திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, முதுமொழிக்காஞ்சி, அருங்கலச் செப்பு, அறநெறிச்சாரம், நறுந்தொகை, நீதிநெறி விளக்கம், நன்னெறி, உலகநீதி, முதுமொழி வெண்பா, ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, புதிய ஆத்திசூடி, நெறிசூடி, தமிழ் சூடி, நீதி சூடி, நீதி சிந்தாமணி, பொன்மதிமாலை, நீதிபேதம், விவேக சிந்தாமணி, தண்டலையார் சதகம், கோவிந்த சதகம், சயங்கொண்டார் சதகம், அறப்பளீசுர சதகம், மணவாள நாராயண சதகம்- இத்தனையும் தமிழிலுள்ள நீதி நூல்கள்.

இந்தப் பட்டியலில் இன்னமும் நிறைய நூல்கள் விடுபட்டிருக்கக் கூடும். இவையன்றி, பிற தமிழ் நூல்களிலுமே நிறையவும் நீதிகளும் அறிவுரை களும் அறவுரைகளும் பரந்துகிடக்கின்றன, இந்த நூல்களும் இவை சொல்லும் நீதிகளும் எந்த அளவுக்குத் தமிழ் மக்களால் பின்பற்றப்பட்டன. பின்பற்றப்படுகின்றன என்பதெல்லாம் வேறு விஷயம். தவிர, எந்த அளவுக்கு ஒரு சமுதாயம் மிக மோசமான சூழலில் உழன்றுகிடந்திருந்தால் இந்த அளவுக்கு நீதி நூல்களுக்கான தேவை ஏற்பட்டிருக்கும் என்பதும்கூட மிகப் பெரிய கேள்விதான்.

ஆனால், மேற்கத்திய நாடுகளில், இலக்கியங் களில் நீதி நூல்கள், அதுவும் தமிழில் இருப்பதைப் போன்று, ஓரடி, ஒன்றே முக்கால் அடிகளிலெல்லாம் capsule - நறுக்குகளாக இருக்கின்றனவா? இந்த அளவுக்கு அறம் உரைக்கப்படுகிறதா? தெரிய வில்லை.

ஆனால், குழந்தைகளுக்காக ஒழுங்கையும் ஒழுக்கத்தையும் நல்லனவற்றையும் அறிவுறுத்தி, இத்தாலிய எழுத்தாளர் கார்லோ கொலாடியால் எழுத்தப்பட்டதுதான் ‘பினாச்சியோவின் சாகசங்கள்’ என்ற இந்த நாவல். தமிழில் பினாச்சியோ (பினாக்கீயோ என்று உச்சரிப்பதே சரியாக இருக்கும்).

ஒரு சிறுவனின் குறும்புத்தனமான செயல் களே நாவலாக இங்கே வடிவம் பெற்றுள்ளன. இதன் முதல் பாதி, 1881, 1882-இல் தொடர்கதையாக வெளிவந்தது. பிற்பாதி, பின்னர் தொடர்ந்து எழுதப்பட்டு, அடுத்த ஆண்டில், குழந்தைகளுக்கான நாவலாக முழு உருவம் பெற்றது.

வெளிவந்த காலத்தில் முன்னெப்போது மில்லாத புதுமையாக மிக முக்கிய இடத்தைப் பெற்ற இந்த நாவலும் கொலாடியின் எழுத்துகளும், இன்று வரையிலும்கூட அவற்றின் காத்திரத்தைப் பல மொழிகளிலும் தொடருகின்றன.

பிரெஞ்சு மொழியின் நாட்டுப்புற அதிபுனைவுக் கதைகளைத்தான் தொடக்கத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார் கொலாடி. ஒருகட்டத்தில் ஏன் அவரே சொந்தமாக இதுபோன்ற கதைகளை எழுதக் கூடாது என்ற கேள்வியின் தொடர்ச்சியாகத் தான், மரக்கட்டையிலிருந்து உருவான மனிதச் சிறுவனாக பினாச்சியோவுடைய சாகசங்களின் ஒரு பகுதியைச் செய்தித்தாளொன்றுக்கு எழுதி யனுப்பினார் கொலாடி.

தொடராக வெளிவந்த இந்தக் கதை, சிறார்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

தொடராக வெளிவந்தபோது, முடிவில் அவனுடைய எண்ணற்ற தவறுகளுக்காகத் தூக்கி லிடப்பட்டுப் பினார்ச்சியோ இறந்துவிடுவதாக அவலமாகக் கதை முடிந்துவிட்டது. பின்னர், அவரை எழுத ஊக்குவித்த பத்திரிகை ஆசிரியர் உள்ளிட்ட பலருடைய வேண்டுகோள்களுக்கேற்ப, மீண்டும் நாவல் நீண்டுவளர்ந்து தற்போதிருப் பதைப் போல நிறைவடைந்தது.

மிகவும் புதுமையான இந்த நாவலைப் பின் பற்றிப் பின்னர் பலரும் குழந்தைகளுக்காகவென நாவல்களையும் கதைகளையும் எழுதத் தொடங்கினர். இந்த நாவல், 1882-இல் முதன்முதலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டபோது பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர், இதே நாவலுக்கு வேறு பல மொழிபெயர்ப்புகளும் வந்தன.

சிறு கட்டையைச் செதுக்கி, தான் உருவாக்கிய மரப்பொம்மைக்கு ‘பினாச்சியோ’ என்று பெயர் சூட்டி மகனாக வளர்க்க முடிவு செய்கிறார் தச்சரான கெபட்டோ. நடக்கத் தெரிந்தவுடனேயே ஓடிப் போய் விடுகிறான் பினாச்சியோ.

தன்னுடைய நெடிய பயணத்தில் ஒரு பொம்ம லாட்டக் குழுவிடமும் ஏமாற்றுக்கார நரி மற்றும் பூனையிடமும் முட்டாள் நகரிலும் சிக்கித் தப்பிக் கிறான் பினாச்சியோ.

ஒரு நாகம், விவசாயி, வித்தியாசமான ஒரு தீவு, கழுதைகளின் நாடு எனப் பல இடங்களில் நன்மை, தீமைகளைக் கண்டுணர்ந்து கடைசியில் திமிங் கலத்தின் வயிற்றுக்குள் சிக்கி, தந்தையையும் மீட்டு, மீண்டு மனிதனாகிறான் பினாச்சியா.

ஒவ்வோரிடத்துக்குச் செல்லும்போதும் ஒவ் வொருவரைச் சந்திக்கும்போதும் பினாச்சியோ பெறும் அனுபவங்கள், அவனுக்கு மேலோரால் உரைக்கப்படும் அறிவுரைகள், அவற்றை மீறும் ஒவ்வொரு தருணத்திலும் ஏற்படும் சிக்கல்கள் எல்லாமும் கலந்து உருவாகியிருக்கிறது நாவல்.

நாவல் தொடங்கும்போதே, மரக்கட்டையை இழைக்கத் தொடங்கும் கெபட்டோவிடம் பினாச்சி யோ கேட்கிறான்- ‘என் உடல் முழுதும் கிச்சுக்கிச்சு மூட்டுகிறீர்களா?’ குழந்தைகளுக்கான மனநிலையும் தொடங்கிவிடுகிறது.

செதுக்கும்போதே பொம்மையின் மூக்கு வளரத் தொடங்குகிறது. வெட்ட, வெட்ட மூக்கு மீண்டும் மீண்டும் வளருகிறது. ஒரு கட்டத்தில் அப்படியே இருக்கட்டும் என கெபட்டோ விட்டு விடுகிறார். பின்னாளில் பினாச்சியோ, பொய் சொல்லும்போதெல்லாம் மூக்கு நீண்டு வளரத் தொடங்கிவிடுகிறது. மரங்கொத்திப் பறவைகளை அழைத்துச் சீரமைக்கச் சொல்லும் அளவுக்கு.

காலியாகக் கிடக்கும் அறைக்குள் நூறு ஆண்டு களுக்கும் மேலாக வசிக்கும் பாச்சைதான் முதன் முதலில் பினாச்சியோவுக்கு (அல்லது பினாச்சியோ போன்ற குழந்தைகளுக்கு) அறிவுரையைத் தொடங்கு கிறது - ‘பெற்றோர்களுக்குக் கீழ்ப்படியாமல் அவர்களை எதிர்த்துத் தான்தோன்றித்தனமாக வாழும் பிள்ளைகள் உருப்படமாட்டார்கள். அவர்களுக்கு ஒரு போதும் நன்மை என்பதே ஏற்படாது.

அவர்களெல்லாம் செய்த தவறுகளை நினைத்துப் பிற்பாடு வருந்த வேண்டி வரும்’. ஆனால், குழந்தையின் எண்ணவோட்டத்தைப் பினாச்சியோ வெளிப்படுத்துகிறான் - ‘படிப்பதை விட சுவாரஸ்யமான எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன... வண்ணத்துப் பூச்சிகளின் பின்னால் ஓடிவிளையாடலாம். மரத்தில் ஏறலாம். பறவைக் கூடுகளிலிருந்து குஞ்சுகளை எடுக்கலாம். இதெல்லாம் பள்ளிக்கூடத்தில் இருக்குமா?’

‘தின்பது, குடிப்பது, தூங்குவது, கேளிக்கை களில் ஈடுபவடுவது, காலை முதல் இரவு வரை விருப்பப்படி நடப்பதுதான் தனக்கு இஷ்டமான வேலை’ என்று கூறும் பினாச்சியோவுக்கு பாச்சை அளிக்கும் பதில், ‘நீ சொல்வது போன்று வாழ்கிற எந்தவொரு மனிதனும் மருத்துவமனைக்குப் போ வான், இல்லையென்றால் சிறைக்குப் போவான்’ என்பது. நாவலில் மற்றோரிடத்திலும் இந்தக் கருத்து மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

பிச்சை எடுப்பவர்கள் எந்தக் காலத்திலும் மதிக்கப் பெறுவதில்லை என்பதுடன் உலகம் முழுவதும் நூறுநூறு ஆண்டுகளாகவும் பணக் காரர்கள் ஒரே மாதிரிதான் இருந்திருக்கிறார்கள் அல்லது ஒரே மாதிரிதான் சித்திரிக்கப்படுகிறார்கள்.

இப்படித்தான், பசிக்கு உணவு கேட்டுச் செல்லும் பினாச்சியோவின் மீது ஒரு பணக்கார முதியவர் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரைக் கொண்டு வந்து கொட்டுகிறார்.

கெபட்டோ கூறுகிறார்: ‘வாழ்க்கையில் நீ எப்படிப்பட்ட சூழ்நிலைகளை எல்லாம் சந்திக்கப் போகிறாயோ தெரியவில்லை. தின்பதற்கு மட்டும் கற்றுக்கொண்டால் போதாது... இந்த உலகத்தில் எல்லாப் பொருள்களும் அவசியமானவைதான்... ஏதாவது ஒன்றை மட்டுமே விரும்பக் கூடாது. பல சுவைகளையும் அனுபவிக்க வேண்டிவரும். என்ன நடக்கப் போகிறது என்று நம்மால் முன்னதாக அறிந்துகொள்ள முடியாது, எது வேண்டுமானாலும் நடக்கலாம்’நாவலின் போக்கைக் குறிப்பாகத் தெரிவித்துவிடுகிறார் கெபட்டோ.

‘நான் ஒரு தொழிலைக் கற்றுக் கொள்வேன். உங்களுக்கு வயதாகும்போது உங்கள் பக்கத்தி லிருந்து உதவி செய்வேன்’ என்ற பினாச்சியோ சபதம் செய்யும்போது, இன்றைக்கும் தந்தையருக்கு ஏற்படுவதைப் போன்றே, கெபட்டோவின் கண்களில் கண்ணீர் நிறைகிறது.

‘ஒருவனைக் கௌரவமிக்கவனாக ஆக்குவது விலை உயர்ந்த ஆடைகள் அல்ல, தூய உடைகளை அணிபவர்கள்தான் கௌரவமானவர்கள்’ என்று கெபட்டோ கூறும்போது, நமக்கு இன்றைய ‘பிராண்டட்’ கும்பல்கள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

இவர்களின் உரையாடலுக்கு ஊடே நாவலாசிரியரின் கருத்தாக இடம்பெறும் வரி - ‘வறுமை மிகவும் கொடுமையானது, வறுமை யென்றால் என்னவென்று குழந்தைகளால்கூட புரிந்துகொள்ள முடியும். இத்தாலியில் பிளாரன்ஸ் பகுதியில் சமையற்காரரான தந்தைக்கும் பணிப் பெண்ணான தாய்க்கும் பிறந்த பத்துப் பிள்ளை களில் மூத்தவர் கார்லோ கொலாடி என்பதும் மதக் கல்வியில் பட்டம் பெற்று, புத்தகக் கடையில் பணிபுரிந்து, இத்தாலிய விடுதலைப் போராட்ட கால பத்திரிகையாளராகச் செயல்பட்ட இவர் தொடங்கிய பத்திரிகை பின்னர் தடை செய்யப் பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது (கொலாடி, திருமணமும் செய்துகொள்ளவில்லை)

கனவு கண்டுகொண்டே செல்லும் பினாச்சி யோவுக்கு ஏற்பட்ட ஒவ்வோர் ஆசையும் முன்னதை விட அழகானதாக இருக்கிறது. குளிர்காலத்தில் மேலங்கியை விற்று அரிச்சுவடியை வாங்கித் தந்த கெபட்டோவைப் பற்றி, ‘தந்தைகளால்தான் இது போன்ற பெரிய தியாகங்களைச் செய்ய முடியும்’ என நினைத்துக் கொள்கிறான் பினாச்சியோ.

பொம்மலாட்டக் குழுவின் உரிமையாளனைப் பற்றிய கொலாடியின் வர்ணனை வித்தியாசமானது - ‘பார்ப்பதற்கு அவன் அசிங்கமாக இருந்தான். கறுப்பு மை கொட்டுவது போல நீண்ட தாடி. அது மிகவும் நீண்டு தரையில் புரளுமளவு வந்துவிட்டது. அது காலில் இடறி அவனைத் தடுமாறச் செய்தது’.

நரி, பூனையின் நட்பைக் கைவிடக் கூறும் வெண்ணிறப் பறவையும் அறிவுரைக்கிறது - ‘கெட்ட நண்பர்களின் பேச்சைக் கேட்காதே! அவை சொல்வதன்படி நடந்தால், கடைசியில் நீ வருத்தப்பட வேண்டியிருக்கும்.’

ஒன்றை இரண்டாகவும் பல மடங்காகவும் மாற்ற முடியுமா? தங்க நாணயங்களை மாற்றிப் பெருக்கித் தருவதாகப் பினாச்சியோவிடம் உறுதி யளிக்கும் நரியும் பூனையும், ‘நாங்கள் மற்றவர் களின் நன்மைக்காகப் பாடுபடுகிறோம். மக்களின் நன்மைக்காகத்தான் எங்கள் வாழ்க்கையையே நாங்கள் அர்ப்பணித்திருக்கிறோம் என்று குறிப்பிடு கின்றன. எங்கேயோ கேட்டதைப் போலவே இருக்கின்ற இந்த வரிகளில், இன்றைக்கும் ஒன்றைப் பத்தாக்குவதாகக் கூறி ஏமாற்றும் ‘பிளேடு கம்பெனி’ களுடைய குரலிலும் அதையே சற்றுக் கருதி மாற்றிச் சொல்லும் அரசியல் வாதிகளின் குரலிலும் உள்ளுறைந்திருக்கும் அதே கபடமே ஒலிக்கிறது.

மின்மினிப் பூச்சியாக வடிவெடுத்துவந்த பாச்சையின் ஆன்மா, ‘உன்னைப் பெரிய பணக் காரன் ஆக்குவதாக யாரேனும் சொல்லியிருக் கிறார்களா, அது வெட்டிப் பேச்சு.  அப்படி ஒரு போதும் நடக்காது. நீ அதை நம்பாதே. அப்படிச் சொல்பவர்கள் பைத்தியக்காரர்களாக இருப் பார்கள். இல்லையென்றால் ஏமாற்றுக்காரர் களாக இருப்பார்கள்’ என்று எச்சரிப்பதுடன், ‘தான்தோன்றித்தனமான பிள்ளைகள் பிற்பாடு தங்கள் தவறுகளுக்காக வருந்த வேண்டியிருக்கும்’ என்ற மறுபடியும் சுட்டிக்காட்டுகிறது.

மரணத்தைவிட மருந்துக்குத்தான் பையன்கள் அதிகம் பயப்படுவதாகத் தெரிவிக்கும் பினாச்சி யோவிடம், ‘தேவையான நேரத்தில் சரியான மருந்து சாப்பிடுவதால் பெரிய நோய்களிடமிருந்து மட்டுமல்ல. சில நேரம் மரணத்திலிருந்தும்கூட நாம் தப்பித்துவிடலாம்’. என்கிறாள் நீலநிறக் கூந்தல் தேவதை.

‘பொய்யைச் சீக்கிரம் கண்டுபிடித்துவிட முடியும். பொய்க்குச் சிறிய கால்களே உள்ளன. அதிக தூரம் ஓட முடியாது’ என்று நீலநிறக் கூந்தல் தேவதை கூற, ‘உடல் உழைப்பால் மட்டும் தான், அல்லது அறிவுத் திறனால் மட்டும்தான் பணம் சம்பாதிக்க முடியும்’ என்கிறது கிளி.

சிறையிலிருந்து விடுபட்டுச் செல்லும்போது, நல்ல விஷயங்களைக் கேட்டு அதன்படி நடப்பவர் களுக்கு நல்லதே நடப்பதை நான் பார்த்திருக்கிறேன் என்று நினைத்துக் கொள்கிறான் பினாச்சியோ. ஆனால், பசிக்காகத் திருடுகிறான். திருடும்போது சிக்கிக்கொள்ளும் பினாச்சியோவிடம், ‘மற்றவர் களின் பொருளை எடுப்பதைப் பசி ஒருபோதும் நியாயப்படுத்திவிட முடியாது’ என்று சுட்டிக் காட்டும் விவசாயி, ‘திராட்சைத் திருடனும் கோழித் திருடனும் சமம்தான்’ என்கிறான்.

பிச்சையெடுக்கத் தயங்கினாலும் பிச்சை கேட்கிறான் பினாச்சியோ. அதே வேளை அவன் அப்பா சொல்வதும் நினைவுக்கு வருகிறது. ‘வயது முதிர்ந்தவர்களோ நோயாளிகளோதான் யாசிக் கலாம். உண்மையில் அவர்கள்தான் பாவப்பட்ட வர்கள். உதவிக்கும் இரக்கத்துக்கும் தகுதியான வர்கள்... பலவீனமானவர்களுக்கும் சேர்ந்து உழைக்க வேண்டியது சக்தியுடையவர்களின் கடமையாகும். உழைப்பதற்கான சக்தியுடைய வர்கள் உழைக்காமல் இருப்பது மிகவும் மோச மானது.’

மீண்டும் சந்திக்கும்போது பினாச்சியோ விடம் நீலக் கூந்தல் தேவதை கூறுகிறாள் - ‘நல்ல பிள்ளைகள் கீழ்ப்படிதல் உள்ளவர்களாக இருப் பார்கள்’.

‘பிள்ளைகள் நல்ல மனதுடையவர்களாக இருந்தால் அவர்களிடம் கெட்ட குணம் இருந்தாலும் கூட அவர்களை நம்பலாம். அவர்கள் என்றாவது நல்ல வழிக்குத் திரும்ப வாய்ப்புள்ளது.

‘எல்லாக் காலமும் படிப்பதற்கு ஏற்ற காலம் தான்’.

‘சோம்பல் என்பது ஓர் உயிர் கொல்லும் நோய். அதைச் சிறுவயதிலேயே குணப்படுத்திவிட வேண்டும். இல்லையென்றால் அது நம் வாழ் வையே மோசமாக்கி விடும்.’

‘நாம் மரியாதையுடனும் அன்புடனும் நடந்து கொண்டால்தான் மற்றவர்களும் நம்மிடம் அவ்வாறு நடந்துகொள்வார்கள்’ - இவை எல்லாமும் பினாச்சியோவுக்கு மட்டுமல்ல.

எந்த நல்ல செயலும் வீண் போவதில்லை என்ற அப்பாவின் சொற்களை நினைத்து உதவும் பினாச்சியோவிடம் அலிடோரா என்ற நாய் கூறுகிறது. ‘இந்த உலகத்திற்கு நாம் என்ன செய் கிறோமோ அதுவே நமக்குத் திருப்பிக் கிடைக்கும்’. அதே நாய், மற்றொரு தருணத்தில் பினாச்சி யோவுக்கு உதவி செய்து காப்பாற்றிய பின், ‘நாம் எல்லோரும் இந்த உலகத்தில் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ வேண்டும்’ என்று கூறி நன்றியை மறுத்துவிடுகிறது.

பள்ளி செல்ல விரும்பாமல் பயணப்படும் பினாச்சியோவிடம், ‘படிப்பதற்குச் சோம்பலுடை யவர்கள், புத்தகம் வாசிக்காதவர்கள், பள்ளிக்குச் செல்லாதவர்கள், ஆசிரியர்களின் பேச்சைக் கேட்டு நடக்காதவர்கள், வெறுமனே வீண்பொழுது போக்கி விளையாடித் திரிபவர்கள் ஆகியோரெல்லாம் பிற்பாடு வேதனைப்பட நேரிடும்... இப்போது நீ எச்சரிக்கையாக இல்லாவிட்டால் பிறகு எதுவும் செய்ய முடியாத அளவுக்குக் காலம் கடந்துவிடும்’ என்கிறது கழுதை. பின்னர் காதுகள் வளர்ந்து பினாச்சியோவே கழுதையானபோது, இதே வரிகளைக் கூறி இப்படித் தான் நடக்கும் என அணிலொன்றும் மறுபடி கூறுகிறது.

கெட்ட நடத்தையுள்ள பிள்ளைகள், நல்ல வழிக்குத் திரும்பும்போது அவர்களின் குடும்பத் துக்கும் நன்மையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்த அவர்களால் முடிகிறது என்கிற அப்பா கெபட் டோவின் வரியுடன் பினாச்சியோவின் பயணம் முற்றுப் பெறுகிறது. திருந்தாத, திருந்த விரும்பாத பினாச்சியோக்கள் இருக்கும் வரை இன்னும் இத்தகைய எத்தனையோ பயணங்கள் நடை பெறலாம்.

முதல் பாதியில் பினாச்சியோவை உருவாக்கிய தந்தையான கெபட்டோவுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தைப் பிற்பாதியில், நீலநிற தேவதைக்கு வழங்கி விடுகிறார் கார்லோ கொலாடி. நிறைவில் அந்தத் தேவதையின் உதவியாலேயே மரக்கட்டை நிலையிலிருந்து நிஜ மனிதனாகவும் உருமாறி நல் வாழ்வையும் பெறுகிறான் பினாச்சியோ. நாவலின் ஒற்றை வரி - ‘பெரியோர் சொல் தட்டாதே’ என்று கூறலாம்.

இந்த நாவலைத் தழுவி, பின்னர் நிறைய கதைகள் உருவாகியிருக்கின்றன, நிறைய திரைப் படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன அல்லது திரைப்படங்களில், நாடகங்களில் ஓரங்கமாக பினாச்சியோ தோன்றி வந்திருக்கிறான். பினாச்சி யோவை மேம்படுத்தி முழு நீளத் திரைப்படத் தையும் எடுத்தது வால்ட் டிஸ்னி நிறுவனம்.

‘நான் புதிதாய்ப் பிறந்தால் நன்றாக இருக்குமே! அப்போது எல்லாவற்றையும் ஒழுங்காகச் செய் வேன்’ என்று ஓரிடத்தில் நினைப்பான் பினாச்சியோ. நம்மில் பலருக்கும்கூட அவ்வப்போது அப்படித் தான் தோன்றுகிறது. ஆனால், நடப்பதில்லை.

‘பொம்மைகள் வளர்வதில்லை. அவை பொம்மைகளாகப் பிறந்து பொம்மைகளாக வாழ்ந்து முடிந்துவிடும்’ என்கிறாள் நீலக் கூந்தல் தேவதை. ஆனால், மனிதர்கள்? உள்ளபடியே நாவல் எழுப்பும் கேள்வி இதுதான்.

குழந்தைகளுக்கான இந்த நாவலின் மொழி நடையைச் சிறப்பாகவே தமிழில் கொண்டு வந்திருக்கிறது யூமா.வாசுகியின் மொழிபெயர்ப்பு. உடன், அவர் மொழிபெயர்க்கத் தெரிவு செய்து கொண்ட பிரதியும். குழந்தைகளுக்கான நாவல் என்றே கூறப்பட்டு வந்தாலும் பெரியவர்களும் அவசியம் படிக்க வேண்டியது இந்த மரப்பொம்மை, அல்ல, பினாச்சியோவின் பயணம்!

Pin It