‘நல்லவர்களுக்குக் காலமில்லை’ என்று கூறுவார்கள். எல்லாக் காலங்களிலும் சந்தர்ப்ப வாதிகளே பெரும்பாலும் வெற்றிபெறுகிறார்கள். பொய்கள் உலா வருகிறபோது உண்மைகள் ஓரமாக நின்று வேடிக்கைப் பார்க்கின்றன.

pavalar varadharajanமிகச் சிறந்த மேடைப் பாடகராகவும், கவிஞராகவும், நாடகாசிரியர் மற்றும் நடிகராகவும் பன்முகம் கொண்ட பாவலர் வரதராசனை காலம் மறந்து விட்டது என்பது பெரும் சோகம்தான்.

“வாழ்ந்தாருக்கும், வாழ்வோருக்கும் மார டிக்கும் புலவர்கள் வாழும் இந்நாளில் வாழ முடியாமல் மாண்டுபோன ஒரு மக்கள் கவிஞரைப் பற்றி, வாழ முடியாது போராடிக் கொண்டிருக்கும் சங்கை வேலவன் ஒரு புத்தகத்தை எழுதி பதிப்பித் துள்ளதை, வாழ முடியாது போராடிக் கொண் டிருக்கும் கோடிக்கணக்கான பாரதபுத்திரர்கள் சார்பில் பாராட்டியே தீர வேண்டும்” என்று தோழர் அறந்தை நாராயணன் பாராட்டியுள்ளார்.

மதுரை மாவட்டம் பெரியகுளம் வட்டத்தில் உள்ள பண்ணைபுரமே தோழர் வரதராசனின் கிராமமாகும். இராமசாமி கங்காணி இவரது தந்தையார்; சின்னத் தாயம்மாள் இவரது தாயார். அது ஒரு நடுத்தர விவசாயக் குடும்பம்.

ஆர்.டி. பாஸ்கர், இராசையா என்ற இளைய ராஜா, அமர்சிங் என்ற கங்கை அமரன் இவரது உடன்பிறந்தவர்கள். பாவலரின் துணையார் சீனி யம்மாள் இவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர். இவருக்கு நான்கு ஆண்மக்கள்.

இவரது ஊருக்கு அருகில் உள்ள சங்கராபுரம் வேலுச்சாமி என்ற சங்கை வேலவன் ‘படைப் பாளிகளின் பார்வையில் பாவலர் வரதராசன்’ என்ற இந்த நூலைத் தொகுத்துள்ளார்.

இந்த நூலில் பாவலரோடு தொடர்புடைய தலைவர்களும், அறிஞர்களும், எழுத்தாளர்களும், உடன்பிறந்தோரும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். தோழர்கள் எம். கல்யாண சுந்தரம், ஐ.மாயாண்டி பாரதி, கே.டி.கே. தங்கமணி, என்.இராமகிருஷ்ணன், எஸ்.தோதாத்ரி, ஆர்.நல்லகண்ணு, கலைஞர் மு.கருணாநிதி, த.ஜெயகாந்தன், ஆர்.டி.பாஸ்கர், இளையராஜா, கங்கை அமரன், திலகவதி ஐபிஎஸ், கே.ஜீவபாரதி ஆகியோர் பாவலரைப் பற்றிய தங்கள் கருத்து களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

“தமிழ் ஒளி, வெ.நா. திருமூர்த்தி, வரதராசன் ஆகியோர் பாட்டாளி வர்க்க அரசியல் வாழ் வுடன் தங்களை இணைத்துக் கொண்டவர்கள். அவர்களது அரசியல் லட்சியங்கள் ஈடேற வேண்டும் என்ற பேரவாக் கொண்டவர்கள். அந்த மக்களின் போராட்டத்தினை நடத்திச் செல்வதற்கு அவர்கள் தங்கள் கவிதையை அர்ப்பணித்துக் கொண்ட வர்கள்...” என்று மார்க்சியத் திறனாய்வாளர் எஸ். தோதாத்ரி குறிப்பிட்டுள்ளார்.

“1958இல் நடந்த தேவிகுளம், பீர்மேடு பொதுத் தேர்தலின் போதுதான் நான் பாவலரைச் சந்தித்தேன்.” என்று கூறும் தோழர் கே.டி.கே. தங்க மணி, “அதன் பிறகு மதுரை கட்சி அலுவலகத்தில் பாவலரும் நானும் அடிக்கடி சந்தித்துக் கொண்டோம்” என்று கூறுகிறார்.

பிறகு வாழ்க்கையின் நெருக்கடியான நிலையில் நோயுடன் போராடிக் கொண்டிருந்த பாவலரை மதுரை அரசினர் மருத்துவ விடுதியில் சந்தித்த தாகவும், அதுவே கடைசிச் சந்திப்பு என்றும் அவர் தமது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

“1962 ஆம் ஆண்டு மதுரை கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் ‘தியாகி மணவாளன்’ நாடகத்தை எழுதி நடத்தியுள்ளார். குறுகிய காலத்தில் நடத்த வேண்டியிருந்ததால் மணவாளனின் இரண்டு பிள்ளைகளாக பாவலரின் பிள்ளைகளும், மற்ற பாத்திரங்களாக தம்பிமார்களும் நடித்துள்ளனர். தியாகியின் மனைவியாக அவரது மனைவியும், தாயாராக அவரது தாயாரும் நடிப்பதாக இருந்த திட்டம் கைவிடப்பட்டது. இவ்வாறு குடும்பமே கலைக் குடும்பமாகத் திகழ்ந்தது” என்பதை தோழர் மாயாண்டி பாரதி தம் கட்டுரையில் தெரிவித் துள்ளார்.

“எம்.கே. தியாகராச பாகவதருக்கு ‘ஏழிசை மன்னர்’ பட்டமும், என்.எஸ். கிருஷ்ணனுக்கு ‘கலைவாணர்’ பட்டமும் வழங்கிச் சிறப்பித்த இராமநாதபுரம் மாவட்ட திருப்பத்தூர் மக்கள், தோழர் கூத்தக்குடி சண்முகம் தலைமையில், பாவலருக்கு விழா நடத்தி ‘இசைவாணர்’ பட்டம் வழங்கினார்கள்” என்பதையும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

“மாட்டி வண்டி போகாத ஊருக்குக் கூட எங்க பாட்டுவண்டி போயிருக்கு” என்று இளைய ராஜா குறிப்பிட்டிருப்பது பாவலரின் உழைப்புக்கு ஒரு சான்றிதழ்.

“தன் வாழ்க்கையையே மக்களுக்காக அர்ப் பணித்த ஒரு உன்னதமான கலைஞனின் கடைசிக் காலம் கல் நெஞ்சத்தையும் கரைக்கும். ஒரு கலைஞரின் ஆட்சியில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நேரத்தில் எந்தக் கட்சிக்காக அவர் பாடினாரோ, அந்தக் கட்சியிலிருந்து அவருக்கு ஜாமீன் கொடுக்க எந்தத் தலைவரும் வரவில்லை; எந்தத் தொண்டரும் வரவில்லை...” என்று இளையராஜா தமது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

“கலைஞனுக்கு வாழ்க்கை எவ்வளவு நீள மானது என்பது கணக்கல்ல. அது எவ்வளவு கூர்மையாய் இலக்கை நோக்கி வேகமாய்க் குறிதவறாமல் சென்று தாக்கி அழித்தது அல்லது அழிந்தது என்பதுதான் சிறப்பு. அத்தகைய சிறப்புக்கு முற்றிலும் பொருந்தி நெருப்பாய்ச் சுடர்விட்டு நின்றவர் தோழர் வரதராசன்...” என்று த.ஜெயகாந்தன் அவரது ஆற்றலை நினைவு படுத்துகிறார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு அறக் கட்டளை சார்பாக ‘பாட்டாளிகளைப் பாடிய பாவலர்கள்’ என்ற தலைப்பில் 1986 அக்டோபர் 8,9,10 ஆகிய நாட்களில் சிறப்பான ஆய்வுரையை தோழர் நல்லகண்ணு நிகழ்த்தியுள்ளார்.

“கவிஞன் காலத்தின் கண்ணாடியாகவும் இருக்கிறான். அதே நேரத்தில் காலத்தை உருவாக்கவும் செய்கிறான். பாவலர் வரதராசன் தன்னைப் பெற்றெடுத்த மதுரை மாவட்டத்தின் மலையடிவார மக்கள் வாழ்க்கையின் சின்னமாக விளங்கினார். அதே பொழுதில் அந்த மக்களின் வாழ்க்கை மாற்றத்திற்கான கருத்துகளைப் பாடித் திரிந்தார், எழுச்சியை உருவாக்கினார்...” என்பது அந்த உரையில் ஒரு பகுதி.

“வெள்ளைக்காரங் காலத்திலே

விலைவாசியைப் பாத்தியா?

கொள்ளைக்காரன் ஆட்சியிலே

கூடிப் போனதைப் பாத்தியா?”

என்று சுதந்திர நாட்டின் அவலத்தை அவர் சுட்டிப் பாடுவது இப்போது மட்டுமல்ல, எப்போதும் பொருந்தும்.

“பள்ளிப் படிப்பறிந்தேன்

பல தொழிலும் நான் புரிந்தேன்

பொதுவுடைமைக் கட்சிக்காகப்

பொன்பொருளை நான் இழந்தேன்

ஆடு வித்தேன்; மாடு வித்தேன்;

அழகான வீடு வித்தேன்;

ஆத்தா, அப்பன் தேடித்தந்த

அசோக வனத் தோட்டம் வித்தேன்”

என்பது கவிதையல்ல; ஒரு தியாகியின் வாக்கு மூலம்.

அரசியலுக்கு வந்து வீடும், தோட்டமும் வாங்கிக் குவிக்கிற இந்தக் காலத்தில், எல்லா வற்றையும் இழந்து கட்சிக்காகவும், மக்களுக் காகவும் வாழ்ந்த - வாழ்ந்து வருகிற மனிதர்களைப் பார்த்தால் வேடிக்கையாகத்தான் இருக்கும். பாவலரின் இறுதிக் காலம் மிகவும் சோகமானது என்பது சொல்லாமலேயே விளங்கும்.

மக்களுக்காக இறுதிவரை வாழ்ந்தவரை மக்கள் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடியிருக்க வேண்டும். துன்பம் வந்தபோது தோள் கொடுத்திருக்க வேண்டும். நன்றி மறந்த சமுதாயம் என்ற அவப்பெயரை நாம் எப்படித் துடைக்கப் போகிறோம்?

படைப்பாளிகள் பார்வையில் பாவலர் வரதராசன்

தொகுப்பு: சங்கை வேலவன்

வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ்

இராயப்பேட்டை, சென்னை- 600 014.

விலை: ரூ.120/-

Pin It