உலகிலுள்ள நாடுகள் பலவும் தம்முள் பல்வேறு பட்ட சிறப்புத் தன்மைகளைக் கொண்டுள்ளன. அவற்றுள் நம் இந்தியத் திருநாடு என்றாலே உலக மக்களின் நினைவுகளில் நீங்கா இடம் பிடித்திருப்பது இத்திருநாட்டின் இயற்கையும் அவ்வியற்கையில் உறையும் இறைமைத் தன்மையுமே, இயற்கையில் இறைமையடங்குமா? (அ) இறைமையில் இயற்கை யடங்குமா? என்னும் தத்துவார்த்த வாதத்தையும் தாண்டி இரண்டையும் ஒன்றாய்க் கண்டது இத்தேசத்தின்கண் தோன்றிய இந்து சமயம்.

சமயக் கருத்துக்களைத் தனித்துறையாகக் காணாது, தம் வாழ்வியலோடு இரண்டறக் கலந்து வாழத் தலைப் பட்ட பெருமைக்குரியது ‘கல்லும் மண்ணும் தோன்றுதற்கு முன் தோன்றிய தமிழினம்’. தம் சமயக் கருத்துகள் பலவற்றால் முற்போக்குச் சிந்தனைகளை முன்வைத்த தமிழினம் கண்ட தொன்மக் கருத்தாக்கங்களில் ஒன்றே ‘அணங்கு’. தொன்மப் பதிவுகளில் தன்னையும் பதித்துக் கொண்ட அணங்கினைக் குறித்து ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கம்.

அணங்கு

அணங்கு என்பதற்கு ‘அச்சம், தெய்வப் பெண், தேவர்க்காடும் கூத்து’1 எனப் பல பொருள்களைத் தருகிறது தமிழ்மொழி அகராதி.

‘அணங்கென்பன பேயும் பூதமும்
 பாம்பும் ஈறாகிய பதினெண்
கணனும், நிரய பாலரும் பிறரும்
 அணங்குதற் றொழிலராகிய
சவத்தின் பெண்டிர் முதலாயினாரும்
 உருமிசைத் தொடக்கத்தனவும்

எனப்படும்’2 எனத் தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் உரையில் பேராசிரியர் சுட்டுகிறார். அணங்கு என்பதற்கு ‘இணங்குதல்’ என்னும் பொருளும் உண்டு. அச்ச வுணர்வைத் தூண்டிப் பிறரைத் தம் வயத்தில் இணங்கச் செய்யும் பொருளனைத்தையும் முன்னோர் அணங்கு எனக் குறித்ததாகவும் கொள்ளலாம்.

தமிழிலக்கியங்கள் முன்வைக்கும் அணங்குக் கொள்கை நம்பகமற்ற தன்மை கொண்டதாக விருப்பினும் காணும் பொருளனைத்தையும் புனிதக் கண் கொண்டு கண்ட மாந்தனின் உயர்வுள்ளத்தையே இக் கருத்து முன்வைக்கின்றது. எண்ணம், சொல், செயலில் பொய்யாமை என்னும் மெருகேற்றச் செய்யும் சிறிய அச்சுறுத்தலே அணங்குக்கூற்று என்றும் கொள்ளலாம்.

‘புராணக்கதைகளை வழங்கும் குறிப்பிட்ட சமுதாயத்தினர், அக்கதை விவரிக்கும் சம்பவங்கள் என்றோ ஒரு காலகட்டத்தில் நடந்தவை என்றோ நம்புவர். அதனால்தான் அத்தகைய சம்பவங்களை விவரிக்கும் கதையைப் புனிதக் கதையாடல் (Sacred narrative) என்று கொண்டாடுகின்றனர்; அதன் நம்பகத் தன்மைபற்றிக் கேள்வி ஏதும் கேட்பதில்லை. அதே சமயத்தில் அதனை வரலாறு என்றும் கருதுவதில்லை’3 என்னும் ஆ.தனஞ்செயன் அவர்களின் கூற்றும் மேற் கருத்தை அரண் செய்வதையுணரலாம். அவ்வகையில் செம்மொழியாம் தமிழின்கண்ணுள்ள இலக்கியங்கள் காட்டும் அணங்கு பற்றிய கருத்துகள் பல்துறைக் கருத் தாக்கங்களையுணர்த்துகின்றன. அச்சம், தெய்வம், தேவமகளிர், மானுட மகளிர், முருகன் போன்ற பல்வேறு பட்ட பொருள்களில் அணங்குகள் சுட்டப்பெற்றுள்ளன. அவற்றோடு அணங்குறையும் இடங்களும் சுட்டப் பெற்றுள்ளன.

அச்சம்

அணங்கு என்னும் சொல் பல்திறப்பட்ட பொருள் தந்தாலும் இவை அனைத்திற்குமே பொதுப்பொருள் ‘அச்சம்’ என்பதேயாகும். அச்சவுணர்வைத் தோற்று வித்துத் துன்பம் தரும் பொருளனைத்தும் ‘அணங்கு’ எனப்பெற்றன.

“தொன்மங்கள், ஒரு மக்கள் கூட்டத்தின் நம்பிக் கைகளையும், அச்சங்களையும், விருப்பங்களையும் குறியீட்டு நிலையில் எடுத்துரைக்கின்றன.”4
என்னும் சி.இ.மறைமலை அவர்களின் கூற்றும் மாந்தன் கொண்ட அச்சவுணர்வு தொன்மங்களாகப் பரிணமித்ததைப் பறைசாற்றுகின்றது.

“ஆயிரம் விரித்த அணங்குடை அருந்தலை”
(பரிபா-1:1)
என்னும் பரிபாடலடி இவ்வச்சவுணர்வை பிரதிபலிப் பதையுணரலாம்.

மேலும் பரிபாடல் திரட்டு (1) புறநானூறு (211) போன்றவையும் அச்சந்தரும் அனந்தனின் ஆயிரந்தலை களை எடுத்தியம்புகின்றது.

“அருவி யார்க்கும் அணங்குடை
 நெடுங் கோட்டு” (நற்-288:1)
என்னும் நற்றிணையடியும் காண்போர் அஞ்சும்படி ஆர்ப்பரிக்கும் அருவியினிழிவை முன்மொழிகின்றது.

தெய்வம்

ஆண் பெண் என்னும் பாகுபாடு காட்டப்பெறாது தெய்வம் என்னும் பொதுப்பொருளில் இருபதுக்கும் மேற் பட்ட இடங்களில் அணங்கு பயிலப்பட்டுள்ளது.5 துன்மக்களை நல்வழியில் வளர்த்தெடுக்கும் தந்தைக்கு அவர்கள் பின்னாளில் பெறும் உயர்ச்சி, சிற்பத்தை வடிக்கும் சிற்பிக்கே அச்சிற்பம் தெய்வ மாவதைப் போல விளங்கும் என நல்வளர்ப்பின் மேன்மையுணர்த்த ‘அணங்கு’ என்னும் சொல் ‘தெய்வம்’ என்னும் பொருளில் ஆளப்பெற்றுள்ளது.

இதனை,
“மான்-சேர்ந்த நோக்கினாய் ஆங்க அணங்காகும்
தான் செய்த பாவை தனக்கு” (பழமொழி-33:34)
என்னுமடிகள் உணர்த்துகின்றன.

அணங்குகள் புறக்கண்களுக்குப் புலனாகாதன எனினும் வேண்டுங்காலத்து விரும்பிய உருவுகொள்வன என்னும் கருத்தாக்கத்தை,
“பேயும் அணங்கும் உருவு
 கொண்டு ஆய்கோல்” (மதுரைக்-632) என்னும் அடிகள் எடுத்தியம்புகின்றன.

மேலும் வரும் தீமையைச் சுட்டுகின்ற அணங்குகளே

“அணங்கறி கழங்கில் கோட்டம் காட்டி”
(நற்-47)
தீமைகள் விளையவும் காரணமாகின்றன
“......................... களையா பூசற்கு
அரண்கள்தா வுறீஇ அணங்கு நிகழ்ந்தன்ன”
(பதிற்றுப்-44:12-13) எனவும் நம்பினர்.

தெய்வங்கள் அருளறம் கொண்டிலங்குவன. அத்தெய்வங்களே மருளறங் கொள்ளுங்காலத்து அணங்கு என அழைக்கப்பெற்றன, என்பதனையும் இலக்கியங்கள் உணர்த்துகின்றன.

“என்னை யருளி யருண்முருகு சூள்சூளின்
நின்னைஅருளில் அணங்காம்
 மெய்வேல் தின்னும்”
(பரிபா-8:65-66)
முருகப்பிரான் மீது பொய்ச்சூளுருவாயாயின் அவனைச் சார்ந்த அருளில்லாத தெய்வங்களுடனே வேலும் வருத்தும் என்னும் கூற்றில் அருட்டிறம் கொண்ட தெய்வங்கள் வருத்துங்காலத்து அணங்காகச் சுட்டப்பெற்றுள்ளமை புலனாகிறது.

தாக்கணங்கு

அணங்கென்பதனை வருத்தம் தரும் தெய்வம் எனச் சுட்டும் சான்றோர், அது தீண்டி வருத்தும் தெய்வ மெனவும் சுட்டுகின்றனர். வள்ளுவப் பெருந்தகையும் ‘தகையணங்குறுத்தல்’ (109) என்னும் அதிகாரமே அமைத்துள்ளமை இதன் சிறப்புணர்த்தும்.

“ ‘அணங்கு தாக்கு’ என்பதற்குக் காமநெறியால் உயிர் கொள்ளும் தெய்வமகள் தீண்டல்”6 எனத் தமிழ் மொழியகராதியும் பொருளுரைக்கின்றது.
“ஆயும் அறிவின ரல்லார்க் கணங்கென்ப
மாய மகளிர் முயக்கு” (திருக்-92)
“நோக்கினாள் நோக்கெதிர்
 நோக்குதல் தாக்கணங்கு
தானை கொண்டன்ன துடைத்து” (திருக்-1082)
என்றெல்லாம் வருகின்ற வள்ளுவர்தம் வாக்கில் முறையே அணங்கின் வருத்தும் தன்மையும், காண் போரைத் தாக்கி வருத்தும் தன்மையும் வெளிக்காட்டப் பட்டுள்ளன.

வருத்தம் தரும் பெண்களைத் தாக்கணங்கு எனக் குறித்ததோடு ஒருபடி மேலே சென்று துன்பத்தை மிகுவிக்கும் தன்மையுடைய அனைத்தையும் ‘அணங்கு’ என இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன.

“ஆண்டலை அணங்கு அடுப்பின்
வயவேந்தர் ஒண்குருதி
சினத்தீயிற் பெயர்பு பொங்க” (மதுரைக்-29-31)

இங்கு வீரரது தலைநோக்குவாரை அணங்குறுத்தும் (துன்புறுத்தும்) அடுப்பாக உருவகிக்கப் பெற்றுள்ளது. ஆங்குச் சினமென்னும் நெருப்பில், பகைவர் குருதியாகிய உலை கொதித்துப் பொங்கும் என முற்றுருவகப்படுத்தி யுரைக்கின்றார் புலவர்.

“நாடுடை நல்எயில் அணங்குடைத் தோட்டி”
(மதுரைக்-693)

இங்குப் பகைவரை வழிசெல்லவிடாது துன்புறுத்துதலின் அரணிடத்துள்ள வாயிற்கதவுகளின் ‘வலிமைத் தன்மை’ பகைவர்க்கு அணங்காகிய நிலை சுட்டப்பெறுகின்றது.

“அருங்கடிப் பெருங்காப்பின்
வலியுடை வல்லணங்கினோன்”
(பட்டினப்-133-134)
என்ற அடிகளில் இலச்சினை பொறிப்போனின் செயல் அணங்காகிய சூழலைச் சுட்டுகிறது பட்டினப்பாலை.

முருகன்

அருட்டிறம் கொண்ட முதன்மைக் கடவுளும் துன்பக்காலத்திலுதவாது மருட்சி செய்யுங்காலத்து அணங்காகவே கொள்ளப் பெற்றனர். அவ்வகையில் மலைநிலக் கடவுளான முருகனும் அச்சுறுத்தும் அணங்காக இலக்கியங்களில் குறிப்பிடப்பெறுகிறான்.

“.................. அணங்கு அணங்கிற்று என்று
மறியீர்த் துதிரந்தூய், வேலற்றரீஇ
வெறியோ டலம் வரும் யாய்” (ஐந்.ஐம்-20:2-4)
என ஐந்திணை ஐம்பதின் தலைவி அணங்கினால் தான் அச்சுற்றதாக எண்ணி வேலற்கு வெறியாட்டு நிகழ்த்திய தாயைச் சுட்டுகின்றாள். ஆனால் நற்றிணைத் தலைவியோ

“அணங்கும் அணங்கும் போலும்”
(நற்-386:10) என அறநெறி நில்லாத தாயின் வெறியாட்டுச் செயலால் தன்னைக் காக்கும் கந்தக் கடவுளே தனக்கு அணங்காகி யதைச் சுட்டுகிறாள்.

மேலும் சிலவிடங்களிலும் முருகவணக்கு குறித்த கருத்துள்ளது. தலைமக்களிருவரின் உண்மையன்புடன் கூடிய காதல் நெறியை எடுத்தியம்பும் குறிஞ்சித் திணையில், தான் எண்ணிய தலைவனையே அடைந்து தன் கற்பின் திறம் மேன்மையுற விரும்பும் தலைமகட்கு அக்காலத்து இடையூறாக வரும் எதுவும் அச்சுறுத்துவதாகவே தோன்றும். அக்காரணம் பற்றியே முழுமுதற் கடவுள் முருகனும் அணங்காகிப் போனான் போலும்.

அருந்ததி

கற்பின் திண்மையை மிகுவித்துக் காட்ட அருந்ததி நாள்மீனும் அணங்கெனச் சுட்டியுரைக்கப்பெற்றுள்ளது.

“அணங்குறு கற்போடு மடங்கொள் சாஅய்” (அகம்-73)


மேலும் கணவனேகூட கற்புத்திறம் சிறந்த பெண்டிர்க்கு அணங்காகியமையையும் இலக்கியங்கள் சுட்டத் தவறவில்லை.
“அணங்கல் வணங்கின்று பெண்”

(நான்மணி-91) என்னுமடி கணவனையல்லாத பிற தெய்வங்களை வணங்காத பெண்டிரைச் சுட்டி நிற்கின்றது.

மேற்கருத்துகள் கற்பின்திறம் விளங்கும்படி வாழப் பெண்களை அறிவுறுத்தியதோடு, கற்புக்குக் குறியீடாகும். கணவர்க்கு அஞ்சி வாழ்வதே தலைக்கற்புத் தன்மை யென அவர்களை அச்சுறுத்தியதையும், பெண்டிரும் கணவற்கு அஞ்சி வாழ்ந்த சமுதாயச் சூழலையும் அடிக்கோடிடுகின்றன.

மானிடப்பெண்

அணங்கென்னும் சொல் கொண்டு மானுட மகளிரைச் சுட்டும் வழக்கமும் இருந்துள்ளது. வள்ளுவர் உரைக்கும் ‘தகையணங்கு’ மானுட மகளிரையே சுட்டியிருத்தல் எண்ணுதற்குரியது. அழகும், இளமையும் விஞ்சிய மகளிரைக் குறிக்கும் பொதுச் சொல்லாகவும் பாவை, அணங்கு போன்றவை பயன்படுத்தப் பெற்றுள்ளன.

ஆடவரைக் கவரும் அழகினை உணர்த்த இலக்கிய வாதிகள் அணங்கு என்னும் சொல்லை ஓர் உத்தியாகவும் பயன்படுத்தியுள்ளனர்.
“இலக்கியப் படைப்பாளன் தொன்மக் கூற்று களோடு தன் இலக்கிய உருவாக்கத்தைச் சேர்த்துப் பாடு பொருளை எளிதில் விளங்கிக் கொள்ளச் செய் கிறான்”8 என்னும் இளமுருகன் அவர்களின் கூற்றும் மேற்கருத்துக்கு அரண் செய்வதை உணரலாம்.

“அணங்குகொல் ஆய்மயில்
 கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் னெஞ்சு”
(திருக்-1081) என்னும் குறளடிகள் அணங்கென அழகு கெழுமிய மானுடப் பெண்டிரையே விவரிக்கின்றன. இலக்கியங்களில் மேற்சிலவிடங்களிலும்9 இக்கருத்து இடம்பெற்றுள்ளது.

பேய்-சூரரமகளிர்

அச்சவுணர்வைச் சுட்டி நிற்கும் அணங்கு என்பது அவ்வச்சவுணர்வைத் தம் தோற்றத்தால் மிகுவிக்கும் பேய்களைக் குறித்தும் பயன்படுத்தப் பெற்றுள்ளது.

“வெண்டிரைப் பரப்பிற் கடுஞ்சூர்க் கொன்ற
பைம்பூட் சேஎய் பயந்தமா மோட்டுத்
துணங்கையம் செல்விக்கு
 அணங்கு நொடித்தாங்கு”
(பெரும்பாண்-457)

இங்கு ‘வெற்றியையுடைய காளிக்குக் கூளியாகிய அணங்கு நொடி கூறியது போல’ என்னும் உவமையில் பேய் அணங்கு எனக் குறிக்கப்பெற்றுள்ளது. மேலும்,

“அணங்குடை ஆரிடை ஈங்குநீ வருவதை”
(கு.கலி-49) எனச் சூரர மகளிரும் அணங்கு எனச் சுட்டப் பெற்றுள்ளனர்.

அணங்கு உறையுமிடங்கள்

புறக்கண்ணிற் புலனாகாத அணங்குகள் உறையு மிடங்களாகவும் இலக்கியங்கள் சிலவற்றைச் சுட்டு கின்றன. அவ்விடங்கள் பெரும்பாலும் அச்சவுணர்வும் வளப்பத்தன்மையும் ஒருங்கே பெற்றிலங்குவனவாக உள்ளன. மகளிர் மார்பு வளப்பத்தினடையாளமாக கருதப்பட்டமை சங்கத்திற்கும் முன்பிருந்த ஆதிகாலத் தாரிடமும் வெளிப்பட்டுள்ளது.

“கிரேக்கர்களும் ரோமர்களும் குழந்தைப் பேற்றுக்கும் பெண்ணின் மார்புகளுக்கும் தொடர் பிருப்பதாக எண்ணினர். அதனால் அவ்வுறுப்பு மிகைப்படுத்தப் பெற்றது. தெய்வம் செழிப்பையும் குழந்தை பெறும் சக்தியையும் பெண்களுக்கு அளிக்க, அந்த சக்தி மார்பில் இருப்பதாக மக்கள் நம்பியதால் இவ்வுறுப்பு மிகைப்படுத்தப்பட்டது10. என்னும் நா.வானமாமலை அவர்களின் கூற்று தாய்மையின் அடையாளமாக, அதனினும் மேலாக உலகத் தோற்று விப்பின் அடையாளமாகப் பெண்ணும் அவளின் பெண்மையும் விளங்கின என்னும் கருத்தாக்கத்தை முன் வைக்கின்றது.

தாய்வழிச் சமூகத்தின் தோற்றுவாயைத் தன்னகத் தேயும் கொண்டுள்ள தமிழ்ச் சான்றோரும் மேற்கருத்தைக் குறிக்கத் தவறவில்லை. மகளிர் மார்பு வீற்று தெய் வத்தைத் தன்னகத்தே கொண்டது எனத் தம் கருத்தை முன் மொழிகின்றனர். (ஐங்-363,அகம்-161,177,பொருநர்-35)

“பொரிப்பூம் புன்கி னெழில்தகை யண்முறி
சுணங்கணி வனமுலை அணங்கு கொளத்திமிரி”
(நற்-9:5-6) என்ற அடிகள் மார்பின்கண் உறையும் வீற்று தெய்வம் சிறப்போடு விளங்கும்படி புன்கினது தளிரைப் பெண்கள் தம் மார்பில் பூசிய செய்தியைக் கூறுகிறது. இங்கு வீற்று தெய்வம் அணங்கெனவே சுட்டப்படுகிறது.

மேலும் இயற்கை வளம் சூழ்ந்த மலைகள் (அகம்-22,72,158,198,272,338,372,378,பெரும்பாண்-493,புறம்52,151, பரிபா-9, நற்-165), கடற்றுறை (ஐங்-174, அகம்-207,240, நற்-155, குறுந்-164, திணைமாலை-47), நீராடுந்துறை (ஐங்-53) ஊருணித்துறை (ஐங்-28) போன்ற நீர்நிலைகளிலும், வெற்றியின் அடையாளமாக விளங்கும் காவற்கடம்பு (பதிற்று-88) யாழ் (பொருநர்-19-20) தந்தக் கட்டில் (பதிற்று-79) யானையின் மத்தகம் (குறுந்-308), சுரவின் கொம்பு (பட்டினப்-86-88) இல்லம் (மதுரைக்-164-166,578) வாயில் நிலை (மதுரை-352-353) போன்றவிடங்களிலெல்லாம் அணங்குகள் விரும்பியுறை வதாக இலக்கியச் சான்றுகள் எடுத்துரைக்கின்றன.

முடிவாக

* தமிழ்ச்செம்மொழி இலக்கியங்களின்கண் காணப் பெறும் தொன்மக் கருத்தாக்கங்களில் முற்றிலும் உணர்வு சார்ந்த நிலையில் படைக்கப் பெற்றவையே அணங்குகள்.
* அச்சவுணர்வைத் தூண்டித் தன்வயப்படுத்தும் ஆற்றல் கொண்டவை அணங்கு என்னும் பெயர் கொண்டு அழைக்கப்பெற்றன.
* அணங்குகள் உருவமற்ற அருவப் படைப்பாகவே கருதப்பெற்றன. ஆனால் வேண்டுங்காலத்து வேண்டுரு கொள்ளும் ஆற்றல் கொண்டவை எனவும் கருதினர்.
* அச்சம், தெய்வம், தீண்டி வருத்தும் தேவமகளிர், மானுடப் பெண்டிர், அருந்ததி, கணவன், பேய் போன்ற பல்வேறு கருத்தமைவுகளில் அணங்கு கையாளப்பெற்றுள்ளது.
* அணங்குகள் இயற்கையிலுள்ள மலைகள், வனங்கள், நீர்நிலைகள், கடம்பு, யாழ், சுரவு, யானை மத்தகம், இல், பெண்களின் மார்பு போன்ற செழிப்பான இடங்களில் உறைவதாகக் கருதினர்.
* தமிழிலக்கியங்கள் புலனாக்கும் அணங்குகள் குறித்து விரிவான ஆய்வினை மேற்கொள்வது, தமிழ்ப் பண் பாட்டின் புரியப்படாத பகுதிகளைப்பற்றி ஓரள வேனும் அறிந்துகொள்ளப் பேருதவியாக இருக்கும்.

அடிக்குறிப்புகள்

1. கதிரைவேற்பிள்ளை.நா., தமிழ்மொழி அகராதி. ப.46.
2. தொல்காப்பியம் (மெய்ப்பாட்டியல்), பேராசிரியர் உரை.
3. தனஞ்செயன்.ஆ., சங்க இலக்கியமும் பண்பாட்டுச் சூழலியலும், ப.157.
4. மறைமலை.சி.இ., இலக்கியத் திறனாய்வு-ஓர் அறிமுகம், ப.30.
5. மதுரைக்-632 பதிற்று-44, 71, நற்-47, 165, பரிபா-8, 9, பழமொழி-331, அகம்-22, 72, 99, 158, 198, 272, 319, 338, 372, 378, புறம்-52, 151, 247, 392, பெரும்பாண்-493- 494, ஆசா-71, குறிஞ்.பா-174, தொல்(பொருள்) 1202, கலி-49, 71.
6. கதிரைவேற்பிள்ளை.நா., தமிழ்மொழி அகராதி. ப.46.
7. முருகு-289, புறம்-299, கலி-52,நற்-47,386.
8. முனைவர் இளமுருகன்,மு., தமிழ்ப் பெருங்காப்பியங் களில் சங்க இலக்கியத்தின் செல்வாக்கு, ப.243.
9. அகம்-366, மதுரை-446, பரிபா-12.
10. வானமாமலை,நா., முருக வணக்கம் இருபதாண்டு களின் இணைப்பே, பக்.457-471.

Pin It