வியாசமுனிவரால் வடமொழியில் எழுதப்பட்ட வராக புராணத்தின் 48-ஆவது அத்தியாயத்தில் கைசிக புராணம் இடம்பெற்றுள்ளது. இதற்கு பராசரப் பட்டர் என்பவர் வடமொழியும், தமிழும் கலந்த மணிப்பிரவாள மொழிநடையில் விளக்கவுரை எழுதினார். இதன் வாயிலாகக் கிடைத் துள்ளதுதான் கைசிக புராண நாடகமாகும். பராசரப் பட்டரின் காலம் கி.பி. 12-ஆம் நூற்றாண்டு என்பர். இந்நாடகம் மற்ற வைணவத் தலங்களான ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், மன்னார்குடி, திருக்கோஷ்டியூர் போன்ற திருத்தலங்களில் கார்த்திகை மாதத்தின் வளர்பிறை ஏகாதசி நாளையடுத்த துவாதசி நாளில் பெருமாளின் முன் பாராயணமாகப் படிக்கப் படுகிறது. திருக்குறுங்குடி திருத்தலத்தில் மட்டுமே கார்த்திகை மாதத்தின் வளர்பிறை (சுக்ல பட்சம்) ஏகாதசியன்று இரவு பத்துமணி முதல் விடியற் காலை மூன்று மணிவரை இந்நாடகம் இக்கோயிலில் உள்ள கைசிக மண்டபத்தில் திருவடிவழகிய நம்பி யின் முன்னிலையில் நாடகமாக நிகழ்த்தப்பட்டு வருகிறது.

இந்நாடகத்தில் இடம்பெறும் முக்கிய பாத்திரங் களான நம்பாடுவான், நம்பி கிழவர் போன்ற பாத்திரங்களை தேவதாசிகளே ஏற்று நடித்து வந்துள்ளனர். ராட்சசன் போன்ற பிற பாத்திரங் களில் பிற இனமக்கள் பங்கேற்று நடித்துள்ளனர். இக்கோயிலில் இந்நாடகம் எந்த நூற்றாண்டில் தொடங்கி இதுவரை நடத்தப்பட்டு வருகிறது என்பது திண்ணமாகக் குறிப்பிட்டுச் சொல்ல இயலவில்லை.

ஆழ்வார்கள் இத்திருத்தலத்தைப்பற்றிப் பாடி யிருப்பதால் இக்கோயில் 7, 8-ஆம் நூற்றாண்டு களிலேயே இருந்துள்ளது எனத் தெரிகிறது. எனினும், இக்கோயில் நாயக்க மன்னர்கள் காலத்திலேயே சிறந்த வளர்ச்சியுடன் காணப்பட்டதாகக் கூறப்படு கிறது. நாயக்கர்களின் காலம் 15, 16-ஆம் நூற்றாண்டு களாகும். இந்நாடகப் பிரதியில் தூய தமிழில் பாடல் களும் உரையாடல்களும் கலந்து வந்துள்ளன. இந் நாடகப் பிரதியில் இடம்பெற்றுள்ள பாடல்களும், உரையாடல்களும் 15 -ஆம் நூற்றாண்டில் வழக்கி லிருந்த வைணவத் தமிழைப் பெரிதும் ஒத்துள்ளது. இம்மொழிநடை கதையை எடுத்துரைத்தல் முறைக்கு மிகுந்த அழுத்தம் கொடுப்பதாகவும் நாடகப்பாங்கில் அமைந்த உரையாடல்கள் மிகுந்ததாகவும் காணப் படுகிறது.

இந்நாடகம் நடைபெறுவதற்கென்றே அமைக்கப் பட்டிருக்கும் கைசிக மண்டபத்தை உள்ளடக்கிய இக்கோயிலில் காணப்படும் கட்டட அமைப்பும், சிற்பங்களும் நாயக்கர்கள் காலக் கட்டடக் கலை யையே ஒத்துள்ளன. எனவே இந்நாடகம் 15, 16 -ஆம் நூற்றாண்டுகளிலிருந்து நடத்தப்பட்டு வருவதாகக் கருத இடமுள்ளது.

நான்கைந்து நூற்றாண்டுகளாக இக்கோயிலில் நிகழ்த்தப்பட்டு வரும் கைசிக புராண நாடக மரபு நாளடைவில் வளர்ச்சி குன்றி, உரிய வகையில் பழமை மாறாமல் மேடையேற்றப்பட்டு வந்த முறையிலிருந்து சிறிது சிறிதாக மாறியுள்ளது. வடிவழகிய நம்பியின் சிலை கைசிக மண்டபத்தின் எதிரே உள்ள திருக்கோல மண்டபத்தில் வைக்கப் பட்டு நம்பி காணுமாறு கைசிக மண்டபத்தில் இந் நாடகம் நிகழ்த்தப்பட்டு வருகிறது.

1998-இல் திருமதி அனிதா இரத்தினம் தலை மையில் இயங்கும் சென்னை அரங்கம் அறக் கட்டளையினர் இந் நாடகத்தைப் பழைய மரபு மாறாதவாறு மீட்டுருவாக்கம் செய்தனர். உயிர்ப் புடன் இந்நாடகம் நிகழ்த்தப்படுவதற்கேற்ற வகையில் மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியை மேற்கொள்ளும் வரை, நாடகப் பனுவலைக் கையில் வைத்துக் கொண்டு நட்டுவனார் நிலையிலிருந்து நட்டுவனாராகத் தோன்றும் திரு.நாராயணக்கம்பர் சில நாடகப் பாடல்களை நாடகப் பிரதியிலிருந்து பார்த்துப் படிக்கவும் அதை நம்பாடுவானாகவும், நம்பிகிழவ ராகவும் பங்கேற்று நடிக்கும் குறுங்குடியம்மாள், மற்றும் காந்தம்மாள் போன்ற தேவதாசி பரம்பரையில் வந்த நடிகைகள் அதனை வாங்கிப் பாடுவதாக மட்டுமே அமைந்திருந்தது. இந்நாடக நிலையை 1969-இல் கண்ட அமெரிக்க ஆய்வாளர் திரு. வெல் போன் என்பவர், கூடியவிரைவில் இந் நாடக வடிவம் அழிந்துவிடும் என்றும் அதனை உயிர்ப்பிக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் தாம் எழுதிய கட்டுரையில் எழுதியிருந்தார்.

திருக்குறுங்குடியிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நாங்குநேரியைப் பிறந்த ஊராகக் கொண்ட நாடகப் பேராசிரியர் சே.இராமானுஜம் இக்கோயில் கலையைப்பற்றிக் கேள்விப்பட்டு 1992-இல் இந்நாடகத்தைப் பார்த்துள்ளார். அவர் வாயிலாக அழிவின் விளிம்பிலிருந்த இக்கோயில் நாடகத்தை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியை சென்னை அரங்கம் அறக்கட்டளை நிறுவனர் திருமதி அனிதா இரத்தினம் மேற்கொண்டார். அவர் 1997-இல் இந் நாடகத்தைப் பார்த்தும் அதனை ஒளிஒலிப் பதிவும் செய்துள்ளார். இவ்வாறு பதிவு செய்யப் பட்ட ஒளிஒலி நாடாவில் உள்ள கைசிகபுராண நாடகத்தில் நடிகர்கள் பேச வேண்டிய வசனங் களைக் கையிலிருக்கும் பிரதியிலிருந்து எடுத்துச் சொல்வதும் அதனை நடிகர்கள் வாங்கிப் பேசு வதும், பாடுவதுமான நிலையே காணப்பட்டன. நம்பாடுவானாகப் பாத்திரமேற்று நடித்த தேவ தாசிக் கலைஞர் மல ராலான வீணையைக் கழுத்தில் சுமந்துகொண்டிருந்தார். நட்டுவனராகப் பங்கேற்ற சங்கரக்கம்பர் முகவீணை வாசிப்பவராக இடம் பெற்றிருந்தார். மிருதங்கமும், வயலினும் உடன் செல்லும் கருவிகளாக இடம்பெற்றிருந்தன.

நாடகப் பாடல்கள் எதுவும் முறையாகப் பாடப்படாததால் மிருதங்கமும், வயலினும் ஒருங்கிணையாத வகையில் வாசிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. இவ்வாறு நடிக்கப் பட்ட நாடக நிகழ்ச்சியில் வயலின் எந்த நிலை யிலும் பொருந்திவருவதாக இல்லை. இந்நாடகம் நிகழ்த்தப்படுவதன் நோக்கத்தைக் கருதாமலும் அந்த நாடகக் கலையின் மேன்மையை உணரா மலும், அந்த நாடகத்தை நிகழ்த்துவது தவிர்க்க முடியாத சடங்கின் ஒரு கூறாகவே நிகழ்த்தப் பட்டது. அந்நாடகம் அதனுடைய உண்மை வடிவில் நிகழ்த்தப்படவில்லை. அந்த நாடகத்தைக் காணும் பார்வையாளர்களாக இருந்தவர்களும் அதனை விரும்பிப் பார்க்க வந்தவர்களாக அமையாமல் அந்த இரவைப் புனிதமான கோயிலில் கழித்தால் வீடுபேறு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்தவர் களாகவே காணப்பட்டனர். இக்கலைப் பாரம் பரியம் முற்றிலும் அழிந்து போகாமல் காப்பாற்றப் பட்டதற்குக் காரணமாக நாடகத்தில் பங்கேற்ற வர்கள், பார்வையாளர்கள் ஆகியோரின் பக்தி யுடன் இறைவனுக்கு சேவை செய்வது என்ற எளிமை மற்றும் அடக்க உணர்வே காரணமாக அமைந் திருந்தது.

இம்மரபு நாடகத்தில் ராட்சசனாகப் பங்கேற் பவர் பத்துநாட்கள் விரதமிருந்து கோயிலுக்குள் ளேயே அடைந்திருந்து தனக்குரிய உணவைத் தானே சமைத்து ஒரு நாளில் மதிய வேளை மட்டும் உணவருந்தி வருவார்.

நாடகம் நிகழ்த்தப்படும் நாளான கார்த்திகை மாதத்துக் கைசிக ஏகாதசியன்று, கொடி மரத்திற்கு அருகில் உள்ள அறையில் வைத்து ஒப்பனை செய்து கொள்ளும் ராட்சசன், ராட்சச முகமூடி வைத் திருக்கும் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்படு கிறார். அங்கு முகமூடிக்குக் கற்பூரமேற்றி பூஜை செய்யப்படுகிறது. அம்முகமூடியை அணிந்ததும் ராட்சச வேடம் பூண்டவர் வெறிவந்தவராக ஆவேச மடைகிறார். இங்கிருந்து அவர் நாகசுர, தவில் இசைப்புடன் கோயில் கொடிமரத்திற்கு அருகில் உள்ள வீரப்ப நாயக்கன் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு வடிவழகிய நம்பிக்கு அணிவிக்கப்பட்ட நீண்ட மாலையை எடுத்து ராட்சசனுக்கு அணிவிக்கப்படுகிறது. இப்பொழுது ராட்சசன் முன்னிலும் ஆவேசமடைந்தவராய் நான்கு பேர் சேர்ந்து தான் அவரைப் பிடிக்க முடியும் என்ற அளவிற்கு ஆவேசம் கொண்டவராகிறார். அந்த ஆவேசத்துடன் பாய்ந்தும் குதித்தும் கைசிக மண்ட பத்தின் வழியாகத் திருக்கோல மண்டபத்திற்கு அழைத்துவரப்படுகிறார்.

உத்சவ மூர்த்தியாகிய வடிவழகிய நம்பியும் மற்ற கடவுளரும் கைசிக மண்டபத்தை நோக்கி அமர வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இங்கிருந்து கைசிக நாடகத்தைப் பார்ப்ப தாக உள்ளது. கடவுளர்களான பார்வையாளர் களை ராட்சசன் வழிபடுகிறான். அப்போது கோயில் பட்டர் அவனுக்குக் கோயிலின் புனித நீரையும் (தீர்த்தம்) மலர்களையும் (பிரசாதமாக) கடவுள் கொடையாக அளிக்கிறார். இதனால் ஓரளவு ஆவேசம் தணிகிறார். குறிப்பிட்ட சில அடவுகளை மீண்டும் மீண்டும் போட்டுக்கொண்டு அவர் கைசிக மேடையை அடைகிறார். அங்கு அவர் நம் பாடுவானைச் சந்திக்கிறார். மேடையில் நம்பாடு வானின் பாத்திரப்பிரவேசம் இதற்கு முன்னரே நிகழ்ந்திருக்கும். நாடக நிகழ்ச்சி முகவீணை வாசிப்புடன் துவங்குகிறது. மிருதங்க இசை அதற்குப் பக்க இசையாக அமைகிறது.

1997-இல் ஆவணப்படுத்தப்பட்ட இந்நாடகத்தில் இந்த இசைக்கருவிகளே இடம்பெற்றுள்ளன. மூல ஓலைச் சுவடியிலிருந்து எடுத்தெழுதப்பட்ட கை யெழுத்துப் பிரதிக் குறிப்பேட்டுடன் நட்டுவனார் மேடையில் காப்புச் செய்யுளைப் படிக்கிறார். இந்தக் காப்புச் செய்யுளை அவர் படித்துப் பாடும் போது பூபாள ராகச் சாயல் தெரிகிறது. காப்புச் செய்யுள் முடிந்ததும் கோயில் பணியாளர் இருவர் கைத்திரை பிடித்து நிற்க அதற்குப் பின்னால் நம் பாடுவான் மலர்களால் செய்யப்பட்ட வீணையைத் தாங்கிக்கொண்டு நிற்கிறார். நம்பாடுவானாக மரபு வழி வந்த தேவதாசிப் பெண்ணே நம்பாடுவானாக ஆண்வேடத்தில் சட்டை வேட்டி அணிந்து நடிக் கிறார். திரைக்குப் பின்னால் நின்றுகொண்டு தன்னைத் தானே சுற்றிக் கொண்டும் பக்கவாட்டில் நடந்தும் தாளத்திற்கேற்ப ஒரு அடவைப் போட்டு ஆகிறார். இந்த அடவைத் தவிர வேறு எந்த அடவும் அவர்கள் போடுவதில்லை. நட்டுவனாராக வரும் கலைஞர் முகவீணை மற்றும் நாகசுரம் வாசிக்கும் குடும்பத்திலிருந்து வந்தவராக இருப்பதால் நம்பாடு வானாக வேடமற்று நடிக்கும் தேவதாசிக்கு அடவு களைச் சொல்லிக் கொடுக்கும் ஆற்றல் அவருக்கு இல்லை. அதனால் அடவுகளைப் போட்டு ஆடும் திறனை தேவதாசிகள் பெற்றிருக்கவில்லை.

நாடகத்தின் முதற்பகுதியாக அமையும் நம் பாடுவான் ராட்சசனிடையே நடக்கும் அச்சுறுத்தல்கள் மற்றும் வேண்டுதல்கள் இரு பாத்திரங்களுக்கிடையே பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. இப்பாத்திரங்கள் பேசும் உரையாடல்கள் குறிப்பேட்டில் எழுதப் பட்டதை நட்டுவனார் பார்த்துப் படிக்க இப் பாத்திரமேற்று நடிக்கும் நடிகர்கள் அரைகுறை யாகத் திருப்பிச் சொல்வதாகவே அமைந்துள்ளது.

நட்டுவனார் நடிகர்களுக்கு ஒவ்வொரு வார்த் தையாகச் சொல்லிக் கொடுப்பதுபோல இந்த உரை யாடல் அமைந்துள்ளது. நாடக நிகழ்ச்சி இந்த வகையில்தான் மேலெடுத்துச் செல்லப்படுகின்றது. திருக்கோல மண்டபத்தில் அமர்ந்திருக்கும் கடவுளரை நோக்கி இவ்வுரையாடல் நிகழ்த்தப்படுகிறது. அதில் எந்த அடவும், கைமுத்திரையும் இடம் பெறவில்லை.

கைசிக புராண நாடகத்தில் இரண்டாம் பகுதியில் நம்பாடுவான் கைசிக மண்டபத்திலிருந்து திருக்கோல மண்டபத்திற்குச் சென்று இறைவனைப் புகழ்ந்து பாடிக் கைவாரம் செய்கிறார். நம்பாடுவான் செய்யும் இக் கைவாரம் அரையர் சேவையில் செய்யப் படுவது போல் கைமுத்திரைகளால் செய்யப்படுவ தில்லை. இறைவனை வார்த்தைகளால் புகழ்ந்து பாடும் கைவாரமாகவே அமைகிறது. இங்கேயும் குறிப்புப் புத்தகத்தைப் பார்த்து நட்டுவனார் கூறு வதைத்தான் நம்பாடுவான் கூறுகிறார். இந்நாட கத்தின் உயிர்நாடியாக விளங்கும் கைசிகப் பண் இந்தக் கைவாரத்தில் பாடப்படுவதில்லை.

நம்பிக்கிழவர் வருகையுடன் கைசிக புராணம் நாடகத்தின் மூன்றாம் பகுதி தொடங்குகிறது. இப் பாத்திர நுழைவு சிறப்பான பாத்திரப் பிரவேசத் துடன் அமைக்கப்படவில்லை. நம்பிக் கிழவர் பாத்திரத்திலும் ஒரு கோயில் தேவதாசியே சட்டையும் வேட்டியும் அணிந்து நம்பாடுவான் பாத்திரத்தைப் போலவே தோன்றுகிறார்.

வயது முதிர்ந்தவராகக் காட்டுவதற்காக மூக்குக் கண்ணாடியுடனும், ஊன்றுகோலுடனும் தோன்று கிறார். நம்பாடுவானுக்கும், நம்பி கிழவருக்கும் இடையே நடக்கும் உரையாடலும் நாடகத்தின் முன்பகுதியில் இடம்பெற்ற நம்பாடுவான் ராட்ச சனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் வகை யிலேயே இங்கு இடம்பெறுகிறது.

கோயிலிலிருந்து திரும்பி வந்தபின் ராட்ச சனுக்கும், நம்பாடுவானுக்கும் நடக்கும் உரையாடல் பாங்கிலும், உரையாடலுக்கு உதவும் நட்டுவனாருக்கும் கதைத் தெளிவோ உரையாடல் தெளிவோ இருப்ப தாகத் தெரியவில்லை. நடிகர்கள் தங்கள் நினைவில் இருக்கும் சில உரையாடல் பகுதிகளை இடம் மாற்றி நினைவுபடுத்திக் குழப்பம் செய்யும் நிலையே காணப் படுகிறது.

அமெரிக்க ஆய்வாளர் வெல்போன் கைசிகம் பற்றிய தனது ஆய்வுக் கட்டுரையில் கைசிக புராண நாடகத்தில் அடவுகள் பற்றியோ முத்திரைகள் பற்றியோ இசையமைப்புகள் பற்றியோ எதனையும் குறிப்பிடவில்லை. கைசிக புராண நாடகம் குறித்து வெல்போன் 1967-இல் பதிவு செய்யப்பட்ட ஆவணச் செய்தியிலிருந்து 1997-இல் காணப்பட்ட கைசிக புராண நாடகத்தில் எந்த மாற்றமும் இடம்பெற வில்லை. 1967-இல் இருந்த கைசிக புராண நாடக வடிவமே 1997-லும் இருந்தது.

1998-வரை திருக்குறுங்குடியில் நடத்தப்பட்ட கைசிக புராண நாடகம் இந்த நிலையில்தான் இருந்தது. 1998-க்குப் பிறகு சென்னை அரங்கம் அறக்கட்டளையின் நிறுவனர் திருமதி அனிதா இரத்தினத்தின் முயற்சியால் நிகழ்த்துப் பிரதி தயாரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கைசிக புராண நாடக மீட்டுருவாக்கம் பேராசிரியர் சே. இராமானுஜம் தலைமையில் முயற்சி மேற்கொள்ளப் பட்டது. தஞ்சையைச் சேர்ந்த தேவதாசி மரபில் வந்த திரு.ஹேரம்பநாதன் நட்டுவனராக அமர்த்தப் பட்டார்.

தமிழக நாடக மரபு நாடகங்களாக அறியப் பட்ட பாகவத மேளா, தெருக்கூத்து போன்றவற்றில் பங்கெடுத்த கலைஞர்களும், நடிகர்களாகப் பயன் படுத்தப்பட்டனர். அடவுகள், பக்கஇசை, கை முத்திரைகள் அபிநயம் காட்டி நடித்தல் போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இசையில் நாடகப் பாடல்களுக்கான இராகங்கள் மற்றும் தாளங்களை உறுதி செய்து பயிற்சி பெற்ற செவ்வியல் குரலிசைக் கலைஞர்கள் மற்றும் செவ்வியல் கருவி இசைக் கலைஞர்கள் கைசிக நாடகத்திற்காகச் சேர்க்கப்பட்டனர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்களைக்கொண்டு பாகவத மேளா நாடகத்தில் இடம்பெற்றிருப்பது போலத் தனியாகக் கைசிக நாடகத்திலும் இசைப்பொறுப்பை மேற்கொள்ள ஒரு இசைக் குழு நியமிக்கப்பட்டது. கைசிக புராண மீட்டுருவாக்கப் பணி நாடக வல்லுநர் பேராசிரியர் இராமானுஜம் தலைமையில் கடந்த 14 ஆண்டுகளாக மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு ஆண்டுதோறும் நிகழ்த்தப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டு நிகழ்ச்சிக்குப் பின்னரும் நாடகத்தில் நிகழ்ந்த தவறுகளை நீக்கி மேலும் மேலும் இந் நாடகம் சிறப்பாக நடைபெறுவதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கைசிக புராண நாடக மீட்டுருவாக்கத்தில் திருக்குறுங்குடி கோயில் நிர்வாகிகளான வைணவப் பெரியவர்கள், இக்கலையில் ஈடுபட்டு வந்த பாரம் பரிய கலைஞர்கள் இந் நாடகத்தைப் பற்றி நன்கு அறிந்த ஊர்ப்பெரியவர்கள் முதலானோர்களின் கருத்துக்களின் அடிப்படையிலேயே இந்நாடக மீட்டுருவாக்கம் மேற்கொள்ளப்பட்டது. இதனடிப் படையில் வைணவ ஆகம விதிகள், வைணவ சித்தாந்தம், இசை மரபு, நடன அமைப்பு, நடிப்பு முறை, உரையாடலை வெளிப்படுத்தும் முறை போன்றவற்றை அறிந்து இந்த மீட்டுருவாக்கம் மேற்கொள்ளப்பட்டது. மீட்டுருவாக்கம் செய்யப் பட்ட கைசிக புராண நாடகத்தில் மரபுத் தொடர் புடைய கூத்து வடிவம், சமயச் சடங்குகள், சமூக அமைப்பு, பக்தி, அழகியல், போன்ற பல கூறுகளும் வெளிப்படும் வகையில் மீட்டுருவாக்க முயற்சி திட்டமிடப்பட்டது.

கைசிக புராண நாடகம் மீட்டுருவாக்கப் பணியைச் சிறப்பாக மேற்கொள்வதற்கு ஒரு ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டது. அக்குழுவில் ராக ஆராய்ச்சி யாளரும் இசை வல்லுநருமான ம.வைத்தியலிங்கம், கர்நாடக இசைப் பாரம்பரியத்தைக் கொண்ட நாடக இசை வல்லுநரான அரிமளம் பத்மநாபன், கிராமப்புற சிறு தெய்வ வழிபாட்டுச் சடங்கு மற்றும் நாட்டுப்புற தெய்வச் சடங்குகள் பற்றிய வல்லுநர் ம.வேலுசாமி, தேவதாசி நாட்டிய மரபில் வரும் நாட்டிய ஆசிரியர் திரு. ஹேரம்பநாதன், சதிராட்டப் பாரம்பரியத்தைக் கொண்ட இவரது மாமியார் துரைக்கண்ணு (எ) ரேவதியம்மாள், பரதநாட்டிய வல்லுநர் தஞ்சைக் கமலாம்பாள், தெருக்கூத்தை உலகறியச் செய்த எழுத்தாளர் நா. முத்துசாமி போன்றவர்கள் இவ்வல்லுநர் குழுவில் இடம்பெற்றிருந்தனர். இக்குழுவினரின் ஆலோ சனையின் அடிப்படையிலேயே கைசிக புராண நாடகம் மீட்டுருவாக்கம் மேற்கொள்ளப்பட்டது.

1998-க்கு முன்பு வரை நிகழ்த்தப்பட்டுவந்த கைசிக புராண நாடக நிகழ்ச்சிக்கும் கடந்த 14 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட மீட்டுரு வாக்கத்தின் பயனாய் உருவாகி, தற்போது நிகழ்த்தப் பட்டுவரும் கைசிக புராண நாடக நிகழ்ச்சிக்கும் உள்ள ஒற்றுமைக் கூறுகளையும், வேற்றுமை அல்லது மீட்டுருவாக்கத்தின் பயனால் உருவான அழகியலுடன் அமைந்த மரபைத் தழுவிப் புகுத்தப்பட்டுள்ள புதிய கலையம்சங்களையும் ஒப்பிட்டுக் காண்பது ஆய்வாளர் மற்றும் இரசிகர்களின் சமூகத் தேவை யாகும்.

Pin It