தஸ்தயேவ்ஸ்கி, உலகின் மிகச் சிறந்த படைப் பாளர்களுள் ஒருவர்.  1821ஆம் ஆண்டு ருஷ்யாவில் பிறந்த இவர், குற்றமும் தண்டனையும், அசடன், கரமசோவ் சகோதரர்கள், மரணவீட்டின் குறிப்புகள், சூதாடி போன்ற படைப்புகள் மூலம் உலக அளவில் மிக்க புகழினைப் பெற்றார்.  எழுத்தாளராகவும் பத்திரிகை ஆசிரியராகவும் விளங்கிய இவர், தம் காலத்தில் வழக்கில் இருந்த பல்வேறு பண்பாட்டு விழுமியங்களையும், அறக் கோட்பாடுகளையும் தம் படைப்பின்வழிக் கேள்விக்குட்படுத்தினார்.  தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளை மதிப்பீடு செய்யும் ஒருவன், அவரது படைப்புகள் ஒரே தன்மையுடைய தாகவோ, ஒரு குறிப்பிட்ட கோட் பாட்டினைச் சார்ந்திருப்பதாகவோ அமைவதில்லை என்பதில் மாற்றுக் கருத்து கொண்டிருக்கமாட்டான்.

தமது படைப்புகள் மிக நன்றாகவோ, அல்லது மிக மோசமாகவோ இருந்தாலும் கவலை இல்லை. அவை மிகச் சாதாரணமானவையாக இருக்கக் கூடாது என்னும் எண்ணத்தைக் கொண்டிருந்த தஸ்தயேவ்ஸ்கி, 19ஆம் நூற்றாண்டில் வழக்கில் இருந்த பல புதிய கோட்பாடுகளைத் தம் படைப்பினுள் புகுத்தி ஆக்கபூர்வமாகப் புனைவுகளைக் கட்டமைப்பதில் மிகுந்த கவனத்தோடு இருந்தார்.  19ஆம் நூற்றாண்டில் தோற்றம் பெற்று 20ஆம் நூற்றாண்டில் பிரபலம் அடைந்த இருத்தலியல் கோட்பாட்டின் தாக்கம், தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளில் எவ்வாறு செல்வாக்குச் செலுத்தியது என்பதையும், இருத்தலியல் கோட்பாட்டிற்கு ஒரு முன்னோடியாகத் தஸ்தயேவ்ஸ்கி எங்ஙனம் விளங் கினார் என்பதையும் ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பொதுவாக இருத்தலியலாளர்கள், இலக்கிய வடிவத்தில்தான் வாழ்க்கை யின் கடுமையான நெருக்கடிகளை வெற்றிகரமாகச் சித்திரிக்க முடியும் என நம்பியமையாலும், தங்களின் தத்துவக் கருத்துகள் எல்லோரையும் சென்றடைய இலக்கியமே சிறந்த வழி எனக் கருதியதாலுமே புனை வாக்கத்தில் விரும்பி ஈடுபட்டனர். சிறுகதை, நாவல், நாடகம் போன்ற வற்றுடன் கட்டுரைகளின் மூலமும் தங்களின் கோட் பாட்டுச் சார்பை வெளிப்படுத்தினர்.  நீட்சே, சர்த்தர், காம்யு போன்றோர் தங்களின் கோட் பாடுகளைப் புனைவுகளின் வழியேதான் மக்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர்.

ஃபிரட்ரிக் நீட்சேவின் ‘ஜாரதுஷ்டிரா பேசு கிறான்’, (Thus Spake Zarathustra) ‘மகிழ்ச்சி நிரம்பிய ஞானம் (Joyful Wisdom), ‘சக்தி சாதனை’ (Will to Power), ‘நன்மைக்கும் தீமைக்கும் அப்பால்’ (Beyond Good and Evil) போன்ற படைப்புகளிலும், சார்த்தரின் ‘இருப்பும் இன்மையும்’ (Being and Nothingness), ‘இருத்தலியமும் மானுடமும்’ (Existentialism and Humanism), ‘மீளமுடியுமா’ (No Exit), மற்றும் ‘ஈக்கள்’ (The Flies) போன்ற ஆக்கங்களிலும், ஆல்பெர் காம்யுவின் அந்நியன் (The Stranger), கொள்ளைநோய் (Plague), வீழ்ச்சி (The Fall) போன்ற புதினங்களிலும் இந்த இருத்தலியல் கோட்பாடு நன்கு விளக்கப்பட்டுள்ளது.

இவர்களைப் போலவே, தஸ்தயேவ்ஸ்கியும் ‘இருத்தலியல்’ கோட்பாட்டினைத் தம் படைப்பு களின் வழி வெளிப்படுத்தினார்.  தஸ்தயேவ்ஸ்கியின் மத்திம காலப் படைப்புகளான ‘கீழ் உலகக் குறிப்புகள்’ (Notes from underground), ‘குற்றமும் தண்டனையும்’ (Crime and Punishment), ‘பேய்கள்’ (Devils) போன்றவற்றில் இக்கோட்பாட்டின் செல் வாக்கைக் காண முடிகிறது.  சுதந்திரம், முடிவெடுத்தல், பொறுப்புணர்வு, மரணம், தற்கொலை, துன்பம், கொடுந்துயரம், விரக்தி மனப்பான்மை, இலட்சிய மற்றதன்மை, அந்நியமாதல், பாலுணர்வு, குற்றவுணர்வு, வெறுமை, அபத்தம், நம்பிக்கையின்மை போன்ற இருத்தலியலின் உட்கூறுகள் தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளில் மிகுந்துள்ளன.

இருத்தலியலாளர்களால் வரையறுக்கப்படும் தனிமனித சுதந்திரம், கடவுள்மறுப்பு, நடைமுறைச் சமூகப் புறக்கணிப்பு, எல்லைக்கோட்டு நிலை, மாமனிதன் பற்றிய கருத்தமைவு போன்ற சாரங்களைத் தம் படைப்புகளில் தஸ்தயேவ்ஸ்கியும் எடுத்தாளுகின்றார்.  தஸ்தயேவ்ஸ்கியைப் போலவே, அவரின் சமகால எழுத்தாளர்களான துர்கனேவ், டால்ஸ்டாய் போன்றோரின் படைப்புகளிலும் இக்கோட்பாட்டின் மேலோட்டமான தாக்கம் காணப் பெற்றாலும், இவர்களைக் காட்டிலும் தஸ்தயேவ்ஸ்கியே அதிகமான ஆழத்துடன் தம் படைப்புகளில் இருத்தலியத்தைப் பயன்படுத்தியுள்ளார் என்பதால், இவரை இருத்தலியக் கோட்பாட்டின் முன்னோடி எனக் கூறுவது மிகவும் பொருந்துவதாகும்.

இருத்தலியத் தாக்கம்

“கீழ் உலகக் குறிப்புகள்” என்னும் நாவல், தஸ்தயேவ்ஸ்கியின் இருத்தலியக் கோட்பாட்டிற்கு ஒரு வலுவான சான்றாகும்.  இருத்தலியலாளர்களால் வரையறுக்கப்படும் பல்வேறு கருத்தியல் சிந்தனைகள், இப்படைப்பில் மேலோங்கிக் காணப்படுகின்றன எனத் தஸ்தயேவ்ஸ்கியை மதிப்பீடு செய்த அறிஞர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.  இப்படைப்பின் கதைத் தலைவன் ஊர் பேர் அறியாதவன், தனக்கென இவன் ஓர் உலகத்தை உருவாக்கிக்கொண்டு, நண்பர்கள் இல்லாமல் வாழ்கிறான்.  சமூகத்தின் சராசரியான வரையறைகளைப் பின்பற்றாததோடு, அவற்றை இவன் ஏளனமும் செய்கிறான்.  தன்னையே சுய மதிப்பீடு செய்துகொள்ளும் இவன், தன் நேர்மை குறித்தும், தன் சுய முரண்பாடுகள் குறித்தும் வினாக்கள் எழுப்பி, அவற்றுக்கு விடை காணும் முயற்சியிலும் இறங்குகின்றான்.

தனியனாக இவ்வுலகில் தூக்கியெறியப்பட்ட வனாகத் தன்னைக் கருதும் கதைத் தலைவன்,

உலக மக்களின் நாகரிக வளர்ச்சியின்பால் தனது கண்ணோட்டத்தினைச் செலுத்துகின்றான்.  நாகரி கத்தின் ஒரே நன்மை, அது தனிமனிதனுக்குப் பல கிளுகிளுப்புகளைத் தந்துள்ளதே என அவன் கூறு கின்றான்.  ரத்தம் சிந்துதலை மனிதர்கள் வெறுத் தாலும், முன்பைக் காட்டிலும் தற்போதுதான் மிகுதியாக ரத்தம் சிந்தப்படுகிறது என்பதை மானுடர் உணர்ந்து கொள்ளவில்லை.  இதை மனிதன் உணர்ந்தானாயின், வாழ்க்கை அபத்த மானது என்றும், மரணம் ஒன்றே நிலையானது என்றும் அவன் உறுதிப்படுத்திக்கொண்டு விடுவான் என்கிறார் தஸ்தயேவ்ஸ்கி.  மேலும், அவர், அழிவின் மீது மனிதன் நீங்காத காதல் கொண்டிருப்பதால் தான், பிற மனிதர்களை அவன் ‘பழி தீர்த்துக் கொள்கிறான்’ என்றும் வாதிடுகிறார்.

எல்லாமே இயற்கையின் பாற்பட்டதே; இயற் கையின் நீதிதான் மனிதனது நடத்தையை நிர்ணயிக் கின்றது.  பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட மனித வாழ்க்கை அடிப்படையில் வெறுமையானது என்னும் இருத்தலியல் தத்துவத்தின் சாரத்தை, இக்கதையின் தலைவன் நன்கு புரிந்திருக்கின்றான்.

இயற்கை உன்னுடைய அனுமதியைக் கேட்பதில்லை.  நீ அதன் சட்டங்களை விரும்புகிறாயா, இல்லையா என்று உன் விருப்பத்தை அறிய முற்படுவதில்லை.  அது எப்படி இருக்கிறதோ, அப்படியே நீ அதை ஒப்புக்கொண்டாக வேண்டும்.  அதன் தொடர்ச்சியாக நேரும் விளைவு களையும், நீ அப்படியேதான் ஏற்றாக வேண்டும்.”

(Notes from Underground, P.13)

மேற்காட்டப்பட்ட கூற்றிலிருந்து, இயற் கையின் ஆற்றலால் மனிதன் இவ்வுலகில் தூக்கி எறியப்பட்டுள்ளான் என்பதும், உலக நிகழ்வுகள் தற்காலிகமானவை என்பதும், இயற்கையின் நீதிகளை மனிதனால் திருத்தம் செய்ய முடியாது என்பதும் தெளிவுபடுத்தப்படுகின்றன.  இவை இருத்தலியக் கோட்பாட்டுச் சிந்தனைகளாகத் தஸ்தயேவ்ஸ்கியால் உள்வாங்கப்பட்டு வெளிப் படுத்தப்பட்டுள்ளன என்பது அறியத்தக்கதாகும்.

மனிதனைக் குறித்துச் சொற்பொருள் விளக்கம் கூற வேண்டுமானால், இரண்டு கால்கள் கொண்ட நன்றியற்ற ஒரு உயிர் வகை.  அதுமட்டுமல்ல.  அவனுடைய முக்கிய குறைபாடு, நல்ல நடத்தை இல்லா திருத்தல்.  இக்குறை, பழைய காலத்தி லிருந்து தற்போது வரை மனித விதியாக உள்ளது.  நல்ல நடத்தையிலுள்ள குறை பாடு, நல்ல அறிவின் குறைபாடாக மாறுகிறது.”

(Notes from Underground, P.29)

மேலே கூறப்பட்டுள்ள விளக்கத்தின் அடிப் படையிலேயே, மனித இயல்புகளைத் தஸ்தயேவ்ஸ்கி வரையறுக்கிறார்.  இவ்வரையறைகள், இருத்தலியக் கோட்பாட்டின் வரையறைகளோடு ஒத்திருப்பது, இங்குச் சிறப்பாகக் கருதத்தக்கதாகும்.

எல்லைக்கோட்டு நிலை

இருத்தலியக் கோட்பாட்டு வரையறைகளில் ஒன்று, எல்லைக்கோட்டு நிலையாகும்.  இவ்வுலகில் மரணம் ஒன்றே நிலையானது என்றும், இம்மரணம் ஏற்படும் சமயத்தில்தான் மனிதன் தனது இருப்பினை முழுமையாக உணர்ந்துகொள்ள முடியும் என்றும் இருத்தலியலாளர்கள் கூறுகின்றனர்.  எந்த நேரத்திலும் ஏற்படக்கூடிய இந்த மரணத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

தஸ்தயேவ்ஸ்கி ஒருபடி மேலே சென்று, மரணத்திற்கான கால எல்லையையும் வரையறுக் கிறார்.  இதன்படி நாற்பது ஆண்டுகளுக்கு மேல் மனிதன் இவ்வுலகில் வாழ்வது அபத்தம் என அவர் கூறுகின்றார்.

40 வருடங்களுக்கு மேல் வாழ்தல் என்பது கேவலமான, மிகவும் சாதாரணமான மற்றும் தீய நெறியுள்ளது.  யார் 40 வயதுக்குமேல் வாழ்கிறார்கள் என்பதை உண்மையாகக் கூறுங்கள், நான் கூறுகிறேன் முட்டாள்களும் போக்கிரிகளும் தான் அவ்வாறு வாழ்கிறார்கள்

(Notes from Underground, P.5)

உலகிலுள்ள வரையறுக்கப்பட்ட நிகழ்வுகள், கதைத்தலைவனுக்கு மிகவும் அபத்தமானதாய்த் தோன்றுகின்றன.  தான் படித்த பள்ளிக்கூடம் கடுங்காவல் மிக்க சிறை என்றும், தான் புரியும் வேலை வலுக்கட்டாயமாகத் தன்மீது சுமத்தப் பட்டுள்ள பாரம் என்றும் கருதி, அவற்றையெல்லாம் அவன் வெறுக்கின்றான்.  இவை யாவும் இருத்தலியக் கோட்பாட்டுடன் ஒத்துள்ளமை வெளிப்படை யாகும்.

மாமனிதநிலை

இருத்தலியக் கோட்பாட்டின் கூறுகளில் ஒன்று மாமனிதநிலையை அடைதல் சார்ந்ததாகும். 

ஜெர்மானிய இருத்தலியலாளரான நீட்சேவால் முன் மொழியப்பட்ட இக்கூறு, தஸ்தயேவ்ஸ்கி யாலும் எடுத்தாளப்படுகின்றது.  இக்கூற்றினைத் தஸ்தயேவ்ஸ்கி யிடமிருந்து நீட்சே கடன் வாங்கி யிருக்கக்கூடும் என்னும் முடிவுக்கு வருவதும் ஏற்புடையதாகும்.

மாமனித நிலையென்பது, மனிதப் போராட்டத்தின் மூலம் தீர்மானிக்கக்கூடிய ஒன்றாகும்.  தனிமனிதனின் வீரியமாக, அதீத மனிதனை நீட்சே கருதுகின்றார்.  மனிதனுக்குக் குரங்கு எப்படியோ, அதே போல் தான் மாமனிதனுக்கு மனிதனும் என்கிறார்.

டார்வினியத்தைத் தமது தத்துவத்திற்கு அடிப் படையாக ஏற்றுக்கொள்ளும் நீட்சே, டார்வினின் கூற்றுப்படி வாழ்க்கைப் போராட்டத்தின் அடிப் படையில்தான் உயிரினங்களின் வளர்ச்சி நிகழ்கிறது என்றால், அந்தப் போராட்டத்தில் அடையும் வெற்றிக்கு வலிமையே அடிப்படைக் காரணமாகும் எனக் கூறிப் பரிணாம வளர்ச்சியின் இடைநிலையான மனித இனத்திற்குப் பிறகு மாமனித இனம் தோன்றும் என்றும், அந்த இனம் தனது சித்தாந்தப்படி வலிமையினைத் தர்மமென்றும் பலவீனத்தை அதர்மமென்றும் கொண்டு வாழும் என்றும் குறிப்பிடுகிறார்.

மனிதர்களை ‘அதீத மனிதர்’ மற்றும் ‘மந்தை மனிதர்’ எனப் பிரிக்கும் நீட்சே, அற ஒழுக்கத்தில், ‘மரபுவழி அல்லது அடிமைகளின் ஒழுக்கம் மற்றும் மேம்பட்ட மக்களின் ஒழுக்கம்’ என்னும் இரண்டு நிலைகளைக் குறிப்பிடுகின்றார்.

மரபுவழி ஒழுக்கத்தில் தனிமனிதனுக்குச் செயல் உரிமை இல்லை.  சமூக நீதிகளை அவன் அப்படியே ஏற்றுக்கொள்கிறான்.  சமூகத்தைப் புறக்கணிக்கும் போது, ‘குற்ற உணர்வு அல்லது தண்டனை’ பற்றிய பயம் மனிதனுக்கு ஏற்படுகின்றது.  இதனையே மனிதர்கள் ‘மனசாட்சி’ எனக் கூறுகின்றனர்.  வலியோர் நலிந்தோரைத் தம் பிடியில் வைத்துக் கொண்டிருப்பதற்காகப் பயன்படும் குணங்களை நற்பண்புகள் என்றும், அதற்கு மாறானவற்றைத் தீமைகள் எனவும் நிர்ணயித்தனர்.  அன்பு, அருள், இரக்கம் முதலிய பண்புகளைப் போராட்டத்தில் பணிந்தோரின் பண்புகளாகவும், மறப்பண்புகளை வெற்றியடைந்தோரின் பண்புகளாகவும் நீட்சே வரையறுக்கின்றார்.

அலெக்சாண்டர், நெப்போலியன், சீஸர் போன்றவர்களை விரும்பிய நீட்சே, தனிமனிதன் உன்னதமானவனாகவும் வலிமைமிக்கவனாகவும் இருப்பதிலேயே அவனின் ‘இருத்தல்’ இருப்பதாகக் கருதுகிறார்.  நீட்சேக்கு முன்னரே தஸ்தயேவ்ஸ்கி, இத்தகைய சிந்தனைகளைத் தம் படைப்பில் எடுத் தாண்டுள்ளார்.  அவரின் நாவலான ‘குற்றமும் தண்டனையும்’ (Crime and Punishment) என்னும் படைப்பில், பெருமளவில் இச்சிந்தனைகள் எடுத் தாளப்பட்டுள்ளன.  மனிதர்களைச் சாதாரண மனிதர்கள் என்றும், அசாதாரண மனிதர்கள் என்றும் இரு பிரிவுகளாகப் பாகுபடுத்தும் தஸ்தயேவ்ஸ்கி, அவர்களின் இயல்புகளையும் தம் படைப்பில் எடுத்தாளுகின்றார்.

சாதாரண மனிதன் என்பவன், சட்ட விதி களுக்குக் கட்டுப்பட்டுச் சராசரியான வாழ்க் கையினை மேற்கொள்பவனாவான்.  இனவிருத்தி செய்வது இவனின் முக்கியமான பணிகளில் ஒன்று.  அசாதாரண மனிதன் என்பவன், சட்டங்களை ஏற்றுக்கொள்பவனாக இல்லாமல் அச்சட்டங்களை உருவாக்குபவனாக இருப்பவனாவான்.  நடை முறையில் உள்ள சட்ட வழக்கங்களுக்கெல்லாம் அவன் அப்பாற்பட்டவன்.  எனவே, நடைமுறைச் சட்டங்களால் அவனைக் கட்டுப்படுத்த முடியாது.  தமது படைப்பான ‘குற்றமும் தண்டனையும்’ என்னும் நாவலின் தலைவனான ரஸ்கோல்னி கோவிற்கு, அசாதாரண மனிதனுக்குரிய பண்பினைத் தஸ்தயேவ்ஸ்கி கொடுக்கின்றார்.

எந்த ஒரு மனிதன் மிகுந்த பலசாலியாகவும், துணிச்சல் உள்ளவனாகவும், அடக்கி ஆளும் வல்லமை படைத்தவனாகவும் இருக்கிறானோ, அவன்தான் இவர் களுக்குத் தலைவனாகவும் இருப்பான்.  எவன் ஒருவன் நிறைய விஷயங்களை நசுக்கி மிதித்துப் போடுகிறானோ, தான் சொல்வது தான் சரியானது என்று மற்ற விஷயங்களைத் துவம்சம் செய்து தனது கருத்துகளை நிலை நிறுத்துகிறானோ, அவனே இவர்களுக்கான சட்டங்களை வகுப்பவனாக இருப்பான்.  எவன் ஒருவன் அடாவடித்தனமாக அக்கிரமக்காரனாகச் செயல்படுகிறானோ, அவனே இவர்களை வழிநடத்திச் செல்பவனாக இருப்பான்.  அவனே இவர்களுக்குச் சரியானவன்.  அவனைத்தான் இவர்கள் தலைவனாக, வழிகாட்டியாக ஏற்றுக்கொள்வார்கள்

(குற்றமும் தண்டனையும் ப.427)

இப்படிப்பட்ட புரிதலுடையவனான ரஸ் கோல்னிகோவ், அடகுக்கடை நடத்தும் ‘அல்யூனா’ என்னும் கிழவியினையும், அவளின் சகோதரி நிஸாவிதாவையும் கொல்கின்றான்.  கொலை புரிந்தானே தவிர, அவர்களிடமிருந்த செல்வத்தை அவன் கொள்ளையடிக்கவில்லை.  தனது கோட் பாட்டின் நம்பகத்தன்மையினைப் பரிசோதிக்கவே அவன் இப்படிப்பட்ட கொலையைச் செய்கின்றான்.  நெப்போலியனிடம் கொண்ட ஈடுபாட்டின் தூண்டுதலே, அவனை இவ்வாறு கொலை புரியச் செய்கின்றது.

எனினும், நீட்சே கூறுவது போல, ‘மனசாட்சியின் உறுத்தல்கள்’ அவன் புரிந்த செயலை நியாயப் படுத்தாமையினால், பெரும் மனச்சுமைக்கு ரஸ் கோல்நிகோவ் உள்ளாகின்றான்.  தான் புரிந்த பாவத்திற்குப் பரிகாரம் தேடிக் கிருத்தவத்தின்பால் அவன் சரணடைகின்றான்.

மேலே காட்டப்பட்டவற்றிலிருந்து, ‘நீட்சே’, தஸ்யேவ்ஸ்கியிடமிருந்து முழு அளவில் கடன் பெற்றிருப்பதை அறியலாம்.  நீட்சேயின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போது, அவர் தஸ்தயேவ்ஸ் கியால் பெரிதும் கவரப் பெற்றார் என்பதையும், தஸ்தயேவ்ஸ்கியின் நூல்களை மிக்க ஆர்வத்தோடு படித்தார் என்பதையும் அறிய முடிகின்றது.  எனவே, நீட்சே முன்மொழிந்த இருத்தலியல் கோட்பாடு களுக்குக் காரணகர்த்தாவாகத் தஸ்தயேவ்ஸ்கியே அமைந்துள்ளார் எனலாம்.

சமூக மறுப்பு

இருத்தலியல் கோட்பாட்டுக் கூறுகளில் அடிப்படையான ஒன்று.  ‘சமூக மறுப்பு’ஆகும். நீட்சேயால் முன்மொழியப்பட்டுச் சார்த்தரால் வரையறுக் கப்பட்ட இக்கூறுகள், தஸ்தயேவ்ஸ்கி யாலும் எடுத்தாளப்பட்டுள்ளன.  இதனை ‘நிலையாகத் திரும்பப் பெறுதல்’ என்னும் பதத்தினால், இருத் தலியலாளர்கள் குறித்தனர்.  நடைமுறையிலுள்ள சமூக நிலைகளைப் புறக்கணித்து, உலகினை வெறு மையாக அதாவது ஆதியும் அந்தமும் அற்றதாக இருத்தலியலாளர்கள் காண விரும்பினர்.  மனிதனது இருத்தல் வெறுமையைக் கொண்டது என்றும், உலகிலுள்ள அனைத்தும் தற்காலிகமானது என்றும், மரணம் ஒன்றே நிலையானது என்றும் கூறும் இவ்விருத்த லியலாளர்கள், நடைமுறைச் சமூக நிலையைப் புறக்கணிக்கின்றனர்.

இவர்களைப் போலவே தஸ்தயேவ்ஸ்கியும், நடைமுறைச் சமூக அமைப்பு மாற்றப்பட வேண்டும் என்றும், அதற்காக ரத்தம் சிந்துவதும் தவறு இல்லை என்றும் கூறுகின்றார்.  ஓரிரு தலைமுறை களுக்கு இந்நிலை தொடரவேண்டும் என்றும், அவர் வலியுறுத்துகின்றார். தஸ்தயேவ்ஸ்கி யின் இத்தகைய சிந்தனைகள், அவரின் பிற்காலப் படைப்பான ‘பேய்கள்’ (Devils) என்ற நாவலில் வெளிப்பட்டுள்ளன.

நாம் முழுமனதுடன் அழித்தலுக்கு நம்மை ஆட்படுத்திக்கொள்ள வேண்டும்.  இத்தகைய அழித்தலானது தொடர்ந்து நடைபெற வேண்டும்.  இப்போது இருக்கக் கூடிய நடைமுறைகள் எதுவுமே எஞ்சியிருக்க வில்லை என்னும் நிலை வரும் வரை, அந்த அழித்தல் பணியினை நாம் தொடர்ந்து செய்துகொண்டிருக்க வேண்டும்.  இந்தப் போரிலே புரட்சி யாளர்கள் விஷம், கத்தி, கயிறு போன்றவை களையும் பயன்படுத்தலாம்

(The Devils, P.29)

எனப் ‘பீட்டர் வெற்கோவென்ஸ்கி’ என்னும் பாத்திரத்தின் மூலம், தம் கருத்துக்களைத் தஸ்தயேவ்ஸ்கி வெளிப்படுத்துகின்றார்.

நாம் அழித்தலைச் செய்யவேண்டும்.  ஏனெனில், அது மிகவும் கவர்ச்சிகரமான ஒரு சிந்தனை.  ஒவ்வொரு குழுவும், நமக்கு உபயோகமானதாக இருக்கவேண்டும்.  தோழர்களே! இக்குழுக்களில் உள்ள நீங்கள் எல்லோரும், மிக ஆவலோடு செயல் புரிய வேண்டும்.  நீங்கள் எல்லாம் மிக மகிழ்ச்சியாகச் சுட்டுத்தள்ள வேண்டும்.  அதன்பிறகு நீங்கள் மரியாதைக்குரிய வராகக் கருதப் பெறுவீர்.  உங்களால் ஏற்படுத்தக்கூடிய இத்தகைய கிளர்ச்சி யானது, உலகம் இதுவரை கண்டிராத ஒன்றாக இருக்க வேண்டும்

(The Devils, P.29)

எனப் ‘பேய்கள்’ நாவலின் கதைத் தலைவரான ‘பீட்டர் வெற்கோவின்ஸ்கி’, தம் வழியைப் பின் பற்றும் தொண்டர்களிடம் ‘வீரஉரை’ நிகழ்த்து கின்றார்.  இவ்வுரையின் மூலம் தஸ்தயேவ்ஸ்கி, நடைமுறைச் சமூகத்தின்பால் தமக்கு இருந்த மாறுபட்ட நிலையினைப் பதிவு செய்துள்ளதாகக் கூறலாம்.

‘டாம்யூ’ என்ற இருத்தலியலாளர், தனிமனிதன் தன் சுதந்திரத்தைக் காத்துக்கொள்ளச் சமூகத்தின் ஏனைய அங்கத்தினர்களைப் பயன்படுத்திக் கொள் வதில் தவறு இல்லை என்பார்.  இதற்கு ஏற்றவாறே, தஸ்தயேவ்ஸ்கியின் பீட்டர் வெற்கோவின்ஸ்கியும், ஏனையோரைத் தனக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொள்கிறான் எனலாம்.

தனிமனித சுதந்திரம்

‘தனிமனித சுதந்திரம்’ என்னும் கருத்தமைவில், எல்லா இருத்தலியலாளர்களும் ஒருமித்த சிந்தனை யையே கொண்டுள்ளனர்.  தஸ்தயேவ்ஸ்கியும், இத்தகைய ஒத்த சிந்தனையையே, தம் படைப்பில் எடுத்தாண்டுள்ளார்.  இதற்குப் பின்வரும் கூற்றைச் சிறந்த சான்றாகக் காட்டலாம்.

“சமூகம் எக்கேடு கெட்டு ஒழிந்தாலும் பரவாயில்லை.  என் தேநீரை நான் ஆசுவாச மாகப் பருக முடிய வேண்டும்”

(கீழ் உலகக் குறிப்புகள், ப.68)

இச்சிந்தனை, தனிமனித சுதந்திரத்தை வெளிக் காட்டுவதாகவும், இருத்தலியலின் பாற்பட்ட தாகவும் அமைந்துள்ளது அறியத்தக்கதாகும்.

இதே போல, நாத்திக இருத்தலியலாளர்கள் முன்மொழிந்த கடவுள் மறுப்புக் கொள்கை களையும், தம் படைப்புகளில் தஸ்தயேவ்ஸ்கி எடுத்தாளுகின்றார்.  கடவுள் இல்லாத நிலையில், இவ்வுலகில் எல்லாமே அனுமதிக்கப்பட்ட ஒன்றாக அமைந்துவிடும் என்றும் அவர் வலியுறுத்துகின்றார்.  எனவே, இருத்தலியக் கோட்பாட்டின் பல்வகைக் கூறுகளும், ‘இருத்தலிய முன்னோடி’ என்ற வகையில், தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளில் சிறப்பாக வெளிப்படுத்தப் பட்டுள்ளன எனத் துணியலாம்.

Pin It