நாட்டார் வழக்காற்றியல் ஆராய்ச்சியாளர், நாகை மாவட்டத்து மீனவர் சமூகத்து இனவரை வியல் உள்ளிட்ட ஒன்பது நூல்களது ஆசிரியர் அ.இருதய ராசு சே.ச.. இவர் கள ஆய்வு செய்து தஞ்சை மாவட்டத்து இரு கிராமங்களில் நாட்டுப் புற நம்பிக்கைகள் கிறிஸ்தவரிடமும் வேரூன்றி யுள்ளதை நிறுவியுள்ளார்.  கல்லறைகளில் புதைக்கப் பட்டவர்கள் மக்களுள் சாமானியர்கள், மதிப்பில் உயர்ந்து எவ்வாறு விதைக்கப்பட்டுள்ளார்கள் என்று எண்ணற்ற ஆதாரங்களுடன் வெளிக்கொண்டு வந்துள்ள இரண்டு நெடுங்கட்டுரைகளது ஆக்கமே மேலேகுறித்த நூல். 

iruthayaraj_450பேராசிரியர் ஆ.சிவசுப்பிர மணியம் இவ்ஆய்வுக்கு அடிப்படைத் தூண்டு கோலானவர்; இதுபோன்ற நூல் தமிழில் வெளி வருவது முதன்முறை! சென்றுபழகிய தடம் ஏதும் இல்லாத நூல் இது! திருச்சி இலுப்பூர் வெள்ளை மரியம்மாள் கல்லறைக்கோயில் போன்ற இடங்கள் ஆய்வுக்குரியவை எனத் தூண்டுதல் தருகிற நூல் இது!

‘வட்டாரப் புனிதைகள் என்று வெகுசன மக்கள் நம்புகிற பெண்மணியும் சிறுமியும் ஆகிய இருவர்.  தஞ்சைத் தரணியில் தச்சங் குறிச்சி சவேரியார்ப் பட்டிக் கிராமம்.  அங்குள்ள ஒருவேப்ப மரத்தடியில் புதைக்கப்பட்டவர் சின்னம்மாயி; நெடும்பலம் கள்ளிக்குடி கிராமம்; திருத்துறைப்பூண்டிப் பாதை ஓரம் புதைக்கப்பட்ட சிறுமி மரித்தியம்மாள்.  இவர்கள் வெகுசனமக்களது இதய தெய்வங்களாக எவ்வாறு ஆக்கப்படுகிறார்கள் என்பதே ஆய்வு.

இருவரது புதைக்கப்பட்ட கல்லறைகளும் பல்லாயிரம் மக்கள் ஆண்டுதோறும் நினைவேந்தல் விழா எடுக்க வந்துபோகிற சிறிய கோயில்களாக எவ்வாறு நிறுவனவடிவம் பெற்றன? எவ்வாறு படிமலர்ச்சியாக வளர்ச்சியுற்றன? என்பதை விரிவாக ஆய்வு நூல் விளக்குகிறது.  நாட்டுப்புறமக்கள் தங்களுக்கு உதவி புரிந்தோர் இறந்த பிறகும் கனவில் தோன்றி உறவுத் தொடர்பு கொள்ள உதவி செய்வார்கள்; நோய்நொடி தீர்ப்பார்கள்; பயிர்வளம், கால்நடை பராமரிப்பு போன்ற நிலத்துடன் பிணைக்கப் பட்ட வாழ்வில் இடர்ப்பாடான நேரங்களில் உதவி நாடினால் தேடி வந்து நன்மை செய்வார்கள் என்கிற நம்பிக்கைகள் நிறைவேறியதற்கான ஆதாரங்களைப் பயனாளிகளை நேரில் கண்டு, பேசி மெய்ம்மைத் தரவுகளை ஆய்வு செய்து பதிவு செய்துள்ள கட்டுரைப் பனுவல் ஆக்கம் பெற்றுள்ளது.

90 வயதுவரை வாழ்ந்த சின்னம்மாயிக்கு மகப் பேறு இல்லை! பஞ்ச காலத்தில் 40 மூட்டை அளவு சேமிக்க இடமுள்ள வீட்டுக் குதிரில் இருந்து சாதி மதம் பாராமல் நெல் உள்ள வரை தானதர்மம் செய்து விடுகிறார்.  கணவன் சின்னப்பன் இதை அறியவந்து எப்படித் தானியம் விரைவில் தீர்ந்தது? என்று கேட்கிறார்.  தானியம் வாங்க வந்த வியாபாரிகள் வெறுமனே திரும்பியபோது அவர்களைச் சந்தித்த கணவன் சின்னப்பன் விஷயம் அறிகிறார்.  கண வனுக்குத் தெரியாமல் தவறு செய்துவிட்டதாக மனஉளைச்சலால் கண்ணீர்விட்டு அழுது மன்னிப்புக் கேட்கிறார்.  அன்புக் கணவர் சின்னப்பன் முடிவு செய்கிற முழுஉரிமை உனக்கும் உண்டு என்று ஆறுதல் கூறுகிறார். 

இந்தச் சின்னம்மாயியால் பயன் பெற்ற ஏழை மக்கள் நன்றிமறவாத பண்பினால் இறந்தும் சின்னம்மாயியைத் தங்கள் உள்ளத்துள் தெய்வமாகப் போற்றுவதன் செயல் வடிவமே கோயில் கட்டும் செயல்;பக்திவழிபாட்டுச் சடங்காகி இந்நன்றி உருக்கொள்கிறது.  கோயில் நிறுவனமாகிப் பக்தி முயற்சிகள் காணிக்கைகள் பல வடிவில் பெருகச் செய்கிறது.  நிறுவனத்திருச்சபை கிறிஸ்தவப் பங்கு சாமியார்கள் திருப்பலி வழிபாடு நடத்துவது என்ற பெயரில் இணைகிறார்கள்.  நிர்வாகம் - நிதி ஆளுகைப் பிரச்சினை - வாங்கப்படும் சொத்துரிமைப் பிரச்சினை எனப் பலப்பல தொடருகின்றன.  எதையும் மூடி மறைக்காமல் உண்மைத் தரவுகளை - ஆசிரியர் கிறித்தவ மதகுரு என்றாலும் - ஆய்வு நேர்மையுடன் பதிவு செய்துள்ளார்.

மரித்தியம்மாள் சிறுமி கல்லறையும் இது போலவே சாதி-மதம்-இனம் கடந்த மக்கள் திரளினரைச் சிந்திக்க வைக்கிறது.  மனிதசக்திக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள் வெகுசனமக்கள் நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தருகின்றன.  பணவரத்து குவிகிறபோது மரித்தி யம்மா அல்ல மாரியம்மா என்று இந்துக்கள் வழக்குத் தொடுத்து நீதிமன்றத்தீர்ப்பு முறியடிக்கிறது.  இரு பெண்மணிகளும் இன்று வட்டாரக் குலசாமிகளாகியுள்ளனர்.

முடிவுகள்:

தமிழர்களிடம் வரலாற்றறிவு, ஆவணமாக்கும் உணர்வு குறைவு.  கிறித்தவ நிறுவனத் திருச்சபை குருமார்கள் ஆவணப்படுத்தும் அரிய கலையறிவை மேலைநாட்டாரிடமிருந்து தொடர்ந்து கற்று, பின்பற்றுவதில் பின்தங்கிப் போயினர்.  அதிலும் தங்கள் சமகால வரலாற்று ஆவணப்படுத்துதலில் ஈடுபாடும், ஆர்வமும் குறைவு.  அன்றாடப் பணித்தள மதக்கடமைகளை நிறைவேற்றி, சமயச்சடங்கு சம்பிரதாயப் பதிவேட்டுப் பதிவுகளைச் செய்து முடித்தாலே போதும் என்கிற பொது மனநிலைப் புலப்பாட்டைக் கத்தோலிக்கப் பங்குப் பணியாளரிடம் பரவலாக இன்றும் காணமுடிகிறது.  தனக்கான அன்றாடக் கடமைகளைச் செய்து கொண்டே இவ்ஆய்வைச் செய்துள்ள நூலாசிரியரது கடும் உழைப்பு போற்றத்தக்கது.

இவ்வாறான சூழமைவில் சேசுசபை சமயகுரு அ.இருதயராசுவின் அரிதான இக்கல்லறை பக்தி வணக்கம் பற்றிய களஆய்வின் இரண்டு ஆண்டுகாலக் கனியே இந்தக் கட்டுரைப் படைப்பு.  நாட்டார் களஆய்வு நெறிமுறைகளை நுட்பமாகக் கையாண்டு செய்யப்பட்ட முதல்தரமான பதிவேடு.  “அதிகார மையங்களுக்கு அப்பாற்பட்ட ஆன்மிக உணர்வுகளே (அதிலும் குறிப்பாக எளிய மக்களின்-பெண்களின்) இந்த நாட்டில் சமயத்தையும் சமயச்சார்பின்மை யையும் ஒருங்கே பாதுகாத்துத் தருகின்றன”, என் கிறார் தொ. பரமசிவம்.

நேரில்பெற்ற தகவல்களைச் சாதி-மதவேறு பாடு - பாகுபாடு நோக்கம் அறவே இல்லாமல், நடு நிலைக் கண்ணோட்டத்தில் தரவுகளைச் சேகரித்துச் சார்பற்ற விளக்கங்களை((objective interpretations) எழுதியுள்ளார் திரு.அ.இருதயராஜ்.

நிறுவனமதக் கடவுளர்கள் மீதான கோட்பாட்டு ரீதிப் பற்றுறுதியைவிட, தங்களது அன்றாட வாழ்வின் துன்பதுயரங்களில் இருந்து விடுபடத் துணையாக நிற்கும் வாழ்ந்து மறைந்த மகராசிகளிடம் நம்பிக்கை கொண்டு விடியலையும் விடுதலையையும் தேடிக் கொள்கிற வெகுசன மக்களது ஆன்மிகம், இவ்வுலக வாழ்க்கைப் போராட்டத்திற்கு மேலை ஐரோப்பிய இறக்குமதி இறையனுபவ இறையியல்கள் எதிர் பார்த்த பதிலிறுப்புகளாக அமையவில்லை என்பதைக் காண்கின்றனர்.

இந்துக்களாக இருந்து மதம் மாறிக் கிறிஸ்தவர்களான பிறகு, முன்னோர்கள் மதவழிபாட்டில் கடைப்பிடித்த சடங்கு மாதிரிகளைக் கடைப்பிடிக் கிறார்கள் சாமானியர்கள்.  அவை மூடநம்பிக்கை களா என்கிற பகுத்தறிவுக் கேள்விகளுக்குள் நுழைய அவர்களுக்கு நேரமில்லை.  அதனால் செயல்பாட்டுச் சடங்காக அங்கப் பிரதிட்டை செய்தல், கோழி, ஆடு அறுத்துக் குருதிபலி செய்தல், கால்நோகப் பாத யாத்திரை செய்தல், மொட்டை அடித்து நேர்ச்சை நிறைவேற்றுதல் முதலியவற்றைச் செய்கிறார்கள்.

உடல் வலி, நோய் நோக்காடுகளால் துயருற்று, மருத்துவரால் கைவிடப்பட்டும், மருத்துவத்திற்குப் பலஇலட்சம் செலவிடப்பணம் இல்லாமலும் வருந்து வோர்கள் இம்மாதிரி இயற்கைச்சக்திகளால் வசப் படுத்தப்பட்டுப் பரிகாரம் தேடியும், பரிகாரம் செய்தும் குணமடைகின்றனர் என்பதை ஆய்வு புலப்படுத்துகிறது.

கனவுகள் வெகுசனமக்களது விடுதலைக்கான தீர்வுகளைக் கண்டறிய மனப்பாதுகாப்புக் கவச ஊடகங்களாகி, அவர்களது நம்பிக்கைகளது நிறை வேற்றச் சான்றாதாரங்களாகின்றன.  கல்லறைப் பக்தி வணக்கம் வெகுசனமக்களது காணிக்கை குவிந்து, பணபலம் செழிக்கும் இடமாகிறபோது நிறுவனக்கிறிஸ்தவ அமைப்புகள் தங்கள் வசமாக்க முனைகின்றன.  அதனால் உடைமை உரிமை - நிதி ஆதார உரிமைசார்ந்த பிரச்சினைகள் தொடர்ந்து நீடிக்கின்றன.  மரித்தியம்மாவா? மாரியம்மாவா? என்று நீதிமன்றம் வரை சென்று தீர்வு கண்ட நிகழ்வுகள் இதற்கு வேறொரு சான்றாதார மாகிறது.  நாட்டார் வழக்காற்றியலில் அரிதாக நிகழ்த்தப்பட்ட மறு வாசிப்புக்குரிய அரிதான நூல் இது!

வெகுசனக் கத்தோலிக்கத்தில் கல்லறைகள்

ஆசிரியர்: அ.இருதயராஜ்,சே.ச.

வெளியீடு: நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்,

பாளையங்கோட்டை - 627002

விலை ரூ.90

Pin It