ஒரு ஊரில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. எல்லாம் பூர்வீகக் குடிகள்தான்.

பச்சைப் பசேலென நெல்வயல்கள், கருப்பந்தோட்டங்கள், மல்லாட்டக் கொல்லைகள், கம்பங்கொல்லைகள், தென்னந்தோப்புகள், புளியஞ்சாலைகள், பனஞ் சாலைகள், பழ மரங்கள் எனப் பசுமையான சூழலில் அவ்வூர் அமைந்திருக்கும். பறவைகளின் குரல் கேட்டுக் கொண்டிருக்கும். ஊரைச்சுற்றி பெரிய வாய்க்கால்கள் அதில் என்னேரமும் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். இவ்வூரின் தாகத்தைத் தீர்க்கும் பெரிய ஏரி ஒன்று அதன்கரை பரந்து விரிந்து கிடக்கும்.

ஏரியில் சேமித்து வைக்கப்படும் தண்ணீர் சுத்துப்பட்டு இருபது ஊர்களின் வேளாண்மையைச் செழிக்கச் செய்வதோடு அப் பகுதியின் நிலத்தடி நீர்மட்டத்தை தொடர்ந்து சமனில் வைத்திருக்கும்.

அதிகாலையில் வயல் வேலைக்குப் போகும் ஆண்கள், பெண்கள் என அனைவரும் மத்தியானம் ரெண்டு மணிக்குத்தான் வீடு திரும்புவார்கள்.

இந்த பகல் பொழுதில் இளந்தாரிகள் குழுவாகச் சேர்ந்து வேட்டைக்குப் போவார்கள்.

மரத்தில் கட்டியிருக்கும் பறவைக் கூடுகளில்

உள்ள முட்டைகளைச் சுட்டுச் சாப்பிடுவது,

காக்கா குஞ்சிகளை எடுத்து நெருப்பில் வாட்டிச் சாப்பிடுவது, எலி, அணில் போன்ற விலங்குகளை அடித்து சுட்டுச் சாப்பிடுவது, நண்டு நத்தைகள் பிடித்து வருவது, குட்டைகள், வாய்க்கால்களை கட்டி மீன் பிடித்துவருவது போன்ற பல வேலைகளைச் செய்வார்கள்.

அவ்வேட்டை பெரும்பாலும் அவர்களின் பகல் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்துவிடும்.

வேலைக்குப்போய் வீடு திரும்பிய மக்கள் அப்படியே திண்ணையில் உறங்குவதும், வெத்தல பாக்குப் போட்டுக்கிட்டு வங்க வீட்ல என்ன நடந்தது இவங்க வீட்ல என்ன நடந்தது என்று பேசிக் கொண்டிருப்பது வாடிக்கையான ஒன்று. பொழுது சாயுங் காலத்தில் அன்றைக்குக் கிடைக்கும் சொற்பமான கூலியைக் கொண்டு கிட்டத்தட்ட மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அரிசி, உப்பு, மிளகாய், மீன், கருவாடு போன்ற அன்றைக்குத் தேவையானவற்றையும் அவற்றுடன் தங்கள் பிள்ளைகளுக்கென சில நொறுக்குத் தீனியையும் வாங்கி வருவார்கள்.

இருட்டுவதற்கு முன் வீடு திரும்பியவர்கள் தாங்கள் வாங்கிவந்திருக்கும் உப்புக்கடல, மல்லாட்டப் பயறு, பட்டாணி, வரிக்கி, சுண்டல் போன்றவற்றை விளையாடிக் கொண்டிருக்கும் தங்களது பிள்ளைகளை அழைத்துக் கொடுப்பார்கள். அவர்களுடன் விளையாடும் அக்கம் பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுக்கும் கொடுப்பார்கள். பேதம் பார்க்க மாட்டார்கள். 

பிள்ளைகள் அதை வாங்கிக் கொண்டு தின்னதும் தின்னாததுமாய் விளையாட ஓடி விடுவார்கள். அவர்களது கவனம் முழுக்க விளையாட்டில் தான் இருக்கும். பின்னர் பெண்கள் சாப்பாட்டு வேலையை ஆரம்பித்து விடுவார்கள். வீட்டின் வாசலில் புதைத்திருக்கும் அடுப்பில் சோறாக்குவார்கள். இது தினசரி நிகழ்வுதான். இந்த நேரங்களில் ஏதாவது சுவாரசியமான நிகழ்வு ஒன்று கட்டாயம் நடந்தேறும்.

இப்படிப்பட்ட ஊரில் ஒவ்வொரு நாளும் ஒரு சுவாரசியமான நிகழ்வுகள் நடந்தேறும். ஊரில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தாங்கள் கண்டதை கேட்டதை ஊரில் உள்ள மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.  அப்படி ஒரு நிகழ்வு நடந்தால் அதைப்பற்றிதான் பேச்சாக இருக்கும். அப்படி ஒரு நாள் இதுமாதிரி கன்னிமார் சந்துகால் வாய்க்கா பக்கமா போவுதுன்னு சொன்னாங்க. ஊரே ஒன்னு கூடிச்சி.

கன்னிமார் போன திசையப் பார்த்த வாறு எல்லாரும் நிக்கறாங்க. அப்படியே கன்னிமார பாக்கப்போனா அடிச்சிடுமுன்னு சிலபேர் கம்முன்னு நின்னுட்டாங்க. அப்படி நெனச்சிக்கிட்டு இருக்கறதுல சிலபேர் அதோ போவுது கன்னிமார் மல்லிகப்பூ வாசம் கமகமன்னு வருதுன்னு சொல்லுவாங்க.

ஏழு கன்னிகளும் மஞ்சள் நிறச்சேலை கட்டிக்கிட்டு தல நெறைய மல்லிகப் பூவ வச்சிக்கிட்டு அதோ போறாங்கன்னு சொன்னதும்  ஊரில் உள்ள இளந்தாரிக எப்படியாவது கன்னிமார பாத்திடணுமுன்னு ஆசையில ஓடுனாங்க. அப்படி ஓடும் இளந்தாரிகளப் பாத்த பெருசுக கன்னிமார்கிட்டப் போவாதிங்கடா ஏதாவது விபரீதமாயிடப் போவுதுன்னு எச்சரிப்பாங்க.

இளந்தாரிக இது எதையும் காதிலயே வாங்க மாட்டாங்க. கருப்பந்தோட்டத்தை, சவுக்குக் கொல்லையை எல்லாம் தாண்டிப்போய் பார்க்கணும். அத தாண்டிப்போனா பெரிய வாய்க்கால் அது ஊசுட்டேரியிலிருந்து வருது. இவ்வூர்ப்பகுதியின் விவசாயம், இன்ன பிற பயன் பாட்டுக்காக தண்ணீர் வரும் வாய்க்கால் அது. இந்த ஊருக்கு வரும் தண்ணீர் பல பகுதிகளுக்குப் பிரிக்கப்படுகிறது.

அதனைப் பிரிக்கும் விதமாக ஒரு பெரிய தொட்டி கட்டப்பட்டிருக்கும் அது சிறிய குளம் போல இருக்கும். அந்த இடத்தில் இருந்து நான்கு வாய்க்கால்கள் பிரியும். ஒவ்வொரு மடையும் சுழற்சி முறையில் திறக்கப்படும். அந்த இடத்தில் பெரிய வாகை மரம் ஒன்று பார்க்கவே அப்படி இருக்கும். வேப்ப மரங்கள், பூவரசு மரங்கள், நொனா மரங்கள் என அப்பகுதி அடர்த்தியாக இருக்கும். வயலுக்குத் தண்ணி பாய்ச்சப் போறவங்க கூட உரும நேரத்தில, ரெண்டுங்கெட்டான் நேரத்தில அங்க போவமாட்டாங்க.

அந்த இடத்தின் தெற்குப்பகுதியில் ஒரு சாய்ந்து போன பூவரசு மரம். அதன் கீழே மண் பொம்மைகளைப் பிடித்துவைத்து ஒரு குடும்பம் ஆண்டுக்கு ஒருமுறை பொங்கல் வைத்துப் பெரியாண்டவர் சாமியைக் கும்பிடுவார்கள். அதன் அருகே ஏழு கல்லை நட்டுவச்சி கன்னிமார் சாமின்னு ஒரு குடும்பம் ஆண்டுக்கு ஒரு முறை கும்பிடுவார்கள். இந்த இரண்டு குடும்பங்களும் தாங்கள் சாமி கும்பிடும் போது தங்களின் குடும்ப உறுப்பினர்களைத்தவிர வேறு யாரையும் அழைத்துச் செல்லமாட்டார்கள்.

அவங்க என்ன சடங்கு செய்யறாங்கன்னு யாருக்கும் தெரியாது. அவங்களும் மற்றவர்களிடம் சொல்லமாட்டார்கள். இந்த இடம் தான் கன்னிமார் குளிக்குமிடமாம். பொழுதுசாயும் அந்தி நேரத்தில் ஏழு கன்னிமார்களும் ஊசுட்டேரியிலிருந்து கிளம்பி வாய்க்கால் வழியாக இவ்விடத்திற்கு வருவார் களாம். இரவு முழுக்க இவ்விடத்திலேயே தங்கி குளித்து விளையாடிவிட்டு அதிகாலையில் இவ்விடம் விட்டு சென்று விடுவார்களாம்.

இதையெல்லாம் யார் சொல்றாங்க, கன்னிமார் நடந்து போவதை முதலில் யார் பார்த்தது? அது எப்படி இருக்கும் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. அதைப் பற்றி யாரும் கவலைப்படவும் மாட்டார்கள். இப்படி ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வுகளை ஊரில் உள்ள ஆயாக்களும் அம்மாக்களும் தங்கள் பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் கதையாகச்சொல்லி அவர்களைத் தூங்க வைப்பார்கள்.

ஆயா, கன்னிமார்னா யார்? அது எப்படி இருக்கும்? பேயா? பூதமான்னு கேட்டாங்க பிள்ளைகள். அதுக்கு ஆயா, இல்ல அது தேவதைகள், அதுக அப்படியே வரும் அப்படியே போகும் என்றார். அதற்குப் பிள்ளைகள் அது எங்க இருந்து வருது அதப்பத்தி சொல்லு ஆயான்னு கேட்க கதை சொல்ல ஆரம்பிக்கறாங்க ஆயா.

கன்னிமார் கதை ரொம்ப காலத்துக்கு முந்தி கார்த்திகை மாசத்துல ஒரு நாள் அட மழை, அந்த மாசம்பூரா பேஞ்சிக்கிட்டே இருந்திச்சி. எங்க இருக்கிற தண்ணியும் இங்கதான் வருது. ஊசுட்டேரி ரொம்பிடிச்சி. பாத்தா மழையும் விடற மாதிரி தெரியல. எங்க இருக்கற தண்ணியும் இங்க வந்ததால ஏரியில  கடல் போல ஒரே அலையா அடிக்குது.

ஏரிக்கரையோ தண்ணியத் தாங்காம ஒடயற மாதிரி இருக்குது. அந்த ஏரிய வயசான பறையர் ஒருத்தர் காவல் காத்துவந்தார். ஏரி ரொம்பற வேகத்த பார்த்த அவருக்கு என்ன செய்யறது ஏது செய்யறதுன்னு தெரியல. எப்படியாவது நாட்டாமையிடமும், ஊர்ப் பெரியவர்களிடமும் இந்தச் செய்திய சொல்லணுமுன்னு நெனைக்கிறார்.

இங்க அப்பிடியே விட்டுட்டு போயிட்டா ஏரிய யார் பாத்துக்கறதுன்னு நெனச்சி ஆள் யார்னா வருவாங்களான்னு பாக்குறார். யாரும் வர்ற மாதிறி தெரியல. என்ன செய்யறதுன்னு நெனச்சிக்கிட்டே தலையில ஒரு சம்பு கூடைய கவுத்துகிட்டு காவ காத்துட்டு இருக்கறாரு. வெகு நேரம் ஆச்சி, அதுக்கப் பறம் அவரு பேத்தி மாதிரி பாவடை சட்ட போட்டுக் கிட்டு ஒரு பொண்ணு அங்க வருது. அது கையில சாப்பாட்டு வாளி. வந்த பொண்ணு சாப்பாட்டு வாளிய வச்சிட்டு தாத்தா கஞ்சி எடுத்திட்டு வந்திருக்கன் குடின்னு சொல்லுது. தாத்தாவும் சரிமான்னு சொல்லிட்டு வாளியில இருந்த கஞ்சிய வேக வேகமா குடிக்கிறாரு.

அந்த சின்னப்பொண்ணு தாத்தாவப் பார்த்து ஏன் தாத்தா ஒரே பதட்டமா இருக்கிறன்னு கேட்குது. அதுக்கு தாத்தா இல்லமா, இல்லமா எப்பவும் இல்லாத திருநாளா இப்பிடி மழை பூந்தடிக்குது? அதனால எங்க இருக்கிற தண்ணியும் இங்க வந்து சேருது, ஏரியும் ரொம்பிப் போச்சி, மழை வேற நிக்காம பேஞ்சிக்கிட்டே இருக்குது. இப்படியே போனா ஏரி ஒடஞ்சிடும், அதனால இந்தச்சேதிய ஊர் பெரியவங்க கிட்ட சொல்லணும்.

நான் ஒருத்தன் மட்டும் தனியா இத சமாளிக்க முடியாது. ஆட்கள கூட்டிட்டு வரணும் இங்க வேற ஆட்கள் யாரும் இல்ல, அதான் எப்படி ஏரிய விட்டுட்டுப் போவதுன்னு. தெரியாம இருக்கறம் மான்னு தாத்தா சொல்றாரு. அதுக்கு அந்தச் சின்னப் பொண்ணு அப்பிடியா தாத்தா நீங்க வேனுமுன்னா போய்ட்டு வாங்க இந்த ஏரிய நீங்க வரும் வரை ஒடையாம நான் பாத்துக்கறன்னு சொல்லுது.

அதுக்கு தாத்தாவோ எம்மா நீயோ சின்னப் பொண்ணு. என்னாலயே முடியில நீ எப்படிமா பாத்துக்கவன்னு கேட்க்கறாரு. அதுக்கு அந்தப் பொண்ணு இல்ல தாத்தா நீங்க பயப்பிடாம போய்ட்டு வாங்க நான் பாத்துக்கறன்னு சொல்லுது. சரி இவருக்கும் அந்தப்பொண்ண விட்டா வேற வழியில்ல.

அந்த ராத்திரி நேரத்துல தலையில சம்பு கூடைய கவுத்துகிட்டு கௌம்பிட்டாரு. மொதல்ல வடக்கு திசையில இருக்கிற ஊர்ல ஜமீன்கிட்ட சேதிய சொல்றாரு. அடுத்து தெற்குப்பக்கமா செய்தி சொல்ல கிளம்பிடறாரு. பொழுது விடியற நேரமாயிடிச்சி. இதுக்கு நடுவுல தெற்குப்பக்கமா இருக்கிற ஊரின் நாட்டாம ஒரு

கனவு காண்றாரு. அந்தக் கனவுல அட மழை விடாது பெய்யற மாதிரியும், ஏரி ரொம்பி வழியிற மாதிரியும், கன்னியாத்தா (சாமி) வந்து ஏரிய காக்கற மாதிரியும், ஏரிய காவக் காத்தவரு இங்க வந்து ஏரி ரொம்பிடிச்சி ஒடயிற மாதிரி இருக்குதுன்னு செய்தி சொல்லற மாதிரியும், எல்லாருக்கும் செய்தி சொல்லிட்டு ஏரிக்கு திரும்பிப் போற மாதிரியும், இவர் போனவுடனே கன்னியாத்தா அங்கிருந்து போயிடற மாதிரியும், உடனே ஏரிக்கரை உடைந்து ஊரே வெள்ளத்தில் மூழ்கிப்போயிடற மாதிரியும் தெரியுது. துடிச்சி புடிச்சி எழுந்து பாத்தா விடியற நேரம், மழை வேற விடாம பேஞ்சிக்கிட்டே இருக்குது.

தான் கனவு கண்டது போல ஏரிய காத்த காவக்காரன் வீட்டு வாசல்ல நின்னு அய்யா அய்யான்னு கூப்பிடறாரு. நாட்டாம வெளியில வந்து என்ன என்ன ஆச்சின்னு கேக்கறாரு. அதுக்கு காவக்காரனோ நெறைய மழ பேஞ்சி ஏரி ரொம்பி வழியிது, இப்படியே போச்சின்னா ஏரி ஒடஞ்சி ஊரே அழிஞ்சிடும், உடனே ஆட்கள கூட்டிட்டுப் போவனும் ஏரிக்கறைய பலப் படுத்தணுமுன்னும் ஏரியில ஒரு சின்னப்பொண்ண காவலுக்கு விட்டுட்டு வந்திருக்கன்னு சொல்றாரு.

நாட்டாமைக்கு ஒன்னும் புரியல, கனவுல கண்ட மாதிரியே இருக்குதேன்னு நெனச்சி ஊர்ப் பெரியவங்க கிட்ட தான் கண்ட கனவையும் ஏரி ரொம்பற செய்தியையும் சொல்றாரு. அதுக்கு அவங்களும் யோசிச்சி நீ கண்ட கனவு சரிதான், சாமிதான் உன் கனவில வந்து நடக்கப்போறத சொல்லி ஒன்ன எச்சரிக்குதுன்னு சொல்றாங்க. சரி அதுக்கு நாம என்ன பன்னனும் என்ன பரிகாரம் பன்னா ஏரி மடைய ஒடையாம பாதுகாக்க முடியும்ன்னு கேக்கறாரு நாட்டாமை. அதுக்குள்ள எல்லாருக்கும் செய்தி தெரிஞ்சி ஊரே ஒன்னு கூடிடுச்சி. ஊர்ப் பெரியவங்க ஒரு யோசனை சொல்றாங்க, அப்படிச் செய்தா எல்லாரும் தப்பிக்கலாமுன்னு முடிவெடுக்கறாங்க.

அந்த முடிவின்படி  ஏரி காவக்காரன கூப்பிட்டு நாட்டாம வீட்டில் எண்ணை தேச்சி குளிக்கவைத்து புதுத்துணியெல்லாம் போட்டுக்கச்செய்றாங்க. கறி சோறெல்லாம் போடுறாங்க. காவக்காரனும் வயறு முட்ட சாப்பிட்டாரு, வெத்தல பாக்கெல்லாம் கொடுக் குறாங்க. இத எல்லாத்தையும் அனுபவிச்சவருக்கு ஏரி என்ன ஆச்சோ ஏது ஆச்சோன்னும் அங்க ஒரு சின்னப்பொண்ண தனியா விட்டுட்டு வந்தமே அதுக்கு என்ன ஆச்சோன்னு தான் ஒரே கவலை. இந்த நேரத்தில் ஊர்காரங்க சேர்ந்து ஏரிக்குப் போகும் பாதையின் நடுவில்  ஒரு பெரிய குழிய வெட்டிட்டாங்க. ஊர்ல இருந்து நாட்டாமையும் மற்றவர்களும் காவக்காரனை கூட்டிக் கிட்டு கிளம்பிட்டாங்க ஏரிக்கு.

அப்படிப் போவும்போது குழி இருக்கும் இடம் வந்ததும் வண்டியவிட்டு கீழே இறங்கிய நாட்டாமை குழியபார்ப்பது போல தன் தோளில் இருந்த துண்டை பள்ளத்தில் வேணுமுன்னே நழுவ விட்டிடுறாரு. நாட்டாமையின் துண்டு பள்ளத்தில விழுந்தத பார்த்த  காவக்காரன் அய்யய்யோ எசமான் துண்டு பள்ளத்தில விழுந்திடுச்சேன்னு துண்ட எடுக்க எறங்கினான்.

காவக்காரன் பள்ளத்தில எறங்கினதும் எல்லாருமா சேர்ந்து அவர குழிக்குள்ள வச்சி மண்ணப்போட்டு மூடி காவக்காரர சாவடிச்சிட்டாங்க. இதெல்லாத்தையும் முடிச்சிட்டு ஏரிப்பக்கம் போவாம எல்லாரும் அவங்க அவங்க வீட்டுக்குப் போயிட்டாங்க. அவர காவு கொடுத்த இடத்துல ஒரு பாலத்த கட்டிட்டாங்க. அந்தப் பாலம் இன்னைக்கும் இருக்குது. அந்தப்பாலம் பறனெறிக்காப்பாலம்

என அப்பகுதி மக்களால் வழங்கப்படுகிறது. ஏரிய காவகாத்த சின்னப்பொண்ணு தன்னுடைய கால் கட்டவிரல எடுத்து ஏரி ஒடையிற இடத்தில வச்சிச்சாம். ஏரிக்கரை ஒடையாம அப்படியே இருந்திடுச்சாம். ஊர் சொல்லப்போன காவக்கார தாத்தா வருவார்ன்னு பார்த்த சின்னப்பொண்ணு காவக்காரன் வராததால அப்படியே சிலையா மாறிடிச்சாம். ரொம்ப காலத்துக்குப் பின்னாடி வந்தவங்க அந்த கன்னியாத்தா சிலைய எடுக்காம அதுக்கு மேல இடம் விட்டு பாலத்த கட்டிட்டாங்க.

அந்தச் சிலை இன்னைக்கும் ஊசுட்டேரி மதகுல தண்ணியில இருக்குதாம். ஒவ்வொரு வருசமும் தலைச்சன் பிள்ளைகளை காவு வாங்கிகிட்டு இருக்கு தாம். அதனால கன்னியாத்தா சிலை இருக்கும் இடத்தில் போய் குளிக்கக்கூடாது. அங்கதான் இந்த ஏழு கன்னி களும் இருக்குதாம். ஒவ்வொரு நாளும் ஊசுட்டேரி தண்ணி எங்க எல்லாம் பாயுதோ அங்க எல்லாம் இரவு நேரத்தில போய் பகலானதும் திரும்பி வந்திடுவாங்க.

இந்த கன்னியாத்தாவால தான் ஊசுட்டேரி ஒடையாம இருக்குது. கன்னியாத்தா மட்டும் இங்க இருந்து போயிட்டா ஏரி ஒடஞ்சி ஊரே அழிஞ்சிடும், பெரிய கோயில் கோபுரமும் ஒடஞ்சிடும். இது ஒரு நாள் கண்டிப்பா நடக்கும் என்பதோடு கதைய முடிச்சிட்டாங்க ஆயா. கதை குறித்த ஆய்வுகளின் போக்கு

மக்கள் ஏன் கதை சொல்கிறார்கள்? கேட்போர் ஏன் அதைப் பாராட்டுகின்றனர்? அவர்கள் ஏன் சிலவற்றை மட்டும் மற்றவற்றைவிடச் சிறப்பாகக் கருதுகின்றனர்? மேலும் ஒரு குறிப்பிட்ட தனி மனிதன் அல்லது குழு, ஒரு பனுவலை அர்த்தமுடையதாக, கவனத்திற் குரியதாகத் திரும்பத் திரும்பக் கதைப்பதற்குரியதாக ஏன் கருதுகின்றனர். 

தமிழ் நாட்டார் வழக்காற்றியல் புலத்தில் கதைகள் பற்றியும், கதைசொல்பவர்கள் பற்றியும் பெரும்பாலும் ஆய்வுகள் நிகழ்த்தப் படுவ தில்லை என தே.லூர்து.2011:154 கூறுவது குறிப்பிடத் தகுந்ததாகும். மேற்சொன்ன நிகழ்வை வைத்துப் பார்க்கும் போது கதை குறித்தான ஆய்வுகள் சொற்ப அளவில் நடந்திருப்பதை அறிய முடிகிறது.

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் முனைவர், இளமுனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொண்டவர்கள்  ஒரு வட்டாரத்தை எடுத்துக்கொண்டு அப்பகுதியில் மக்களிடையே நிலவும் கதைகளை முழுவதுமாக சேகரித்தார்களோ இல்லையோ பக்க வரையறையை அடிப்படையாக வைத்துக்கொண்டு தங்களது பட்டம் பெறுதலுக்கான கருவியாக்கிக் கொண்டனர் எனலாம்.

கி.ராஜநாராயணன், கழனியூரான் போன்றவர்கள் தங்களது உயிரோடும் உடலோடும் ஒன்றியிருக்கும் கதைகளைச் சேகரித்துக் கொடுத்திருக்கின்றனர். இவர்களுள் ஆ.திருநாகலிங்கமும் குறிக்கப் பெறுவர். தமிழ் மண்ணில் நிலவும் கதைகளை மேலைநாட்டு கோட்பாடான பிராப்பியத்தின் அடிப்படையில் அணுகியிருக்கிறார் ஸ்டீபன். மேலை நாட்டு ஆய்வாளர் களான ஆலன் டண்டிஸ் பிராப்பின் அமைப்பியல் கோட்பாட்டைப் பின்பற்றி வட அமெரிக்க இந்திய நாட்டார் கதைகளை ஆய்வுசெய்துள்ளார். மு. ராம கிருஷ்ணன் கதை சொல்லும் நபரைப்பற்றியும் அவரின் கதை சொல்லுதல் குறித்தும் ஒரு ஆய்வை நிகழ்த்தியுள்ளார்.

புதுச்சேரிச் சூழலைப் பொறுத்தவரை கதைகளின் கருவூலமாக விளங்கும் சமூகங்களாக இங்கு வாழும் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகங்களைக் குறிப் பிடலாம். இவர்களிடம் இன்றளவும் பாரிய அளவிலான கதைகள் வழக்கத்தில் உள்ளன.

வாசலில் உட்கார்ந்து வெற்றிலைப் பாக்கு போட்டுக்கொண்டிருக்கும் ஆயாவிடம் ஏன் ஆயா வெற்றிலைப்பாக்கு போடறீங்க என்று கேட்டால் அதற்கு ஒரு கதையைச் சொல்லுவார். சாலையோரம் இருக்கும் புளிய மரத்தைக் காட்டி, நாய், பூனை போன்ற விலங்குகளைக் காட்டி இது ஏன் இப்படிக் கத்துது, மரம் ஏன் அடர்த்தியா இருக்குது, இதன் வால் ஏன் வளைந்திருக்குது என்று கேட்டால் அதற்கு ஒரு பெரிய கதையை சொல்லுவார்கள்.

இந்த அடிப்படையில் நாம் நோக்கும் போது கதைகள் மக்களின் வாழ்வியலில் பிரித்தறிய முடியாத கூறாக விளங்குவதனைக் காண முடிகிறது. இவர்கள் சொல்லும் எந்தக் கதையையும் நம்பாமல் புறந்தள்ளி விட்டுச் சென்றுவிட இயலாது. அது ஒரு விவாதத்தைத் தொடர்ந்து வலியுறுத்தக் கூடியதாக அமைவதனைக் காணமுடியும்.

ஒரு மனிதன் பிறப்பு, வாழ்வு, சாவு என எல்லா நிலையிலும் கதைகள் நிழலாடிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு சமூகத்திற்கும், குலங்களுக்கும், குடிகளுக்கும் என அவர்கள் கும்பிடும் சாமிகளுக்கும், அவர்கள் செய்யும் சடங்குகளுக்கும் என கதைகளைச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். ஒரு கதையை ஆரம்பித்து பாதியிலேயே நிறுத்திவிட்டாலும் அக்கதையை அடுத்த முறை சொல்லும் போது ஒரு அறுபடாத தன்மையினைக் காணமுடியும். ஒரு கதையிலேயே பல கிளைக்கதைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். அவை எல்லாவற்றையும் ஒரு மையப்புள்ளி இணைத்துக் கொண்டிருப்பதைக் காண முடியும்.

இந்நிலையில் தமிழ்ச்சூழலில் ஒரு கதை, அது சொல்லவரும் தருக்கம், அக்கதையில் ஒளிந்திருக்கும் மக்களின் பண்பாட்டுக்கூறுகள், வரலாறு போன்றவற்றை வெளிக்கொண்டு வருதல் என்பதனை நோக்கியதாகக் கதை குறித்தான ஆய்வுகள் அமைதல் வேண்டும்.  இவ்வாறு கர்ணப்பரம்பரையாகச் சொல்லப்படும் கதைகள் பல ஆயிரம் ஆண்டுகளின் வரலாற்றை, அம்மக்களின் பண்பாட்டுக் கூறுகளை சுமந்து கொண்டிருக்கின்றன.

கதைகள் பெரும்பாலும் உழைக்கும் மக்களிட மிருந்துதான் ஆக்கம் பெருகின்றன. அவர்களிடமிருந்து அவர்களால் சொல்லப்படும் கதைகள் பெரும்பாலும் அவர்களின் சமகால வாழ்வியலோடு கடந்த கால வாழ்வியலையும் வரலாற்றையும் எடுத்தியம்புவதாக உள்ளன. ஒரு மண்ணின் வரலாறு அம்மண்ணின் உழைக்கும் குடிகளிடமிருந்துதான் தொடங்க வேண்டும் என்கிற கருத்தை பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

மக்கள் சொல்லும் கதைகளில் அவர்களின் வரலாறு, அச்சமூகம் கடந்து வந்த பாதை, அக்காலத்திய சமூக அமைப்பு, இயற்கையின் மீது மனிதன் கொண்டிருந்த கரிசனம் போன்ற ஏராளமான கூறுகள் அதனுள் உயிரோட்டமாக இருப்பதைப் புரிந்துகொள்ள முடியும். தற்காலச் சூழலில் கதைசொல்லுவோர்களின் எண்ணிக் கையும் குறைவு, கதை கேட்போர்களின் எண்ணிக் கையும் மிக மிகக் குறைவு.

சினிமா, தொலைக்காட்சி போன்ற காட்சி ஊடகங்கள் வீட்டிற்கே வந்து நடுவறையில் உட்கார்ந்துகொண்டு மக்களை கதை சொல்லவிடாமலும் கதை கேட்பதற்கான மனப்பாங்கை வளரவிடாமலும் தடுத்துக்கொண்டு நிற்கின்றன. அதே நேரத்தில் தாங்கள் கூறும் பகட்டான, போலித்தனமான, வக்கிரமான, நடைமுறைக்கு சாத்தியமில்லாத, சமூகத்தைப் பாழ்படுத்தக் கூடியதுமான கதைகளை மக்கள் தொடர்ந்து அசைபோடும்படி உளவியல் ரீதியிலான ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இந்த வியாபார யுகத்தியினுள் நாம் சிக்குண்டு கிடக்கிறோம் கன்னிமார் கதையும் ஊசுட்டேரியும் இன்றைய புதுச்சேரி ஒன்றியத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்குவது ஊசுட்டேரி. கிட்டத்தட்ட 7 கி.மீ பரந்து விரிந்து கிடக்கும். ஊசுட்டேரி புதுச்சேரி, தமிழகம் என இரண்டு பகுதிகளுக்கும் சொந்தமானது. ஆனால் புதுச்சேரி ஒன்றியப்பகுதிதான் இதன் மொத்தப் பயனையும் அடைந்து வருகிறது. வயலுக்கு நீர், நிலத்தடி நீர்மட்டம், ஏரியில் உள்ள மீன் குத்தகை என அனைத்தும் புதுச்சேரிக்கே.

இவ் ஏரிக்கு மழை மூலம் கிடைக்கும் நீரும், வீடூர் அணை, சங்கராபரணி ஆறு ஆகியவை நீர்வரத்துக்கான ஆதாரங்களாகும். இது புதுச்சேரியின் மிகப்பெரிய பறவைகள் தங்குமிடமாகவும் அமைந்திருக்கிறது. மேற்சொல்லப்பட்ட கதை இந்த ஏரியையும் கன்னிமார் சாமியைக் குறித்ததுமாக அமைகிறது. என்ற போதிலும் ஊசுட்டேரி அதைச்சுற்றி வாழ்ந்துவந்த மக்கள், சமூக அமைப்பு, ஏரியைக் காத்துவந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர். அவருக்கு எதிராக ஆளுவோர்களின் மனநிலை ஆகிய வற்றைப் பிரதிபலிப்பதாக அமைகிறது. மேலும்

இக்கதையை தங்களின் இளையவர்களுக்குச் சொல்லுவதன் மூலமாக தன் சமூகத்தின் வரலாற்றை, வரலாற்றில் தன் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றனர். ஏரியை காவல் காத்தல் என்கிற ஒரு செயலைவிட வேறு எந்தச் செயலையும் ஆற்றாத காவலாளியை காவு வாங்கியது கன்னியம்மன்.

Pin It