muslim youth

உலகமயமாக்கம் என்கிற ஒற்றை அதிகாரத்தின் கீழ் உள்ளடுங்கும் மண்சார்ந்த அடையாளங்களை மீட்டெடுக்க வேண்டிய கடப்பாட்டில் இளைஞர்களின் பங்கு மிக முக்கியமானது. இத்தகைய சூழலில் மொழி, இனம், சமயம் என்று பலவற்றில் தங்களை அடையாளப் படுத்திக் கொள்ளும் மக்கள் சூழல் சார்ந்து இந்த அடையாளங்களை முன்னெடுக்கின்றனரா அல்லது எந்தச் சூழலும் தன்னுடைய அடையாளங்களைப் பாதிக்காதவாறு அவற்றை நிலைநிறுத்துகின்றனரா என்பது குறித்த உரையாடல் அவசியம். தமிழக இஸ்லாமியர்களை மையமாக வைத்து அச்சமூகத்து இளைஞர்கள் முன்னெடுக்கும் அடையாள அரசியலையும் அதனைச் சமகாலத் தமிழ் ஆக்கங்கள் எவ்வாறு பதிவு செய்கின்றன என்பதையும் குறித்து இக்கட்டுரை அமைகின்றது. தோப்பில் முகம்மது மீரான், ஜாகிர் ராஜா, மீரான் மைதீன், இன்குலாப், பிர்தவ்ஸ் ராஜகுமாரன் முதலிய இஸ்லாமியர்களின் படைப்புக்கள் ஆய்வுக்களமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

‘தமிழ் முஸ்லிம்’ என்னும் சொல் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இஸ்லாமியர்களைக் குறிக்கும் சொல்லாகப் புழங்கப்பட்டு வருகின்றது. இவர்கள் இஸ்லாமிய மதத்தைத் தழுவிய தமிழர்கள். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் அரபு நாட்டில் உருவான இஸ்லாமிய சமயம் உலக நாடுகள் முழுவதும் பரவியது. இறைநேசர்கள் வழியாகவும் அரபு வணிகர்களுடன் ஏற்பட்ட தொடர்பின் மூலமாகவும் தமிழகத்தில் இஸ்லாம் பரவியது. இவ்வாறு இங்குள்ள தமிழர்கள் இஸ்லாமியர்களாக்கப்பட்ட பின்பு இவர்கள் தமிழர்கள் எனும் அடையாளத்தை இழக்க நேரிடுகின்றது. இந்த அடையாள இழப்பு சமய அடையாளத்தை முன்னெடுக்கும் போது நிகழக்கூடியது. இந்திய முஸ்லிம்களிடையே அடையாள நெருக்கடிச் சூழல் மூன்று கால கட்டங்களில் நிகழ்வதாக அ.மார்க்ஸ் குறிப்பிடுகின்றார் (பே.சாந்தி, 2006: 8-9).

-     1857க்குப் பிந்தைய ஆளுகை மாற்றங்களின் விளைவாக இந்திய முஸ்லிம்கள் அரசியலதிகார இழப்பு, உலக அளவில் ஆட்டோமன் பேரரசின் சிதைவு, இந்தியாவில் காலனி ஆட்சி உருவாக்கிய மாற்றங்கள், ஆங்கிலக் கல்வி, புதிய நீதிமன்றங்கள், சட்டத் தொகுப்புகள், கல்வி முறை ஆகியன.

-     1947இல் நிகழ்ந்த பாகிஸ்தான் பிரிவினை, அதை ஒட்டிய மதக்கலவரங்கள், இஸ்லாமியர்கள் இரண்டாம் தரக்குடிமக்களாக மாற்றப்படுதல், 1960வாக்கில் நிகழ்ந்த வகுப்புக் கலவரங்கள் முதலியன.

-     1992இல் பாபர் மசூதி இடிப்பு அதைத் தொடர்ந்த கலவரங்கள், இஸ்லாமியர்கள் மீது நிகழ்த்தப் பட்ட வன்முறைகள் முதலியன.

இத்தகைய பின்புலத்தில் இஸ்லாமியர்கள் உலகப் பொதுக்கலாச்சாரத்திற்குள் தங்களை இனம்காண வேண்டிய தேவைக்கு நிர்பந்திக்கப்பட்டனர். எனவே மொழி அடையாள முன்னெடுப்பு என்பதை விட சமய அடையாள முன்னெடுப்பு அன்றைய காலத் தேவையாக இருந்தது.

தென்னிந்தியப் பகுதியில் குறிப்பாக தமிழகத்தில் இஸ்லாமியர்கள் இந்த சமய அடையாளத்தை முன்னிறுத்தினரா என்று காணும் போது இரண்டு வகையான தன்மைகளைக் காணமுடிகின்றது. அடிப்படையில் தமிழர்கள் என்னும் சிந்தனை கொண்டவர்களாகவும் உலகப் பொதுக்கலாச்சாரத் தோடு முழுவதும் இயைந்து போகாதவர்களாகவும் ஒரு பிரிவினர் இருக்கின்றனர். மற்றொரு பிரிவினர் சமய அடையாளத்தை மட்டும் முன்னிறுத்துபவர்களாக உலக இஸ்லாமியச் சமூகத்தோடு தன்னை இணைத்துக் கொள்ள விரும்புகின்றவர்களாக உள்ளனர். இந்த அடையாளச் சிக்கலுக்குள் வினைபுரிபவர்களாக இளைஞர்களே உள்ளனர். இவை குறித்த பதிவுகள் சமகாலப் படைப்புகளில் மிகுதியாக உள்ளன.

தமிழகத்தில் வாழும் இஸ்லாமியர்களில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் உருது மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் உள்ளனர். இவர்களில் தமிழ் அடையாளங்களை முன்னிறுத்தும் தமிழ் முஸ்லிம்கள் பெரும்பாலும் சமய எல்லைக்கு வெளியிலேயே இனங்காணப்படுகின்றனர். இன்குலாபின் ‘பாலையில் ஒரு சுனை’ எனும் தொகுப்பில் ‘மதம்’ என்னும் கதையில் “இந்தத் தம்பிளப்பயலுகளுக்குப் பொறாமை”(1992: 127) என்று குறிப்பிடுவதில் தம்பிளப் பயல் எனும் சொல் தமிழ் பேசுபவன் என்ற பொருளுடையது. இதில் இந்துச் சமூகத்தினரைக் கூறப் பயன்படுத்தும் வசவுச் சொல்லாக இது கூறப்படுகின்றது. எனில் தமிழைப் பேசும் இஸ்லாமியர்களையும் அவர்கள் இந்துக்களாகவே அடையாளம் காண்கின்றனர் என்று விளங்கிக் கொள்ள முடிகிறது. இந்த மதிப்பீட்டை உருது பேசும் இஸ்லாமியர்களே உருவாக்கி இருக்க முடியும். எனவே தமிழ் அடையாளம் என்பது தமிழ் பேசும் இஸ்லாமியர்களை சமய அடையாள இழப்பிற்கு இட்டுச் செல்கிறது. எனினும் சமயம் தாண்டி தமிழ் மொழி மீது அவர்கள் கொண்ட பற்றைச் சில படைப்புகள் சித்திரிக்கின்றன. ஜாகிர் ராஜாவின் ‘துருக்கித் தொப்பி’ எனும் நாவலில் அத்தாவுல்லா என்பவன் திராவிட அரசியல் பற்றுள்ளவனாகவும் தமிழை முன்னிறுத்தும் இளைஞனாகவும் உள்ளான். படிக்கின்ற காலத்து இந்தி வகுப்புகளை நிராகரிப் பவனாகவும் அத்தாவுல்லா என்னும் தமிழல்லாத தன்னுடைய பெயரில் அதிருப்தி உடையவனாகவும் காட்டப்படுகின்றான். இதற்கு திராவிட அரசியல் ஈடுபாடு ஒரு காரணமாகச் சொல்லப்பட்டாலும் அந்த அரசியலுக்கான ஈடுபாட்டை மொழியே கொடுக் கின்றது என்று விளங்கிக் கொள்ளலாம்.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இஸ்லா மியர்கள் மொழி அடையாளத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை என்ன என்று காண்பதற்கு முன் அவர்கள் தமிழ் அடையாளமாக எவற்றையெல்லாம் முன்வைக்கின்றனர் என்பதைக் காணவேண்டும். தமிழ் என்பது மொழியையும் மொழி சார் பண்பாட்டையும் உள்ளடக்கிய ஒன்று என்கிற அடிப்படையில் அவர்கள் முன்னிறுத்தும் அடையாளங்களாவன,

-     மொழியைத் தன்னுடைய அடையாளமாகக் கொள்ளுதல்

-     தமிழ்மண் சார்ந்த சடங்குகளைப் பின்பற்றுதல்

-     தமிழ்ப்பண்பாட்டிற்குரிய கதையாடல்களைப் பேணிக்காத்தல்

-     தமிழ்மொழிக் கல்வி, தமிழ் இலக்கிய ஈடுபாடு

-     சமய நடவடிக்கைகளில் தமிழ்க்கூறுகளை உள்ளடக்கிக் கொள்ளுதல்

மேற்கூறப்பட்ட பண்புகள் தமிழ் முஸ்லிம் களிடையே மிக இயல்பாகவே உள்ளன. இஸ்லாமிய அடிப்படைகளில் இல்லாத பலவற்றை அவர்கள் தன் அன்றாட வாழ்வில் பின்பற்றக்கூடியவர்களாக உள்ளனர். இஸ்லாமியர்களின் வாழ்க்கை வட்டச் சடங்குகள் பல தமிழ்ப் பண்பாட்டிற்குரியவை. திருமண நிகழ்வில் கருகமணி அணிதல், வளைகாப்பு, பிள்ளைக்கு காது குத்துதல் சடங்கு, மயிர் நீக்குதல், பெண்பூப்புச் சடங்கு முதலிய பலவும் இங்குள்ள பண்பாட்டின் தாக்கமாகவே உள்ளது. திருமணம் முதல் இறப்பு வரை பின்பற்றக் கூடிய சடங்குகளில் தமிழ்ப்பண்பாட்டுத்தாக்கம் உள்ளது. தோப்பில் முகம்மது மீரான் கதைகளில் இத்தகைய கூறுகள் மிகுந்து காணப்படுகின்றன. ஜாகிர் ராஜாவின் துருக்கித் தொப்பி என்னும் நாவலில் அத்தாவுல்லாவின் மகனுக்கு நாகூர் ஆண்டகையின் சன்னதியில் மயிர்மழிப்பு என்னும் சடங்கு நிகழ்த்தப் படுகிறது. இது போன்ற பல சடங்குகளும் பின்பற்றப் படுகின்றன. இதனை இளைஞர்கள் எவ்வாறு எதிர் கொள்கின்றனர் என்பது முக்கியம். இந்தப் பண்பாட்டைப் பின்பற்றுபவர்களும் எதிர்ப்பவர்களும் உள்ளனர். எதிர்க்கும் இளைஞர்கள் என்ன அரசியல் நிலைப் பாட்டைக் கொண்டவர்கள் என்பதைப் பின்னர் காணலாம்.

இஸ்லாமியர்களின் அதியக்கதையாடல்கள் குர்ஆன் மற்றும் ஹதீதுகளிலிருந்து சொல்லப்படுபவை. வாய்மொழி வழக்காற்றுத் தன்மையோடு இவை காலங்காலமாகச் சொல்லப்பட்டு வருகின்றன. தமிழக இஸ்லாமிய மக்களிடையேயும் இது போன்ற கதையாடல்கள் உள்ளன. இவை இங்கு வாழ்ந்த சூபிகள் எனப்படும் இறைநேசர்கள் குறித்தவை. அவற்றில் தக்கலை பீர்முகம்மது, நாகூர் சாகுல் ஹமீது, காயல்பட்டணம் சதக்கத்துல்லா அப்பா முதலிய பலரைப்பற்றிய அதியக் கதையாடல்கள் உள்ளன. இவை தமிழ் மண்ணிற்குரிய கதையாடல்களாகவே உள்ளன.

நெசவுத்தொழில் புரிந்து வந்த பீர்முகம்மது அப்பாவைப் பற்றிய கதையாடல்களை தோப்பில் முகம்மது மீரானின் ‘அஞ்சுவண்ணம் தெரு’ நாவல் மிக விரிவாகச் சித்திரிக் கின்றது. தங்களை அடிமைப்படுத்தும் ஆதிக்கச் சமூகத்திற்கு எதிரான போராட்ட வரலாறாகவே இவை உள்ளன. இவை தமிழ் மண்ணிற்குரிய அண்ணன்மார் சாமி கதை, மதுரை வீரன் கதை முதலியவற்றை நினைவு கூர்வனவாக உள்ளன. இது போன்ற கதையாடல்களைக் கேட்டுப் பழகிய மக்களுக்கு இஸ்லாமியப் பின்புலத் தோடு கூடிய அதியக்கதையாடல்களையும் தன்னுடைய மண்சார்ந்த பண்பாட்டோடு ஏற்றுக்கொள்ள முடிந்தது. எச்.முஜீப் ரஹ்மான் எழுதிய ‘உப்பாவைச் சொல்லும் கதை’ எனும் கதையில் தன்னுடைய மூதாதையரைப் பற்றிப் பெருமிதம் அடையும் இளைஞனாகக் கதை மாந்தன் கதை முழுதும் உரையாடுகின்றான். காலங் கடந்து நினைக்கப்படும் தன் உப்பாவைப் பற்றிய பெருமைகளைச் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதுகளி லெல்லாம் பேசுபவனாகவும் வாய்ப்பு கிடைக்காத போது கண்ணாடி முன்பு நின்று உப்பாவைப்பற்றிச் சொல்லுபவனாகவும் கதைமாந்தன் உள்ளான். முந்தைய சமூகத்தை நினைவுகூறும் இளைஞனாகக் காட்டும் இக்கதை பின்நவீனத்துவ அமைப்பில் அமைந்துள்ளது.

ஆங்கிலேயக் கல்வி முறை அறிமுகமாவதற்கு முன்பு இஸ்லாமியர்களிடையே மார்க்கக் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. ஆங்கிலக் கல்வி முறை காலனியச் சூழலில் வேலைவாய்ப்புகளுக்கான அடிப் படையாக அமைந்தது. மற்ற சமூகங்களிடையே இக்கல்வி முறை ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவிற்கு இஸ்லாம் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இது இஸ்லாத்திற்கு எதிரான கல்வி என்கிற கருத்துநிலை இஸ்லாமியர்களிடையே நிலவிவந்தது. ஆங்கிலக் கல்வியை கிறித்தவப்பண்பாட்டுக் கற்பித்தல் முறை யாகவே அவர்கள் பார்த்தனர். இதைக் கற்பதன் மூலம் தன்னுடைய சமயப் பண்பாடு சீரழிந்துவிடும் என்கிற மனநிலை கொண்டவர்களாக இருந்தனர். இதனை தோப்பில் முகம்மது மீரானின் துறைமுகம் எனும் நாவல் சித்திரிக்கின்றது. இத்தகைய கல்விமுறை எதிர்க்கப்படுவதன் மூலம் ஏற்படும் முதல் விளைவு இளைஞர்களுக்கான வேலையின்மை. இதனை இஸ்லாமிய சமூகத்து இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதன்மூலம் நிவர்த்தி செய்து கொள்கின்றனர்.

வெளிநாட்டு வேலைகளுக்குக் கல்வி அடிப்படைத் தகுதியாகக் கொள்ளப்படவில்லை. அதே சமயம் இவர்கள் உடலுழைப்பு சார்ந்த வேலைகளைச் செய்பவர்களாகவே இருந்தனர். இது குறித்து மீரான் மைதீனின் ‘ஓதி எறியப்படாத முட்டைகள்’ என்னும் நாவல் விளக்குகின்றது. சுதந்திரத்திற்குப் பின்பு கல்வியில் ஓரளவு முன்னேறியவர்களாக விளங்கினர். தாங்கள் பெற்ற கல்விக்குரிய வேலை வாய்ப்புடையவர் களாக இளைஞர்கள் விளங்கினர். இருப்பினும் இன்று வரை வெளிநாட்டிற்குச் சென்று இளைஞர்கள் வேலை பார்த்தல் என்பது குறைந்தபாடில்லை. ஆங்கிலேயக் கல்வி அடிப்படையில் வழங்கப்பட்ட மொழிக் கல்வியை சமய அடையாளம் சாராமல் எதிர் கொண்டனரா என்பது கேள்விக்குறி. தமிழ் நூல்களைக் கற்பது குறித்து எத்தகைய மனநிலை உடையவர்களாக இஸ்லாமியர்கள் இருந்தனர் என்பதை ஜாகிர் ராஜாவின் ‘சக்கிலி மந்தை’ எனும் சிறுகதை சித்திரிக்கின்றது. இதில் கதை மாந்தன் நூலகம் செல்பவனாகவும் தமிழ் நூல்களைப் படிப்பவனாகவும் காட்டப்படுகின்றான். “நீ என்ன இஸ்லாமான புள்ளயாவா இருக்கே. உன் வயசுல முப்பது ஜூசும் ஓதி மனப்பாடமாக்கிட்டேன். நீ ரவ்வெல்லாங் கண்ணு முழிச்சு கண்ட பெலாய்ங்கள படிக்கிற” (2007: 27) என்று அந்த இளைஞனைக் குறிப்பிடும் போது அவன் ஜெயகாந்தன் சிறுகதைத் தொகுப்பைக் கையில் வைத்துள்ளான். எனவே இளைஞர்கள் தமிழ் இலக்கியங்களை விரும்பிப் படிப்பவர்களாகவும் அதற்கான அரசியல் பின்புலத் தோடு இயங்குபவர்களாகவும் புனைகதைகளில் காட்டப்படுகின்றனர்.

முந்தைய தலைமுறையினர் காங்கிரஸ் கட்சி ஈடுபாட்டாளர்களாகவும் திராவிடக் கொள்கைகளை ஏற்காதவர்களாகவும் காட்டப்படு கின்றனர். இத்தகைய மனநிலைக்கு சமயம் ஒரு காரணம். திராவிடக்கட்சி நாத்திகத்தை முன்னிறுத்தக் கூடியது என்று அவர்கள் கருதினர். ஆனால் இளந் தலைமுறையினர் பலர் திராவிடக்கட்சியில் ஈடுபட்ட வர்களாக உள்ளனர். சமயம் தாண்டிய மொழி அடை யாளத்தை இத்தகைய நிலைப்பாடு விளக்குகின்றது.

இஸ்லாத்திற்காக வாழ்ந்து உயிர் நீத்த இறை நேசர்களின் அடக்கத் தலங்கள் தர்காவாக மாற்றப் படுகின்றன. இந்த தர்கா கலாச்சாரம் குறித்த பல்வேறு மாற்றுச் சிந்தனைகள் தோன்றிவிட்ட சூழலிலும் இன்றும் இப்பண்பாடு பின்பற்றப்பட்டு வருகின்றது. தர்கா பண்பாடு தமிழ்மண்ணின் வீர வழிபாட்டோடு ஒப்புநோக்கத்தக்கது. இஸ்லாம் சமயத்திற்காகவும் இஸ்லாமிய மக்களுக்காகவும் போராடி மாண்டு போனவர்களின் நினைவாக எழுப்பப்படுவது. இஸ்லாமியர் களும் இஸ்லாமியர் அல்லாதவர்களும் செல்லும் இடமாக இது உள்ளது. இங்கு விழாக்கள் எடுக்கப் படுகின்றன, இறைநேசர்களின் பாடல்கள் பாடப்படு கின்றன, உணவு பகிர்ந்தளிக்கப்படுகின்றன, மேல்கீழ் என்னும் ஏற்றத்தாழ்வு இன்றி சமமாகப் பாவிக்கப்படு கின்றனர்.

தோப்பில் முகம்மது மீரானின் ‘அஞ்சுவண்ணம் தெரு’ நாவல் இந்த தர்கா பண்பாட்டை விரிவாக விளக்குகின்றது. ஜாகிர் ராஜா ‘மீன்காரத்தெரு’ எனும் நாவலில் ஒடுக்கப்பட்ட சமூகத்துப் பெண்ணுக்காக எழுப்பப்படும் அடக்கத்தலம் எவ்வாறு தர்காவாக மாற்றப்படுகிறது என்பது குறித்துப் பேசியுள்ளார். அஞ்சுவண்ணம் தெரு நாவலில் மஹ்மூதப்பா தர்காவை இளைஞர்கள் சிலர் பாதுகாக்க நினைப்பதாகக் காட்டியுள்ளார். இதனால் உருவாகும் கலவரங்களில் பாதிக்கப்படுபவர்களாகவும் இளைஞர்களே உள்ளனர். இவ்வாறு தன்னுடைய பண்பாட்டுச் சின்னங்களைப் பாதுகாப்பதில் இளைஞர்கள் அக்கறை காட்டுவதாக நாவல் அமைந்துள்ளது. கிராமப் பகுதிகளில் இளைஞர் நற்பணி மன்றங்கள் அமைக்கப்பட்டு பல்வேறு அரசியல் நடவடிக்கைளிலும் முன்னேற்றத் திட்ட நடவடிக்கைகளிலும் இளைஞர்கள் ஈடுபடுவதாகப் பல கதைகள் உள்ளன. ‘சக்கிலி மந்தை’ எனும் கதையில் “ஒழுங்கான மனுஷன் ஒருத்தனும் இதை எதுக்க மாட்டான்ல. சமூக சேவ வெங்காய சேவைன்னு மன்றம் வச்சு அலையிற பொடிப்பசங்க தான் சாவடியில கத்திக்கிட்டிருப்பானுங்க. வேற சம்சாரி எவனும் எதுக்க மாட்டான்ல” (2007: 28) என்று சமூக அவலங்களுக்கு இளைஞர்களே குரல் கொடுப்பார்கள் என்பதைக் குறிப்பிடுகின்றார்.

இயற்கைப் பொருட்களைத் தன்வாழ்வின் அங்க மாகக் கருதுவதும் அவற்றை வழிபடுவதும் தமிழ்ப் பண்பாட்டில் மிகுந்து காணப்படுகின்றது. இஸ்லாமியர் களின் கதைகளில் இத்தகைய பண்பு காணப்படுகின்றது. குளத்தையும் கடலையும் தாயாகப் பார்ப்பதும் மரம் செடிகளில் இறந்தவர்களின் பண்பைப் புகுத்திச் சொல்வதுமான கதைகள் உள்ளன. இயற்கையோடு வாழும் வாழ்வை நகரமயமாக்கம் சிதைப்பதை தோப்பிலின் சிறுகதைகள் பேசுகின்றன. வேலை காரணமாக நகரங்களுக்குச் செல்லும் இளைஞர்கள் தன்னுடைய மண்சார்ந்த வாழ்வை இழந்துவிடுவ தாகவும் அவற்றைத் தேடி மீண்டும் சொந்த ஊருக்கு வரும்போது அந்த கிராமங்கள் நகரமயமாக்கத்திற்குள் சிக்கிசீரழிந்து கிடப்பதையும் பார்க்கின்றனர். தன்னுடைய பண்பாட்டு எல்லைக்குள் மிக சந்தோஷமாக வாழும் இளைஞர்கள் வேலை காரணமாக எல்லைக்கு வெளியில் தள்ளப்படும் போது எதையோ இழந்துவிடுவதாக உணர்கின்றனர். வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இஸ்லாமிய இளைஞர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களில் இதுவும் ஒன்று. இதனை ஜாகிர் ராஜாவின் ‘வெம்மை’ எனும் சிறுகதை விளக்குகின்றது.

தமிழையும் தமிழ்சார்ந்த பண்பாட்டையும் முன்னிறுத்தும் இஸ்லாமியர்கள் குறித்த பதிவுகள் படைப்புகளில் காணப்படுவதைப் போல சமய அடையாளத்தை முன்னிறுத்தும் மக்கள் குறித்த பதிவு களும் உள்ளன. இவர்கள் மொழி அடையாளத்திற்கு எதிராக சமய அடையாளத்தை முன்னெடுக்கின்றனர். இவர்களுக்கும் மொழி அடயாளத்தை முன்னெடுப்பவர் களுக்கும் அடிப்படையில் பல வேறுபாடுகள் உள்ளன. இது இவர்தம் சமய நிலைப்பாட்டைச் சுட்டுவதோடு அரசியல் நிலைப்பாட்டையும் விளக்கவல்லது.

இஸ்லாமியர்களிடையே பல்வேறு மூடநம்பிக் கைகள் உள்ளதாகவும் இந்துக்கலாச்சார உள்வாங்கல்கள் உள்ளதாகவும் கூறி அவற்றை எதிர்த்துத் தூய்மைவாதம் பேசியவர்கள் சமய அடையாளத்தை முன்னெடுத்த வர்கள். இவர்கள் வகாபியக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள். கி.பி.பதினெட்டாம் நூற்றாண்டில் அரபு நாட்டில் நஜ்து என்னும் பகுதியில் பிறந்தவர் முகம்மது இப்னு அப்துல் வகாப். இவர் அப்பகுதியில் நிலவிய உள்ளூர்க்கலாச்சாரங்களால் இஸ்லாம் தீட்டுப்பட்டு விட்டதாகக் கூறினார். அடக்கத்தலங் களை வழிபடுவது இறைவனுக்கு இணைவைத்தல் என்று கூறி நபிமார்களின், இறைநேசர்களின் அடக்கத் தலங்களை இடிக்கக் கூறியவர். இவருடைய தலைமையில் வகாபியக் கொள்கை உலகமெங்கும் பரவியது. உலகின் எல்லாப் பகுதியிலும் உள்நாட்டுக் கலாச்சாரத் தாக்கம் அற்ற தூய்மையான இஸ்லாமித்தை உருவாக்க வேண்டும் என்பதே இவர்களின் கொள்கை. இதனால் அந்தந்த மண்ணுக்குரிய பண்பாட்டு எச்சங்களை முற்றிலும் அழிக்க வேண்டும் என்னும் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இக்கொள்கை இளைஞர்களிடமே மிகவேகமாகப் பரவியது.

அரபு நாடுகளுக்குச் சென்று வேலை செய்து திரும்பும் இளைஞர்கள் அங்குள்ள கலாச்சாரங்களைப் பார்த்துப் பழகி இங்கு வரும்போது அதையே எதிர்பார்க்கின்றனர். அஞ்சுவண்ணம் தெரு என்னும் நாவலில் அரபு நாட்டிற்கு வேலைக்குச் சென்று திரும்பும் இளைஞன் வகாபியம் என்னும் தூய்மைவாதக் கொள்கையினை ஊருக்குள் பரப்பத் தொடங்குகின்றான். இதனால் பாரம்பரியமாகப் பேணப்பட்டு வரும் மஹ்மூதப்பா தர்கா அழிக்கப்படுகின்றது. ஊருக்குள் பல கலவரங்கள் ஏற்படுகின்றன. ஆனால் இக்கொள்கை பற்றி அறியாத பல இளைஞர்களும் போலீசாரால் கைது செய்யப்பட்டு பாதிக்கப்படுகின்றனர். பழந்தர்காக்களை இடிப்பதும் இறைநேசர்களின் பாடல்களைக் கொளுத்து வதும் பழைய அமைப்பிலான பள்ளிவாசல்களை இடிப்பதும் இக்கொள்கை பரப்பும் இளைஞர்களின் செயல்பாடுகளாகக் காட்டப்பட்டுள்ளன. இதில் புதியதாகக் கட்டப்படும் பள்ளிவாசல்கள் அரபுநாட்டு பாணியிலானவை என்னும் செய்தி உள்ளது. நமக்கிருந்த கட்டிடக்கலைத் திறனை அழித்து அரபு நாட்டு கட்டிடக்கலையினை இங்கு நிறுவ முயலுவதை நம்முடைய அடையாள அழிப்பு நடவடிக்கையாகவே உணரமுடிகின்றது.

பரங்கியர்களுக்கு எதிராக இஸ்லாமியர்களுக்காகப் போராடிய மரைக்காயர் தர்காவை இடித்தது குறித்துப் பேசும்போது, “அந்த பசங்கள் மதத்துக்கப் பேரால் இடித்து அடையாளம் தெரியாமலாக்கினது கற்களால் கட்டப்பட்ட கபர்களையல்ல, அந்நிய ஆதிக்க சக்திகளுக்கு எதிராக நாம் செய்த போராட்ட வரலாற்றுப் பக்கங்களை. இந்த மண்ணிற்காக உயிர் தந்த சுஹதாக்களின் வீர காப்பியங்களை அடுத்த தலைமுறைக்குக் கைமாறாமல் கிழித்துவிட்டனர். வேரற்ற ஒரு சமுதாயம் தான் இனி வளர்ந்து வரும். சயனிஸ்டுகள் போட்டுக்கொடுத்த முடிச்சுகள்” (2008: 130). இவர்களின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு அரபுநாட்டிலிருந்து ஏராளமான பணம் வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

தூய்மைவாதம் பேசுபவர்கள் தமிழ்ப் பண்பாட்டை இந்துப்பண்பாடாகவே மதிப்பிடுகின்றனர். தன்னுடைய சமயத்திற்கு எதிரான இந்துச் சமயக் கூறுகளாகவே தர்கா பண்பாட்டைக் கருதுகின்றனர். இப்பண்பாட்டைப் பேணுவதை இஸ்லாமிய அடிப்படைக்கு எதிரான ஒன்றாகச் சித்திரிக்கின்றனர். மேலும் மதத்தின் பேரால் புரோகிதர்கள் சம்பாதிப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர். இங்கு கடைபிடிக்கப்படும் சடங்குகளால் புரோகிதர் களுக்கு மட்டுமே நன்மை அடைவர் என்றும் இவர்கள் தங்களுடைய விருப்பத்திற்கேற்ப குர்ஆன் வாசகங்களை மாற்றிப் பொருள் கொள்கின்றனர் என்றும் குறிப்பிடு கின்றனர். இதனை பிர்தவ்ஸ் ராஜகுமாரனின் படைப்புகள் மையப்படுத்துகின்றன. தர்கா கலாச்சாரம் என்பது இறைநேசர்களின் வழித்தோன்றல்கள் பணம் சம்பாதிப்பதற்காக உருவாக்கிய இடம் என்று ‘நேர்ச்சை’ என்னும் சிறுகதையில் குறிப்பிடுகின்றார். ஆங்கிலக் கல்வி என்பது பாரமாக உள்ளது என்பதை ‘பாரம்’ என்னும் சிறுகதையில் பேசியுள்ளார். ஆங்கிலக் கல்வி மீது மக்கள் மோகம் கொண்டுள்ளனர் என்றும் இது மாணவர்களுக்கு பெருஞ்சுமையாக உள்ளது என்றும் கூறவிழைவதின் நோக்கம் மார்க்கக் கல்விக்கு எதிரான கல்வியாக அதனைக் கருவது என்றே புரிந்து கொள்ள முடிகிறது.

தூய்மைவாதம் பேசுபவர்களுக்கும் மண்சார்ந்த அடையாளங்களைப் பேணுபவர்களுக்கும் உள்ள முரண் சமயத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதா என்று காண்பது அவசியம். இஸ்லாத்திற்குள் காணப் படும் பிற பண்பாட்டுத் தாக்கத்திற்கு யார் காரணம் என்று தூய்மைவாதம் பேசுபவர்கள் கூறும்போது, “தெளிவான இஸ்லாமிய அறிவில்லா முஸ்லிம்களால், சாதி மற்றும் சமூகக் கொடுமைக்கு பயந்து பிறந்த மதத்தை கைவிட்டு இஸ்லாத்தில் அடைக்கலம் புகுந்த பிறகும் தங்களின் மூதாதையரின் வணக்க வழிபாடுகளை முழுவதும் விட்டொழிக்க முடியாதவர்களால்” (பிறைநதிபுரத்தான், 2004) என்று குறிப்பிடுகின்றனர். இவர்கள் முன்வைக்கும் பிரச்சினை சமயச்சிக்கல் சார்ந்தது என்பதைவிட சாதியச் சிக்கல் சார்ந்ததாகவே உள்ளது. எனவே அடித்தட்டு சமூக மக்களே இத்தகைய பண்பாட்டைப் பேணுபவர்களாக உள்ளனர் என்று குறிப்பிடுகின்றனர். இதனை தோப்பில் முகம்மது மீரானின் அஞ்சுவண்ணம் தெரு நாவல் விளக்குகின்றது. மஹ்மூதப்பா தர்காவை வழிபடுவோர் அஞ்சுவண்ணத் தெரு மக்களே. இம்மக்கள் யார்? எவ்வாறு இங்கு குடியமர்த்தப்படுகின்றனர் என்பது குறித்த விரிவான வரலாறு கதைக்குள் பேசப்படுகின்றது.

மொழிசார்ந்த பண்பாட்டைப் புறந்தள்ளச் சொல்லும் தூய்மைவாதிகளின் நோக்கம் என்ன என்று காண்பது அவசியம். தூய்மைவாதம் என்பது சமய நிறுவனப்படுத்த முயற்சியாகும். இது மேல்தட்டு வர்க்கத்தினரின் சமய நடவடிக்கைகளை மட்டுமே அங்கீகரிக்கும். உள்ளூர் கலாச்சாரங்களைப் புறந்தள்ளி விட்டு பொதுமையான அடையாளத்திற்குள் தன்னை இணக்கப்படுத்திக் கொள்ளும். இதனைக் குறித்து ஹெச்.ஜி.ரசூல் குறிப்பிடும்போது, “தர்கா கலாச் சாரத்தைப் பின்பற்றும் அடித்தட்டு முஸ்லிம்களை இழிந்தவர்களாக, காபிர்களாக, பித்அத்துகளை மேற்கொள்பவர்களாகக் கருதுவது தௌகீது பிராமணி யத்தைக் கட்டமைக்கும் வகாபிகளின் நவீனத் தீண்டாமைப் பார்வையாகவும் உள்ளது” (2010: 10). வகாபியக் கொள்கைகளை முன்னிறுத்துபவர்கள் மேல்தட்டுவர்க்கத்தினராக உள்ளனர் என்பது இதன்வழி அறிய முடிகின்றது. இக்கொள்கையை நிலைநாட்டும் படைப்புக்களை எழுதும் பிர்தவ்ஸ் ராஜகுமாரன் படைப்புக்களில் மேல்தட்டு மக்களே உலவி வருகின்றனர்.

சமய அடையாளத்தை முன்னெடுப்பவர்கள் மொழி அடையாளத்தைப் புறந்தள்ளக் கூடிய மேட்டிமைச் சமூகத்தினராக உள்ளனர் என்பதை விளங்கிக் கொள்ளமுடிகிறது. இது சாதிய மேலாண்மையை மட்டும் நோக்கமாகக் கொண்டதா என்று காணும்போது அதன்ஊடாக வரும் அரசியல் மேலாண்மையையும் இது இலக்காகக் கொண்டிருப்பது விளங்குகின்றது. தோப்பில் முகம்மது மீரானின் அஞ்சுவண்ணம் தெரு நாவலில் பழைய பள்ளிவாசலை இடித்துவிட்டு புதிய பள்ளிகளைக் கட்டும் இளைஞர்கள் பள்ளி நிர்வாகத்தில் பழைய ஆட்களை வெளியேற்றி தாங்களே அதிகாரத்தில் மேலேறுகின்றனர். பள்ளி நிர்வாகத்தை வகிப்பதன் மூலம் அச்சமூகத்தை தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடியும். இது உள்ளூர் அளவிலான அதிகாரம். இதனை அரபுச் சூழலுக்கும் பொருத்திக்காணலாம். அரபுச் சமூகத்தில் ஆட்சி அதிகாரத்திற்குரியவர்களாக குரைஷிகள் எனப்படும் மேல்தட்டு மக்களே உள்ளனர். கடைசி இரு குரைஷிகள் இருக்கும் வரை அவர்களே ஆட்சி அதிகாரத்திற்குரியவர்கள் என்பது நபி முகம்மது வாய்மொழி வரலாற்றுச் செய்தியாகப் பின்பற்றப்பட்டு வருகின்றது. சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களைச் சமயத்தின் மைய நீரோட்டத்திலிருந்து விலக்குவதன் மூலம் அவர்களை அடையாள இழப்பிற்குள்ளாக்கி அதிகார எல்லையிலிருந்தும் புறந்தள்ளி விடுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த அடிப்படையி லேயே தமிழக இஸ்லாமியர்களின் மொழி அடையாள முன்னெடுப்பு புறந்தள்ளப்படுவதை விளங்கிக் கொள்ள முடிகின்றது.

தர்கா பண்பாட்டை புரோகிதர்கள் தங்களுடைய தொழிலுக்காக செய்கின்றனர் என்று அடையாளப் படுத்தும் இவர்கள் தூய்மைவாதம் பேசுவதன் வாயிலாகப் பெறும் பலன் என்ன என்று காணவேண்டும். அரபு நாட்டின் பொருளாதாரம் வணிகத்தை மையமாகக் கொண்டது. அரசியல், வணிகம் என்று எந்த ஒரு செயலும் சமயச் சார்பற்று அங்கு நிகழ்த்தப் பெறுவ தில்லை. ஹமீது அல்கர் எழுதிய “Wahhabism : A Critical Essay” என்னும் நூலுக்கான விமர்சனத்தில் “வஹா பிசத்தின் உச்சகட்ட சாதனை சவூதி அரேபியாவில் ராஜ்ஜியத்தை நிறுவியதே என்பதாக கீழைத்தேய வாதிகள் மற்றும் - வஹாபி மற்றும் வஹாபியரல்லாத - அரபு முஸ்லிம்களின் ஆக்கங்களைப் பயன்படுத்தி அல்கர் வாதிடுகிறார்” என்று அப்தர் ரஹ்மான் கோயா குறிப்பிடுகின்றார். மேலும், சவூதிகள் எஞ்சிய முஸ்லிம் உலகில் மேற்கூறிய அமைப்புகள் ஊடாக வஹாபி கொள்கைகளைப் பிரச்சாரம் செய்யும் பொருட்டு தங்களின் எண்ணை வளத்தைப் பயன்படுத்திச் செய்துவரும் நடவடிக்கைகளையும் நூலாசிரியர் விளக்குகிறார். இக்கருத்துக்களைக் காணும்போது அரபுச் சூழலில் அதிகாரத்தையும் மற்ற இஸ்லாமிய நாடுகளில் வணிகத்தையும் நோக்கமாகக் கொண்டு இவை செயல்படுகின்றன என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது. 1924இல் வகாபிய இணைவின் காரணமாக மக்கா, மதினா நகரங்களும் ஹஜ் பயணிகளின் நடவடிக்கைகளும் இவர்களின் அதிகாரத்தின் கீழ் வந்தது என்றும் 1938இல் அரேபியாவில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு வகாபியக் கொள்கை பரப்பலுக்கு சவூதி அரசாங்கம் அதிக பணம் செலவழிக் கின்றது (2009: 32) என்று கூறும் ஹெச்.ஜி.ரசூல் கூற்றும் இங்கு ஒப்புநோக்கத்தக்கது.

தூய்மைவாதக் கொள்கைகள் இளைஞர்கள் வாயிலாகவே பரப்பப்படுகின்றன. வெளிநாட்டிற்குச் செல்லும் இளைஞர்கள் முதலில் இக்கொள்கையினால் கவரப்படுகின்றனர். பின்பு தன்னுடைய நாட்டிற்குத் திரும்பும் போது அக்கொள்கைகளை முதலில் இளைஞர் களிடமே பகிர்ந்து கொள்கின்றனர். இக்கொள்கை பகுத்தறிவுவாதம் என்கிற அடிப்படையில் பரப்பப் படுகின்றது. இதனை அஞ்சுவண்ணம் தெரு நாவல் விரிவாக விளக்குகிறது. சமய அடையாளங்களை முன்னிறுத்துவதன் மூலம் இஸ்லாம் சமூகத்தவர்கள் இதனை அடிப்படையில் எதிர்க்கமுடியாதவர்களாகவும் காலங்காலமாகப் பின்பற்றிவரும் சம்பிரதாயங்களைக் கேள்விக்குள்ளாக்குவதால் இக்கொள்கையினை ஏற்க முடியாதவர்களாகவும் இருந்தனர். இக்கொள்கைகளைப் பரப்புகின்றவர்களாக இளைஞர்களே உள்ளனர் என்பதை ஜாகிர் ராஜா கதைகளும், தோப்பில் கதைகளும் நிறுவுகின்றன. இவர்கள் தங்கள் சமய அடையாளத்தை புறத்தோற்றத்தின் வழி வெளிப்படுத்துகின்றனர்.

தூய்மைவாதம் பேசும் இஸ்லாமிய இளைஞர்கள் நீண்ட தாடி வளர்த்தவர்களாகவும் உடையில் இஸ்லாமியத் தோரணையும் மொழியில் அரபுச் சொற்களின் ஊடாட்டமும் ஒவ்வொரு நடைமுறையிலும் இஸ்லாமிய அடிப்படைகளை வலியுறுத்துபவர்களாகவும் கதைகளில் சித்திரிக்கப்பட்டுள்ளனர். இந்த அடையாளம் தமிழ் மக்களிடமிருந்து அவர்களைத் தனியே வேறுபடுத்திக் காட்டுவதாக இருந்தது. இதன் விளைவு இவர்களைத் தீவிரவாதிகள் என்னும் சித்திரத்திற்குள் அடையாளப் படுத்தியது. இதற்கு ஊடகம் ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும் இப்புறத்தோற்றம் அவர்களைத் தனியாக அடையாளப்படுத்தியதும் ஒரு காரணமாக உள்ளது. எனில் சமய அடையாளத்தை ஆடைகளில் காட்டுவது தவறா என்கிற கேள்வி எழக்கூடும். அது தவறு என்று கூறுவதற்கு எந்த நியாயப்பாடும் இல்லை என்றாலும் இஸ்லாமியர்களின் தோற்றம் மற்ற சமூகத்தினரிடையே தீவிரவாதத் தன்மையோடு இணைத்துச் சிந்திக்க வைக்கின்றது. இதற்கு ஊடகமே முக்கிய காரணம்.

இந்தியாவில் நிகழ்ந்த கலவரங்களுக்கும் குண்டு வெடிப்பு போன்ற வன்முறைகளுக்கும் இஸ்லாமியர்களே காரணம் என்று மையப்படுத்தி வரும் செய்திகள் அந்த தோரணையுடன் வாழும் எந்த இஸ்லாமியனையும் அதே கோணத்தில் தீவிரவாதியாக அடையாளப்படுத்து கின்றது. எங்கு கலவரங்கள் நிகழ்ந்தாலும் இந்த அடிப்படையில் இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவதை தோப்பிலின் நாவல் சித்தரிக்கின்றது. மேலப்பாளையம் முஸ்லீம்கள் குறித்து இனவரைவியல் ஆய்வு செய்துள்ள பே.சாந்தியின் நூல் அறிக்கைகள் இந்த கருத்திற்குப் பக்கபலமாக உள்ளது. கோவை குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மேலப்பாளையம் முஸ்லிம் இளைஞர்கள் எதிர்கொண்ட அவலங்களை அவர் பட்டியலிட்டுள்ளார்.

மேற்கூறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் தமிழ் முஸ்லிம்களின் அடையாளச் சிக்கல்கள் கீழ்க்கண்ட சூழலுக்குட்பட்டவையாக உள்ளன.

-     தமிழக இஸ்லாமியர்களிடையே ராவுத்தர், மரைக்காயர், லெப்பைகள், ஒசாக்கள் (நாவிதர்), வண்ணார், மீன்பிடி தொழிலாளர், துப்புரவுத் தொழிலாளர்கள், கசாப்புக்கடை வியாபாரிகள், நிலையான இருப்பிடம் இல்லாத முஸாபர்கள் என்று பல்வேறு சமூக அடுக்குகள் சாதிய அடையாளத்தோடு இயங்கி வருகின்றன. இத்தகைய முரண்களுக்குள் எந்த அடை யாளத்தை முன்னிறுத்துகின்றனர்?

-     தமிழ் பேசும் முஸ்லிம்கள், உருது பேசும் முஸ்லிம்கள் என்கிற பாகுபாட்டிற்குள் எந்த அடையாளத்தை முன்னிறுத்துகின்றனர்?

-     தமிழக எல்லைக்கு உள்/வெளியில் என்கிற நிலம் சார்ந்த எல்லைகளில் எந்த அடையாளத்தை முன்னிறுத்துகின்றனர்?

என்கிற கேள்வி இவர்களின் அடையாள அரசியல் எந்த அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்றது என்பதற் கான விடையாக உள்ளது.

அடையாளம் என்பது பொதுமைக்குள் கரைந்து விடாமல் தனக்கான உரிமைகோரலுக்கான அளவு கோலாக சில நேரம் மாறிவிடுகின்றது. அந்த அடிப்படையில் இஸ்லாமியர்களுக்கிடையிலான சாதி சார்ந்த பாகுபாட்டிற்குள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய மண்சார்ந்த அடையாளங் களையே முன்னெடுக்கின்றனர். இது இவர்களை மதிப்பீடு செய்யும் அளவுகோலாக இருந்தாலும் இவர்கள் எந்தச் சூழலிலும் தன்னுடைய மொழிசார்ந்த பண்பாட்டு அடையாளங்களை இழக்கத் தயாராக இல்லை. ஆனால் மேல்தட்டு வர்க்கத்தினர் எப்போதும் தன்னை சமயத்தோடு அடையாளம் காணவே விழைகின்றனர். தூய்மைவாதமும் அதற்கான அரசியற் பின்புலமும் இதற்குரிய காரணங்களாக விளங்குகின்றன.

தமிழ் உருது என்னும் மொழிசார் பாகுபாடு பூர்விக இஸ்லாமியன் என்கிற மதிப்பீட்டு அடிப்படை யிலான பாகுபாடே. எனவே பூர்விக இஸ்லாமியர் களாகத் தங்களைச் சொல்லிக்கொள்ளும் உருது பேசும் இஸ்லாமியர்கள் மொழியையும் மொழிசார் பண்பாட் டையும் முன்னெடுக்கும் போது மதிப்பிற்குரியவர் களாகவும் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் மொழி அடையாளத்தை முன்னெடுக்கும் போது மதிப்பு குறைந்தவர்களாக, பூர்விகத் தன்மையற்று இஸ்லாத்திற் குள்ளாக இரண்டாம் தரத்தினராக மதிக்கப்படுகின்றனர். எனவே இத்தகைய சூழலில் சமய அடையாளத்திற் குள்ளாக தங்களை இணைத்துக் கொள்வதையே சிறந்ததாகக் கொள்கின்றனர். ஜாகிர் ராஜாவின் மீன்குகைவாசிகள் நாவல் இதற்கு நேர்முரணாக உள்ளது. உருது பேசுபவர்களை பட்டாணிகள் என்று கிண்டல் தொனியில் கூறுவதாகச் சித்திரிக்கப்படுகின்றது. எதார்த்தத்தில் அவர்கள் தங்களுக்குள் அரபு ரத்தம் ஓடுவதாகச் சொல்லி உயர்வாகச் சொல்லும் வழக்கம் உண்டு.

தமிழக எல்லைக்கு உள்ளும் புறமும் எத்தகைய அடையாளத்தை முன்னெடுக்கின்றனர் என்று காணும் போது தமிழக எல்லைக்குள் அடையாள நெருக்கடிச் சூழலில் சமய அடையாளத்தையும் இயல்பாக மொழி அடையாளத்தையும் முன்னெடுப்பவர்களாக உள்ளனர். வெளிநாடுகளில் பெரும்பாலும் சமய அடையாளமே முன்னெடுக்கப்படுகின்றது. அரபு நாடுகளுக்குச் சென்று வேலை செய்யும் இளைஞர்கள் தங்களைத் தமிழர் களாகக் காட்டிக் கொள்வதை விட இஸ்லாமியர் களாகவே காட்டிக்கொள்கின்றனர். அந்தப் பழக்கம் சொந்த மண்ணிற்கு வரும்போதும் தொடர்வதாக உள்ளது.

தமிழ் முஸ்லிம் இளைஞர்களிடையே மொழி அடையாள முன்னெடுப்பு என்பது சூழல் சார்ந்த ஒன்றாகவே உள்ளது. இஸ்லாமியப் புனைவுகளில் உள்ள பதிவுகளின் அடிப்படையில் இளைஞர்கள் தங்கள் மண்சார்ந்த அடையாளங்களை இழக்க விரும்பாதவர் களாகவும் அவற்றைப் பாதுகாக்க எத்தனிப்பவர் களாகவும் உள்ளனர். கல்வியின் மூலமும் அன்றாட வாழ்க்கை நடைமுறைகளின் மூலமும் சமய நடவடிக்கை களினூடே தன்னுடைய மண்சார்ந்த அடையாளங் களைப் பாதுகாக்கின்றனர். படைப்புகளுக்கு வெளியில் நின்று காணும் போது இஸ்லாமியப் படைப்பாளர்கள் பெரும்பாலும் தமிழ் சார்ந்த அடையாளங்களையே முன்னிறுத்துகின்றனர். தங்கள் படைப்புகளின் மூலம் தங்கள் அடையாளங்களைப் பேணிப்பாதுகாக்கின்றனர். இளைஞர்கள் மாற்றுச் சிந்தனையாளர்கள் என்கிற அடிப்படையில் பல கருத்துக்களைப் படைப்பிற்குள் முன்வைத்தாலும் மொழி அடையாளச் சிதைவிற்கு என்றும் அவர்கள் துணைபோகாதவர்களாகவே உள்ளனர். எனினும் அரசியல் காரணிகள், இளைஞர் களின் மாற்றுச் சிந்தனைப் போக்கைத் தம்முடைய ஆதாயத்திற்காகப் பயன்படுத்தும் சூழல் எதார்த்தத்திலும் படைப்புக்களிலும் மேலோங்கியுள்ளது.

துணைநூற்பட்டியல்

  1. அப்தர் ரஹ்மான் கோயா, வஹாபி சித்தாந்தம் பற்றிய விரிவான, பக்கச்சார்பற்ற ஓர் விமர்சனம்,

2.    பிறைநதிபுரத்தான், வஹாபி இயக்கமும் வர்ணாஷிரம லோகலிஸ்டுகளும், www.thinnai.com. 2004

3.    மேலப்பாளையம் முஸ்லீம்கள், பே.சாந்தி, யாதுமாகி பதிப்பகம், பாளையங்கோட்டை, 2006

4.    கெண்டை மீன்குஞ்சும் குர்ஆன் தேவதையும், ஹெச்.ஜி.ரசூல், ஆழி பப்ளிஷர்ஸ், 2009

5.    தலித் முஸ்லிம், ஹெச்.ஜி.ரசூல், பாரதி புத்தகாலயம், 2010

ஆய்விற்குப் பயன்படுத்திய படைப்புகள்

சிறுகதைகள்

1.    இன்குலாப், பாலையில் ஒரு சுனை, அன்னம் வெளியீடு, 1992

2.    களந்தை பீர்முகம்மது (தொகுப்.), சலாம் இஸ்லாம் - சமீபத்திய இசுலாமிய சிறுகதைகள், அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 2002

3.    ஜாகிர் ராஜா, செம்பருத்தி பூத்த வீடு, அனன்யா வெளியீடு, 2004

4.    முஜீப் ரஹ்மான், தேவதைகளின் சொந்தக் குழந்தை, புதுப்புனல், 2005

5.    ஜாகிர் ராஜா, பெருநகரக் குறிப்புகள், அனன்யா வெளியீடு, 2007

6.    களந்தை பீர்முகம்மது, பிறைக்கூத்து, இருவாட்சி, 2008

7.    தோப்பில் முஹம்மது மீரான், வேர்களின் பேச்சு, அடையாளம், 2009

8.    ஹசன் முகைதீன், இ.எஸ்.எம்., நெசவுக்காரத் தெரு, புதுப்புனல், 2009

9.    ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன், போன்சாய் மரங்கள், உயிர் எழுத்து பதிப்பகம், 2011

நாவல்கள்

1.    தோப்பில் முகம்மது மீரான், அஞ்சுவண்ணம் தெரு, அடையாளம், 2008

2.    ஜாகிர் ராஜா, மீன்காரத்தெரு, மருதா, 2006

3.    ஜாகிர் ராஜா, துருக்கித் தொப்பி, அகல், 2008

4.    ஜாகிர் ராஜா, மீன்குகைவாசிகள், ஆழி பப்ளிஷர்ஸ், 2010

5.    மீரான் மைதீன், ஓதி எறியப்படாத முட்டைகள், கீற்று, 2003

Pin It