எட்டு வயதில் பார்வை பறிபோய்விட்டது பதினான்கு வயதில் ஒரு காலும் பறிபோய் விட்டது. ஆனால், மாற்றுக் குறையாத மனஉறுதியோடு படித்து முன்னேறி, தன் வாழ்நாளெல்லாம் பார்வையற்றவர்களின் நலவாழ்வுக்காக, உரிமைகளுக்காகப் பாடுபட்டவர் முனைவர் ஜி.ஜெயராமன்! சமூகத்தின் மைய நீரோட்டத்தில் பார்வையற்றவர்களும் இடம்பெற வேண்டும், கல்வி வாய்ப்புகள், வேலை வாய்ப்புகளில் பார்வையற்றவர்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். தமிழகத்தில் பார்வையற்றோருக்கான அமைப்புகள் உருவாகக் காரணமாயிருந்த முன்னோடிகளில் ஒருவர். சென்னையிலுள்ள தாம்பரம் கிறித்துவக் கல்லூரியில் இருபதாண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலப் பேராசிரியராகத் திறம்படப் பணியாற்றியவர். போதுமான வாய்ப்புகள் அளிக்கப்பட்டால் பார்வையற்றவர்களால் எந்தத் துறையிலும் சீரிய முறையில் பங்காற்ற முடியும் என்று எடுத்துச்சொல்லியவர்; எடுத்துக் காட்டியவர்! அன்பும் பண்பும் ஆற்றலும் நிறைந்த, அற்புத மனிதர்!

jayaraman_190‘வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட்’ என்ற அமைப்பை 1991-ல் நிறுவிய திரு.ஜெயராமன் அந்த அமைப்பின் முக்கியப் பதவிகளில் பார்வையற்றவர்களே பங்கேற்க வேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்தார். இந்த அமைப்பு பார்வையற்றோரின் பிரச்னைகள், திறமைகள் குறித்த விழிப்புணர்வை சமூகத்தில் பரவலாக்கம் பொருட்டு கண்காட்சிகள் - கருத்தரங்குகள் நடத்துதல், பள்ளிப் பொதுத் தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்ற பார்வையற்ற மாணவ - மாணவியருக்குப் பரிசு வழங்குதல், போட்டிகள் நடத்துதல், பார்வையற்றவர்களால் எழுதப்பட்ட, பார்வையற்றவர்கள் குறித்து எழுதப்பட்ட நூல்களை வெளியிடுதல் என பல்வேறு முன் முயற்சிகளை தொடர்ந்த ரீதியில் மேற்கொண்டு வருகிறது. இதுவரை ஏறத்தாழ 20 நூல்கள் திரு.ஜெயராமனின் தலைமையில் இயங்கும் WFB அமைப்பால் வெளியிடப்பட்டுள்ளன. தன்னளவிலும் ஒரு சிறந்த படைப்பாளியாக விளங்கியவர் டாக்டர் ஜெயராமன். அவர் எழுதிய ‘காணாத உலகில் கேளாத குரல்கள்’ (கட்டுரைகள்), கண்ணோட்டம் (சிறுகதைகள்), Vision சிறுவனையிருந்தபோது எழுதிய பல ‘குழந்தைக் கதைகள்’ ஆகியவை குறிப்பிடத்தக்க படைப்புகள்.

கடந்த 25-09-2012 அன்று உடல்நலக் குறைவால் காலமானார் திரு.ஜெயராமன். அவருடைய பணிகளும், அவரைப் பற்றிய நினைவுகளும் காலத்தால் அழியாதவை.

Pin It