odiyan 400ஓடியன்

ஆசிரியர்: லட்சுமணன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-க்ஷ, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை - 600 098

விலை: ரூ. 75.00

‘வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்’ என்று தொடங்கி, சரஸ்வதி வீற்றிருக்கும் இடங்களை யெல்லாம் சொல்லிவருகிற பாரதி, ‘மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்’ என்றும் பாடுகிறார்.

‘இது மழலை மொழி பேசும் குழந்தைகளாகிய மக்களைக் குறிக்கும்; ஆனால், பொதுமக்கள் பேசுகிற பேச்சுமொழியையே குறிக்கிறது’ என்று சிறப்புப் பொருள் தருவார் ஜெயகாந்தன்.

‘மக்கள் புழங்கும் சொற்களின் வழியே பிறக்கும் மொழி இலக்கணச் செழுமையுடையதன்று. கொச்சை மொழி’ என்று எழுத்துமொழிக்காரர்கள் குறிப்பிட்டுச் சொன்னாலும், அதுதான் ‘செப்புமொழி.’

‘செப்புமொழி பதினெட்டுடையாள் -எனிற்

சிந்தனை ஒன்றுடையாள்’

என்பதையும் சேர்த்துச் சிந்திக்கச் செறிவு தரும் ஜெய காந்தனின் சிந்தனை. இன்னும் சொல்லப்போனால், வரிவடிவில்லாமலேயே உலகில் வழங்கிவருகிற மொழிகள் மிகப்பல. எனவே, ஒலி வடிவினதாகிய மொழியின் தொன்மைவிடாமல், நவீன காலத்திலும், பேசி வருகிறவர்கள் பழங்குடியினர்.

அவர்களும் மகாகவி பாரதி பாடிய மக்களுள் சிறப்பிடம் பெறுபவர்கள். அம்மக்களுள் ஒரு பிரிவினராகத் தமிழகத்தில் வாழும் இருளர்களைக் கொள்ளலாம். அவர்களது மொழிக்கு ஒலிவடிவம் மட்டுமே உண்டு. தமிழ், தெலுங்கு, கன்னடம் கலந்த ஒரு தொன்மைமொழியைப் பேசுகிறவர்கள் அவர்கள்.

துளுவையும் கூட இணைத்துப் பார்க்க இடம் கொடுக்கும் அவர்கள் மொழி; மனோன் மணீயம் சுந்தரனார் பாடுவதுபோல, ‘கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்’ தன் உதரத்தில் தாங்கிய தமிழ்வடிவின் ஒரு கூறு. அது எழுத்தும் சொல்லும் இணைந்த மொழி மட்டுமன்று; அகமும் புறமும் கொண்ட பொருள்மொழி.

வாழையடி வாழையெனத் தலைமுறைதோறும் கருதிக் காக்கும் தானியக் களஞ்சியம் ஒத்தது. அதன் ஒவ்வொரு சொல்லும் விதையென விளங்கும் தானிய மணி. மரபும் தொன்மையும் தாங்கி எந்நிலையிலும் புதிதாய் முளைத்துச் சந்ததி பெருக்கும் ஆற்றல் உடையது. நவீன காலத்து எந்த இரசாயன, நச்சுக்கொல்லிகளின் கலப்பும் படாது தன் மொழியையும் வாழ்வையும் தானிய மணிகள்போல் பேணிவரும் மானிடர்கள், இருளர்கள்.

*

இருளில் வாழ்பவர்கள் என்பதால் அவர்கள் இருளர்கள். அவர்களுக்கு வெளிச்சமோ இருளோ பிடிப்பதில்லை. கொக்குப் பறந்தால்கூட, புதருக்குள் ஓடுகிற அவர்கள் வாழும் அடர்ந்த வனத்தில் சூரியனின் ஒளிகூடப் புகமுடியாதபடி இருக்கும்.

அதையும் மீறி நுழையும் ஒளிப்பொழுதுகளில், மரப் பொந்துகளுக் குள்ளும், குகைகளுக்குள்ளும் ஒடுங்கிக்கொண்டு அதிகமாய்த் தலைகாட்டாமல் வாழும் இயல்பினர். எனவே, இருளர்கள். மணிமேகலை சுட்டும், ‘வெயில் நுழைபு அறியாக் குயில்நுழை பொதும்பர்’ என விளங்கும் அவர்கள் வாழிடம்.

எரிளி என்கிற கிழங்குகளைத் தோண்டி உண்ணுகிற மக்கள் என்கிற பொருளில் எருளர் எனப் பெயர் பெற்றவர்கள். பேச்சுவழக்கில் மருவி, இருளர்கள் ஆனவர்கள். (எரிளி- கிழங்கு, காரு- மக்கள்.) (எரிளி+காரு= எருளர்- இருளர்) என்கிறது ஒரு விளக்கம்.

“இருளான நேரத்தில் பிறந்ததால் இருளர் என இவர்கள் குறித்து, வாய்மொழிக்கதைகள் கூறினாலும், இவர்களின் அடர்ந்த கரிய நிறம்தான் இவர்களுக்கு இப்பெயர்வரக் காரணம்” என்கிற ராஜா ராமசாமி, “குப்பே, சம்பே, வெள்ளகெ, கரட்டிக, கொடுவே, புங்க, குறுநகே, பேராதர, குப்பிளி, உப்பிளி, வெள்ளே, ஆறுமூப்பு என 12 குலங்கள் இவர்களிடையே உள்ளன.

தமிழ்நாடு பழங்குடிமக்கள் சங்கத்தின் அட்டவணையின் கீழ் உள்ள 36 பழங்குடியினர்களுள் பதினான்கு இனங்கள் கொங்குப் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இதில் ஆறு இனங்கள் வேகமாக அழிந்து வருகின்றன. அதில் முதலிடத்தில் உள்ளது இருளர் இனம்.

1971 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கின்படி இவர்கள் எண்ணிக்கை 10598. இவர்கள் சிறுவாணி, வெள்ளியங்கிரி, சோழக் கரை, ஆனைக்கட்டி பாலமலை உள்ளிட்ட கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பதி எனப்படும் குடியிருப்புகளில் வாழ்ந்து வருகின்றனர். சாடிவயல், சீங்கபதி, போரத்தி, பொட்டப்பதி, சின்னாம்பதி, தூவைப்பதி என இப்பகுதிகளில் சில...” என்கிறார்.

மேலும், “இவர்கள் 1600 கி மீ தூரமும் 120937 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும் கொண்டு விரிந்து 39 கானுயிர்க் காப்பகங்களும் 5000 வகையான தனித்துவம்மிக்க இங்கே மட்டும் வளரக்கூடிய தன்மையுடைய அபூர்வ தாவரங்களும், 134 வகையான பாலூட்டிகளும், 508 பறவை இனங்களும், 325 வகை அரிய உயிரினங்களும் வாழும் பகுதிகளையும் கிருஷ்ணா கோதாவரி வைகை குந்தியா என்ற ஆறுகளின் பிறப்பிட மாகவும் உயிர்ப்பிடமாகவும் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையையும் அந்த மலையைச் சார்ந்த பகுதிகளின் மைந்தர்கள்” என்று இருளர்களைச் சுட்டுகிறார்.

பூவிலியர், மாவலியர், காவிலையர், வேட்டுவர், வேடர், குரும்பர், குன்றவர், நாகர், எயினர் பல்வேறு தொல்பழங்குடியினர் கோவை சார்ந்த கொங்குநாட்டில் வாழ்ந்தனர் என்றும், இன்றைய கோவை மாவட்டத்தின் மேல் கொங்கில் இருளர், காடர், மலசர், முதுகர் என நான்கு பழங்குடியினர் இன்று வரை வாழ்ந்து வருகிறவர்கள். இவர்களுள் கோவை மாவட்டத்தின் தொல் பழங்குடியினராக இருளர் மட்டுமே உள்ளனர். மற்றவர்கள் வேறு பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து வந்திருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இம்மக்களுடன் பத்தாண்டுகளுக்கு மேலாகக் கலந்து பழகி, அவர்கள் ‘மொழி’கிற கருத்துருக்களையும், இசைக்கிற பாடல்களையும் அவர்களின் வாழ்க்கைப் பின்புலத்தோடு, கதையாகவும், கவிதையாகவும் தமிழில் தந்திருக்கிறார் லட்சுமணன். இருளர் ‘மக்கள் பேசும் மழலை’யைத் தற்காலத் தமிழ் எழுத்துகளில் ஒடியன் என்று கவிதைத் தொகுப்பாகவும், சப்பெ கொகாலு என்று புனைவுகளுடன் ஆன பாடல்களின் தொகுப்பாகவும் இரு நூல்களைத் தந்திருக்கிறார் இவர்.

“எனக்கு அறிமுக மான இருளர் பழங்குடி மக்கள் பற்றிய கவிதைகளை, அவர்கள் மொழியான இருளர் மொழியிலேயே எழுதியிருப்பது வாசகனை சித்திரவதைப்படுத்து வதற்கல்ல; மேலும் அவர்களிடம் கேட்டதைக் கேட்டபடி எழுத்துவடிவம் இல்லாத அவர்கள் மொழியிலேயே கொடுப்பதுதான் சரியாக இருக்கும். முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கை முறையைக் கொண்ட பழங்குடி களின் சிந்தனைப்போக்கை தமிழ்ப்படுத்தலாம்.

ஆனால் அந்த உணர்வுகளை அவர்களின் மொழியின்றிப் பதிவு செய்ய முடியுமாவென்று எனக்கு தோன்றவில்லை. இது தவிர இன்னொரு காரணமும் இருக்கிறது. பழங்குடி களுக்கென்று மொழிகள் இருக்கிறது. அவை நமது தமிழ் போலவே அன்பையும் வெறுப்பையும் நேசத்தையும் வளமையுடன் வெளிப்படுத்தும் ஆற்றலும் ஆழமும் கொண்டவை. மேலும் அழிந்து வரும் அம்மொழியை காக்கும் ஒரு கடமை நம்மிடம் இருக்கிறது.”

மொழியை மட்டுமல்ல, அவர்கள் வரலாற்றை, அவர்களின் பண்பாட்டை, அவர்கள் இன்னமும் புவிகாக்கத் தலைக்கொண்ட சூழலியல் வாழ்முறையை, அவர்கள் காட்டும் வாழ்வின் உன்னதத்தைக் காக்க இத்தகு பதிவுதான் நல்ல ஆவணம் என்பதில் இரு கருத்திற்கு இடமில்லை.

இவற்றைக் காப்பது, இவர்களைக் காப்பதான எல்லைக்குள் சுருங்கிவிடாது. மண்ணையும் தமிழ் மரபையும், இந்திய புராதனத்தையும் இழந்துவிடாமல் காப்பது. எஞ்சியதைக் காப்பதோடு, இவ்வழி அனைத்தையும் மீட்டெடுப்பது என்கிற நிலைப்பாட்டில் இது மிகவும் இன்றியமையாத் தேவை.

அந்தத் தேவையைத் தன்னால் இயன்ற அளவு நிறைவேற்ற முயன்ற லட்சுமணனின் செயற்பாடு இரு நூல்களாகப் பிறப்பெடுத்திருக்கின்றன.

உள்ளுறையும் இறைச்சியும் சற்றேறக்குறைய ஒன்றிவரும் கவிதைகள் நிரம்பியது ஒடியன்; இதைக் குறுந்தொகை எனலாம். இவற்றோடு தொன்மங்களும் படிமங்களும் நிரம்பிய இசைப்பாடல்களும் உரைப்பாட்டு மடையெனப் புனைவுகளும் தாங்கியது ‘சப்பெ கொகாலு.’ இதனை நெடுந்தொகை எனவும் கொள்ளலாம்.

முற்காலம் தொடங்கித் தற்காலம் வரை, ஊடும் பாவுமாக, இருளர்களின் அக-புற வாழ்க்கையைச் சித்திரப்படுத்திக்கொண்டே வளர்கின்றன கதைகள்.

*

மொழியும் இசையும் கலந்து வெளிப்படும் லயத்துக்கேற்பத் தவிலும், பொறையும் பின்னொலிக் கின்றன. ஓங்கி ஓங்கி ஒலிக்கிறது கொகாலு. (அது இருளர்களுக்கான இசைக்கருவி.) இருளர்களின் மூச்சுக் காற்றோடு கொகாலுக்குள் செருகிய புல் மணக்கிறது. கோழி இறகு படபடக்கிறது. பொண்றீக (பெண்கள்) ஆடும் ஊட்டாட்டமும், ஆண்களும் ஆடுகிற கூட்டாட்டமும் நம் மனக்கண்முன் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.

சபையில் மூப்பன் மூப்பத்தியோடு அமர்ந்திருக் கிறான். அவன்தான் இருளர்பதியின் தலைவன். ஊரைப் பதி என்று குறிப்பது இவர்தம் மரபு. அவனது வலது கரமாய்ச் செயல்படும் வண்டாரி, இருளர் குழுவுக்குள் மூப்பனுக்கு அடுத்த பொறுப்பு வகிக்கும் குறுதலையும் இருக்க, வீணர்களும் வீணிகளுமாக (மணமுடித்த திருவாளர்கள், திருமதிகள்) கூடிய பெருங்கூட்டத்தினுள் நம்மையும் லட்சுமணன் அழைத்துப்போகிறார்.

தலைவீணனும் தலைவீணியும் அவர்கள் பாரம் பரிய முறைப்படி வளைந்த மூங்கில் குச்சியைக் கையில் கொடுத்து வரவேற்கிறார்கள். காட்டுப்பூக்களால் பின்னப்பட்ட ஒரு மாலையைப்போட்டு பச்சைச் சந்தனத்தையும் பூசுகிறார்கள். கொகலும் பொறையும் தவிலும் முழங்கிக் காடுகளில் எதிரொலிக்கிறது. (ப.117) அவர்களோடு நாமும் ஐக்கியமாகிறோம்.

தேனெடுத்தல், கிழங்ககழ்தல், கானுயிர்களை வேட்டையாடித் தீயிட்டுக் கருக்கியுண்ணல் எனும் பழந்தமிழ் மரபின் ஒழுங்கு குலையாமல் வாழும் அவர்களோடு நாமும் இணைகிறோம். பெசாதுகளைக் கும்பிட்டு, கோலன் (கொம்புத்தேன்) எடுக்கப்போகும் பீமன் நம்மையும் கூட்டிப்போகிறான்.

ஓலைக்காரனும் கொடுக்கனும் நம்மோடு தான் நடக்கிறார்கள். வெரையன் - மலைத்தேன். தொடுதி- அடுக்குத்தேன், குசுவ - கொசுத்தேன், போன்ற தேன் வகைகளையும், மாசி, பங்குனியில் தேன் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல’ என்பன போன்ற தகவல்களையும் அவர்களது உரையாடல்களில் இருந்து தெரிந்துகொள்கிறோம்.

ஆனைத்துளசியைப் பிடுங்கிப் பிழிந்து அதன் சாற்றைத் தன் மேனிகளில் பூசிக்கொள்கிற பீமன் நம்மீதும் தடவு கிறான். தேனீக்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் மருந்துபோலும்.

இதோ, இடுப்பில் கயிறு கட்டிக்கொண்டு தேனெடுக்க இறங்குகிறான் பீமன். பாறையின் இடுக்கில் கட்டியிருந்த ராட்டுகளை எடுக்கக் கூடையும் இறக்கி யாயிற்று. ‘க்கூகோய்..’ என்று பீமனிடமிருந்து வந்த ஓசையைக் கேட்டுக் கூடையையும், கயிற்றையும் இழுக்கத் தொடங்குகின்றனர், மற்ற இருவரும்.

ஈக்களுக்கு விட்டுவிட்டுத் தேவையான தேனடைகளை மட்டும் எடுத்துக் கொண்டு மேல் வருகிறான் பீமன். (ப.263) அதளபாதாளம் நோக்கிச் சொட்டிக் கொண் டிருக்கும் தேன்துளிகளைச் சுவைக்க எந்த உயிரிகளுக்குக் கொடுத்துவைத்திருக்கிறதோ என்று எண்ணும்போது நாக்கில் நீர் ஊறுகிறது.

உழைத்த பங்குக்கு உரிய தேனை ஈக்களுக்கு விட்டுவிடும் கானக தர்மம் இவர்களுக்கு எப்போதும் உண்டு. தேனீக்களிடம் மட்டுமல்ல, கன்றுகளைப் பட்டினிபோட்டுப் பாலை ஒட்டக் கறக்கும் சுரண்டல் பிழைப்பு அவர்களிடம் ஒருபோதும் இருந்ததில்லை.

கண்ணுகுட்டி

துள்ளிக்கெடாக்கூ

பாலே கறந்து

சொசேட்டிக்கு ஊத்துங்கா

கொங்கே

அத்து பாலு

அத்துக் குட்டீக்கு

பால் போசிக்குள்ளே

பாம்பும் கண்டே (ஒடியன், ப.22)

பாலைக் கறந்து சொசைட்டிக்கு ஊற்றச் சொல் கிறான் கொங்கன், அதாவது நகரில் இருந்து வந்து இவர்களை ஆக்கிரமித்தவன். அதன் பால் அதன் கன்றுக்கு என்று நியாயம் பேசும், இருளர்களுக்குப் பாம்பையும், கெங்கனையும் காண்பது கெட்ட சகுனம். அந்த அறிகுறியைச் சுட்டும் கவிதை இது. அது மட்டு மல்ல, மீன்பிடிக்கும் போதும் இந்த மரபைத்தான் கடைப்பிடிக்கிறார்கள். கொக்குமரப் பட்டையைக் கசக்கி நீரில் போடுகிறார்கள்.

உடனே மீன்கள் மயங்கி நீரில் மிதக்கின்றன. இவர்கள் பெரிய மீன்களை மட்டும் பிடித்துக் கொண்டு சின்ன மீன்களை விட்டு விடு கிறார்கள். கொஞ்ச நேரத்தில் மயக்கம் தெளிந்த சின்னமீன்கள் மீண்டும் நீந்தத் தொடங்கிவிடும். ஒட்டுமொத்தமாய்ப் பிளாஸ்டிக் வலைவிரித்துப் பற்றி இழுத்து வந்து கரையில் போட்டுச் சாக அடிப்பதோ, வெடிவைத்து அனைத்தையும் கொன்று அள்ளுவதோ அவர்களுக்கு உடன்பாடானதல்ல; அதனை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களும் கூட.

வேங்கே மடுவிலே

வெடி போடும் வலையா

நா

வெளஞ்சே கெண்டே

நல்லா திந்து

ஆடி மூஞ்சாச்சு

ஏங்குஞ்சும் சாகேடா

குட்டீயே கொல்லுகாதில்லே

செனமான் கத்துதுன்னா

முச்சூடும் சொரண்டும் பழக்கோ

முடுகனுக்குமில்லே

ரெக்கே திங்கா பக்கி (ஒடியன், ப.25)

என்று சபிக்கிறான். ‘இறகைத் தின்னும் குருவியே’ என்று அத்தகையோரை எள்ளுகிறான். பறம்புமலைப் பாரி விழாவில் மலைவளம் அழிக்கும் மக்களை நோக்கி, அடிகளார் எழுப்பிய வினா, ‘பசிக்கு விரல்களை அறுத்துப் புசிக்க முடியாது’ - நினைவுக்கு வருகிறது.

‘சினைமான் கத்தினால் கொல்லுவதில்லை’ என்பது ஒரு குறியீடு.வேட்டையாடுவதுதான் அவர்கள்தொழில் எனினும் குட்டிகளையும் சூல்கொண்ட மிருகங்களையும் கொல்வது அவர்களின் பண்பாடல்ல. அம்புபட்டுத் துடித்தலறிப் பள்ளத்தில் வீழ்ந்துகிடக்கும் கடமானைக் கறிக்காக எடுக்கப்போகிறான் சடையன். கூடப்போகிறார்கள், கொன்னானும், கோயனும், சுள்ளானும் இன்னும் இருவரும். நாமும் கூடப் போகிறோம்.

சட்டென்று நின்ற சடையன், மூக்கை உறிஞ்சி விட்டு, முணுமுணுப்பதுபோலச் சொல்லுகிறான்: “ராஜா ஈங்குதான் ஏங்கியோ கடாக்கான்.” சொல்லி முடித்ததும் பிளிறலில் காடு அதிர்ந்தது. ‘காட்டுக்கு ராஜா சிங்கம் என்று கதையில் படித்தது பொய். உண்மையில் காட்டுக்கு ராஜா களிறுதான் என்பது இருளர்கள் காட்டும் மெய்.

‘க்க்க்க்க்க்க்க்....க்க்க்க்க்க்க்...க்க்க்க்க்க்க்க்...ர்’ சத்தம் வந்த திசைநோக்கி முன்னேறும் சடையன் ஏறவே முடியாத பள்ளத்துக்குள் இறங்குகிறான். சத்தம் அதனுள் இருந்துதான் வந்துகொண்டிருக்கிறது. புதர்களை விலக்கி உள்ளே இறங்கினால், ‘தொட்டில் கட்டிதே இழுக்கோனு; கயிறு வரட்டு’ என்கிறான். கயிறு இறக்கப்பட்டது.

“ஊரே திந்தாலூ தீருகாதுல சடையா” என்று உற்சாகத்தோடு கூவுகிறான் கோடன். மேலேறிவந்த தொட்டிலில் அவ்வளவு பெரியமான்; கடமான். இரண்டாம் முறை கயிறு உள்ளிறங்குகிறது. இப்போது அது அப்போது ஈன்ற குட்டியும் வருகிறது. ஒன்றுக்கு இரண்டு இலாபம் என்று துள்ளிக்குதிக்கவில்லை அவர்கள்.

“கால்களின் காயத்துக்கும் குத்தீட்டிக் காயத்துக்கும் சுள்ளான் இருமுளிச்சாற்றைப் பிழிந்து சாக்கைக் கிழித்துக் கட்டினான். பக்கத்து குண்டியி லிருந்து தண்ணீரைக் கொண்டுவந்து கடமனின் வாயில் கொஞ்சம் கொஞ்சமாய் ஊற்றினான் கோடன். கோக்கடையும் அவனது மகன்களும் இழைதழைகளை முறித்துவந்து அதற்கு ஊட்டிவிட்டார்கள்.

அதற்குள் கோயனும் சடையனும் மேலே வந்துவிட்டார்கள். இப்போது அதன் கண்களில் மரணபயம் சுத்தமாக இல்லாமல் போயிருந்தது. அது எழுந்து நிற்பதற்கு வசதியாக அடிப்பகுதியில் கொடியைப் போட்டு எல்லோரும் சேர்ந்து மேலே உந்திக் கொடுத்தார்கள்.ஒரு கட்டத்தில் எழுந்துவிட்ட கடமன், குட்டியை மூக்கில் தள்ளித்தள்ளி கால்க¬ளை உதறியபடி துள்ளத் தொடங்கியது.

“நீ போய்.. நல்லா... பொழத்தா போதும்” - சடையன் சொன்னதைக் கேட்டு உடனிருந்தவர்கள் ‘ஆ..ஆ’ போட்டு ஆமோதிக்கிறார்கள். நாமும்தான். எத்தனை பெரிய தாயுள்ளம் அவர்களுக்கு. (சப்பெ கொகாலு, ப.188)

*

உணவு போனாலும் பரவாயில்லை. உயிரே போகும் ஆபத்து வந்தாலும் அதன் உயிர்களைக் கொல்லாமல் விட்டுவிடுகிற கருணை இவர்களுக்கு உண்டு. சேர மன்னனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து வேறு வழியேயில்லாமல் அவனுக்கு வேண்டிய யானை களைப் பிடித்துக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு. ஆழக்குழி தோண்டி, அதனுள் ஒரு யானையையும் வீழ்த்தியாயிற்று. இச்செய்தி அரசனுக்கும் போயிற்று. படை பரிவாரங்களோடு அவன் புறப்பட்டு வருகிறான்.

அதற்குள் குழிக்குள் இருந்து யானையை எடுத்து அவனிடம் ஒப்படைக்க வேண்டும். தானே வெளியேறி ஓடிவிட ஆனமட்டும் முயற்சி செய்து சோர்ந்து குழிக்குள் கிடந்த யானையை அவினன் சுற்றிச் சுற்றி வந்து பார்க்கிறான். அது பிடி. வயிறு பார்த்து, ‘மாசமாக் கெடாக்குல’ என்று சொல்லிச் சோர்ந்துபோய் உட்கார்ந்துவிட்டான்.

‘ராஜா வர்க்காக்குள்ளே இதே வெளியே டுக்கணுமே” அவினன் சொல்லுக்குக் கட்டுப்பட்ட பதியர்கள் நாளெல்லாம் தோண்டி, குழியைத் தட்டி மேடுறுத்தி அதன் ஆழத்தைக் குறைத் தார்கள். முன்னங்கால்களைத் தூக்கி மேட்டின் மேல் வைத்து தும்பிக்கையால் மண்ணை அழுத்திப் பிடித்துக் கொண்டு உடலை மேலே இழுத்தது. தயங்கித் தயங்கிப் பின் வேகம் கூட்டி ஒரே உந்தில் மேடேறியது.

மக்கள் ஒதுங்கி வணங்கி நின்றனர். கூட்டத்தை ஒருமுறை பார்த்துவிட்டு மிதமாக பிளிறி நன்றிப்பெருக்கோடு தும்பிக்கையைத் தாழ்த்தி வணக்கம் வைத்தது. பின் திரும்பித்திரும்பிப் பார்த்துக் கொண்டே நடக்கத் தொடங்கி காடுகளுக்குள் மறைந்து போனது. அரசன் காட்டை எட்டியிருந்தான். யானைக்கொப்பம் காலியாக இருந்தது. அதிர்ச்சியடைந்தான். மன்னன் படைகளுக்குக் கட்டளையிட்டான்.

படைகள் மூப்பனைத் தேடியது. அவினன்பதியே காலியாக இருந்தது. பதியர்கள் மேற்கு நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். (மேலது, ப.232)

*

கதையாக இருந்தால் இத்தோடு முடிந்து போயிருக்கும். லட்சுமணன் களத்தில் உய்த்துணர்ந்த வரலாற்றை அல்லவா புனைந்து சொல்கிறார். காடு கொன்று நாடாக்கி, வனங்களை அழித்து வயலாக்கி வெள்ளாமை போட வந்தவர்களை எதிர்த்துத் தங்கள் சொல்லாலும் செயலாலும் காலங்காலமாகப் போராடிக் கொண்டே இருக்கிறார்கள் இன்றளவும், இன்றளவும்.

“இந்த வனம் எனக்குச் சொந்தமானதில்லை. அது கோணமாகாளிக்குச் சொந்தமானது. இங்கிருக்கும் நரிகளும், உடும்புகளும், மான்களும், சிறுத்தைகளும், பாம்புகளும், புலிகளும், ஏன் நாங்களும்கூட அவளுடைய குழந்தைகள்தான். எங்கள் அத்தனை பேருக்கும் படியளக்கும் அவள் சம்மதம் இல்லாமல், இதைச் செய்ய முடியாது. அப்படிச் செய்தால், நானும் வாழமுடியாது.

நீங்களும் ஆபத்தில்லாமல் இருக்க முடியாது” மூச்சுவிடாமல் கோவன் சொன்னதை இப்படித் தமிழில் மொழிபெயர்த்தான் அரசவையாள். உண்மையில் கோவன் இன்னும் கூட்டித்தான் சொல்லி யிருந்தான். ஆனால், அந்தப் படைகள் அதைக் கேட்கத் தயாராக இல்லை.” (மேலது, ப.234) அழிவுக்கு மேல் அழிவை உண்டாக்கத் தொடங்கினார்கள். திடீரென்று கோவன் அருளாட ஆரம்பித்தான். இப்போது ஓலையான் எழுத ஆரம்பித்திருந்தான். “....அந்த வனத்திலிருந்த துர்க்கை சோழனிடமிருந்து பலி கேட்டது. அது கேட்ட படி சோழன் சமைய முதலியை அழைத்து துர்க்கைக்கு ஒப்புக்கொள்ளச் சொன்னார்.

அவர் சொன்னபடி சமைய முதலியும் கரிகாற்சோழனாகிறவர் நகரமும் கட்டி வைத்து அதிலுண்டாகிறவர் ஆலயமும் கட்டிவைத்து உன்னையும் நிலைநிறுத்தி வைத்து முப்பலியும் கொடுக் கிறேன் துர்க்கையம்மா” என்று சொல்ல.... கொங்கர்கள் பதியிலிருந்த காடுகளை வெட்டி விதைக்கத் தொடங் கினார்கள். குப்பர்கள் படி நாட்டுக்கும் கல்கட்டிகள் புறமலை நாட்டுக்கும் போனார்கள்” (மேலது.)

இப்படிச் சொந்த மண்ணின் மக்களைப் புலம் பெயரச் செய்துவிட்டுத்தான் அவர்கள் காடுகொன்று நாடாக்கினார்கள். பண்பாடு ஒழித்துப் பணம் பெருக்கினார்கள். நாகரிகம் எனும் பெயரில் வாழ்வியல் சூழல்களைச் சுரண்டினார்கள்.

கோணமாகாளி கோணியம்மன் ஆகிவிட்டாள். கோவன்பதி கோயமுத்தூர் ஆகிவிட்டது. செவனன் ஆண்ட ஊர் சேவூர் என்றும், சூரன் ஆண்ட ஊர் சூலூர் என்றும், பல்லன் ஆண்ட ஊர் பல்லடம் என்றும், அவினன் ஆண்ட ஊர் அவிநாசி என்றும், மன்னி ஆண்ட ஊர் அன்னூர் என்றும், கீரன் ஆண்ட ஊர் கீரனூர் என்றும், துடியன் ஆண்ட ஊர் துடியலூர் என்றும் ஆனது என்று அந்தந்தப் பூர்வப் பட்டயங்கள் தெரிவிக்கின்றன.

தெரிவித்தென்ன, காலங்காலமாய்ப் பேணிவந்த காடுகளையும் வனங்களையும் மலை களையும் அழித்துத் தம் வசப்படுத்தக் காலந்தோறும் அரசர்கள், ஜமீன்களின் ஏஜண்டுகள், கரியாஞ் செட்டிகள், அந்துவான்கள், ஜாகீர்கள், ஜார்ஜ்கள், குதிரைத்துரைகள், தொப்பித் துரைகள் என்று எத்தனை பேர்கள் வந்து வந்து இந்த மண்ணையும் மலைகளையும் சொந்தங்கொண்டாடிச் சுரண்டினார்கள் என்பதை, ‘சோழன் பூர்வபட்டயம், கோவைகிழாரின் கொங்கு நாட்டு வரலாறு, கோவை மாவட்டத் தொல்லியல் கையேடு, கோவை மாவட்டக் கல்வெட்டுக்களின் பகுதி, எட்கார் தர்ஸ்டனின் தென்னிந்தியக் குலங்களும் குடிகளும், செங்கோவின் வனாந்திரப்பூக்கள், கோ.கிருஷ்ணனின் கல்வராயன் மலை ஆகியவற்றோடு, Encyclopedia of Dravidian tribe, Coimbatore gazatees ஆகியவற்றைச் சாட்சிகளாக வைத்து இந்த நூலை எழுதியிருக்கிறார் லட்சுமணன். செட்டியை மலைக்குள் திரும்ப வராமலும், தொப்பித்துரையை மீளவிடாமலும் அவர்கள் செய்த செயல்கள் சுவாரஸ்யமானவை.

எந்தவொரு படையோ, பெருங்கொண்ட போர்க் கருவிகளோ இல்லாமல், இயற்கையையும், ஆங்குறையும் உயிரினங்களையும் தமது அளப்பரிய நம்பிக்கை களையும், ஆற்றல்களையும் அனுபவக்கல்வி முறைகளையும் கொண்டு அவர்கள் வென்று வென்று போராடி நின்று கொண்டிருப்பதற்கான ஆதாரங்களை வரலாறாகக் காட்டியிருக்கிறார் லட்சுமணன்.

இந்திய விடுதலையின் வரலாறு, இவர்களிடம் இருந்து கவனிக்கப்பட வேண்டும் என்பதை, ‘வெள்ளேக் காரெ தோட்டத்திலே’, ‘வாராண்ட வாராண்ட வெள்ளெக்காரே’, ‘சோதோ சோதோ சின்னாத்தொரே’ என்ற பாடல்களின் பதிவுகளை ஊன்றிக் கவனிக்கச் செய்கின்றன லட்சுமணனின் எழுத்துச்சித்திரங்கள்.

*

வரலாறு மட்டுமா, அவர்களின் அகவாழ்வையும் சித்திரப்படுத்திக்காட்டியிருக்கிறார். “சப்பெ கொகாலுவில், ‘துண்டுமல்லிகை’ தொடங்கி ‘வெள்ளிங்கிரி சாமியோ’ வரைக்கும் 45 இருளர்களின் பாடல்களைத் தந்து அதன்பின் சிறு சிறு புனைவுகளின்மூலம் அவர்களின் வரலாற்றை வாழ்வியலாகக் காட்டி, நம்மையும் உடனிருத்தி உணர்த்திக் காட்டுகிறார்.

பாறையாகிப் போன பொன்னான், கிழங்காய்ச் சமைந்த வள்ளி, தொன்மங்களாய் உறைந்த காளி, காரமடை ரங்கநாதப் பெருமானுக்கு வா(ழ்)க்(¬)கப் பட்டுப்போன, துளசிலாம்பா... எத்தனை கதாபாத்திரங்கள். எத்தனை உரிமையோடு சொல்கிறான் வைத்தியக்கிழவன் பூரடன். “அதுக்கு முன்னால இந்தக் கடவுளையெல்லாம் நம்த்தாளுக சீந்தியதே இல்லை.

அவர் (காரமடை ரங்கநாதர்) துளசிலாம்பாவை கல்யாணம் செய்து, நம்க்கு மச்சான் ஒறவு வந்த பிந்துக்குதா, அவருக்குந்து ஒரு கிராக்கியே வந்ததுலா” (மேலது, ப.272).

ஆண்டாள் போல இருளர்கள் வாழ்க்கையில் ஒரு துளசிலாம்பா. இவர்கள் வாழ்வு, பழந்தமிழ் மரபு சுட்டும் அன்பின் ஐந்திணை வாழ்வு. அதிலும் குறிஞ்சி நிலத்திற் கென்றே உரிய புணர்தலும் புணர்தல் நிமித்தமுமான கருப்பொருள் நிறைந்த கருணை வாழ்வு. வயதுக்கு வந்த இருளனும் இருளச்சியும் சுயமாய் முடிவெடுத்துத் தாமே காட்டில் கூரை கட்டிக்கொண்டு வாழத்தொடங்கினால் முடிந்து போயிற்று, கல்யாணம். இதற்குத் துணைவரும் தோழிகள் தாட்டிக்குருவிகளாக ஆகிறார்கள்.

‘ஓடிப் போகுமோ’ என்று கேட்கும் ஆண்-பெண் இணைந்து பாடும் பாடல்களில் பழந்தமிழ் ‘உடன்போக்கு’ மரபு துலக்கமாகிறது. இற்செறித்தல் இல்லை. அலர் இல்லை. மறுப்பு இல்லை. எப்படியானதொரு சமத்துவ, பொதுமை வாழ்க்கை அவர்களது. (கீரைப்பாசி (தாலி) கட்டிக்கொள்ளும் வழக்கமும், சீர் (பரியப்பணம்) கொடுக்கும் வழக்கமும் இவர்களின் வாழ்வில் பின்னால் தான் வந்திருக்கும். அதுவும் பெண்வீட்டாருக்குத்தான் கொடுத்தாக வேண்டும்.

அதுமட்டுமல்ல, தான் விரும்பும் பெண்ணோடு வாழ, விரும்பும் ஆண்மகன் தானாகவே வலியப்போய்ப் பெண் வீட்டில் ஆறு மாதங்கள் தங்கி அவளை மனைவியாக்க அவர்கள் வீட்டு வேலைகளை எல்லாம் செய்யவேண்டும். அப்படிச் செய்யும் இருளனுக்கு மெனமாப்பிளெ என்று பெயர்.

அவ்வாறு செய்யும் வேலைக்கு பொண்ணுவேலை என்று பெயர். (செட்டிநாட்டுவழக்கில், ‘பொண்டுக செட்டி’ என்று சொல்லும் வழக்கம் நினைவுக்கு வருகிறது.) பெண்ஜாத்தி, ஆண்ஜாத்தி என்று பிரிந்து கேலி பேசி உறவுகளைச் சேர்த்து வைக்கும் வழக்கமும், தாய்மாமனுக்குக் கொடுக்கும் மலாடைப்பணம், குருமொடத்துக்குக் கொடுக்கும் பசதுபணம், ஊருக்குச் சேர வேண்டிய பதிப்பணம் என்ற காணிக்கைகளெல்லாம் வரிவசூலிக்கும் வழக்கத்திற்குப் பின்னர் வந்தவையாக இருக்க வேண்டும். அந்தக் காலத்தில், அண்டி என்னும் நீர் எடுக்கும் மூங்கில் பாத்திரம் போன்றவை மட்டுமே தாய்வீட்டுச் சீதனமாய்ப் பெண் வீட்டுக்கு வந்து சேரும்.

அக்காலத்தில், வீணனும் வீணியும் வாழ்க்கை தொடங்குகையில், எந்தப் பொருளுக்கும் மாமனார் மாமியார் உற்றார் பெற்றோர் உதவிநாடாமல் காடே வீடாய் அவர்களுக்கு வேண்டின கொடுத்து விடுகிறதே. கத்தாரே, நூரே, ரியான் முள்ளி என்று கசங்குகள் (கிழங்குகள்), வசலடாகு, பொவிடாகு, முஸ்டெடாகு, பாலேடாகு என்று டாகு(கீரை)வகைகள், வெரகரிசி, ரூமுசாடே, மூங்க மூரி என்று வரகு, சாமை, மூங்கிலரிசிகள், என்று இயற்கை கொடுத்த உணவு வகைகள் எத்தனை எத்தனை.

தானே வரும் நோய்க்கு மருந்துகளும், கொன்னான் வைக்கும் விஷ மை வைக்கு மருந்துகளும் அவர்களுக்குத் தெரியும். எல்லாம் பழங்கதையாகப் போக நஞ்சுபோல் வந்து கலக்கிறது, நவீன வாழ்வும், நாகரிகப் போக்கும்.

அமுதெது, நஞ்செது என அறியும் கல்வி அவர்களது. நஞ்சை விடவும் கொடிய நாகரிகக் கல்வியைக் கொண்டுவந்து திணித்துத் தாய் மொழியையும், தாயகத்தையும் களவு கொள்கிற கொடுமையைப் பள்ளிக்கூடம் என்கிற தலைப்பில் கவிதையாகத் தருகிறார் லட்சுமணன்.

வீடு..

..............

அதான் தூங்குவமே

ஓ! கூரே

தாய்...

ம் அஃகா

தந்தை....

அம்மே

தவளை...

ம்கூம்

கப்பே

சொன்னதைத் திருப்பிச் சொல்லு

பிரம்பு பிஞ்சிடும்

.........................

..........................

வகுப்புக்கு வெளியே

முட்டி போட்டு நின்னுகொண்டிருக்கேம்

நானும்

எத்து மொழியும் (ஒடியன். ப.67)

ஆங்கிலத்தின் முன்னால் நம் தமிழும், தமிழினமும் இப்படித்தான் நிற்கிறது என்று சொல்லவும் வேண்டுமோ?

விஷம் தீண்டினால், சுண்டமுள்ளால் மூன்று முறை அடித்தால் போகும் என்பது அவர்கள் அனுபவம். அதைப் போக்கவும் தெரியும் அவர்களுக்கு. ஆனால், இந்த நாகரிகம் என்கிற பெயரில் வந்த நஞ்சை எத்தனை அடி அடித்தாலும் எப்படிப் போக்குவது என்று தெரியாமல் புலம்புகிறது இருளமனம்.

பல்வலிக்குப் புங்க இலையையும், பசிக்கு மாகாளிக் கிழங்கையும், பிறநோய்களுக்கு வேம்பும், கஞ்சாவும் எனப் பல்வேறு மூலிகைகளைப் பயன்படுத்தி நோய் போக்கும் இருளர்களின் வாழ்வைக் காட்டுமிராண்டி வாழ்க்கை என்று நகையாடிய நாகரிகர்கள் அவற்றுக்கான காப்புரிமை பெற்றுக் கொள்ளை கொள்வதைக் கண்டு வினவும் ஒரு கவிதை:

பல்லுக்கூ புங்கே

பசிக்கூ மாகாளி

தலேக்கு ஊஞ்சே

காஞ்சா வேப்பே

துப்பினா காரி

இன்னூங் காயாலே

இப்பவே வருகே

எம்த்து மூளேயே

நிம்த்துன்னு பகிகாக்கு

வயித்து அழுக்குக்குதே ரேய கங்கு (ஒடியன், ப.30)

‘வயிற்றைச் சுத்தப்படுத்த ரேய கங்கு பயன்படுத்து வோம். உங்கள் மூளையைச் சுத்தப்படுத்த மருந்து இல்லையே’ என்று சொல்லாமல் சொல்லி முடிகிற இக் கவிதையில் அவர்களது கோபத்தைவிட, மனிதர்களைக் குணப்படுத்தும் அக்கறையே ததும்பி நிறைகிறது. காரணம், “பழங்குடிகள் எதையும் தனக்கென வைத்துக் கொள்ளும் தன்மையற்றவர்கள். கிடைப்பது கஞ்சாவாக இருந்தாலும், கண்ணீராக இருந்தாலும் எதையும்.

பகிர்ந்து கொள்ளும் இயல்புடையவர்கள்”, எழுத்தாளர் பாலமுருகன் குறிப்பிட்டதைப் போல “பாலின சமத்துவம், பொதுவுடமைக்கொள்கை, சுரண்டலற்ற சமூகம், விருந்தோம்பல் பண்பு, தோழமையைப் பகிர்ந்து கொள்ளும் தன்மை, இனம் சார்ந்த பற்று, பிற இனத்தவர்களை வெறுக்காத தன்மை, சனநாயகத் தன்மை, கடும் உழைப்பும் படைப்பாற்றல் கொண்டதிறன், மூதாதையர் வழிபாடு என பழங்குடியினர் எளிய நிறைவான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

வாழ்வியல் மற்றும் நெறிமுறைகளில் சமவெளி நாகரீக சமூகத்தை விட, மலைவாழ் பழங்குடிகள் உயர்ந்தே நிற்கின்றார்கள். ஆனால் ஆதிக்க சமூகம் அவர்களுக்கு தொடர்ந்து அநீதி இழைத்து வருவதுதான் வேதனை” என்று ஊடக வியலாளர் வி.கிஷோர் சொல்வது உண்மையிலும் உண்மை. அவர்களுக்கு நன்மை செய்வதாகவும், தொண்டு செய்வதாகவும் வந்து வந்து செய்த செயல்களைக் கண்டு நொந்து சொல்கிறது ஒரு கவிதை:

ஆதிவாசிக்கு

அற்புதமான திட்டோம் தந்தேங்கே

டெவலப்புன்னு

டெண்டரு போடுகே

பேப்பருலே எழுதுகா

டீவிலே காட்டுகா

ஊரெல்லாம் பேசுகா

போட்டா புடிக்கா

நினாக்கு பெரியாபிசர் பதவி

காட்டோடே இருந்தே

இப்போ

நிம்து பேரு வாங்காக்கு

நேனு கடங்காரே

பரணுன்னு மேலே ஏறுகாக்கில்லே

கெழங்குன்னு கீழே தோண்டுகாக்குமில்லே

(ஒடியன், ப.28)

வந்தவர்கள் எல்லாம் வளர்கிறார்கள். புகழ் பெறுகிறார்கள். ஆனால், இந்த மக்களின் நிலை? தற்கால வாழ்வுக்கும் பழங்காலப் பண்பாட்டுக்கும், இயற்கைக்கும் செயற்கைக்கும் இடைப்பட்ட நிலையில் அந்தரமாகத் தொங்கிக்கொண்டு நிற்கும் வாழ்வு. ‘அஞ்சு இட்லிக்கு ஆறு ஏக்கரை (ஏமாந்து) கொடுத்து விட்டு, சொந்தமண்ணில் சொந்த மண்ணையே வேக வைக்கும் செங்கல் சூளைக்கு மண்சுமக்கும் வேலை எத்தனை கொடூரம்? (ஒடியன், ப.19) மண்ணுக்குரியவர்களான இந்த மக்கள் என்ன செய்தாலும் தண்டிக்கும் அதிகார வர்க்கத்தை நோக்கிப் பின்வருமாறு வினாத் தொடுக்கிறது இருளமனம்.

கள்ளி எடுத்தா அடிக்கே

காட்டுக்குள்ளே போனா புடிக்கே

தேனெடுத்தா பாதி கேக்கே

தானிக்காய் பொரித்தா பாக்கே

எல்லாமே நிம்த்துதுங்கே

மீட்டிங்லே...

சோம்பேரிங்கே

சொன்னா புரிகாதில்லேங்கே

காட்டான்னு பெணாங்குகே

சேத்திவெக்கா பழக்கோ இல்லே

சொத்து பேப்பரு ஒந்துமில்லே

காட்டுவினா

எம்தாளுலே

நின்னே போலே

பொறுக்கி திங்கா பீச்சேக்காரே (ப.31)

எத்தகு அறச்சீற்றம்?

பன்முனைப்பட்ட சுரண்டல்கள், வளர்ச்சி அதிகாரத்தில் இருப்போர்க்கு மட்டும். நவநாகரிக உலகில் நடத்தப்படும் இந்த வளர்ச்சி நாடகத்தில் என்னென்ன கூத்துகள்?

*

சங்க இலக்கியத்து கருப்பொருள்கள் போல, இந்த இலக்கியத்திலும் இயற்கை உயிரிகள் இவர்களின் வாழ்வையும் வலிகளையும் உள்ளுறைப் பொருள் கொள்ள வந்து சிறக்கின்றன. ஏமாந்த நாய்(ப.41), கோக்கிரி மாடு (ப.36) நல்லது நடக்கும் என்பதை முன்னறிவிக்கக் கத்தும் பெருமாட்டி குருவி (ப.44), கெட்ட சகுனத்தைக் குறுக்கே வந்து உணர்த்தும் செம்போத்து (ப.32), அந்நியன் கல் பட்டு மார்பில் குருதிவழியக் கிடக்கும் பசிலிக்காக்குருவி (ப.47), ஊரில் உள்ள எல்லோர்க்கும் சமமாய் ஏதாவது கிடைக்கும்; நல்லது நடக்கும் என்பதை உணர்த்த இருள்வரும் நேரத்தில் வாசலில் வந்து கத்துதலின் மூலமாக உணர்த்தும் கிளி(ப.21), உலகம் அழிந்தபோது, மனிதர்கள் யாரும் உள்ளார்களா என்பதை அறிந்துவரக் கடவுள் அனுப்பிய சுள்ளாம்பூக்குருவி (ப.50) எல்லாம் வருகின்றன. இவற்றுக்கு மத்தியில் ஓர் ஆடு, பேசாத ஆடு பேசுகிறது. நல்ல தீனி வேண்டும் என்று வனக் காப்பாளரிடம் லஞ்சம் கொடுத்து, ரிசர்வ் காட்டில் மேயவிட்டுத் தன்னை வளர்க்கிற கோசி என்ற இருளச்சியிடம் அந்த ஆடு சொல்கிறது:

கப்(பே)ப()ம் கட்டி

காட்டுல உருகே 

ஒப்பே சோலே வரே

ஓடியோடி மேய்க்கே

நல்லா மேஞ்சென்னா செய்காது.

எல்லாம் சரி இப்படியெல்லாம் மேய்த்து என்ன பயன்?

என்னை எதற்காக இப்படி வளர்க்கிறாய்?

அந்தப் பெண்ணுக்குத் தெரியாதது, அந்த ஆட்டுக்குத் தெரிந்துவிடுகிறது. என்னை காட்டு நரி தின்றாலும் பரவாயில்லை; நீ தின்றாலோ புண்ணியம்.

நீ திந்தா புண்ணியம்

பரவால்லே நரிதிந்தாலும் ஆனால்,

ஆருக்குமில்லாமே

ரேஞ்சர் பொண்ணு கண்ணாலத்துக்கூ

கரியாகப் போரே

இதோ தீய சகுனம் சொல்லிச் செம்போத்து குறுக்கே பறக்கிறது. எனவே,

கோசி,

என்னே

கொன்னு திந்துரு இப்பவே (ஒடியன்.ப.32)

என்னவொரு நன்றிப் பெருக்கு!

*

“காடுகள் அழிந்து, எல்லாப் பருவமழையும் பொய்த்தது; நாளிகள் வற்றியது; காடுகளில் கட்டிடங்கள் விளைந்தன; விலங்குகளுக்கு மூச்சுத் திணறியது. ஆண்கள் பெண்களைக் கையோங்க ஆரம்பித்தனர். கூலிகள் என்ற வார்த்தையை முதன் முதலாகக் கேட்டார்கள், பழைய பண்பாடுகளை

இழந்து கொண்டிருந்தனர். வனத்துறை தனது கட்டுப் பாடுகளை இன்னும் தீவிரமாக்கிக் கொண்டிருந்தது... கொண்டிருக்கிறது” என்று சப்பெ கொகாலு நூலின் நடுப்பகுதியில் (ப.114) லட்சுமணன் சொல்லத் தொடங்கும்போதே பின்னர் நிகழப்போகும் அக்கிர மங்களுக்கான அடிச்சுவடுகள் புலப்படத் தொடங்கி விடுகிறது. அவற்றை எதிர்கொண்டு இன்னும் போராடும் இருளர்களின் வாழ்க்கை, பாடல்களாகவும், லட்சுமணனின் புனைவுகளாகவும் சப்பே கொகாலுவில் பதிவாகி இருக்கின்றன.

அது என்ன சப்பெ கொகாலு. அதன்பின்னும் ஒரு வரலாறு உண்டு.

*

சப்பெ கொகாலு என்பதற்கு ஊமையின் இசைக் குழல் என்று பொருள். சப்பெ - அவள் பெயர். பரட்டைத் தலையும் கருத்த முகமும் சிவந்த விழிகளும் ஒரு காளியின் உருவம்போலவே அமைந்தவள் சப்பெ. அவள் எடுத்து ஊதும் கொகாலு அங்குப் புதிதாய்க் குடியேறி இருக்கும் மக்களிடையே ஓர் அச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

“மிக அரிதாகவே கொகாலை எடுக்கும் அவள்... அதில் புல்லை எடுத்துச் செருகி ஊதத் தொடங்கினால், சோலையைக் கடந்து வந்த யானைகள், கொங்கர்களின் பயிர்களை அழிக்கத் தொடங்கியது. இன்னொரு புல்லைச் செருகி உதட்டில் வைத்தால்... ஏரிகள் உடைந்து வண்டல் மண்டி, வயல்களில் காடுகள் வளரத்தொடங்கியது. அன்று ஏதாவது ஒரு ஆணின் சாவு குடியேறிகளின் ஊரில் நிச்சயமாக இருந்தது” என்று அவளைப் பற்றிய தொன்மத்தைக் கட்டவிழ்க்கும் லட்சுமணன், ‘ஆனால், இவை எதுவும் அவள் அறிந்து நடந்தில்லை’ என்கிறார்.

இத்தொன்மத்தின் மூலம் நாம் உய்த்துணர வைக்கும் ஓர் உண்மை, இயற்கையை வசப்படுத்தி இயக்கும் ஆற்றல் அந்த இசைக்கருவிக்கும் இசைக்கும் பெண்ணுக்கும் இருந்தது என்பதே. உண்மையை உலவ விட்டுப் பொய்யர்கள் பிழைக்க முடியுமா? எனவே, வந்தேறிகளான கொங்கர்கள் திட்டமிட்டனர். மூப்பனின் குடும்பம் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அடிக்கடி உடைந்துகொண்டிருக்கும் அணையைக் காக்கப் பலிகொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம்.

“இருட்டு, பொங்கி வடிந்துகொண்டிருந்தது. பெசாது கூரைக்குள் போன மூப்பன் முன்னோர்களை வணங்கி, விம்மி வெடித்தான். தூங்கிக் கிடந்த மகளை எழுப்பினான். அவள் கைகளில் இறுகப்பற்றியிருந்த கொகாலைப் பிடுங்கி, கூரையில் செருகிவிட்டு ஏரிக் கரைக்கு அழைத்துப்போனான். எல்லாச் சடங்குகளும் முடிந்தது. ஊராரின் குலவை காற்றைக் கிழித்தது.

நடப்பது என்னவென்று அறிவதற்கு முன்னால்... சப்பெ, ஏரிக்காக, ‘திட்டமிட்டபடி’ பலி கொடுக்கப்பட்டாள். இன்னொரு உறுப்பு போல எப்பொழுதும் அவளுடன் இருந்த, அவளுக்குப் பிடித்த ‘கொகாலு’ இப்போது அநாதையாகக் கூரையில் கேட்பாரற்றுக் கிடந்தது” என்று இந்நூலைத் தொடங்குகிறார் லட்சுமணன்.

இல்லை. கொகாலு கூரையில் இல்லை. அது லட்சுமணனின் கையில் இருக்கிறது. அதில் இருந்து பெருங்குரல் எடுத்து ஒலிக்கும் ஊமைப்பெண் சப்பெயின் உணர்வுகள் பொங்கிப் பெருகி, கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளடு முன்தோன்றிய மூத்த குடிகளில் வார்த்தைகளின் வழியே விரிகிறது; விரைகிறது.

சப்பெயின் கொகாலு, சப்தம் ஒடுங்கி நம் கைகளில் புத்தகமாகக் கிடக்கிறது. கனத்த காட்டின் பெருத்த மௌனம் நம்முள் நிலைகொண்டுவிடுகிறது. மௌனமா அது? என்று யோசிக்கும்போதே, மலை பொரிச்ச குஞ்சின் பிளிறல், ஒடியனில் இருந்து எழத் தொடங்கி விடுகிறது.

*

ஒடியன் - தாயின் கர்ப்பத்தில் இருந்து சிசுவை எடுத்து தைலம் செய்யும் மந்திரவாதி என்று விளக்கம் தருகிறார் லட்சுமணன். இந்தத் தலைப்பை முன்னிறுத்திக் கவிதை தருகிறார் ஆசிரியர். அதில், கள்ளி முள்ளில் சிக்கி நிலவு குருதி வடிக்கும் ஒரு நள்ளிரவில், மலை பொரிச்சான குஞ்சான யானை குளிக்கப் போகிறது.

வழியில் அந்நியன் நட்டுவைத்த கருவேலமரங்களை உடைத்தெறிகிறது. கேளையாடு எழுப்பும் ஒலிக்கு, பயிரமரம் காதுகளை விரித்துக்கொண்டு காத்துக் கிடக்கிறது. கண்ணில் விளக்கு வைத்து உணவும் நீரும் தேடுகிறது யானை. கொடுமை, நீரைத் தன்னுள் நிறையச் சேமித்திருக்கும் நீர்முள்ளிக் கிழங்குகூடக் கிடைக்க வில்லை. குந்திரிக்கே (தேள்) வந்து நாவில் கொட்டுவது போலத் தாகம்.

யானை சொல்கிறது: ‘பசியில் சோர்ந்த என் காலில், தவளை ஏறிக் குதிக்கிறது. (எத்தனை அலட்சியம்!) பட்டிசாலை - ஊரின் தலைவன் வண்டாரி பொறை அடிக்கிறான், கிழக்கே. மொக்கையில் ஊரார் பட்டாசு வெடிக்கிறார்கள் மேற்கே. குள்ளான் என்னை விரட்டி அடிக்கக் குள்ளான் காத்திருக்கிறான். இப்படித் திசைதோறும் பகைகள். அட, நன்றி கெட்ட நாய் இந்த மனிதர்களோடு சேர்ந்து என்னைக் காட்டிக் கொடுக்கிறது’. இன்னும் சொல்கிறது யானை. இந்த இருளர்களின் மொழிகளிலேயே...

நித்துதே திருடி

நின்னே தெகேய் மேலே போட்டு

தொரைகா சத்து வெச்ச

பணத்தே! தின்னே.... ந்தாப்பா

(உன் காட்டைத் திருடி, உன்னை அநாதை (தேகேய்) ஆக்கிவிட்டு, அதில் பணப்பயிர் (வாழையும் கரும்பையும்) விதைக்கிறான் அந்நியன். அதைத்தானே தின்கிறேன். (அதில் என்ன தவறு?)

ஏழு உருப்படியூம் லெத்து

ஒண்டியாகி வருகேமு

ஒன்னா நிப்பாமா

(காட்டில் இருக்கும் உனது பிரிவுகளான ஏழு குலங்களின் பெரும்பலத்தோடு நான் ஒருவனாய் வருகிறேன். ஒன்றாய் நிற்போமா?) ரேசா, (ரேசமூப்பனை இப்படித்தான் அழைக்கிறது, யானை)

ரேசா,

கீழ்நாட்டுகயிருந்து (கீழ்நாட்டில் இருந்து)

வெரகாட்டகாக்கு வருகாரு

எம்மே (விரட்ட வருகிறது என்னை)

கும்கிகா (கும்கி யானை)

இப்போ என்னே (இப்போது நான்)

அப்புறோ நின்னே (நாளை நீ)

கும்கியோடு கொலைவெறி கொண்டு காட்டை விட்டு, இன்னும் துரத்தும் ஒடியன்கள் இன்றைக்கு கீழ்நாட்டில் இருந்து வந்து மலைமுழுவதையும் சிதைத்து அழித்து ஒழிக்க நிறைந்து கிடக்கிறார்கள் என்கிறது இக்கவிதை.

இப்போ என்னே

அப்புறோ நின்னே

இந்தச் சொல், இருளர்களுக்கு மட்டுமா?

நம் எல்லோருக்கும்தானே!

*

இன்னும் சொல்ல ஏராளம் இருக்கும் இவ்விரு தொகுப்புகளையும் முன்னெடுத்துக் கொண்டுவந்து கொடுத்த லட்சுமணன், தமிழ்த்தாத்தா. உ.வே.சா. தந்த தமிழ்ப்பேரன்; இருளர் வாழ்வை வெளிச்சப் பாம்பு விழுங்கிவிடாமல் மொழிக்காப்பு நடத்தும் இலக்கியப் போராளி. ‘இருள் என்பது குறைந்த ஒளி’ என்பார் பாரதி. இருளர்கள் வாழ்வும் அப்படித்தான் இருக்கிறது.

குறையிலும் நிறைவுற வாழும் அவர்களின் நல்ல மனசுக்குப் பாத்திரமாகி நன்றாகவே செய்திருக்கிறார் லட்சுமணன். ஒடியனுக்கு விளக்கம் அக்கவிதையின் கீழும், கொகாலுவுக்கு விளக்கம் நேர்காணலாகப் பின்னிணைப்பிலும் தந்திருக்கிறார், லட்சுமணன்.

சொல்லும் பொருளும், இருளர் குறித்த விளக்கப் படங்களும் தரவில்லையே என்று முதலில் கோபம் வந்தது. எழுத்துக்களின் வழியே இருளர்களின் அகங்களைத் தரிசனப்படுத்தும் அழகின் ஒழுங்கு சிதைந்துவிடாமல் இருக்க அவர்களது முகங்களைக் காட்டாததற்குச் சிறப்பாய் நன்றி சொல்லவே தோன்றுகிறது. இசையும் நமக்குள் இசைந்தொலிக்கும் அனுபவத்தை எழுத்துகளே இனிது உணர்த்துகின்றன.

இடைவிடா உழைப்பினாலும், நம்பிக்கை யினாலும் இப்பெரும் பணி செய்த லட்சுமணனுக்குப் பரிசு பாராட்டு எல்லாம் வரும்; அதற்கெல்லாம் மயங்காது, பின்னும் அவர் தொகுத்தளிக்க நிரம்ப இருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்கிறது ஒடியனும், சப்பெ கொகாலுவும்.

இவை இரண்டும் இந்த நூற்றாண்டின் குறுந் தொகையும் நெடுந்தொகையும். எட்டுத்தொகை தந்த உ.வே.சா மரபில் இவர் எட்டுமட்டும் தர இன்னும் எத்தனை தொகுதிகள் காத்திருக்கின்றனவோ?

‘ஏழிரண்டாண்டில் வா’ என்று இயம்பி இவரை எந்தக் கைகேயியும் அனுப்பவில்லை.

‘என்றுமுள தென்றமிழ் அன்னைதான் இவரை அனுப்பி இருக்க வேண்டும்.’

கொண்டு வருவார், கொடுப்பார் லட்சுமணன். அவருக்குப் பல்லாண்டு நாம் இசைப்போம்!

sappakokalu 400துணைநின்ற நூல்கள்

1.  லட்சுமணன், ஒடியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

2. லட்சுமணன், சப்பெ கொகாலு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

3. பாரதியார் கவிதைகள், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை.

4. மணிமேகலை, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை

சப்பெ கொகாலு

ஆசிரியர்: லட்சுமணன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை - 600 098

விலை: ரூ.225/-

Pin It