தமிழ்ச் சமூகம் தொன்மையான வரலாற்றைக் கொண்டது. இதனால் ஒலி வடிவங்களுக்கான குறியீடுகள் வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலேயே உருவாக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். குறியீடு களின் வளர்ச்சியாக அமைந்த எழுத்து வடிவங்களை கற்பாறைகளில் பதிவு செய்தனர். சுமார் கி.மு. 500 முதல் தமிழ்ச் சமூகம் தொடர்பான எழுத்து வடிவங்கள் உருவாகி பதிவாகியுள்ளன. இவ்வளர்ச்சியில் கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் ஒழுங்குபடுத்தப்பட்ட பனை ஓலைகளில் புத்தகங்களை உருவாக்கும் பண்பாடு தமிழ்ச் சமூகத்தில் உருவானது. ஓலைப் பண்பாட்டிலிருந்து தாள் பண்பாட்டிற்கு மாறிய தமிழ்ச் சமூகத்தின் அச்சுப் பண்பாட்டு வரலாறு விரிவாக எழுத வேண்டிய தேவை உள்ளது. சுமார் 450 ஆண்டுகளில் (1556 - 2014) உருவான இப்புதிய பண்பாட்டு வரலாறு தொடர்பான ஆவணங்களைத் தொகுக்கும் தேவையும் நம்முன் உள்ளது. தமிழ் அச்சுப் பண்பாட்டு வரலாற்றில் பர்தொலோமியோ சீகன்பால்கு (1682 - 1719) என்னும் கிறித்தவத் தொண்டரின் பங்களிப்பு விதந்து பேசும் தன்மையுடையது. அவர் தமிழ் அச்சுப் பண்பாட்டு வரலாற்றில் பெறுமிடம் குறித்த உரையாடலாக இப்பகுதி அமைகிறது. இதனைப் பின்வரும் வகையில் பகுத்துக் கொண்டு நம் புரிதலைத் தெளிவாக்கிக் கொள்ளலாம்.

ziegenbalg-     சீகன்பால்கு காலத்திற்கு முன்பான தமிழ் அச்சுச் செயல்பாடுகள் (1576 - 1707)

-     சீகன்பால்கு மூலம் உருவான தமிழ் அச்சுப் பண்பாடு (1708 -1719)

-     சீகன்பால்கு உருவாக்கிய அச்சுப் பண்பாடு, அவருக்குப்பின் தொடர்ந்த வரலாறு (1720 - 1800)

அன்ட்ரிக் அடிகளார் (1520 - 1600) (Henrique Henriques) எனும் கத்தோலிக்கக் கிறித்தவத் தொண்டர், முதன் முதலாக 1577இல் கோவாவிலும் பின்னர் கொல்லத்திலும் அச்சு இயந்திரத்தை நிறுவினார்.

1578 இல் தமிழ் அச்சிடுதலைத் தொடங்கி வைத்தார். இதற்கு முன் 1554 இல் லிஸ்பன் நகரில், ரோமன் எழுத்துக்களில் தமிழ்ச் சிறுநூல் ஒன்றும் அச்சிடப் பட்டது. தமிழ் மொழியில் அச்சிடப்பட்ட மூன்று நூல்கள் பின்னர் வெளிவந்தன. அவை தம்பிரான் வணக்கம் (1578) கிரீசித்தியானி வணக்கம் (1579), அடியார் வரலாறு (1586) ஆகியவை. இந்நூல்கள் வெளி வருவதில் அன்ட்ரிக் அடிகளார் சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளார். இந்நூல்கள் 1965 வாக்கில் தூத்துக்குடியில் மறுபதிப்பு பெற்றுள்ளன.

கத்தோலிக்கத் திருச்சபைகள் மூலம் அன்ட்ரிக் அடிகளாரால் அம்பலக்காடு, பின்னர் புன்னைக்காயல் ஆகிய இடங்களிலும் அச்சிடுதல் நடைபெற்றதாக அறிகிறோம். ஆனால் இப்பணி தொடர்ச்சியாக நடை பெறவில்லை. 1576 - 1586 இடைப்பட்ட காலங்களில் மட்டும் தமிழ்நூல் அச்சிடுதல் நடைமுறையில் இருந்ததை அறிய முடிகிறது. திரு.கிரஹாம் ஷா (1987), பிரிட்டிஷ் நூலகம் மூலம் தொகுத்துள்ள தென் ஆசியா மற்றும் பர்மாவில் அச்சிடப் பட்ட நூற்பட்டியலில் 1556 - 1586 இடைப்பட்ட காலங்களில் 266 தமிழ் நூல்கள் அச்சிடப்பட்டிருப்பதை அறிகிறோம். இந்நூல்கள் கோவா, கொல்லம், புன்னைக்காயல், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் அச்சிடப்பட்டன. இதில் மிக அதிகமான நூல்கள் தரங்கம்பாடியில்தான் அச்சிடப்பட்டன.

அன்ட்ரிக் அடிகளால் தொடங்கப்பட்ட தமிழ் அச்சுப்பணி மிகக் குறுகிய காலத்திலேயே தடைப் பட்டது. 1586 - 1706 என்ற இடைப்பட்ட காலங்களில் யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற பகுதிகளில் அச்சிடுதல் நடைபெற்றது. தமிழகத்தில் அதிகமாக நடைபெறவில்லை. 1706 இல் தரங்கம்பாடியில் அச்சு எந்திரத்தை சீகன்பால்கு கொண்டு வந்து சேர்த்தார். அக்காலம் முதல் தமிழ் அச்சிடுதல் மரபு வளம்பெறத் தொடங்கியது என்று கருத முடியும். சீகன்பால்கு உருவாக்கிய இவ்வகையான அச்சுப் பண்பாட்டு மரபை பின்வரும் வகையில் பகுத்துக் கொள்ளமுடியும்.

-     தரங்கம்பாடியில் அச்சுக்கூடத்தை உருவாக்கிய வரலாறு.

-     அச்சிற்குத் தேவையான அடிப்படைக் கச்சாப் பொருளான காகிதம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உருவாக்கியமை.

-     ‘புதிய ஏற்பாட்டை’ மொழியாக்கம் செய்து அதனை அச்சிட்டதின் மூலம் தமிழில் புதிய உரைநடை மரபை உருவாக்கிய முறைமை.

-     பள்ளிக் கல்விக்கும் அச்சுப் பண்பாட்டிற்கு மான உறவை வளர்த்தெடுத்த பாங்கு.

-     சீகன் பால்குவின் நூல்கள் அச்சு வடிவம் பெற்ற முறைமை.

-     தரங்கம்பாடி நூலகம்: அதிலுள்ள நூல்கள் தொடர்பாக சீகன் பால்கு உருவாக்கிய முதல் தமிழ் நூற்பட்டியல்.

மேற்குறித்த விவரணங்கள் அடிப்படையில்தான் அச்சுப் பண்பாட்டின் போக்குகளைக் கண்டறிய இயலும். சீகன்பால்கு தரங்கம்பாடியை (1706) வந்தடைந்த போது அச்சு எந்திரம், கிறித்தவ தொண்டு நிறுவனங்களில் இல்லை. அன்ட்ரிக் அடிகள் மறைவோடு அச்சு மரபும் மறைந்து போனது. அம்மரபை புதுப்பிக்க வேண்டிய தேவை இருப்பதை சீகன்பால்கு உணர்ந்தார். அதற்கான அடிப்படைப் பணிகளைச் செய்யத் தொடங்கினார். தரங்கம்பாடியில் முதன் முதல் சீர்த்திருத்தக் கிறித்தவ மரபுக்கான கால்கோள் சீகன்பால்கு அவர்களால் நாட்டப்பட்டது. டென்மார்க் நாட்டின் நான்காம் பெர்டரிக் மன்னன்தான் சீகன்பால்குவை தரங்கம்பாடிக்கு அனுப்பியவர்.

எனவே மன்னரிடம் தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் உருவாக்குவதற்கு உதவ வேண்டும் என்று 19.09.1707 இல் கடிதம் எழுதினார். அச்சு எந்திரத்தின் மாதிரி வடிவம் மற்றும் அதற்குத் தேவையான காகிதம் ஆகியவை குறித்து விரிவாக மன்னருக்கு எழுதினார். சீகன்பால்கு கோரிக்கையை ஏற்று அச்சு எந்திரம் தரங்கம்பாடியில் வந்திறங்கியது. இதன் மூலம் சீர்த்திருத்தக் கிறித்தவம் தொடர்பான பல்வேறு செயல்கள் தொடர்ந்து நடைபெற வழிவகுக்கப்பட்டது என்று கூற முடியும்.

அச்சிடுவதற்குத் தேவையான காகிதத்தின் தேவையை உணர்ந்து காகிதம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை தரங்கம்பாடிக்கு அருகில் உள்ள பொறையாறில் உருவாக்கப்பட்டது. அன்றைய சூழலில் இந்தியாவில் காகித உற்பத்தி குறித்து அறிய பின்வரும் தகவல்கள் உதவும்.

“இந்தியாவில் காஷ்மீரை ஆட்சிபுரிந்த சசிகான் என்னும் மன்னன் தான் முதன்முதலில் காகித தொழிற்சாலையை உருவாக்கியவன். (1417 - 1467) திமூர் காஷ்மீருக்கு வந்தபோது சசிகான் அவரோடு செல்ல வேண்டிய சூழல் உருவானது. அதன் மூலம், காகித உற்பத்தி, புத்தகம் உருவாக்குதல், மற்றும் தாதியர் பணி ஆகியவற்றை சசிகான் அறிந்துகொள்ள முடிந்தது” (திவாரி.2006)

இவ்வகையில் இந்தியாவில் காகிதத் தொழிற் சாலைகள் 15 ஆம் நூற்றாண்டில் உருவாயின. பின்னர் பல இடங்களிலும் பரவியது. கிறித்தவ தொண்டு நிறுவனங்களும் காகித தொழிற்சாலைகளை உருவாக்கின. பொறையாற்றில் உருவாக்கப்பட்ட காகித தொழிற் சாலையில் பல்வேறு சோதனை முயற்சிகளை மேற் கொண்டு காகித உற்பத்தியை செய்யத் திட்டமிட்டனர். ஐரோப்பிய முறையிலான காகித உற்பத்தி முறை இங்கு மேற்கொள்ளப்பட்டது. 1716 இல் உருவாக்கப்பட்ட தொழிற்சாலையில், காகிதம் உருவாக்குவதற்கான பல்வேறு மரக்கூழ் மூலங்களை உருவாக்கினர். இத் தொழிற்சாலை இயங்கிய முறை பின்வருமாறு:

-     தொழிற்சாலையை கண்காணிப்பு செய்வதற்கு ஒருவர் நியமிக்கப்பட்டார்.

-     காகிதக் கூழ் உருவாக்குவதற்கு நான்கு பேர் தேவைப்பட்டனர்.

-     தயாரித்தக் கூழைப் பதப்படுத்த நால்வர் தேவைப்பட்டனர்.

-     எந்திரத்தை இயக்குவதற்கு நாட்கூலிகளாக இருவர் நியமிக்கப்பட்டனர்.

-     இரண்டு வெளுப்பவர்கள் தேவைப்பட்டனர்.

-     நான்கு சிறுவர்கள் எடுபிடி பணிக்கு அமர்த்தப்பட்டனர்.

-     இரண்டுபேர் காகிதக் கூழை குழாயில் ஊற்றுவதற்கு தேவைப்பட்டனர்.

-     இரண்டு பேர், உற்பத்தி செய்யப்பட்ட காகிதத்தை வழுவழுப்பாக செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

-     பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான கணக்காளர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.

(டேனியல் ஜெயராஜ்:2001)

மிகவும் சிரத்தையாக மேற்கொள்ளப்பட்ட மேற்குறித்த பணி வெற்றிகரமாக நடைபெறவில்லை. பொறையாற்றில் உற்பத்தி செய்யப்பட்ட காகிதத்தின் தரம் அச்சிடுவதற்கு ஏற்றதாக அமையவில்லை. உற்பத்தி அளவும் மிகமிகக் குறைவாக இருந்தது. தொழிற் சாலையைத் தொடராமல் மூடவேண்டிய சூழலும் உருவானது.

1940 இல் தினத்தந்தி பத்திரிகை தொடங்கிய சி.பா.ஆதித்தனார், அப்பத்திரிக்கைக்கான காகிதத்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை திருநெல்வேலிக்கு அருகில் உருவாக்கினார். அதன் மூலம் தினத்தந்தி வெற்றி கரமாக தமிழ்ச் சூழலில் செயல்பட முடிந்தது. சீகன் பால்கு பதினெட்டாம் நூற்றாண்டில் மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை. அச்சிடுவதற்கு காகிதத்தை ஐரோப்பாவில் இருந்தே பெற வேண்டி யிருந்தது. ஆதித்தனார் வெற்றி பெற்றதைப் போல் சீகன்பால்குவால் வெற்றி பெறமுடியவில்லை; இருந் தாலும் தொடர்ச்சியாக அச்சிடுதல் பணி தரங்கம் பாடியில் நடைபெற்றதை அறிகிறோம். தமிழ் அச்சுப் பண்பாட்டு வரலாற்றில் அச்சிடுதலின் கச்சாப்பொருள் உற்பத்திக்கும் அச்சிடுதல் தொழிலுக்குமான உறவு குறித்த உரையாடல் அவசியமாகும். கச்சாப்பொருள் உற்பத்தி சார்ந்தே எவ்விதமான உற்பத்தியும் வளம்பெற முடியும். காகிதம் இல்லாமல் அச்சு எந்திரம் செயல்பட முடியாது.

அச்சு எந்திரத்தைத் தமிழ்ச் சூழலில் பயன்படுத்து வதற்கு சீசன்பால்கு முயற்சி மேற்கொண்டதற்கானக் காரணங்களை டேனியல் ஜெயராஜ் (2006) மிக விரிவாகப் பதிவு செய்துள்ளார். நவீன கருவிகளை பயன்படுத்துவதின் மூலம் சமயப் பரப்புதலை விரைவாகவும் செம்மையாகவும் செய்ய முடியும் என்று அவர் நம்பினார். தரங்கம்பாடியில் முதன்முதல் உருவாக்கப்பட்ட சீர்திருத்தக் கிறித்தவ சபையின் வளர்ச்சிக்கு அச்சு எந்திரம் அடிப்படைத் தேவையாக அமைகிறது என்றும் அவர் கருதினார்.

சீகன்பால்கு தமிழ் மொழியைக் கற்ற பின்பு தமிழ் நூல்கள் குறித்த பெரும் மதிப்பு உடையவராக மாறினார். ஓலைகளில் இருக்கும் தமிழ் நூல்கள் அச்சு வடிவம் பெறுவது அவசியம் என்று கருதினார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சி.வை. தாமோதரம்பிள்ளை (1832-1901) போன்றவர்கள் கொண் டிருந்த மனநிலையை பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கொண்டிருந்தவராக சீகன் பால்குவைக் கருத முடிகிறது. தமிழ் நூல்கள் அழிந்துபோகும் நிலையில் ஒரு சில படிகள் மட்டுமே இருப்பதை அறிந்த அவர், அவற்றை அச்சிடுவதன் மூலம் நூற்றுக்கணக்கில் படிகளை உருவாக்க முடியும் என்று நம்பினார். பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு அச்சிட்ட நூல்களைக் கொடுப்பதையும் தமது நோக்கமாகக் கொண்டிருந்தார்.

மேற்குறித்த பின்புலத்தில், அவர் மொழியாக்கம் செய்த புதிய ஏற்பாட்டை அச்சிடுவதற்கான முயற்சியை மேற்கொண்டார். தென் ஆசியமொழிகளில் பைபிள் முதன் முதல் மொழியாக்கம் செய்யப்பட்டது தமிழில் தான். அப்பணியைச் செய்தவர் சீகன்பால்கு. புதிய ஏற்பாட்டை மொழியாக்கம் செய்வதில் சீகன்பால்கு மேற்கொண்ட முறைகள் விதந்து கூறத்தக்கவை. மொழியாக்கத்திற்கு தமிழ் அறிந்த எவரையும் அவர் துணையாகக் கொள்ளவில்லை. தமிழ் அறிந்தவர்கள் உரைநடை வடிவத்தில் எழுதும் பயிற்சி அற்றவர்களாக இருப்பதாகக் கருதினார். இதனை மறுப்பதற்கில்லை. செய்யுள் வடிவில் எழுதுவதே தமிழ் மரபாக இருந்த காலம் அது. எனவே உரைநடை மரபை தான் மட்டுமே உருவாக்க முடியும் என்று அவர் கருதினார்; அதனால் தமிழ் அறிந்தவர்களின் துணையைத் தவிர்த்தார்.

சீகன்பால்கு அவர்களின் மொழியாக்கம் பேச்சு மொழியில் அமைந்திருந்தது, இதற்கான காரணம், அவ்விதம் மொழியாக்கம் செய்தால் தான், சாதாரண மக்களும் அதனை வாசிக்க இயலும் என்று அவர் நம்பினார். இவ்வகையில் புதிய ஏற்பாட்டை மொழி யாக்கம் செய்து அச்சிட்டதன் மூலம் தமிழ் அச்சுப் பண்பாட்டில் புதிய வடிவம் ஒன்றை உருவாக்கிய மரபுக்கு சீகன்பால்கு உரியவர் ஆகிறார். இவர் உருவாக்கிய இந்த மரபு குறித்து விரிவான உரையாடல் தமிழ்ச் சூழலில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூற முடியாது. இவரது மொழியாக்கத்தை வீரமாமுனிவர் (1680 -1747) கடுமையாக விமரிசனம் செய்தார். இதற்கான பின்புலம் சுவையுடையதாக அமைகிறது.

சமசுகிருத மொழி கடவுள் மொழி என்பதால் அதனை எல்லோரும் பேசுவதோ, பதிவு செய்வதோ கூடாது என்று ஒரு காலத்தில் மநுநீதி வைதிகர்கள் கூறினர். அதுவே அம்மொழி, பேச்சு வழக்கை இழப்பதற்கு காரணமாக அமைந்தது. ஏறக்குறைய அவ்வித மனநிலையாளராக வீரமாமுனிவர் இருந்தார். சீர்திருத்தக் கிறித்தவத்தில் இருக்கும் எளிமை என்பது கத்தோலிக்கத்தில் இல்லாமல் இருந்த சூழல் அன்று நிலவியது. செம்மொழி மரபில் தான் பைபிள் மொழி யாக்கம் செய்ய வேண்டும். பேச்சு மொழியில் செய்வது தேவனுக்கு செய்யும் அவமரியாதையாக அமைந்து போகும் என்று வீரமாமுனிவர் கருதினார். இந்தப் பின் புலத்தில்தான் சீகன்பால்கு மொழியாக்கத்தை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியாவில் செயல்பட்ட கத்தோலிக்கக் கிறித்தவம், சீர்திருத்தக் கிறித்தவம் ஆகிய வற்றின் பண்பாட்டு அணுகுமுறைகளைப் புரிந்து கொள்ள இத்தன்மை உதவக்கூடும். இந்தியாவில் நிலவிய சாதியக் கட்டுமானங்கள், இந்து மத சடங்குகள் ஆகியவற்றை கிறித்தவ மதப்பிரிவுகள் எதிர்கொண்ட முறைகளையும் இப்பின்புலத்தில் புரிந்துகொள்ள முடியும். தமிழ் அச்சுப் பண்பாட்டு வரலாற்றிற்கும் பைபிள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட முறை மைக்கும் நெருக்கமான உறவு உண்டு. இதனை மட்டும் தனித்து விரிவாக எழுதும் தேவை உண்டு. எனவே கிறித்தவம் உருவாக்கிய தமிழ் அச்சுப் பண்பாட்டு மரபில், கிறித்தவ மதப்பிரிவுகளின் அணுகுமுறைகள் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து உரையாடுவது அவசியம். இந்தப் பின்புலத்தில் தமிழ் அச்சுப் பண்பாட்டு வரலாற்றில் சீகன்பால்கும் வீரமாமுனிவரும் பெரிதும் கவனத்தில் கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர்.

எழுத்தைக் கற்றறியும் பயிற்சிதான் வாசிப்புப் பழக்கத்திற்கு மூலமாக அமைகிறது. எழுத்தைக் கற்றல் என்பது நிலவுடைமை சமூக அமைப்பில் ஓர் அதிகார மாகவே செயல்பட்டது. அதற்குப் புனிதம் என்ற கருத்துரு கட்டமைக்கப்பட்டது. சிலர் மட்டுமே எழுத்துப் பயிற்சி பெறவேண்டும். வேறுசிலர் பெறக் கூடாது என்ற மநுச்சட்டம் எழுதப்படாத விதியாக இருந்தது. இக்கொடுமையை ஒழித்தது ஐரோப்பிய புத்தொளி மரபு. எல்லோருக்குமான எழுத்துப் பயிற்சியின் நிறுவனமே கிறித்தவ தொண்டு நிறு வனங்கள் உருவாக்கிய பள்ளிக்கூடங்கள்; ஒடுக்கப் பட்டோர் மற்றும் பெண்களுக்கான பள்ளிக்கூடங்களை உருவாக்கிய மரபை இப்பின்புலத்தில் புரிந்து கொள்வது அவசியம். இம்மரபில் மிக முக்கியமான மனிதராக சீகன்பால்கு அமைகிறார். அவர் உருவாக்கிய பள்ளிக்கூடங்களே அதற்குச் சான்று. அவர் உருவாக்கிய பள்ளிக்கூடங்கள் மூலமாக, தமிழ் அச்சுப் பண் பாட்டிற்கான அடிப்படைத் தரவுகளை கீழ்க்காணும் வகையில் தொகுக்கலாம்.

-     பள்ளிக்கூடக் குழந்தைகள் ஓலைகளில் எழுதப்பட்ட சுவடிகளுக்குப் பதிலாக அச்சிட்ட புத்தகங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று விரும்பினார்.

-     புத்தகங்களைப் பயன்படுத்துவதன் மூலம், வாசிப்புப் பழக்கம் வேகமாக வளருவதற்கான சாத்தியக் கூறுகள் மிகுதி என்றும் நம்பினார். அது நடைமுறையில் சரியென்றே கூற முடியும்.

-     தரங்கம்பாடியில் இருக்கும் போர்ச்சுகீசிய மொழி பேசும் பள்ளிக் குழந்தைகள் அச்சு நூலைப் பயன்படுத்தும்போது, தமிழ் பேசும் குழந்தைகளும் அவ்வகையான அச்சு நூல் களைப் பயன்படுத்த வேண்டும் என்று கருதினார்.

-     வேகமான எழுத்தறிவுக்கும் அதன் மூலம் வாசிப்புப் பழக்கம் உருப்பெருவதற்கும் இதன் வழி அறிவுவளம் பெறுவதற்கும் அச்சுப் பண்பாடு வழிவகுக்கும் என்ற அடிப்படை உண்மையை அறிந்தவராக சீகன்பால்கு செயல்பட்டார். இதனால் ஒடுக்கப்பட்டவர் மொழிக்கு அங்கீகாரம், ஒடுக்கப்பட்டவருக்கு கல்வி ஆகிய மிக முக்கியமான அச்சுப் பண்பாடு சார்ந்த அரசியல் பண்பாட்டை அவர் கட்டமைத்தார். இவ்வகையான அரசியல் பண்பாட்டைக் கட்டமைத்தவரில் அவரே முதல்வராக இருக்கிறார். இவ் வகையான காலனிய மரபின் வளங்களை நமக்கு முதன்முதல் கொண்டுவந்தவராகவும் சீகன்பால்குவைக் கருதவேண்டும்.

ziegenbalg print

சீகன்பால்கு தான் உருவாக்கிய ஆக்கங்களை தமிழில் அச்சிட்டதன் மூலம் உருவாக்கிய தமிழ் அச்சுப் பண்பாட்டு மரபுகளையும் விழுமியங்களையும் விதந்து பேசும் அவசியம் இருப்பதாகக் கூற முடியும். கடித வடிவில் அச்சிட்ட அவரது குறுநூல் இவ்வகையில் குறிப்பிடத்தக்கது. “தரங்கம்பாடியில் இருக்கும் குருமார்கள் - தமிழ் சாதியார்கள் எல்லோருக்கும் எழுதின நிரூபம்” (1712) என்பது இக்குறு நூல். ஒரே கடவுள் என்றும், அவன் சர்வேசுவரன் என்றும் கூறுகிறார். இதனைச் சமணர்கள் கூறுவதாகவும் சொல்கிறார். ஆனால் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு மூட நம்பிக்கைகளுக்கு ஆட்பட்டிருப்பதாகவும் அதிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்றும் கூறுகிறார். சர்வேசுவரன் என்பவன் மனிதனை நேசிப்பவன். அவனும் ஒரு மனிதன். அவனால் அனுப்பப்பட்ட ஏசுவை நாம் புரிந்து ஏற்க வேண்டும், என்று எளிமை யான மொழியில் அவர் எழுதுகிறார்.

சீகன்பால்கு கூறும் சமயக் கருத்துக்களை நாம் ஏற்கவேண்டும் என்னும் அவசியமில்லை; ஆனால் எழுதும் மொழி மூலம் கிடைக்கும் அச்சுப் பிரதி என்பது, நமது மொழிசார்ந்த புதிய அச்சுப்பண்பாடு மரபை உருவாக்கியிருப்பதை நாம் கவனத்தில் கொள்வது அவசியமாகும். இதே மரபை அவர் பைபிள் மொழியாக்கத்திலும் கைக்கொண்டுள்ளார். இவ் வகையில் அச்சான அவரது பிரதிகள் நமக்கு வழங்கும் புதியமொழி என்பது நமது புதிய அச்சுப் பண்பாடு, என்ற புரிதல் நமக்கு அவசியமாகும். சமயத்தை மீறிய அச்சுப் பண்பாட்டு மரபு பின்னர் உருவாவதற்கு அவர் உருவாக்கிய மொழி மூலமாக அமைகிறது. இவர் கட்டமைத்த உரையாடல் மரபில் அமைந்த உரைநடை மொழிதான் பின்னர் வளமான உரைநடை மரபு தமிழில் உருவாக வழிகண்டது. இம்மரபு தமிழில் உருவான வளமான அச்சுப் பண்பாடு என்று கருத இயலும்.

சீகன்பால்கு லூத்தரன் சீர்த்திருத்தக் கிறித்தவ சபை மூலம் உருவாக்கிய அச்சு மரபு அவருக்குப்பின் எவ்வகையான வளர்ச்சியை உள்வாங்கியது என்பதை அறிய விரிவான தரவுகள் உள்ளன. அவற்றை கீழ்க் கண்டவாறு தொகுக்கலாம்.

-     கிறித்தவ நிறுவனங்கள் மூலம் உருவான வெளியீட்டு நிறுவனங்கள்.

-     தரங்கம்பாடி அச்சுக்கூடம் மூலம் அச்சிடப் பட்ட அச்சு வடிவங்கள்.

-     கத்தோலிக்க அச்சு மரபிலிருந்து சீர்த்திருத்தக் கிறித்தவ அச்சு மரபு வேறுபடும் கூறுகள்.

-     பத்தொன்பதாம் நூற்றாண்டில் செயல்பட்ட தமிழ் அச்சு மரபிற்கு தரங்கம்பாடி அச்சுக் கூடம் கையளித்த மரபுகள்.

மேற்குறித்தவை குறித்து விரிவான பதிவுகளைச் செய்யும் தேவையுண்டு. சீகன்பால்கு மரபு எவ்விதம் தொடர்ந்தது என்பதைக் கோடிட்டுக் காட்ட சில தரவுகளை மட்டும் நாம் நினைவுபடுத்திக் கொள்வது அவசியம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் செயல்பட்ட கிறித்தவ அச்சுநிறுவனங்கள் மிக வளமானவை. அவை உருவாக்கிய மரபை சுருக்கமாகத் தொகுக்க இயலும்.

-     சிறுநூல் வெளியிடுவதற்கு என்று உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் பலவாகும். TheTract and Book Societyஎன்பது குறிப்பிடத் தக்க ஒன்று.

-     பள்ளிகளுக்குத் தேவையான நூல்களை வெளியிடும் நிறுவனங்கள் பல உருவாயின. The South Indian Christian School Book Society என்பது அதில் ஒன்று.

-     தரங்கம்பாடியில் செயல்பட்ட அச்சுக்கூடம் இவ்வகையில் குறிப்பிடத்தக்கது. Tranquebar Evang Lutheran Mission Press மிக அதிகமான நூல்களை வெளியிட்டுள்ளது.

-     கிறித்தவ சமய நூல்களை வெளியிடும் பல அச்சுக்கூடங்கள் உருவாயின எ.டு. Christian knowledge socities press - Madras.

மேற்குறித்தவை அனைத்தும் பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சூழலில் செயல்பட்டவை. இவை இவ்விதம் செயல்பட மூலமாக அமைந்த மரபை உருவாக்கியவராக சீகன்பால்கு அவர்களைக் கருத முடியும். 1865இல் வெளிவந்த ஜான்மர்டாக் (1819 - 1904) நூற்பட்டியலில் கத்தோலிக்க கிறித்தவ நூல்கள் 87 என்றும் சீர்திருத்தக் கிறித்தவ நூல்கள் 587 என்றும் புள்ளிவிவரம் தந்துள்ளார். இதில் சீர்திருத்தக் கிறித் துவம் கத்தோலிக்கத்தைவிட பன்மடங்கு அதிகமான சமயநூல்களுக்கு அச்சிட்டிருப்பதைக் காண்கிறோம். இதற்கு மூல வளத்தை உருவாக்கியவராக சீகன்பால்கு அமைகிறார். தமிழ் அச்சுப் பண்பாட்டு வரலாற்றைக் கட்டமைக்கும்போது, அதில் பர்த்திலோமியா சீகன் பால்குவின் வகிபாகம் முதன்மையாக அமைவதைக் காணமுடிகிறது.

தமிழில் முதற் நூற்பட்டியலை உருவாக்கியவர் சீகன்பால்கு ஆவார். தரங்கம்பாடியில் சுமார் 300 நூல்கள் (பெரும்பகுதி ஓலைச்சுவடிகள்) அடங்கிய நூலகம் ஒன்றை அவர் தமது இறுதிக் காலத்தில் உருவாக்கியிருந்தார். அந்நூல்களின் பாதுகாப்புக் கருதி கோபர்கென் நூலகத்திற்கு அனுப்பி வைத்தார். அனைத்து நூல்களையும் அனுப்பி வைத்தாரா? அல்லது தெரிவு செய்யப்பட்ட சில நூல்களை மட்டும் அனுப்பினாரா? என்பதை அறிந்து கொள்ள முடிய வில்லை. அவ்விதம் அவர் அனுப்பிய நூல்களுக்கான குறிப்புகளுடன் கூடிய அட்டவணை ஒன்றை அவர் உருவாக்கியுள்ளார். அந்த அட்டவணையில் 112 நூல்கள் தொடர்பான விவரங்கள் உள்ளன. சீகன்பால்கு அவர்கள் தமிழில் எந்தெந்த நூல்களை வாசித்தார் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. ‘‘A Catalogue of Malabari Books’’ என்னும் இப்பதிவில் முதல் நூலாக தொல்காப்பியம் அமைந்துள்ளது. அரிஸ்டாட்டிலின் கவிதை இயல் போன்றது தொல்காப்பியம் என்று குறித்துள்ளார். மூன்றாவது நூலாக நன்னூல் அமைந் துள்ளது. தமிழ் இலக்கண மரபை அறிந்துகொள்ள நன்னூல் உதவும் என்று குறித்துள்ளார். திவாகர நிகண்டு பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. திருக்குறள் என்ற குறிப்பு இல்லை; ஆனால் திருவள்ளுவர் என்ற குறிப்பு ஏழாவது வரிசையில் இடம்பெற்றுள்ளது. தமிழர்கள், திருவள்ளுவர் எழுதிய நூல் குறித்து பெருமையுடன் பேசுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். திருவள்ளுவர் எழுதிய நூலை சமூகத்தில் செல்வாக்காக உள்ள அனைவரும் தங்கள் கைவசம் வைத்திருப்பதாக எழுதுகிறார். கிறித்தவ தொண்டர் தாமஸ் இருந்த இடத்திலேயே (மைலாப்பூர்) திருவள்ளுவர் வாழ்ந்தார் என்ற குறிப்பையும் தருகிறார்.

சிந்தாமணி காவியம் உரையோடு உள்ள பிரதி அவருக்குக் கிடைத்தது. அது பற்றியும் விரிவான குறிப்பைப் பதிவு செய்திருக்கிறார். திருத்தக்கதேவர் குறித்தும் பரிமேலழகர் குறித்தும் இப்பகுதியில் எழுதியுள்ளார். கந்தபுராணம் உரையுடன் கூடிய பிரதி அவருக்குக் கிடைத்தது. அது குறித்தும் மிக விரிவாக எழுதியுள்ளார். இதில் பேசப்படும் கற்பனைக் கதைகளை விமர்சனம் செய்துள்ளார்.

இவ்வகையில் தமிழின் மிக முக்கியமான நூல்களின் சுவடிப் பிரதி சீகன்பால்கு அவர்களுக்குக் கிடைத் திருக்கிறது. இவற்றை எல்லாம் ஓலையிலிருந்து மாற்றித் தாளுக்குக் கொண்டு வர வேண்டும் என்று கருதினார். தரங்கம்பாடியில் அச்சுக் கூடம் உருவாக்குவதற்கு முதற்காரணம், அரிய தமிழ் நூல்களை அச்சு வடிவில் கொண்டுவர வேண்டும் என்பதே. இவ்வகையில் தமிழ் அச்சுப் பண்பாடு வளம்பெற பலவகையில் உழைத்தவர் சீகன்பால்கு.

சான்றாதார நூல்கள்

அரசு.வீ.  -  தமிழ்அச்சுப் பண்பாடு - 10 கட்டுரைகள். உங்கள் நூலகம் இதழ், ஜனவரி 2010 - அக்டோபர் 2010.

குலேந்திரன்.சபாபதி  - கிறிஸ்தவ தமிழ் வேதாக மத்தின் வரலாறு. இந்திய வேதாகமச் சங்கம், பெங்களூர், 1967.

தமிழ்நாடன்   -  தமிழ் மொழியின் முதல் அச்சுப் புத்தகம், சேலம் மாவட்ட ஓவியர் எழுத்தாளர் மன்றம், சேலம்,1995.

பாக்கியமுத்து சரோஜினி - விவிலியமும் தமிழும், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், 2003.

லாரன்ஸ்.எஸ் & அருள்தாஸ்.டி.  - இந்தியாவின் விடிவெள்ளி சீகன்பால்கு, கிறித்தவ இலக்கியச் சங்கம், சென்னை, 1997.

நஜ்மா.மு., கஸ்தூரி.மு.,    - காஞ்சி:ஐரோப்பிய, அமெரிக்க தமிழியல் அறிஞர்கள், 

மோகனா.அ.,காமாட்சி.மு.பரிசல், சென்னை, 2012.

Jayaraj, Daniel:               -        Bartholomaus Ziegenbalg: The Father of Modern Protest Mission - An Indian Assessment. The Indian Society For Promoting Christian Knowledge, New Delhi And The Gurukul Lutheral Theological College And Research Institute, India, 2007.

Trautmann.R.Thomas(Ed)  -  The Madras Of School Of Orientalism; Producing Knowledge in Colinical South India, Oxford University Press, New Delhi, 2009.

Thaninayakam,Xavier - The First Books Printed In Tamil; Tamil culture, 7:3:1958.

Catalogues:

Gaur Albertine                -       Bartholomaus Zegenbalgs Verzeichnis der Malabaris chen Bucher. (Bibliography of Tamil Books) Journal of the Asiatic Society of Great Britain & Ireland, London, 1967.

Murdoch John - Catalogue Of The Christian Vernacular literature-1870.

Murdoch John                      -   Classified Catalogue of Tamil Printed Books with Introducing Notes,1865.

Shaw,Graham(Compiled by)    - The SouthAsia and Burma-Retrospective Bibliography: Stage1:1556-1800, The British Library, London, 1987.

Pin It