nelson-mandela 350நெல்சன் மண்டேலா

ஆசிரியர்: தா.பாண்டியன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை - 600 098

விலை: ரூ.260/-

பொதுவில் வாழ்க்கை வரலாற்று நூல்களை வாசிக்கையில் அயர்ச்சியாக இருக்கும் என்ற கருத்துண்டு. அதனை மறுக்கும்விதம் பல சுய சரிதைகள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் சுவாரஸ்ய மாகவும், உணர்வெழுச்சியைத் தூண்டுவதாகவும், மனமொப்பும் அம்சங்களை உள்ளடக்கியதாகவும் விளங்குகிறது தா.பாண்டியன் எழுதிய ‘நெல்சன் மண்டேலா’ எனும் நூல்.

தமிழகத்தில் அரசியல் தொடர்பில்லாதவர் களும்கூட ‘26 ஆண்டுகள் சிறையிலிருந்த ஒரு போராளி’ என ஒற்றைவரியில் புரிந்திருக்கும் மண்டேலாவை, அவரின் வாழ்க்கைப் பாடுகளை எளிய தமிழில் அனைவரும் படிக்கும் வண்ணம் தொகுத்தளித்திருக்கும் தா.பாண்டியனின் இந்தப் பணி மகத்தானது. ஒரு கதையை அழகுறச் சொல்வது போல, தன்போக்கில் கவித்துவமாகவும் ரஸமிக்க தாகவும், அங்கங்கே தனது தனித்த முத்திரை களோடு மண்டேலாவின் காலத்தை விரித்துச் செல்கிறார்

நெல்சன் மண்டேலா ‘சுதந்திரத்தை நோக்கி நீண்ட பயணம்’ என்று ஆங்கிலத்தில் எழுதிய தன்வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது. எனினும் நூலாசிரியர் தமிழ்ப்படுத்தி எழுதுகையில் ஒரு அயல்தேசத்துப் போராளி என்ற எண்ணம் மறைந்து நமக்கு மிகவும் அணுக்கமானவராகவும், நம்மிலொருவராகவும் உணர வைத்துள்ளார். மொழி வளமையும் இலக்கியப் பின்புலமும் தா.பா.வுக்குத் துணையாயிருக்க, அவரைப் பின் தொடர்ந்து அதே வேகத்தில் வாசகனையும் பிணைத்துப் பயணிக்கிறது இந்நூல்.

போராட்டம், வழக்குகள், விசாரணை, தண்டனை, சிறை, துக்கம், பிரிவு, நோய் என துயரமும் வலிகளும் மிகுந்த ஒரு போராளியின் வரலாற்றை அதன் இயற்தன்மை குன்றாமல் அதனதன் உணர்வுச் சரடுகளின் உருக்குலையாமல் தா.பா. பதிவு செய்திருக்கிறார். அகவயப்பட்ட சிந்தைக்கும் கோட்பாடுகளுக்கும் நூலில் இடமளிக்காமல் தெளிந்த புரிதலுடன் மண்டேலாவின் சரித்திரம் எழுதப்பட்டுள்ளது.

வழமையான சடங்குகளும் பாகுபாடுகளும் நிரம்பிய கறுப்பர் இனத்தில் நடுத்தரக் குடும்பத்தில் மண்டேலா பிறப்பிலிருந்து புத்தகம் தொடங்கு கிறது. அவரது பால்யம், படிப்பு. சிறு நடவடிக் கையால் கல்லூரிப்படிப்பு பாதியிலேயே விடும்படி நேர்வது, பின்னர் வேலை தேடி அலைச்சல் எனத் தொடர்கிறது.

படிப்பைத் தொடர்ந்து அதன்பின் வழக்கறிஞராக வேண்டும் என்ற முனைப்புக்காக ஒரு வழக்கறிஞர் அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்த போது அங்கு வெள்ளையர்களின் அணுகுமுறை களைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். ஆனாலும் வருமானத்திற்காக அதனை சகித்துக்கொண்டு பணி தொடரும்போதுதான் அவருக்குள் இனவெறிக் கெதிரான எண்ணங்கள் மேலோங்குகின்றன. அந்த நெருக்கடியான காலத்தை நூலாசிரியர் இப்படி எழுதுகிறார்.

‘சைடல்ஸ்கி, ஒரு கோட்டும் பேண்ட்டும் கொடுத்தார். மாற்றிக்கொள்ள முடியாமல் அதைத் தான் தொடர்ந்து ஐந்தாண்டுகள் அணிந்து வந்தார். அது கிழிந்து, தைத்து, இறுதியில் ஒட்டுப் போட்ட பகுதியே அதிகமாகி வேடிக்கையான காட்சியாகிவிட்டது. சம்பாதித்த சிறு தொகைக்குள் வாழ்க்கை வண்டியை ஓட்டமுடியவில்லை. மெழுகு வர்த்தி, பேருந்து கட்டணம் எனச் செலவு போக சாப்பாட்டிற்கு மிஞ்சியதில் சாப்பிடப் போத வில்லை.

நல்லவேளையாக வீடு வாடகைக்கு விட்ட சோமா, ஞாயிறுதோறும் மண்டேலாவுக்கு விருந்து கொடுப்பார். ஞாயிறு மதியம் அவர்கள் சுடச்சுடக் கொடுத்த பன்றிக்கறியுடன் படைத்த உணவுதான் வாரம் முழுவதும் உயிர் வாழ உதவியது என்கிறார் மண்டேலா.’ (ப. 46)

வழக்கறிஞர் தேர்வில் வெற்றி பெற இயலா விட்டாலும் அரசியல் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். தனக்கென ஒரு அலுவலகத்தை அமைத்துக்கொண்டு வழக்குரை ஞராகப் பணியைத் தொடர்கிறார். வெள்ளை அரசு அர்த்தமற்ற வழக்குகளால் மக்களை இம்சிக் கிறது. வழக்காடும் உரிமை கிட்டினாலும் வழக் குரைஞராகப் பணியாற்றுவதில் சந்திக்கும் சிக்கல் களையும் நெருக்கடிகளையும்,

‘இரண்யன்போல் அரசாண்டது தென்னாப் பிரிக்க வெள்ளை நிறவெறி அரசு.

பொதுமக்கள் மட்டுமல்லாது, மண்டேலா போன்ற வழக்கறிஞர்களும், நிறவெறி என்ற எழுதக் கூசும் சட்டத்தால் துரத்தப்பட்டே வந்தனர்.

ஒரு நீதிபதி, மண்டேலாவை, ‘நீ வழக்குரைஞர் என்பதை என்னால் நம்பமுடியவில்லை. போய்ச் சான்றிதழைக் கொண்டு வா’ என அனுப்பி விட்டார்.’ (ப. 85) என எழுதுகிறார்.

மனைவியின் விவாகரத்துக்குப் பிறகு வின்னி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிகழ்வை, அந்தக் கொண்டாட்ட தருணத்தை எளிமை என்பதாக, இயலாமைச் சூழலின் பரிமாணத்தை இப்படி எழுதுகிறார்.

‘திருமணத்திற்கு மறுநாள் பெண் வீட்டார் கேக் வெட்டத் தயாராக இருந்தனர். ஆனால் விசாரணைக்காக மண்டேலா புறப்படவேண்டி இருந்ததால், அதைத் துணியில் சுற்றிக்கொண்டு கிளம்பினர்.

மறுநாளே நிர்வாகக்குழுக் கூட்டம், பொதுக் கூட்டம் என மண்டேலா செல்லவேண்டிய தாயிற்று. கடந்த சில மாதங்களாக விசாரணை, சிறை என இருந்ததால், பார்த்துவந்த வழக்குகள் கைமாறிப் போய்விட்டன. வருவாய் குறைந்தது. வின்னியின் சம்பளம்தான் உறுதியான நிரந்தர மான வருமானமாக இருந்தது.

தேனிலவு புத்தகத்தில் படித்ததுதான்.’ (ப. 122)

சிறை வாழ்க்கை, நீதிமன்ற விசாரணைகள், அரசியல் கூட்டங்கள் என ஆவேசத்துடனும் சுறு சுறுப்புடனும் செயலாற்றி வரும் மண்டேலா எனும் போராளியின் உள்மன ஆழத்தை வெளிப் படுத்தும் ஒரு சம்பவம் நிகழ்கிறது. தலைமறைவு வாழ்க்கையின்போது கோல்ரிட்ஜ் என்பவரின் குடும்பத்தினருடன் தங்க நேரிட்டபோது ஒரு குருவியை விளையாட்டாக சுட்டுவிடுகிறார். மண்டேலா எனும் மனிதனின் உள்ளார்ந்த பண்பின் லட்சணத்தை இதைவிடவும் சிறப்பாகச் சொல்லமுடியும் எனத் தோன்றவில்லை.

‘கோல்ரிட்ஜின் ஐந்து வயது பாலகன் ஓடிவந்து ‘டேவிட் என்ன காரியம் செய்து விட்டாய். பாவம் அந்தக் குருவி. அதன் அம்மா அழாதா?’ எனப் பேசியவன் கண்களிலும் கண்ணீர் ததும்பி நின்றது.

ஒரு ரகசிய ஆயுதப்படையைத் தயாரித்துக் கொண்டிருந்த, அதன் தளபதியாக இருந்த மண்டேலா, குழந்தையின் மழலைக் குற்றச் சாட்டையும் கண்ணீரையும் பார்த்தவுடன் குற்ற வாளியாகக் குறுகி நின்றார்.‘ (ப. 169) எனக் குறிப்பிடுகிறார்.

மண்டேலாவின் தண்டனைகளில் மிகக் கடுமையானதாகவும் நீண்ட நாட்களானதுமான ரோபன் தீவுக் கைதியாக அடைபட்டிருந்தது மிக விரிவாகவே எழுதப்பட்டுள்ளது.

‘கல்லுடைப்பது, சுண்ணாம்பு வெட்டுவது, சாலை போடுவது, கடலோரப் பாசிகளை எடுத்துச் சேர்ப்பது போன்ற பல வேலைகள் தரப்படும். அதிகாரிகளுக்கு பொழுதுபோக, கைதிகளை இம்சித்து விளையாடுவதுதான் இருந்த ஒரே விளையாட்டு.

.... முடிந்து திரும்பினால் ஆறிப்போன

கூழ். தேடினாலும் காய்த்துண்டுகூட குழம்பில் தெரியாது. வாரத்துக்கு ஒருமுறை, ஒரேஒரு சிறு மாமிசத்துண்டு மிதக்கும். கடிக்கமுடியாத அந்த மாமிசத்தை எங்குதான் தேடிப்பிடித்து வாங்கினார்களோ...’ (ப. 224)

சிறைக்கைதிகளுக்கு மதபோதனை செய்யும் கிறித்தவப் பாதிரியின் மதநம்பிக்கைகளை கேலிக் குள்ளாக்கும் விதமாக நூலாசிரியர் தனது இயல் போட்டத்தில் ஒருவித எள்ளலை வெளிப்படுத்தும் விதம் அவருக்கேயான தனிச்சிறப்பாக அமைந் துள்ளது.

‘பைபிளை வாசித்துவிட்டு, ‘மனந்திருந்து. பாவமன்னிப்பு கேள். ஆண்டவனிடம் முறையிடு. தேவன் கைவிடமாட்டார். அவர் உன்னுடனே இருக்கிறார். எதிரியையும் மன்னிக்கக் கற்றுக் கொள். தேவனுக்கு ஒப்புக்கொடு’ என்பதுபோலத் தொடர்ந்து உபதேசம் செய்வது வழக்கம்.

இதைக் கேட்டு பொறுமையிழந்த ஒரு கிருஸ்தவ மதக் கைதி ‘பாதிரியார் அவர்களே. எழுபத்தி ஐந்து வருடங்களாக இப்படித்தான் ஜெபிக்கிறேன். இங்கே வந்து சேர்ந்து இருக்கிறேன். பரலோகம் போக ஜெபித்தேன். சிறைக்கு வந்து சேர்ந்துள்ளேன். எங்களை மனந்திருந்தச் சொல்கிறீர்கள். கொஞ்சம் நமது ஆட்சியாளர்களிடம் இதைச் சொல்லுங்கள். இடம் மாறிப் பேசுகிறீர்கள்’ என்று கடகட வென்று பேசியவுடன் பெட்டி பைபிளை எடுத்துப் போன பாதிரியார் மீண்டும் வரவே இல்லை.’ (ப. 225)

மண்டேலாவைப் பற்றிய சித்திரத்தை நேர்த்தி யாக வரைய முனைந்த தா.பா. அதில் எள்ளளவும் பிசகு நேர்ந்துவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்திருப்பதை புத்தகத்தின் பல இடங்களில் காணமுடிகிறது. ஓரிடத்தில்,

‘மண்டேலாவுடன் சிறையில் வாடியவர்கள் பலர். அவர்களில் காத்ரடா இந்தியர். வசதி படைத்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்து பட்டம் பெற்றவர். இவர் தனது இருபதாவது வயதில் ஆப்பிரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அப்பொழுது மண்டேலா, கம்யூனிஸ்டு எதிர்ப்பாளராக இருந்தார். சில தொண்டர்களோடு போய், கம்யூனிஸ்டுக் கூட்டங்களைக் கலைப்பது, ஒலிபெருக்கியை உடைப்பது வழக்கம்.’ (ப. 229) என எழுதுகிறார்.

முன்னதாக, மண்டேலாவின் ஆரம்பகால அரசியல் சூழ்நிலையை எழுதும்போது,

‘மார்க்சியத்தைப் பற்றியும் ஓரளவுதான் தெரியும். அதையும் முழுமையாகப் படிக்கவில்லை. அறியாமையால் எதிர்ப்பதா எனக் குழம்பினார் மண்டேலா.

உடனே, காரல்மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், மாசேதுங் ஆகியோரின் நூல்களை வாங்கிப் படிக்கத் தொடங்கினார். ‘கம்யூனிஸ்டு அறிக்கை உத்வேகத்தை ஊட்டியது. ஆனால் டாஸ்

கேபிடல் (மூலதனம்) களைப்பையும் சலிப்பையும் ஏற்படுத்தியது. என்கிறார்.’ (ப. 73) எனப் பதிவு செய்கிறார்.

கம்யூனிஸ்ட்டுகள் பற்றிய எதிர்கருத்து

களை மறைக்க விரும்பாத நூலாசிரியரின் உளப்பாங்கு இக்கால அரசியல் சூழலில் அரிதான வொன்று. இதிலிருந்தே இந்நூலில் அவரது சிரத்தையையும், ஈடுபாட்டையும் விளங்கிக் கொள்ள முடிகிறது.

மேலும், தனது முன்னுரையில்,

‘இந்த நெடிய போராட்டக் காலத்தில் ஆப்பிரிக்கக் கம்யூனிஸ்டுக் கட்சியுடன் அவர் கொண்டிருந்த உறவும், அவர் செய்த மதிப்பீடும், இந்தியாவிலுள்ள தேசியவாதிகட்கும், கம்யூனிஸ்டு களுக்கும் நல்ல பாடமாகும்’ என்று தா.பா. கூறு வதிலிருந்தே தன் மனவெளிப்பாட்டை தெளிவு படுத்திவிடுகிறார்.

ஈன்ற தாய், மனைவி, மகள் மற்றும் பெயர்த்தி ஆகியோரை சிறையில் சந்திக்க நேரும்போது தாயின் கண்ணீரைக் கண்டு உள்ளுக்குள் புழுங்கு கிறார். அவர்களை அனுப்பிவிட்டு அமைதியாக அமர்ந்து தன் குடும்பத்தை எண்ணும் மண்டேலாவின் மனஉளைச்சலை,

‘வின்னியைக் காதலித்து மணந்ததை மனக் கண் முன் நிறுத்திப் பார்த்தார். தேனிலவு இல்லை. குழந்தை பிறந்தபோதாவது உடனிருந்து உதவி னோமா? இன்று அவள் தனிமையில் பாடுபட்டுக் குழந்தைகளையும் வளர்த்து, படிக்க வைக்கிறாள், கணவனுக்காகவும் போராடுகிறாள். அவளுக்கும் தடை, சிறை, வழக்கு. அவள் குடியிருந்த வீட்டில் குண்டு வைத்து வெடிக்கச் செய்தார்கள்.

இவை எதற்கும் பணியாமல் துவளாமல் போராடுகிறாள். ஆக, நாம் பெற்ற தாய்க்கும் உதவமுடியவில்லை. கட்டிய மனைவிக்கும் கடும் பாரமாகிவிட்டோம். நாம் தேர்ந்தெடுத்த பாதை குடும்பத்தையே நரகக் குழிக்குள் தள்ளிவிட்டதே என நினைத்துக் கலங்கினார்.’ (ப. 232) என எழுதுகிறார்.

சிறைக்கு வந்துசென்ற சில நாட்களில் அவரது தாய் இறந்துவிடுகிறார். அதற்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. துயரம் கனக்கும் அந்த நேரத்தை,

‘துக்கம் அதிகரிக்கும்போது, வார்த்தைகள் வாயில் வருவதில்லை. மௌனம் துக்கத்தைக் கனமாக்குகிறது... ஆக, என்னைப் பெற்றவள், பிறந்த மண்ணுக்குள்... என நினைத்துக்கொண்டார். தலைவனாக இருப்பவன் தன் கவலையை பிறர் மீது ஏற்றக்கூடாது. எனவே, நண்பர்களைத் தேற்றி விட்டு, வழக்கம்போல கல்லுடைக்கப் போனார். காலம் மருந்து போட்டுக் கொண்டிருந்தது.’ (ப. 236) என எழுதுகிறார்.

27 வருடங்களுக்குப் பிறகு மண்டேலா விடுதலையாகி விட்டார். வெற்றிக் கொண் டாட்டம், உலகத் தலைவர்கள் வாழ்த்துகள், முழக்கங்கள்... உணர்ச்சிகரமான தருணங்களை எழுதிவரும்போது நூலாசிரியர் இப்படி ஒரு நிகழ்வையும் எழுதி நம்மைத் திகைக்க வைக்கிறார்.

‘... ஒரு கடிதத்தை எடுத்து மண்டேலா படித்தார். வீட்டில் பணிபுரியும் ஒரு பெண் எழுதிய கடிதம்.

‘விடுதலையான உன்னைப் பார்க்க மைதானம் வந்திருந்தேன். மகிழ்ச்சி. முதலில் நன்றாகப் பேசினாய். கடைசியில் செம - போர்’ என்று எழுதி இருந்தது. ‘இன, நிறப்பகைமையை மறந்து, சேர்ந்து’ என்ற வரிகளை மக்கள் வரவேற்கவில்லை. ஆக மிகக் கடினமான பயணப்பாதை இனிதான் என்பதை மண்டேலா உணர்ந்தார்.’ (ப. 261) என்று மிக சாதாரணமான ஒரு பெண்ணின் மிக சாதாரண மதிப்பீட்டையும் நூலில் பதிவு செய்கிறார். அதுவும் வெற்றிக்களிப்பின் தருணத்தின் போது என்பது எத்தனை ஆச்சர்யம்.

அசாதாரணமான ஒரு சந்தர்ப்பத்தில் வின்னியை விட்டு விலக நேரிடுவதைத் தெளிவாக மண்டேலா அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்து விடுகிறார். அவ்விடத்தில் நூலாசிரியர் இப்படி எழுதுகிறார்.

‘மண்டேலா என்ன அழகான சொற்களால், வின்னியைப் பிரிந்ததை விளக்கினாலும், ராமன் சீதையைத் தீக்குளிக்கச் செய்த பிறகு துரத்தியதை எவ்வாறு நம்மால் ஏற்கமுடியவில்லையோ, அதே போல், இதில் வின்னி பக்கம்தான் நம் மனம் சரிகிறது. யானைக்கும் அடி சறுக்கும் என்பார்கள். மண்டேலாவும் சறுக்கிவிட்டாரோ?’ (ப. 272)

சமாதானமடையாத தெளிவும் தீர்க்கமும் நிரம்பிய வரிகள். இது தனித்த சிறப்புக்குரியதாக கருதத்தக்கது.

மண்டேலா எனும் ஆற்றல் மிகுப் போராளியின் சரிதத்தை இத்தனை நேர்த்தியாகவும் சுவை ததும்பும் விதமாகவும் எழுதப்பட்ட இந்நூல் மிகமிக முக்கியமானதென்று ஐயமறக் கூறலாம். இதனை வாசித்து மண்டேலா வரலாற்றையும் அதன் செறிவையும் அறிந்துகொள்ளவேண்டியது தமிழ் வாசகனின் அநேக அவசியங்களில் ஒன்று.

அரிய புகைப்படங்கள், சிறையிலிருந்தபோது அவர் வரைந்த ஓவியங்கள் என அங்கங்கே இணைத்திருப்பது புத்தகத்தின் ஏனைய சிறப்புகள். மொத்தத்தில் ஆகச் சிறந்த புத்தகத்துக்கான சகல லட்சணங்களும் பொருந்தியுள்ள இதனை வாசிப்பதன் மூலம் வாசகன் உவப்பும் உவகையுமடையலாம் என்பதோடு வாசக ஆன்மாவிலிருந்து அகல மறுக்கும் புத்தகமிது என்பதும் நிதர்சனம்.

 

Pin It