coimbatore- 2 600இடம்: கொங்கு நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு ஊர் மத்திய பாளையம். இவ்வூரின் தென்மேற்குப் பகுதியில் 1 கி.மீ தூரத்தில் கரிவரதராஜப் பெருமாள் கோயில் ஒன்று பழமையானதாக உள்ளது. இதன் சுற்றுச் சுவரின் தென்பகுதியில் நின்ற கோலத்தில் வீரனும் புலியும் சண்டையிடுகின்ற காட்சியைக் கற்பலகையில் பீடத்தின் மேல் புடைப்புச் சிற்பமாக நாயக்கர் காலக் கலையம் சத்துடன் சிறுத்தைப்புலி குத்திக்கல் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது.

காலம்: இந்நடுகல் சிற்பத்தின் உருவமைதியை நோக்க கி.பி.16 அல்லது கி.பி.17-ஆம் நூற்றாண்டின் நாயக்கர்கால கலைப்படைப்பை எடுத்துக் காட்டுவதாக அமைகிறது.

உருவமைதி: ஒரு வீரன் சிறுத்தைப்புலியோடு சண்டையிட்டு வீரமரணம் அடைந்ததற்காக இக் கற்சிற்பம் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வீரன் மக்களால் போற்றப்படுவதற்கும் புகழப்படுவதற்கும் காரணமாக நடுகல்லில் வணங்குவதற்குரியவனாகின்றான்.

1வு அடி அகலமும் 2லு அடி உயரமும் கூடிய பலகைக்கல்லில் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இச் சிற்பத்தின் கீழே பீடம் அமைக்கப்பட்டுள்ளது. இது 41 இஞ்ச் அகலமும் 2வு அடி நீளமும் கொண்டதாக விளங்குகிறது.

சிறுத்தைப்புலி வாலை நிமிர்த்தி நின்ற கோலத்தில் வலது பின்காலால் வீரனின் இடது கால் மீது ஊன்றி தனது பின் இடது காலைப் பின் வைத்து முன்கால்  இரண்டும் வீரனின் அதன் வாய் பிளந்த நிலையில் இரண்டு முன் கோரைப் பற்கைளக் காட்டி காது விடைத்து நிற்க சிறுத்தைப் புலியின் கொடூரக் காட்சியைக் காண முடிகிறது.

அமுதம்

வீரன் இடது காலை மடித்து வலது காலைச் சற்று தளர்த்திய நிலையில் வலது கையில் உள்ள குத்துவாளைச் சிறுத்தைப் புலியின் நடுவயிற்றுப் பகுதியில் குத்தி அதன் முனை பின்பகுதிக்கு வர இடது கையால் கொடுவாளை வெட்டுவதற்காக ஓங்கிய நிலையில் கோப விழியும் உயர்த்தி நிற்கும் மீசையும் எடுப்பான உடலமைப்போடு அவனது கோபத்தைக் காண முடிகிறது. வீரன் தலைப்பா முண்டாகக் கட்டுடன் கொண்டைமுடி இடது பக்கம் தெரிய காதுகளில் கடுக்கனோடு காணப்படுகிறான்.

இரண்டு கால்களிலும் வீரக்கழல்கள் அணிந்த நிலையில் மணிக்கட்டில் வீரக்கங்கணமும் முழங்கைப் பகுதியில் காப்பும் அணிந்திருப்பது அவன் சுத்த வீரன் என்பதைப் புலப்படுத்துகிறது. இவன் இடது கையில் உள்ள கொடுவாள் 1 அழ 12 செ.மீ. அளவிலும் வலது கையில் உள்ள குத்துவாள் 1ரு அடி நீளமும் கொண்ட தாக எடுப்பாக உள்ளன.

coimbatore statue 400நடுகல் வழக்கு

தென்னிந்தியாவில் நடுகல் நடும் வழக்கம் கால்நடைச் சமூகத்தில் செல்வாக்குப் பெற்றுத் திகழ்வதாகத் தொல்லியல் அறிஞர் இரா.பூங்குன்றன் அவர்கள் குறிப்பிடுவார்கள். புலி, பன்றி, சிங்கம் ஆகியவற்றுடன் போரிட்டு மாண்டவர்களுக்கு நடுகல் நடப்பெற்றதற்குச் சான்றுகள் உள்ளன. இந்நடுகல் சிறுத்தைப் புலியைக் கொன்று தானும் இறந்துபட்ட வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல்லாக  இக்கல் அமையப் பெறுகிறது. நடுகல் வழக்கம் குறிஞ்சி, முல்லையுடன் தொடங்கி நீண்டகாலம் செல்வாக்குடன் நிலை பெற்றது என்பதற்குச் சான்றாக இந்நடுகல் (கி.பி.17ம் நூற்றாண்டு) அமைகிறது.

கொங்கு நாட்டு நடுகல் வீரர்கள்:

 விலங்கு களோடு போரிட்டு மாண்ட நடுகல் வீரர்கள் பலரது நடுகற்கள் கொங்கு மண்டலத்தில் பல இடங்களில் கண்டறியப்பட்டு வருகின்றன.

மத்தியபாளையத்தில் கண்டறியப்பட்ட இந்நடுகல் வீரனது சிற்பமும் அப்படியே. குறிஞ்சிமலை அடி வாரத்தில் உள்ள முல்லை நிலப்பகுதி கொங்கு மக்களின் முக்கிய கால்நடைத் தொழிலுக்கு ஏற்ற இடமாக விளங்குகிறது. கால்நடை வளர்த்தல் என்பது இவர்களது முக்கிய தொழில். இது கால்நடை வளர்ப்புப் பண்பாட்டைக் காட்டுவதாக அமைகிறது.

கால்நடை மேய்த்தல் என்பது கொங்கு மக்களின் முக்கிய தொழிலாக அண்மைக்காலம் வரை திகழ்ந்து வந்தது. இக்கால்நடைகளை அடித்துச் சாப்பிடு வதற்காகக் கொடிய மலைவாழ் விலங்கினங்கள் மலையை விட்டு சில நேரங்களில் முல்லை நிலப் பகுதிக்கு வருவதுண்டு. இக்கால்நடைச் செல்வங்களைக் காப்பதற்காகவே அக்காலத்தில் ஆயுதங்கள் ஏந்திய வீரர்கள் ஊர்க்காவல் படை வீரரர்களாக வலம் வந்தனர்.

ஊரையோ, கால்நடைகளையோ பெருத்த சேதாரத்தை விளைவிக்க முயலும் கொடிய வனவிலங்கு களோடு சண்டையிட்டு மடிந்த வீரர்கள் வணங்கத் தக்கவர்களாகின்றனர்.  வீரனுடையை இறப்பு இங்கு போற்றப்படுகிறது. இவர்கள் வீர சுவர்க்கம் அடைவர் என்பது மக்கள் வழக்காற்று நம்பிக்கை. அவனது வீரம் வரலாறாக மாறுகிறது.

தீங்கு விளைவிக்கும் கொடிய விலங்குகளின் உயிர்ப்பலியிலிருந்து காப்பாற்ற நினைக்கும் வீரனது தியாகம் போற்றப்பட்டு அக்குடும்பத்தாராலோ அல்லது ஊர் மக்களாலோ வணங்குதற்குரியவனாகின்றான். இவ்வீரனைச் சிறப்பிக்கும் முகமாக இவ்வீரனது குடும்பத்தாரோ அல்லது ஊரார்களோ அவனது உருவத்தைப் பொறித்திருக்கின்றனர். இவனது நினைவைப் போற்றி எடுக்கப்படும் நடுகல் வீரக்கல்லாக, (Hero Stone)  நினைவுக் கல்லாக, (Memory Stone)  புலிகுத்தி மாண்ட வீரனுக்கு எடுக்கப்பட்ட கல்லாக, வணங்குதற்குரிய நடுகல்லாக அமைக்கப்படுகிறது.

சாதாரண எளிய மக்களின் செயற்கரிய செயல் இங்கு அரசியல் வரலாற்றுத் தளத்தில் நின்று பார்க்க வைக்கிறது இச்சம்பவம்.

மத்தியபாளைய சிறுத்தைப் புலி குத்திக்கல் வீரனின் சந்ததியினர் இவ்வூரில் இன்றும் வாழ்ந்து வருவது சிறப்புக்குரியது. இக்குடும்பத்தினர் தை மாதத்தில் இந்நடுகல்லை இன்றும் வணங்கி வருகின்றனர். குடும்ப வழிபாடாக இருந்து பிறகு அவ்வூர் மக்களாலும் வணங்கி வருகிற வளர்ச்சி நிலையைப் பிற நடுகல்லிலும் காண் கின்றோம்.

Pin It