அனைத்து பாலூட்டிகளும் தன் குட்டிகளுக்கு ஆரம்ப காலத்தில் தாய்ப்பால் கொடுத்து பிழைக்க வைத்து, வளர உதவுவது ஒரு இயல்பான நிகழ்வே. மனித இனமும் இதற்கு விலக்கல்ல. தன் இனம் இந்த பூமியில் பல்கிப் பெருக வேண்டும் என்ற இயற்கையின் உந்துதலின் விளைவே இந்த தாய்ப்பாலூட்டி வளர்த்தல். மனிதனின் ஆதிகால நாடோடி வாழ்க்கை­யிலிருந்து இன்று வரையிலும் தாய்ப்பால் குடிக்காத குழந்தைகளின் ஆரம்பகால இறப்பு விகிதம் அதிகமாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது.

மனிதனின் முதல் உணவும் மருந்தும் தாய்ப்பால்தான். சமீப காலமாக தாய்ப்பாலிலும் பல்வேறு கெமிக்கல்கள் கலந்து வருவதாக உலகம் முழுவதிலிருந்தும் வரும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இன்றைய நிலையில் உலகம் முழுவதும் தாய்ப்பால் ஊட்டும் எல்லா தாய்மார்களும் தங்களையும் அறியாமல் மிகக் குறைந்த அளவில் நச்சுப் பொருள்களான கெமிக்கல்களையும் சேர்த்து ஊட்டுகிறார்கள் என்பது கசக்கிற உண்மை. அதிலும் ஒரு ஆறுதலான தகவல் என்னவென்றால், குழந்தைக்குப் போகும் நச்சுப் பொருள்களின் தினசரி அளவு உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ள அளவை விடவும் மிகவும் குறைவுதான்.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு. நோய்க்கிருமிகளை எதிர்க்கும் சக்தி அதிகம், ஒவ்வாமை, ஆஸ்துமா, உடல் பருமன், இருதய நோய் என பல்வேறு பிரச்சினைகளில் இருந்து விடுதலை என பல நன்மைகள். இன்றைய உலகில் காரணம் தெரியாமல் புதிது புதிதாக நோய்கள், பிறவிக் கோளாறுகள் என்று மனித இனம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. தாய்ப்பாலில் கலந்துள்ள நச்சுப்பொருள்களுக்கும் இவைகளுக்கும் தொடர்பு இருக்குமோ என்று மருத்துவ உலகம் அஞ்சுகிறது. இந்தக் கட்டுரையில் அப்படித் தாய்ப்பாலில் கலக்கும் நஞ்சுகளைப் பற்றிப் பார்ப்போம்.mother feedingஎங்கிருந்து நஞ்சு வந்தன?

பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பகுதியில், நடந்த தொழிற்புரட்சியின் காரணமாக ஆங்காங்கே தொழிற்சாலைகள் தோன்றி மனித வாழ்வுக்கு வளம் சேர்க்க ஆரம்பித்தன. தொழிற்சாலைக் கழிவுகள் நிலத்தையும், நீரையும், காற்றையும் மாசுபடுத்த ஆரம்பித்தன. தான் கண்டுபிடித்த கெமிக்கல்களைக் கொண்டு விவசாயப்பயிர்களைத் தாக்கும் பூச்சிகளையும், கிருமிகளையும் ஒழித்து நிறைய உற்பத்தி செய்து வளமாக வாழும் மனிதன், அதே கெமிக்கல்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி தன் வாழ்க்கையை நஞ்சாக்கிக் கொண்டிருப்பதைத் தடுக்க முடியாமல் தவிக்கிறான். மெல்ல மெல்ல அந்த நஞ்சுகள் இந்த பூமியில் வாழும் உயிரினங்களின் உணவு வளையத்திற்குள் புகுந்து உயிரினங்களின் உடலுக்குள்ளும் சென்று தங்க ஆரம்பித்தன. மனிதனும் விதி விலக்கில்லாமல் தான் கண்டுபிடித்த இரசாயனங்களைத் தன் உடலுக்குள்ளும் சேர்த்துக் கொண்டான்.

தாயின் உடலுக்குள் எப்படி சென்றன?

பெரும்பாலான நஞ்சுகள் மனிதனின் உணவிலும், சுவாசத்திலும் கலந்து உடலுக்குள்ளே செல்லுகின்றன. சில வகையான கெமிக்கல்கள் தோலில் பட்டாலே போதும்; உள்ளே சென்று விடும். உடலுக்குள் சென்று கொழுப்புச் சத்தோடும், புரதச் சத்தோடும் சேர்ந்து கரைந்து அதனோடே ஐக்கியமாகி உடலுக்குள்ளேயே தங்கி விடுகின்றன. பிறப்பதற்கு முன் தாயின் ரத்தம் மூலம் கருப்பையில் வளரும் குழந்தையின் உடலுக்குள்ளும் நுழையும் நச்சுப் பொருள்கள், பிறந்த பின் தாய்ப்பாலின் மூலம் தொடர்ந்து செல்கின்றன. தாயின் உடலில் சேர்ந்துள்ள கொழுப்பெல்லம் கரைந்து தாய்ப்பாலாக வரும்போது குழந்தைக்குத் தாய்க்குக் கிடைத்ததை விடவும் அதிகமான நச்சுப்பொருள்கள் போய்ச் சேர்ந்து விடுகின்றன.

எத்தனை வகையான நச்சுப் பொருள்கள்?

1 புகை

புகைக்கும் போதைக்கும் அடிமையான தாய் அதில் கொஞ்சம் குழந்தைக்கும் கொடுத்துக் கொண்டே இருக்கிறாள். வீட்டில் உள்ளவர்கள் புகைக்கும்போதும் காற்றில் கலந்துள்ள புகையைத் தன்னை அறியாமல் குழந்தையும் உள்வாங்கிக் கொள்கிறது. காற்றில் கலந்து வரும் தொழிற்சாலைக் கழிவுகள் குழந்தையின் சுவாசத்தில் கலந்து உடலுக்குள் செல்லும்போது தாய்ப்பாலின் மூலம் செல்லும் அளவைவிட 25 முதல் 135 மடங்கு அதிகம் இருப்பதாக அமெரிக்க ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

2 கன உலோகங்கள் - ஹெவி மெட்டல்கள்

ஹெவி மெட்டல்கள் என்று அழைக்கப்படும் ஆர்சனிக், பாதரசம், காரீயம், கேட்மியம், அலுமினியம் போன்றவைகளின் மூலக் கூறுகளும் மனித உடலுக்குள் எளிதில் சென்று விடுகின்றன. ஆப்பிரிக்க, கானா நாட்டில் உள்ள சுரங்கங்களில் வேலை செய்கின்ற பெண்களில் குழந்தைக்கு பாலூட்டுகின்ற தாய்மார்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் உடலிலும் அவர்களின் குழந்தைகளின் உடலிலும் ஹெவி மெட்டல்களான காரீயம், மெர்க்குரி, ஆர்சனிக், மற்றும் கேட்மியம் எந்த அளவு உள்ளது என்று ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. முடிவில் தாய்மார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் உடலில் மிக அதிக அளவில் இந்த உலோகங்களின் மூலக் கூறுகள் இருந்ததைக் கண்டார்கள். குழந்தைகளின் உடலுக்குள் தாய்ப்பாலின் மூலம் இந்த ஹெவி மெட்டல்கள் போய் சேருவதையும் கண்டுபிடித்தார்கள். சுரங்கங்களில் மட்டும்தான் ஹெவிமெட்டல்கள் உள்ளன என்று எண்ண வேண்டாம். இம்மாதிரி ஹெவி மெட்டல்கள் கலந்துள்ள பொருள்கள் ஏராளமாக சந்தையில் உலகம் முழுதும் கிடைக்கின்றன.

காஸ்மெடிக் பொருள்கள், உணவுப் பொருள்கள், பெட்ரோலியப் பொருள்கள், வர்ணப்பூச்சுக்கள் போன்றவைகளில் இந்த கன உலோகங்கள் உள்ளன. இந்த உலோகங்கள் மூளை வளர்ச்சியிலும், இரத்த அணுக்கள் உற்பத்தியிலும் குறுக்கிட்டு குழந்தைக்கு உடல்பாதிப்பை உண்டு பண்ணுகிறது. மேலும் சிறுநீரகமும், கல்லீரலும் நாளடைவில் செயலிழக்கத் துவங்கி விடுகிறது.

3 PFAS கெமிக்கல்கள் (POLY & PERFLUROALKYLSUBSTANCES)

இந்த வகைக் கெமிக்கல்கள் முழுவதும் மனிதனால் கண்டுபிடிக்கப் பட்டவை. வழுவழுப்புத் தன்மையுடன் இருப்பதால் உராய்வைக் குறைப்பதற்கு பல்வேறு துறைகளில் உபயோகிக்கிறார்கள். உணவைப் பதப்படுத்துதல், பேக்கேஜிங், தீயணைப்பு, டெக்ஸ்டைல், ஆட்டோமொபைல், கட்டுமானம், அழகு சாதனப் பொருள்கள், டிடர்ஜண்ட்கள், டாய்லெட் கிளீனர்கள், நான்ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் என இவைகளின் பயன்பாடு எங்கும் பரவியுள்ளது. இவைகள் நீர், நிலம், காற்று என அனைத்திலும் கலந்து சூழலை விட்டு விலகாமல் இருக்கின்றன. நம் உடலுக்குள் செல்லும் இந்த வகைக் கெமிக்கல்கள் 30 வருடங்கள் கூட உடலிலேயே தங்கி விடுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

அமெரிக்காவில் சியாட்டில் என்ற நகரில் ERIKA SHREDER என்ற ஆராய்ச்சியாளர் 2021ல், 50 தாய்மார்களின் தாய்ப்பாலை சேகரித்து பரிசோதித்ததில், அனைத்து மாதிரிகளிலும் இந்த கெமிக்கல்கள் இருந்ததைக் கண்டார். இந்த கெமிக்கல்கள் மனித உடலின் எதிர்ப்பு சக்தி மண்டலத்தைப் பலமிழக்கச் செய்து, புற்று நோய், சிறுநீரகச் செயல் இழப்பு, ஆஸ்துமா, தைராய்டு நோய்கள், மூளை நரம்பு நோய்கள், உயிரணுக்கள் பாதிப்பு என பல வகையான நோய்களுக்கு வழி வகுக்கின்றன.

4. பிளாஸ்டிக்

மனிதன் கண்டுபிடித்த அடுத்த முக்கிய உயிர்க்கொல்லி பிளாஸ்டிக் என்னும் பாலிமர் கெமிக்கல். அனைத்து வேலைகளுக்கும் உதவும் பொருள். இதன் மிக நுண்ணிய துகள்கள் - மைக்ரோபிளாஸ்டிக் - உலகெங்கும் வியாபித்து விட்டன. கடல், காற்று, நிலம், நீர் என அனைத்தும் பிளாஸ்டிக் குப்பைகளால் மூச்சுத் திணறிக் கொண்டு இருக்கின்றன. அனைத்து உயிரினங்களின் உடலுக்குள்ளும் புகுந்து விட்டன. பாலிஎத்திலின், பாலிபுரொப்பலின், பி.வி.சி என்னும் பாலிவினைல் குளோரைடு போன்றவைகளின் துகள்கள் இல்லாத நுகர்வுப் பொருள்களே சந்தையில் இல்லை.

2022 ஜூன் மாதம் இத்தாலி ரோம் நகரில் குழந்தை பிறந்து ஒரு வாரமே ஆன 34 தாய்மார்களின் தாய்ப்பாலை எடுத்து ஆராய்ந்ததில் அவர்களில் 28 தாய்மார்களின் பாலில் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் இருப்பதைக் கண்டனர்.

5. பூச்சி மருந்துகள்

பூச்சிக் கொல்லிகளால் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் முப்பது லட்சம் மக்கள் பாதிக்கப்படுவதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. இதில் குழந்தைகளும் விவசாயிகளும்தான் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். பூச்சிக் கொல்லிகள் நம் உணவு, சுவாசம் மற்றும் தோல் மூலமாகவும் உள்ளே நுழைந்து அதிக காலம் தங்கி ஆபத்தை உண்டுபண்ணுகிறது.

1980களில் இந்தியாவில் நிறைய அளவில் DDT என்னும் பூச்சிக்கொல்லி உபயோகத்தில் இருந்தது. அப்போது லக்னோவில், DDT யின் அளவு தாய்ப்பாலில், ஆட்டுப்பாலில், மாட்டுப்பாலில் எவ்வளவு இருக்கிறது என்று ஆராய்ந்தனர். முடிவில் மாட்டுப்பால் ஆட்டுப்பால் ஆகியவற்றில் உள்ளதை விடவும் தாய்ப்பாலில் 12 மடங்கு அதிகமாக இருப்பதைக் கண்டனர். இந்த DDT வகை எளிதில் மனித உடலில் உள்ள கொழுப்பில் கரைந்து, கலந்து விடுகிறது. தாய் நிறைய பாலும் பால் பொருள்களும், இறைச்சி, மீன், முட்டை என கொழுப்புச் சத்துள்ள பொருள்களும் உண்ணும்போது இயல்பாகவே தாயின் உடலில் அதிகம் சேர்ந்து விடுகிறது. பின்னர் தாய்ப்பால் மூலம் குழந்தைக்கும் சென்று அடைகிறது.

இன்னுமொரு ஆய்வு 2003ல் மத்தியப்பிரதேசம் போபாலில், கான்பூர் ஐஐடி வல்லுநர்களால் நடத்தப்பட்டது. அதன் முடிவு மற்றொரு பூச்சிக்கொல்லியான எண்டோசல்பான் தாய்ப்பாலில் அதிகம் இருப்பதாகத் தெரிவிக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தாரால் நிர்ணயிக்கப்பட்ட அளவை விடவும் பல மடங்கு குழந்தையின் உடலுக்குள் செல்வதாக சொல்கிறது. இந்த எண்டோசல்பான் என்னும் பூச்சிக்கொல்லி பூச்சிகளின் நரம்பு மண்டலத்தைத் தாக்கி அவைகளை அழிக்கிறது. கருத்தரித்த காலம் முதல் குழந்தையின் உடலுக்குள் சென்று குழந்தையின் மூளைச் செல்களில் பாதிப்பை உண்டு பண்ணுகிறது. மூளையில் டி.என்.ஏ உற்பத்தியைக் குறைத்து நியூரான்களின் எண்ணிக்கையைக் குறைத்து விடுகிறது. பூச்சிக் கொல்லிகள் அனைத்துமே உயிர்க்கொல்லிகள்தான். அதிக அளவில் சேரும்போது உடனடி ஆபத்தையும், சிறிய அளவில் சேரும்போது புற்றுநோயையும், நாளமில்லாச் சுரப்பிகளின் குறைபாடையும் ஏற்படுத்துகின்றன.

என்ன விளைவுகள் வரலாம்?

எல்லா சுற்றுச் சூழலை மாசாக்கும் அனைத்து கெமிக்கல்களும் உயிரினங்களின் உடலுக்குள்ளும் சென்று விட்டன. உடலில் சேரும் அளவைப் பொறுத்து விளைவுகள் வருகின்றன. மனிதன் தான் வாழக் கண்டுபிடித்த கெமிக்கல்கள், ஆலைக் கழிவுகள் அனைத்தும் மனித உயிருக்குக் கேடு விளைவிப்பதாக இருக்கின்றன. பிறவிக்குறைபாடுகள், மூளை வளர்ச்சி செயல்பாடு பாதிப்பு, புற்று நோய்கள் என பல்வேறு வகைகளில் மனித இனம் பாதிப்புக்கு உள்ளாகிறது. உலகம் முழுவதும் காரணம் கண்டுபிடிக்க முடியாமலேயே நிறைய புதுப் புது நோய்கள் உண்டாகின்றன. பழைய வீரியம் இழந்து வியாதி உண்டு பண்ண முடியாத கிருமிகள் மீண்டும் வீரியம் பெற்று அடுத்த ரவுண்டுக்குத் தயாராகின்றன. அனைத்துக்கும் காரணம் சுற்றுச் சூழல் கெட்டுப்போனதே காரணம் என்கிறார்கள்.

விழிப்புணர்வு தேவை.

இந்த நச்சுச் சூழலில் இருந்து விடுபட, மனிதன் முதலில் வாழ்வியல் மாற்றங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். நச்சுப் பொருட்கள், தாயின் உடலுக்குள் செல்லும் அளவை, விகிதத்தைக் குறைக்க முயற்சிக்கலாம். கருவுற்றிருக்கும் பெண்களையும் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களையும் நச்சுப் புகை, பொருள், உணவுகள் இவைகளிடமிருந்து விலக்க வேண்டும். அம்மாதிரியான இடங்களில் வேலை செய்யக் கூடாது. துரித உணவுகள், பாக்கெட் உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு அதிகமுள்ள உணவுகள், இறைச்சி, மீன் போன்றவற்றைத் தவிர்க்கலாம். பிளாஸ்டிக் பைகளையும் பாக்கெட்டுகளையும், மற்றும் PFAS கெமிக்கல்கள் இருக்கும் (FLURO அல்லது PERFLURO என்று ஆரம்பிக்கும் மூலப்பொருட்கள் அடங்கியது) அழகு சாதனப் பொருள்களையும் தவிர்க்க வேண்டும்.

முதலில் தாய் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ உறுதி ஏற்க வேண்டும். அவ்வப்போது அதற்கான மருத்துவப் பரிசோதனைகள் மூலம் உறுதி செய்து கொள்ளவும் வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தத் தேவையில்லை. தாய்ப்பாலினால் குழந்தைக்கு உண்டாகும் நலன்களையும் இம்மாதிரி நச்சுப்பொருள்களால் வரும் ஆபத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது குழந்தையின் நலம் கருதி தாய்ப்பால் கொடுப்பதே நல்லது. ஃபீடிங் பாட்டில் மூலம் பால் கொடுக்கும்போது மைக்ரோ பிளாஸ்டிக்கும் குழந்தையின் உடலுக்குள் செல்வதால் அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இதற்கெல்லாம் தீர்வு அவ்வளவு எளிதல்ல. உலக நாடுகள் ஒன்றுபட்டு சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதைக் குறைத்தால் மனித இனம் ஆரோக்கியமாக வாழலாம்..

-  ப.வைத்திலிங்கம், குழந்தை மருத்துவ நிபுணர்.

Pin It