அனைத்துப் பெற்றோர்களின் விருப்பமெல்லாம் தங்கள் குழந்தையை ஒரு அதிபுத்திசாலிக் குழந்தையாக வளர்க்க வேண்டும் என்பதே. அதற்கான எல்லா முயற்சிகளையும் சிறு வயதிலிருந்தே மேற்கொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள். அவர்கள் தங்கள் குழந்தைக்கு அதற்கேற்ப வசதி வாய்ப்புகளையும் செய்து கொடுத்து எதிலும் முதல் மாணாக்கனாக, மெடல்களும் கோப்பைகளும் வாங்கும் குழந்தையாகப் பார்க்க ஆசைப்படுகிறார்கள். திருவள்ளுவரும் தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல் என்றுதான் சொல்லுகிறார்.
ஜீனியஸ் குழந்தைகளைப் பற்றிய செய்திகள் அடிக்கடி மீடியாக்களில் வருகின்றன. இரண்டு வயது குழந்தை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் பெயர்களையும் அவைகளின் தலைநகரங்களின் பெயர்களையும் சரியாகச் சொல்லுவதையும், அவைகளை எல்லாம் வரைபடத்தில் சரியாகக் காண்பித்து நம்மை வியப்பில் ஆழ்த்துவதையும் பார்க்கிறோம். சிறு வயதிலேயே 1330 குறள்களை ஒப்புவிக்கும் குழந்தையைப் பார்த்து பாராட்டுகிறோம். நம் வீட்டுக் குழந்தையை அந்த சாகசக் குழந்தையுடன் ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்து விடுகிறோம்.
இந்தக் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே இவ்வளவு திறமை எங்கிருந்து வந்தது? குழந்தைகள் பிறக்கும்போதே அதிபுத்திசாலித்தனத்துக்கான உள்ளுணர்வுடன் பிறக்கின்றனவா? அல்லது பெற்றோர்கள் வளர்க்கும் விதம் அவ்வாறு உள்ளதா? குழந்தைகளின் பொதுவான வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் இப்போதிலிருந்தே நம் குழந்தையை ஒரு சாதனைக் குழந்தையாக்க முயற்சிக்கலாமா என்று பெற்றவர்களின் மனதில் ஒரு போராட்டம் ஏற்படுகிறது.
சாதனைக் குழந்தை
சிறு வயதிலேயே பெரியவர்களுக்கு உள்ள திறமையையும் புத்திசாலித்தனத்தையும் காண்பிக்கும் குழந்தையை ஒரு அதிசயக் குழந்தையாக அல்லது ஒரு அறிவு ஜீவிக் குழந்தையாக இந்த உலகம் பார்க்கிறது. இவர்கள் பதின்பருவத்துக்குள் நுழையும் முன்னரே தங்களின் திறமையைக் காண்பித்து விடுகிறார்கள். சமூகத்தில் ஒத்த வயதுள்ள குழந்தைகளைக் காட்டிலும் இவர்களின் திறமையும் சாதனையும் பல மடங்கு அதிகமாக இருக்கிறது. அதனால் இந்த உலகம் இவர்களை வியந்து பார்த்து பாராட்டி மகிழ்கிறது.
இவர்களின் அசாத்தியமான திறமை ஏதாவது ஒரு துறையில்தான் இருக்கிறது. பன்முகத்தன்மை உள்ளவர்களாக இருப்பது இல்லை. சங்கீதம், கணிதம், செஸ், ஓவியம், கலை என இவர்கள் சிறந்து விளங்கும் துறைகள் இருக்கின்றன. இதில் ஏதாவது ஒரு துறையில் நிபுணர்களாகப் பிரகாசிக்கிறார்கள். சிறு வயதிலேயே சாதிக்கும் இந்தக் குழந்தைகளை எந்த சக்தி உந்துகிறது?
பிறவியிலேயே இவர்களுக்கு அபாரமான நினைவாற்றலும் சக்தியும் இருக்கிறதா? அல்லது பிறவியிலேயே மரபுவழியாக வந்த ஜீன்களின் குணாதிசயங்களும் அவைகள் வெளிப்படுமாறு அவர்களின் பெற்றோர்கள் கொடுத்த ஊக்கமும், குழந்தைகள் செய்யும் பயிற்சியும்தான் இவர்களை தனித் திறமையுடன் இருக்கச் செய்கிறதா?
இம்மாதிரியான சிறுவயதிலேயே சாதிக்கும் குழந்தைகளைப் பற்றி ஆராய்ந்த லீவிஸ் டெர்மான் (லிணிகீமிஷி ஜிணிஸிவிகிழி) என்ற அமெரிக்க மனவியல் நிபுணர், 1925-இல் இவர்களின் ஐக்யூ அல்லது அறிவுத் திறன் குறியீடு 150-க்கு மேல் இருப்பதைக் கண்டார். (சராசரி மனிதனுக்கு 90-லிருந்து 110 வரையிலும் ஐக்யூ இருக்கிறது.) மேலும் இவர்கள், தாங்கள் விரும்பிய துறையில் அதிகமான ஆர்வத்தைக் காட்டினார்கள். தகுந்த பயிற்சியும் வாய்ப்பும் அவர்களுக்கு இருந்தால் வாழ்க்கையில் சாதிப்பார்கள் என்று தெரிந்துகொண்டார். ஆர்வமும் புத்திசாலித்தனமும் சேர்ந்து இருக்கும் இவர்களின் முக்கிய குணமே எடுத்த வேலையை வெறித்தனமாகத் தொடர்ந்து வெற்றிகரமாக முடிக்கும் நேர்த்திதான்.
பெற்றோர்கள் என்ன சொல்கிறார்கள்?
இம்மாதிரி குழந்தைகளின் பெற்றோர்களிடம் கேட்டால் அவர்கள் தங்கள் குழந்தையிடம் திடீரென்று இந்தத் திறமை தெரிந்ததாகவும், தாங்கள் எதுவும் பிரத்தியேகமாகச் சொல்லிக்கொடுக்கவில்லை என்றும் சொல்லுகிறார்கள். குழந்தையின் ஆர்வத்தைப் பார்த்து தொடர்ந்து பயிற்சி செய்ய ஊக்குவித்ததாகவும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொடுத்ததாகவும் கூறுகிறார்கள். குழந்தைகளும் மற்றவர்களைப் போல் இல்லாமல் மிக விரைவாக அந்தத் துறையில் நிபுணத்துவம் பெறும் அளவுக்கு முன்னேறி விடுகிறார்கள். சில நேரங்களில், பெற்றோர்கள் இன்றைக்கு இந்த அளவு பயிற்சி போதும் என்று சொன்னாலும் கேட்பதில்லை. காரணம், அவர்களுக்கு மிக எளிதாக இந்தத் திறமை இருப்பதால் மிகுந்த உற்சாகத்துடன் மீண்டும் மீண்டும் விடாமல் பயிற்சி செய்து அந்தத் துறையில் சாதனையாளர் ஆகி விடுகிறார்கள்.
இம்மாதிரி குழந்தைகளை எப்படி அடையாளம் காணுவது?
பிறந்ததிலிருந்து குழந்தைகளின் வளர்ச்சியை உற்று நோக்குபவர்கள், இம்மாதிரியான குழந்தைகள் அனைத்து வளர்ச்சிப் படிகளையும் மற்ற குழந்தைகளைவிட சீக்கிரமாகவே தொட்டுவிடுவதாகக் கூறுகிறார்கள். மிக முக்கியமாக முன்னதாகவே பேச ஆரம்பிக்கிறார்கள். சிறுவயதிலேயே ஏராளமான வார்த்தைகளைப் பேசுகிறார்கள். எளிதில் தாய் மொழியைக் கற்றுக்கொள்கிறார்கள். ஒரு சில குழந்தைகள் சிறு வயதிலேயே பன்மொழி வித்தகர்களாகவும் ஆகிவிடுகிறார்கள்.
இவர்களுக்கு புத்தகங்கள் படிப்பதிலும் ஓவியங்கள் வரைவதிலும் ஈடுபாடு அதிகமாக இருக்கிறது. காணும் உருவ, வடிவ அமைப்புகளை எளிதில் மனதில் பதிய வைத்துக் கொள்ளும் புகைப்பட நினைவாற்றல் (PHOTOGRAPHIC MEMORY) கொண்டவர்களாக இருக்கிறார்கள். தங்கள் வயது ஒத்த நண்பர்களைவிட சீனியர்களிடமும், பெரியவர்களிடமும் நட்புடன் பழக ஆரம்பித்து விடுகிறார்கள். சுயமாக சிந்தித்தல், பகுப்பாய்வு, படைப்பாற்றல் என இவர்களின் சாதனைக் களங்கள் பரந்து கிடக்கின்றன.
மருத்துவ உலகம் என்ன சொல்கிறது?
குழந்தைகளின் நரம்பு மனவியல் நிபுணர்கள் இவர்களின் மூளையின் எல்லாப் பாகங்களும் ஒரே சீராக வளராமல் ஒரு சில பகுதிகள் சீக்கிரம் வளர்ந்து செயல்படுவதால் (ASYNCHRONOUS BRAIN DEVELOPMENT) இம்மாதிரி திறமை வருகிறது என்று சொல்கிறார்கள். அதற்கேற்றார்ப் போல் சிறு வயதில் குழந்தையின் மூளையும் நெகிழும் தன்மையுடன் இருப்பதால் எளிதில் அனைத்து உள்ளீடுகளையும் வாங்கித் தன்னகத்தே வைத்துக் கொண்டு திறமையைக் காட்டுகிறது. அவர்கள் விடாமுயற்சியுடன் செய்யும் பயிற்சி இதற்கு உறுதுணையாய் இருக்கிறது.
இவர்களின் அசாத்தியமான திறமைகளை ஆராய்ந்தவர்கள், இவர்களுக்கு நீண்ட நேர நினைவாற்றல் அதிகமாக இருப்பதாகச் சொல்லுகிறார்கள். பார்த்ததையும் கேட்டதையும் மணிக்கணக்கில் நினைவில் நிறுத்திக்கொண்டு அவர்களின் மூளை செயல்படுகிறது. இவர்கள் ஒரு பொருளைப் பார்த்துவிட்டால் அது பற்றிய அனைத்து விபரங்களையும், ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி மூளையில் ஒரு புகைப்படம் போன்று பதிய வைத்துக் கொள்கிறார்கள்.
அன்றாட வாழ்க்கையில் இவர்கள்
இம்மாதிரி அசாத்திய திறமையுடன் இசைக் கலைஞர்கள், கணித மேதைகள், அறிவியல் அறிஞர்கள் எனப் பல பிரபலங்கள் எல்லா நாடுகளிலும் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். சில நேரங்களில் சாதாரண மனிதர்களிடமும்கூட இந்தத் திறமையைக் கண்டு வியந்து பாராட்டுகிறோம். ஒருவர், வரிசையாக நிற்கும் பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் சொல்வதை மனதில் வாங்கிக் கொண்டு கொஞ்ச நேரம் கழித்து ஒவ்வொன்றாக அதே வரிசையில் சொல்லி மக்களை வியப்பில் ஆழ்த்துவார். இன்னொருத்தர், ஹோட்டலில் சர்வராக இருந்தாலும் பல நபர்களின் ஆர்டர்களை எல்லாம் மனதிலேயே குறித்துக்கொண்டு சரியாக சப்ளை செய்து அசத்துவார்.
ஆனாலும் அதே திறமையுடன் இவர்களால் தங்களின் சொந்த வாழ்க்கையில் பிரகாசிக்க முடிவதில்லை. காரணம் இம்மாதிரியானவர்களின் திறமை மற்ற துறைகளில் விரிவடைவதில்லை. வயது ஆக ஆக இவர்களுக்குத் தங்களிடம் இருக்கும் திறமையைக் கொண்டாடும் மனநிலையும் இல்லாமல் போய்விடுகிறது. கடின முயற்சிக்குப் பிறகு தோல்வி, தடுமாற்றம் வழியே அடையும் வெற்றிக்கு உள்ள ருசி, அறியாத சிறு வயதிலேயே வரும் இந்த வெற்றிக்கு இல்லை போலும். சிறு வயதில் அறிவுஜீவிக் குழந்தையாக இருந்து வாழ்க்கையின் உச்சத்தைத் தொட்டவர்கள், பின்னாளில் வருத்தப்படவும் செய்கிறார்கள்.
பெற்றோர்கள் என்ன செய்யலாம்?
ஒரு குழந்தைக்கு எவ்வளவு உள்ளாற்றல் இருக்கிறது, எப்படி எல்லாம் பரிணமிக்க முடியும் என்பது அந்தக் குழந்தை பெற்றுள்ள மரபணுக்களைப் பொறுத்தது. ஆனால், எவ்வளவு செய்ய முடிகிறது என்பது அந்தக் குழந்தை வளரும் சூழலைப் பொருத்தது. ஆக இயற்கையில் கிடைத்த ஜீன்களும், பிறந்த பிறகு வளரும் சூழலும்தான் குழந்தையின் வளர்ச்சிக்கு முக்கியம். குழந்தைகளின் ஆர்வத்தையும் திறமையையும் புரிந்து கொண்டு அதற்கேற்ற சூழலைப் பெற்றோர்கள் அமைத்துக் கொடுத்தால் குழந்தைகள் வாழ்க்கையில் பிரகாசிப்பார்கள்.
வாழ்க்கையின் ரகசியம் மிகவும் சிம்பிள், ரூல் இதுதான். சிறுவயதில் ஜீனியஸ் ஆக இருந்தவர்கள் எல்லோரும் பெரியவர்கள் ஆனவுடன் பிரகாசிப்பதில்லை. ஆனால், பின்னாளில் பிரகாசித்தவர்கள் எல்லோரும் சிறுவயதில் விடாமுயற்சியுடன் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டவர்கள்தான். திருவள்ளுவர் சொல்வது போல முயற்சி திருவினையாக்கும். விடாமுயற்சிக்குத் தகுந்த பரிசு எப்போதும் உண்டு.
- ப.வைத்திலிங்கம், குழந்தைகள் நல மருத்துவர்.