இந்த நாடு காந்தியடிகளால் பெருமை பெற்றிருக்கிறது. உலக மக்களுக்கு இந்தியா ‘காந்தியின் பூமி’ என்றே அறிமுகம் ஆகியிருக்கிறது. அந்தப் பெருமைக்குரிய தேசம் அவரது கொள்கை களை ஏற்றுக் கொண்டிருக்கிறதா?

gandhi 306“உலகத்திற்கு உபதேசிக்க புதிதாக என்னிடம் எதுவும் இல்லை. மலைகள் எவ்வளவு பழமை யானவையோ, அவ்வளவு பழமையானவை சத்தியமும், அகிம்சையும்...” என்றார் அவர்.

ஆனால் அவர் உபதேசித்த சத்தியமும், அகிம்சையும் எங்கேயிருக்கிறது என்று தேட வேண்டியிருக்கிறது. தேடினாலும் கிடைத்துவிடுமா? கிடைத்தாலும் அவற்றை விட்டு வைப்பார்களா? அவரது 150 ஆம் பிறந்தநாளில் இவ்வாறு ஏராளமான கேள்விகள் எழுகின்றன.

“இத்தகைய ஒரு மனிதர் இரத்தமும், சதையு மாய் இந்த மண்ணில் நடமாடினார் என்பதை வருங்காலத் தலைமுறையினர் நம்புவது கடினம்...” என்று காந்தியடிகளைப் பற்றி அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் கூறினார். இது எவ்வளவு பெரிய உண்மை என்பதை நிகழ்காலம் மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறது.

இந்தக் காலத்துக்கு அவரது கொள்கைகள் தேவைப்படவில்லையா? அகிம்சை என்பது கோழைத் தனத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறதா? அமைதியும், பொறுமையும் அடிமைத்தனமாகக் கருதப்படுகிறதா? அணுகுண்டு யுகத்தில் அன்புவழி தேவைப்படவில்லையா? ஆரவாரமான இந்த உலகத்துக்கு அமைதியின் பொருள் புரியவில்லையா?

இந்தக் கேள்விகள் எழுவது இயற்கை; மகான்களும், மகாத்மாக்களும் காட்டிய வழிகள் புறக்கணிக்கப்படுவதால் ஏற்படும் கேள்விகள்; அவர் பெயரை உச்சரிக்கிறவர்களே அவர் புகழுக்குக் களங்கம் சேர்ப்பதால் எழும் கேள்விகள்.

“விழாக்கள் கொண்டாடுவதில் கவர்ச்சி மிகுந்த நாடு நம் நாடு. புகழ் பாடுவதிலும், பூசைகள் நடத்து வதிலும் வல்லவர்கள் நாம். ஆனால் அவர் கூறிய படி நடக்கின்றோமா என்றால் அதுதான் இல்லை... என்றார் அறிஞர் அண்ணா, காந்தியாரின் 1967 பிறந்த நாளில்! அதுதான் இப்போது தொடர்கிறது...

கொள்கைகளில் குற்றமில்லை. அவற்றை நடைமுறைப்படுத்தாமல் வெற்று விளம்பரத்துக்காக மட்டுமே அவர் பெயரைப் பயன்படுத்துவதால் ஏற்பட்ட ஏமாற்றம். சொல்லுக்கும், செயலுக்கும் இருக்கிற தடுமாற்றம், உண்மையைப் பேசுவதில்லை என்ற உறுதிமொழி. இவையெல்லாம் அவரை இக் காலத் தலைமுறையினர் இடமிருந்து அந்நியப் படுத்தி விட்டது.

காந்தியார் போன்ற மாமனிதர்கள் பங்குபெற்ற அரசியல் இப்போது எப்படியிருக்கிறது? நல்லவர் களால் ஒதுக்கப்படும் இடமாகவும், பொல்லாதவர் களின் புகலிடமாகவும் மாறிவிட்டதா? மன்னர் ஆட்சி களையே எதிர்த்து நின்று புறம்கண்ட மாபெரும் மக்கள் சக்தி, இந்த மக்களாட்சியில் தோல்வி கண்டு சோர்ந்து போய்விட்டதா?

காந்தியத்தில் வெற்றி மட்டும் முக்கியமில்லை. அதற்கான வழிமுறைகளும் முக்கியம். ஆனால் இப் போது அரசியல்களம் அப்படியா இருக்கிறது? எப்படி யாவது வெற்றி பெறவேண்டும். வெற்றிபெற்று விட்டால் போதும், எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

இதற்காக அரசியலைப் புறக்கணித்துவிட முடியாது. அரசியல் இல்லாமல் என்ன இருக்கிறது? ‘எனக்கு அரசியல் வேண்டாம்’ என்று ஒதுங்கிவிட முடியுமா? நாம் ஒதுங்கிப் போனாலும் அது நம்மைத் துரத்தும்; துரத்திக் கொண்டேயிருக்கும். இதிலிருந்து தப்பித்து ஓடுவதா அகிம்சை?

சுதந்திரம் கிடைத்தவுடன் நாட்டில் பாலாறும், தேனாறும் பாயும் என்றார்கள். பணக்காரர், ஏழை என்ற பாகுபாடு இல்லாமல் சமத்துவம் வரும் என்று மக்களும் நம்பினர். ஆனால் நடந்தது என்ன? ஏழை, செல்வர் என்று வேறுபாடு அதிகரித்துக் கொண்டே போவதுதான் மக்கள் கண்ட மக்களாட்சியின் பயன்.

“மக்களாட்சியின் கீழ், மிக அதிக பலம் வாய்ந்தவருக்கு இருக்கும் அதே வாய்ப்பே மிகுந்த பலவீனமானவருக்கும் இருக்க வேண்டும். இதுவே மக்களாட்சியைப் பற்றி நான் கொள்ளும் கருத்து. ஆனால் அகிம்சை வழியினால் அன்றி இதை என்றுமே அடைந்துவிட இயலாது” என்பது மகாத்மாவின் கருத்து. சுதந்திரத்துக்குப் பின் வந்த எந்த அரசாங்கமும் ஏற்று நடத்தவில்லையே!

வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும் இன்றைய இளைஞர்களைத் திசை மாற்றி தீவிர வாதங்களுக்குத் துணை போகத் தூண்டுகிறது. ஒரு சிலரின் உல்லாச வாழ்வுக்காகப் பலபேர் உழைத்து உழைத்து ஓடாகத் தேய்வது வன்முறைக்குத் தூண்டி விடுகிறது. இதனை பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்திக் கொள்ளுகின்றன.

குடியரசுத் தலைவர் உள்ளிட்ட உயர்பதவியில் இருப்பவர்களுக்கு ஊதியம் பலமடங்காக உயர்த்தப் பட்டிருக்கிறது. இதனால் சாதாரண குடிமக்களுக்கும் அவர்களுக்குமான இடைவெளி இட்டு நிரப்ப முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

இங்கு பயங்கரவாதமும், தீவிரவாதமும் சமமாக நோக்கப்படுகிறது. வகுப்பு நல்லிணக்கம் பேசுகிற போதே வகுப்புவாதம் தூண்டிவிடப் படுகிறது. இறைவன் பேரால் அப்பாவி மக்கள் குருதியும், உயிரும் இழப்பது இங்கு யாருக்குச் சம்மதம்? சுயநலத்தைத் தூக்கி எறிந்துவிட்டு மக்கள் நலனை எதிர்கொள்ளும் துணிவுடைய அரசாங்கம் வர வேண்டும்.

மாவீரன் அலெக்சாண்டர் முன்னிலையில் ஒரு கடற்கொள்ளைக்காரன் கைது செய்யப்பட்டு விசாரணைக்காகக் கொண்டுவந்து நிறுத்தப்பட்டான். அலெக்சாண்டர் அவனைப் பார்த்துக் கேட்டார்:

“நீ எந்தத் துணிச்சலில் இப்படிப்பட்ட நாச வேலைகளைச் செய்து கொண்டு கடலிலே உலவு கிறாய்?...”

அதற்கு அவன் பதில் கூறினான்: “நீ எந்தத் துணிவில் இந்த உலகத்தையே அடக்கியாள எண்ணு கிறாய்? என்னிடம் ஒரு கப்பல் இருப்பதால் நான் ஒரு கொள்ளைக்காரன் என்று அழைக்கப்படுகிறேன். ஆனால் உன்னிடம் மாபெரும் கப்பற்படை இருப்ப தனால் நீ மாவீரன் என்று போற்றப்படுகிறாய்!...”

அலெக்சாண்டர் அவனது துணிச்சலான பதிலைக் கேட்டு மௌனமானான். அவனை உடனே விடுதலை செய்துவிடும்படி ஆணையிட்டான். அலெக்சாண்டர் சிந்திக்கத் தெரிந்தவன் என்பதால் அவன் கூறியதன் உண்மைப் பொருளை உணர்ந்து கொண்டான்; ஒத்துக்கொண்டான். ஆனால், இன்றைய அரசியல் உலகில் இந்த உண்மையை ஏற்றுக் கொள்வார்களா?

‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும்’

என்கிறது வள்ளுவம்.

ஆனால் இந்த மக்களாட்சியில் சிந்தனையாளர்கள் மதிக்கப்படுவதில்லை. அவர்களின் விமர்சனங்களும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

இந்தியாவின் இடதுசாரி சிந்தனையாளர்களைச் சுட்டுக் கொல்வது தொடர்ந்து வருகிறது. ஆனால், அதுபற்றி நடவடிக்கை எடுக்காத காவல்துறை இருக்கும் சிலரையும் ‘மாவோயிஸ்ட் ஆதரவாளர்’ என்று முத்திரை குத்தி கைது செய்துள்ளது. ‘புனே காவல்துறை இவர்களைக் கைது செய்திருப்பது சட்டவிரோதமானது’ என்று நாடு முழுவதுமுள்ள முற்போக்காளர்கள் கண்டனக் குரல் எழுப்பி யுள்ளனர்.

‘ஐந்து பேரையும் சிறையில் அடைக்கக் கூடாது; வீட்டுக் காவலில் வைத்திருக்கலாம்’ என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ‘சட்ட விரோதத் தடைச் சட்டம்’ என்ற கொடும் சட்டத்தில் கைது செய்யப் பட்ட இவர்களை இந்தியாவின் பல நகரங்களி லிருந்து புனே அழைத்துச் செல்ல கீழமை நீதி மன்றங்கள் அனுமதி வழங்கியதை நீதிபதிகள் கண்டனம் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட கவிஞர் வரவரராவ் உள்ளிட்டோரை ‘நகர்ப்புறத்து நக்சல்கள்’ என்று ஆளும் தரப்பு புதிய பட்டம் சூட்டுகிறது. அரசுக்கு எதிராகவும், மனித உரிமைகளுக்கு ஆதரவாகவும் குரல் கொடுப்பவர்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துகின்றனர்.

“தீமையானவைகளையெல்லாம் எதிர்த்துப் போராடுவதினின்று ஒதுங்கி இருந்து விடுவது என்பதன்று அகிம்சை. அதற்கு மாறாக நான் கருதும் அகிம்சை, அதிகத் தீவிரமானது. தீமைகளை உண்மையில் எதிர்த்துப் போராடுவதும் பதிலுக்குப் பதில் செய்து விடுவது என்பதும் இயல்பாகவே தீமையை அதிகரிப்பதாகும். ஆகையால் அதைவிட அகிம்சை அதிகத் தீவிரமானது” என்று அகிம்சைக்கு இலக்கணம் கூறிச் சென்றார் காந்தியடிகள்.

தெய்வத்தின் பெயராலும், மதத்தின் பெயராலும் தேசத்தை அழிவை நோக்கி அழைத்துப் போவதை அனுமதிக்க முடியாது. மாமனிதர்கள் உபதேசிப்ப தில்லை. வாழ்ந்து காட்டுகிறார்கள். அகிம்சையும், சத்தியமும் அப்படியே! காந்தியத்தின் வெற்றி தாமதம் ஆகலாம். ஆனால் தோல்வியடைவதில்லை.

Pin It