சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று குழந்தை இலக்கியம்பற்றி ஓர் உரையாடல் நிகழ்ச்சியை நடத்தியது.  அதில் குழந்தை எழுத் தாளர் விழியன் கூறிய கருத்துகள் முக்கியமானது.  “தமிழில் குழந்தை இலக்கியத்தில் ‘கிளாசிக்’ இல்லை.  ஆங்கிலத்தில் டாம்சாயர், ஆலிஸ் இன் ஒண்டர்லான்ட், லிட்டில் வுமன், ஆனி ஆப் க்ரீன் கேபில்ஸ், ஹாரி பாட்டர் என்று நிறைய இருக்கின்றன. அழ.வள்ளியப்பாவிற்குப் பிறகு யாரும் இங்குக் கொண்டாடப்படவில்லை.”

children 360யார் கொண்டாட வேண்டும்? சமூகம்.  அது அக்கறையற்றது, உணர்வற்று இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.
 
குழந்தை எழுத்தாளர்களின் வாசகர் யார்? குழந்தைகள்.  அவர்கள் ஒரு கதையை, ஒரு பாட்டை அலசி ஆராய்ந்தும் கொண்டிருக்க மாட்டார்கள்.  இன்னும் சொல்லப் போனால் குழந்தைகளுக்கு ஒரு நூலின் ஆசிரியர் யார் என்பது கூட முக்கியமாகப்படுவதில்லை.  இது நல்ல புத்தகம், குழந்தைகளுக்கு ஏற்றது, இன்ன பயன் தருவது என்று ஒரு நூலைக் குழந்தைகளுக்கு அறிமுகப் படுத்த வேண்டிய கடமை உடையவர்கள் ஆசிரியர், பெற்றோர், நூலகர், கல்வியாளர் ஆவார்.  இக் கடமையைத் தமிழில் யார் செய்திருக்கிறார்கள்?
 
நான்கு ஆண்டுகளாகத்தான் குழந்தை இலக் கியத்திற்கு சாகித்ய அகடமி பரிசளிக்கிறது.  ஒரு படைப்புக்குப் பரிசு என்பதும் பாராட்டு என்பதும் ஒரு நூலைச் சமூகத்துக்கு அறிமுகப்படுத்தும் வழியே.  அவ்வாறு அறிமுகம் பெற்ற நூல்களையே தமிழ்ச் சமூகம் கொண்டாடவில்லை.  சாகித்ய அகடமி பரிசு பெற்ற நூல்களான ‘காட்டுக்குள்ளே இசை விழா’ ‘சோளக் கொல்லை பொம்மை’ ஆகிய நூல்கள் புத்தகக் கடைகளில் கிடைக்கவில்லை.  எழுத்தாளர்களிடம் கேட்டுப் பெற்றேன் நான்.  மூத்த எழுத்தாளரான ரேவதியின் மிகச் சிறந்த நூலான ‘கார் வண்ணன் கண்ட கனவு’ (சிறுவர் வரலாற்று நாவல்), வரலாற்று நாவல் எப்படி எழுதப்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாகச் சொல்லப் படுகிற அந்த நாவல் எங்குத் தேடினாலும் கிடைக்க வில்லை.  இதுதான் நம் சமூகம் குழந்தை இலக்கி யத்தைக் கொண்டாடி வரும் இலட்சணம்!
 
நான்கு ஆண்டுகளாக சாகித்ய அகடமி பரிசு பெற்று வரும் நூல்களைத் தமிழ்ச் சமூகத்திற்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.
 
ஒரு குழந்தை இலக்கியப் படைப்பு எல்லாக் குழந்தைகளுக்கும் பொதுவானவை அல்ல.  குழந்தை களின் வயதிற்கேற்ப அதில் பிரிவுகள் உண்டு.  3-8 வயது வரை உள்ளவர்களுக்கு மழலை இலக்கியம், 9-14 வயது வரை உள்ளவர்களுக்குச் சிறுவர் இலக் கியம் என்று வகைப்படுத்திக் கொள்ளலாம்.  மா. கமலவேலன் எழுதிய அந்தோணியின் ஆட்டுக் குட்டி (சிறுவர் நாவல்), குறிஞ்சிச் செல்வர் கொ.மா. கோதண்டன் எழுதிய காட்டுக்குள்ளே இசை விழா (சிறுவர் சிறுகதைகள்), ரேவதி எழுதிய பவளம் தந்த பரிசு (சிறுவர் கதைகள்) ஆகியன சிறுவர் இலக்கிய வகையாகும்.  கவிஞர் ம.இலெ. தங்கப்பா எழுதிய சோளக்கொல்லை பொம்மை இரு வகையினருக்குரியதாகும்.
 
‘அந்தோணியின் ஆட்டுக்குட்டி’ ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருதை 2010-இல் பெற்ற முதல் நூல் என்ற பெருமையுடையது.
 
அந்தோணி ஆடு மேய்க்கும் சிறுவன். அவனுக்கு அம்மாவும் பாட்டியும் உண்டு.  வறுமை காரண மாகப் பள்ளிக்குச் செல்லவில்லை.  அந்தோணியின் நண்பன் பால்பாண்டி.  நன்றாகப் படிப்பவன், அந்தோணிக்கு நாட்டு நடப்புகளைக் கூறுபவன்.  அந்தோணி இரவுப் பள்ளியில் சேர்ந்து படிக்க உதவுகிறான்.
 
தோமையார் கோவில் திருவிழா வருகிறது.  மோசமான குணம் கொண்ட இராயப்பன் கோஷ்டி திருவிழாவிற்குப் பணம் வசூலிக்கிறது.  திருவிழா செலவிற்காக அந்தோணியின் ஆட்டுக்குட்டி விற்கப் படுகிறது.  ஆட்டுக்குட்டியைப் பிரிந்து அந்தோணி யின் மனம் துடிக்கிறது.  இராயப்பனிடமிருந்து ஆட்டுக்குட்டியை மீட்க நடு இரவில் அந்தோணி செல்கிறான்.  அப்போது நெடுஞ்சாலையில் கிடக் கிறார்கள்.  விபத்தில் சிக்கியவர்களிடமிருந்து நகையையும் பணத்தையும் திருடிக் கொண்டு இராயப்பன் கோஷ்டி ஓடுகிறது.  இவற்றையெல்லாம் அந்தோணி மறைந்திருந்து பார்க்கிறான்.விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ எண்ணுகிறான்.  ஓடிச் சென்று பால்பாண்டியையும் அவனுடைய அப்பா வையும் அழைத்து வருகிறான்.  
 
போலிசுக்கு தகவல் அளித்து மருத்துவமனையில் சேர்த்து விபத்தில் சிக்கிய குடும்பம் காப்பாற்றப்படுகிறது.  அக்குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர் நகை, பணம் காணாமல் போனதைப் பற்றிப் புகார் செய்கிறார்.  போலீஸ் உதவி செய்தவர்கள் மீதே சந்தேகப் படுகிறது.  உண்மையை அறிந்திருந்த அந்தோணியின் உதவியுடன் நகை, பணம் கிடைக்கிறது.  அந்தோணி பாராட்டப்படுகிறான்.  அந்தோணி பள்ளியில் சேர்ந்து படிக்க பெரியவர் உதவுகிறார்.  மனம் திருந்திய இராயப்பன் ஆட்டுக்குட்டியை அந்தோணி யிடம் திருப்பி ஒப்படைக்கிறான்.
சாலைப் பாதுகாப்பு வார விழாவில் காவல் துறை உயரதிகாரி ஒருவர் கூறிய உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட சிறுவர் நாவல் இது.  ஆற்றொழுக்காகச் செல்லும் கதை யோட்டம், எளிமையான நடை, தெளிவாகக் கதை சொல்லும் முறை இந்நாவலை சிறப்படையச் செய் கிறது.
 
‘காட்டுக்குள்ளே இசை விழா’ 16 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு.  2011-ல் ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது பெற்றது.  குறிஞ்சிச் செல்வர் டாக்டர் கொ.மா. கோதண்டம் எழுதியது கான கத்தைக் களனாக வைத்து இவரைப் போல் அதிகமாகக் கதை எழுதியவர்கள் யாருமில்லை.  இத்தொகுப்பிலுள்ள கதைகளில் விலங்குகள், பறவைகள் பாத்திரங்களாகும்.  சாணி வண்டைப் பற்றிக் கூட கதை சொல்லுகிறார்.  இவருடைய கதைகளில் பஞ்ச தந்திரக் கதைகளின் தாக்கம் அதிகம் உள்ளது என்று சொல்லலாம்.
 
‘துன்புறும் உயிர்களைக் கண்ட போது...’ என்ற கதை.  ஒரு மனிதன் பருந்தைப் பிடித்து சாக்கு பைக்குள் கட்டி வைத்திருக்கிறான்.  பருந்தால் தப்பிக்க முடியவில்லை.  எறும்புக் கூட்டம் சாக்கு இழைகளைக் கடித்து ஓட்டை செய்து பருந்தை விடுவிக்கிறது (வேடனின் வலையிலிருந்து சிங்கத்தை எலி விடுவித்த கதை நம் நினைவிற்கு வருகிறது.)
 
முயலுக்கும் ஆமைக்கும் இடையில் நடை பெறும் ஓட்டப் பந்தய கதையைப் போல் இந்நூலில் இடம்பெறும் ‘புத்திசாலி நத்தை’ கதையில், நத்தைக்கும் எறும்புக்கும் ஒரு போட்டி நடக்கிறது.  ஒரு மரத்தின் கிளையிலிருந்து அடுத்த மரத்திலுள்ள குறிப்பிட்ட கிளைக்கு யார் முதலில் செல் கிறார்கள் என்பதே போட்டி.  புத்திசாலியான நத்தை ஒரு குரங்கின் உதவியால் போட்டியில் வெற்றி பெறுகிறது.
 
‘கருஞ்சிட்டின் தந்திரம்’ என்ற கதையும் இதே போல் ஒன்றுதான்.  கருஞ்சிட்டுக்கும் வேகமாகப் பறக்கும் திறமையுடைய பருந்திற்கும் பறக்கும் போட்டி.  கருஞ்சிட்டு தந்திரத்தால் வெல்கிறது.
 
பிறருக்கு உதவ வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் கதைகள் இத்தொகுப்பில் நிறைய உள்ளன.  ‘பசி போக்க உறவு’ என்ற கதையில் குருவி தன் குஞ்சுகளுக்கு ஊட்ட இரை தேடி அலைகிறது. பல தடைகள் உணவு கிடைப்பதில் ஏற்படுகிறது.  கடைசியில் கழுகு உதவுகிறது.
‘நீலன் வந்தான்’ கதையில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய மானை நீலன் காப்பாற்றுகிறான்.
 
‘மனிதர்கள் இரக்கம் மிக்கவர்கள்’, கதையில் மரத்திலிருந்து விழுந்த தேன் சிட்டுப் பறவையின் குஞ்சை ஒரு கிழவர் காப்பாற்றுகிறார்.
 
‘காட்டுக்குள்ளே இசை விழா’ நூலின் தலைப்பாக உள்ள கதை.  காற்று எப்படி ஏழு சுரங்களை காட்டுக்குள்ளே மீட்டுகிறது என்பதை விவரிக்கிறது.
 
சிறுவர்கள் கானகத்தை அனுபவிக்கவும் அதைப் பாதுகாக்க வேண்டும் என்ற அறிவைச் சிறுவர்களுக்கு ஏற்படுத்தவும் இந்நூலின் மூலம் ஆசிரியர் உதவியுள்ளார்.  குறிஞ்சிச் செல்வர் என்று அழைக்கப்படுவதற்கு அவர் பொருத்த மானவர்.
 
2012-இல் ‘பால சாகித்ய புரஸ்கார்’ பரிசு பெற்ற ‘சோளக் கொல்லைப் பொம்மை’ கவிஞர் ம.இலெ.தங்கப்பா எழுதியது.  புதுச்சேரியில் வசிக்கும் ஆங்கிலப் பேராசிரியர்.  நூலின் முகப்புப் பாட்டு, முதல் பாட்டு ‘சோளக்கொல்லைப் பொம்மை’ பாடல் சிறுவர்கள் மனதைக் கவ்வும் தரத்திலானது.
 
‘சோளக் கொல்லைப்பொம்மை!
முறைக்குது பார் நம்மை.
 
ஆளைப் போல மிடுக்கு
அட்டைக் கத்தி முடுக்கு
தாளில் தாங்க மினுக்கு
தலைதான் கொஞ்சம் ஒடுக்கு
காளி கோயில் பூதம் போலக்
காவல் காத்து நிற்கும் பொம்மை.                        (சோளக் கொல்லைப்பொம்மை)
 
சட்டித் தலை மேலே
சவரி முடி ஒட்டிப்
பட்டை நாமம் தீட்டிப்
பல் இளித்துக்காட்டி
நெட்டி மாலை போட்டுக் கந்தல்
சட்டை மாட்டி விட்ட பொம்மை.                      ( சோளக் கொல்லைப்பொம்மை. )
 
ஒலையாலே நாக்கு.
ஒட்டு வைத்த மூக்கு.
போலி மீசை முறுக்கு.
புள்ளி குத்தி இருக்கு.
காலை மாலை இரவு பகல்
கண் விழித்து நிற்கும் பொம்மை                     ( சோளக் கொல்லைப்பொம்மை. )
 
வாயைப் பாரு சப்பை;
வைக்கோல் பொதி தொப்பை;
சாய மாலை காற்றில்
சலசலக்க ஆட்டிப்
பேயைப் போல இரவு நேரம்
பிள்ளைகளை மிரட்டும் பொம்மை            ( சோளக் கொல்லைப்பொம்மை. )
 
இப்பாடல் நாட்டுப்புறப் பாடலைப் போல் எளிமை, இனிமை நிறைந்திருக்கிறது.
 
நூலாசிரியர் முன்னுரையில், தான் குழந்தைப் பாடல்கள் எழுதப் புகுந்த நோக்கத்தை தெளிவு படுத்தியுள்ளார்.  பொருள் புரியாத, அயல்நாட்டு பின்புலம் கொண்ட ஆங்கில நர்சரி பாடல்களுக்கு மாற்றாகவும் சொந்த மண்ணின் மணம் கமழும் பாடல்களைப் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கவும் இப்பாடல்களை எழுதியதாகக் குறிப்பிடுகிறார்.
 
முன்னுரையில் நிறைய நாட்டுப்புறப் பாடல் களைத் தன் நினைவிலிருந்து தந்துள்ளார்.  அவை யெல்லாம் அவர் தன்னுடைய நான்கு வயதில் தன் தாயிடமிருந்து கற்றுக் கொண்டவை.  ஒரு காலத்தில் தமிழ்க் குழந்தைகள் எத்தனையோ நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தனர்.  நம் மண்ணை, மரபைச் சொல்லும் அப்பாடல்கள் இன்று காணாமல் போய்விட்டன.  அவ்வெற்றிடத்தை நிரப்பும் முறையில் எழுதிய பாடல்களே ‘சோளக் கொல்லைப்பொம்மை’ நூலில் உள்ளவை.  இப் பாடல்கள் பெரும்பாலும் நாட்டுப்புறப் பாடல் களின் தாக்கத்தில் விளைந்தவை.
 
இந்நூலில் உள்ள பாடல்களை இரு பிரிவு களாகப் பிரிக்கலாம்.  நான்கு வரி பாடல்களாக ஓசை நயத்துடன் இருக்கும் இவை மழலைக் குரியன.
(உ-ம்)
 
‘வாய்க்காலிலே வெள்ளம்
வாத்திரண்டும் குள்ளம்
மூக்கிலே கருப்பு
முதுகு கொஞ்சம் பழுப்பு.’
ஒரு பொருளை விவரிக்கும் எளிய பாடல் களையும் இத்தொகுப்பில் தங்கப்பா தந்துள்ளார்.
 
(உ-ம்)
 
‘வானத்திலே பாலம்,
வண்ண வண்ணப் பாலம்,
வானத்தோடு தரையை
வளைத்திணைக்கும் பாலம்,’
 
உண்டு.  பாலம் என்று சொல்லுவது புதிய கற்பனை.
 
‘யார் அறிவாளி?’ என்றொரு பாடல்,
 
‘குளிக்கப் போனார் யானையார்;
குறுக்கே வந்தார் பூனையார்;
சுளித்து முகம் கோணாமல்
சும்மா போனார் யானையார்.
 
இறங்கி வந்தார் பாட்டியார்;
எதிரில் போனார் பூனையார்,
‘குரங்கு! சனி, போ!’ என்றே
கூச்சல் போட்டார் பாட்டியார்.’
 
மூட நம்பிக்கையைச் சாடும் இப்படியொரு பாட்டு குழந்தைப் பாடல்களில் இதுவரை வந்த தில்லை.
 
இன்னொரு பிரிவு சிறுவர்களுக்கான பாடல்கள்.  இவை சிந்தனையைத் தூண்டக் கூடியன.  அளவிலும் பெரியன.  ஊர்த்திருவிழா, இயற்கை நிகழ்வுகள், சிறுபிள்ளைகளின் விளை யாட்டுகள், வேடிக்கைகள் இவற்றைப் பாடல் பொருளாகக் கொண்டுள்ளன.
 
அணிந்துரையில் பூவண்ணனும் பிஞ்சுக் குழந்தைகளுக்கான பாடல்கள், நான்கு வரியில் குட்டிப்பாடல்கள், நல்ல கருத்துக்களைச் சொல்லும் நகைச்சுவைப் பாடல்கள் என்று இப்பிரிவுகளைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
 
குழந்தைப் பாடல்கள் எப்படியிருக்க வேண்டும் என்பதுபற்றி தங்கப்பாவிற்கு ஒரு கொள்கை இருக்கிறது.  அறிவுரைப் பாடல்களை விடப் பாடி மகிழ்வதற்கும் விளையாட்டு உணர்வுக்கு இடம் கொடுக்கும் பாடல்களையே குழந்தைகள் பெரிதும் விரும்புவதாகக் கவிஞர் சொல்லுகிறார்.  அது சரியே.  இத் தொகுப்பிலும் அத்தகைய பாடல்களே இடம் பெற்றிருப்பது பாராட்டத்தக்கது.
 
2013-ஆம் ஆண்டிற்கு பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற நூல் ரேவதி எழுதிய ‘பவளம் தந்த பரிசு.’
 
சிங்கப்பூர் அரசு, பெற்றோர்களுக்கும் ஆசிரியர் களுக்கும் ‘கதை சொல்லுவது எப்படி?’ என்ற கருத்தரங்கை நடத்தியது.  அக்கருத்தரங்கில் ரேவதி கூறிய கதைகளே இத்தொகுப்பில்  உள்ளவை.  அறிவியல் கதைகள் கூறுவதற்கே ரேவதி தயாரித்துச் சென்றிருந்தார்.  ஆனால் கருத்தரங்கை நடத்தி யவர்கள் நாடோடிக்கதைகள், கர்ண பரம்பரைக் கதைகள் வடிவில் கதைகள் வேண்டுமெனக் கேட்டனர்.  அவ்வாறு தயாரித்துச் செல்லாத நிலையில் சமாளித்துக் கொண்டு இக் கதைகளை ரேவதி சொல்லியிருக்கிறார்.
 
மொத்தம் ஐந்து கதைகள், நூலின் தலைப்புக் கதை, பவளம் பரிசு.  நீதி தவறாத மன்னனைப் புரிந்துகொள்ளாத வைத்தியர் கோபித்துக் கொண்டு காட்டுக்குச் செல்கிறார்.  நாட்டில் பார் வையைப் பறிக்கும் கண் நோய் குழந்தைகளுக்குப் பரவுகிறது, வைத்தியரால் மட்டுமே குணப்படுத்த முடியும்.  மன்னன் வைத்தியரைத் தேடிச் சென்று நோயைக் குணப்படுத்த வருமாறு அழைக்கிறார்.  வைத்தியர் மறுக்கிறார்.  வைத்தியரின் பேத்தி தாத்தாவின் தவறை உணர வைக்கிறாள்.  குழந்தை களுக்குக் கண் நோய் குணமாவது பவளம் தந்த பரிசாக மதிக்கப்படுகிறது.
 
பேத்தியின் மீது தாத்தா வைத்திருக்கும் அன்பே அவரை மாற்றுகிறது.  அன்பு உயர்வானது என்று இக்கதை கூறுகிறது.
 
இரண்டாவது கதை, கண்மணி தந்த பரிசு.  பொன்மணி, கண்மணி அக்கா, தங்கை.  அக்கா பொன்மணி யாரிடமும் நேசம் காட்டாதவள்.  தங்கை கண்மணி எல்லோருக்கும் உதவுபவள்.  கண்மணிக்கு அநுமன் அருளால் நோய் தீர்க்கும் நீர்க் குடுவை கிடைக்கிறது.  சொந்த நாட்டின் மன்னரின் நோயைத் தீர்க்கிறாள்.  பகை நாட்டு மன்னரின் நோயும் தீர்கிறது.  கண்மணியின் சேவையால் இரு நாட்டுப் பகையும் மறைகிறது.  இதுவே கண்மணி தந்த பரிசு.
 
பகை பாராட்டப்படாமல் இருந்தால் நட்பு வளரும் என்று இக்கதை எடுத்துச் சொல்லுகிறது.
 
மூன்றாவது கதை, அம்பிகை தந்த பரிசு.  விஜயபுரி மன்னன் விக்கிரமன் பேராசை பிடித்தவன்.  அவனிடமிருந்த எட்டு பெட்டகங்களைச் செல் வத்தால் நிரப்ப விரும்புகிறான்.  அதற்காக மக்கள் மீது அநியாய வரிகள் விதிக்கிறான்.  குடிக்கும் தண்ணீருக்கும் வரி விதிக்கிறான்.  கிணற்றுக்கும் வரி, ஓடும் நதிக்கும் வரி.  ஒரு முனிவர் நதி நீரை குடிக்கிறார்.  மன்னன் வரி கேட்கிறான்.  முனிவர் தர மறுக்கிறார்.  நதி தனக்குச் சொந்தம் என்கிறான் மன்னன்.  நதியை விற்கத் தயாரா? என்று கேட் கிறார் முனிவர்.  சம்மதிக்க மன்னன் நதியை முனி வருக்கு விற்று விடுகிறான்.  முனிவர் நதியை கமண்டலத்தில் அடக்கிக் கொண்டு போய் விடுகிறார்.  சொட்டு நீர் இல்லாமல் தாகத்தால் மக்களும் மன்னரும் தவிக்கிறார்கள்.  மன்னர் தவறை உணருகிறார்.  நதியை மீண்டும் வரும்படி கேட்கிறார்.  மக்கள் மன்னரை நல்லவர் என்று கூறினால்தான் வருவேன் என்று நதி கூறுகிறது.  அமைச்சரின் மகள் அம்பிகையின் ஆலோசனைப் படி மன்னர் சிறையில் அடைக்கப்படுகிறார்.  இளவரசன் அரசன் ஆகிறான்.  அவன் செய்யும் கொடுமையைப் பார்த்துப் பழைய மன்னரே நல்லவர் என்று மக்கள் கூறுகிறார்கள்.  நதி மீண்டும் வருகிறது.  இது அம்பிகை தந்த பரிசு.  சுவாரசியமான இக்கதை நீரின் முக்கியத்துவத்தை விளக்குகிறது.
 
நான்காவது கதை, கமலம் தந்த பரிசு.  இளம் வயதிலேயே அரசனானதால் சித்திரசேனன் முதிர்ச்சியற்றவனாக இருக்கிறான்.  பாட்டுப் பாட கற்றுக்கொள்ள முயன்று பாட்டு வராததால் பாட்டு பாடுவதற்கு வரி விதிக்கிறான்.  புத்திசாலியான பெண் கமலம் எல்லைக்கு வெளியே நின்று பாட்டு பாடுகிறாள்.  அரசனால் தடுக்க முடியவில்லை.  கோபம் கொண்ட மன்னன் கமலத்திற்குப் புத்தி புகட்ட நினைக்கிறான்.  ஆனால் கமலத்தின் புத்திசாலித்தனத்திற்கு முன் தோற்றுப் போகிறான்.  பாட்டுப் பாட இருந்த தடை நீக்கப்படுகிறது.  இது கமலம் தந்த பரிசு.
வேடிக்கையான இக்கதை அறிவைப் போற்றுகிறது.
 
ஐந்தாவது கதை, வாசுகி கேட்ட பரிசு.  வைர புரி மன்னன் சிவபாலன் நீதி தவறாத மன்னன்.  தர்ம தேவதையின் அருள் பெற்றவன்.  மன்னர் கூறிய தீர்ப்பால் மந்திரக்காரியின் கோபத்திற்கு ஆளாகிறான்.  அவனுக்குப் பூதத்தின் முகம் சாபத்தால் கிடைக்கிறது.  அதனால் திருமணம் தடைப்படுகிறது.  வாசுகி என்ற பெண்ணின் நிமித்தமாகவே இவை யெல்லாம் நடைபெறுகிறது.  வாசுகிக்கும் மந்திரக் காரியால் கண் பார்வை போகிறது.  தன்னால்தான் மன்னரின் திருமணம் தடைப்பட்டதால் வாசுகி மன்னரை மணந்து கொள்கிறாள்.  இருவரில் ஒருவருக்கு சாபம் நீங்க தர்ம தேவதை முன் வருகிறார்.  மன்னன் வாசுகிக்குக் கண் பார்வை கிடைக்க வேண்டுகிறான்.  மன்னனின் தியாகத் தையும் அன்பையும் பாராட்டி அவனுடைய பூதமுகமும் மாற தர்ம தேவதை அருள் செய்கிறார்.
 
சுயநலமின்னையே மேன்மைக்கு வழிவருக்கும் என்பது இக்கதையின் கருத்தாகும்.
 
ஒவ்வொரு ஆண்டிலும் வெளிவந்த நூல் களுள் சிறந்த நூல் ஒன்றிற்குப் பால சாகித்ய புரஸ்கார் விருது அளிக்கப்படுகிறது.  நான்கு ஆண்டுகளில் நான்கு நூல்கள்.  இந்நூல்களை தமிழ்க் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டியது ஆசிரியர், பெற்றோர், நூலகர், கல்வி யாளர் ஆகியோரின் கடமை என்று இன்னொரு முறை சொல்ல விரும்புகிறேன்.
Pin It