குழந்தை இலக்கியத்தில் முதன்மை இடத்தைப் பெறுவது பாடலே.  அதற்குக் காரணம் இருக்கிறது.  குழந்தை ஓசை இன்பத்தை விரும்புகிறது.  அதைத் தரவல்லது பாடலே.  தாலாட்டுப் பாடலில் இருக்கும் ஓசை இன்பத்தில் மயங்கிய குழந்தை அழுகையை நிறுத்துகிறது.  தாலாட்டு குழந்தையை தூங்கவும் வைக்கிறது.

நமது தாய்மாரும் பாட்டிமாருமே குழந்தைக்கு பாட்டின் மீது ஆசையை ஏற்படுத்தியவர்கள். 

அந்த ஆசையைப் போக்கடித்தவர்கள் நமது பள்ளிக்கூட ஆசிரியர்கள்.

சோறு ஊட்டும் போதும் விளையாட்டு காட்டும் போதும் ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு; சாயக்கிளியே சாய்ந்தாடு’ என்றோ, ‘கை வீசம்மா கைவீசு; கடைக்குப் போகலாம் கைவீசு’ என்றோ பாட்டுப் பாடி குழந்தைக்கு பாட்டின் சுவையை உணர வைத்தார்கள்.

குழந்தைகளுக்கு படித்த கட்டுரை மறந்து விடும்.  கதை ஓரளவு நினைவில் நிற்கும்.  பாட்டோ பசுமரத்தாணி போல் மனத்தில் பதிந்துவிடுகிறது.  காரணம் பாடலின் மொழி, (The language in poetry is musical, precise, memorable and magical) . அது மனதின் மொழி.  ரோஜாவைப் பற்றிய பாடல் என்றால் அதில் ரோஜா தெரியக் கூடாது.  ரோஜாவின் மணம் உணரப்பட வேண்டும்.

‘கவி பாடலாம்’ என்ற தனது நூலில் யாப்பிலக் கணத்தை பாமரருக்கும் புரியும் வகையில் விளக்கி யவர் கி. வா.ஜ. “குழந்தைகளின் உள்ளம் சொல்லின் நயத்திலும் பொருளின் சிறப்பிலும் ஈடுபடுவதில்லை.  அவர்கள் மென்மையான ஒலியைத்தான் கவனிக் கிறார்கள்.  காதுக்கு இனிய ஒலிகளைக் கேட் கிறார்கள்.  அவர்கள் மொழியே ஒலியின் தொகுதி யாகத்தான் அமைகிறது’ என்று குழந்தைந் பாடலின் மொழி பற்றி கி.வா.ஜ. சொல்லியுள்ளார்.

குழந்தைப் பாடல்களுக்கு பெரிய இலக்கணம் எதுவும் தேவையில்லை.  வெண்பா, அகவல்களுக்கு கட்டுப்பட்டு பாடல்கள் எழுதினால் குழந்தை களுக்குப் புரியாது.  ஏனென்றால் அந்த செய்யுளை இசையாகப் பாடினாலும் கட்டுக்கோப்புக்குள் அடங்காது.  அதனால்தான் நான்கு நான்கு அடிகள் கொண்ட கண்ணிகளாக குழந்தைப் பாடல்கள் எழுதப்படுகின்றன.

குழந்தைப் பாடல்களுக்கு சந்தமே முக்கியம்.  தத்தகாரம் என்னும் ஒரு தாளக்கட்டை ஓரிடத்தில் கூட இடறாமல் கொண்டு செல்வது சந்தம்.  சந்தத்தில் இருக்கும் பாடலைத்தான் குழந்தைகள் தங்களுக்குச் சொந்தமானதாக நினைத்துப் பாடு கிறார்கள்.  ‘தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு; அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக் குட்டி’ என்ற கவிமணியின் பாடல் அத்தகைய சந்தப் பாடலாகும்.

சங்க இலக்கிய காலத்திலிருந்து வெண்பா, அகவல், கலிப்பாதான், வஞ்சிப்பா முதலான பாவகைகள் இருந்தன.  இப்பா வகைகளில் காவியத்தை வேகமாக பாட இயலாது என்பதால் விருத்தப்பா என்கின்ற வகையை சீவக சிந்தாமணி பாடிய திருத்தக்க தேவர் கையாண்டார்.  அதன் பிறகு பெரிய புராணம். கம்பராமாயணம், வில்லி பாரதம், கந்த புராணம், திருவிளையாடற் புராணம் ஆகியவை விருத்தப் பாக்களால் பாடப்பட்டது.

childrens 600

19-ஆம் நூற்றாண்டில்தான் பாமர மக்களுக்கும் ஏற்றவாறு நொண்டிச் சிந்து, குற்றாலக் குறவஞ்சி முதலானவை இசையோடு கலந்த பாடல்களாக பாடப்பட்டன.  அவற்றை அடியொட்டிதான் குழந்தைப் பாடல்கள் உருவாயின.  ஒவ்வோர் அடியிலும் அளவொத்த சீர்கள் அமைய வேண்டும் என்பதே குழந்தைப் பாடலின் பொதுவான விதி.  வரிக்கு மூன்று அல்லது நான்கு சீர்கள் கொண்ட நான்கு அடிகளால் எழுதப்படும் குழந்தைப் பாடல்களே அதிகம் உள்ளன.  பெரும்பாலும் குழந்தைக் கவிஞர்கள் கவிமணி, அழ.

வள்ளியப்பா பாடல்களை பின்பற்றியே எழுதி விடுகின்றனர். எளிய சொற்கள், இனிய சந்தம், தெளிவான பொருள். நல்ல கற்பனை, சிறந்த உணர்ச்சி இவை களைக் கொண்ட பாடல்களே நல்ல குழந்தைப் பாடல்கள் என்று சொல்லி விடலாம்.   (Poetry is the language of the imagination of feelings of emotional self exáession. of high art).

நாட்டுப் புறப்பாடல்கள் இலக்கணங்களுக்கு அடைபடாதது.  காட்டுப் பூக்களைப் போல் மலர்ந்து மணம் வீசுபவை அவை.  குழந்தைகளுக் கான நாட்டுப்புறப் பாடல்களை பிரசவித்தவர் களாக அநேகமாக தாய்மாரும் பாட்டிமாருமாகத் தான் இருக்கக்கூடும்.  ‘நிலா. நிலா ஓடி வா; நில்லாமல் ஓடி வா’என்று தன் செல்ல மகளுக்காக தாய்தானே பாடி அழைக்க முடியும்.

‘காக்கா, காக்கா

கண்ணுக்கு மை கொண்டு வா!

குருவி, குருவி

கொண்டைக்குப் பூக் கொண்டு வா!

கொக்கே, கொக்கே

குழந்தைக்குப் பால் கொண்டு வா!’

என்று தன் ஆருயிர் பேத்திக்கு பாட்டி தானே பாடி பறவைகளைக் கூப்பிட முடியும்.

‘ஆனை ஆனை அழகர் ஆனை;

அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை,’

போன்ற நாட்டுப்புறப் பாடல்களை குழந்தைகள் அதிகம் விரும்புகின்றனர்.  குழந்தை களுக்கான நாடோடிப் பாடல்களை முதன் முதலில் தொகுத்து வெளியிட்ட பெருமை ‘வானொலி அண்ணா’ ர. அய்யாசாமி அவர்களையேச் சாரும்.

தமிழில் தொகுக்கப்படாத நாட்டுப்புறப் பாடல்கள் இன்னும் நிறைய இருக்கின்றன என்பதே உண்மை.  குழந்தைகளுக்கான நாட்டுப்புறப்பாடல் களில் விளையாட்டின் போது பயன்படுத்தப்படும் பாடல்கள் ஒரு வகையாகும்.  ஒருவருக்கொருவர் கேலி செய்யும் பாடல்கள் சுவாரசியமானவை.  கேலி செய்வதும் குழந்தைகளுக்கு ஒரு வகை விளையாட்டுதான்.  சடுகுடு, கண்ணாமூச்சி போன்ற பலவகை விளையாட்டுகளுக்கும் பாடல் உண்டு.

“சடுகுடு மலெயில ரெண்டானெ

தவறி விழுந்தது கௌட்டானெ

தூக்கி விட்டது இளவட்டம்

இளவட்டம் இளவட்டம்”,

என்று குழந்தைகள் சடுகுடுவை பாடி விளையாடு கிறார்கள்.

கண்ணாமூச்சி விளையாட்டில், ஒருவரின் கண்களை கட்டி விடும் குழந்தை,

“கண்ணா மூச்சி ரே ரே

காதடெச்சான் ரே ரே

ரெண்டு முட்டையெத் தின்னுப்புட்டு

மஞ்சக்காரெ முட்டெயெ

புடிச்சுட்டு வா”

என்று பாடுகிறார்.

தங்கள் உறவினர்களை நண்பர்களை குழந்தைகள் கேலி செய்து பாடும் பாடல்கள் படைப்புத் திறன் வாய்ந்தவை.

ஒரு பேரன் தன் பாட்டியை இப்படி கேலி செய்து பாடுகிறான்.

“பாட்டி பாட்டி

பளயரிசியெ தீட்டி

கோணக்கொலெ நீட்டி

கும்மியடி பாட்டி”

தன் தோழியை சிறுமி ஒருத்தி இப்படி கேலி செய் கிறாள்.

“கத்தரிக்கா சொத்தெ

கடலோரம் மெத்தெ

ஏண்டி சரோஜா

எப்ப கல்யாணம்

நேத்து மத்தியானம்”

சிறுவர்களுக்குப் பல் விழுவதை கேலி செய்யும் பாடல் இது.

“ஓட்டப் பல்லு சங்கரா

ஒரு வீட்டுக்கும் போகாதெ

அப்பம் வாங்கித் திங்காதெ

அடிபட்டுச் சாகாதெ”

குழந்தைகள் மகிழ்ச்சியான மனநிலையில் தாங்களே பாடிய பாடல்கள் இவை.

‘ரோட்டு மேலே காரு,

காருக்குள்ளே யாரு,

எங்க மாமா நேரு,’

என்று ஒரு விஷயத்திற்கு எளிமையாக பாட்டு கட்டும் திறமையும் எசப்பாட்டு பாடும் வல்லமையும் குழந்தைகளுக்கு இருக்கிறது.  குழந்தைகளின் இந்த திறமைக்கு பள்ளிகளில் வாய்ப்பளிக்க வேண்டும்.  குழந்தைகளே பாடல்கள் எழுத பயிற்சிகள் மேலை நாடுகளில்  தரப்படுகின்றன.  Leaning to wite oetry) அதுபோல் நம் குழந்தைகளுக்கும் தரப்பட வேண்டும்.  இசையோடு இயைந்த வாழ்வு தமிழருக்குரியது என்று பெருமை மட்டும் பேசுகி றோம். குழந்தைகள் நல்ல பாடல்கள் பாடவும் படிக்கவும் ஆர்வம் உள்ளவர்களாக அவர்களை நாம்தான் உருவாக்க வேண்டும்.  (Lovers of Poetry are not born, but made through Patient and careful nurturing)

பாடப்புத்தகங்களில் இடம் பெறும் பாடல்கள் இந்த நோக்கத்தை நிறைவேற்றுகின்றனவா? என்று கேட்டால் திருப்தியான பதில் நம்மிடம் இல்லை.  பாடப் புத்தகங்களில் இடம்பெறும் பாடல்கள் ஒரு தேடலுடன் இடம் பெறுகிறதா என்பது சந்தேகத்திற் குரியது.  கவிமணி, பாரதி, அழ. வள்ளியப்பாவைத் தாண்டி பாடக் குழுவினர் செல்வதில்லை.

முன்பு பாடக்குழுலில் இடம் பெற்றவர்களான கா. நமச்சிவாய முதலியார், மயிலை சிவமுத்து,  தணிகை உலகநாதன், நெல்லை ஆ. கணபதி, சௌந்தரா கைலாசம், மணி திருநாவுக்கரசர் போன்றோர் நல்ல பாடல்களைத் தந்தனர்.

“பூவே உனை படைத்தவர் ஆர்?

புதுமணம் உள்ளே நுழைத்தவர் ஆர்?

பலபல நிறங்கள் பண்ணவர் ஆர்?

பார்க்க அழகு தந்தவர் ஆர்?

உன்னைச் செய்தோன் வல்லவனே!

உலகுக்கெல்லாம் நல்லவனே!

மணி திருநாவுக்கரசர் எழுதிய இது போன்ற பாடல்கள் முன்பு பாடப் புத்தகங்களில் இடம் பெற்று குழந்தைகளைக் கவர்ந்தன.

ஆத்திசூடி, மூதுரை, நல்வழி, கொன்றை வேந்தன் போன்ற நீதிநெனறிப் பாடல்கள் முதலாம் வகுப்பு முதல் பாடப்புத்தகங்களில் இடம் பெறு கிறது.  இவை குழந்தைகளுக்காக எழுதப்பட்டவை அல்ல.

ஆத்திசூடி குழந்தைகளுக்கு அகர வரிசையைக் கற்பிக்கிறது என்பதோடு மனப்பாடம் செய்ய எளிமையானது என்பது உண்மை.  ஆனால் இவற்றை குழந்தைப் பாடல்கள் என்று ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்பது குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் வாதமாகும்.  இக்கருத்தை குழந்தைகள் கலைக் களஞ்சியம் தந்த பெ. தூரனும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஒலி இயைபும் ((Rhyme)) சந்த நயமும் (Rhythm) கொண்ட பாடல்களையே குழந்தைகள் விரும்பு கிறார்கள்.  இவற்றை குழந்தைகள் எளிதாக பாடவும் முடியும்.

“வட்டமான தட்டு

தட்டு நிறைய லட்டு

லட்டு மொத்தம் எட்டு

எட்டில் பாதி விட்டு

எடுத்தான் மீதம் கிட்டு”

என்ற அழ. வள்ளியப்பாவின் பாடலும்,

“மாமி சுட்ட பிட்டு

மடியில் வாங்கிக் இட்டு

சீனி சர்க்கரை கிட்டு

சிறிது நெய்யும் சொட்டு

உண்டு ஏப்பம் விட்டு

ஓடி வா நீ பட்டு”

என்ற மயிலை சிவமுத்துவின் பாடலும் ஓசை நயத்திற்கு எடுத்துக்காட்டான பாடலாகும்.

ஒலிக்குறிப்புகள் குழந்தைப் பாடல்களுக்கு இனிமை சேர்க்கிறது.

“வெள்ளைப் பூனை போகுது

மியாவ்! மியாவ்! மியாவ்!

மெல்ல மெல்லப் போகுது

மியாவ்! மியாவ்! மியாவ்!

பழுப்புப் பூனை போகுது

மியாவ்! மியாவ்! மியாவ்!

பக்கம் பார்த்து போகுது

மியாவ்! மியாவ்! மியாவ்!”

இப்பாடலில் ‘மியாவ்”என்ற ஒலிக் குறிப்பினை எடுத்துவிட்டால் பாடலில் உயிர் இருக்காது.

கூறியது கூறல் பெரியோர் பாடலில் குற்றமா கலாம்.  குழந்தைப் பாடலில் அதுவே குணமாகும்.

‘பட்டம் பெரிய பட்டம்!

பறந்து செல்லும் பட்டம்!

கட்டம் போட்ட பட்டம்!

காற்றில் ஆடும் பட்டம்!

‘பட்டம்’ என்ற சொல் மீண்டும்  மீண்டும் வருவதே குழந்தையை குதூகலப்படுத்துகிறது.

பொதுவாக குழந்தைப் பாடல்கள் இரண்டு முறைகளில் எழுதப்படுகின்றன.  குழந்தையை நோக்கி பாடுவது என்பது ஒரு முறை.  இதை ஆரம்பித்து வைத்தவர் நம் பாரதிதான்.

‘ஓடி விளையாடு பாப்பா - நீ

 ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,

கூடி விளையாடு பாப்பா - ஒரு

 குழந்தையை வையாதே பாப்பா

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்

‘புறந் சொல்ல லாகாது பாப்பா’

என்றும் குழந்தைகளுக்கு புத்திமதிகள் சொல்லப் படுகிறது.  குழந்தையை நோக்கி பாடப்படும் பாடல்கள் எல்லாம் அறிவுரைப் பாடல்கள்தான்.  இது தவிர்க்க முடியாதுதான்.  என்றாலும் குழந்தைகள் தாமே பாடுவது போல் அமையும் பாடல்களே வரவேற்கத்தக்கது.

‘தோ...தோ....நாய்க்குட்டி

துள்ளி வா வா நாய்க்குட்டி’

என்றப் பாடல். எதிரே இருக்கும் நாய்க்குட்டியை குழந்தை கூப்பிடுவது போல் அமைகிறது.  குழந்தை தானே பாடுவது போல் அமையும் முறையில் உள்ள பாட்டுகளில் புத்திமதி இருக்காது.  ஏனென்றால் குழந்தை தனக்குத் தானே புத்திமதி சொல்லிக் கொள்ளாது அல்லவா!

இம்முறையில் அமைந்த பாடல்களில் குழந்தை களின் அனுபவம் வெளிப்படுகிறது.

‘மாமரத்தில் ஏறலாம்

மாங்காயைப் பறிக்கலாம்

தென்னை மரத்தில் ஏறலாம்

தேங்காயைப் பறிக்கலாம்

புளிய மரத்தில் ஏறலாம்

புளியங்காயைப் பறிக்கலாம்

நெல்லி மரத்தில் ஏறலாம்

நெல்லிக்காயைப் பறிக்கலாம்

வாழை மரத்தில் ஏறலாம்

வழுக்கி வழுக்கி விழுகலாம்’

என்ற அழ. வள்ளியப்பாவின் பாடலில் குழந்தை வாழை மரத்தில் ஏறி வழுக்கி விழுந்த அனுபவம் பதிவாகிறது.

“பள்ளியை விட்டு வந்தேனா?

பட்டப் பகலும் மங்கினதா?

உள்ளே வீட்டில் நுழைந்தேனா?

உள்ள சுவடியை வைத்தேனா?

பிள்ளைகள் எல்லாம் வந்தாரா?

பெரிய தெருவில் சேர்ந்தோமா?

வெள்ளி நிலாவும் வந்ததே!

விளையாடும்படி சொன்னதே!”

என்ற பாரதிதாசனின் பாடல் குழந்தையின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்திய பாடலாகும்.

“கழுத்து உண்டு தலை இல்லை

கை உண்டு விரல் இல்லை

உடல் உண்டு உயிர் இல்லை”-

இது என்ன?

என்று விடுகதையை பாடலாக்கி கேட்பது நம் குழந்தைகளுக்கு கை வந்த கலை.  நம் குழந்தைக் கவிஞர்களும் விடுகதைப் பாடல்களை தநதுள்ளனர்.

“கோடைக் காலம் கிடைக்கும்; ஆனால்

கோவா மாம்பழம் அல்ல!

ஓடைக்குளிர் நீர் உள்ளே உண்டு

உண்மை! இளநீர் அல்ல!

வெட்டித் தள்ள வெளியில் தோன்றும்

கொட்டும் ரத்தம் அல்ல!

தொட்டுப் பார்த்தால் வழ வழப்பு

பட்டுத் துணியும் அல்ல

விந்தைப் பொருளோ? அல்ல! நீங்கள்

விரும்பி உண்ணும் பொருளாம்!

அந்தப் பொருளை அறிந்து கொள்க!

அருமை நுங்கு அதுவே!”                (திருச்சி பாரதன்)

ஆங்கிலத்தில் பொருளிலாப் பாடல்கள் (Nonsense rhymes) என்று அழைக்கப்படும் வேடிக்கைப்  பாடல்கள் உள்ளன.  தமிழில் நாட்டுப்புறப் பாடல் களிலேயே அத்தகைய வேடிக்கைப் பாடல்கள் உண்டு.  அழ. வள்ளியப்பா, ம.இலெ. தங்கப்பா போன்றவர்கள் இத்தகைய பாடல்களை எழுதியிருக் கிறார்கள்.

“அய்யாத்துரைக்கு கல்யாணம்!

அவரவர் வீட்டிலே சாப்பாடு!

கொட்டு முழக்கு கோயிலிலேஸ்

வெற்றிலை பாக்கு கடையிலே!

சுண்ணாம்பு சூளையிலே!

வெண்டைக் காயை தின்று விட்டு

விளக்கெண்ணையில் கை கழுவி

வழுக்கு மரத்தில் ஏறியே

சறுக்கி விழுந்தான் சாமியப்பன்”.

இது ஒரு நாட்டுப்புற வேடிக்கைப் பாட்டு.

தமிழ்க் குழந்தைப் பாடல்களில் புதிய புதிய சந்தங்கள் வேண்டும் என்று  எப்போதும் குரல் கொடுத்து வந்தவர் தம்பி சீனிவாசன்.

“காட்டுப் பாக்கம் தாத்தாவுக்குக்

காடு போல தாடியாம்

காடு போல தாடியாம்

மாடி மேலே நிற்கும் போது

தாடி ரோடில் புரளுமாம்!”

போன்ற அவரது பாடல்கள் குழந்தைகளின் காதில் ரீங்காரம் இடும் தன்மை வாய்ந்தவை.  தம்பி சீனிவாசனின் கோரிக்கைக்கு செவி மடுப்பது போல் குழந்தைப் பாடல்களில் புதிய புதிய சந்தங் களைப் புகுத்தியவர் பாவேந்தர் பாரதிதாசன்.

“பூனை வந்தது பூனை - உடன்

போனது தயிர்ப்பானை”.

“என்றன் நாயின் பேர் அப்பாய் - அது

முன்றில் காக்கும் சிப்பாய்”

ஆங்கிலப் பாடல்களின் வரிகளில் ஈற்றுச் சொல்லிலே எதுமை அமையும்.  இந்த ஈற்றெதுகை முறையை குழந்தைப் பாடல்களில் சிறப்பாக கையாண்டவர் பாரதிதாசன் ஆவார்.

குழந்தைப் பாடல்களில் சந்தங்களைத் துள்ளச் செய்த மற்றொரு கவிஞர் தமிழ்ஒளி.

“பாடம் படியா ஒரு பையன்

பள்ளி செல்லா ஒரு பையன்

மூடன் ஆனான் முன்னாலே

மூட்டை சுமந்தான் பின்னாலே”

என்று தொடங்கும் பாடல் கல்வியின் சிறப்பை எடுத்துக் காட்டும் பாடலாகும்.  ‘நகை வேண்டாம் பாப்பா’ என்ற தமிழ்ஒளியின் பாடல் தனித்துவ மிக்கது.

குழந்தைப் பாடல்களில் தனிச் சிறப்பான இடத்தைப் பெறுவது கதைப் பாடலாகும்.  “நெற்பானையும் எலியும்” போன்ற மிகச் சிறந்த நான்கு கதைப் பாடல்களை தந்ததின் மூலம் கவிமணி நிலைத்தப் புகழைப் பெற்றார்.  கதைப் பாடல்களை அதிகமாகவும் சிறப்பாகவும் எழுதி யவர் என்ற பெருமை அழ. வள்ளியப்பாவைச் சாரும்.  ‘ஈசாப் கதைப் பாடல்கள்’  என்ற நூல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈசாப் கதைகளை பாடல் களாகக் கொண்டது.  மேலும் அழ. வள்ளியப்பா இவ்வகைப் பாடல்களை ஊக்குவிக்கும் முறையில் 60 கவிஞர்களின் கதைப் பாடல்களை தொகுப்பாக கொண்டு வந்தார்.  இக்கதைப் பாடல்களில் சில இசை ஒலிப்பேழையாக 25 ஆண்டுகளுக்கு முன் வந்த போது குழந்தைகளின் மனதைக் கொள்ளை கொண்டன.

தமிழில் குழந்தைகளுக்கான மொழிபெயர்ப்புப் பாடல்களை முதன் முதலில் தந்தவர் கவிமணியே.  அவரைத் தொடர்ந்து இத்துறையில் அதிக ஆக்கங்கள் வரவில்லை என்பது ஒரு குறையே.

முதல் வகுப்பு படிப்பதற்கு முந்திய நிலையில் உள்ள குழந்தைகளுக்கு மிகத் தேவையானவை மழலைப் பாடல்களாகும். ((Nursury Rhymes)ஒலிக்கு அதிகம் முக்கியத்துவம் தரும் இப்பாடல்கள் சிறிய சொற்கள், குறைந்த வரிகள் கொண்டவையாகும்.

மழலைப் பாடல்களை சிறப்பாகவும் அதிக மாகவும் எழுதியவர்கள் புலவர் இளஞ்செழியனும் குழ. கதிரேசனுமாவர்.  ஆலந்தூர் கோ. மோகனரங் கனும் சில பாடல்களை தந்துள்ளார்.

“பள்ளிக்குப் போவேன்

பாடம் படிப்பேன்!

துள்ளிக் குதிப்பேன்!

துணிவாய் இருப்பேன்!”

போன்ற நான்கு வரிப் பாடல்கள் குழ. கதிரேனின் நூல்களில் இடம் பெற்றுள்ளன.  அவருடைய பேசும் கிளியே, தொப்பைக் கோழி, மழலைப் பூக்கள், எலி கடித்த பூனை ஆகிய நூல்களில் உள்ள மழலைப் பாடல்கள் ஒலிப் பேழைகளாகவும் வெளிவந்து புகழ் பெற்றுள்ள.  கவிஞர் செல்ல கணபதியின் மழலைப் பாடல் நூல்கள் பல வண்ணப் படங்களுடன் வெளி வந்துள்ளன.

தமிழில் மழலைப் பாடல்கள் போதுமான தரத்திலும் எண்ணிக்கையிலும் இல்லை என்பதே உண்மை.  இக்குறையைப் போக்க பெரிய பாடல் களை சுருக்க வடிவத்தில் மழலைப் பாடல்களாக மாற்றிக் கொள்ளலாம் என்பது கவிஞர் வெற்றிச் செழியனின் யோசனையாகும்.

மழலையரும் சிறுவரும் ஆடிப் பாடி இயங்கும் தன்மை கொண்டவர்கள்.  மொழியையும் உலகத் தையும் கற்றுக் கொள்ள இசையோடு பாடும் பாடல்கள் அவர்களுக்கு உதவுகின்றன.  ‘தலை வாரி பூச்சூடி உன்னை’ போன்ற குழந்தைகளுக் கான இசைப்பாடல்களை பாரதிதாசன்  எழுதி யுள்ளார்.  ஓரசைப் பாடல்கள், சேர்ந்திசைப் பாடல்கள். தனிப்பாடல்கள் குழந்தைகளுக்கானவை ஓரளவே உள்ளன.  இங்கு திரை இசைப் பாடல் களே குழந்தைகளை அடிமைப்படுத்தியுள்ளது.  பெரியவர்களுக்கே தீமை தரும் இந்த ஆபாசப் பாடல்கள் குழந்தைகளுக்கு பொருந்துமா என்ற கேள்விக்கே இடமில்லாதவை.  வீட்டிலும் பள்ளியிலும் நல்ல பாடல்களை குழந்தைகளுக்கு கற்று தந்திருந்தால் சினிமா பாடலில் சூப்பர் சிங்கர்கள் உருவாகியிருக்க மாட்டார்கள்.  நாம் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிய பிள்ளைகள் பாடப் புத்தகங்களில் உள்ள பாடல்களைக் கூட பாட முடியாத நிலையில் இருக்கிறார்கள்.  நம் ஆசிரியர்கள் சுட்டுப் போட்டாலும் பாடத் தெரியாத நிலையில் இருக்கிறார்கள்.   புதிதாக வந்திருக்கிற ஆசிரியர் தகுதி தேர்வில் கூட ஆசிரியருக்குப் பாடத் தெரியுமா? என்ற அக்கறை இல்லை.  பாடலோடு இசையோடு இயைந்து வளர வேண்டிய தமிழ்க் குழந்தைகள் அந்த வாய்ப்பின்றி இருக்கிறார்கள்.  இந்நிலை மாற வேண்டும்.

தமிழ் அறிஞர் மு.வ. கட்டுரை நூல்களும் நாவல்களும் எழுதிப் புகழ் பெற்றவர்.  அவர் 1939ல் ‘குழந்தைப் பாட்டுகள்’ எழுதி வெளியிட்டார்.  சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் குழந்தை இலக்கி யத்தின் மீது தமிழ்ச் சமூகத்திற்கு இருந்த அக்கறை இப்போது எங்கே போயிற்று?  என்ற கேள்வியுடன் முடிக்கிறேன்.

Pin It