rajam 400கிட்டத்தட்ட 90 ஆண்டுகள் வாழ்ந்து, தன் வாழ்வின் பெரும் பகுதியை இலக்கியப் படைப்புகளுக்காகவே செலவிட்ட அருமையான எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன். கணவர் பொறியாளர் திரு.கிருஷ்ணனோடு அவர் பணியாற்றிய இடங்களுக்கெல்லாம் சென்று, தான் அங்கு கண்ட சமூகங்களின் வாழ்வுகளைப் பற்றி ரசனையும், வியப்பும் கலந்த ஒரு பார்வையில் ஈடுபாட்டோடு இலக்கியங்களாகப் படைத்துத் தமிழ் இலக்கியத்தில் இடம் பிடித்தவர் அவர். அமுதமாகி வரும் அப்படிப்பட்ட ஒரு மலைச்சாரல் பூக்கூடை.

ஆனால் கூட்டுப்புழுப் பருவம் வந்ததும் கூட்டைக் கிழித்துக்கொண்டு வண்ணத்துப்பூச்சியாய் பூக்களைத் தேடிச் சிறகடிப்பது போல, எழுபதுகளிலிருந்து புதிய புதிய சமூகக்களங்களைத் தேடிப் பறந்து, மானிடத் துயரங்களிலும், போராட்டங்களிலும் மனம் தோய்ந்து எழுதி, ஆற்றல்மிக்க எதார்த்தப் படைப்பாளியாக உயர்ந்து, காலம் முழுவதும் பெருமையோடு வாழ்ந்தார் அவர்.

அவரை நான் முதல் முதலாகச் சந்தித்தது எப்போது? எட்டையபுரத்தில் என்று நினைக்கிறேன். 1976-ல் என்னுடைய ‘கரிசல்’ நாவல் எட்டையபுரம் பாரதி விழா மேடையில் அப்பழுக்கற்ற அரசியல் தலைவர் இரா.நல்லக்கண்ணு அவர்கள் தலைமையில், காணக் கிடைக்காத பத்தரைமாற்று அரசியல் தங்கம் எஸ்.அழகிரிசாமி எம்.எல்.ஏ. அவர்கள் கையால் வெளியிடப்பட்ட போது அவரை நான் சந்தித்ததாக நினைவு. அவர் அந்த நூலைப் பற்றி உரையாற்றினாரா, நினைவில்லை. அன்று மாலையில் ‘கரிசல்’ புத்தகத்தோடு என்னிடம் வந்து, வெகுநேரம் அன்புடன் உரையாடிக் கொண்டிருந்தார் அவர்.

அங்கு வைக்கப்பட்டிருந்த நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் புத்தகக் கண்காட்சியை ஆர்வத்தோடு பார்த்துப் பல புத்தகங்கள் வாங்கினார். அதன் பிறகு தான் அவர் இலக்கிய வாழ்க்கை அடித்தள மக்களை நோக்கிப் போர்க்குணத்தோடு திரும்பியது என்பது என் எண்ணம்.

இது ஒரு அபூர்வமான மாற்றம். பெண் எழுத்தாளர்களைப் பொறுத்தவரை இது மிகமிக அபூர்வம். ஒரு பிரச்சினை பற்றி எழுதவேண்டுமென்று அவர் மனதில் தோன்றியதும், அதற்குரியகளத்தைத் தேடிப் போவார், பல நாட்கள் அக்களத்தில் அம்மக்களோடு தங்கி, அவர்களுடைய வாழ்வை, துயரங்களை, வாழ்வின் உள் முரண்பாடுகளை, சுரண்டல்களை, ஒடுக்குமுறைகளை, மோதல்களை நேரில் அறிந்து, நுட்பங்களை உய்த்துணர்ந்து, அதன்பின் தன் பார் வையில் நாவல்களைப் படைத்த நேர்மையான எழுத்தாளர் அவர்.

அவருடைய பிற்காலப் படைப்புகள் எல்லாமே இந்த வகையைச் சார்ந்தவையே. ‘அலைவாய்க் கரையில்’, ‘கரிப்பு மணிகள்’, ‘சேற்றில் மனிதர்கள்’, ‘கூட்டுக்குஞ்சுகள்’ என வரிசை வரிசையாகப் பல நாவல்களை எழுதினார் அவர்.

கத்தோலிக்கத் திருச்சபையைச் சார்ந்த மீனவர்கள் தாங்கள் பிடித்துவரும் சுறா மீன்களின் துவிகளை மட்டும் திருச்சபைக்குக் கொடுத்துவிட வேண்டுமென்று ஒரு சட்டம் அன்றிருந்தது. ஒரு மீனின் விலையைவிட அதிலிருந்து வெட்டி எடுத்துத் திருச்சபைக்குக் கொடுக்கப்பட வேண்டிய துவியின் விலை அன்று அதிகம்.

இந்தச் சுரண்டலை எதிர்த்து மீனவர்கள் போராடினார்கள். திருச்சபை அவர்கள் கோரிக்கைக்கு இணங்கிவராத ஆத்திரத்தில், அந்த மீனவர்கள் இந்து மதத்துக்கு மாறிய பரபரப்பான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது

‘அலை வாய்க் கரையில்’ நாவல். தூத்துக்குடி பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் வீட்டில் பலநாள் தங்கி, அவர் துணையோடு கடற்கரைப் பகுதிகளில் களப்பணி செய்து எழுதிய நாவல் அது. ஆ.சிவசு.வின் உதவி அவருடைய வேறு பல நாவல் உருவாக்கத்துக்கும் பயன்பட்டது.

‘கரிப்பு மணிகள்’, ‘சேற்றில் மனிதர்கள்’ முதலிய பிற நாவல்களும் இதுபோல் களப்பணி செய்து எழுதப்பட்டவையே. அவருடைய சாகித்ய அகாதமி விருதுபெற்ற நாவலான ‘வேருக்கு நீரும்’ இப்படி களப்பணியில் உருத்திரண்டதே.

‘கூட்டுக்குஞ்சுகள்’ நாவல் சிவகாசி வட்டாரத்தில் தீப்பெட்டித் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்த குழந்தைத் தொழிலாளிகளின் கொடுந்துயரத்தைப் படிப்போர் மனம் பதறும் வகையில் எழுதப்பட்ட ஒன்று.

வேனில் போனபோது காட்டாற்றுப் பெருவெள்ளத்தில் சிக்கி மரணமடைந்த அந்த அப்பாவிக் குழந்தைகளைப் பெற்றவர்களின் மனநிலைகளை அறியப் பல நாள் அவ்வட்டாரக் கிராமங்களில் அலைந்தார் அவர். வெள்ளப்பெருக்கில் இறந்துபோன குழந்தைகளுக்கு அரசு வழங்கிய ஈட்டுத்தொகையில் நகைகள் வாங்கிக் காதிலும் கழுத்திலும் மாட்டிக்கொண்டு, மினுக்கித் திரிந்த சில பெண்களின் அற்பத்தனங்களைக் கண்டு அதிர்ச்சியுற்ற அவர், அதைப் பலமுறை என்னிடம் சொல்லித் தன் எரிச்சலைத் தீர்த்திருக்கிறார்.

1987 என்று கருதுகிறேன். குமரி முனையில் நடந்த குமரிமாவட்டக் கலை இலக்கியக் கோடை முகாமுக்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் அவர். அரங்கில் அவருடைய முன் தயாரிப்பு இல்லாத மனம் திறந்த இலக்கியப் பேச்சு எல்லோரையும் கவர்ந்தது.

அந்த முகாமில் என் துணைவியாருடன் கன்னியாகுமரி, சுசீந்திரம் என்று அந்த வட்டாரத்திலிருந்த எல்லாக் கோயில் தலங்களுக்கும் பக்தியுணர்வுடன் போய், கடலிலும் குளத்திலும் குளித்துச் சாமி கும்பிட்டார் அவர். இன்றும் என் துணைவியார் அதுபற்றிக் கதை கதையாய்ச் சொல்வார்.

1994-ல் கோவையில் நடந்த தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநாட்டில் இரண்டு நாட்களும் முழுமையாக பங்கேற்றார் ராஜம் கிருஷ்ணன். விவாதங்களில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, தன் கருத்துக்களை அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.

அவருடைய அந்திம கால வாழ்க்கை திருப்திகரமாக அமையவில்லை. வாரிசுகள் இல்லாத அவர் நெருங்கிய உறவினர்களால் சரியாகப் பேணப்பட வில்லை. பல கோடி ரூபாய் பெறும் அவருடைய வீடு, வாசல் எல்லாமே எப்படியோ விலை போயின. அந்தப் பணம் அவர் கைக்கு வரவில்லை என்று கேள்வி. அதுமட்டுமல்லாமல், வங்கிக் கடனாளியாகவும் ஆக்கப்பட்டிருந்தார் அந்த அப்பாவி எழுத்தாளர் என்றும் அறிந்தபோது அதிர்ச்சியடைந்தேன்.

வீடிழந்த ராஜம் கிருஷ்ணன் 2008-ல் கலாசேத்திரா அருகே குடிசை வாழ் மக்களிடையே ஒரு குடிசையை வாடகைக்கு அமர்த்தித் தனியாக மனநிறைவோடு சில காலம் வாழ்ந்தார். தன் உதவிக்கு ஒரே ஒரு பெண்ணை வைத்துக் கொண்ட அவர், சுற்றுப்புறங்களில் வாழ்ந்த ஏழை மக்களிடமும், குழந்தைகளிடமும் உரையாடு வதும், விளையாடுவதும், அவர்களுக்குச் சிறுசிறு உதவிகள் செய்வதுமாகப் பொழுதை அருமையாகக் கழித்தார். அதுவும் நெடுநாள் நீடிக்கவில்லை.

ஏற்கனவே மூட்டுவலியால் அவதிபட்டுக் கொண் டிருந்த அவர் தன்னைப் பராமரிக்க ஆளில்லாமல் ‘விச்ராந்தி’ என்னும் முதியோர் இல்லத்தில் தன் தம்பி, மற்றும் பாரதி, திலகவதி முதலியோரின் உதவியால் சேர்க்கப்பட்டார்.

இந்தச் செய்தியை எனக்குச் சொன்னவர் தற்போது செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் டாக்டர். கி.ஜெயகுமார் டாக்டர். தேவதத்தா மூலம் ஏற்கனவே ராஜம் கிருஷ்ணனுக்கு அறிமுகமாகியிருந்த இந்த ஜெயகுமாரும் அவர் துணைவியார் பகவதியும், வாரந்தோறும் விச்ராந்தி சென்று அவரைப் பார்த்துப் பழங்களும் பண்டங்களும் கொடுத்து, சில மணிநேரம் அருகில் அமர்ந்து உரையாடி அவர்களை உற்சாகப் படுத்துவதை வழக்கமாக்கிக் கொண்டார்கள். தனிமையே அன்று ராஜம் கிருஷ்ணனை வாட்டிய பெரு நோய்.

விச்ராந்தியில் இருந்தபோதும், மாலை நேரங்களில் ராஜம் கிருஷ்ணன் கோயிலுக்குப் போனார், உலாவினார், நிறைய வாசித்தார். ஆனால் வரவர அவருக்கு அங்கே சலிப்பு ஏற்பட்டு வெளியேற விரும்பினார். சிலர் உதவி யுடன் ஜெயகுமாரும் பகவதியும் அவரை ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

முதியோர் இல்லமோ, முதியோருக்கான நிரந்தரமாகத் தங்கும் ஏற்பாடுகளோ இல்லாத அந்த மருத்துவமனையில், ராஜம் கிருஷ்ணனின் எழுத்தாற்றலை மதித்து அவரை நிரந்தரமாகத் தங்க வைக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்த அப்பல்கலைக் கழக வேந்தர் பி.ஆர்.வெங்கடாசலம் அவர்கள் எழுத் தாளர்களின் நன்றிக்கும் போற்றுதலுக்கும் என்றென்றும் உரியவர். அம்மருத்துவமனையின் மருத்துவர்களில் ஒருவரான டாக்டர். தா. மல்லிகேசன் அவர்கள் ராஜம் கிருஷ்ணனைத் தன் தாய் போல கவனித்துக்கொண்டார்.

அந்த அம்மாவுக்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு நாளும் தன் மனைவியைக் கொண்டே வீட்டில் உணவு சமைத்து, அதை மருத்துவமனைக்கு எடுத்து வந்து வழங்கினார். தன் துணைவியார் உணவு சமைக்க வாய்ப்பில்லாத நாட்களில், தானே உணவைத் தன் கைப்படச் சமைத்து எடுத்துக் கொண்டுவந்து, ராஜம் கிருஷ்ணனுக்குக் கொடுப்பாராம் அவர்.

ராஜம் கிருஷ்ணனுக்குச் செய்யப்பட்ட இந்த மதிப்புக்குரிய உதவிகளை ஜெயகுமார் தம்பதிகள் என்னிடம் நெகிழ்ச்சியோடு சொன்ன போது சக எழுத்தாளன் என்ற முறையில் மிகுந்த பெருமிதமடைந்தேன்.

இன்னொரு செய்தியையும் சொன்னார்கள் ஜெய குமார் தம்பதியர். பழைய இரும்புப் பொருட்களை வாங்கும் சாதாரண வியாபாரிகள் இருவர் சனிக்கிழமை தோறும் மாலையில் பழங்களுடன் ராஜம் கிருஷ்ணனைப் பார்க்க வருவார்களாம். தாங்கள் கொண்டு வரும் பழங் களை அவருக்குக் கொடுத்து, நெடுநேரம் அவருடன் உரையாடிக் கொண்டிருப்பார்களாம்.

நல்ல மருந்தெண்ணெய் கொண்டு வந்து, ராஜம் கிருஷ்ணனின் கால்களில் அதைப் பூசி, கால்களை மெதுவாக அமுக்கி விடுவார்களாம் அவர்கள். மருந்துவர்களிலிருந்து செவிலியர்கள் வரை எல்லாருக்குமே இது ஆச்சரியத்தைக் கொடுத்ததாம். “யார் நீங்கள்?” என்று அவர்களைக் கேட்டபோது, “இந்த அம்மாவின் புத்தகங்களைப் படித்து, ரசித்து, அவர்களிடம் ஈடுபாடு கொண்டவர்கள் நாங்கள். அதனால்தான் வருகிறோம்,” என்றார்களாம் அவர்கள்.

ராமச்சந்திரா மருத்துவமனையில் ராஜம் கிருஷ்ணன் இருந்ததை அறிந்த கவிஞர் கனிமொழி எம்.பி. நேரில் வந்து அவரைக் கவனித்து ஆறுதல் சொன்னதையும், தன் தொலைபேசி எண்ணை அவரிடம் கொடுத்து, எந்தப் பிரச்சினை என்றாலும் எந்த நேரமும் தன்னை அழைக்கலாம் என இலக்கிய வாசத்தோடு வேண்டிக் கொண்டதையும் ஜெயகுமார் தொலைபேசியில் என்னிடம் வியப்போடு சொன்னார்.

ராஜம் கிருஷ்ணனைப் பார்க்க நல்லிலக்கியப் பிரியரான தோழர். நல்லகண்ணு ஒருமுறை மருத்துவ மனைக்குச் சென்றார். நெடுநேரம் அந்த அம்மாவுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு எண்ணம் அவருக்குத் தோன்றியது. ‘ராஜம் கிருஷ்ணனின் நூல்களை நாட்டுடைமையாக்கி, அவருக்கு ஒரு தொகையைக் கொடுக்க ஏற்பாடு செய்தால் பயனுள்ளதாக இருக்குமே!’ அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களிடம் இக்கருத்தை நல்லகண்ணு தெரிவித்தார்.

நூலாசிரியர் உயிருடன் இருக்கும்போது அவர் நூல்களை நாட்டுடைமையாக்க அன்றைய அரசு விதிகளில் இடமில்லை. ராஜம் கிருஷ்ணனுக்கு உதவ வேண்டும் என்ற ஆசையில் விதிகளில் சில மாற்றங்கள் செய்து, அவர் நூல்களை நாட்டுடைமையாக்கி, ஒரு தொகையை அவருக்கு வழங்க ஏற்பாடு செய்தார் இலக்கியவாதிகளிடம் பரிவு கொண்ட முதலமைச்சர் கலைஞர்.

நண்பர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரின் தூண்டுதலால் தன் கணவரைப் பற்றி “காலம்” என்ற பெயரில் ஒரு நூல் எழுதினார் ராஜம் கிருஷ்ணன். தன் கணவரின் உதவும் பண்பு பற்றியும், வயது வேறுபாடு பார்க்காமல் சிறுவர்களோடு அவர் குதூகலமாய்த் தெருவில் விளையாடுவது பற்றியும், குறும்புத்தனம் பண்ணுவது பற்றியும், எளிமையான அவருடைய வாழ்க்கை முறைகள் பற்றியுமான பதிவு களைக் கொண்ட சுவையான புத்தகம் அது.

மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள் ராஜம் கிருஷ்ணனிடம் இறுதிக் காலம் வரை பிரியமாக நடந்து கொண்டதையும் வியப்போடு அடிக்கடி என்னிடம் சொல்லுவார் ஜெயகுமார். அந்தச் செவிலியர் மீது தான் கொண்ட ஈடுபாட்டினால், தன் வங்கிக் கணக்கில் சேர்ந்து கிடந்த ஓய்வூதியப் பணத்தை அங்குள்ள செவிலியர் கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவிகளுக்கு உதவித் தொகையாகக் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று மருத்துவரிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டாராம் ராஜம் கிருஷ்ணன். அதே போல் தன் உடலையும் அம் மருத்துவமனைக்கே தானமாகக் கொடுத்துவிட்டாராம் அவர்.

என்னைப் பார்க்க வேண்டுமென்று விரும்பிய ராஜம் கிருஷ்ணன் சில நண்பர்களிடம் சொன்னதை என்னிடம் தொலைபேசியில் சொன்னார்கள் அவர்கள். அப்போது உடல்நலம் சற்றுக் குன்றியிருந்த நான் உடனேயே போக இயலவில்லை. உடல்நலம் பெற்று, அவரை நான் பார்க்கப் போனபோது என்னை நினைவு படுத்திக் கொள்ளும் நிலையில் அவர் இல்லை.

நினை வாற்றலை அப்போது அவர் முற்றிலும் இழந்திருந்தார். நான் வந்திருந்ததை எந்தஎந்த வகையிலெல்லாமோ ஜெயகுமார் தம்பதிகள் அவருக்குத் தெரிவிக்க முயன்றார்கள். ஒரு குழந்தையைப் போல் என்னைப் புன் முறுவலோடு சற்றுநேரம் பார்ப்பார் ராஜம் கிருஷ்ணன். பார்த்துவிட்டுச் சட்டென மறுபுறம் திரும்பிக் கொள் வார். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் இப்படி என்னைப் பார்ப்பதும் திரும்புவதுமாகவே இருந்தார் அவர். என்னை நினைவுபடுத்திக் கொள்ள அவருக்கு இயலவே இல்லை என்றே கருதுகிறேன். அதன்பின் ராஜம் கிருஷ்ணன் பற்றி எனக்குக் கிடைத்தது நவம்பர் 2014-ல் அவர் மறைந்த துயரச் செய்திதான்.

எந்தப் பாகுபாடும் இன்றி எல்லோருடனும் நட்புடன் பழகும் பண்புடையவர் ராஜம் கிருஷ்ணன். தன் கருத்துக்களை வெளிப்படுத்துவதில் எந்தத் தயக்கமும் காட்டாதவர். பிறர் கருத்துக்களுக்குக் காது கொடுக்கவும் தயங்காதவர். எந்த இசத்துக்குள்ளும் சிக்கிக் கொள்ளாதவர். மனித நேயம் ததும்பும் எதார்த்த எழுத்தாளராக இறுதிவரை கதகதப்போடு வாழ்ந்தவர்.

காவிரிக்கரையில், உயர் சாதியில், வசதியுள்ள குடும்பத்தில் பிறந்தும், தலைமைப் பொறியாளரின் துணைவியாராகப் புகழோடு வாழ்ந்தும், என்றென்றும் எளிமையைக் கைவிடாதவர் அவர்.

அவர் எழுத்துகளில் மனம் பறிகொடுத்திருந்த இளைஞர் ஒருவர் தன் திருமண அழைப்பிதழை ராஜம் கிருஷ்ணனிடம் நேரில் கொடுத்து, தன் திருமணத்தின் போது அவர் வந்து வாழ்த்த வேண்டுமென்று விரும்பிக் கேட்டுக் கொண்டார்.

மணமகனின் வேண்டுகோளை ஏற்று ராஜம் கிருஷ்ணனும் உரிய நேரத்தில் திருமண மண்டபத்துக்குப் போனார். இவர் கட்டியிருந்த எளிய பருத்தி ஆடையைப் பார்த்து வாசலில் பட்டும் நட்டுமாகக் கூடி நின்ற பெண்கள் இவரை உள்ளே அனுமதிக்கவே மறுத்துவிட்டார்கள். வேறு வழியின்றி இவர் வீட்டுக்குத் திரும்பினார்.

திருமணம் முடிந்து ராஜம் கிருஷ்ணனைச் சற்று நேரம் எதிர்பார்த்த மணமகன், மணமகளோடு அவசர அவசரமாக ராஜம் கிருஷ்ணன் வீட்டிற்கே போனார். “ஏனம்மா என்னை ஏமாற்றினீர்கள்?” என்று மணமகன் வருத்தத்தோடு அவரிடம் கேட்ட போது, “நான் வரத்தான் செய்தேன், உங்கள் உறவினர்கள் என்னை உள்ளே நுழைய விடாமல் தடுத்துவிட்டார்களே” என்று சிரித்தார் அவர். மணமக்களை அமர வைத்து, வாழ்த்தி உபசரித்து அனுப்பிவைத்தார்.

இப்படி எத்தனையோ சம்பவங்கள் அவர் வாழ்க்கையில். எதையும் அவர் பொருட்படுத்திக் கொண்டதில்லை. அவர் இயல்பு அப்படி. இப்படி எளிமையாகவும் மேன்மையாகவும் வாழ்ந்த எழுத்தாளர்கள் தமிழகத்தில் மிகமிகக் குறைவு.

பின்பற்றப்பட வேண்டிய மாமனிதர்.

Pin It