனைகளும் தொடர்ந்து நம்மை மிரட்டிக் கொண்டிருக்கின்றன.

chitram-varandha-_450கவி ந. நாகராஜனின் படைப்பின் தனித்த ஆளுமை என்பதே பன்முகத்தளத்தில் படர்ந்து செல்லும் ஆற்றல்மிக்க கவிதை மொழியை அவர் கையாளுவதுதான். இதனை ஒற்றைவாசிப்புக்குள் அடக்கிவிடமுடியாது. பண்பாட்டிற்கும் சூழலுக்கும் ஏற்ப வாசிக்க வாசிக்க அர்த்தங்களைப் பெருக்கிக் கொள்கிற கவிதை மொழி அவருக்குக் கைகூடி வந்திருக்கிறது. எதையும் உரத்துப் பேசாமல் நடப் பியல் சார்ந்த குறியீட்டுத்தன்மையோடு அர்த்தங் களைப் புலப்படுத்தும் அழகியலை அவரது கவிதை களில் கண்டடையலாம். ஒற்றை அடையாளத்திற்குள் புதையுண்டிருக்கும் பன்மைத்துவத்தை அகழ்ந்து வெளிக்காட்டும் தருணங்களும் உண்டு,

தயாராகிவிட்டது/வாசனைகூட வரத்துவங்கிவிட்டது/ உணவைக் கைப்பற்றி/சுவையறிந்தவர்களிடையே போட்டி/ உணவைப்/ படைத்தவனுக்குப் பங்கிட/எவனுக்கும் மனசில்லை/

கவிதை எழுதிச் செல்லும் இவ்வரிகளில் உணவு என்பது எளியவகைக் குறியீடுதான். ஆனால் இது வாசகனுக்கு வெவ்வேறு விதமாக உணர்வுநிலை களை எழுப்பிச் செல்கிறது. முதல்நிலையில் உணவை உணவாகவே பார்க்கலாம். உணவைத் தங்கள் கைகளில் வைத்திருப்பவர்களுக்கும் பசித்திருப்பவர் களுக்குமான முரணாக வெளிப்படுகிறது. இரண்டாம் நிலை வாசிப்பில் திடீரெனத் தேர்தலரசியல் மூலம் கைப்பற்றப்படும் ஆட்சி அதிகாரமாக உணவு தோற்றமளிக்கிறது. சுவையறிந்தவர்கள் திராவிடக் கட்சிகளாக மாறுகிறார்கள். இப்படி எண்ணற்ற சாத்தியங்களோடு இக்கவிதையை வாசிக்கமுடியு மெனத் தோன்றுகிறது.

நாகராஜனின் கவிதைகளில் ஒரு குறியீடே பல்வித மனநிலைகளில் கவிதையாக்கம் பெற்றிருப் பதைக் குறிப்பிடவேண்டும். நீர்ப்பண்பாடு இவரின் கவிதைகளில் நிரப்பப்பட்டுள்ளது. இது சிற்றாறாக, குளமாக, ஆற்றின்படித்துறையாக, குவளைகளில் உருகிக் கலையும் பனிக்கட்டிகளாக, மழையாக, கடலாகத் தன்னை உருமாற்றிக் கொள்கிறது.

நிதானமாகவும், நீரோடையாகவும் பெருக் கெடுத்து ஓடுகிற சிற்றாற்றில் குளிக்கத் தடையில்லை தான். ஆனால் எருமைகள் அதில் நீச்சலடிக்கின்றன. இதே குளம்தான் சூரியனின் வரவுக்காகத் தாமரை களைத் தன்னுள் தேக்கிவைத்துக் கொள்கிறது. பனைமரங்களுக்கிடையே கசிந்துவரும் நிலவொளியில் தன்மீது சித்திரங்களை வரைந்து பார்த்துக் கொள் கிறது. நீச்சலில் மிதந்து செல்கையில் தண்ணி பாம்பு கடித்து கெண்டைச் சதை சேதாரப்படுகிறது. வைத்தியர் பாம்பைப் பற்றியோ பாம்பின் விஷத்தை இறக்கு வதைப்பற்றியோ தீர்மானகரமாக எதையும் கூற வில்லை. வேறு குளம் இல்லாததால் தினம் தினமும் பாம்பு கடித்த குளத்திலேதான் குளித்தாக வேண்டி யிருக்கிறது. நிகழ்காலக்கட்சி அரசியலையும், பண் பாட்டையும், ஊடகவெளியையும் கட்டுடைக்கும் குறியீட்டுச் சொல்லாடலாக இங்குக் குளம் மேலெம்பி வருகிறது. எனினும் சுத்தம்/ அசுத்தம் என்பதான எதிர்வுகள் உருவாக்கியிருக்கும் பண்பாட்டு அரசியல் மறுவிவாதத்திற்கு உள்ளாகியே வருகிறது. எருமை களை எருமைகளாகப் பார்க்காமல் கீழானதாக, சுத்தத்தை அசுத்தப்படுத்துவதாகக் குறிப்பீட்டாக்கம் செய்வதிலும் நுண்ணரசியல் சார்ந்த பிரச்சினை எழாமலும் இல்லை.

கடவுளுக்குரிய இடத்தில் இருந்து கொண்டு/என்னை பிணமாக்கிக் கொண்டிருக்கிறாய்/நீ கடவுளா... சாத்தானா... கடவுள்சாத்தானா...

புனிதங்களும் புனிதநீக்கமும் சந்திக்கும் தருண மிது. இவ்வரிகளை வாசித்ததும் ரஷ்ய நவீன கவி ஜோஸப் பிராட்ஸ்கியின் கவிதைப் பகுதி ஞாபகத் திற்கு வருகிறது. அக்கவிதை குழந்தையாகப் பிறந்து தேவனாகிப் போன இயேசுகிறிஸ்துவை நோக்கி அன்னைமேரி தாய்மையின் நிமித்தம் மெலிதாக எழுப்பும் கேள்வியது.

மேரி இப்போது இயேசுவிடம் கேட்கிறாள்/நீ என் மகனா.. இல்லை தேவதூதனா...

இதுவும் உலக வரலாற்றில் நிகழ்ந்துள்ள அதீத நிலையின் மீதான நிழலாகப் படர்கிறது. பன்மை அடையாளங்கள், பன்மைப் புரிதல் எனப் பன்மையை அங்கீகரிப்பதே நமது காலத்தின் பண்பாட்டுக் குரலாக வெளிப்படுகிறது. இந்திப் பேரடையாளத்தை உயர்த்திப்பிடிக்கும்போது தமிழ், தெலுங்கு, மலை யாளம் என பிரதேச மொழி அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன. இந்தியப் பண்பாடு என்பதை இந்துப் பண்பாடு என்ற ஒற்றைவார்த்தைக்குள் அடக்கிவிடும்போது சீக்கிய, கிறிஸ்தவ, முஸ்லிம், தலித், பழங்குடிப் பண்பாடுகள் அழித்தொழிக்கப் படுகின்றன. இச்சூழலில் இந்த மற்றமையைக் குறித்த அவதானிப்பை ஆடை குறியீட்டுக் கவிதையின்வழி நாகராஜன் உரையாடிச் செல்கிறார். மற்றமையை நிராகரிப்பது ஜனநாயகத்திற்கு உதவாது. இது அடிப்படைவாதத்தை உருவாக்குவது.

நமக்குப் பிடித்த ஆடை/பிறருக்கு எரிச்சலைத் தரலாம்./தனக்குப் பிடிக்காதது/மற்றவருக்கேனும் பிடித்திருக்குமென யாரும் எண்ணுவதில்லை.

பின்காலனியச் சிந்தனையாளர் ஹோமிபாபா போலச்செய்தல் கருத்தாக்கம் குறித்துப் பேசுவார். இது கீழைதேய மக்கள் ஐரோப்பிய நாடுகளின் கலாசாரத்தை, மேன்மையானதாக பாவனை செய்வது குறித்து முன்வைத்த சிந்தனையாகும். இங்கு நாகராஜனின் கவிதை மீன்களின் போலச் செய்தல்பற்றிப் பேசுகிறது. இவற்றில் நீரோட்டத்தின் நெளிவையும், சுளிவையும் அறிந்திருக்கும் ஆற்று மீன்கள் நீளமும் பரப்பும் அறிந்த கடல்மீன்களென இருந்தாலும் கடல்மீன்களால் ஆற்றில் வாழ முடியவில்லை. ஆற்று மீன்கள் கடல் மீன்களைப் போலப் பாவிக்கத் தொட்டிமீன்கள் ஆறும் அறியாது கடலும் அறியாது தம்மை ஆற்றுமீனாகவும், கடல் மீனாகவும், பாவனை செய்து கொள்கின்றன. ஏன் இந்த மீன்கள் பாவனை செய்கின்றன.. பாவனை செய்வது மீன்கள் மட்டும்தானா.. இந்த பாவனை களை நாம் வாழும் சமூகத்தடம் முழுவதிலும் கண்டுணரலாம். இந்தியனாக இருந்தும் ஆங்கிலேய னாகவும், தமிழனாக இருந்தும் இந்தியனாகவும், மார்க்ஸியனாக இருந்தும் மத உபவாசனாகவும் பல்வேறு விதமாய்ப்போலிமைப் பிம்பமாகவும் மாறிப் போகிறோம்.

நாகராஜனின் கவிதையில் நடப்பியல் வாழ்வுச் சித்திரமாக அப்பா முக்கியதொரு இடத்தைப் பெற்றுவிடுகிறார்.

அப்பா எப்போதும் அப்பாவாயினும்/அப்பா எப்போதும் அப்பாவாய்த் தெரிவதில்லை.

நாகராஜனின் கவிதைப் பரப்பில் எல்லாத் திசைகளிலும் அப்பா உலவிக் கொண்டிருக்கிறார்.

சிறுவயதில் எல்லாமாய்த் தெரிந்த அப்பா/பள்ளிவயதில் ஆசானாய்த் தெரிந்தார்./பதின்வயதில் பாதுகாவலனாய்த் தெரிந்த அப்பா/கல்லூரிக் காலத்தில் வள்ளலாய்த் தெரிந்தார்./ தண்டச் சோறு காலத்தில் விரோதியாய்த் தெரிந்த அப்பா/ பெண்பார்க்கையில் தேவதூதனாய்த் தெரிந்தார்./சொத்துப் பங்கீட்டின் போது அற்பமாய்த் தெரிந்த அப்பா/நான் அப்பாவான போது அற்புதமாய்த் தெரிகிறார்.

பல்வேறு காட்சி அடுக்குகளில் அனுபவத்தின் ஈரம் கசிந்துகொண்டிருக்கிறது. இந்த வார்த்தை களுக்குள் அப்பா கண்விழித்துக் கொண்டும் மூச்சு விட்டுக் கொண்டும் தூங்காமல் கண்காணித்துக் கொண்டிருக்கிறார். இது விருப்பு, வெறுப்பு, கோபம் கலந்த உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் அப்பாவைப் பன்முகத் தோற்றத்தில் படிமப் படுத்தும் யதார்த்தக் கவிதையாகி உள்ளது.

இன்னுமொரு அப்பாவும் நாகராஜனின் கவிதையில் புனைவின் நுட்பங்களோடு வந்து போகிறார். குழந்தை வரையும் ஓவியத்தில் தெரியும் அப்பா அது. ஆழ்மனத்தில் மனோபாவமாய் மாறி விட்ட அப்பா குறித்த அதிபயங்கர பிம்பமும் அந்தக் குழந்தை வரைந்த கோட்டுச் சித்திரத்தில் வெளிப்படுத்திக் கொள்கிறது.

குழந்தை வரைந்த என் கோட்டுச் சித்திரத்தில்/கண்களைக் காணவில்லை/காதுகள் கொம்புகளாயின/தொங்கிய நாக்கில் வழிந்த சொட்டுகள்/எச்சிலா ரத்தமா எனத் தெரியவில்லை./ முடிகள் முள்ளம்பன்றியின் முட்கள் போலிருந்தன./சிதைக்கப் பட்ட உடல்போல் சிறுசிறு கோடுகள்/சித்திரம் வரைந்த குழந்தை/விளையாடிக்கொண்டிருந்தது.

இது தன்னுணர்வற்ற நனவிலி மனச் சித்திரம். அப்பாவின் மீது உறைந்து கிடக்கும் எதிர்ப்பு உணர்வின் அடையாளம். நவீன வாழ்வில் குடும்ப அமைப்புக்குள், குழந்தைகளிடத்தில் அப்பா ஒரு பயங்கரவாதியாகிப் போகிறார் அல்லவா...

நவீனத்துவத்தின் சாயலையும், நகுலனின் பற்றற்ற தொனியையும் கடந்த நாகராஜனின் கவிதை நானில் அந்நியப்படுத்தலும், குற்ற உணர்வும், ஒரு தரப்பாக வெளிப்படுகிறது. மறுதரப்பாக இந்த நான் சமூக நானாகவும், விளிம்புநிலை நானாகவும் தன்னை வடிவமைத்துக் கொள்கிறது. ஏழுகடல் ஏழுமலை தாண்டி குருவியின் உடலிலிருக்கும் அரக்கனின் உயிரைக் கண்டுபிடிப்பது சுலபமாகிவிட்ட போதிலும் அருகாமையின் இதயத்தை அறிந்துகொள்ள முடிய வில்லையென இந்த மனம் ஆதங்கப்படுகிறது.

இயலாமை நிறைந்த கூச்ச சுபாவமிக்க கவுரவம் பார்க்கின்ற மத்தியதர வர்க்க மனத்தின் குரலை இதில் கண்டடையலாம். என்னை என்னிலிருந்து காண்பவர் யாரெனக் கேள்வி எழுப்பும் நாகராஜனின் கவிதைப்பிரதியின் நான் மற்றமையால் கட்டமைக்கப் பட்டிருப்பதையும், மனச்சாய்வுகளுக்கும் கண் ணோட்டங்களுக்கும் ஏற்ப வடிவமைக்கப்படு வதையும் சுயம் அழிந்து போவதையும் பேசுகிறது.

இக்கவிதைப் பிரதிகளில் பிளவுண்ட நான்களை கண்டறியலாம். மனத்தின் கவிதைகளாக அடை யாளப்படுத்திக் கொள்ளும் வேளையில் சோம்பல் மனமும், குற்றமனமும், தாராளமனமும், குரூரமனமும் மாறிமாறி இயங்குகிறது. படுக்கையைக் கூடத் தட்டிப் போட சோம்பல்பட்டு உடலைக் குப்பை யாய்ப் புதைத்துக் கொள்ளும் மனம் ஜன்னல் தூசிக்காக விடுதிச் சிறுவனைக் கோபிக்கிறது. ஒரு தடவை சிலந்திக்காய், ஒட்டடை வலைப்பின்னலை விட்டுவிடும் மனம் பிறிதொரு தடவை தீக்குச்சி சுவாலையால் சிலந்தியை எரித்துப் பார்த்துவிட்டு அதன் உயிர்வலியை ரசித்துப் பார்க்கிறது.

பிரபஞ்சத்தின் விசித்திரத்தை எழுதிப்பார்க்கும் நாகராஜனின் கவிதை மொழியில் சில வால் நட்சத் திரங்கள், பால் வெளிகளில் மிதக்கின்றன. வெளி களில் மிதப்பதால் பறவைகளோடு தம்மை இனங் காணவும் செய்கின்றன.

விதை, மரம், நிழல் என மிக நெருக்கமாகத் தாவரங்களோடும், உறவையும், உறவின்மையையும் ஏற்படுத்திக் கொள்கின்றன. வளர்ந்த மரத்தின் நிழலில் சாயமுடிகிறது. விதையைப்பிளந்த முளையில் உயிரின் தாகம் தொற்றிக் கொள்கிறது. காக்கை களின் கழிவுமிழ்ந்த விதைகளில் பொதிந்தமரம் ஏழடுக்குக் கட்டடங்களின் சுவர்களிலும் எளிதாக வளர்ந்துவிடுகிறது.

உதிர்வையும், செழிப்பையும் ஒன்றுபோலப் பாவித்து இது எல்லோருக்கும் நிழல்பரப்பிக் கொண்டும், தன்னுணர்வற்ற தன்கிளையில் காகங் களுக்கு இடமளித்துக் கொண்டும் ஒருவிசாலமான ஜனநாயக சித்திரமாய் மரம் உருமாறுகிறது.

மௌனமே மொழியாகப் பேசச் சொல்லிக்கொடு எனக் கழிவிரக்கத்தோடு வேண்டுகோள்விடுக்கும் கவியின்குரல் தன் தோற்றுப்போன கதைகளையும் கூறுகிறது. என்மொழிகள் எதுவும் உன்னை எட்ட வில்லையென்ற தூரத்தை, இடைவெளியைச் சொல் கிறது. கரைமரத்து மாம்பழத்தில் அவன் எறிந்த கல்லோடிணைந்த அன்பைப் பற்றி ஒரு பெண்ணாகி ஞாபகப்படுத்துகிறது. வெவ்வேறு விதமாய் அமைந்து விட்டவாழ்வுச் சூழலில் கடைசிவரை நேரில் பேசிக் கொள்ளாத வார்த்தைகளின் மௌனம் எதை மறந்து எதைப் பேசவென விம்மிக் கரைகிறது.

இழப்பின் வலிகளையும், மௌனத்தின் துயரங் களையும், அழிப்பின் அரசியலையும் ஒருசேர எழுதிச் செல்லும் நாகராஜனின் கவிதையை இறந்துபோன உயிரின் ஆவி தொடர்ந்துதுரத்திக் கொண்டிருக்கிறது. அது நெஞ்சுக்குள் பேயாட்டமிடும் வசீகரத்தை மறைத்தும், காயங்களின் இதழ்களில் ஒரு புன்னகையை எல்லோருக்குமாய்ப் படரவிடவும் செய்கிறது. ஊடும் பாவும் உருக்குலைந்த சிதைந்த பட்டுப் புடைவை யாகிறது. மலச்சிதறலை மண்ணுருண்டையாக உருட்டிச் செல்லும் வண்டாகிறது. பூக்கள் ஆற்றோடு போகின்றன. பூச்சி மருந்துகளில் மண்புழுக்களும் மாண்டு போகின்றன. வலிகளைக் கடந்தும் செல் கின்றன.

இந்த இழப்பின் வலியும் வேதனையும் அன்புச் சிதைவையும் வெறுமையையும் சொல்வதோடு நின்றுவிடவில்லை. ஆகப் பெருங்கனவு கொண்டிருந்த நம்பிக்கைகள் சிதறிப்போனதையும் வரலாற்றின் கொடுங்கனவாய் மாறிவிட்ட மனச்சோர்வையும் இணைத்துப் பேசுகின்றன.

சிற்பத்திற்குக் கண்திறப்பதுதான் சிற்பக் கலையின் உயிரோட்டம். ஆனால் இங்கு நிகழ்வு வேறுவிதமாய் இருக்கிறது.

கவனமாய்ச் செதுக்கிய சிற்பத்தில் கண்பழுது

இது என்ன சிற்பம். சோவியத் யூனியன் செதுக்கிய சோசலிச சிற்பமா... வாசகனை இவ்வரி எங்கெங்கோ அழைத்துச் செல்கிறது. இதனால்தான் அவரால் நட்சத்திரங்கள் மீன் செதில்களாய் சிதறிக்கிடப் பதையும் நிலா தடம் தேடித் திரிவதையும், வெளிச்சம் வருமென நம்பிக் கொண்டிருந்தபோது நிகழ் தளமே அழிந்துபோனதாகப் புரட்சியைக் குறி யீடாக்கிப் பேசமுடிகிறது.

நாகராஜன் எழுதிச் செல்லும் நம்பி ஏமாந்த கதைகள் பல. ஒரு காதலி போல வந்து தோளில் ஏறிக் கொண்டு கழுத்தில் சுருக்குக் கயிறை மாட்டி இறுக்கியபோது தெரிந்துகொண்ட அந்தக் கொடிய நகங்களும், கொடூரப்பற்களும் பயமுறுத்துகின்றன. சிங்கத்திடமிருந்து காப்பதாய்க் கூறி இலையும் தழையும் தந்து பாலைக் கறக்கும் முயற்சியின் பயங்கரமும் பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளி யத்தின் கொடூர உழைப்புச் சுரண்டலையும் சொல் லாமல் சொல்லிச் செல்கிறது. வெளிப்படுத்த முடிந்த வற்றைக் கூடவெளிப்படுத்தமுடியாமல் இருப்பது தான் கவிதை என்ற வாசகத்தின் நுட்பத்தை இங்குப் புரிந்துகொள்ளலாம்.

நாகராஜனின் கவிதையில் காலம், அழகின் அமைதியும், அமைதியின் அழகும் நிறைந்த அறையின் சாவியைத் தேடிக் கரைகிறது. அமைதியற்ற வாழ்வின் நெருக்கடிகளும், வன்முறையும் ரத்தச் சுவடுகளும் மனதைத் துயரப்படுத்துகின்றன. வாழ்தலுக்கும் மரணத்திற்கும் இடையிலான தூரம் எளிதில் கடக்க முடியாததாகி விடுகிறது.

மரணம் பற்றிய குறிப்புகளை எழுதிச் செல்லும் நாகராஜன் உலகமயச் சூழலில் மண்சார்ந்த உரிமைப் பறிப்புகளும் நிகழ்கின்றன. வட்டார உற்பத்திப் பொருள்களான நொங்கும் கல்லும் கருப்பட்டியும் அழிக்கப்படுகின்றன. இது புழுதியின் சூழலாகவும், விளக்கின் சுடரில் கரும்புகை மூட்டமாகவும் மாறுகிறது. மரணம் வெட்டி எறியப்பட்ட தலை களின் ஓலமாக எழுகிறது.

தீட்டிய அரிவாளுக்குத் தெரிவதில்லை/வெட்டி எறியப்பட்ட தலைகளின் வலியும் வீரியமும் என்பதாகவும் இது அடையாளம் பெறுகிறது. மரணம் கொலைச் செயல்களாக மறுவடிவம் பெறுகிறது. சாதீயத்தின் மோதல்களால் தலித்துகளின் மீதான ஒடுக்குமுறை நிழலாகப் படர்கிறது.

இங்கு ஒவ்வொரு முறையும் அடித்துக் கொல்லப் பட்ட போதும் தினமும் வந்துகொண்டுதானிருக் கின்றன பாம்புகள் என சாதாரணமாக எழுதிச் செல்கையில் ஒரு அசாதாரணத்தன்மை கவிதைக்குக் கூடிவந்துவிடுகிறது.

மீண்டும் மீண்டும் பிணங்களைப் பார்த்தபோதும்/இறந்துவிடுவது ஒன்றும்/எளிதானதாக இல்லை. என்பதாக இறப்பின் மீதான இயலாமையினையும் வெளிப் படுத்திச் செல்கிறது.

பாலியல் அரசியலைப் பேசும் குறியீட்டுச் சொல் லாடல்களில் விளிம்புநிலைப் பெண்ணின் குரல் மிகுந்த துயரத்தோடு கேட்கிறது.

பாழ்மண்டப இருளில், ரகசிய இரவொன்றில் அவன் சொன்ன போதை மிகுந்த சொற்களில் தன்னை இழக்கிறாள். நெஞ்சில் முட்டும் துயரம் கண்களில் கனத்து தேயும் இரவில் இருளை வளர்க்கிறது. காதலையும் காமத்தையும் வேட்கையோடு பேசும் வளர்முலை பார்த்து குறுகுறுத்த தன்னுடலின் பருவமாற்றத்தில் அவன் வருடிக் கொடுத்த ஸ்பரிசத்தின் நினைவு அவ்வப்போது வந்து கொல்கிறது. அவன் இதழ்களின் தன்மை இப்போது நினைத்தாலும் சில்லிடச் செய்வதாகவே இருக்கிறது.

வன்புணர்வால் ஏற்படுத்திய வலி, உடலெங்கும் தகிப்பதாகவும் ஆற்றாமை, ஏமாற்றம், வன்மம் சூழ, அவளின் வயிற்றில் உண்டான கரு பழிதீர்க்கும் என நம்புகிறாள்.

இப்பிரதிகளில் பாலியத்தைக் கடந்து செல்லும் பெண் எதிர்கொள்ளும் பாலுணர்வுச் சிக்கல் களையும், ஒரு ஆணின் ஸ்பரிசத்திலும் ஈர்ப்பிலும் ஏமாந்து போய், விளிம்புநிலைக்குத் தள்ளப்படுகிற பெண்ணின் வாழ்வையும் பேசுகிறார்.

இதற்கு முற்றிலும் எதிர்நிலையில் வேசி எனத் தெரிந்தும் முலைக்காட்சியின் கவர்தலில் புணர்ச்சி சுகம்நாடி பின்னால் ஓடுபவர்களைக் கண்டு பரிதாபப்படுகிறார். அந்த முகம் கிழித்து சாகசம் புரியவைக்கத் தவிக்கும் மனசு வலுவற்ற இறக்கை களுடன், காயங்களுடன் இருட்டில் பறப்பதாகவும் குறிப்பீடு செய்கிறார்.

கவர்ச்சி, விளம்பரங்கள், இலவசங்கள் பின்னா லோடிக் கொண்டிருக்கும் மக்களின் பொதுப் புத்தியின் மீதான விமர்சனத்திற்கு வேசி சொல் லாடல் பயன்பட்டிருக்கிறது. மலடிபோன்ற சொற் களும் இவற்றில் உள்ளடங்கும். இன்னொரு வகையில் இது பெண்ணுடல் மீது வெறுப்பை உமிழ்ந்த பட்டினத் தாரின் மறு உருவாக்கக் குரலின் சாயலாகவும் வெளிப்பட்டுவிடுகிறது. இவை பெண்மொழிக்கு எதிரான சொல்லாடல்களாகவே தன்னுணர்வற்ற நிலையில் இடம் பெற்றுள்ளன.

நாகராஜனின் கவிதைகளில் நடுத்தர வர்க்கத்தின் ஏலாமையும், மைய நீரோட்டத்திலிருந்து விலகிய விளிம்புநிலை மனிதர்கள் குறித்த அக்கறையும் இணைந்து வெளிப்படுகின்றன. செருப்பு தைப்பவனின் வாழ்க்கைச் சித்திரத்தைத் துண்டுபீடியின் புகை யோடும், கண்களின் கனலோடும் பதிவு செய்கிறார்.

சாக்கடை அருகில் கருவறைக் குழந்தை போலச் சுருண்டு முடங்கிக் கிடந்த யாசகனின் தெருவோரச் சித்திரம் இதில் மற்றொன்று. அழுக்கையும், ஓட்டை களையும் தவிர்த்துப் பார்த்தால் ஆடை எதுவுமற்ற அவனின் நிர்வாணம், சவரம் கண்டறியா முகம், குடியின்நெடி எல்லாமுமாக அந்தத் தெருவோரச் சித்திரத்தைப் படைத்துக் காட்டுகிறார். கழிவிரக்கம் கொள்ள நினைத்தபோது முடியவில்லை. இவனுக்கும் சேர்த்து தேசிய கொடி ஏற்றிய ஜனாதிபதியின் முன் பீரங்கி ஏவுகணைகள் அணிவகுத்தது நினைவுக்கு வருகிறது. அம்பானியின் சொத்தைமட்டும் சமபங் கிட்டால் இவனுக்கு ரூபாய் ஆயிரம் வரும் என்பதாக எண்ணும் மனக்குரலின் கவிதை இவ்வாறாக முடிகிறது.

அம்பானிகளிடமுள்ள என்பங்கை/இவனுக்கு மானசீகமாய் எழுதிவைத்துவிட்டு/மெதுவாக நடந்தேன்.

இந்திய தமிழகச் சூழலின் பொருளியல்சார் வர்க்க முரண்களையும், இருவேறுபட்ட வாழ்வு முரண்களையும் மிகவும் கூர்மையான விமர்சனத் தொனியோடு நாகராஜன் முன்வைக்கிறார். பெரு முதலாளியம் அழித்துப் போட்ட விளிம்புநிலை மக்களின் வாழ்வுபற்றிய புரிதலையும் பகடியின் வழியாக கலகத்தையும் மொழிவழி நடத்திக் காட்டுகிறார்.

இந்தவகையில் அடித்தள விளிம்புநிலை மக்களின் வாழ்வுக்காட்சியைத் தனது கவிதையில் நாகராஜன் வரைந்துகாட்டுகிறார். தலித்திய வாழ்வின் கடைக் கோடியாய் வாழ்கிற மலம் அள்ளும் தோழனின் வாழ்வுப்பதிவாக இது அமைகிறது. இருவேறு பட்ட அம்மாக்கள் இக்கவிதைக்குள் வருகிறார்கள். நள்ளிரவில் பன்றிக்குடில் கடந்து மலம் படிந்த குளக்கரைக்கு அப்புறத்தில் விகார காமத்தோடு வேசியைப் புணர்ந்துவிட்டு வருகிறான். நோய் பெற்று வந்த மகனின் காலில் முளைத்த கொப்புளங்களில் மஞ்சள்தடவிய அம்மாகழிப்பு பிண்டம் தாண்டினாயா என அப்பாவித்தனமாய் ஏதுமறியாமல் கேட்கிறாள். இக்கவிதையில் இடம்பெறும் இன்னொரு அம்மா தன் மகனிடம் என்ன கேள்விகேட்பாளெனக் கேட்கும் கேள்வியோடு கவிதை முடிகிறது.

உடலில் மண்ணெண்ணெய் தடவி/சாராயம் குடித்து/மலக்குழிக்குள் இறங்கியவனிடம்/அவன் அம்மா என்ன கேட்பாள்.

எண்பதுகளின் இறுதியில் துவங்கிய போராட்டத்தில் சிங்களப் பேரினவாதத் தாக்குதலில் இரண்டுலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள் அழித்தொழிக்கப்பட்டிருக்கிறார்கள். எட்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்த அகதிகளாய் இருப்பிடமற்று அலை பாய்கிறார்கள். கனடா, பிரிட்டன், பிரான்ஸ் என ஐரோப்பிய நாடுகளில் இரண்டரை லட்சத்திற்கும் மேலான தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள்.

ஈழமக்கள் மீதான இன அழிப்பின் உச்சகட்டமாக 2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் கடலோரக் கிராமத்தில் நாற்பதினாயிரம் தமிழர்கள் இனப் படுகொலைசெய்யப்பட்டார்கள். தமிழ்நதி, சேரன், கிபி அரவிந்தன், திருமாவளவன் என நீண்ட வரிசையில் கவிகள் இந்த இனப் படுகொலையின் குரூரத்தைப் பதிவுசெய்துள்ளனர். பிணங்களோடு வாழ்தல் என்னும் கவிதையில் இளைய அப்துல்லாஹ் இவ்வாறு எழுதிச் செல்வார்.

புணர்ந்து புணர்ந்து சக்கையாகிய/ பெண்ணுடலின் யோனிக்குள்/குண்டுவைத்து தகர்த்துப் போகிறான் ஒருவன்/கேலிகேலியாக வெட்டிய குழந்தையை/கயிற்றில் தொங்க

விட்டுப் போகிறான் இன்னொருவன்/வாய்க்குள் துப்பாக்கி வைத்து/சன்னம்பாய்ச்சி சிரிக்கிறான் இன்னொருவன்/வெட்டுதல் கூறு போடுதல் எரித்தல் கதறுதல் புணர்தல் என்றெல்லாம் செய்து விட்டு/ இறுதியில் பிரேதம் செய்கிறான்./பூர்வீகக் குடிகளாய் வாழ்ந்த வரலாற்றையும் மீள்வாசித்துப் பார்க்கிறது./தாம் கோலோச்சிய எழிலார்ந்த மனபிம்பங்கள்/எங்கேனும் காணக் கிடைக்குமென்று/புராதன நிலங்களில் புதையல்கள் நாடும் ஒருகூட்டம் பறவைகள்...

கண்களில் ஒளியும் கையில் துப்பாக்கியும் கழுத்தில் சயனைடு குப்பிகளுமாய்க் காவு கொள்ளப் பட்ட வாழ்க்கை அலைபாய்கிறது. குறிகள் துப்பிய விஷங்கள் ஏந்திய யோனிகள் சிதைக்கப்படுகின்றன. கொப்பளிக்கும் குருதியில் உறையும் கண்களும் சிதைந்த உடல்களின் ஓலங்களில் கிழிந்த செவிகளும் பயத்தில் உறைந்து சுருங்கும் விதைகளுமாக அழித் தொழிக்கப்பட்ட ஈழமக்களின் வாழ்வின் துயரைத் தனது கவிதையின்வழி பேசி இதயங்களை ஊடுருவிச் செல்கிறார்.

மரணமும் புரட்சியும் நொடியில் நிகழ்வன என்பதறியாமல்/விளையாடிக் கொண்டிருக்கிறாய்/பழிதீர்க்கும் குரலையும் சொல்லாமல் விட்டுவிடவில்லை.

கவி.ந. நாகராஜன் விளிம்பின் வாழ்வையும் ஒடுக்குமுறைக்கும் அதிகாரங்களுக்கும் எதிரான வன்மமிக்க குரலையும் தனது கவிதைகளில் இடையறாது ஒலிக்கச் செய்துள்ளார்.

இவரது கவிதை நான் நவீனத்துவத்தின் அந்நியப் பட்ட நான் அல்ல. விளிம்புநிலை மக்களின் நான். பிச்சை எடுப்பவனோடும், வேசியோடும், தெருவோரக் குடியனோடும், செருப்புதைப்பவனோடும், மலம் அள்ளும் தோழனோடும், ஈழத்தமிழனின் குருதியோடும் தன்னை இணைத்துக் கொள்ளும் விளிம்பு நிலை நானாக உருமாறி இருக்கிறது. தமிழ் படைப்புச் சூழலில் கலகத்தொனி நிறைந்த எதிர்ப்பின் கவிதைகளாகவும் இவற்றைச் சொல்லலாம்.

சித்திரம் வரைந்த குழந்தை

ஆசிரியர் : ந. நாகராஜன்

வெளியீடு: என்.சி.பி.எச்.

விலை: ரூ.45.00

Pin It

உட்பிரிவுகள்