natarajan book 350அறிவுப் பரிமாற்றம், தொழில் அல்லது பணி நிமித்தம், இன்பச் சுற்றுலா... என இப்படிப் பல்வேறு நிலைகளில் வெளிநாட்டுப் பயணங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. இவை தவிர வெளிநாட்டில் வாழும் குடும்ப உறவுகளின் நலன் காக்கப் பயணங்கள் மேற்கொள்ளும் மூத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. 

அதிலும் அமெரிக்கப் பயணம் என்பது சர்வசாதாரணமாக நிகழ்ந்து வருகிறது.  எழுத்து ஆற்றல் நிறைந்தவர்கள் பயண நூல்களை எழுதித் தள்ளுகின்றனர்.  அமெரிக்கப் பயணம் குறித்து ஏராளமான நூல்கள் வந்துள்ளன; வந்து கொண்டேயிருக்கின்றன.  அப்படி ஒரு நூல்தான் சமீபத்தில் நான் படித்த-

“அமெரிக்காவுக்கு ஒரு பயணம்.” நூல் ஆசிரியர் தி.சு. நடராசன்.

“பயணம்  என்பது வழக்கமான வாழ்க்கையிலிருந்து - அதன் இடிபாடுகள், சலிப்புகள், சோர்வுகள் முதலியவற்றிலிருந்து - தப்பித்தல் (escape) என்று வருணிக்கப்படுகிறது.”

முன்னுரையே இப்படி வித்தியாசமாய்த் தொடங்குகிறது.  முதுகு நிமிர்ந்து ஆர்வத்தோடு நம்மைப் படிக்கத் தூண்டுகிறது....

சின்னச் சின்னத் தலைப்புகள், 17 தலைப்புகள்.  அலுக்காத அழகான  தமிழ் நடை.  மிகைக்கூற்றோ குறைந்த மதிப்பீடோ கிடையாது.  உள்ளது உள்ளபடி பார்த்தது பார்த்தபடி படம் பிடித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர். 

தனது மதிப்பீடு களையும் மௌனமாய்ப் பதிவு செய்துள்ளார்.  முகம் காட்டும் கண்ணாடியாய் செயல்பட்டிருக்கிறார்.  இது எல்லாராலும் முடியும் என்று சொல்ல முடியாது.  திறனாய்வாளர்களால் மட்டுமே இயலும்.  நூலாசிரியர் திறனாய்வாளர் ஆயிற்றே; அதை நிறுவிக் காட்டியுள்ளார்.

தங்க நுழைவாயில் (சான்ஃபிரான்சிஸ்கோ) தொடங்கி, ஒரு தலைநகரம் (வாஷிங்டன்) வரை ஒவ்வொரு அத்தியாயமும் விறுவிறுப்புடன் ஒரு நாவலுக்கு உரிய ஓட்டத்துடன் அமைந்துள்ளது.

“நீண்ட இந்தப் பாலத்தின் இறுதியில் வலப் பக்கம் ஓரமாய் ஒரு சிறிய கடற்கரைவெளி.  சிறிய உருண்டைப் பாறைகள் பல வீசி எறியப்பட்டது போலச் சிதறிக் கிடக்கின்றன.  புகழ் பெற்ற அந்தப் பாலத்தில் (Golden Gate Bridge)  கால் பதித்துவிட்டு வந்தோம்.”

“கடலும் மேகமும் எப்போதும் எங்குமே அழகுதான்.”

“பிரமிப்பை ஏற்படுத்துதலும் பிரம்மாண் டத்தைக் காட்டுதலும் அமெரிக்கப் பண்பாட்டின் மிக முக்கியமானதொரு பகுதி.”

“உலகத்தின் பிடி என் கைகளில்...” என்று சொல்லிக் கொள்வதுபோல, ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகம்...

அடங்கியும் அடர்ந்தும் உடல் நெளிந்தும் வரும் ஹட்சன் ஆறு... இப்படிப் பல வரிகள் கல்வெட்டாய் மனத்தில் பதிந்துவிடுகின்றன.

‘விளம்பரம் தாங்கி’ இளைஞர்களை ஆசிரியர் நியூயார்க் நகரத்தில் பார்க்கிறார்.  அது குறித்து,

“கடும் குளிருக்குள்ளும் வெயிலுக்குள்ளும் நாற்சந்தியில் நிற்கும் இந்த இளையோர்க்கு

என்ன வருமானம் கிடைத்துவிடும்?”  என்று அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறார்.  அங்கேயும்  வேலையில்லாத் திண்டாட்டம் இருக்கிறது என்று சமூகத்தின் யதார்த்த நிலையைச் சொல்கிறார்.

“உயரங்கள் ஆசைகளின் பெருமித உணர்வுகளின் அளவுகள்” என்று நியூயார்க் நகரில் அமைந்துள்ள ‘சுதந்தரதேவி’ சிலையைப் பார்த்துவிட்டு ஆசிரியர் இவ்வாறு சிந்திக்கிறார்.

“எதையும் அனுபவிப்பதற்கு வெறும் ரசனையும் ஆர்வமும் மட்டும் போதாது; காத்திருத்தலும் அதற்கான பொறுமையும் அவசியம்.  இது “In and out Burger”

 என்று துரிதஉணவகத்தில் வரிசையில் நின்றிருந்த போது நூலாசிரியருக்குத் தோன்றிய எண்ணம்.

களியாட்டத் தலைநகரம், சூதாட்டத் தலை நகரம் என்று வருணிக்கப்படுவது போல ‘திருமணத் தலைநகரம்’ என்னும் லாஸ் வெகாசு (Las vegas) அழைக்கப்படுகிறது!

இன்னொரு வியப்பான செய்தி.

“பல நகரங்களில் நட்சத்திர ஓட்டல்கள் எனப்படும் ஆடம்பர விடுதிகளில் கூட மதுபானம் அனுமதிக்கப்படுவதில்லை” என்பதுதான் அந்த வியப்பான செய்தி.

“மேகங்களை உறிஞ்சும் பல மாடிக் கட்டடங்கள்; மறுபக்கம் தூங்கவும் சமைத்து உண்ணவும் போக்கு இல்லாமல் வீதிகளில் படுத் துறங்கும்  மக்கள்” இந்தக் காட்சியை  சியாட்டில் நகரில் காண்கிறார் நூலாசிரியர்.

நயாகரா அருவியின் அற்புதத்தை ஆசிரியரின் மன ஓட்டத்தில் அறிய, நாம் நூலைப் படித்தால் தான் முடியும்.  அதேபோல் லிங்கன்  நினைவகம், வெள்ளை மாளிகை பற்றிய அவரது மதிப்பீடுகள், பார்வைகள், படியுங்கள்.

அவசியம் நூலை வாங்கிப் படியுங்கள்.  அப் போது உணர்வீர்கள். 

நியூசெஞ்சுரி புத்தக நிறுவனத்தார் நூலை அழகாக வெளியிட்டுள்ளார்கள்.  அச்சு அருமை.  புகைப்படங்கள் இன்னும் தெளிவாய் இருந்திருக் கலாம்.

பயண நூல்களில் தனித்துப் பயணிக்கிறது.  ‘அமெரிக்காவுக்கு ஒரு பயணம்’ என்று கூறலாம்.

அமெரிக்காவுக்கு ஒரு பயணம்

ஆசிரியர்: தி.சு.நடராசன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை - 600 098

விலை: ரூ.130/-

Pin It