pandiyan 450வரலாற்று ஆய்வுகள் என்றாலே, நிகழ்ந்த பழைய நிகழ்வுகள் குறித்த ஆய்வு என்பதாகப் பொதுப்புத்தியில் பதிந்திருப்பதைக் காண்கிறோம். தான் வாழும் சமகால நிகழ்வுகளை வரலாற்றுக் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்வது உயிரோட்டமான நிகழ்வாகும்.

கடந்தகால ஆய்வு என்பது ஆவணங்கள் மீதான ஊடாட்டமாக அமையும். சமகால வரலாற்று ஆய்வு என்பது, ஆய்வாளனின் நேரடிப் பங்கேற்பாக அமையும். 10.11.2014 நண்பகலில் தன் வாழ்க்கைப் பயணத்தை முடித்துக்கொண்ட நண்பர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் (1958-2014) அவர்கள் ஒரு சமகால நிகழ்வு சார்ந்த வரலாற்று ஆய்வாளன். பயணத்தின் இடைத் தூரத்திலேயே பாண்டியன் மறைந்துவிட்டார்.

அவரது நினைவுகள் எப்போதும் பெரும் வலியாகவே உடன் தொடர்கிறது. மரணங்களோடு வாழ்வது தவிர்க்க முடியாமல் போய்விட்டது. மறைந்த பாண்டியன் குறித்த நினைவுகளை அவருடைய செயல்களை நினைவுபடுத்திக் கொள்வதன் மூலம் மட்டுமே ஆறுதல் பெறமுடிவது போல் தோன்றுகிறது. அவரது சமகால நிகழ்வு சார்ந்த வரலாற்று ஆய்வுகள் குறித்த மீள் நினைப்பை இங்கு பதிவுசெய்ய முயலுகிறேன்.

- பாண்டியன் ‘‘Economical and Political Weekly’  என்ற இதழின் வழியாகவே தனது பதிவுகளை மிகுதியாகச் செய்திருக்கிறார். அவ்விதழில் 1989 - 2014 முடிய பாண்டியன் எழுதியவற்றை, அவரது உடல் சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த தருணங்களில், அவரை அனுப்பி வைத்துவிட்டு, இணைய தளத்தில் உள்ளவை களை தேடித் தொகுத்து, அன்றைய முழு இரவையும் அப்பணியில் கழித்து காலையில் எனக்குக் கிடைக்கும் படி சிபி அனுப்பி வைத்தான். பாண்டியன் நினைவை சிபி எதிர்கொண்ட முறை அப்படியாக இருந்தது.

அவைகளை கணிப்பொறியிலிருந்து படி எடுத்து வாசிப்பதன் மூலம், பாண்டியன் மறைவுத் துயரிலிருந்து விடுபடுவதாக என்னுள் ஒரு மாயை. அவ்வாறு வாசித்த அவரது கட்டுரைகள், சமகால நிகழ்வு குறித்த பல்வேறு செய்திப் பதிவுகள், அரிய நூல்கள் குறித்த மதிப்புரைகள் ஆகிய அனைத்தும் பாண்டியன் என்ற ஆய்வாளனின் பரிமாணம் குறித்து என்னளவில் புரிந்துகொள்ளும் தன்மையைப் பகிர்ந்துகொள்ளுவது பாண்டியனுக்குச் செய்யும் அஞ்சலியாக மனம் அமைதி கொள்கிறது.

1989 ஜூலை 29-இல் EPW  இல் ‘ ‘Culture and Subaltern Consciousness - An aspect of MGR Phenomenan’ ’ என்ற விரிவான கட்டுரையை பாண்டியன் எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரையில் மார்க்சிய தத்துவ அறிஞர் கிராம்ஸ்கியின் கோட்பாட்டை அடிப்படை யாகக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் (sub-altern) வெகுசனப் பண்பாட்டு மதிப்பீடுகளை எவ்வகையில் புரிந்துகொள்ளலாம் என்ற உரையாடலை முன்வைக் கிறார். இவ்வகையான உரையாடலுக்கான எடுகோளாக தமிழ்ச் சூழலில் எம்.ஜி.ஆர். என்று அழைக்கப்படும் மனிதர் சார்ந்த நடவடிக்கைகள், எவ்வகையில் ஒரு சமகால வரலாற்று நிகழ்வாக அமைகிறது என்பதைக் கொள்கிறார்.

வரலாற்றுப் போக்கில் குடிமைச் சமூகம், சனநாயகப் பண்புகளை வரித்துக்கொண்டதாகக் கருதப்படும் தேர்தல் முறை சார்ந்த நிகழ்வுகள் எவ்வகையில் நிகழுகின்றன என்பதை நாள்தோறும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இவ்வகைத் தேர்தல் மூலம், காட்சி ஊடகத்தில், நடிப்பிற்காக நடிக்கும் பாத்திரங்களை, எதார்த்தமானதாக கருதும் வெகுசனப் பண்பு கொண்ட மக்களின் வாக்குச் சீட்டுகளால், திரைப்பட நடிகர் என்னும் ஒரே ஒரு தகுதியுடையவர், ஆட்சி அதிகாரத்தை நிலையாக எப்படி கைப்பற்ற முடிந்தது? அது இன்னமும் தொடர்வதன் பின்புலம் என்ன? இன்னபிற கேள்விகளுக்கு பாண்டியன் மேற் கொண்ட உரையாடல், சமகால வரலாறு தொடர்பான புதிய பார்வையை நமக்குக் கொடுக்கிறது. காத்த வராயன், மதுரைவீரன் போன்ற கதைப்பாடல் நாயகர்கள் வடிவம், காட்சி ஊடக மரபால், எம்.ஜி.ஆர். போன்றவர் களுக்குக் கிடைக்கும் வெகுசன உளவியல் அங்கீகாரம் என்பது அம்மக்களின் ஒடுக்கப்பட்ட வாழ்முறையின் ஊடாகவே கட்டமைக்கப்படுகிறது. எம்.ஜி.ராமச் சந்திரன் இறந்துவிட்டதை ஏற்றுக்கொள்ளாத தமிழ் நாட்டு வெகுசனங்கள் இன்றும் வாழ்கிறார்கள் என்பதே உண்மை.

பாண்டியனின் மேற்குறித்த கட்டுரையின் விரிவான உரையாடல்தான் அவரது ‘The Image Trap - M.G.Rama chandran in Film and Politics’  (1992) என்ற நூலாக வடிவம் பெற்றது. இந்நூல் பலரும் குறிப்பிடுவதைப் போல் சினிமா என்ற ஊடகம் குறித்த புதிய அணுகுமுறையை முன்னெடுத்த நூல். தமிழ்ச் சமூகத்தில், இருபதாம் நூற்றாண்டில் உருவான ஒடுக்கப்பட்ட வெகுசனங்களை பெரும்பான்மையாகக் கொண்ட திராவிட இயக்க வரலாறு, எவ்வாறு தமிழ் சினிமா வரலாற்றோடு இரண்டறக் கலந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு உருவானது. வேறு எவ்வகையான தகுதிகளும் இல்லாமல், சினிமா ஊடகத்தின் செல்வாக்கை அடிப் படையாகக் கொண்டு, ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியும் என்பது உலகில் தமிழ்ச் சூழலில்தான் முதலில் நடந்தேறியது. இதன் தொடர்ச்சி தெலுங்குச் சூழலிலும் உருவானது.

பாண்டியனின் இந்த உரையாடல் மிகவும் கவர்ச்சியாகவும் அதே நேரத்தில் வெகுசனப் பண்பு களைத் தத்துவார்த்தக் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்வதற்கும் உதவியது. காட்சி ஊடகம் - ஒடுக்கப்பட்ட மக்கள் - வெகுசன உளவியல் - ஆட்சி அதிகாரம் என்ற வாய்பாடு தமிழ்ச்சமூக பொருளாதார மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கு எவ்வகையிலும் உதவாது.

ஒடுக்கப்பட்டவர்கள் மேலும் மேலும் சாதிய வடிவம், பாலின முரண்பாடு, பொருளாதார முரண் ஆகியவற்றோடு வாழும் அவலம் குறித்தப் புரிதல்தான் பாண்டியனின் உரையாடல். இந்நிகழ்வை அவர்கள் ‘புரட்சி’ என்ற சொல்லால் குறிப்பிடுவதும், ‘புரட்சித் தலைவன்’, ‘புரட்சித் தலைவி’ ஆகிய சொல்லாட்சி களும் சமூகத்தின் நகைமுரண்களாக உள்ளன. பாண்டியனின் இவ்வகையான சமகால வரலாற்று ஆய்வு அவரது நினைவுகளை நம்முன் என்றும் தொடரச் செய்யும்.

1991 மார்ச் EPW -இல் ‘Parasakthi : Life and Time of a DMK Film ’ என்ற கட்டுரையை அவர் வெளியிட்டார். இந்தக் கட்டுரை முன்னர் திராவிட இயக்க அடையாளத்தோடு சினிமாவில் செயல்பட்டவர்கள், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின் எவ்விதம் செயல் படுகின்றனர் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

1950களில் திராவிட இயக்கக் கருத்துநிலைகளை தமிழ்ச் சமூகம் எவ்விதம் எதிர்கொண்டது என்ற உரையாடல், 1952-இல் வெளிவந்த ‘பராசக்தி’ சினிமா மூலம் எவ்வகையில் அறியமுடிகிறது என்பதை விரிவான ஆவணங்களோடு பாண்டியன் முன்வைத்தார். அன்றைய சூழலில் இடதுசாரிக் கருத்துநிலை செல்வாக்குப் பெற்ற காலம். தேர்தலில் கம்யூனிஸ்டுகள் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றிருந்தார்கள். அவர்களை ஆட்சி அதிகாரத்திற்கு வரவிடாமல் தடுக்கும் சாணக்கியராக பெருமகன் இராஜகோபால் ஆச்சாரியார் செயல் பட்டார்.

பெரியாரிடமிருந்து பிரிந்து, தங்களை இடதுசாரிகள் என்று அடையாளப்படுத்தும் வகையில் அச்சு ஊடகம், மேடைப் பேச்சு, காட்சி ஊடகமான நாடகம் மற்றும் சினிமா ஆகியவற்றில் தி.மு.க.வினர் செயல்பட்டனர். 1920களில் உருவான சுயமரியாதை இயக்கம் சார்ந்த திராவிடக் கருத்தியல் சார்ந்து 1950களில் காங்கிரஸ் போன்ற பார்ப்பனிய மற்றும் முதலாளித்துவ அமைப்புகளுக்கு எதிரான செயல்பாடுகளை தி.மு.கழகத்தினர் மேற்கொண்டனர். சினிமா ஊடகம் அவர்களுக்குச் சாதகமாக அமைந்ததன் வடிவமே எம்.ஜி.இராமச்சந்திரன்.

இந்தச் சூழலில் சிவாஜி கணேசன் அவர்களின் உணர்ச்சிகரமான நடிப்பால் பராசக்தி சினிமா ஒரு கருத்தியல் வடிவமாகவே இருந்தது. இந்த வரலாற்றைப் பாண்டியன் மிகத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார். தமிழ் சினிமா மூலம் 1950-1990 கால வரலாறு, பொருளாதாரம், தத்துவம் ஆகியவை இணைந்த சமூகப் புரிதலை பாண்டியன் தமது திராவிட இயக்க அடையாள அரசியல் பதிவுகள் சார்ந்த ஆய்வுகள் மூலம் கட்டமைத்தார். 1989 எம்.ஜி.ஆர்.

குறித்தும் 1991-இல் ‘பராசக்தி’ குறித்தும் செய்த ஆய்வுகள் மூலம் தமிழ்ச் சமூகத்தின் அறியப்படாத வரலாற்றை அடையாளம் காட்டினார் என்று கருதமுடியும். பாண்டியன், பின்னர் 1996 ஏப்ரலில் ‘Tamil Cultural Elites and Cinema : Outline of An Argument’ என்று  EPW இல் எழுதிய கட்டுரையும் மேற்குறித்த வரலாற்றின் இன்னொரு பரிமாணமாக, குறிப்பாக ஒடுக்கப்பட்டோர் மொழி (sub-altern) குறித்தப் புரிதலாக உள்ளது. இவற்றைத் தொடர்ந்து நண்பர் வெங்கடேச சக்ரவர்த்தியோடு இணைந்து ‘ரோஜா’ (1994), ‘இருவர்’ (1997) ஆகிய சினிமாக்கள் குறித்து எழுதிய EPW கட்டுரைகள், தமிழ் சினிமா குறித்த புதிய புதிய புரிதல்களை வெளிப்படுத்தின.

பாண்டியன் 1989-1997 என்ற காலப்பகுதியில் பதிவு செய்துள்ள தமிழ் சினிமா வரலாறு, தமிழ்ச் சமூகத்தின் சமகால வரலாறாக இவ்வகையான ஆய்வின்மூலம் தமிழ் சினிமா குறித்த வரலாற்று அணுகுமுறையை அவர் பலருக்கு அறிமுகப்படுத்திய ஆசிரியராகவும் செயல் பட்டிருக்கிறார். இவ்வகையில், சினிமா பற்றிய பாண்டியன் ஆய்வு, வரலாற்றுப் புரிதலை வழங்கும் சமூக ஆவணமாக நம்முன் விரிந்துகொண்டே போகிறது.

தமிழ் சினிமா என்ற ஊடகத்தை எடுகோளாகக் கொண்டு அவர் மேற்கொண்ட, தமிழகத்தின் சமகால வரலாற்றைப் போலவே, தமிழ்நாட்டில் உருவான திராவிட இயக்கம் என்னும் அமைப்பு 1920 முதல் முன்னெடுத்த பல்வேறு கருத்து நிலைகள் தொடர்பான ஆய்வை ‘இந்திய தேசம்’ என்ற வரையறைக்குள் நின்று ஆய்வு செய்திருக்கிறார்.

இவ்வகையான ஆய்வுகளே இவரது அடையாளமாகக் கருதப்படுகிறது. தமது முனைவர் பட்டத்திற்கென அவர் மேற்கொண்ட நாஞ்சில் நாட்டு வேளாண்மையின் அரசியல் பொருளாதார வரலாற்றின் தொடர்ச்சி அவரிடம் இல்லை. மாறாக, சமகால வரலாறுகளே தமது ஆய்வுப் புலமாக அவர் அமைத்துக் கொள்கிறார். இந்தக் கண்ணோட்டத்தில் ணிறிகீ இதழில் எழுதிய கட்டுரைகள் தமிழ்ச் சமூக வரலாற்று மாணவனுக்கு உத்வேகம் அளிக்கவில்லை.

1993 அக்டோபரில்  EPW -இல் ‘ Denationalising the Past : Nation in E.V.Ramasamy’s Political Discourse  என்னும் கட்டுரையில் பெரியார் ‘தேசம்’ பற்றிக் கொண்டிருந்த கருத்துநிலையை உரையாடலுக்கு உட்படுத்தியுள்ளார். 1980களில் தேசம் என்ற கருத்தாக்கம் குறித்த உரையாடல் பரவலாக நடந்து கொண்டிருந்தது. இந்தத் தருணத்தில் பெரியார் எதிர்கொண்ட ‘தேசத்தை’ பாண்டியன் நமக்கு அறிமுகம் செய்கிறார். காங்கிரஸ்காரர்கள் முன்னெடுத்த சுதேசி கருத்துநிலையை, சுயமரியாதை இயக்கம் உருவாக்கிய பின் பெரியார் ஏற்றுக்கொள்ளவில்லை.

காங்கிரஸ்காரர்கள் எதிர்த்த தேவதாசி சட்டத்தை பெரியார் ஆதரித்தார். வர்ணாசிரம எதிர்ப்பு சார்ந்து காந்தி போன்றவர்கள் ஏற்றுக்கொண்ட இந்து மதத்தைப் பெரியார் ஏற்கவில்லை. ‘இந்துஸ்தான்’ என்பதை மறுத்தார். ‘தனித் திராவிட நாடு’ கோரினார். மொழி, இலக்கியம் சார்ந்து நவீன சிந்தனை மரபுகளை முன்மொழிந்தார். சமய மரபு சார்ந்த இலக்கியங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.

இராமாயண எதிர்ப்புப் போரை தம் வாழ்நாள் முழுவதும் மேற்கொண்டார். இவ் வகையான கருத்துநிலை சார்ந்து பெரியார் கட்ட மைக்கும் ‘தேசம்’ இந்தியப் பொதுப்புத்தி சார்ந்தோர் கட்டமைக்கும் தேசத்திலிருந்து மாறுபட்டிருப்பதை பாண்டியன் தமது ஆய்வில் முன்மொழிந்தார்.

பெரியாரின் ‘தேசம்’ குறித்த கருத்துநிலையின் தர்க்கப் பாங்கு, நவீனத்துவ தன்மைகள், பழமையிலிருந்து விடுபட்டு சமகாலத்தில் வாழ்தல் ஆகிய கூறுகளை பாண்டியன் விதந்து பேசியுள்ளார். ஏறக்குறைய இதே காலத்தில் சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தில் (MIDS) திராவிடக் கருத்துநிலை குறித்த திட்டக் கட்டுரை ஒன்றை (Working Paper) உருவாக்கினார். அந்தக் காலங்களில் பாண்டியனோடு நீண்ட நேரம் உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்தத் திட்டக்கட்டுரை ‘ ‘Social Scientist’ என்னும் ஆய்விதழில் மே-ஜூன் 1994-இல் வெளிவந்தது. “Notes on the Transformation of ‘Dravidian’ Ideology : Tamilnadu : 1900-1940” என்பது அதன் தலைப்பு.

பத்தொன்பதாம் நூற்றாண்டில், காலனியச் சூழலில், திராவிடக் கருத்துநிலை எத்தன்மையில் உருப் பெற்றது என்ற பதிவிலிருந்து ஆய்வு தொடங்குகிறது. காலனியத்தின் உடன் விளைவான கிறித்தவமும் அதனை முன்னெடுத்தவர்களும் குறிப்பாக கிறித்தவ தொண்டூழியர் களான பாதிரியார்கள் எவ்வகையில் இக்கருத்துநிலையை முன்னெடுத்தனர் என்பது சுவையானது. இந்தப் பின்புலத்தை பாண்டியன் விரிவாகப் பேசாது சுருக்க மாகவே கூறியுள்ளார்.

அயோத்திதாசர் பௌத்த மரபு சார்ந்த திராவிடக் கருத்தியல் குறித்துப் பேசுவதையும் பதிவு செய்துள்ளார். பின்னர் சைவர்கள் என்னும் புலமைத்துவ மரபினர் சைவக் கருத்தியலோடு திராவிடக் கருத்தியலை இணைக்கும் புள்ளிகளை முன்னெடுக்கிறார். பார்ப்பனீய கருத்தாடல்களை எவ்விதம் எதிர்கொள்கிறார்கள் என்பதையும் பேசுகிறார். இதனை மறைமலையடிகள் என்னும் ஆளுமையின் ஆக்கங்களை அடிப்படையாகக் கொண்டு உரையாடு கிறார். மறைமலையடிகள் மரபு பின்னர் திரு.வி.க. மரபாக உருப்பெறும் வரலாறு குறித்தும் பேசுகிறார்.

இந்த மரபுகளிலிருந்து வேறுபட்ட நவீன சுயமரியாதை இயக்கம் சார்ந்த திராவிடக் கருத்தியல் பெரியார் மூலம் எவ்வகையில் முன்மொழியப்படுகிறது என்பதை மிக விரிவான ஆய்வுக்கு உட்படுத்துகிறார். பார்ப்பனீய/வைதீக/சமசுகிருத மரபை வெள்ளாள/சைவ மரபு எதிர்கொண்ட முறையும், அதே மரபைப் பெரியார் எதிர் கொண்ட முறையும் வேறுபடும் புள்ளிகளைப் பாண்டியன் முன்வைக்கிறார். இதுகாலம் வரை ஐரோப்பிய வரலாற்று ஆய்வாளர்கள் (கேம்பிரிட்ஜ் பள்ளி) முன்னெடுத்த திராவிடக் கருத்தியல் குறித்த பார்வையி லிருந்து முற்றிலும் வேறுபட்ட இன்னொரு வரலாற்றைப் பாண்டியன் உரையாடலுக்குக் கொண்டு வந்தார்.

இவ்வகையில் ஈ.வெ.ராமசாமி என்ற மனிதனின் வருகையும் திராவிடக் கருத்தியல் உருப்பெறும் புதிய பரிமாணங்களும் இந்திய தேசீயம் என்னும் தேச நீரோட்டக் கருத்து மரபிலிருந்து முற்றிலும் வேறுபடும் வரலாறு பாண்டியன் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, “Towards National - Popular : Notes on ‘Self-respecters’ Tamil” டிசம்பர் 1996-இல் எழுதினார்.

கிராம்ஸ்சியின் கோட்பாடான ‘National - Popular’ என்னும் தன்மையை பெரியாரின் செயல்பாடுகளோடு பாண்டியன் இணைத்துப் பேசுகிறார். இந்திய தேசியம் என்னும் நீரோட்டத்திலிருந்து சுயமரியாதை இயக்கம் வேறுபடும் புள்ளிகள், தொன்மையான தமிழ்மரபு என்பது வைதீக மரபுக்கு எதிரான நிலையில் செயல் படுகிறது; இராமாயண - மகாபாரத மரபுகளை கம்பன் உள்வாங்கிய முறை; இவை அனைத்தையும் பெரியார் மறுத்து, வெகுசனப் பண்பு சார்ந்த தேசம் தொடர்பான கருத்தியலை எவ்வாறு முன்வைக்கிறார் என்ற ஆய்வை மேற்குறித்தக் கட்டுரையில் பாண்டியன் விவாதத்திற்குட் படுத்தியுள்ளார். திராவிடக் கருத்தியலின் இப்பண்புகள் சாதிய மரபுகள், வைதீக மரபான பார்ப்பனீய மரபுகள் ஆகியவற்றை எவ்விதம் எதிர்கொள்கின்றன? என்பதே பாண்டியனின் அக்கறையாக உள்ளது. இதன் இன்னொரு பரிமாணமாக One Step Outside Modernity : Caste, Identity Politics and Public Sphere”  என்னும் கட்டுரையை மே மாதம் 2002  EPW இல் எழுதினார்.

இக்கட்டுரையில் காலனிய காலத்தில், சாதியக் கருத்தாடல், காலனிய காலத்திற்குப் பின்பான சாதியக் கருத்தாடல், இக்கருத்தாடலை பெரியாரும் அம்பேத்கரும் எவ்வகையில் எதிர்கொண்டார்கள் என்ற உரையாடலை பாண்டியன் நிகழ்த்தியுள்ளார். இன்றைய சூழலில் மிகவும் முக்கியத்துவம் மிக்க கட்டுரையாக இது அமைகிறது. இக்கட்டுரையில் ஆர்.கே.நாராயணன் அவர்களின் தன்வாழ்க்கை வரலாற்று நூலை எடு கோளாகக் கொண்டு உரையாடும் பாங்கு மிக சுவையானது. நடைமுறை வாழ்க்கை என்பதே கருத்தியலாக வடிவம் பெறும் முறையைப் பாண்டியன் தமது கட்டுரைகள் அனைத்திலும் வெளிப்படுத்துகிறார். 

சமகால நேரடி நிகழ்வுகள்தான் அவரது ஆய்வுக்கான அடிப்படைத் தரவுகள். இத்தன்மை இக்கட்டுரையில் மிக நுண்ணியதாக செயல்பட்டிருப்பதைக் காண்கிறோம். “Dilemmas of Public Reason : Secularism and Religious Violence in Contemporary India”  என்ற கட்டுரையை மே-ஜூன் 2005 EPW இல் பாண்டியன் எழுதியுள்ளார்.

2003-இல் ஜெயலலிதா அரசு, உயிர்ப்பலி தடுப்புச் சட்டத்தைக் கொண்டுவந்தது. அதனை அடிப்படையாகக் கொண்டே பாண்டியன் இந்தக் கட்டுரையை எழுதியுள்ளார். இந்து மதம், சாதி சார்ந்த கருத்தாடலை எவ்வகையில் நடைமுறைப்படுத்துகிறது. வழிபாடு தொடர்பான இச்சட்டத்தில் அத்தன்மை எவ்வகையில் வெளிப்படுகிறது என்பதே இக்கட்டுரையின் அடிப்படை விவாதம்.

ஆளும்வர்க்கக் கருத்தியல்  தமது சட்ட நடவடிக்கைகளை எவ்வாறெல்லாம் முன்னெடுக்கும் என்பதை இதில் விரிவாகப் பேசுகிறார். இவ்வகையில் தமிழ்ச் சூழலின் வெகுசனக் கருத்தியல் மரபு அவைதீக மரபு வழிப்பட்ட திராவிடக் கருத்தியல் மரபுதான் என்ற உரையாடலைப் பாண்டியன் தொடர்ந்து முன்னிறுத்துகிறார். இதன் உச்சகட்ட வெளிப் பாடாகவே அவரது நூல் 2007-இல் வெளிவருகிறது. Brahmin and Non-Brahmin : Genealogies of the Tamil Political Present என்னும் இந்நூல், மேற்குறித்த பல்வேறு உரையாடல்களின் வரையறை செய்யப்பட்ட தொகுப்பாக அமைகிறது. பாண்டியனின் தர்க்க மரபு வழிப்பட்ட தொடர்ந்த ஆய்வுப் போக்கை கால ஒழுங்கில் வாசிக்கும்போது உள்வாங்க முடிகிறது.

இன்றைய தமிழ் அரசியலின் குடிவழி மரபு குறித்துப் பேசும் பாண்டியனின் நூலை மதிப்பிட்ட Manjari Katju (EPW  சனவரி - பிப். 2007) பின்வரும் வகையில் கூறுகிறார்: இந்திய மெய்ப்பொருளியல் ( Indian Ontology) குறித்த தேடுதலை மேற்கொண்டவர்கள், அதனை எவ்விதம் கீழைத்தேயவியலாகக் (Orientalism) கட்டமைத்தனர் என்பதைப் பதிவு செய்கிறார். தொடர்ந்து, எட்வர்த் செய்யித் எவ்விதம் கீழைத் தேயவியலை கட்டுடைப்பு செய்தாரோ, அந்தப் பாங்கில் இந்தியா சார்ந்த கீழைத்தேயவியலை, ஒடுக்கப்பட்டோர் சார்ந்த (Sub-altern) கருத்தியலாக எவ்வகையில் பார்க்க வேண்டும் என்பதை பாண்டியனின் “பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதோர் கருத்தியல் சார்ந்த இன்றைய தமிழ் அரசியலின் குடிவழி மரபு” என்னும் நூல் முன்வைக்கிறது என்று கூறுகிறார். இந்தியா என்று கூறப்படும் நாட்டில் வைதீகம் என்பதும் பார்ப்பனீயம் என்பதும் ஒரு பொருள் குறித்த சொற்களே.

Brahmin  என்று ஆங்கிலத்திலும் ‘பார்ப்பனர்’ அல்லது ‘பிராமணர்’ என்று தமிழிலும் புழக்கத்தில் உள்ள சொற்களை வெறும் சாதீயக் குறியீடாகப் பார்ப்பது அதன் பொருளை சுருக்குவதாக அமையும். அச்சொற்கள், வைதீகம்/மநுதர்மம்/சாதி எனப்படும் பல்வேறு கொடுமைகளைக் கட்டமைக்கும் பொருளைக் கொண்ட சொல் என்னும் கண்ணோட்டத்தில் பாண்டியன் ஆய்வு நிகழ்ந்துள்ளது.

தமிழகத்தில் ஒடுக்கப்பட்டோர் ஆய்வு (Sub-altern studies inTamilnadu)), இந்தியாவின் கீழைத்தேயவியல் என்ற ஆதிக்கக் கருத்தாடலின் தகர்வு ஆகியவற்றைப் பாண்டியன் இந்த நூலின் மூலம் உரையாடலுக்கு உட்படுத்துகிறார். இந்த நூல் தமிழ்ச் சமூக வரலாறு தொடர்பான கருத்தாடல் மரபு சார்ந்து கவனத்தில் கொள்ள வேண்டிய புள்ளிகளை முன்வைக்கிறது. வெறும் சாதீய முரண்களை அது பேசவில்லை.

* * *
பாண்டியன் EPW இதழில் எழுதியுள்ள  பல்வேறு பதிவுகள் (Reports), பல நூல் மதிப்புரைகள், வேறு பல சிறிய கட்டுரைகள் குறித்தும் விரிவாகப் பேசமுடியும். சமூக அக்கறைமிக்க ஒரு இதழியலாள ராகவும் பாண்டியனைப் புரிந்துகொள்ள அவரது EPW பதிவுகள் உதவுகின்றன. அவரது பரந்துபட்ட வாசிப்பை நூல் மதிப்புரைகள் காட்டுகின்றன.

பாண்டியன் Subaltern Studies Editorial Collective -வில் செயல்பட்டு அவர் வேறு சிலரோடு சேர்ந்து பதிப்பித்த தொகுதி XII இல் இடம் பெற்றிருக்கும் இஸ்லாமியர்கள், தலித்துகள் தொடர்பான கட்டுரைகள் அவரது பார் வையின் வேறு சில பரிமாணங்களைக் காட்டுகின்றன.

Writing Ordinary Lives என்னும் EPW செப். 2008 வெளிவந்த கட்டுரை, பாமாவின் ‘கருக்கு’, கே.ஏ.குண சேகரனின் ‘வடு’ ஆகிய தன்வரலாற்றுப் பதிவுகளைக் குறித்தது. Nation Impossible ’ என்னும் கட்டுரை மார்ச் 2009  EPW இல் வந்துள்ளது. இக்கட்டுரை டொரண்டோ பல்கலைக்கழக தமிழியல் ஆய்வு மாநாட்டில் பாண்டியன் பேசியது, அப்போது உடன் இருக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

ஈழம் குறித்த உரையாடலாக அக்கட்டுரை அமைந்துள்ளது. சமூக வரலாற்று ஆய்வாளனின் கள ஆய்வின் நேர்மை மற்றும் நம்பகத் தன்மையை, பாண்டியனின் ‘ Social Sciences in South Indian : A Survey (EPW ஆகஸ்ட்-செப்.2002) என்னும் மிக விரிவான கட்டுரையில் இளம் ஆய்வாளர்கள் கண்டு மகிழலாம். பாண்டியன் ஆசிரியராக இருந்து கொண்டுவந்த ‘ South Indian Studies (1996-1997)’ நான்கு இதழ்கள் தென்னிந்திய ஆய்வு தொடர்பான பல கட்டுரைகளைக் கொண்டு உள்ளது.

* * *
பாண்டியனை இழந்த இந்தத் தருணத்தில், பாண்டியன் என்ற சமூகவியல் ஆய்வு அறிஞனை மேலே பலபடப் பதிவுசெய்ய முயன்றுள்ளேன். இவை மிகமிக தட்டையான பதிவுகள் என்பது எனக்குத் தெரியும். இன்னும் நுண்ணிதான வாசிப்பை மேற்கொண்டு பாண்டியனின் நுண்மையான ஆய்வுலகப் பயணம் குறித்து நாம் பேசவேண்டும். பாண்டியன் என்ற நீண்டகால (1989-2014) நண்பனைப் பற்றியும் பேச வேண்டும். இதற்கெல்லாம் மேலாக டெல்லி சென்று புதிய பரிமாணத்தில் மாணவர்களோடு வாழ்ந்த வகுப்பறை சார்ந்த பாண்டியன் என்னும் ஆசிரியன் பற்றியும் பேசவேண்டும்.

முப்பது ஆண்டுகால ஆசிரியத் தொழில் செய்த எனக்கு பாண்டியனின் இறுதிக்கால ஆசிரியர் தொழிலின் பெருமை குறித்து விரிவாகப் பேச ஆசை. இவற்றையெல்லாம் நான் எனக்குள் பேசிக் கொள்வதே பாண்டியனுக்குச் செய்யும் அஞ்சலி. பொதுவெளியில் அவற்றைப் பேசாத ஒருவகைப் புனித மனநிலை ஏற்படுகிறது. பாண்டியன் என்ற நண்பனை இழந்த புலம்பல் பதிவுகள் இவை.


குறிப்பு : பாண்டியனின் Economical and Political Weekly இதழில் எழுதிய கட்டுரைகள் சார்ந்து அவரது ஆக்கங்களை மேலோட்டமாக அறிமுகப்படுத்துகிறது இக்கட்டுரை. அவரது பிற எழுத்துக்களையும் வாசித்து இதனை நிறைவு செய்யவேண்டும்.

Pin It